மக்களுக்குத் துன்பந்தருவன இவை என்று கூறும் நாற்பது
வெண்பாக்கள் இந்நூலில் உண்டு. இதனாலேயே இதற்கு இன்னா நாற்பது
என்று பெயர் வைத்தனர். இந்நூலில் வெண்பாக்கள் ஒவ்வொன்றிலும்
இன்னா என்னும் சொல் திரும்பத் திரும்ப வருகின்றது. இன்னா-துன்பம்.
இன்று இந்நூலில் காணப்படும் செய்யுட்கள் 41. ஒரு செய்யுள் கடவுள்
வாழ்த்து. அது சிவன், பலராமன், திருமால், முருகன் நால்வரையும்
வணங்காதார் துன்பம் அடைவார் என்று கூறுகின்றது. இக்கடவுள் வாழ்த்துப்
பாட்டு நூலாசிரியாரல் பாடியிருக்க முடியாது. இவ்வாழ்த்தும் நூலோடு
பிறந்ததாயிருந்தால் ‘‘இன்னா நாற்பது’’ என்ற பெயர்
வைத்திருக்கமாட்டார்கள்.
இந்நூலாசிரியர் கபிலர். இப்பெயர் படைத்த புலவர்கள் பலர்.
அவர்களுள் இந்நூலாசிரியர் எக்கபிலர் என்று துணிந்துகூற முடியவில்லை.