29/03/2011

சிலப்பதிகாரத்தில் நாட்டுப்புறக் கூறுகள் - முனைவர் மு.கோவிந்தராசன்

சாதாரண மக்களின் பாடல் படிப்பில்லாத கிராமவாசிகள், வயலில் உழுகிறவர்கள், நாற்று நடுகிறவர்கள், வாய்க்கால் வெட்டுகிறவர்கள், தண்­ர் இறைக்கின்றவர்கள், மீன் பிடிப்பவர்கள், ஓடம் விடுகிறவர்கள், வண்டி ஓட்டுபவர்கள் முதலான மக்கள் பாடுகின்ற பாட்டுத்தான் நாட்டுப்புறப் பாடலாகும். இத்தகைய பாடல்களில் உணர்ச்சி, ஓசை, இன்பம், சொல்லழகு, தொடை அழகு ஆகியன நிரம்பக் காணப்படும்.

''வாழ்க்கையின் ஒவ்வொரு துறை அனுபவத்திலும் ஊடுருவிப் பயின்ற நாட்டுப்புற மக்களின் உள்ளங்களினின்றும் தம்மை அறியாமல் அருவிபோல் சுரந்து வெளிப்பட்டவையே நாட்டுப்புறப் பாடல்கள்'' என்கிறார் தமிழண்ணல். (தமிழண்ணல், காதல் வாழ்வு)

நாட்டுப்புறப்பாடல்கள் தாமாக மலர்ந்து மணம் வீசும் காட்டு மலருக்கு ஒப்பானவை. செயற்கை அரண் இன்றிப் பெருகித் தழைத்தவை. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தும் மக்களின் உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடும் தன்மை வாய்ந்தவை. நாட்டுப்புற மக்களின் ஆசை, நம்பிக்கை, கனவு, காதல் ஆகிய எல்லாவற்றையும் அவை பொன்னொளி வீசிப் போற்றுகின்றன என்று கலைக் களஞ்சியம் விளக்கம் தருகின்றது.

நாட்டுப்புறக் கூறுகளில் ஒன்றான கூத்து வகை, சிலப்பதிகாரத்தில் காணப்பெறுகின்றது. இது இளங்கோவடிகளின் நாட்டுப்புறப்பாடல்கள் மீதுள்ள ஆர்வத்தினை வெளிப்படுத்துகின்றது.

''இசைக்கலையுடன் தொடர்புடையது ஆடற்கலை'' என்னும் கூத்துக்கலையாகும். கூத்துக்கலை, இசைக்கலையைப் போன்றே பழைமை வாய்ந்தது. வாயினால் பாடப்பட்ட இசைப்பாட்டுக்குச் ''செந்துறைப் பாட்டு'' என்றும், கூத்துக் கலைக்குரிய பாட்டுக்கு ''வெண்டுறைப்பாட்டு'' என்றும் பெயர் உண்டு. (மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ப.140)

கூத்து - விளக்கம்:-

''கூத்து'' என்னும் சொல் ''நாட்டியம், ''நாடகம்'' ஆகிய இரு கலைகளுக்கும் பொதுவானதாக வழங்கப் பெற்றுள்ளது. தொல்காப்பியத்தில் ''கூத்து'', ''கூத்தர்'' என்னும் சொற்கள் உள்ளன. சங்க இலக்கியங்களிலும் ''கூத்து'' என்னும் சொல் மிகுதியாக உள்ளது.

''கூத்தர் ஆடுகளம் கடுக்கும்'' (புறம் 28)

''இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து'' (சிலம்பு 3:12)

''நாட்டியம் நன்னூல் நன்கு கடைப்பிடித்து'' (சிலம்பு 3:46)

''நாடகமேத்தும் நாடகக் கணிகை'' (சிலம்பு, பதிகம் 15)

''கூத்தாட்டு அவைக்கறம்'' (திருக்.332)

''திவாகரம் நிகண்டு''

''நடமே நாடகம் கண்ணுள் நட்டம்

படிதம் ஆடல் தாண்டவம் பரதம்

ஆறுதல் தூங்குதல் வாணி குரவை

நிலையம் நிரத்தம் கூத்தெனப்படுமே''

என்று திவாகர நிகண்டு கூத்தைப் பற்றி விளக்கமளித்துள்ளது.

சிலப்பதிகாரம்:-

தனிப்பட்ட ஒருவர் ஆடிய அபிநயக்கூத்து கால வளர்ச்சியில் பலர் பல வேடங்களைப் புனைந்து வந்து மாறி மாறி ஆடும் நிலைக்கு மாறியது என்பதைச் சிலப்பதிகாரம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

''ஆடுங் கூத்தர் போல் ஆருயிர் ஒருவழி

கூடிய கோலத்து ஒருங்குநின் றியலாது'' (சிலம்பு 28, 165-166)

பண்டைத் தமிழகத்தில் பதினொரு வகையான ஆடல்களும் சிறப்புற்று விளங்கின. நடன மாதர்கள் அவற்றுள் ஒவ்வொன்றின் இலக்கணத்தையும் இயல்புகளையும் நன்றாக அறிந்து திறமையுடன் ஆடப் பழகி இருந்தனர். இந்த ஆடல்களை அவர்கள் ஆடுவதிலிருந்து அவர்களின் திறமை கணக்கிடப்பெற்றன.

இந்த ஆடல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியான விளக்கத்தை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் கூறிச்செல்கிறார்.

இந்த ஆடல்களின் கூறுகளும் உள்ளிடம் அறியத் தருவனவாகும். புராணக் கதைகளைக் கொண்ட இந்த ஆடல்கள் அமைக்கப்பெற்றுள்ளன. அவற்றின் பெயர்கள் சில விளக்கங்களைத் தரும் தகுதியுடையன. இளங்கோவடிகள் குறிப்பிடும் பதினொரு ஆடல்களின் பெயர்கள் பின்வருமாறு

1.கொடுகொட்டி, 2. பாண்டரங்கம், 3. அல்லியம், 4. மல்லாடல், 5. துடிக்கூத்து, 6. குடையாடல், 7. குடம், 8. மரக்கால் ஆடல் 9. பேடியாடல், 10. பாவையாடல், 11. கடையம் என்பனவாகும்.

1. கொடுகொட்டி:-

கொடுங்கொட்டி என்பதே ''கொடுகொட்டி'' எனத் திரிந்தது என்று நச்சினார்கினியர் கூறுவர். இது நான்கு உறுப்புகளைக் கொண்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர்,

''கொள்ளைக் காதில் குழைக் காதில் குண்டைப் பூதம்

கொடுகொட்டில் குனித்துப் பாட'' (திருவெண்காடு, திருத்தாண்டகம், பாடல். 5)

என்று தேவாரப் பாடலில் இக்கூத்தினைச் சுட்டுகின்றார்.

திரிபுரம் எரியும்போது கோபத்தினால் சிவனின் கண்கள் சிவப்பேறி இருப்பது போன்று வெகுளிச்சுவை மிஞ்ச அதன் மெய்ப்பாடுகள் தோன்றி இந்த ஆடலை ஆடுதல் வேண்டும். வெற்றியால் ஏற்பட்ட பெருமிதம் கலந்த வெகுளிச்சுவை கொடுங்கொட்டி ஆடலில் முனைப்பாக இருக்கும்.

2. பாண்டுரங்கம்:-

இதில் ஆறு உறுப்புகள் உள்ளன. ஒரு போருக்கு ஆயத்தமாவதால் இந்த ஆடலில் வெளிப்படும் சுவை வீரமாகும். தேரின் முன் நிற்கும் நான்முகனின் முன்பாக முக்கண்னை அல்லது சிவம் ஆடிய ஆட்டத்திற்குப் ''பாண்டரங்கம்'' என்று பெயர். இதனைச் சிலப்பதிகாரம்,

''தேர்முன் நின்ற திசைமுகன் காணப்

பாரதியாடிய வியன் பாண்டரங்கமும்'' (சிலம்பு 6:44-45) என்று குறிப்பிடுகின்றது.

3. அல்லியம்:-

இது ஆறு உறுப்புகளைக் கொண்டது. மாயவன் அல்லது கண்ணன் ஆடும் பத்துவகை நடனங்களில் அல்லியம் ஒன்றாகும். கம்சன் ஒரு யானையின் உருவம் எடுத்து வஞ்சகமான முறையில் கண்ணனைக் கொல்ல முயன்றதையும் அதன் கொம்புகளை முறித்துக் கண்ணன் அதனைக் கொன்ற முறையையும் இந்த ஆடல் மூலம் நடித்துக் காட்டப்பெறும்.

வெற்றிபெற்றதும், ஒரு மாயத்தோற்ற நிலையில் கண்ணன் நிற்கும் நிலை அல்லியத்தில் சிறப்பிடம் பெறும்.

4. மல்லாடல்:-

இதன் உறுப்புகள் ஐந்தாகும். கண்ணன் ஒரு மல்லனைப் போன்று உருமாறி வாணனை முறியடிக்கச் செல்லும்போது அவனால் ஆடப்பெற்ற ஆடலை ''மல்லாடல்'' என்று கூறுவர்.

கண்ணன் தனது எதிரியைப் பேரொலி செய்து அழைத்து அவன் வந்ததும் ஓடிச்சென்று பிடித்துக் கொன்று விடுவதை நடித்துக் காட்டுவது இந்த ஆடலாகும். இதன் மூலம் வெளிப்படும் சுவைகள் கோபம், வீரம் ஆகியவையாகும்.

5. துடிக்கூத்து:-

இதன் உறுப்புகள் ஐந்தாகும். மாற்றுருவில் சூரன் உடலுக்குள் தந்திரமாகச் சென்று மறைந்து கொண்ட போது முருகன் ஆடிய ஆட்டத்தைத் ''துடிக்கூத்து'' என்று கூறுவர்.

முருகன் அவனைக் கண்டுபிடித்ததும் உணர்ச்சி மிகுதியில் கடல் அலையையே அரங்கத் திரையாகக் கொண்டு துடிக்கூத்து ஆடுகிறான். சிறிது நேரத்தில் எதிரியைக் கொன்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஆடுகிறான். இன்பமும் வீரமும் ஆடலின் மூலம் வெளிப்படும் சுவையாகும்.

6. குடையாடல்:-

இது ''குடைக்கூத்து'' என்றும் அழைக்கப்பெறும். இதில் காணப்பெறும் உறுப்புகள் நான்காகும். குடையாடலை ஆறுமுகன் அல்லது முருகன் என்ற கடவுள் கையில் ஒரு குடையைப் பிடித்து ஆடுவதாகக் கூறப்பெறுகிறது.

அவுணர்களை முறியடித்து அவர்களைப் படையிழக்கச் செய்து முருகன் வெற்றிக் களிப்புடன் ஆடும் இந்த ஆட்டத்தில் குடையானது ஒருபக்கத் திரையாக உதவுகின்றது. தீமையை வென்று நன்மை வெற்றி அடைவதனால் இந்த ஆடலில் இன்பக்களிப்புடன் கூடிய வீரமே சிறப்பிடம் பெறுகின்றது.

7. குடம்:-

இதன் உறுப்புகள் ஐந்தாகும். வாணாசுரனின் கோநகரான சோநகரின் தெருவில் நின்று மாயவன் ஆடும் ஆட்டத்திற்குக் ''குடம்'' என்று பெயர்.

காமனின் மகனான அநிருத்தன் வாணனின் மகளான உஷையைக் கடத்திச் சென்று விட்டதனால் அவனைப் பிடித்துச் சிறை செய்துவிட்டனர். அவனை விடுவிப்பதற்காக மாயவன் தந்திரமாக ஆடிய ஆட்டமே ''குடம்'' என்று கூறப்பெறும்.

8. மரக்கால் ஆடல்:-

இதன் உறுப்புகள் ஆறு ஆகும். அசுரர்கள் தேள், பாம்பு, பூரான், நட்டுவக்காலி போன்ற உருவெடுத்து நெளிவதைக் கண்டதும் மாயோன் அல்லது துர்க்கை மரக்கால் அணிந்து அவைகளை நசுக்கிக் கொல்லும்போது ஆடிய ஆட்டம் மரக்கால் ஆடல் ஆகும். இதனைச் சிலப்பதிகாரம்,

''காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅன்

மாயவன் ஆடிய மரக்கால் ஆடலும்'' (சிலம்பு 6:58-59)

என்றும்,

''மாயம் செய்வானவுணர் வீழநங்கை

மரக்கால் மேல் வாள மலை

ஆடும் போலும்'' (சிலம்பு-வேட்டுவ வரி)

எனக் கூறுகின்றது.

இதன் மூலம் வெளிப்படும் சுவைகள் வெகுளியும் வீரமும் ஆகும். இம்மரக்கால் ஆட்டம் பொய்க்கால் குதிரையை நினைவூட்டுகிறது.

9. பேடியாடல்:-

வாணனுடைய சிறையிலிருந்து தனது மகனை விடுவிப்பதற்காகக் காமன் அல்லது மன்மதன் என்பவன் சோநகரில் ஒரு பேடியாக உருமாறி ஆடிய ஆட்டத்தைப் ''பேடியாடல்'' என்று கூறுவர்.

10. பாவையாடல்:-

இதன் உறுப்பினர்கள் இரண்டு. ஒரு அழகான கொல்லிப்பாவை உருவில் செய்யோன் அல்லது திருமகள் ஆடிய ஆட்டத்திற்குப் ''பாவையாடல்'' என்று பெயர் இதன் சிறப்பினை,

''செருவெங் கோலம் அவுணர் நீங்கத்

திருவின் செய்யோள் ஆடிய பாவையும்'' (சிலம்பு 60-61)

எனச் சிலப்பதிகாரம் சுட்டுகின்றது.

பதினொரு ஆடல்களுள் மாயவனுக்கு மூன்று, சிவனுக்கு இரண்டு, முருகனுக்கு இரண்டு, காமன் இந்திராணி, மாயவன், திருமகள் ஆகியோருக்குத் தலைக்கு ஒவ்வொன்று என்ற முறையில் அமைந்துள்ளன. எட்டு ஆடல்கள் ஆண்களாலும் மூன்று பெண்களாலும் ஆடப் பெறுவதாக உள்ளன.

11. கடயம்:-

வாணனின் தலைநகரான சோவின் மேற்குப் புறவாயில் முன் விரிந்து கிடக்கும் வயல் வெளியில் அயிராணி அல்லது இந்திராணி கடயம் என்ற ஆடலை ஆடுகிறாள். இது அவளது இறுதியாடலாகும். வீரமும் இன்பமும் இதிலிருந்து வெளிப்படும் மெய்ப்பாடுகளாகும். இதனைச் சிலப்பதிகாரம்,

''அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்

நிலையும் படிதமும் நீங்கா மரபின்

பதினோராடலும்''

எனக் குறிப்பிடுகின்றது.

கூத்து பற்றிய விளக்கம், திவாகரம், நிகண்டு, கூற்று, சிலம்பில் நாட்டுப்புறக் கூத்து, பதினொரு வகை ஆடல்கள், அதன் விளக்கம் ஆகியன இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: