இன்றைக்கு, பத்திரிகைகளில் புதிதாய் வெளிவருகிற நூல்களுக்கு மதிப்புரை என்ற பெயரில் அந்த நூல் குறித்த செய்திகளோடு அறிமுகப்படுத்துகிறார்கள். இதைப் புதிய முறையிலான "நூல் அறிமுக இலக்கியம்' எனலாம். இந்த முறையையும் பாரதியாரே முதன்முதலில் துவக்கி வைக்கிறார்.
வள்ளுவனைப் போல், கம்பனைப் போல், இளங்கோவைப் போல் என்று இவர் சுட்டுகிற தமிழ் ஆன்றோர் வரிசையில் பட்டியல் இன்னும் நீள்கிறது. பட்டினத்தாரையும், தாயுமானவரையும், இராமலிங்க அடிகளாரையும் அதே வரிசையில் வைத்துப் புகழ்கிறார். ஆழ்வார்கள், ராமானுஜர், விவேகானந்தர் என நீளும் வரிசையில் அதிசயத் தமிழ் செய்தவர் என அருணகிரியாரைக் குறிப்பிட்டுப் புகழ்ந்திருக்கிறார்.
திருப்புகழை இயற்றிய அருணகிரிநாதரையும் அவர்தம் தமிழ்ப் புலமையையும் குறித்து பாரதியார் மதிப்புரை எழுதியிருக்கிறார். இந்த மதிப்புரை ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கிறது. அவர்தம் பாடல்களைத் தாம் முன்னமே விருப்பமுடன் தெரிந்திருப்பினும், அவர்தம் பாடல்கள் அமைந்திருக்கும் முறைகளைச் சுட்டி, அவற்றை ஆராய்கிறவிதமாய் மதிப்புரை எழுதியிருக்கிறார். அருணகிரியின் கவிதை என்ற தலைப்பில் இம்மதிப்புரை 29.3.1917 சுதேசமித்திரன் இதழில் வெளியாகியுள்ளது.
அருணகிரியாரின் தமிழை அதிசயத் தமிழ் என்று தலைப்பிட்டு நூல் குறித்த மேற்கண்ட முதல் அடையாளத்தைத் தருகிறார்.
""இவருடைய கவிதையின் கனிவைப் பார்க்க வேண்டுமானால் பஞ்சரத்நத் திருப்புகழ், கந்தரலங்காரம், வேல்வகுப்பு மூன்றையும் படித்தால் போதும். சந்தக் கணக்கை வைத்துக் கொண்டு தெளிவாகவும், இயற்கையாகவும் சொல்லுதல் மிகவும் அருமை. காலிலும் கையிலும் தளைகளைப் பூட்டிக் கொண்டு கூத்தாட முடியாதென்று பழமொழி சொல்லுவார்கள். இந்த மஹானுடைய கவிதையோவென்றால், மிகவும் கடினமான தளைகளைப் பூட்டிக் கொண்டு தெய்வீகக் கூத்தாடுகிறது.
பஞ்சரத்நத் திருப்புகழின் முதற்பாட்டில் இவர் தமக்கு அதிசயமான தமிழ் பாடுந் திறமை வேண்டுமென்று முருகனிடம் கேட்கிறபொழுதே தெய்வ அருள் தோன்றி, இவருடைய கவிதை அதிசயமாகி விடுகின்றது''.
""மலடி வயிற்றில் குழந்தை பிறந்தால் அவளுக்கு எப்படி ஆச்சரியமும் மகிழ்ச்சியும் உண்டாகுமோ, கங்கா நதி வானத்திலிருந்து பொழிவதுபோல, புதையலெடுத்த செல்வத்தைக் கண்டு ஏழை மகிழ்ச்சி அடைவதுபோல, இளம்பெண் வலியத் தழுவியதுபோலத் தமது பாட்டைப் படிக்கும்போது அத்தகைய இன்பமெல்லாம் தோன்ற வேண்டும் என்கிறார் அருணகிரியார்'' என்று அருணகிரியாரின் கவிக்கடலில் மூழ்கி அதற்கு மதிப்புரை எழுதுகிறார் பாரதியார். இது மதிப்புரை என்னும் இலக்கியவரிசையில் பாரதியார் செய்த புதுமை எனலாம்.
மேற்காட்டிய வரிகளில் அந்த ரஸம் இருக்கத்தான் செய்கிறது என தான் ருசித்த அந்த ரஸம் நிறைந்த கவிதையை மேற்கோளிட்டுக் காட்டுகிறார்.
பின்வரும் பாடலைப் பாருங்கள்.
கலியை.......
கடின........
அலையு......
அறிவை யுருட்டித் திரட்டி வைத்துநின்
அமுத குணத்தைத் துதிக்க வைத்தனை
அடிமை படைக்கக் கருத்து முற்றிலும் - நினையாயோ
பாரதியாரின் பாடல்களில் பல இடங்களிலும் கலியுகத்தை ஒழிப்பதும், கிருதா யுகத்தைச் சமைப்பதும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
அதுபோலவே இப்பாடல்களுக்கு விளக்கம் எழுதுகிறபோது, ""கலியுகத்தை ஒழித்து, நோயைத் துரத்தி, கவலைத் தீயைத் தணித்துக் கசப்பை இனிப்பாக்கி, உயிரை அழுக்கறுத்து, கருணை மழையிலே குளிக்க விட்டு, அலைகிற மனதை நிறுத்தி, அதிலுள்ள இருட்டைத் தொலைக்கும் பொருட்டு முருகனுடைய அழகாகிய விளக்கை அதில் நாட்டி, அந்த விளக்கு நீடித்தெரியும்படி அறிவைத் திரட்டி முருகனுடைய அமிர்த குணங்களை புகழும்''படி தம்மை வரகவியாக்கச் சொல்கிறார்.
அருணகிரியாரின் கவிதைகளில் வீரம், ரெüத்ரம் என்ற ரஸங்கள் செறிந்து கிடக்கின்றன எனக் கூறுகிறார் பாரதியார்.
எனினும், இவர்தம் கவிதையின் முக்கியப் பொருள் தெய்வபக்தி; ஆகையால் அதை முன்னிறுத்தியே மதிப்புரை வரைகிறார்.
பதிப்பாசிரியர், குறிப்பாக சீனி.விசுவநாதன் குறிப்பிடுகிறபோது இந்தக் கட்டுரையை இன்னார் எழுதினார் என்ற விவரம் சுதேசமித்திரனில் குறிக்கப்பெறவில்லை. என்றாலும், இந்தக் கட்டுரையைப் பாரதியார்தான் எழுதினார் என்பதை நிரூபிக்க, "நியூ இந்தியா' பத்திரிகையில் அவர் எழுதிய ஆங்கிலப் படைப்பான "தி போயஸி ஆப் அருணகிரி' என்னும் படைப்பையே ஆதாரமாகக் கொள்ளலாம் என்பது அருணகிரியாரைப்
புகழ பாரதியாரைப் போல யாருளர் என்பதாய் அமைகிறது.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள்