நேர்காணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்காணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழர்கள் நோக்கிலும் போக்கிலும் திருத்தம் வேண்டும் - முனைவர் க ப அறவாணன்

பேராசிரியர் க.ப. அறவாணர் உலகத் தமிழர்களுக்கெல்லாம் உறவானவர். வறுமை வயப்பட்ட சூழலிலில் பிறந்து, தன் கடும் உழைப்பால் ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு வாழ்க்கையின் உச்சத்தில்போய் உட்கார்ந்திருப்பவர் .மானுடவியல், சமூகவியல் அடிப்படையில் தமிழ்ச் சமுதாயத்தை ஆய்வு செய்து வேறு எவரும் தொடநினைக்காத துறையில் ஆழங்கால் பட்டு நிற்பவர். எண்பது நாடுகளுக்குமேல் பயணித்து அம்மக்களின் வாழ்க்கையோடு தமிழர்களின் வாழ்க்கையை, பண்பாட்டை ஒப்பிட்டுப்பார்த்து உள்ளம் கசிந்து எழுதிக்கொண்டிருப்பவர். எளிமை, கடும் உழைப்பு, சிக்கனம், சகிப்புத்தன்மை, புதிது புதிதாய் ஆய்வு செய்தும், தொடர்ந்து படிப்பதும் படைப்பதுமாகத் தன் வாழ்க்கையைச் செதுக்கிக் கொண்டு, இளைய சமுதாயத்திற்கு  எடுத்துக்காட்டாக இயங்கிவருபவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நம் "இனிய உதயத்'துக்காகத் தந்த நேர்காணலில் ஒளிவுமறைவு இல்லாமல் வெடிப்புறப் பேசியிருக்கிறார்.

பூஜ்ஜியத்திலிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கியவர் நீங்கள். மிக வறுமை வயப்பட்ட சூழலிலிருந்து படிப்படியாக முன்னேறி உலகத் தமிழர்களிடம் எல்லாம் உறவாடும் நிலைக்கு உயர்ந்திருக்கிறீர்கள். சிறு விதையாய் இருந்த நீங்கள் எப்படி விருட்சமானீர்கள்? ஓடி விளையாடிய அந்தச் சிறு பருவத்தில் உங்களுக்குள் எதைத் தேடிக் கொண்டிருந்தீர்கள்?

நெல்லை மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவன் நான். படித்த குடும்பத்தில் வந்தவன் அல்லன் நான்; நல்லவேளையாக, உள்ளூரில் இருந்த அஞ்சாம் வகுப்பு வரை நடத்தப்பட்டுவந்த பஞ்சாயத்துப் பள்ளியில் என்னைச் சேர்த்துவிட்டார்கள். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அங்குப் படித்தேன்.ஐந்தாம் வகுப்பு முடிந்தவுடன் வழக்கமாகப் படிப்பை நிறுத்தி விடுவதுதான் எங்கள் ஊர் வழக்கம். மாறாக, என்னை நான்கு மைல் தொலைவில் விஷ்ணுபுரம் என்ற ஊரில் இருந்த ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார்கள். அப்பள்ளியில் சேர்ந்து படித்தேன். ஏழாம் வகுப்பில் ஆங்கிலத்தில் தோற்றுப்போனேன். எட்டாம் வகுப்பு தாண்டி ஒன்பதாம் வகுப்புக்கு வரும்போது இரா. கந்தசாமி குருக்கள் என்ற ஆசிரியர் தமிழ்ப் பாடம் எடுத்தார். அவரே என்னை முன்னிலைப்படுத்தி ஏனைய தமிழ் வகுப்புகளில் என்னைப் பற்றிப் பேசினார். வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கும் நாட்களில் அவர் என் விடைத்தாளை வகுப்பில் காட்டுவார். என்னை எழுந்து நிற்கச் சொல்லுவார். இவ்வாறு அவர் கொடுத்த ஊக்கம் என் உள்ளுணர்வைத் தூண்டியது. அதனால், மிக நன்றாகத் தமிழ் படிக்கத் தொடங்கினேன். ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிப் படிப்பாகிய பதினோராம் வகுப்பு படிக்கும் வரை தமிழில் முதல் எண் பெறுவது என் வழக்கமாக இருந்தது. 

இருபத்தேழாம் வயதில் கல்லூரி முதல்வர், முப்பத்தேழாம் வயதில் அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் பணி. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் துறைத் தலைவராகப் பதினேழு ஆண்டுகள் பணி. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் என்று  பல நிலைகளில் பரிணமித்திருக்கிறீர்கள். ஒன்றரை ஆண்டுகளில் உங்களின் முனைவர் பட்ட ஆய்வையே முடித்திருக்கிறீர்கள். அனைத்துமே உங்கள் திட்டமிடல்படிதான் நடந்தனவா?

பள்ளிப் பருவத்தில் நூல்கள் படிக்கும் பழக்கம் உண்டாயிற்று. எம்.ஆர். எம். அப்துற் றஹீம் என்பவர் எழுதிய வாழ்க்கை முன்னேற்றப் புத்தகங்களை மலேசியாவில் இருந்த என் மாமா திரு. இராமையா வாங்கிக் கொடுத்தார். அவற்றைப் படிக்கத் தொடங்கினேன். அப்துற் றஹீம் புத்தகங்களே என் மனதில் உயரவேண்டும் என்ற துடிப்பை ஆழமாக விதைத்தன. 

அதைத் தொடர்ந்து மு.வ. நூல்கள் எனக்கு அறிமுகமாயின. அந்நூல்கள் அனைத்தையும் படித்தேன். மு.வ.வின் வாழ்க்கையையும் படித்தேன். மு.வ.வைப்போல் நாமும் ஆகவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றி கிளைக்கத் தொடங்கியது. 

சிறு வயதில் இராமகிருஷ்ண மடத்தோடு தொடர்புகொண்டிருந்த துறவி காசிநாதர், இராஜநாயகம் அடிகளார் போன்றோர் தங்கள் வாழ்வில் எப்படி ஒளியேற்றி வைத்தனர்? அதுபோலவே மூத்த தமிழறிஞர் வ.ஐ. சுப்ரமணியம் அவர்களிடம் தாங்கள் கற்றுக் கொண்டவை எவை?

சின்ன வயது முதலே என்னை உருவாக்கியவர் எங்கள் ஊர் கிழக்குத் தெருவில் இருந்த துறவி காசிநாதர் ஆவார். தம்பிக்குத் திருமணம் செய்வித்து, தான் மட்டும் துறவியாக வாழ்ந்தார் காசிநாதர். கோவிலடிமையோ, சாமி அடிமையோ அல்லர் அவர். முற்போக்குச் சிந்தனையாளர். அவரே விவேகானந்தர் நூலகம் என்ற ஒன்றை தான் இருக்கும் தெருவில் ஒரு கொட்டகை இட்டு அமைத்தார். பள்ளி சென்ற காலம் போக, எஞ்சிய நேரங்களில் நான் துறவி காசிநாதர் அவர்களோடும், அவர் உருவாக்கிய நூலகத்திலும் நேரத்தைச் செலவழித்தேன். இப்பழக்கம் பல நல்ல பழக்கங்களை இளம் வயதிலேயே ஊன்றிவிட்டது. 

கத்தோலிலிக்கத் துறவி ராஜநாயகம் அடிகளார் என்னை உயர்த்திவிட்ட பெரும் துறவி ஆவார். எம்.ஏ. முடித்த பிறகு வேலை பெறுவதற்காக நேர்முகத்தில் பங்கேற்க திருநெல்வேலிலி இந்துக் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். முதல் வகுப்பும் முதன்மையும் பெற்றிருந்த என்னை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை (1967). அதே ஊரில் தாமிரவருணி ஆற்றுக்குத் தெற்கே தூய சேவியர் கல்லூரி இருந்தது. இங்கு வந்த நான் அங்கும் சென்று முயல்வோமே என்று விண்ணப்பம் எழுதிக்கொண்டு என்னுடைய வெளியீடுகள், முதல் வகுப்புச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அக்கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் சேர்ப்பித்துவிட்டு சென்னையிலிருந்த என் தங்கை வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். 

அடுத்த சில நாளில் ராஜநாயகம் அடிகளாரிடமிருந்து தந்தி வந்தது. அத்தந்தியில் நான் அக்கல்லூரி விரிவு ரையாளராக அமர்த்தப்பட்ட செய்தி என்னை மிக மகிழவைத்தது. அவர் இருந்த திசை நோக்கித் தொழுதேன். பாளையங்கோட்டை சென்று அக்கல்லூரி விரிவுரையாளராக இணைந்தேன். கத்தோலிலிக்க நிறுவனங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பை அமைத்துக்கொடுத்தவர் ராஜநாயகம் அடிகளார்தான். 

என் மாணாக்கப் பருவத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் வ.ஐ.சு. 

அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அதிசய குணங்கள் பல. பத்து மணிக்குத் தொடங்கும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்கு காலை 8.30 மணிக்கு வந்துவிடுவார். இரவு 8.30 மணி வரை அவர் துறையில் இருப்பார். அதிகம் பேசமாட்டார். 

எனக்கு எம்.ஏ. மொழியியல் திறனாய்வு வகுப்புகளை அவரே எடுத்தார். நாற்காலிலியில் அமர்ந்து வகுப்பெடுக்க மாட்டார். நின்றுகொண்டேதான் வகுப்பு எடுப்பார். கரும்பலகையை நன்கு பயன்படுத்துவார். அடிக்கடி தேர்வு வைப்பார். உடனே விடைத்தாளைத் திருத்தி மறுநாள் கொடுத்துவிடுவார். பல்கலைக்கழகத்திற்கு நான் சம்பளப் பணம் கட்டாமல் தண்டனைக்கு (ஃபைன்) ஆளாகும்போது அவரே பணத்தைக் கட்டிவிடுவார். நிறைய படிப்பார். எங்களுக்கு எம்.ஏ. வகுப்புகள் அவர் ஆங்கிலத்தில்தான் எடுத்தார். மிகமிகக் கண்டிப்பானவர்; நேர்மையானவர். 

பதினாறு வயதிற்குப்பின் உங்கள் உறவுகளை விட்டுத் தொலைவில் சென்றுவிட்டீர்கள். உங்களை வளர்த்துக்கொள் வதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியிருக் கிறீர்கள்... இதனால் என்ன பயன் கண்டீர்கள்? சொந்த வாழ்க்கையில் இது குறித்து உங்கள் மனதில் வருத்தம் ஏற்படவில்லையா?


பிறந்த குடும்பத்தை விட்டும் ஊரை விட்டும் பள்ளிக்கல்வி முடித்தவுடன் சென்றுவிட்டேன். சிதம்பரம் வாழ்க்கை, வேலை கிடைத்தவுடன் திருநெல்வேலிலி வாழ்க்கை, தொடர்ந்து சென்னை வாழ்க்கை. விடுமுறையில்கூட நான் பிறந்த ஊர் செல்வதில்லை. பிறந்த ஊர் பாதிப்பு, ஈர்ப்பு ஆகியன சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஓரிரு ஆண்டுகளிலேயே  எனக்கு நின்றுபோய்விட்டன. அம்மா, அப்பா, குடும்பம் ஆகியவற்றின் நினைவு எனக்கு வராத அளவிற்கு சிதம்பரத்திலேயே நான் தங்கியிருந்த வீட்டின் அம்மையார் திருமதி நாகரத்தினம் அம்மாள் என்னைப் பேரன்போடு கவனித்துக் கொண்டார். வேலைக்குப் போன பிறகு என் அப்பா, அம்மா மறைகிற வரை மாதம்தோறும் அவர்களுக்குப் பணம் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் வெளிநாடு சென்றிருந்த ஐந்தாண்டுகளிலும்கூட அவர்களுக்குத் தொடர்ந்து பணம் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தேன். என் சகோதரிகளுக்கும் என்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்தேன். என் கடைசி சகோதரி திருமதி வைரம் திருமணத்தை நானே முன்னின்று நடத்தி வைத்தேன். அவர் சில ஆண்டுகளுக்குமுன் மறைந்துவிட்டார். நான்கு சகோதரிகளோடும், மூன்று சகோதரர்களோடும் உடன்பிறந்தவன் நான். தற்போது மூத்த சகோதரி, நான் ஆகியோர் மட்டும்தான் எஞ்சியுள்ளோம். 

ஒவ்வொரு நாளையும் திட்ட மிட்டுப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். '"பேசுவதைக் குறை முடிந்தால் நிறுத்து' என்பதில் உறுதியா யிருந்தி ருக்கிறீர்கள். விடுப்பெடுக்காமலேயே பணிபுரிந்திருக்கிறீர்கள். கோடை விடுமுறையை நூல்கள் எழுதப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்... தாங்கள் எழுதிய முதல் நூல் எது? எப்படி எழுதினீர்கள்?

நான் பணியாற்றும் இடங்களில் அளிக்கப்பட்டிருக்கிற விடுமுறையைக்கூட நான் எடுப்பதில்லை. எடுக்கக்கூடாது என்பதைக் கொள்கை யாக வைத்திருந்தேன். சென்னை லயோலா கல்லூரியில் எனது விடுமுறை எடுக்காத இந்தப் பழக்கத்திற்காக ஆண்டுதோறும் கல்லூரி விழாவில் மேடையேற்றி சிறப்பளித்து பணமும் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். துணைவேந்தராக இருந்தபோதும் நான் விடுமுறை எடுக்கவில்லை. அறுவை மருத்துவத்திற்காக எடுத்த விடுமுறை தவிர. எப்போதும் படித்துக் கொண்டிருப்பதும், எழுதிக்கொண்டிருப்பதும் என் வழக்கம். விடுமுறை நாட்களில் படிப்பதும் எழுதுவதும் இருமடங்காக இருக்கும். பல நூல்களை விடுமுறையிலேயே நான் எழுதிமுடித்தேன். 

"பொறுத்துப்போ, புறக்கணி, கடந்துபோ' என்பதுதான் உங்கள் வெற்றியின் மந்திரமாய் இருக்கிறது... இதைப்பற்றி கொஞ்சம் குறிப்பிட முடியுமா?

கீழ்மட்டத்தில் இருந்து துணைவேந்தர் பொறுப்பு என்ற உச்ச நிலை வரை வந்த நான், சந்தித்த இடையூறு களை அவற்றைக் கடந்த விதங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுப்போக நினைத்தேன். எனக்கு உதவி செய்தவர்களின் பெயர்களையும் பதிவு செய்ய விரும்பி னேன். அதன்விளைவாக எழுதப்பட்ட நூல்கள்தான் "பொறு, புறக்கணி, புறப்படு' என்ற நூலும், "அனுபவங்கள் பேசுகின்றன' என்ற நூலும் ஆகும். 

தாங்கள் எழுதிய நூல்களுக்குப் பல பரிசுகள் கிடைத்திருக்கின்றன. ஒருமுறை தாங்கள் எழுதிய இரண்டு நூல்களுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைக்கவிருந்தும் ஒரு நூலுக்குத்தான் பரிசு வழங்கப்பட்டது. மழுப்பலான காரணங்களால் ஒரு நூலுக்குப் பரிசு கிட்டாமல் போனது... தங்கள் மனநிலை அப்பொழுது எப்படி இருந்தது? தகுதியை மதிக்கத் தெரியாத பேர்வழிகள் என்று ஒதுக்கிவிட்டீர்களா?

என் வாழ்க்கை வெற்றியில் உதவிய சான்றோர்கள் பலர். ஊறு செய்தோர் சிலர். ஊறு பற்றிக் கேள்விப்படும்பொழுது சில மணி நேரம் கவலைப் படுவதோடு சரி, என்னுடைய கொள்கையான "ஓவர்டேக்' என்ற அடுத்த கட்டத்திற்குப் போய்விடுவேன். 

தமிழர்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றம் வேண்டியிருக்கிறது என்று கருதுகிறீர்கள்?

தமிழர் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்யவேண்டி இருக்கிறது. தமிழர்- அமெரிக்கர், ஐரோப்பியர், ஜப்பானியர் கண்டுபிடித்த பொருள்களை நுகரக் கற்றுகொண்டிருக்கிறார்களே தவிர, அவற்றைக் கண்டுபிடிக்க அந்த மக்கள் செய்த உழைப்பைக் கடைப்பிடிப்பதில்லை. சான்றாக, சாலை விதிகளை மிக அருமையாகப் பிடிவாதமாகக் கடைப்பிடிப்பார்கள். அலுவலகக் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் வரும். செனகால் குடியரசுத் தலைவருக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு அதே நாள் மாலைகூட விடை மடலும் வந்ததுண்டு. மாறாகபுறங்கூறும் பழக்கம் தமிழர்களிடம் மிக மிகுதி. பொய் சொல்வதிலும் ஒன்றை மிகைப்படுத்திப் பேசுவதிலும் தமிழர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். தமிழர்கள் நோக்கிலும் போக்கிலும் திருத்தம் வேண்டும். காலம் தவறாமையில் அயல்நாட்டார் உறுதியானவர்கள். குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கும். நிகழ்ச்சி முடியும். சினிமாவுக்கு முக்கியத்துவமே கொடுக்க மாட்டார்கள். பெரும்பாலும் திரையரங்குகள் காலிலியாக இருக்கும். தமிழரிடம்,. முதலமைச்சராக வரும் அளவிற்கு நடிக, நடிகையருக்குச் செல்வாக்கு இருப்பதுபோல எந்த நாட்டிலும் செல்வாக்கு இல்லை. 

தமிழ் இலக்கிய வரலாற்றைப் பலர் எழுதியிருக்கிறார்கள். தாங்களோ தமிழ் மக்களுடைய வரலாற்றை கால வரிசைப்படி எழுதிக்கொண்டிருக் கிறீர்கள். இந்த எண்ணம் எப்படி எழுந்தது? இதற்குரிய தரவுகளை எப்படித் திரட்டினீர்கள்? ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழர் வாழ்வில் ஏற்பட்ட... ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

செனகால் டக்கார் பல்கலைக்கழகத்தில் நான் மானுட இயல் ஆராய்ச்சியாளராக அமர்த்தப்பெற்றேன். திராவிடர்களுக்கும் கறுப்பு ஆப்பிரிக்கர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைக் கண்டறிந்து விளக்குவது எனக்கு இட்ட பணி. பணி ஏற்பதற்கு முன்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் மானுட இயல் சான்றிதழ் வகுப்பை நான் முடித்திருந்தேன். என் ஆராய்ச்சிக்கு அந்தக் கல்வி போதாமையால், அயல்நாட்டில் பொறுப்பேற்ற தொடக்க காலங்களில் சமூக இயல் நூல்களையும் மானுட இயல் நூல்களையும் அடிப்படையாக இருப்பவற்றை வாங்கி மீண்டும் மீண்டும் படித்தேன். அவற்றை அடியொற்றித்தான் ஐந்தாண்டு அங்கே நிகழ்ந்த என் ஆராய்ச்சியும் அக்காலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளும் நூல்களும் அமைந்தன. 1982-ல் தாயகம் திரும்பி தொடர்ந்து லயோலா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின் தொடர்ந்து எழுதவேண்டும் என்று முடிவு செய்தேன். இலக்கணங்கள் பற்றியும், இலக்கியங்கள் பற்றியும் எழுதுவதைவிட, அயல்நாட்டில் கற்ற சமூக இயல், மானுட இயலை அடிப்படையாக வைத்து நூல் எழுத விரும்பினேன். தமிழரைப் பொறுத்த அளவு, அதுவரை ஏன் இன்றுவரைகூட தமிழருடைய அரசியல் வரலாறு எழுதப்பட்டிருக்கும் அளவுக்குத் தமிழ்ச் சமுதாய வரலாறு எழுதப்படவில்லை. எனவே, தமிழ்ச் சமுதாய வரலாற்றை எழுதுவது என்று முடிவெடுத்தேன். அதற்கு முன்மாதிரியாக, ஆங்கிலத்தில் வெளிவந்த ´Trevelyon For Social History of England என்ற நூலைப் பெற்று ஒரு முறைக்குப் பலமுறை அந்த நூலைக் கற்றேன். அந்நூலை அடிப்படையாக வைத்தே தமிழ்ச் சமுதாய வரலாற்றை எழுதத் தொடங்கினேன். 

இதுவரை தொல் தமிழர் காலம் தொடங்கி, நாயக்கர் காலம்வரை ஏழு தொகுதிகளை எழுதி முடித்துத் தற்போது ஐரோப்பியர் காலம் பற்றி எழுதத் தொடங்கியுள்ளேன். 

தமிழர் நிலை மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

 தமிழ்ச் சமுதாயத்தில் சிறுமதி படைத்தோரின் பழிகளையும் குறுக்கீடுகளையும் பொருட்படுத்தக்கூடாது. நம் அடிப்படைப் பண்பாட்டை மாற்றினால் ஒழிய, இவற்றைத் தவிர்த்துவிட முடியாது. தமிழர்கள் அடிப்படைப் பண்பாடு இல்லாதவர்கள் என்பதுதான் சமூக இயல் கற்ற என்னுடைய முடிவாகும். நாம் பின்பற்றும் இந்திய அரசியல், இந்திய நீதி முறை, தண்டனை முறை தற்போதைய தமிழரின் போக்கை மாற்றிவிட முடியாது. மேலும் கூட்டவே செய்யும். இந்தியா, சீனா மாதிரிக்கு மாறினால் மாற்றங்கள் ஏற்பட வழி உண்டு. நம் முன்னோர் இந்திய சுதேசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். அரசியல் சாசனத்தை வகுக்கிறபொழுது அப்படியே இங்கிலாந்து மாடலைக் காப்பியடித்தார்கள். நூற்றுக்கு நூறு படித்த பண்பாடு உடைய குறைந்த மக்கள் தொகையுடைய இங்கிலாந்து மக்களுக்காக அமைக்கப்பட்ட சட்டதிட்டம், நீதிமுறை, அரசு முறை, கட்சி ஆட்சி முறை இந்தியா விற்குப் பொருந்தவே பொருந்தாது. இந்திய மக்கள் தொண்ணூறு விழுக்காடு படிக்காதவர்கள் (1947). 85 விழுக்காடு பண்பாடு குறைந்தவர்கள் 60 விழுக்காடு பரம ஏழைகள். அனைத்திற்கும் சமயங்களையும் கோவில்களையும் விதியையும் நம்பிக்கொண்டிருப்பவர்கள். இவர்களிடையே இங்கிலாந்து சட்டதிட்டம் எடுபடவே படாது. 

 கல்கத்தா தமிழ்ச்சங்கத்தில் பேசிய தொடர் பேச்சினைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே "கவிதையின் உயிர் உள்ளம் உடல்' என்ற தலைப்பில் அருமையான நூலாக்கினீர்கள். "கவிதை கிழக்கும் மேற்கும்' என்ற தலைப்பில் மேலைக் கவிஞர்களின் கவிதை குறித்தும் எழுதியிருக்கிறீர்கள். கவிதை படைப்பதில் ஆர்வம் காட்டாமல் ஆய்வு நெறியிலேயே சென்றுவிட்டீர்கள்... என்ன காரணம்?

என்னுடைய முதல் நூல் கவிதை நூல்தான். அச்சிறு நூலிலின் பெயர் "ஒளி பரவட்டும்' என்பது. தொடர்ந்து என் வாழ்க்கை ஆராய்ச்சி செய்வது என்று அமைந்துவிட்டமையால், கவிதை படைப்பது நின்றுவிட்டது. 

"அற இலக்கியக் களஞ்சியம்' என்று மிகப்பெரிய தொகுப்பு நூலை வெளியிட்டு வியக்க வைத்தீர்கள்... இந்தத் தொகுப்புக்கு எத்தனை ஆண்டு உழைப்பு தேவைப்பட்டது. தமிழர்களிடம் அதற்குக் கிட்டிய வரவேற்பு எப்படி?

துணைவேந்தராக இருந்து ஓய்வு பெற்ற 2001-ல் ஏதேனும் தமிழுக்குப் பயனுள்ள நிலையான, வேலை செய்யவேண்டும் என்று தீர ஆலோசித்தேன். 

அதன்விளைவே, "அற இலக்கியக் களஞ்சியம்' எனும் பாரிய நூல். அந்த நூலுக்காக ஏழாண்டுகள் தொடர்ந்து உழைத்தேன். உழைப்பு வீண் போகவில்லை. நல்ல வரவேற்பு. ஆயிரம் ரூபாய் விலையுள்ள அந்நூலிலின் முதல் பதிப்பு விற்று இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. தொடர்ந்து நிலையான வரவேற்பு அந்த நூலுக்குக் கிடைக்கும்;. கிடைக்கிறது.

உங்கள் கண்ணோட்டத்தில் திருவள்ளுவம் நூல் படைத்தீர்கள். அதற்குச் சில பேராசிரியர்கள்கூட எதிர்ப்புக் கிளப்பினார்கள். ஒரு படைப்பை மறுவாசிப்பு செய்வதோ இன்றைய காலகட்டத் திற்கு ஏற்ப கருத்துச் சொல்வதோ கூடாது என்பது சரியான நிலைப்பாடா?

திருவள்ளுவம் நூல் பற்றி சிலர் குறிப்பாக, மதுரையில் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். சிற்றேடுகளில் எழுதினார்கள். வியப்பு என்னவென்றால் முதற்பதிப்பு விற்று இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. மூன்றாம் பதிப்பை எதிர்நோக்கிக் கொண்டுள்ளது. புதிதாகச் சிந்திப்போரிடமிருந்து அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு. 

தாங்கள் சிறுகதைகளையும் எழுதி யிருக்கிறீர்கள். "கண்ணீரில் எழுதிய கதைகள்' என்ற தலைப்பிலும் நூலாக வெளிவந்திருக்கிறது. அதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

என்னுடைய எழுத்துப்பயணம் சிறுகதைப் படைப்பிலேயே தொடங்கியது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபொழுது மதுரைத் திருவள்ளுவர் கழகத் தலைவர் ஐயா கி. பழனியப்பன் (பழ. நெடுமாறன் தந்தையார்) சிறுகதைப் போட்டி ஒன்றை பள்ளி மாணவர்களுக்கு என வைத்திருந்தார்கள். அப் போட்டியில் நான் கலந்துகொண்டேன். என்னுடைய கதைக்குப் பரிசு அளிக்கப்பட்டது. ரூபாய் 40 அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதுவரை நான் எழுதி பின்வரும் தலைப்புகளில் உள்ள சிறுகதை நூல்கள் வெளிவந்துள்ளன.

"அவள் அவன் அது', "தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும். செதுக்காத  சிற்பங்கள்', "சொல்ல முடிந்த சோகங்கள்', "நல்லவங்க இன்னும்' இருக்காங்க', "கண்ணீரில் மிதக்கும் கதைகள்'.

இத்தனை காலமாக எவருமே தொல் காப்பியத்தை எளிய மக்கள் படித்துப் புரிந்து கொள்ளும்படி உரை எழுதவில்லையே. வெளி வந்திருக்கும் சில உரைநூல்களும் தமிழாசிரியர்கள் படிப்பதற்கேற்றவையாக உள்ளனவே தவிர மக்களிடம் சென்று சேரத்தக்கவையாக இல்லையே... இதற்கு என்ன வழி?


நல்ல கருத்து. தொல்காப்பியத்திற்கு அறிஞர் சிலர் எளிய உரை வரைந்துள்ளனர். என் பேராசிரியர் அறிஞர் ச.வே. சுப்பிரமணியம் எளிய உரை எழுதியுள்ளார்கள். என்.பி,எச்.டி. ஆராய்ச்சிப் பொருள் தொல்காப்பியமாக இருந்ததாலும், தொல்காப்பியக் களஞ்சியம் என்ற பெரிய நூலை வெளியிட்டதாலும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவது பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய என் வேலைத்திட்டம் தமிழ்ச் சமுதாய வரலாற்றை எழுதி நிறைவுசெய்வது. எட்டாவது தொகுதியாக ஐரோப்பியர் வரலாறு நிறைவுற்றுள்ளது. தொடர்ந்து தற்காலம் என ஒரு தொகுதி எழுதுவது பற்றி யோசித்து வருகிறேன். இப்பணி முடிந்தபின் தாங்கள் சொல்லும் தொல்காப்பிய உரை எழுதுதல் பற்றிச் சிந்திப்பேன்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் போன்றவை ஆங்கிலத்தை மிக எளிதாகக் கற்பதற்கு அடிப்படை இலக்கணத்திலிலிருந்து மிகச்சிறப்பாக நூல்கள் வெளியிட்டு வருகின்றன. தமிழில் அப்படி நூல்களைக் கொண்டுவர எந்தப் பல்கலைக்கழகமும் தீவிர முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லையே. சும்மா தமிழ் அழிந்து வருகிறது, சிதைந்து வருகிறது என்று புலம்பி என்ன பயன்?

ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதோர் எளிதாகப் படித்து அறிவு பெற உலகெங்கும் பலவேறு முயற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுபோன்று தமிழுக்கும் செய்யவேண்டும் என்பது நல்ல கருத்தே. பேராசிரியர் மா. நன்னன் இக்கருத்தில் எழுதியுள்ள நூல்கள் குறிப்பிடத்தக்கவை. "தமிழில் எழுதிப் பழக' எனும் தலைப்பில் நானும் நூல் ஒன்றை எழுதி உள்ளேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 

வாழும் கவிஞர்களில் எழுதும் முறையிலும் கவிதை நுட்பத்திலும் தங்களை வியக்க வைத்த, விரும்ப வைத்த பத்துக் கவிஞர்களைப் பட்டியலிலிடமுடியுமா?

நான் விரும்பும் கவிஞர்கள் வரிசைப்பட: 1. மகாகவி பாரதியார் 2. பாரதிதாசன் 3. பேரரசு கண்ணதாசன் 4. மீரா 5. வைரமுத்து 6. சிற்பி 7. தங்களுடையவை 8. பெருஞ்சித்திரன் 9. வேலூர் நாராயணன் 10. செதார் செங்கோர்.

 தாங்கள் தேர்ந்த ஆய்வாளர். எதிர்காலத் தமிழ்க் கவிதை எப்படி இருக்கும்? எப்படி இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்?

எதிர்காலத் தமிழ்க் கவிதை ஆண்- பெண் மோகம், காதல் ஆகிய பாடுபொருளில் இருந்து முற்று மாக விடுதலை பெறவேண்டும். பத்தாண்டு காலத்திற்குக் காதல் கருப்பொருள் பற்றி எழுதாமல் இருந்தாலும் இழப்பு ஒன்றுமில்லை. சமுதாயத்தை மீட்டெடுக்க சமுதாய அழுக்குகளைப் போக்க, நம் கவிஞர்கள் முழுக் கவனம் செலுத்தவேண்டும்.

மானுட இயல்துறையில் தங்களுக்கு நாட்டம் வந்த வரலாறு பற்றி சொல்லுங்கள்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 1970-ஆம் ஆண்டு துணைப் பேராசிரியராக இணைந்தேன். நன்னூலைப் பற்றி எம்.லிலிட். ஆய்வு செய்தேன். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே பகுதி நேர பிஎச்.டி. ஆய்வுக்கு இணைந்தேன். தலைப்பு தொல்காப்பிய உரையாசிரியர். என் நெறியாளராக இருந்தவர் அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே மானுட இயலில் டிப்ளமா பெற்று அக்கல்வியில் ஆர்வமுடையவராக இருந்தார். 

அவருடைய வழிப்படுத்தலுக்கு இணங்க நானும் சென்னைப் பல்கலைக்கழகம் மாலை நேரத்தில் நடத்தும் மானுட இயல் சான்றிதழ் வகுப்பில் இணைந்தேன். 

இதனை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் எனக்குக் கிடைத்த அயல்நாட்டுப் பல்கலைக்கழகப் பணியும் அமைந்தது. செனகால் நாட்டு டக்கார் பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்க கருப்பின மக்களைப் பற்றியும் தென்னிந்தியர்களைப் பற்றியும் அவர்தம் பழக்கவழக்கங்களைப் பற்றியும் ஒப்பிட்டு ஆராய்வதே என் பணி. 

விளைவாக நான் எழுதும் கட்டுரைகளும் வெளியிடும் நூல்களும் சமூக இயல், மானுட இயல் சார்ந்தே அமைந்தன. தொடர்ந்து இன்று வரை அக்கொள்கையையே பின்பற்றி வருகிறேன். இதன் பயனாகப் பலவேறு புதிய விளக்கங்கள் கிடைத்தன. ஒரு சான்று: தமிழர் சங்க காலம் முதல் தமிழ்ப் பேசும் மக்கள் என ஓரணியில் திரண்டு ஒன்றுபட்டு வாழ்வதைக் காட்டிலும் தம்முள் சேர, சோழ, பாண்டியர், வேளிர் என்று பல்வேறு பிரிவினராகப் பிரிந்து கிடந்தனர். தம்முள் போர் செய்துகொண்டே இருந்தனர். 

மானுட இயல் கொள்கையின்படி எந்தச் சமுதாயத்தில் தற்கொலைக்கான சூழல் கூடுதலாக உள்ளதோ அந்தச் சமுதாயம் ஒன்றுபட்டிராமல் பிரிந்து கிடக்கும். சமூகக் கட்டொருமைப்பாடு குறையக் குறைய அவ்வினத்தில் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வு குன்றி எளிதாக தற்கொலையை நாடுவர். சங்க காலம் முதல் இன்னபிற காலங்களிலும் தமிழ்ச் சமுதாயத்தில் தற்கொலை வரவேற்கப்படுவதும் மானத்தை வெளிப்படுத்துவதாகவும், தெய்வநிலைக்குக் கொண்டு செல்வதாகவும் கருதப்படுவது வழக்கம். இந்நிலையையும் சமூகக் கட்டொருமைப்பாட்டுக் கொள்கையையும் பொருத்தி விளக்கினேன்.  எமில் துர்கேம் எனும் ஃபிரென்ச் சமூக இயல் அறிஞர் இக்கொள்கையை விளக்கி 'சூசைட்' எனும் தலைப்பில் பெரிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். 

நானும் தமிழர் - தன்னம்பிக்கை -தற்கொலை எனும் நூல் ஒன்றும் எழுதினேன். இந்நூலுக்குப் பரிசும் கிடைத்தது.

உங்கள் வாழ்க்கைக் குறிக்கோள் வாசகமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்!

முடிந்தால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்!

இயன்றால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்!

இவ்வாசகங்களைப் பலரும் எடுத்தாள்வதை அவர்களே கூறுகின்றனர்.

நேர்காணல் - சென்னிமலை தண்டபாணி


நன்றி - இனிய உதயம் 01 11 2013

நேர்காணல் - சாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன்

பாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் பதினைந்து கட்டுரைத்தொகுதிகளும் இரண்டு குழந்தைப்பாடல் தொகுதிகளும் இவருடைய சொந்தப் படைப்புகள். வேலையின் காரணமாக தனது இருபத்து நான்காவது வயதில் கர்நாடக மாநிலம் சென்றார். சென்ற ஆரம்ப காலத்திலேயே சுயமாக கன்னட மொழியைக் கற்றுக்கொண்டார்.

ஆச்சரியிக்கத்தக்க வகையில் நான்கு நாவல்கள், நான்கு நாடகங்கள், இரண்டு தலித் சுயசரிதைகள், ஒரு சிறுகதைத் தொகுதி, கன்னட தலித் எழுத்துகளைப் பற்றிய ஓர் அறிமுக நூல், நவீன கன்னட இலக்கிய முயற்சிகளை அடையாளப்படுத்தும் இரண்டு தொகைநூல்கள் என எண்ணற்ற படைப்புகளை கன்னட மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

1995இல் வெளிவந்த ‘பாய்மரக்கப்பல்’ என்னும் நாவலுக்கு இலக்கியச்சிந்தனைப் பரிசும், ‘பயணம்’ என்னும் சிறுகதைக்கு 1996இல் கதா விருதும், ‘பருவம்’ என்னும் கன்னட நாவலை மொழிபெயர்த்தமைக்காக 2005இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதும் பெற்றவர். இவருடைய மனைவி அமுதா. மகன் அம்ரிதா மயன் கார்க்கி.

கர்நாடகத்தில் இருபத்தொன்பது ஆண்டுகள் பாரத் சஞ்சார் நிகம் நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு, தற்சமயம் பணி இடமாற்றம் பெற்று சென்னைக்கு வந்திருக்கிறார்.ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் தங்கியிருக்கும் மேற்கு மாம்பலம் வீட்டில் தீராநதிக்காக சந்தித்தபோது... 

தீராநதி: தீராநதி இதழில் தொடராக வெளிவந்த ‘அருகில் ஒளிரும் சுடர்’ கட்டுரைகள் சமீபத்தில் புத்தக வடிவத்தில் அகரம் வெளியீடாக வந்திருப்பதைப் படித்தேன். தொடராக மாதத்துக்கொருமுறை ஒவ்வொரு கட்டுரையாகப் படித்ததைவிட எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படித்தது நல்ல அனுபவமாக இருந்தது. சுடர் நம் அருகிலேயே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. தினசரி வாழ்வின் ஓட்டத்தில் நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை. மொத்த வாசிப்பில் அந்த உண்மையைச் சட்டென்று மனம் கண்டடைந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பல கட்டுரைகள் வாழ்வின் துயரமான பக்கங்களைக் காட்டுவதாக இருந்தன. உங்கள் படைப்புகளில் தொடர்ச்சியாக துயரம் ஒரு பேசுபொருளாக இருந்துகொண்டே இருக்கிறதே?

பாவண்ணன்: திட்டமிட்டு எந்த ஒரு படைப்பையும் அப்படி ஒரு நோக்கத்தோடு உருவாக்குவதில்லை. ஏதோ ஒரு காட்சி அல்லது ஒரு சொல் அல்லது ஓர் ஓசை வழங்கக்கூடிய மனஎழுச்சிதான் எழுத்தை நோக்கித் தள்ளுகிறது. அந்த எழுச்சியின் வேகமும் திசையும்தான் ஒரு படைப்பின் மையத்தைத் தீர்மானிக்கிறது. அந்த மையம் சிற்சில சமயங்களில் வாழ்வின் துயரமான பக்கங்களைக் காட்டுவதாக அமைந்துவிடுகின்றன. யாரும் துயரத்தை வரமாகப் பெற்றுக்கொண்டு வாழ விரும்புகிறவர்கள் இல்லை. துயரத்திலிருந்து மீண்டு நிம்மதியின் கரையில் ஒதுங்கி வாழவே விரும்புகிறோம். ஆனால் கரையின் சுவடே தெரியாமல் காலம் முழுக்க நீந்திக்கொண்டும் தத்தளித்துக்கொண்டும் இருக்கிறோம். வறுமை மட்டும் துயரமல்ல. மனவறுமைகூட ஒருவிதத்தில் துயரம்தான். அன்பின்மை ஒரு துயரம். கருணையில்லாமல் இருப்பதுவும் ஒருவகையில் துயரம்தான். அறிவில்லாமல் ஒருவன் இருப்பதுகூட துயரம்தான். துயரம் ஒரு கடல்போலப் பொங்கிவந்து எல்லோரையும் இழுத்துக்கொண்டு போகிறது. இந்த வாழ்க்கை ஏன் இப்படி சீர்குலைந்துபோனது, இதை ஏன் இன்னும் நம்மால் அழகுடன் வாழமுடியாமல் போனது என்று நினைக்கிற நேரத்தில், இந்தத் துயரத்தைப்பற்றிய நினைவுகளும் முன்னால் வந்து நிற்கின்றன.



தீராநதி: இலக்கியத்தில் துயரத்தை முன்னிலைப்படுத்தவேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் உண்டா?

பாவண்ணன்: கண்டிப்பாக உண்டு. சீதையின் துயரம்தானே ராமாயணம்? குந்தி, துரோபதை, சுபத்திரை என மூன்று தலைமுறைப் பெண்களின் துயரம்தானே மகாபாரதம்? கண்ணகியின் துயரமல்லவா சிலப்பதிகாரம்? யோசித்துப் பாருங்கள். அவர்களாகவா அந்தத் துயரத்தை வேண்டிப் பெற்றார்கள்? மற்றவர்கள் அல்லவா அவர்களை துயரத்தை நோக்கித் தள்ளினார்கள்? ராமனின் வில்லுக்கிருந்த திறமைதான், விசுவாமித்திர முனிவர் அவனைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமாக இருந்தது. அவனுடைய அதே வில்லாற்றலுக்குக் கிடைத்த வெற்றிதான் சீதை. ஆனால் புற உலகை வில்லால் வெற்றி கண்ட ராமனால் சொந்த வீட்டில் வெற்றியோடு இருக்கமுடியவில்லை. காட்டுக்கு வெளியேற வேண்டியிருக்கிறது. காட்டிலும் நிம்மதி இல்லை. மனைவியைத் தொலைப்பது எவ்வளவு பெரிய துயரம். மனைவியும் கணவனும் ஒருவரை ஒருவர் பார்க்கமுடியாமல், பேசிக்கொள்ள முடியாமல் ஆண்டுக்கணக்கில் பிரிந்திருப்பது அதுவும் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற உண்மைகூடத் தெரியாமல் இருப்பது என்பது எவ்வளவு பெரிய துயரம். ராமனின் வெற்றியைப் பாடுகிற காவியம் என்பது ராமனின் துயரத்தையும் அல்லவா சேர்த்துப் பாடுகிறது? ராமனின் துயரத்தையோ அல்லது சீதையின் துயரத்தையோ முன்னிலைப் படுத்தாமல் ராமனின் வெற்றியைமட்டும் பாடி ராமாயணத்தை முழுமை செய்யமுடியுமா, சொல்லுங்கள். மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, நளவெண்பா என இலக்கியத்தின் எல்லாப் பக்கங்களுக்கும் இது பொருந்தும். இலக்கியத்தை மட்டுமல்ல, வரலாற்றையும் எடுத்துப் பாருங்கள், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதும்போது, அதற்காக ரத்தம் சிந்தியவர்களின் குறிப்பில்லாமல் எழுதிவிடமுடியுமா? ஜாலியன் வாலாபாக் படுகொலையின் துயரத்தைப் பற்றி எழுதாமல் சுதந்திர வரலாற்றை முன்வைத்துவிட முடியுமா? இலக்கியமாக இருந்தாலும் சரி, வரலாறாக இருந்தாலும் சரி, துயரத்தை முன்வைக்கப்படுவதைத் தவிர்க்கமுடியாது என்றே தோன்றுகிறது.

தீராநதி: சமீபகாலத்தில் உங்கள் சிறுகதைகளைவிட கட்டுரைகளே அதிக எண்ணிக்கையில் வெளிவந்துள்ளன. சற்றே கதைத்தன்மை படிந்த அனுபவக் கட்டுரைகள் என்பதால் வாசகர்களை அவை எளிதில் உள்ளிழுத்துவிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. கொஞ்சம் முயற்சி செய்தால் அவற்றைச் சிறுகதைகளாக ஆக்கிவிடமுடியுமோ என்றுகூட சில சமயங்களில் தோன்றியதுண்டு. இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதுவதற்கு ஏதேனும் காரணம் உண்டா?

பாவண்ணன்: இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கதைகளின் வடிவத்துக்கும் இப்போது எழுதப்படுகிற கதைகளின் வடிவத்துக்கும் இடையே சின்ன வேறுபாடு இருக்கிறது. இன்றைய கதைவடிவம் சற்றே சிக்கல்தன்மை உள்ள வடிவம். ஊடுபாவாகப் பல சரடுகள் உள்ள வடிவம். இருபதாண்டுகளுக்கு முன்னால் ஒரு வாழ்வனுபவத்தை கச்சிதமான சொற்களால் நேர்த்தியாக சொல்லமுடிந்தாலே போதும். ஒரு நல்ல கதையை எழுதிவிட முடியும். இன்று, அந்த வடிவத்தின் தன்மை புரியப்புரிய, அதன் சவால்கள் என்ன என்பது புரியப்புரிய, அதை அடையவேண்டும் என்கிற வேகம் மனத்தில் எழுகிறது. அந்த இலக்கை நோக்கிய பயணத்துக்கு, அனுபவம் மட்டுமே போதுமானதல்ல. அது ஒரு கட்டுச்சோற்று மூட்டை. அவ்வளவுதான். இன்னும் தண்ணீர்ப்புட்டி, துணிமூட்டை, குடை, பெட்டி, மிதியடி, கைப்பை என பல விஷயங்கள் தேவைப்பட்டியலில் உண்டு. கதையாக முன்வைக்க முடியாத இந்த அனுபவங்களை என்ன செய்வது என்கிற எண்ணங்களின் விளைவாகத்தான் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். அதற்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் ஊக்கம் கொடுப்பதாக இருக்கிறது.

தீராநதி: வாழ்வனுபவங்களின் அடிப்படையில் புதுவகையிலான இக்கட்டுரைகளில் முதல் கட்டுரை எப்போது வெளிவந்தது?

பாவண்ணன்: சரியாக நினைவில்லை, பத்தாண்டுகளுக்கு முன்னால் இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். ’மருதம்’ என்கிற இணைய இதழில் நண்பர் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருந்தார். அவ்விதழில் நானும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொன்னார். தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால், அதை ஒரு கட்டுரைத் தொடராக அமைத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டுக் கொடுத்தார். ”தீராத பசிகொண்ட விலங்கு’ என்னும் கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் பல கட்டுரைகளை அத்தொடரில்தான் எழுதினேன். சில காரணங்களால் அந்த இதழ் தொடர்ந்து இயங்காமல் போய்விட்டது. தொடர் நின்றுபோனாலும், ஒரு புதிய வடிகாலைக் கண்டுபிடித்த வேகத்தில் தொடர்ச்சியாக அப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலுமாக அவை தொடர்ந்து வெளிவந்தன.

தீராநதி: வாழ்வனுபவங்களையும் படைப்பனுபவங்களையும் இணைத்துக் காட்டுகிற கட்டுரைகளையும் எழுதினீர்கள் அல்லவா?

பாவண்ணன்: மொத்தம் நூறு கட்டுரைகள். திண்ணை இணைய இதழில் ”எனக்குப் பிடித்த கதைகள்’’ என்னும் தலைப்பில் இரண்டாண்டுகள் அவற்றை எழுதினேன். இலக்கியத்துக்குள் நுழைகிற ஒரு புதிய வாசகனுக்குப் பயன்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் அவற்றை எழுதும் ஆசை வந்தது. தினமும் பல சிறுகதைகளை நாம் படிக்கிறோம். சில நமக்குப் பிடிக்கின்றன. நம் நெஞ்சில் நீண்டகாலம் தங்கி நம்மை அசைபோட வைக்கின்றன. சில நமக்குப் பிடிப்பதில்லை. முதலில் இந்த வேறுபாடு ஏன் தோன்றுகிறது? ஒரு படைப்பை ஏன் நாம் விரும்புகிறோம்? அதிலிருந்து நாம் பெறுவது என்ன? இதையெல்லாம் என் வாழ்வனுபவத்தை முன்வைத்து எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதே சமயத்தில், ஒரு படைப்பில் உள்ள அழகியல் கூறுகளை எப்படிப் பிரித்துப் பார்த்து அணுகுவது, கதையின் மையங்களையும் அவற்றையும் எப்படி இணைத்துப் புரிந்துகொள்வது என்பதையும் கலையும் வாழ்வும் எந்தப் புள்ளியில் இணைகின்றன என்பதையும் சுவையுணர்வின் அடிப்படையில் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதும் என் விருப்பம். அந்த நோக்கத்தோடு தமிழ்நாட்டின் தமிழ்ச் சிறுகதைகள், இலங்கைத் தமிழ்ச் சிறுகதைகள், பிற இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகள், உலக மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் என வகைப்படுத்திக்கொண்டு அவற்றை எழுதினேன். இந்தக் கட்டுரைகளின் வாசிப்பனுபவம் தம் சுவையுணர்வை வளப்படுத்திக்கொள்ள உதவியதாகப் பல வாசகர்கள் அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். இன்றும் ஏதாவது ஒரு புதிய ஊரில் சந்திக்க நேர்கிற ஒரு புதிய வாசகர் இந்தக் கட்டுரைத் தொகுப்பைப்பற்றிச் சொல்வதுண்டு. அது எனக்கு நிறைவாக இருக்கிறது.

தீராநதி: உங்கள் வாசிப்பனுவம் ஆச்சரியமளிக்கும் அளவுக்கு மகத்தானதாக இருக்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கம் உங்களுக்கு இளமையில் எப்படி வந்தது? அதை நீங்கள் எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?

பாவண்ணன்: நான் படித்த ஆரம்பப் பள்ளிகளுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும்தான் உண்மையில் நன்றி சொல்ல வேண்டும். வளவனூர் என்னும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியப்பள்ளியிலும் கோவிந்தையர் பள்ளியிலும் தொடக்க வகுப்புகளில் படித்தேன். பிறகு அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதிவரையில் படித்தேன். தொடக்கப்பள்ளியிலும் சரி, உயர்நிலைப் பள்ளியிலும் சரி அக்காலத்தில் நூலக வகுப்புகள் உண்டு. சிறுவர்களாகிய எங்களுக்கு அந்த வகுப்பு மிகவும் பிடிக்கும். அப்போதுதான் எங்கள் ஆசிரியர் எங்களுக்குக் கதைகள் சொல்வார். பாட்டுப் பாடவைப்பார். பேசுவதற்குக் கற்றுக்கொடுப்பார். பள்ளி நூலகத்திலிருந்து கொண்டுவந்த புத்தகங்களை ஆளுக்கொன்று கொடுத்துவிட்டு, அரைமணி நேரம் அமைதியாகப் படிக்கச் சொல்வார். ஒருவர் படித்த கதையை இன்னொருவருக்குச் சொல்லச்சொல்வார். அந்த வகுப்பு எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி மருந்துபோல. அந்த ஆசிரியர்களை நாங்கள் மிகவும் விரும்பினோம். எனக்கு பழனி என்றொரு நண்பன் இருந்தான். அவனும் என்னைப்போலவே புத்தகங்களை விரும்பிப் படிக்கக்கூடியவன். ஒருவர் மாற்றி ஒருவராக நாங்கள் இருவரும் ஒரே புத்தகத்தைப் படித்தோம். படித்த கதையைப் பற்றிப் பேசுவதற்கும் அதையொட்டி கற்பனையை வளர்த்துக்கொள்வதற்கும் அந்தத் திட்டம் மிகவும் உதவியாக இருந்தது. எங்கள் புத்தக ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, எங்கள் ஆசிரியர் ஓய்வு நேரங்களில் ஊர் நூலகத்துக்குச் சென்று படிக்கச் சொன்னார். என் அப்பாவுடைய நண்பரின் மகன்தான் அங்கே நூலகராக இருந்தார். வயதில் சிறியவர்களான நாங்கள் நூலகத்துக்குள் வருவதை ஆச்சரியமாகப் பார்த்தார். நாங்கள் விரும்பிக் கேட்கும் நூல்களைப் படிக்க எடுத்துக் கொடுத்தார். அங்கேயே படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அதுதான் நிபந்தனை. ஓய்வு நாட்களில் நூலகமே எங்கள் புகலிடமாக இருந்தது. மறக்க முடியாத நாட்கள் அவை. பெரிய விடுப்பில் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டுக்குச் செல்வதுண்டு. வீட்டுக்குப் பக்கத்திலேயே அங்கும் ஒரு நூலகம் இருந்தது. அந்த நூலகரும் என்மீது மிகவும் அன்பாக இருந்தார். பைபிள் கதைகள், ஈசாப் கதைகள், அரேபிய இரவுக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் எல்லாம் அவர் கொடுத்துத்தான் படித்தேன். தற்செயலாக எனக்குக் காட்டப்பட்ட இந்தத் திசையில் தொடர்ந்து சென்றேன். புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி நூலகமும் ரோமண்ட் ரோலண்ட் நூலகமும் என்னைப் புதுமனிதனாக்கியவை. எங்கள் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த ம.இலெ.தங்கப்பா கல்விப்பாடத்தோடு வாழ்க்கைப்பாடத்தையும் இணைத்து நடத்தியவர். எங்கள் சிற்றூரில் திருக்குறள் கழகம் என்னும் அமைப்பை நடத்திவந்த அண்ணன்மார்கள் தொடர்பால் இலக்கிய வாசிப்பு இன்னும் ஆழமானது. பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்களில் தொடங்கி, பிறகு பின்முகமாக சங்க இலக்கியங்களையும் இதிகாசங்களையும் காப்பியங்களையும் தொடர்ந்து தேடிப் படித்து விவாதிக்க இந்த உறவு துணையாக இருந்தது. படிப்பதும் அதைப்பற்றிப் பேசுவதும் மனத்துக்குப் பிடித்திருந்தது. இரவு நேரங்களில் தூக்கத்தை மறந்து நானும் என் நண்பன் பழனியும் பல கதைகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். ஒரு கதையைப்பற்றி பேசும்போது, நாங்கள் பார்த்திருந்த வாழ்க்கைச் சம்பவம் நினைவுக்கு வந்துவிடும். அவர்கள் வாழ்வில்கூட இப்படித்தானே நடந்தது என்று இணைத்துப் பார்த்துப் பேசிக் கொள்வோம். அப்போதுதான் ருஷ்ய இலக்கியங்களின் அறிமுகம் கிடைத்தது. ஸ்டெப்பிப் புல்வெளிகளும் கோதுமை வயல்களும் பனியால் சூழப்பட்ட அஞ்சல் நிலையங்களும் எங்கள் ஊருக்குப் பக்கத்திலேயே உள்ளவைபோன்ற நெருக்கத்தை அந்தப் புத்தகங்கள் கொடுத்தன. எங்கள் பார்வையையும் மன உலகத்தையும் அவை விரிவாக்கின. தற்செயலாக, நூலகத்தில் அப்போது க.நா.சு எழுதிய ’உலகின் சிறந்த நாவல்கள்’ என்னும் அறிமுகப் புத்தகத்தைப் படித்தோம். அவர் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களையெல்லாம் எப்படியாவது தேடிப் படித்துவிட வேண்டும் என்னும் வைராக்கியம் எங்கள் மனத்தில் விழுந்தது. அந்தத் தேடல் எங்களுக்கு மிகவும் நல்ல பயனைக் கொடுத்தது. டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி, குப்ரின், துர்கனேவ், ஷோலகோவ் எல்லோரையும் இப்படித்தான் படித்தோம். அதன் தொடர்ச்சியாக நேஷனல் புக் டிரஸ்ட்டும் சாகித்திய அகாதெமியும் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல்களும் எங்களை மிகவும் கவர்ந்தன. இடைவிடாத எங்கள் வாசிப்பும் விவாதமும் எங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட சுவையுணர்வை உருவாக்கிக்கொள்ள உதவின. சம்பாதித்து மிச்சப்படுத்தி புத்தகம் வாங்குகிற வாய்ப்பு உருவானபோது, இந்தச் சுவையுணர்வின் அடிப்படையில் புத்தகங்களை வாங்கிப் படிப்பதை பழக்கமாக வைத்துக்கொண்டோம்.

தீராநதி: எழுதத் தொடங்கியதும் அப்போதுதானா?

பாவண்ணன்: ஆமாம். வாசிப்பின் தொடர்ச்சியாக ஒரு கட்டத்தில் நான் மரபுக்கவிதைகளை எழுதத் தொடங்கினேன். பெரிய பெரிய கனவுகளால் என் மனம் அப்போது நிறைந்திருந்தது. நண்பர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். ஆனால் வெகுவிரைவிலேயே மரபுக்கவிதையின் திசையிலிருந்து புதுக்கவிதையின் திசைக்கு வந்துவிட்டேன். அந்த ஏமாற்றத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏறத்தாழ முப்பத்தாறு முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று என்னை ஊரில் பார்க்கும்போதுகூட, அந்த அங்கலாய்ப்பை அவர்கள் வெளிப்படுத்திப் பேசும்போது, என் மனம் நெகிழ்ந்துபோகும். புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் நான் வேலை செய்துவந்தபோது, பிரபஞ்சன், அஸ்வகோஷ் என்கிற ராஜேந்திர சோழன் இருவரோடும் உரையாடிய அனுபவத்தை மறக்கமுடியாது. அவர்கள் அப்போதே பேர்வாங்கிய படைப்பாளிகளாக இருந்தார்கள். அவர்கள் கதைகளை நான் விரும்பிப் படித்தேன்.

அக்கட்டத்தில் இளம்பொறியாளர் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பதவிக்கான பயிற்சிக்காக ஐதராபாத் நகரத்துக்குச் செல்லும்படி நேர்ந்தது. இந்தத் திடீர்மாற்றம் என்னை மிகவும் பாதித்தது. எங்கள் அப்பா உடல்நிலை குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குடும்பப் பொறுப்புகளை என் அம்மா தன்னந்தனியாக ஏற்றுச் சமாளித்து வந்தார். அம்மாவின் சகிப்புத்தன்மையும் வற்றாத அன்பும்தான் நாங்கள் வளரத் துணையாக இருந்தன. தம்பிகள், தங்கைகள் எல்லோரும் அப்போது சிறுவர்கள். நான்தான் மூத்த பிள்ளை. குடும்பத்துக்கு ஆதரவாகவும் துணையாகவும் இருக்கவேண்டிய ஒரு தருணத்தில், எங்கேயோ தொலைவான இடத்தில் இப்படித் தனியாக வாழும்படி நேர்ந்துவிட்டதே என்று மனக்குமுறலாக இருந்தது. குற்ற உணர்ச்சியால் மனம் சோர்ந்துவிடாமல் இருப்பதற்காக, மனத்துக்கு ஓய்வே இல்லாமல் எழுதிக்கொண்டே இருப்பதை ஒரு வழியாக வைத்துக்கொண்டேன். என்னை நானே மீட்டெடுத்துக்கொள்ள அது ஒரு சிறந்த வழியாக இருந்தது. அப்போதுதான் சிறுகதை என் ஊடகமானது.

தீராநதி: அது எந்த ஆண்டு?

பாவண்ணன்: 1981-82 கட்டம்என் வேலைக்கான நேர்காணல் அனுபவத்தையொட்டி ஒரு சிறுகதையை முதலில் எழுதினேன். பெங்களூரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘படிகள்’ என்னும் இதழுக்கு அதை அனுப்பிவைத்தேன். ’படிகள்’ படைப்பிலக்கியத்துக்கான இதழல்ல, படைப்பிலக்கியம் சார்ந்த விவாதங்களுக்காகவும் சமூக விவாதங்களுக்காகவும் நடைபெற்ற இதழ். அதெல்லாம் அப்போது தெரியவில்லை. ஒரு வேகத்தில் அனுப்பிவைத்துவிட்டேன். கதை வரவில்லை. ஆனால் படிகள் சார்பாக தமிழவன் ஒரு அஞ்சலட்டை எழுதியிருந்தார். அது எனக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. ஓர் எழுத்தாளரிடமிருந்து நான் பெற்ற முதல் கடிதம் அது. அந்த வாரத்திலேயே வேறொரு சிறுகதை எழுதி ‘தீபம்’ இதழுக்கு அனுப்பிவைத்தேன். அது அடுத்த மாதத்திலேயே வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ‘கணையாழி’, ‘தாமரை’, ‘மனஓசை’ இதழ்களுக்கும் கதைகளை அனுப்பி வைத்தேன். அசோகமித்திரன் என் கதையைப் பாராட்டி அஞ்சலட்டை எழுதியிருந்தார். தி.ஜானகிராமன் மறைவையொட்டி அப்போது ஒரு குறுநாவல் திட்டமொன்றை கணையாழி அறிவித்திருந்தது. அப்போட்டியில் என் குறுநாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆறுமுறையோ, ஏழுமுறையோ தொடர்ச்சியாக என் படைப்புகள் தேர்வாகின. மூத்த வரிசை எழுத்தாளர்களும் நண்பர்களும் என்னை நம்பிக்கைக்குரிய இளம்படைப்பாளியாக அடையாளப்படுத்தினார்கள். கணையாழியில் வெளிவந்த ’முள்’ என்னும் சிறுகதை அந்த ஆண்டின் இலக்கியச்சிந்தனையின் விருதுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுத்தவர் மூத்த எழுத்தாளர் ஆ.மாதவன். அந்த விழா மேடையில்தான் அவரை முதன்முதலாகப் பார்த்தேன். எழுத வந்த தொடக்கத்திலேயே எனக்கென ஒரு இலக்கிய முகம் உருவாக இந்தத் தேர்வு துணையாக இருந்தது.

தீராநதி: உங்கள் முதல் தொகுப்பு எப்போது வெளிவந்தது?

பாவண்ணன்: 1987 ஆம் ஆண்டு. ’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்னும் முதல் சிறுகதைத்தொகுப்பு, ’வாழ்க்கை: ஒரு விசாரணை’ என்னும் முதல் நாவல் இரண்டுமே அந்த ஆண்டில்தான் வெளிவந்தன. முதல் தொகுப்பு என்பதால் மூத்த படைப்பாளி ஒருவருடைய முன்னுரையோடு சேர்ந்துவந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. தயக்கத்தோடுதான் பிரபஞ்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டு என் கோரிக்கையை முன்வைத்தேன். அப்போது அவர் குமுதம் குடியிருப்பில் இருந்தார். எழுதுவதாகச் சொன்னதோடு, கையெழுத்துப் பிரதிகளோடு உடனே கிளம்பி வரச்சொன்னார். நான் அப்போது திருப்பதியில் வேலை செய்துவந்தேன். சென்னைக்கு வருவது எளிதாக இருந்தது. அவருடைய வீட்டிலேயே இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். இரவு நெடுநேரம் விழித்திருந்து கதைகளைப் படித்துவிட்டு, முன்னுரையை எழுதிக் கொடுத்தார். அந்த அன்பையும் நெருக்கத்தையும் என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. எழுத்தாளர் சங்கரநாராயணன் முயற்சியால் நாவலுக்கு வல்லிக்கண்ணன் அவர்களின் முன்னுரை கிடைத்தது. நூல்கள் வெளிவந்து சிறிது காலத்துக்குப் பிறகு, சிறுகதைத் தொகுப்பைப்பற்றி கணையாழி இதழில் ஒரு சிறிய குறிப்பை அசோகமித்திரனும் நாவலைப்பற்றிய ஒரு மதிப்புரையை காலச்சுவடு முதல் இதழில் அச்சுதன் அடுக்காவும் எழுதியிருந்தார்கள். தொகுதியைப்பற்றி படைப்பாளிகள் எண்ணங்களை அறிவதற்காக பலருக்கும் அனுப்பிவைத்திருந்தேன். நூல் கிடைத்த விவரத்தோடு சிலர் நிறுத்திக்கொண்டார்கள். சிலர் மட்டுமே தொகுதியைப் படித்துவிட்டு உடனே பதில் எழுதியிருந்தார்கள். நான் மிகவும் மதிக்கிற வண்ணதாசனிடமிருந்தும் பூமணியிடமிருந்தும் வந்த மடல்களை என்னால் மறக்கவே முடியாது. தொடர்ந்து வந்த ஒரு மாதத்தில் வேர்கள் என்னும் அமைப்பின் சார்பாக சென்னையில் நடைபெற்ற இலக்கியக் கூட்டமொன்றில் பூமணி என்னைப் பேசுவதற்கு அழைத்திருந்தார். என் முதல் இலக்கிய மேடை. அன்றுதான் பல எழுத்தாளர்களை நேரிடையாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. கோவை.ஞானியின் நட்பு அந்தக் கூட்டத்தில்தான் எனக்குக் கிடைத்தது. நிறையும் குறையுமாக, என் கதைகளைப்பற்றி உள்ளார்ந்த அன்போடு அவர் பகிர்ந்துகொண்டார். என்னை நான் பரிசீலனை செய்துகொள்ள இவையனைத்தும் உதவின.

தீராநதி: கோவை. ஞானிதானே உங்கள் சிதறல்கள் நாவலுக்கு முன்னுரை எழுதியிருந்தார்?

பாவண்ணன்: ஆமாம். தொழிலாளர் உலகத்தைப் பற்றிய ஒரு நாவல் அது. போராட்டத்தில் தோல்வியடைந்து, வாழ்வைத் தொலைத்துவிட்டு, நெருக்கடிகளால் சிதறிப்போன தொழிலாளர்கள் அவலத்தை அடையாளப்படுத்தி செய்யப்பட்ட முயற்சி அது. அதற்கு முன்னுரை எழுத அவரே பொருத்தமானவர் என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. கடிதம் எழுதிக் கேட்டதுமே ஒப்புக்கொண்டார். குறுகிய இடைவெளியில் எழுதி அனுப்பவும் செய்தார்.

தீராநதி: அந்த நாவல் எனக்கும் பிடித்திருந்தது. அந்த நூலுக்கு உங்கள் படத்தையெல்லாம் போட்டு கட்டம் கட்டி சுபமங்களா இதழில் நல்லதொரு மதிப்புரைகூட வந்திருந்தது. ரவீந்திரதாஸ் எழுதியிருந்தார். சிதறல்கள் நாவலைத் தொடர்ந்து வந்த நாவல் பாய்மரக்கப்பல் அல்லவா?

பாவண்ணன்: ஆமாம்.

தீராநதி: படித்திருக்கிறேன். மூன்று தலைமுறை நாவல். பிரெஞ்சு ஆட்சியின் பின்னணியில் ஒரு தலைமுறை, தியாகத்தை ஒரு பண்பாகக் கொண்ட காங்கிரஸ் எழுச்சியின் பின்னணியில் ஒரு தலைமுறை, அரசியலை ஒரு மூலதனமாகப் பார்க்கிற இன்னொரு தலைமுறை என கச்சிதமான வடிவத்துக்குள் அந்தக் கதை மிகச்சிறப்பாகவே வந்திருந்தது. அது எந்த ஆண்டில் வெளிவந்தது?

பாவண்ணன்: 1995.

தீராநதி: அதற்குப் பிறகு நீங்கள் எந்த நாவல் முயற்சியையும் மேற்கொள்ளவில்லையே? அதற்குப் பிறகல்லவா தமிழில் நாவல்களின் பொற்காலம் தொடங்குகிறது? உங்கள் பங்களிப்பு இருந்திருக்கவேண்டிய ஒரு கட்டத்தில் நீங்கள் ஒதுங்கிவிட்டீர்களே. அது ஏன்?

பாவண்ணன்: அது எனக்கும் ஒரு வேதனையான விஷயம்தான். புதிய நாவல் முயற்சியில் இறங்கவில்லை என்று சொல்லமுடியாது. ஆர்வத்தின் காரணமாக ஒரு பெரிய களத்தை அமைத்து எழுதத் தொடங்கினேன். கர்நாடகத்தில் குடியேறிய தமிழர்களின் வாழ்க்கைப் பின்னணியில் என் நாவலை அமைத்திருந்தேன். ஏறத்தாழ ஐந்நூறு பக்கங்கள் எழுதிய பிறகு, ஏதோ ஒரு காரணத்தால் அதை நிறுத்தினேன். என் வாழ்வில் மிகப்பெரிய துரதிருஷ்டமான தருணம் அது. அந்தக் கதையை அதற்கப்புறம் தொடங்கவே முடியாமல் போனது. ஏதேதோ சின்னச்சின்ன முயற்சிகளில் எல்லாம் ஈடுபடுகிறேன். அதையெல்லாம் செய்து முடிக்கிறேன். ஆனால் நடுவில் நிறுத்தியதை மட்டும் மறுபடியும் தொடர முடியாமல் போய்விட்டது. சரி, போனது போகட்டும், இன்னொன்றைப் புதிதாகத் தொடங்கலாம் என்றால் அதற்கும் மனம் இடம் தரவில்லை. குழப்பத்துக்கும் தடுமாற்றத்துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறேன்.

தீராநதி: கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள். பெரிய இடைவெளி அல்லவா? ஒருவேளை, இந்த நாவலை நிறைவு செய்யமுடியாத வேகமும் தவிப்பும்தான், உங்களை மொழிபெயர்ப்புத்துறை நோக்கியும் கட்டுரைகளை நோக்கியும் செலுத்தியிருக்கக்கூடுமோ?.

பாவண்ணன்: இருக்கலாம். சரியாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. 

தீராநதி: உங்கள் படைப்புகளைப்பற்றித் தெரிந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கை சார்ந்த பின்னணியைப் பற்றித் தெரியாது. உங்கள் ஆளுமையைப் பற்றிய முழுச்சித்திரத்தை அறிந்துகொள்ள அந்தத் தகவல்கள் நிச்சயமாக உதவும். உங்கள் ஊர் வளவனூர் என்று குறிப்பிட்டீர்கள். அது எங்கே இருக்கிறது, எப்படி இருக்கும், அது உங்களுக்குத் தந்த உத்வேகம் என்ன, உங்கள் பெற்றோர், குடும்பம், நண்பர்கள், கனவுகள் பற்றிச் சொல்லுங்கள்.

பாவண்ணன்: விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில் உள்ள கிராமம் எங்கள் வளவனூர். பழைய நிலஅமைப்பில் அது தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தது, இப்போதைய அமைப்பில் அது விழுப்புரம் மாவட்டத்துக்குள் வருகிறது. அந்த ஊரில் நான் 1958 ஆம் ஆண்டில் பிறந்தேன். என் அம்மா பெயர் சகுந்தலா. அப்பா பெயர் பலராமன். தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய அப்பா காலத்தில் மாடு, கன்று, தோட்டம், வயல் என்று எல்லாம் இருந்திருக்கிறது. ஆனால் ஏதோ பங்காளித் தகராறில் எல்லாம் அழிந்துபோய்விட்டன. கோயில் நிலத்தில் கூரைவீடு கட்டிக்கொண்டு வாழும்படி நேர்ந்துவிட்டது. அது அவருடைய நெஞ்சில் அழுத்தமான வடுவாகப் பதிந்துவிட்டது. ஒரு விவசாயியாக மறுபடியும் வாழத் தொடங்கவேண்டும் என்று கனவுகளோடு இருந்தார். கொஞ்சம்கொஞ்சமாகப் பணம்சேர்த்து ஏரிக்கரைப்பாசனத்தில் கால்காணி நிலம் வாங்கினார். ஆனால் இரண்டுமூன்று ஆண்டுகள் கூட அதில் விவசாயம் செய்யமுடியவில்லை. அவருக்கான மருத்துவம், குடும்பச்செலவுகள், கடன்கள் எல்லாவற்றையும் சமாளிக்க விற்றுவிடவேண்டியதாக இருந்தது. குடும்பத்தில் நான் மூத்த பிள்ளை. எனக்கு இரண்டு சகோதரிகள். இரண்டு தம்பிகள். வறுமை ஒரு கரிய நிழலாக எங்கள் குடும்பத்தின்மீது படிந்திருந்தது. ஆனால் அதன் வலியை நாங்கள் உணராதபடி அம்மா எங்களை அன்போடும் ஆதரவோடும் பார்த்துக்கொண்டார். கடைத்தெருவில்தான் அப்பா கடை வைத்திருந்தார். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நான்தான் கடைக்குச் சென்று வீட்டுச் செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு, அப்படியே அரிசி, பருப்பு, காய்கறி எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு திரும்புவேன். வருமானம் இருக்கும் சமயங்களில் அப்பா பணம் தருவார். இல்லாத சமயங்களில் ஒன்றும் செய்ய முடியாது. அன்று கேழ்வரகுமாவையும் முருங்கைக்கீரையும் பிசைந்து எல்லாருக்கும் அடை செய்து கொடுப்பார் அம்மா. சுடச்சுட நாங்கள் அதை வாங்கி, மண்ணெண்ணெய் விளக்கில் சுற்றி உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவோம். எங்களுக்குக் கதை சொல்லி தூங்கவைத்துவிட்டு, அப்பா வரும்வரை காத்திருப்பார் அம்மா. வறுமையின் துன்பத்தைத் தன் அன்பாலும் சகிப்புத்தன்மையாலும் வென்று குடும்பம் நொடிந்துபோகாமல் காப்பாற்றியது அம்மாதான். எப்படியாவது நான் படித்துப் பட்டம் வாங்கவேண்டும் என்பது அவருடைய கனவு. அப்போதுதான் நல்ல வேலையைப் பெறமுடியும், குடும்பத்தைத் தாங்கமுடியும் என்பது அவர் நம்பிக்கை. ஆனால் அப்பா தன் இயலாமையின் காரணமாக, பள்ளிப்படிப்போடு நிறுத்திவிடலாமா என்று பல முறை சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய வற்புறுத்தல் அதிகமானது. தற்செயலாக ஒரு கோயில் திருவிழாவுக்கு புதுச்சேரியிலிருந்து எங்கள் மாமா ஊருக்கு வந்திருந்தார். தங்கிப் படிப்பதற்கு அவரிடம் பேசி அனுமதி பெற்றார் அம்மா. புதுச்சேரியில் உள்ள தாகூர் கல்லூரியில் கடைசிநாளன்று சென்று விண்ணப்பம் வாங்கி முழுமை செய்து கொடுத்தேன். கணிதப்பிரிவில் எனக்கு இடம் கிடைத்தது. அம்மாவிடம் நகைகள் என்று சொல்லும்படியாக அப்போது ஒரு ஜோடி கம்மல், மூக்குத்தி, ஒரு வங்கி மோதிரம் மட்டுமே இருந்தன. அவை அனைத்தையும் விற்றதில் நானூற்றிசொச்சம் ரூபாய் கிடைத்தது. நானூறு ரூபாயை அம்மா என்னிடம் கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பிவைத்தார். கல்லூரிக் கட்டணத்துக்கு முந்றூற்றுத் தொண்ணூறு ரூபாயும் என் செலவுக்குப் பத்து ரூபாயும் வைத்துக்கொள்ளச் சொன்னார். வளவனூரைவிட்டுப் பிரிந்த பிறகுதான் அதை நான் எந்த அளவுக்கு நேசித்தேன் என்பதை உணர்ந்தேன். என் கனவுமுழுக்க என் ஊரின் சித்திரங்களாலேயே நிறைந்திருந்தன. அக்கம்பக்கம் எந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு அழகான ஏரி ஒன்று எங்கள் ஊரில் உண்டு. பக்கத்திலிருந்த எல்லாப் பாளையங்களுக்கும் பாசனத்துக்கு ஏரித்தண்ணீர் மதகுகள் வழியாகப் போகும். உயர்ந்த கரைகள். கரைநெடுகப் புளிய மரங்கள், ஆலமரங்கள், பனைமரங்கள், வேப்ப மரங்கள் என வரிசைவரிசையாக நிழல் தந்தபடி இருக்கும். எல்லா நேரங்களிலும் சிலுசிலுவென்று காற்றடித்தபடி இருக்கும். அந்த நிழலில் நானும் என் நண்பனும் பேசிக்கொண்டே நடப்போம். கல்கியின் நாவல்களில் திளைத்திருக்கும்போது, அந்த ஏரி எங்கள் கண்களுக்கு தளும்பும் காவேரியாகத் தெரியும். வந்தியத்தேவனாக எங்களை நினைத்துக்கொள்வோம். ருஷ்ய நாவல்களில் மிதந்திருக்கும்போது, அதே ஏரி பனிபடர்ந்த மிசிசிபி நதியாக மாறிவிடும். எங்கள் கற்பனைக்கு அளவே இருந்ததில்லை. ஏரிக்கரையை ஒட்டி ரயில்வே நிலையமும் தோப்பும் இருந்தன. படிப்பதற்கு அங்கேதான் செல்வோம். பெரிய புத்தகங்கள் என்றால் ஒரு புத்தகம், பக்கங்கள் குறைந்த புத்தகங்கள் என்றால் இரண்டு புத்தகங்கள் என ஒரே மூச்சில் உட்கார்ந்த வேகத்தில் படித்து முடிப்போம். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை, அந்த அமைதியான சூழலில் பேசிப்பேசித்தான் வளர்த்துக்கொண்டோம்.

தீராநதி: உங்கள் நண்பரும் உங்களோடு சேர்ந்து படித்தாரா?

பாவண்ணன்: இல்லை. அவன் வீடும் நெருக்கடிகளில் தத்தளித்தபடிதான் இருந்தது. அவனால் புகுமுக வகுப்பைத் தொடர்ந்து படிக்கமுடியவில்லை. ஆனால் புதுச்சேரியிலிருந்து விடுப்பில் ஊருக்கு வரும்போதெல்லாம் நாங்கள் சேர்ந்தே இருந்தோம்.

தீராநதி: படித்துமுடித்ததும் உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டதா?

பாவண்ணன்: இல்லை. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஊரில்தான் இருந்தேன். வேலையின்மையை ஒட்டி என் அப்பா பொறுமை இழந்துகொண்டிருந்தார். என் அம்மாவுக்கோ மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலைமை. பெரும்பாலான நேரங்களை நான் நூலகத்திலும் ஏரிக்கரையிலும் கழித்தேன். படிப்பதைத் தவிர வேறெதிலும் மனம் செல்லவில்லை. அப்போதுதான் இந்தியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டேன். அதற்காக நடந்த தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதல் மாணவனாகத் தேறினேன். பழனியைத் தவிர, எனக்கு மோகன் என்றொரு நண்பனும் உண்டு. தொலைபேசித் துறையில் தொலைபேசி இயக்குநராக அவன் வேலை செய்துவந்தான். அவனுடைய அண்ணன் அந்த சமயத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்று மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். அது எங்களுக்கு மிகவும் உத்வேகத்தைக் கொடுத்தது. அதன் விவரங்களைக் கேட்டறிந்து நானும் அவனும் திட்டமிட்டு அந்தத் தேர்வுக்குத் தயார் செய்யத் தொடங்கினோம். விருப்பப்பாடங்களாக இந்திய வரலாற்றையும் சமூகவியலையும் தேர்ந்தெடுத்தேன். இலக்கிய நூல்களை வாசிப்பதோடு, இது தொடர்பான நூல்களையும் வாசித்தேன். இந்த வாசிப்பின் தொடர்ச்சியாய்த்தான் விவேகானந்தர் நூல்கள்மீதும் காந்தியத்தின்மீதும் ஈர்ப்பு பிறந்தது. படிப்பதும் விவாதிப்பதுமாகவே நாட்கள் கடந்தன. அப்போது அஞ்சல் நிலையத்தில் எழுத்தராக எனக்கு வேலை கிடைத்தது. எங்கள் குடும்பம் ஓரளவு நிம்மதியான வாழ்வை நடத்த அந்த வேலை உதவியது. பகலில் வேலை, இரவில் வரலாற்றையும் இலக்கியத்தையும் படிப்பது எனத் திட்டமிட்டுப் படித்தேன். என்னால் அஞ்சலக வேலையில் நீடிக்கமுடியவில்லை. ஓராண்டுக்குப் பிறகு விலகிவிட்டேன். என் அம்மாவுக்கு அதில் வருத்தமிருந்தது. ஆனால், அதிகக் காத்திருப்புக்கு இடமில்லாதவகையில் உடனேயே, தொலைபேசித்துறையில் தொலைபேசி இயக்குநராக வேலை கிடைத்தது. இரவில் வேலை, பகலில் படிப்பு என மாற்றியமைத்துக்கொண்டேன். நானும் மோகனும் சென்னை வந்து ஐ.ஏ.எஸ்.க்கான முதனிலைத் தேர்வை எழுதிவிட்டுத் திரும்பினோம். தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கை இருந்தது. அடுத்த கட்டத் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினோம். இடையில் எங்கள் துறையிலேயே இளம்பொறியாளர் பணிக்காக கர்நாடக மாநிலத்துக்கு விண்ணப்பித்தேன். அந்த வேலை கிடைத்து, அதன் பயிற்சிக்காக நான் ஐதராபாத்துக்குச் சென்ற தருணத்தில் முதனிலைத் தேர்வில் நாங்கள் வென்ற செய்தி கிடைத்தது. என் பயிற்சியில் ஏகப்பட்ட புதுப்பாடங்கள். எல்லாம் பொறியியல் துறை சார்ந்தவை. எனக்குப் புதியவை. அவற்றை நான் ஆழ்ந்து பயில வேண்டியிருந்தது. அதனால் ஐ.ஏ.எஸ். தொடர்பான அடுத்த கட்டத் தேர்வை நான் கைவிட வேண்டியிருந்தது.

தீராநதி: உங்கள் நண்பர் எழுதினாரா?

பாவண்ணன்: எழுதினான். ஆனால் தேர்வடையவில்லை. பயிற்சி வகுப்புகளில் இணைந்து படிக்கிற அளவுக்கெல்லாம் அப்போது யாருடைய வீட்டிலும் வசதியில்லை. அது ஒரு முக்கியமான காரணம். ஆனால் வரலாற்றை முன்வைத்து, இந்தச் சமுதாய அமைப்பைப் புரிந்துகொள்ள எங்கள் வாசிப்பு பெருந்துணையாக இருந்தது.

தீராநதி: உங்கள் திருமணம்?

பாவண்ணன்: பயிற்சியைத் தொடர்ந்து பெல்லாரி மாவட்டத்தில் ஹோஸ்பெட் என்னும் இடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். எஸ்.டி.டி. வசதிக்காக பெருநகரங்களிடையே கேபிள் இணைப்பை வழங்கும் வேலைப்பிரிவில் இருந்தேன். ஆற்றங்கரையோரமாகவும் தோப்பின் ஓரமாகவும் கூடாரங்களில் தங்கி வேலை பார்த்தேன். என் திருமணம் 1984 ஆம் ஆண்டில் நடந்தது. என் மாமாவின் மகளையே மணந்துகொண்டேன். பெயர் அமுதா. என் மனத்துக்கு இசைவானவர். என்னையும் என் கனவுகளையும் நன்றாகப் புரிந்துகொண்டவர். என் இலக்கியவாழ்வில் அவருடைய பங்களிப்பு மகத்தானது. குடும்பக்கடமைகள் அனைத்தையும் அவரே பொறுப்பெடுத்து நடத்தி, இலக்கியம்சார்ந்து இயங்குவதற்குத் தேவையான தனிமையை அன்போடு உருவாக்கித் தருவதால்தான் என்னால் தொடர்ந்து இயங்கமுடிகிறது. எங்கள் மகன் பெயர் அம்ரிதா மயன் கார்க்கி. கணிப்பொறித்துறையில் சமீபத்தில்தான் பொறியியல் பட்டம் பெற்றுள்ளான். 

தீராநதி: தினமணி நாளிதழில் நீங்கள் எழுதிய நடுப்பக்கக் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. படைப்பிலக்கியத்தில் இயங்கியபடியே, வாழ்வியல் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியிருக்கிறீர்கள்? அவை குறித்த தங்களுடைய அனுபவங்களைச் சொல்லுங்கள்.

பாவண்ணன்: வாழ்வின் இயல்பு சார்ந்து நமக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு. சமுதாயத்தின் சமனிலையைப் பற்றிய எதிர்பார்ப்பும் உண்டு. ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு, சமுதாயத்தின் சமனிலை குலைந்துபோகும்போது தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒன்று சொல்கிறேன். பொதுவாழ்க்கை என்பது என்ன? பொதுமக்களின் முன்னேற்றத்துக்காகவும் வாழ்க்கைத்தரத்தின் உயர்வுக்காகவும் தனிப்பட்ட ஒரு மனிதர் தன் வாழ்வின் நலத்தைப் பெரிதாக எண்ணாமல் உழைப்பதுதான் பொதுவாழ்க்கை. தன் சொந்த வாழ்க்கையைத் துறந்து, பொதுமக்களை நோக்கி வந்ததால்தான் அந்தப் பெயர் அதற்கு வந்தது. காந்தி அப்படி வாழ்ந்தவர். அவர் தலைமுறையைச் சேர்ந்த பலரும் கட்சி வேறுபாடின்றி அப்படி வாழ்ந்தவர்கள்தான். திரிபுரா மாநிலத்துக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்துவிட்டு, தேர்தலில் தோல்வியுற்றதும் இரண்டு ஜோடி வேட்டி சட்டைகளைக் கொண்ட பெட்டியோடு கட்சி அலுவலகத்துக்கு வந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. கால் நூற்றாண்டு முன்புவரைக்கும்கூட இப்படிப்பட்ட மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள். தன்னலமின்மையும் தியாகமும்தான் பொதுவாழ்வின் அடிப்படைகள். ஆனால் இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது? அப்பட்டமான தன்னலம் எல்லோருடைய நெஞ்சிலும் அடைந்துகிடக்கிறது. சிறுகச்சிறுக அது மதிப்பீடுகளின்மீதுள்ள நம்பிக்கையைக் குலைக்கிறது. தனிமனித வாழ்வின் போக்கைத் திசைதிருப்புகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது வருத்தமும் சீற்றமும் பொங்கிவருகிறது. தற்செயலாக, நண்பர் ராஜமார்த்தாண்டன் அவர்களைச் சந்திப்பதற்காக தினமணி அலுவலகத்துக்குச் சென்றிருந்தபோது, அப்போது ஆசிரியராக இருந்த திரு.சம்பந்தம் அவர்களையும் பார்த்து உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த உரையாடலின் விளைவாகத்தான் அக்கட்டுரைகளை எழுதும்படி நேர்ந்தது. ஒருவகையில் ஆற்றாமையின் பதிவுகள் அவை. 

தீராநதி: இணைய இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் ஏராளமான புத்தக அறிமுகக்கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். புதிய படைப்பாளிகள் முதல் அழுத்தமாகத் தடம் பதித்த படைப்பாளிகள்வரை எழுதியுள்ள முக்கிய நூல்கள் அனைத்தையும்பற்றி அக்கறையோடு பதிவு செய்திருக்கிறீர்கள். எந்த அடிப்படையில் அந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

பாவண்ணன்: நல்ல புத்தகங்களைப்பற்றிய அறிமுகம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பைத் தவிர வேறெந்த எண்ணமும் இல்லை. வாரபலன் என்கிற தலைப்பில் மலையாளத்தின் எழுத்தாளர் ஒருவர் தொடர்ச்சியாக, புதுபுதுப் புத்தகங்கள்பற்றி தன் மரணம் வரைக்கும் எழுதிவந்தார். அந்த வழியில் பல துறைகள் சார்ந்து, தமிழில் வெளிவரும் முக்கியமான புத்தகங்களைப்பற்றி ஒவ்வொரு வாரமும் எழுத வேண்டும் என்றொரு ஆசை எழுந்தது. “இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டீர்களா?’’ என்று தலைப்பிட்டு ஒரு தொடரை திண்ணை இணைய இதழில் தொடங்கினேன். புத்தகச்சந்தையிலும் கடைகளிலும் தேடி எனக்காக நான் வாங்கிவந்த புத்தகங்களைப் படித்து, அவற்றில் பகிர்ந்துகொள்ளத்தக்கவை என்று நினைப்பதைப்பற்றி அறிமுகக்கட்டுரைகளை எழுதினேன். அவர்களில் பலரை நான் பார்த்ததே இல்லை. நல்ல புத்தகங்கள் நல்லவிதமாக அறிமுகம் பெறவேண்டும் என்பதைத் தவிர வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி ஒவ்வொரு வாரமும் என்னால்தான் எழுத இயலாமல் போய்விட்டது. முடியும்போதுமட்டுமே எழுதிவருகிறேன். பல்வேறு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்போது சிலவற்றைமட்டுமே செய்யமுடிகிறது. சில வேலைகளைச் செய்யமுடியாமல் போய்விடுகிறது.

தீராநதி: படைப்பு முயற்சிகளில் தொடக்க காலத்தில் நீங்கள் சாதிக்க நினைத்ததென்ன? அவற்றைச் சாதித்துவிட்டோம் என்று தோன்றியதுண்டா?

பாவண்ணன்: ஆதரவில்லாத வாழ்வின் தத்தளிப்புகளை, அதன் வெப்பம் குறையாமல் முன்வைக்கவேண்டும் என்பதுதான் என் தொடக்ககால எண்ணமாக இருந்தது. இன்று அந்த எண்ணத்தோடு முன்னும் பின்னுமாக இன்னும் பல கூறுகள் சேர்ந்துவிட்டன. அதன் திசையில் என்னால் முடிந்த அளவில் முயற்சிகளைச் செய்துவருகிறேன். அவ்வளவுதான். சாதனை என்பதெல்லாம் பெரிய சொல்.

தீராநதி: உங்கள் படைப்புகளில் பிள்ளைப்பருவ வாழ்க்கையைப்பற்றிய நினைவுகள் நேர்த்தியான குறும்படங்களைப்போல மனம்கவரும்படி உள்ளன. சமீபத்தில் வேப்பம்பழங்களைப் பொறுக்கி, அதன் கொட்டைகளை உலரவைத்துப் பணம் சேர்ப்பதைப்பற்றி நீங்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையைப் படித்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. வயது கூடக்கூட பிள்ளைப்பருவ நினைவுகள் மிகவும் துல்லியமாக மனத்தில் மிதந்தலையும் என்பது ஒருவேளை உண்மைதானோ?

பாவண்ணன்: இரண்டு காரணங்களுக்காக ஒவ்வொருவரும் பிள்ளைப்பருவத்தை அசைபோடுகிறோம். ஒன்று, அந்த வயது நினைவுகள் வழங்குகிற மகிழ்ச்சிக்காக. இன்னொன்று, அந்த வயதுக்குரிய மனத்தை அப்படியே தக்கவைத்துக்கொள்ள முடியவில்லையே என்கிற ஏக்கத்துக்காக. உண்மையில் நாம் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் அந்த நினைவுகளை அல்ல, அந்த மனத்தை. களங்கமற்ற அந்த மனத்தை. எப்படி இருந்தோம் அப்போது? வறுமை இருந்தது. அவமானப்பட்டிருக்கிறோம். பலரால் வெளியேற்றப்பட்டிருக்கிறோம். வசைபாடப்பட்டிருக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும் கடந்து நாம் ஆனந்தமாகவும் இருந்தோம் அல்லவா? எப்படி முடிந்தது அது? பிள்ளைமனத்தில் நிரம்பிவழிந்த கள்ளமின்மைதானே அதற்குக் காரணம்? அப்போது இல்லாத எல்லாமே, இன்று நம்மிடையே இருக்கிறது. ஆனால் அந்த ஆனந்தம் மட்டுமில்லை. காரணம், அந்தக் குழந்தைமையைத் தொலைத்துவிட்டோம். கள்ளம் வந்து நுழைந்துவிட்டது. அதை விரட்ட வழி தெரியவில்லை. பிள்ளைப்பருவ நினைவுகளில் தோயும் கணங்களில் எங்கோ ஆழத்தில் புதைந்துவிட்ட அந்தக் களங்கமின்மையின் விரல்நுனியைச் சற்றே தீண்டிவிட்டுத் திரும்பிவிடுகிறோம். எழுதுகிறவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே இது பொது.

தீராநதி: இன்றைக்கு, எழுதப்படுகிற சிறுகதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? யாருடைய படைப்புகளை விரும்பிப் படிப்பீர்கள்?

பாவண்ணன்: எந்த இதழைப் படிக்கத் தொடங்கினாலும் முதலில் அதில் உள்ள சிறுகதைகளைப் படிப்பதுதான் என் வழக்கம். வாழ்வனுபவம் சார்ந்து எழுதப்படுகிற படைப்புகள் உடனடியாக என் மனத்தைத் தொடுகின்றன. சமத்காரத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக மொழியைத் திருகித்திருகி எழுதும் படைப்புகளோடு என்னால் ஒன்ற முடிவதில்லை. உயிர் எழுத்து, காலச்சுவடு, உயிர்மை மூன்றிலும் வரக்கூடிய சிறுகதைகள் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிற்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில், நவீனச் சிறுகதைகளின் பெருந்தொகுப்பை யாராவது தொகுக்க நேர்ந்தால், இவ்விதழ்களில் வெளிவரும் கதைகளே முக்கால் பங்குக்கும் மேல் இடம் பிடித்திருக்கும் என்று தோன்றுவதுண்டு. இந்த மூன்று இதழ்களில் உயிர் எழுத்து, சிறுகதைகளுக்குத் தாராளமாக இடம் தருகிறது. ஒரே இதழில் கிட்டத்தட்ட ஆறேழு கதைகள். ஒரு புதிய எழுத்தாளர், இவ்விதழ்களில் தன் கதை தேர்வாவதை ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம். கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், என்.ஸ்ரீராம், காலபைரவன், எஸ்.செந்தில்குமார். என்.கே.செந்தில், சந்திரா, கவின்மலர், சொ.பிரபாகர், செழியன், புகழ், ஆங்கரை பைரவி என பலருடைய சிறுகதைகளை நான் விரும்பிப் படிக்கிறேன். சட்டென்று நினைவுக்கு வந்த பெயர்களைச் சொல்கிறேன். பெயர் சொல்லாத பலருடைய படைப்புகளும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

தீராநதி: கடந்த பத்தாண்டுகளில் தமிழில் எழுதப்பட்டுள்ள நாவல்களின் வளர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பாவண்ணன்: மிகப்பெரிய வளர்ச்சி என்றே இதை நான் கருதுகிறேன். எந்த சந்தேகத்துக்கும் இதில் இடமில்லை. கடந்த நூற்றாண்டின் ஐம்பதாண்டுகால வளர்ச்சியைவிட இந்தப் பத்தாண்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. மழைக்குக் காத்திருந்த விதைகள் முளைவிட்டதுபோல, ஏராளமான படைப்புகள் இந்தப் பத்தாண்டில் வெளிவந்துவிட்டன. ஜெயமோகனின் காடு, ஏழாம் உலகம், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, யாமம், பெருமாள் முருகனின் மாதொருபாகன், கோபாலகிருஷ்ணனின் மணற்கடிகை, சோ.தருமனின் கூகை, சு.வெங்கடேசனின் காவல்கோட்டம், ஜோடிகுரூஸின் ஆழிசூழ் உலகு, உமாமகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை, கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை, எஸ்.செந்தில்குமாரின் முறிமருந்து, ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் ஆகிய படைப்புகள் உடனடியாக என் நினைவுக்கு வருகின்றன.

தீராநதி: சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் தவிர குழந்தை இலக்கியத்திலும் நீங்கள் ஆர்வத்துடன் செயல்பட்டிருக்கிறீர்கள். உங்கள் பாடல்கள் சிறுவர் மணியில் வெளிவரும்போதெல்லாம் அவற்றை ஆர்வத்துடன் படித்ததுண்டு. அந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

பாவண்ணன்: எங்கள் கிராமத்தில் இயங்கிவந்த இலக்கிய அமைப்பான திருக்குறள் கழகத்தைப்பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சிறுவர்களான நாங்கள் அந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்கச் செல்வோம். திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வழிசெய்து, அவர்கள் எங்களையும் அக்கழகத்தில் ஈடுபடுமாறு வைத்தார்கள். தவறில்லாமல் ஒப்பிக்கிறவர்களுக்கு தமிழ்ச்சிட்டு என்னும் சிறுவர் இதழைப் பரிசாகக் கொடுத்தார்கள். நான் பல இதழ்களைப் பரிசாக வாங்கியிருக்கிறேன். பெருஞ்சித்திரனார் அவர்களால் நடத்தப்பட்டு வந்த இதழ் அது.

துரை. மாணிக்கம் என்கிற பெயரில் அவர் அழகான குழந்தைப் பாடல்களைத் தொடர்ந்து எழுதி வந்தார். அதை நான் ஆர்வத்துடன் படித்தேன். குழந்தை இதழ்களுக்கு, இன்றளவும் அது மிகச்சிறந்த முன்மாதிரியான இதழ். கல்லூரிக்காலத்தில் தங்கப்பா எழுதிய விதவிதமான குழந்தைப்பாடல்கள் என்னைக் கவர்ந்தன. குழந்தைக்கு அறிவுரை சொல்வதல்ல, குழந்தை மனநிலையிலிருந்து, குழந்தைக்குப் பழகிய சொற்களஞ்சியத்திலிருந்து எடுக்கப்பட்ட குறைந்த அளவிலான சொற்களால் புனையப்படுவதே குழந்தைப்பாடல்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். அப்போது என் கடைசித் தம்பியும் தங்கையும் வயதில் மிகச்சிறியவர்கள். அவர்களோடு விளையாடுவதற்காக, அவர்கள் மொழியில் பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். என் நண்பன் மோகனைப்பற்றிச் சொன்னேன் அல்லவா? அவர்கள் வீட்டிலும் நிறைய குழந்தைகள். அவர்களுக்காகவும் சிலவற்றை எழுதினேன். இப்படி விளையாட்டாக எழுத ஆரம்பித்த பாடல்களைத்தான் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து தொகுப்பாகக் கொண்டுவந்தேன். இப்போதும் தம்பி, தங்கையின் குழந்தைகளுக்காகவும் நண்பர்களின் குழந்தைகளுக்காகவும் எழுதிக்கொண்டிருக்கிறேன். நம்மை மறந்து சிறிது நேரம் குழந்தைகள் உலகத்தில் பங்கெடுத்துவிட்டுத் திரும்புவது மனபாரத்தையெல்லாம் கரைத்து லேசாக்கிவிடுகிறது.

தீராநதி: படைப்பிலக்கியத்தைத்தாண்டி, கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதிலும் உங்கள் முயற்சி குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. சாகித்திய அகாதெமி விருதையும் இந்த மொழிபெயர்ப்பு தேடித் தந்திருக்கிறது. மொழிபெயர்ப்பதில் எப்படி ஆர்வம் பிறந்தது?

பாவண்ணன்: தொடக்கத்தில் அப்படி ஓர் எண்ணமே இல்லை. என் வாழிடம் கர்நாடகம்தான் என்பதை என் மனம் தீர்மானமாக உணர்ந்த கணத்தில் கன்னட மொழியை ஆர்வமாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். பள்ளிப்படிப்பு போலவே ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என அடுத்தடுத்த வகுப்பு நூல்களை வாங்கி நண்பர்கள் உதவியோடு படித்துத் தேர்ச்சியடைந்தேன். வாசிப்பு பழகியபிறகு நாளிதழ்கள், வார இதழ்கள் எனத் தொடங்கி, இலக்கியப்புத்தகங்களைப் படிப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டேன். கன்னடத்திலேயே நான் படித்த முதல் கன்னட நாவல் சோமனதுடி. என் மனத்தைக் கொள்ளைகொண்ட நாவல் அது. ஏறத்தாழ பத்தாண்டுகாலம் இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்பதிலேயே கழித்தேன். பெங்களூருக்கு இடமாற்றம் பெற்று வந்த பிறகு, அங்கே வசித்துவந்த மூத்த மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களோடு பழக்கம் ஏற்பட்டது. இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாடகங்களை, மொழிக்கு ஒன்று வீதமாக தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துத் தொகுப்பது என்பது அவருடைய கனவாக இருந்தது. வடநாட்டு மொழிகளில் எழுதப்பட்ட நாடகங்களை இந்தி வழியாக மொழிபெயர்த்து அவர் தொகுத்துவிட்டார். தென்னிந்திய மொழிகளில் உள்ள நாடகங்களை நேரடி மொழிபெயர்ப்பில் தொகுக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். கன்னட மொழியில் எழுதப்பட்ட ஓரங்க நாடகமொன்றை மொழிபெயர்க்கவேண்டும் என்று அவர்தான் தூண்டினார். அவருடைய அன்புக்கு நான் கட்டுப்படவேண்டியதாக இருந்தது. நான் இயங்கும் களமாக அதுவும் ஒன்றாக இருக்கப்போகிறது என்பது அப்போது தெரியவே இல்லை. சந்திரசேகர் பாடீல் என்பவர் எழுதிய ஓர் ஓரங்க நாடகம் ஒன்றை அத்தொகுப்புக்காக மொழிபெயர்த்துக் கொடுத்தேன். சில வாரங்களின் இடைவெளியில் கிரீஷ் கார்னாடின் புதிய கன்னட நாடகமொன்று மேடையில் அரங்கேறியது. ஏற்கெனவே அவருடைய நாடகங்களை நான் பார்த்திருந்ததால் அவருடைய ஆக்கங்களின்மீது எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கச் சென்றேன். ‘தலெதண்ட’ என்னும் நாடகம். என் சிந்தனையைக் கவர்ந்த நாடகம் அது. அன்று நான் அடைந்த மனக்கிளர்ச்சிக்கு அளவே இல்லை. நமக்குத் தேவையான ஒன்று, தேவையான காலகட்டத்தில் வெளிவந்திருக்கிறது என்கிற எண்ணமே முதலில் எனக்கெழுந்தது. சீர்திருத்தச் சிந்தனைகளைக்கொண்ட ஒரு சமூக அறிஞனுக்கும் சமூகத்துக்கும் இடையிலமைந்த உறவின் மேடுபள்ளங்களை, காட்சிகளாக முன்வைத்து அந்தப் படைப்பு அலசியது. நம் தமிழ் வாசகர்கள் இதை உடனே அறியவேண்டும் என்று விரும்பினேன். கிரீஷ் கார்னாடைச் சந்தித்து மொழிபெயர்க்க அனுமதி பெற்றேன். இப்படியாக, பார்க்கிற நாடகங்கள், படிக்கிற புத்தகங்கள் ஆகியவற்றில் முக்கியமானவற்றையும் சந்தித்த மனிதர்களில் முக்கியமானவர்களையும் தமிழுலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தின் தூண்டலால் தவிர்க்கமுடியாமல் மொழிபெயர்ப்பில் நான் இறங்கவேண்டியதானது.

தீராநதி: நாடகங்கள் மட்டுமல்ல, ஊரும் சேரியும், கவர்ன்மெண்ட் பிராமணன் போன்ற தலித் சுயசரிதைகள், பசித்தவர்கள், பருவம், ஓம்நமோ போன்ற நாவல்கள் என உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்த எல்லாமே ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே இருக்கின்றன. அது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. மொழிபெயர்ப்பதற்கான படைப்புகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்துக்கொள்கிறீர்கள்?

பதில்: ஒரு படைப்பின் புதுமையே முதலில் என்னை ஈர்க்கிறது. என் சுவையுணர்வை நம்பியே அவற்றை நான் தேர்ந்தெடுக்கிறேன். மனத்துக்குப் பிடிக்கிற எல்லாவற்றையும் மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொள்வதில்லை. என்னால் ஒதுக்கமுடிகிற நேரத்துக்குள், எதைச் செய்யமுடியுமோ, அதைமட்டுமே எடுத்துக்கொள்கிறேன். சமீபத்தில் அளவில் சிறிய ஒரு நாவலை மொழிபெயர்த்தேன். ராகவேந்திர பாட்டீல் என்னும் எழுத்தாளருடைய தேர் என்னும் நாவல். நல்ல வாசிப்பனுபவம் உள்ள நாவல். கிட்டத்தட்ட கால்பங்கு நாவல், ஒரு கதாகாலட்சேபம் நிகழ்த்தும் முறையில் ஒரு நூற்றாண்டுகால கதையைச் சொல்கிறது. ஒரு ஊர் உருவாகும் விதம், அந்த ஊருக்கு ஒரு கோவில் உருவாகும் விதம், அதன் வழிபாட்டின் ஒரு பகுதியாக தேர் உருவாகும் விதம், தேர் நகராமல் நின்றுபோவதால் எழும் பதற்றம், அதை நகரவைப்பதற்காக தரப்படும் பலி, பலியாகத் தரப்படும் அடித்தட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒரு குழந்தை, அதனால் அக்குடும்பத்துக்குக் கிடைக்கிற கௌரவம் என முன்னும் பின்னுமாக சிக்கல் தன்மையோடு அந்தக் கதை செல்கிறது. தேர் ஒரு கோணத்தில், ஓர் ஊரின் கௌரவத்துக்கான அடையாளம். அடித்தட்டுப் பிரிவினரின் ரத்தக்கறை படிந்த சக்கரங்கள் பூட்டப்பட்டிருப்பதால் இன்னொரு கோணத்தில், அதே தேர் நசுக்குண்ட வரலாற்றின் அடையாளம். ஒரு நாட்டுப்புறக் கதையைப்போல சுவாரஸ்யமாகப் படிக்கத்தக்க நாவல். எதிர்பாராத ஒரு கணத்தில் அது மானுட குலத்தின் மறக்கமுடியாத துயரத்தை முன்வைக்கும் படைப்பாக மாறிவிடுகிறது. சாகித்திய அகாதெமியின் வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளது.

தீராநதி: முக்கியமான உங்கள் சொந்தப் படைப்புகளும் மொழிபெயர்ப்புகளும் பல சமயங்களில் சரியான முறையில் கவனம் பெறாமலேயே போய்விட்டதை என்னால் உணர முடிகிறது. உங்களுடைய பல புத்தகங்களுக்கு ஒரு சின்ன மதிப்புரைகூட வந்ததில்லை. ஆனாலும், அதையெல்லாம் என்னமோ தொடர்பே இல்லாத ஒரு விஷயத்தைப்போல நினைத்துக்கொண்டு உங்களால் எப்படி இயங்க முடிகிறது? உங்களுக்கு வருத்தமே ஏற்பட்டதில்லையா?

பாவண்ணன்: வருத்தமெழாமல் இருக்காது. ஆனால் அதற்கு என் நெஞ்சில் தங்கிவிடும் அளவுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டேன். அப்படிப்பட்ட தருணங்களில் எல்லாம் அக்கமகாதேவியின் ஒரு பாடலை நினைத்துக்கொண்டு மனம் தேறிவிடுவேன். தமிழின் ஆண்டாள்போல கன்னடச்சூழலில் தெய்வத்தையே தனக்குரியவனாக எண்ணி வாழ்க்கையை நடத்தியவள் அக்கமகாதேவி. கன்னடத்தில் அவரை அக்கா என்று அன்போடு அழைப்பார்கள். அக்காவின் தெய்வம் சென்னமல்லிகார்ஜுனன். ”கோல் அசைவால் ஆட்டிவைக்கப்படுகிறகுரங்குபோல, கயிற்றின் அசைவால் ஆட்டிவைக்கப்படுகிற பொம்மையைப்போல, சென்னமல்லிகார்ஜுனனைப் பற்றிய நினைவு இயக்கும் விதத்தில் நான் இயங்குகிறேன்’’ என்று தன்னைப்பற்றிச் சொல்லிக்கொள்கிறார் அக்கா. தினமும் நாம் கண்களால் பார்க்கிற ஒரு நடைமுறை உவமையை எவ்வளவு அழகாகக் கையாண்டிருக்கிறார் பாருங்கள். குரங்கின் இயக்கத்துக்கு, சுற்றியிருப்பவர்களின் கைதட்டல்களும் ஆரவாரமும்தான் காரணமாக இருக்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது நம் நம்பிக்கை. அவ்வளவுதான். உண்மையில் அதை இயக்குவது, குரங்காட்டியின் கையில் இருக்கிற கோல். நம்பிக்கைக்கும் எதார்த்தத்துக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி பாருங்கள். அக்காவின் இன்னொரு பாட்டும் மிகமுக்கியமான ஒன்று. இதுவும் சென்னமல்லிகார்ஜுனனைப் பார்த்துப் பாடும் பாட்டு. ”ஐயா, நீ கேட்டால் கேள், கேட்காவிட்டால் விட்டுவிடு, ஆனால் உனக்காகப் பாடுவதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது. ஐயா, என்னை விரும்பினால் விரும்பு, விரும்பாவிட்டால் விட்டுவிடு. ஆனால் உன்மேல் இருக்கிற விருப்பத்தைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது, ஐயா, என்னைப் பார்க்க நினைத்தால் பார், பார்க்க விருப்பமில்லை என்றால் விட்டுவிடு, ஆனால் உன்னைப் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது’’ என்று செல்லும் அந்தப் பாட்டு. மனம் துவளும் ஒருசில தருணங்களில் இப்படி சில பாடல்களைத்தான் நினைத்துக்கொள்வேன். என்னை இயக்கும் சக்தி என் உள்ளார்ந்த விருப்பமே தவிர வேறெதுவும் இல்லை. என் படைப்புகள் உங்களுக்கானவைதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒருபோதும் அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி உங்களை நான் கட்டாயப்படுத்தமாட்டேன்.

தீராநதி: அக்கமகாதேவியின் வசனங்களை நீங்கள் மொழிபெயர்த்திருக்கிறீர்கள் அல்லவா?

பாவண்ணன்: அவருடைய வசனங்களை மட்டுமல்ல, பசவண்ணர், அல்லமப்பிரபு ஆகியோரின் முக்கியமான வசனங்களையும் மொழிபெயர்த்து அவற்றோடு அவர்களைப்பற்றிய குறிப்புகளோடு ”கடவுளும் கவிதையும்’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையையும் எழுதியுள்ளேன். ’சொல்புதிது’ இதழில் அது வெளிவந்தது. கன்னட வசனகாரர்களில் இவர்கள் மூவரும் முக்கியமானவர்கள்.

தீராநதி: தமிழிலக்கியச் சூழலில் எப்போதும் சில பூசல்கள் நிகழ்ந்தபடி இருக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் இலக்கியவாதிகள் பலரோடும் நட்புடன் இருப்பவர் நீங்கள். ஆனால், எந்தப் பூசலிலும் உங்கள் பெயர் அடிபட்டதில்லை, அது எப்படி அமைந்தது?

பாவண்ணன்: மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம்படைப்பாளிகள்வரை பலரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள். கல்லூரிக்காலத்திலேயே எனக்கு அறிமுகமாகி ஓர் முன்னுதாரணப் படைப்பாளியாக இன்றுவரை விளங்குபவர் ம.இலெ.தங்கப்பா. என் பதின்ம வயதில் அவரைப் பார்த்துப் பழகினேன். எவ்வளவு பெரிய ஆளுமை அவர். ‘வாழ்வியலில் நம் கருத்துக்குச் சிறிதும் ஒவ்வாதவர்கள் பலரை நாம் எதிர்கொள்ளக்கூடும். எளிய ஓர் உண்மையைக்கூட இந்த மண்ணில் நிலைநிறுத்த முடியவில்லையே என்கிற ஆதங்கம் எழக்கூடும். சீற்றம்கூட எழலாம். ஆனால் அது ஒருபோதும் நம்மை வெறுப்பின் எல்லைவரை அழைத்துச் செல்லக்கூடாது. மனிதர்கள்மீதுள்ள நேசம் ஒருபோதும் குறையக்கூடாது. அறியாமையால் அவர்கள் செய்யும் பிழையையும் பாவத்தையும் மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்வதற்கு மகாத்மாவாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. எளிய மனிதர்களுக்கும் அது சாத்தியம்.’ அவரோடு பழகியும் அவருடைய நூல்களைப் படித்தும் உணர்ந்த உண்மைகள் நெஞ்சில் சுடர்விட்டபடி இருக்கின்றன. இந்த நிலையில் எனக்கு எவ்விதமான பூசலிலும் ஆர்வமில்லை. தங்கப்பாவைத் தொடர்ந்து முதன்முதலாக நான் பார்த்துப் பழகிய எழுத்தாளர்கள் பிரபஞ்சனும் இராஜேந்திரசோழனும். அன்றும் இன்றும் பெரிய ஆளுமைகள் அவர்கள். ஆனாலும் எல்லோருடைய மனத்திலும் மிக எளிதில் இடம் பிடித்துவிடக்கூடியவர்கள். ஒரு சிறுகதைப்பட்டறையின் வழியாக அசோகமித்திரனோடும் திலீப்குமாரோடும் அறிமுகம் கிடைத்தது. இரவும் பகலுமாக நீண்ட உரையாடல்களில் சிறுகதை நுட்பங்களை அவர்கள் மனமாரப் பகிர்ந்துகொண்டதெல்லாம் நேற்று நடந்ததுபோல உள்ளது. சுந்தர ராமசாமியோடு உரையாடுவது பெரிய அனுபவம். புதிரான விஷயங்களை நோக்கி கேள்விகளை முன்வைத்துவிட்டு உரையாடல்கள்வழியாகவே நம்மை விடையை நோக்கிச் செலுத்தும் கலையில் அவருக்கு ஈடுஇணையே கிடையாது. வண்ணதாசன், கலாப்ரியா, நாஞ்சில் நாடன் ஆகியோரோடு உரையாடும்போதெல்லாம் எங்கள் குடும்பத்தின் ஒரு மூத்த சகோதரரிடம் உரையாடுவதுபோலவே தோன்றும். என் தலைமுறையில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரேம் ஆகியோருடன் விரும்பி உரையாடியிருக்கிறேன். எனக்குக் கிட்டிய அற்புதமான நண்பர்கள் இவர்கள். புதிய திசைகளை நோக்கி நம்மைச் செலுத்தும் சக்தி இவர்களிடம் உண்டு. மூத்தவர்களானாலும் இளையவர்களானாலும் ஒருவரிடமிருந்து நாம் எதைப் பெற விரும்புகிறோமோ, அதையே பெறுகிறோம். நாம் ஏந்தியிருக்கும் பாத்திரத்தின் அளவிலேயே நாம் பெறுவதும் இருக்கும். இதில் பூசலுக்கு எங்கே இடமிருக்கிறது? வாழ்வின் உயிர்த்துடிப்பை, உற்றறிந்து அதை எழுத்தில் சிறிதும் பிசகாமல் வடிக்க எண்ணுகிறவனே படைப்பாளி. அப்படி எழுதப்படுவதே இலக்கியம். அன்பும் கனிவும் நிறைந்தவனால்மட்டுமே அந்த உயிர்த்துடிப்பை உணர முடியும். சோதனைச்சாலை முடிவுகள்
போல மற்றவர்கள் தன் அவதானிப்புகளை முன்வைக்கும்போது, படைப்பாளிமட்டுமே துடிப்பின் சாரத்தையும் உண்மையையும் நோக்கித் தன் கவனத்தைச் செலுத்துகிறான். என்னைப் பொறுத்தவரை, இவ்வகையிலான படைப்பாளியாக இயங்கவே விரும்புகிறேன். அன்புணர்ச்சியோ, கனிவுணர்ச்சியோ சிறிதும் இல்லாமல் இருக்கும்போதுதான் ஒவ்வொருவருக்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் வேகமும் பூசலும் எழுகின்றன. அந்த இடத்தில் எனக்கு ஆர்வம் இல்லை. 

o

நன்றி - தீராநதி

ந.பிச்சமூர்த்தி நேர்காணல்


ந. பிச்சமூர்த்தி 1900 ஆகஸ்ட் பதினைந்து அன்று தஞ்சை ஜில்லா கும்பகோணத்தில் பிறந்தவர். ஹரி கதை காலட்சேபம், நாடகத்துறை, ஆயுர்வேத வைத்யம், தாந்தீரிக உபாசனையில் ஈடுபாடு, நான்கு மொழிகளில் சாகித்யம் இயற்றல் இவைகளில் வல்லுநரும், சகலகலா வல்லவருமான அவரது தந்தை நடேச தீட்சதர் காலம்சென்றபோது அவருக்கு வயது ஏழு.

தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி கும்பகோணம் டவுன் உயர்தரப் பாடசாலையில் படித்து, கும்பகோணம் நேடிவ் கலாசாலையில் படித்து பிலாசபி எடுத்துக்கொண்டு பி.ஏ பட்டம் பெற்று பின் சட்டப்படிப்பு படித்து, பிளீடரானார். 1924 முதல் 1938 வரையில் கும்பகோணத்தில் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். வக்கீல் தொழில் தனக்கு பொருந்தவில்லை என்று கருதி அதை விட்டுவிட்டார்.

வக்கீல் தொழில் செய்யும்போதே அரசியலில் காங்கிரஸ் சார்பான ஈடுபாடு உண்டு. கலாசாலையில் இண்டர்மீடியட் படிக்கும் போதே கலாசாலைப் பத்திரிகையில் கவிதைகள், வர்ணனைக் கட்டுரைகள், சிந்தனைக் கட்டுரைகள் எழுதினார்.

1933-ல் 'கலைமகள்' நடத்திய சிறுகதைப் போட்டியில் பதினைந்து ரூபாய் பரிசுப்பெற்ற'முள்ளும் ரோஜாவும்' என்ற சிறுகதை மூலம் எழுத்துலகத்துக்கு அறிமுகமான ந.பி. அதற்கு முன் 'சயன்ஸூக்கு பலி' என்ற கதையை 'கலைமகள்'லேயே எழுதி இருக்கிறார். அதுதான் அவர் எழுதிய முதல் கதையாகும். 1923 லேயே இங்கிலீஷில் 'மோஹனி' யையும் 'ஆராய்ச்சி' யையும் எழுதியிருக்கிறார். 1938 பிற்பகுதியில் ஹனுமான் பத்திரிகையில் உதவியாசிரியராகச் சேர்ந்து சுமார் ஏழுமாத காலத்திற்குப் பின் அதனின்று விலகி, அறநிலையப் பாதுகாப்பு இலாகா நிர்வாக அதிகாரியாக உத்யோகம் பெற்று பல கோயில்களில் 1956 வரை வேலை பார்த்து ரிட்யராகி சில வருடங்களாக சென்னையில் 'நவ இந்தியா' தினசரிப் பத்திரிகையில் உதவியாசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

'கலைமகள்'ல் பரிசு பெற்றாலும் பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர் ஆனார். கு ப ராவுடன் சேர்ந்து இரட்டையராக, 'கலைமகள்'க்கும் இன்றுவரை அபிமானத்தொடர்பு இருந்து வருகிறது. பிச்சமூர்த்தி புதுக் கவிதைகள், சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள் எழுதியிருக்கிறார். கோர்டில் பலர் முன்னிலையில் வாதாடி பழக்கம் உள்ள பிச்சமூர்த்திக்கு மேடை ஏறிப் பிரசங்கம் செய்வது அவ்வளவாக பிடிப்பதில்லை. குறிபிட்ட கூட்டங்களில் தவிர அவர் அதிகமாக கலந்து கொள்வதும் இல்லை. பேசுவதும் இல்லை. பேசினாலும் ரத்னச் சுருக்கமாகத்தான். பிச்சமூர்த்தி நடுத்தர உயரமும் பாங்கான உடல் அமைப்பும் வாய்ந்தவர். நல்ல சிவப்பு நிறம். நரைத்த தலைமயிரும், தலைமயிரை விட வெளுப்பான தாடியும் உள்ளவர். கண்களுக்கு மேல் சற்று அதிகமாக தொங்குவது போன்ற புருவங்கள். சற்று சிவப்பேறிய ஒரு உக்ரத்தோற்றக் கண்கள். ஆளைச் சுடுவதுபோன்ற தீர்க்கமான பார்வை. கணீரென்ற குரல். பேச்சில் கொச்சையின் செல்வாக்கு.

அவரை நாங்கள் பேட்டி காணச் சென்றபோது அவர் வெளியே போயிருந்தார். அவரது அறையைச் சுற்றி நோட்டம் விட்டோம். சுற்றி புஸ்தகம். காகித மயம். ஒழுங்கில்லாமல் அடுக்கப்பட்டவை. அங்கங்கே தெரியும் காகிதங்கள் அவர் எழுதி வைத்திருக்கும், எழுதிக் கொண்டிருக்கும் படைப்புகளைக் காட்டின. பல மேல்நாட்டு பிரபல எழுத்தாளர்களைப் பற்றி நாங்கள் அறிந்திருப்பதைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தபோது, பிச்சமூர்த்தி இந்த இடத்திலிருந்து கதை எழுதுகிறார், கவிதையும் எழுதுகிறர் என்று பட்டது.

முன்கூட்டியே பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பிச்சமூர்த்தி வெளியே இருந்து வந்ததும் வராததுமாக காரியத்தில் முனைந்துவிட்டோம். இந்த மாதிரி பேட்டி எங்களுக்கு புதிசு. தமிழில் முதல் வரிசையைச் சேர்ந்த முதிர்ந்த ஒரு எழுத்தாளரை பேட்டி காண்கிறோம். இலக்கியத் தரமாக பேட்டி இருக்க வேண்டும் என்ற ஆசை, கவலை, எப்படி அது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால் பேட்டி ஆரம்பித்ததுமே ஒரு சில கேள்விகளுக்குப் பிறகு எங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை ஏறிவிட்டது. அதற்குக் காரணம் பிச்சமூர்த்தியேதான்.

எங்கள் கேள்விகளுக்கு அவர் பதில் சுருக்கமாக, அழுத்தமாக, விவகாரமாகச் சொல்லி வந்தது மட்டுமல்ல, அடுத்த கேள்வி நாங்கள் கேட்பதற்கு தூண்டக்கூடிய வகையில், நாங்கள் என்னெல்லாம் உத்தேசித்திருந்தோமோ, அதை பொருத்தமான இடத்தில் கேட்கச் செய்ய ஏதுவாக எங்களுக்கு வழிகாட்டி இழுத்த மாதிரி இருந்தது அவரது பதில்கள். அவர் அதிகம் பொதுப்படையாக இலக்கிய விஷயங்களை விவாதிப்பதில் கவனமாக இருந்தார். குறித்த ஒன்றிரு விஷயங்களுக்கு அவர் பதிலைப் பெற முடியவில்லை. பேட்டி சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்றது. பிச்சமூர்த்தியின் பதில்கள் திட்டவட்டமாக முன்கூட்டியே அலோசித்து வைக்கப்பட்டு இருந்ததுபோல் தக்க வார்த்தைகளில் வந்து கொண்டிருந்ததால் அவைகளைத் தொடர்ந்து குறித்துக் கொள்வதும் எளிதாக இருந்தது. அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக பிச்சமூர்த்தியிடமிருந்து பெற்றுக்கொண்டு போகிற உணர்ச்சியுடன் திரும்பினோம்.

சி சு செல்லப்பா - சு சங்கரசுப்ரமண்யன்
(வாழ்க்கைக் குறிப்புகள் சம்பந்தமான விசராணைக்குப் பிறகு பேட்டி ஆரம்பமாகியது.)

பேட்டியாளர் : நீங்கள் பி.ஏ யில் பிலாசிபி எடுத்துக்கொண்டதாக சொன்னீர்களே, அதனால்தான் உங்கள் எழுத்திலும் அதன் சாயை அதிகம் காணப்படுகிறதோ?

ந.பிச்சமூர்த்தி : அது காரணமில்லை. எங்கள் குடும்பத்தில் பரம்பரையாகவே இந்தப் போக்கு இருந்து வந்திருக்கிறது. தலைமுறைக்கு ஒருவர் சந்நியாசியாக இருந்திருக்கிறார்.

பேட்டியாளர் : நீங்கள் தாடி வைத்துக் கொண்டதற்கு இதுதான் காரணமா?

ந.:(கொஞ்சம் நீண்ட மௌனம்) : 1933þல் உள் நெறியை மேற்கொண்டேன். அதன் சின்னமாக ஏற்பட்டதுதான் தாடி. உள்நெறிதான் எந்த மனிதர்க்கும் இயற்கையான வாழ்வு என்றே நினைக்கிறேன்.

பேட்டியாளர் : ஆமாம், வக்கீல் தொழில் பொருந்தாததால் தொழிலை மாற்றிக் கொண்டேன் என்றீர்களே. அப்படியானால் எழுத்தாளராக ஆனது இந்த மாற்றத்துக்கு தூண்டுதலாக இருந்ததா?

ந.பிச்சமூர்த்தி : எழுத்தினால் அதை விட்டுவிட்டேன் என்பது காரணமல்ல. எழுத்து நினைப்பு என்னைப் பற்றிய மட்டில் பால்ய முதலே இருந்தது. காலேஜில் இருக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். எழுத்து ஆர்வம் என்னிடம் இருக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். எழுத்து ஆர்வம் என்னிடம் இருந்ததுக்கு என் பரம்பரை காரணமாக இருக்கலாம். பரம்பரை என்ற உயிரியல் தத்துவம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை ஆட்கொண்டு தீரும். இந்த நியதியை தப்பமுடியாது.

என் தந்தை சகலகலா வல்லவர். ஒரு மேதை. அவருக்குள்ள மற்ற திறமைகளுடன் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மகாராஷ்டிரம் ஆகிய பாஷைகளில் சாகித்யம் இயற்ற வல்லவர். எனக்கு ஏழு வயதிலேயே இறந்துவிட்டார். எனக்கு அவரை நன்றாகத் தெரியாது. துரதிருஷ்டவசமாக அவர் வித்தை எதுவும் எனக்கு வரவில்லை.

பேட்டியாளர் : ஞானிகளுடன் உங்களுக்கு ஏதேனும் பரிச்சயம் ஏற்பட்டதா?

ந.பிச்சமூர்த்தி : இன்றும் கோவிலுக்குப் போவதைவிட பெரியோர்களை அண்டுவதே மேல் என்று நான் நினைக்கிறேன். இளம் வயதிலிருந்தே துறவிகள், பைத்தியம், குழந்தைகள் என்றால் எனக்கு மிக விருப்பம். சொல்லப்போனால் என்னையும் மீறியே அவர்களுடன் கலந்து விடுவேன்.

பேட்டியாளர் : இதனால்தான் அவர்கள் சம்பந்தப்பட்டதாக உங்கள் கதைகள் அதிகம் இருக்கின்றனவோ?

ந.பிச்சமூர்த்தி : இருக்கலாம். அதுவே காரணமாக இருக்கலாம். இத் தொடர்புகளால் உள்ளொளியையும் நல்ல பயனையும் அடைந்திருக்கிறேன் என்று உறுதியாகச் சொல்லுவேன். அவர்கள் தொடர்பு இல்லாமல் இருந்திருந்தால் ஆற்றில் செல்லும் கிளை போல குறிப்பின்றி புரண்டு போய்க்கொண்டே இருந்திருப்பேன்.

பேட்டியாளர் : இந்தக் குறிப்பு வாழ்க்கையில் ஏற்பட்டதுபோலவேதான் உங்கள் இலக்கியப் படைப்புகளிலும் பிரதிபலிக்கிறதா?

ந.பிச்சமூர்த்தி : இலக்கியம் வாழ்வின் ஒரு துறையிலான இயக்கம் ஆனபடியால் இலக்கியம் பாதிக்கப்பட்டேதான் தீர வேண்டும். வாழ்வுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் பேசுவதை நான் ஏற்கமாட்டேன். வாழும் வகை காணும் முயற்சியைவிட இலக்கிய முயற்சி சிறந்தது என்று ஒப்ப மாட்டேன். சொல் ஓய்ந்து மௌனம் வருமானால் மகிழ்ச்சியுடன் ஏற்பேன். உருவத்தில் நின்று உருவமற்றதை காண்பதே இன்பம். மேதை இருந்து அந்த இன்பத்தை உலகுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமானால் அதுவும் நல்லதுதான், முடியாவிட்டாலும் அதற்காக வருந்த வேண்டியதில்லை.

பேட்டியாளர் : நீங்கள் சொல்கிறதைப் பார்த்தால் கலை இன்பம் என்று தனியாக பிரிப்பதாகத் தெரிகிறது. வாழ்க்கை இன்பம் வேறு...

ந.பிச்சமூர்த்தி : இந்து நாகரீகம் இலக்கியத்துக்கு இரண்டாவது ஸ்தானம் தான் கொடுத்திருக்கிறது. முதல் ஸ்தானம் ஆன்ம வேட்கைக்கு. நான் ஒரு இந்து. இந்த அடிப்படை நோக்கில் ஏற்படுகிற விளைவுகள் எல்லாம் ஏற்படத்தான் செய்யும்.

பேட்டியாளர் : ஆனாலும் தங்கள் படைப்புகளில் 'கலை இன்பம்' எடுப்பாக கிடைக்கிறதே.
ந.பிச்சமூர்த்தி : உள்ளபடியே நான் கருதும் கலை இன்பத்திற்கும் ஆன்ம இன்பத்திற்கும் தரத்தில் வித்தியாசம் இராது.

பேட்டியாளர் : (குறுக்கிட்டு) நானும் புலனின்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை.

ந.பிச்சமூர்த்தி : அது சரி...சொல்லை மந்திரம் என்பார்கள். சொல்லைக் கொண்டே சொல்லற்ற நிலையைக் காட்ட முயலுவதுதான் இலக்கியம். அந்த இடத்தில் உலகின் சிகரமும் ஆன்ம உலகின் சிகரமும் இணைகின்றன.

பேட்டியாளர் : அப்படியானால் மேல் நாட்டு இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் இந்த இணைப்பு இல்லையா?

ந.பிச்சமூர்த்தி : மேல்நாட்டு இலக்கியத்தில் இந்த நோக்கு இல்லை என்று சொல்லமாட்டேன்.

பேட்டியாளர் : அறிவு நிலை அளவுக்குத்தான் உண்டு. ஆன்மிக நிலையளவுக்குக் கிடையாது என்று கூறப்படுகிறதே.

ந.பிச்சமூர்த்தி : மேல் நாட்டில் ஒரு பகுதி இலக்கியம்தான் உலகியல் இன்ப துன்பங்களே முடிவானது என்று கருதி இயங்குகிறது. டால்ஸ்டாய், மாரிஸ் மெடர்லிங், பிளேக், ஷெல்லி, யீட்ஸ், ஏ.ஈ.இ எமர்ஸன், விட்மன், எட்வர்ட் கார்ப்பெண்டர் ஆகியோர் போல், சொல்லப்போல், காஃப்கா தாமஸ் மான் போன்றவர்கள்கூட இதே ஆன்ம வேட்கையைத்தான் இலக்கிய முறையில் அமைத்திருக்கிறார்கள்.

பேட்டியாளர் : 'அன்னா கரீனினா' எழுதிய டால்ஸ்டாயையும் சேர்த்தா சொல்லுகிறீர்கள் . முழுக்க முழுக்க நடப்பியல் சம்பந்தப்பட்டதல்லவா அன்னா கரீனினா?

ந.பிச்சமூர்த்தி : ஒரு ஆசிரியரின் ஒரு படைப்பில் இந்த தொனி இல்லாமல் போனதைக் கொண்டு அடிப்படைத் தன்மையே தகர்ந்து விட்டது என்று கருதக்கூடாது. டால்ஸ்டாயைப் பற்றிய வரையில் மேல் நாட்டு முறையில் இலக்கியத்தை அணுகுவது தவறு என்று அவர் மனமாற்றம் பெற்ற பிறகு உணர்ந்தார் என்பது தெரிந்த விஷயம்.

பேட்டியாளர் : ஆகவே மேல் நாட்டு முறையில் இலக்கியம் படைப்பது சம்பந்தமாக நாமும் அதேமாதிரி முடிவுக்குத்தான் வரவேண்டுமா?

ந.பிச்சமூர்த்தி : இலக்கியம் சம்பந்தப்பட்ட மட்டில் தர்க்க பூர்வமான விவாதங்கள் செய்வதால் புத்தகங்கள் பெருகலாமே தவிர அதிக உண்மைகள் தெரிந்து விடுவதில்லை. ஏனென்றால் இலக்கியமும் வாழ்வைப்போல நம்மை யறியாமலே, ஒரு வேளை - நம்மையும் மீறி உந்தித் தள்ளும் ஒரு சக்தி...அல்லது எதுவோ...

பேட்டியாளர் : இதுவரை பொதுப்படையாக பேசிவிட்டோம். தமிழ் இலக்கியத்துக்கு வருமுன் ஒரு கேள்வி. தாகூருக்கும், உங்களுக்கும் ஒப்பிடுதல் செய்கிறார்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : தாகூருக்கு எனக்கும் எந்தவிதத்தில் சம்பந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. தாடியைத் தவிர. எல்லோரும் படித்த அளவுக்கோ படிக்காதஅளவுக்கோதான் நானும் தாகூரைப் படித்திருக்கிறேன் ஆங்கிலத்தில்தான். ஆனால் காளிதாசனுக்குப் பிறகு நம் நாட்டில் தோன்றிய மகாகவி தாகூர் ஒருவரே என்று சொல்வேன்.

பேட்டியாளர் : தாகூர் சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்திருப்பது போல் நீங்களும் கொடுத்திருப்பதாக விமர்சகர் க நா சுப்ரமணியம் கூறியிருக்கிறார். இந்திய உருவம் என்று தனியாகக் கூறுவதற்கு இருக்கிறதா? நமது உருவ முயற்சி பற்றியும் கொஞ்சம் விளக்கம் கொடுத்தால்....

ந.பிச்சமூர்த்தி : நாமரூபங்களுக்கு இந்துக்கள் பெருமை தரக்கூடாது. உடம்பைப் போற்றுதல் உயர்ந்த பண்பாகாது. 'ஊனுடம்பு ஆலயம். உள்ளம் திருக்கோவில்' என்றார் திருமூலர். உருவத்திற்கு உள்ள பெருமை எல்லாம் உயிருக்குள்ள சக்தி தான். உருவத்திற்கு அழகு ஏற்படுவதே உயிரின் இயக்கத்தினால்தான். நோய்ப்பட்ட உயிரில் உருவ அழகைக் காண முயல்வது குதிரைக் கொம்புக்காக புறப்படும் வேட்டையாகும். ஆகவே உருவம் என்று இலக்கியத்தில் எந்தத் துறையில் விவாதத்தை எழுப்பினாலும் பேசினாலும் அதை நான் பெரிதாகக் கருதுவதில்லை. இந்திய நோக்கு என்று ஒன்று இருப்பது உண்மையானால் அதற்குத் தகுந்த இலக்கிய அமைப்புதான் ஏற்படும். தமிழ் இலக்கியத்துக்கும் இந்தக் கருத்து பொருந்தும்.

பேட்டியாளர் : இன்றையத் தமிழ் இலக்கியத்தில் உள்ள உருவங்கள் மேல் நாட்டு முறையைப் பின்பற்றியதா? நம் மரபு உருவங்கள் எந்த அளவுக்கு இருந்திருக்கின்றன? சோதனை என்று பேசப்படுவது எந்த அளவுக்குச் சரி?

ந.பிச்சமூர்த்தி : உயிரானது தன்னைத்தானே தின்று வாழ முடியாது. தனக்குப் புறம்பாக உள்ள பொருள்களை தனதாக்கிக் கொள்வதன் மூலம்தான் அது வளர முடியும். அதாவது பழயதில் புதுமை கலப்பதுதான் உயிரியக்கம். பழந்தமிழ் மரபுகள் வளரும்போது அல்லது வளர விரும்பும்போது இந்த இயற்கை நியதிகளுக்கு ஒப்ப பிறநாட்டு இலக்கிய மரபுகளையும் ஜீரணம் செய்து கொள்ளப் பார்க்கிறது. தமிழ் நாட்டு சிறுகதை உருவம் என்று சொல்ல எதுவும் இல்லை. அமெரிக்க உருவம், இங்கிலீஷ் உருவம், என்றெல்லாம் சொல்வது பயனில்லாத பாகுபாடுகள். தெளிந்த ரசனையைக் காட்டினால் உருவம் நன்றாக இருக்கிறது என்று நினைக்க வேண்டும். குழம்பிய ஜலத்தில் முகம் தெரியாது. அப்போது இலக்கியம் கண்ணாடி ஆகாது.

பேட்டியாளர் : இலக்கியம் வாழ்க்கையை பிரதிபலிக்கிற கண்ணாடி என்று கூறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

ந.பிச்சமூர்த்தி : உங்கள் கேள்வியிலேயே தவறு இருக்கிறது. நீங்கள் சொல்லுவதிலே ஒரு முக்கிய விஷயம் இருப்பதை உணர்ந்தீர்களோ கண்ணாடி மனிதனை அப்படியே காட்டக் காணோம். இடது புறமாக இருப்பது கண்ணாடியில் வலதுபுறமாகவும், வலது புறமாக இருப்பது இடது புறமாகவும் தெரியும். ஆகவே கண்ணாடிகூட மாற்றத்தான் செய்கிறது. இலக்கியம் கண்ணாடியை விட அதிக மாற்றத்தைத் தருகிறது. இன்னொரு விஷயத்தைக்கூட இந்தச் சந்தர்ப்பத்தில் நினைத்துக்கொள்ளலாம். கருப்பையிலிருந்து பிறக்கும் குழந்தை தலைகீழாகத்தான் பிறக்கிறது. பூமியில் வந்தவுடன் நிமிர்கிறது. இலக்கியத்தில் ஆசிரியர் கருப்போல குறுகி அணுவாகி வியாபித்து விடுகிறான் ஆசிரியன் அகண்டாகாரம் அடையும் சாதனையில் எந்த இலக்கியமும் ஒரு அறிகுறி அல்லது ஒரு மைல்கல்.

பேட்டியாளர் : சமீபத்தில் உங்கள் மணிவிழா பாராட்டுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது பாம்பு அடிக்கடி சட்டை உரித்துக் கொள்வதுபோல் எழுத்தாளன் தன்னை புதுசுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றீர்களே.. தமிழ் எழுத்து உலகில் அந்தச் சட்டை உரிப்பு எந்த அளவுக்கு இன்று நடைபெறுகிறது? பாரதி, ராமையா மணிக்கொடி காலத்தில் நடந்த சட்டை உரிப்பு மாதிரி? இன்று பொதுவாக இன்றைய தமிழ் இலக்கியத்தில்...

ந.பிச்சமூர்த்தி : தமிழ் நாட்டில் இலக்கிய முயற்சிகள் எல்லாவற்றையுமே நான் வரவேற்கிறேன். சைக்கிள் சவாரி செய்பவன் பயிற்சி காலத்தில் தவறி விழுந்தால் அவனை ஏளனம் செய்வது தவறு. அவனுக்கு ஊக்கம் ஊட்டத்தான் வேண்டும். அவன் சொல்லும்வழி தவறாக இருந்தால், அதை எடுத்துக்காட்ட வேண்டியது நமது கடமை. எத்தனையோ லட்சக் கணக்கான முயற்சிக்குப் பிறகுதான் இயற்கை, மனிதன் என்ற ஒன்றை சாதித்தது. புதிய தமிழ் இலக்கியத்தில் ஒரு நூற்றாண்டு ஆகட்டுமே. எல்லோரும் சரியான நோக்கோடு முயலுட்டுமே. அவற்றின் தரத்தைப் பற்றி முன்கூட்டி முடிவுகட்ட வேலை யாருடையதும் அல்ல. அதை அனுபவிக்கும் சந்ததியார் அந்த விஷயத்தை கவனித்துக் கொள்வார்கள். எப்பேற்பட்ட விமர்சனமும் ஒருவருடைய அபிப்பிராயம்தான் - அதாவது அடிப்படையான கொள்கையுடன் பிணைக்கப்படாத வரையில். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேனா?

பேட்டியாளர் : நாங்கள் பின்னர் கேட்க இருந்த கேள்விக்கு பதில் இப்போதே கிடைத்து விட்டது. அதாவது விமர்சனம் பற்றி. தமிழ் எழுத்துலகில் படைப்பாளி சம்பந்தப்பட்ட மட்டில் சட்டை உரிப்பு.

ந.பிச்சமூர்த்தி : என்னைப் பற்றியே பேசலாம் என்று நினைக்கிறேன். காத்தாலும் அழித்தாலும் இலக்கியமே சரணம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். பல காரணங்களால் நான் இக் காரியத்தை செய்யாமல் இருந்து விட்டேன். இலக்கிய ஆசிரியன் எவனும் தன்னை இலக்கியத்துக்கு என்று ஒதுக்கி வைப்பானானால் அவ்வப்போது தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய வழியை அவன் காண்பான். சட்டை அப்போது தானாகவே உரியும். இந்த சமர்ப்பணம் என்பது ஆன்மத்துறையில் எவ்வளவு அவசியமோ அதைவிட இன்னும் அத்யாவச்யம் இலக்கியத்திலும். எழுதிப் பிழைப்பது என்பதைப் பற்றி நான் பேசவே இல்லை. மதத்திற்கு என்ன பெருமை கொடுப்பார்களோ அதற்குக் குறையாதபெருமை உண்மையான இலக்கியத்துக்கும் உண்டு.

பேட்டியாளர் : மணிக்கொடி கோஷ்டியினர் இந்த சட்டை உரிப்பு செய்து வந்திருக்கிறார்களா?

ந.பிச்சமூர்த்தி : கோஷ்டிகளைப் பற்றிப் பேசுவது என் உடன்பாடு அல்ல. சட்டை உரிப்பது என்றால் புதிய முயற்சிகள் என்றுதான் பொருள். லட்சியத்தைக் குறைத்துக் கொண்டால் பிழைப்பு நிலைக்கு இறங்கி விடுகிறோம். பிழைப்பு நிலைக்கான சாதனம் இலக்கியம் என்று நினைப்பு ஓரளவு தமிழ்நாட்டில் இன்று பரவி இருக்கிறது. எதை நம்பி வாழ்கிறோமோ அது சோறு போட வேண்டும் என்பது நியாயம்தான். சோறு போடவில்லை என்பதற்காக விட்டுச் செல்ல முடியாது. அதற்காக தரத்தையும் இறக்கிவிடக் கூடாது.

பேட்டியாளர் : குழுக்களாக இருந்து இலக்கியம் சாதிக்க முடியுமா? வட்டத்தொட்டி, வெள்ளி வட்டம்....

ந.பிச்சமூர்த்தி : நான் அதை நம்பவில்லை. உலகத்தைப் பார்ப்பது என்றால் என் சொந்தக் கண் பார்த்தாலொழிய எனக்குத் தெரிவதில்லை. நான் உண்ட உணவை பிறர் ஜீரணம் செய்ய முடியாது. இலக்கியம் கலை, உருவம் பெறும் வரையில் அது தனி மனிதனின் வேதனையோ ஆவேசமோ அல்லது இன்பமோ ஆகும். அதற்குப் பிறகு இலக்கியாசிரியனுக்கும் அந்தப் படைப்புக்கும் சம்பந்தம் இல்லை.

பேட்டியாளர் : மணிக்கொடி கோஷ்டி என்று ஒன்று...

ந.பிச்சமூர்த்தி : கிடையாது.

பேட்டியாளர் : பின் ஏன் அப் பெயரை அடிக்கடி பிரஸ்தாபிக்கிறார்கள்?

ந.பிச்சமூர்த்தி : பொதுவான போக்கு இருந்ததைக் கொண்டு ஏதோ கோஷ்டியாக இருந்தது போல தவறுதலாய் பேசி வருகிறார்கள். புதுமைப்பித்தனுக்கும் கு ப ரா வுக்கும், எனக்கும் எந்தவிதத்தில் ஒற்றுமை இருக்கிறது.

பேட்டியாளர் : கு.ப.ரா பெயரை பிரஸ்தாபித்தீர்கள். உங்களை 'இரட்டையர்' என்கிறார்களே எப்படி?

ந.பிச்சமூர்த்தி :கும்பகோணத்தில் 3, பிள்ளையார் கோயில் தெரு, எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் ராஜகோபாலன். நான் காற்றாடி கட்டிவிட்ட நாள் முதல், அவன் தவளைக் குஞ்சுகளை நெருப்புப் பெட்டியில் போட்டு விளையாடின நாட்கள் முதல் இணைபிரியாத தோழர்கள்.

பேட்டியாளர் : (குறுக்கிட்டு) அதுதான் கு.ப.ராவின் 'பாட்டியின் ஆதங்கம்' என்ற கதையில் அந்தக் குழந்தைகள் தவளை விளையாட்டு பிரஸ்தாபம் இருக்கிறதோ?

ந.பிச்சமூர்த்தி :(சிரித்து) அப்படியா? இருக்கா? அதற்குப் பின் படிப்புக்காக வெளியூர் போனபோதிலும் திரும்ப விடுமுறைக்கு வரும் நாட்களில் என்னுடனேயேதான் காணப்படுவான். அவன் உத்யோகம் பார்த்த காலத்திலும்கூட கும்பகோணம் வரும்போது எப்போதும் எங்கள் இருவரையும் சேர்ந்துதான் பார்க்க முடியும். இருவரும் சேர்ந்து ஏறக்குறைய ஒரே சமயத்தில் எழுத ஆரம்பித்தோம். வ.ரா.தான் எங்களை இரட்டையர் என்றார்.

பேட்டியாளர் : பாரதிக்குப் பின் வ ரா ஒரு இலக்கிய சக்தியாக விளங்கினாரே. அதைப்பற்றி அதிகம் இப்போது பிரஸ்தாபிக்கப்படுவதில்லையே. வ ராவின் இலக்கிய சாதனை பற்றி உங்கள் கருத்து?

ந.பிச்சமூர்த்தி : வ ரா சில புதிய துறைகளைக் கையாண்டார். வாழ்வில் பாமர மக்கள் என்று கூறப்படுவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் இடம் சம்பாதித்துத் தர முயன்றவர்களில் முதல்வர் என்றே அவரைப் பற்றிச் சொல்லலாம். அவருடைய நடைச் சித்திரத் தொகுப்பு இதற்கு சிறந்த சான்று. இங்கிலிஷ் ஆசிரியர் ஏ ஜி ஜி செய்த காரியத்தை வ ரா தமிழ் இலக்கியத்திற்குச் செய்திருக்கிறார். ஒரு விதத்தில் அவர் ஜான்சனைப் போன்றவர். அவருடைய எழுத்து எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மேற்பட்ட சக்தி வாய்ந்தது வரா, என்னும் ஜீவன். அந்தச் சக்தியின் கவர்ச்சி முழுவதும் அவருடைய இலக்கியத்தில் காணப்படுவதாகச் சொல்லமுடியாது. ஒரு விதத்தில் வசனத்திற்கு புதிய நியதிகளை உண்டாக்க வேண்டும் என்று விரும்பியவர் என்றே சொல்லலாம். தனித்துச் சுருங்குவதைவிட விரிந்து பரவுவதே அவரது எல்லாவிதத்திற்குமான கொள்கை.

பேட்டியாளர் : பாரதி, வ.ரா வுக்குப் பிறகு அத்தகைய சக்தி இன்று தமிழ் நாட்டில் இல்லாதது இன்றைய மந்தத்திற்கு காரணமா? சாதனைக் குறைவுக்குக் காரணமா?

ந.பிச்சமூர்த்தி : தனி ஜீவன் அரசியலில் எதையும் சாதிக்கலாம். ஆனால் இலக்கயத்தில் எந்த ஜீவனின் புது முயற்சியைப் பார்த்தாலும் அந்த முயற்சிக்கு இட்டுச் செல்லும்பாதை அதற்கு முந்திய இலக்கியத்தில் இருப்பது காணப்படும். ஏற்கனவே இலக்கியம் தனி ஜீவனின் முயற்சி என்று சொல்லி இருக்கிறேன். பாரதி புதிய தமிழ் இலக்கியத்தை உண்டாக்கினார் என்று சொல்வதைவிட புத்துயிர் பெற்ற தமிழ் நெஞ்சம் பாரதியாக குரல் கொடுத்தது என்று கூற வேண்டும். அதேபோலத்தான் வ.ராவும்.

பேட்டியாளர் : இப்போது அந்த மாதிரி தொனிக்கும் குரல்?

ந.பிச்சமூர்த்தி : இல்லை என்று சொல்லமுடியாது. தமிழ் நாட்டுக் கருத்துக் குழப்பங்கள் காரணமாக விரிந்து உயர்ந்து தலமை தாங்க வேண்டியவர்கள் சுருங்கி நின்று விடுகிறார்கள்.

பேட்டியாளர் : இதனால் இலக்கிய வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதை....?

ந.பிச்சமூர்த்தி : அதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழன்னை ஓயாத இளமை பெற்றவள். அவள் பொலிவை பல விதத்தில் காண்கிறோம். எல்லாவிதப் பொலிவையும் ஒருவர் அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று சொல்ல இயலாது. அவரவர் போக்குப்படி தமிழன்னையை வணங்குவதை யாராலும் தடுக்க முடியாது.

பேட்டியாளர் : கு.ப.ரா வைப்பற்றி ஒரு கேள்வி. அவர் ஒரு மாதிரியான 'செக்ஸ்' கதைகள் மாப்பஸன் மாதிரி எழுதினதாக அபிப்பிராயம் கூறப்படுகிறதே. இந்த 'செக்ஸ்' விஷயத்தை ஒரு இலக்கிய பிரச்னையாக அவர் கையாண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : எனக்குத் தெரிந்தவரையில் ராஜகோபாலன் மாப்பஸன் அதிகம் படித்திருந்தான் என்று சொல்வதிற்கில்லை. அவன் கதைகள் பச்சையாக இருக்கின்றன என்று கூறுவதுபற்றி நான் ஒன்று சொல்வேன். வாழ்வு பச்சையாக இருந்தால் இலக்கிய ஆசிரியன் என்ன செய்வான்? அவைகளை ஒதுக்கிவிட்டு வேறு விஷயங்களைக் கையாளக் கூடாதா என்று கேட்டால் அது அந்தந்த ஆசிரியரைப் பொறுத்த விஷயம். வேதனையைத் தாங்கும் சக்தி ராஜகோபாலனுக்கு கிடையாது. அவன் உடம்பு மிகவும் நோஞ்சல். பெண்கள் படும் வேதனை அவனால் தாங்க முடியாது. ஆகவே பெண்ணின் வேதனையே அவனுடைய இலக்கிய விஷயமாயிற்று.

பேட்டியாளர் : உங்கள் கதைகளுக்கு எல்லாம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் ஆதாரமா?

ந.பிச்சமூர்த்தி :எல்லாக் கதைகளுக்கும் சொல்லமுடியாது. சில கதைகளுக்கு இருக்கலாம். ஆனால் வாழ்வு இலக்கியத்தில் வரும்பொழுது திரிந்து வேறு உரு கொண்டுவிடுகிறது.

பேட்டியாளர் :ஏதாவது உதாரணங்கள் ?

ந.பிச்சமூர்த்தி : கும்பகோணம் கடைத் தெருவில் கையில் பச்சை குத்திக் கொண்டிருந்த ஒரு பையன் இருந்தான். அவனைப் பார்த்தால் அரைப் பைத்தியம் போலதான் இருக்கும். அவன் அனாதை. அவன் என் மனதில் விட்ட வடுத்தான் 'அரைப் பைத்தியம்' என்ற கதையாக உருவெடுத்தது. 'மோஹினி' என்ற என் கதைக்கு ரவிவர்மாவின் படம் தூண்டுகோல்.

பேட்டியாளர் : கேட்கப்போகிற கேள்வி பற்றி வித்தியாசமாக நினைத்துவிடாதீர்கள். 'பதினெட்டாம் பெருக்கு'க்கு எதாவது அம்மாதிரி அநுபவம்.....?

ந.பிச்சமூர்த்தி : கிடையவே கிடையாது.

பேட்டியாளர் : நீங்கள் கதை எப்படி எழுதுகிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : எனக்கே தெரியாத விஷயம். ஒரு காரணம் சொல்கிறேன். சாலிவாஹனன் 'கலாமோஹினி' பத்திரிகை நடத்தியபோது நெருக்கி கதை கேட்டார். முடியாது என்று சொல்லிவிட்டு திருச்சி சிந்தாமணி பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றுவிட்டேன். பஸ்க்காக ஒரு திண்ணையில் உட்கார்ந்து இருந்தேன். ஏதோ ஒரு லயிப்பில் ஒரு புதுக்கவிதை எழுதினேன். முடித்துவிட்டுப் பார்க்கும்போது பஸ் போய்விட்டது. சாலிவாஹனன் வீட்டுக்குத் திரும்பி கவிதையைக் கொடுத்தேன். அதற்குப் பெயர் 'காட்டு ராஜா'. அடுத்த இரண்டொரு தினங்களில் 'கவி' என்ற கதை எழுதினேன். அதை 'கலைமகள்' பத்திரிகைக்கு அனுப்பினேன். ஆகையால் எப்படி எழுதுகிறேன், எப்பொழுது எழுதுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

பேட்டியாளர் :புதுக்கவிதை முயற்சி நீங்களும், கு.ப ராவும் ஆரம்பித்தீர்களே, இன்று அதற்குள்ள இடம் என்ன என்று நிதானிக்க முடிகிறதா?

ந.பிச்சமூர்த்தி : புதுக்கவிதை முயற்சி பற்றியவரை அதற்கு இன்று போதிய வரவேற்பு இருக்கிறதென்று சொல்லமாட்டேன். இந்த புதுக்கவிதை முயற்சி வலுத்தால் யாப்புக்கு இணங்கிய கவிதை முயற்சியிலே புதிய வலிமையும் ரசனையும் தோன்றும் என்று நினைக்கிறேன்.

பேட்டியாளர் : புதுக்கவிதை, வசன கவிதை என்ற பெயர்கள் பற்றி உங்கள் கருத்து?

ந.பிச்சமூர்த்தி : பெயரைப்பற்றி எனக்கு ஆட்சேபணை கிடையாது. ஒரு குழந்தைக்கு இரண்டு மூன்று பெயர்கள் இருப்பதை உலக அநுபவத்தில் பார்க்கிறீர்களே.

பேட்டியாளர் : உங்கள் கவிதைகளில் கலீல் கிப்ரான் பாதிப்பு (இன்ஃப்ளுயன்ஸ்) இருப்பதாகச் சொல்லலாமா?

ந.பிச்சமூர்த்தி : கலீல் கிப்ரான் என்ற ஒருவர் இருந்ததே எனக்கு இரண்டு வருஷங்களாகத்தான் தெரியும். தவிரவும் கிப்ரான் புதுக்கவிதைப் பேர்வழியும் அல்லவே. அராபியில் அவர் எழுதியுள்ளது எல்லாம் யாப்புக்கு இணங்கியவையே.

பேட்டியாளர் : நாவல் எழுதும் முயற்சி நீங்கள் செய்யவில்லையா?

ந.பிச்சமூர்த்தி :இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்.

பேட்டியாளர் : சிறுகதைகள் எழுதிப் பழகிய கைக்கு நாவல் எழுதுவது எப்படிப் படுகிறது?

ந.பிச்சமூர்த்தி : நாவல் எழுதுவது சிறுகதை எழுதுவதைப்போல் அல்ல என்று தோன்றிகிறது.

பேட்டியாளர் : உங்கள் எழுத்தில் ஆரம்ப காலத்தில் ரொமாண்டிக், பிற்காலத்தில் 'பிலசாபிக்' என்று காலகட்டம் பிரித்துச் சொல்வது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : அப்படிச் சொல்வது தவறு என்று நினைக்கிறேன். என் கதைகளை ஒரு லேபிளுக்குள் வகைப்படுத்த விரும்புகிறவர்கள் தோல்விதான் அடைவார்கள். இந்தச் சொற்றோடர்களுக்கே பொருள் கிடையாது என்னைப் பொறுத்தவரை.

பேட்டியாளர் :'காஷ÷வல் மானர்'ல பல நல்ல கதைகள் எழுதி இருப்பதாக க.நா சுப்பிரமண்யம் உங்கள் சமீபத்திய கதைத் தொகுதி மதிப்புரையில் கூறி இருக்கிறாரே. அப்படி என்றால் என்ன?

ந.பிச்சமூர்த்தி : விமர்சகர் என்ன கருத்தில் சொல்லி இருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. பார்க்கப் போனால் 'பதினெட்டாம் பெருக்கு' கதைகளில் காணும் சிந்தனை வேகத்தைவிட கடுமையாகவே அதில் காணப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன்.

பேட்டியாளர் : உங்கள் எழுத்து சம்பந்தமாக இடையில் ஏற்பட்ட பதினெட்டு ஆண்டு இடைநிறுத்தம் இதைப் பாதிக்கிறதா?

ந.பிச்சமூர்த்தி : ஒருவேளை என்னுடைய வளர்ச்சியை இது காட்டுவதாக இருக்கலாம்.

பேட்டியாளர் :தற்போதைய பத்திரிகை உத்தியோகம் உங்கள் படைப்புச் செயலை பாதிக்கிறதா?

ந.பிச்சமூர்த்தி : ஒன்றும் பாதிக்கப்படவேயில்லை

பேட்டியாளர் : இப்போதெல்லாம் நீங்கள் ஓரங்க நாடகம் எழுதுகிறதே இல்லையே.

ந.பிச்சமூர்த்தி : இப்போதுகூட ஒன்று எழுத முயன்று கொண்டிருக்கிறேன். எழுதாதற்கு காரணம் எதுவும் இல்லை. நடுவில் பதினெட்டு வருஷ காலம் நான் எதுவுமே எழுதவே இல்லையே. எழுதுவதை மறந்தே விட்டேனே.

பேட்டியாளர் : வேண்டுமென்றேயா?

ந.பிச்சமூர்த்தி : இல்லை. கவனம் எல்லாம் உத்தியோக விஷயத்தில் சென்றதால் படைப்புக்கான மனநிலை ஏற்பட்டதே கிடையாது.

பேட்டியாளர் : அதேபோல பத்திரிகை வேலையும் மன நிலையை பாதிக்காதா?

ந.பிச்சமூர்த்தி : பாதிக்காது. அன்று வேலை அன்றோடு நின்று விடுகிறது. சட்டையை கழற்றி வைப்பதைப் போல. மறுநாள் காலை வரையில் மனத்திற்கு சுதந்திரம் தானே?

பேட்டியாளர் : கோயிலைவிட பெரியோர்களை அண்டுவதையே விரும்பிய நீங்கள் பதினெட்டு வருஷம் கோவிலுக்குள்ளேயே இருக்க ஏற்பட்டதே?

ந.பிச்சமூர்த்தி : அதுதான் அதில் உள்ள விசேஷம். கோயிலில் கூட அதனுடைய நிர்வாகத்தை கவனிப்பதுதான் என் கடமையாக இருந்திருக்கிறது. கோயிலில் எனக்கு வெறுப்பு என்று எண்ணிவிட வேண்டாம். தமிழ்நாட்டு கலாசாரம் முழுவதும் இன்றும் கோயிலில்தான் காணப்படுகிறது. கடவுளை விட குருவையே மேலானவர்களாக பாவிப்பது நம்முடைய வழக்கம்.

பேட்டியாளர் : கவியாகவும் இருந்து, பதினெட்டு வருஷம் கோயிலுக்குள்ளேயே இருந்த நீங்கள் மாணிக்க வாசகர், தாயுமானவர் போல் ஆகிவிடாமல் தப்பிப் பிழைத்து இலக்கியத்துக்குத்திரும்பினீர்களே நல்லவேளை (பிச்சமூர்த்தி வாய்விட்டுச் சிரித்து விட்டார்)

பேட்டியாளர் :உங்கள் 'முள்ளும் ரோஜாவும்' போட்டியில்பரிசு பெற்றதே. போட்டி பற்றி உங்கள் அபிப்பிராயம்என்ன?

ந.பிச்சமூர்த்தி : போட்டிகள் தவறு என்று நான் சொல்ல மாட்டேன்.

பேட்டியாளர் :பிரதேச இலக்கியம் மேல் நாட்டில் வளர்ந்திருக்கிறதே. அம்மாதிரி தமிழ் நாட்டில்?

ந.பிச்சமூர்த்தி :ஏன், புதுமைப்பித்தன் தமிழ் வசனத்தில் திருநெல்வேலி வாசனையும், ஆர் ஷண்முகசுந்தரம் நாவல்களில் கோவை மண் மணமும் வீசுகிறதே.

பேட்டியாளர் : அம்மாதிரி இலக்கிய வளர்ச்சி அதிகம் இருப்பது விரும்பத்தக்கது இல்லையா?

ந.பிச்சமூர்த்தி : நவநாகரீகச் சூழ்நிலையில் தமிழ் வசனம் இன்ன உருவத்தை அடையும் என்று கூறமுடியாது. சம்பாஷணை என்று இலக்கியத்தில் வரும்போதெல்லாம் பிரதேச வாசனை வீசாவிட்டால் அதில் இலக்கிய ரசனை, உண்மை இருக்காது.

பேட்டியாளர் :'பிக்ஷ÷' என்ற புனை பெயரை வைத்துக் கொள்ள காரணம்?

ந.பிச்சமூர்த்தி :கவிதைகள் அந்தப் பெயரில் ஆரம்பத்தில் எழுதினேன்.

பேட்டியாளர் : மனநிழல் கூட எழுதி இருக்கிறீர்களே.

ந.பிச்சமூர்த்தி : ஆமாம். ஒரு காலத்தில் துறவில் எனக்கு மோகம் இருந்தது உண்மை. அந்த மோகம் விடுபட்ட பிறகு அந்த மாதிரியான தொனியுள்ள பெயரையாவது வைத்துக்கொள்ளலாம் என்று வைத்துக் கொண்டேன். என் பெயரின் சரியான உருவம் பிக்ஷôடனமூர்த்திதானே.

பேட்டியாளர் : முடிவாக ஒரு வேண்டுகோள். அறுபது ஆண்டுகள் நிறைந்த முதிர்ச்சியில், முதிர்ந்த எழுத்தாளர் என்ற நிலையில் இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பயன் படுகிற வகையில் நீங்கள் அளிக்கும் செய்தி?

ந.பிச்சமூர்த்தி : சொந்த வாழ்வை ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு என்று சமர்ப்பணம் செய்து வாழ வேண்டியதுதான் எந்த தமிழனுடைய கடமையும் ஆகும் என்று நினைக்கிறேன். எதற்கேனும் சமர்ப்பணம் செய்யப்படாத வாழ்வு உப்பில்லாத ஊறுகாய். குறிப்பாக இன்றைய இலக்கிய ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் இன்றியமையாதது.

(எழுத்து ஏடு 21 - செப்டம்பர் 1960)

நன்றி : நவீன விருட்சம்