உயிருண்ணும் மாலைப்பொழுது!

மா​லைப்​பொ​ழுது வந்​தாலே மங்​கை​யர் மன​மும்,​​ உட​லும் வாடும்.​ பசலை நோய் படர்ந்த நிலை​யில் அவர்​தம் மேனி​யெல்​லாம் ஒரு​வித மாற்​றத்​தைக் காணும்.​ திரு​ம​ண​மான பெண்​டிர்​க​ளின் உயிரை உண்​ணும் வேலை​யைச் செய்​யவே இந்த மாலைப்​பொ​ழுது வரு​வ​தாக வள்​ளு​வர்,​​

""மாலையோ அல்லை மணந்​தார் உயி​ருண்​ணும்
வேலைநீ வாழி பொழுது''
என்று கூறு​கி​றார்.​

​க​லித்​தொ​கை​யில் ஒரு காட்சி.​ தம் தலை​வ​னைப் பிரிந்த தலைவி;​ மாலைப்​பொ​ழுது கண்டு ஆற்​றாத தலைவி,​​ தோழிக்கு உரைக்​கி​றாள்.​ காலை​யில் பகற்​பொ​ழுது காலத்​தைக் கக்கி,​​ மாலை​யில் மீண்​டும் அதை விழுங்​கு​கி​றான்.​ அத​னால் கதிர்​கள் சுருங்கி,​​ கதி​ர​வன் மலை​வா​யில் மறைந்​துள்​ளான்.​ காரி​ருள் படர்​கி​றது.​ கார்​மேக வண்​ண​னின் மேனி நிறைந்​தது போல் வெண்​ணி​லவு தோன்​று​கி​றது.​ தாமரை மலர்​களோ உறங்​கு​வ​து​போல் கண்​மூ​டிக் கிடக்​கின்​றன,​​ தம் புக​ழைத் தாமே கேட்ட பெரி​யோர் தலை​தாழ்த்தி நிற்​ப​தைப்​போல மரங்​கள் கிளை தாழ்ந்து துயில்​கின்​றன.​ குழ​லின் ஓசை​போல வண்​டு​கள் ஒலிக்​கின்​றன.​ தம் பார்ப்​பு​களை நினைத்​துத் தாய்ப்​ப​ற​வை​கள் பறக்​கின்​றன.​ கன்​று​களை நினைத்​துக் கற​வைப் பசுக்​கள் தம் கொட்​ட​கைக்​குச் செல்​கின்​றன.​ விலங்​கி​னங்​களோ தம் வாழ்​வி​டம் நோக்கி விரை​கின்​றன.​ செந்தீ வளர்த்து அந்​த​ணர்,​​ அந்​திப்​பொ​ழுதை வழி​ப​டு​கின்​ற​னர்.​ இப்​படி அனைத்து உயிர்​க​ளும் மாலை​நே​ரம் வந்​தால் வீடு திரும்​பு​கின்​றன.​ மணந்த,​​ மனம் கவர்ந்த தலை​வனோ மாளிகை திரும்​ப​வில்லை.​ தன் உயிரே போய்​வி​டும் போலி​ருக்​கி​றதே'' என்று தலைவி வருந்​திக் கூறு​கி​றாள்.​
​

அகன்​ஞா​லம் விளக்​கும்​தன் பல்​க​திர் வாயா​கப்
பகல்​நுங்கி யது​போ​லப் படு​சு​டர் கல்​சேர
இகல்​மிகு நேமி​யான் நிறம்​போல் இருள்​இ​ரவ,​​
நில​வுக்​காண் பது​போல அணி​மதி ஏர்​த​ரக்
கண்​பா​யல் பெற்​ற​போல் கணைக்​கால மலர்​கூம்​பத்
தம்​பு​கழ் கேட்​டார்​போல் தலை​சாய்த்து மரம்​துஞ்ச,​​
முறு​வல்​கொள் பாவை​போல முகை​அ​விழ்பு புதல்​நந்​தச்
சிறு​வெ​திர்ங் குழல்​போ​லச் சுரும்​பு​இ​மிர்ந்து இம்​மெ​னப்
பற​வை​தம் பார்ப்​பு​உள்​ளக் கற​வை​தம் பதி​வ​யின்
கன்​று​அ​மர் விருப்​பொடு மன்​று​நிரை புகு​தர
மாவதி சேர மாலை வாள்​கொள்
அந்தி அந்​த​ணர் எதிர்​கொள,​​ அயர்ந்து
செந்​தீச் செவ்​வ​ழல் தொடங்க}​வந்​ததை
வால்​இழை மக​ளிர் உயிர்​பொதி அவிழ்க்​கும்
காலை ஆவது அறி​யார்
மாலை என்​ம​னார் மயங்கி யோரே​
​(நெய்​தற்கலி​)​

