கண்கள் இதயத்தின் நுழைவாயில். காதலின் தூதுவன். குறிப்பாக, பெண்களின் கண்களை சங்க இலக்கியச் சான்றோர்கள் முதல், குறும் பா புலவர்கள் வரை வர்ணிக்காதவர்களே இல்லை எனலாம். எந்த ஒரு நாட்டில் பெண்களின் கண்கள் அங்குமிங்கும் அலைபாயாது இருக்கிறதோ, அந்த நாட்டில் கற்பொழுக்கம் மிகுந்து காணப்படும் என்கிறார் கம்பர். ஆடவரும் பெண்டிரும் தத்தம் ஒழுக்கலாறுகளிலிருந்து பிறழாத நாடு கோசலம் என்கிறார்.
""ஆசல ம்புரி ஐம்பொறி வாளியும்
காசல ம்பு முலையவர் கண்ணெனும்
பூச லம்பு நெறியின் புறம்செலாக்
கோசலம்''
பழக்கம் வரக் காரணமாகி, ஒழுக்கம் பிறழவும் காரணமாயிருப்பது ஐம்புலன்கள்தானே? பொறிகளைப் புலன்வழி விட்டுத் துன்புறுபவர்கள் பெரும்பாலும் ஆண்களே! ஆடவர்களுக்கு ஐம்பொறிகளால் வரும் தீங்கு, பெண்களுக்குக் கண்களால் மட்டுமே வந்துசேரும். பெண்களின் கண்கள் போர் செய்யவல்ல அம்புகள் என்ற பொருளில் "பூசலம்பு' என்கிறார். எந்த நாட்டில் பெண்களின் கண்கள் புறம் செல்கின்றனவோ, அங்கு ஒழுக்கம் சீர்குலையும் என்பது கம்பரின் மதிப்பீடு.
""கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்''
என்பார் பாரதிதாசன். காதலியரின் கடைக்கண் பார்வைக்கே அப்படி ஒரு மகத்தான சக்தி!
""கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள் எந்தப் பயனும் இல''
(குறள்-1100)
காதலிருவரில், ஒருவர் கண்ணோடு ஒருவர் கண் பார்வையில் ஒத்திருக்குமாயின், வாய்ப்பேச்சால் ஒரு பயனும் இல்லையாம். சொற்களும் அங்கே சோர்ந்து போகும். இதயம் ஒரு போர்க்களமாகும் என்கிறார் வள்ளுவர்.
பெண்ணின் கடைக்கண் பார்வையில் ஆண்கள் கவிழ்வது ஒருபுறமென்றால், ஓர் ஆணின் கடைக்கண் பார்வை, ஒரு பெண்ணைக் கொல்லுவது போலுள்ளது என்கிறது கலித்தொகைப் பாடல் ஒன்று.
தாயும் மகளும் வீட்டில் தனித்திருக்கும்போது, ஓர் இளைஞன் குடிநீர் கேட்கிறான். அன்னையின் அனுமதியுடன் அந்த மகளும் அவனுக்குக் குடிநீர் தருகிறாள். அப்போது திடீரென அவளை, அவன் கைப்பிடிக்க, அவள் மருண்டு குரலெடுத்தது கேட்டு அன்னை அலறியடித்து ஓடி வருகிறாள். மகளோ, ஒன்றுமில்லையம்மா...என்று நடந்த உண்மையை மறைத்து, அவன் ""உண்ணுநீர் விக்கினான்'' என்று பொய் கூற, அன்னை அவன் முதுகை நீவி விட்ட நிலையில் அவன் அவளைக் கடைக்கண்ணால் "கொல்வான்' போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் என்கிறது அப்பாடல்.
""......... .......மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லீரே!
உண்ணுநீர் வேட்டேன் என வந்தாற்க்கு அன்னை,
அடர்பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர்இழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா என்றாள்; என யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா, அன்னை அலறிப் படர் தரச் தன்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி
நகைக்கூட்டம்
செய்தான் அக்கள்வன் மகன்''
(கலி.51:4-16)
காதல் பேசும் காதலியர் கண்களுக்குத்தான் இலக்கியத்தில் எத்தனை முதன்மை பாருங்கள்!
நன்றி - தமிழ்மணி
கருத்துகள்