சி​லப்​ப​தி​கா​ரத்​தில்,​​ அந்​தி​மா​லைச் சிறப்​புச்​செய் காதை​யில்,​​ மாலை​யின் வரு​கையை இளங்​கோ​வ​டி​கள் எடுத்​து​ரைக்​கும் விதம் அருமை.​

ப​க​லும் இர​வும் சந்​திக்​கின்ற அந்​தி​மா​லைப்​பொ​ழுது மயக்​கம் தரும் பொழு​தாம்.​ சேர்ந்​த​வர்​க​ளுக்கு இன்​ப​மும்,​​ பிரிந்​த​வர்​க​ளுக்​குத் துன்​ப​மும் தரு​வது மாலைக்​கா​லம்.​ கோவ​லன்,​​ கண்​ண​கி​யைப் பிரிந்து மாத​வி​யைச் சேர்ந்​தான்.​ அத​னால் மாத​விக்கு இன்​பம்.​ கண​வ​னைப் பிரிந்து தனித்​தி​ருந்த கண்​ண​கிக்கோ துன்​பம்.​

மண்​ணில் மன்​னன் மறைந்​து​விட்​டான்.​ பகை​ய​ர​சன் அந்​நாட்டை அப​க​ரிக்க வரு​கி​றான்;​ முறை​யாக வாழ்ந்​த​வரோ அவ​திப்​ப​டு​கி​றார்;​ முறை​யற்று வாழ்ந்​த​வரோ மகிழ்​வு​று​கின்​ற​னர்.​ இந்த நிலை,​​ கண்​ணகி}​மாதவி வாழ்க்​கை​யின் மூலம் சூச​க​மா​கக் கூறப்​ப​டு​கி​றது.​

மா​லைக் காலத்​தில் ஆடு,​​ மாடு​கள் ஓட்​டிச்​செல்​லும் இடை​யர்​கள்,​​ தங்​கள் புல்​லாங்​குழ​லில் முல்​லைப் பண் இசைக்​கி​றார்​கள்.​ பெண்​கள் சூடிய கூந்த​லில் மலர்ந்த முல்​லைப் பூக்​க​ளில் வண்​டு​கள் அமர்ந்து வாய்​வைத்து ஊது​கின்​றன.​ தென்​றலோ அவ்​வண்​டு​களை விரட்​டி​வி​டு​கின்​றன.​ இருள் சூழ்ந்த நிலை​யில் மங்​கல மக​ளிர் மணி​வி​ளக்கு ஏற்​று​கின்​ற​னர்.​ இவ்​வாறு வளம் நிறைந்த புகா​ரில் வருத்​தம் தரு​வ​தற்​காக வரும் மாலைக் காட்​சியை,​​
​
""கறை​கெழு குடி​கள் கைதலை வைப்ப
அறை​போகு குடி​க​ளொடு ஒரு​தி​றம் பற்றி
வலம்​படு தானை மன்​னர் இவ்​வ​ழிப்
புலம்​பட இறுத்த விருந்​தின் மன்​ன​ரின்
தாழ்​துணை துறந்​தோர் தனித்​து​யர் எய்​தக்
குழல்​வ​ளர் முல்​லை​யின் கோவ​லர் தம்​மொடு
மழ​லைத் தும்பி வாய்​வைத்து ஊத
அறு​கால் குறும்​பு​எ​றிந்து அரும்​பு​பொதி வாசம்
சிறு​கால் செல்​வன் மறு​கில் தூற்ற
எல்​வளை மக​ளிர் மணி​வி​ளக்கு எடுப்ப
மல்​லர் மூதூர் மாலை​வந்து இறுத்​தென''​
​
என்று இளங்​கோ​வ​டி​கள்,​​ மாலைப்​பொ​ழு​தைச் சித்​தி​ரித்​துக் காட்​டு​கி​றார்.​ சேர்ந்​த​வ​ருக்கு இன்​பத்​தை​யும்,​​ பிரிந்​த​வ​ருக்​குத் துன்​பத்​தை​யும் மாலைப்​பொ​ழுது தரு​வ​தால் தான் வள்​ளு​வர் அதை,​​ உயி​ருண்​ணும் மாலை ​ என்​றார் போலும்!​


நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: