06/03/2012

கரணம் தப்பினால்... - புலவர் சீனி.நந்தகோபால்

பொதுவாக உலகியல் ரீதியாக, "கரணம் தப்பினால் மரணம்' என்று சொல்வார்கள். இதற்கு நாம் என்ன பொருள் கொள்கிறோம்? விபத்து ஒன்றில் இருந்து உயிர் தப்புவதையும், கயிற்றின் மேல் நடந்து சாகசம் புரிவதையும்தான் இதனுடன் தொடர்புடையதாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

வள்ளுவரின், "மெய்ப்பொருள் காண்பதறிவு' என்ற வாய்மொழிக்கு இணங்க, "கரணம் தப்பினால் மரணம்' என்பதற்கு இலக்கியப் பூர்வமான மெய்ப்பொருள் ஒன்று உள்ளது. "கரணம்' என்ற சொல்லுக்கு "வதுவைச் சடங்கு' என்று பொருள். அதாவது, பெண்ணுக்கு உரிய சிறப்பாகிய வரைவு அல்லது திருமணச் சடங்கு என்பது பொருள்.


களவு காலத்தில் "நின்னைக் கைவிடேன், மணந்து கொள்கிறேன்' என்று உறுதியளித்து இன்பம் துய்த்தத் தலைவன், தன்னிலை மாறி, தலைவியை மறந்துவிடுவதும் உண்டு. அவ்வாறு தலைவனால் ஏமாற்றப்பட்ட தலைவி, தம் அய்யரிடம் (அய்யர்-தம் வீட்டுப் பெரியவர்களாகிய தாய்-தந்தை, நற்றாய், செவிலித்தாய் மற்றும் சுற்றத்தாரைக் குறிக்கும்) சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தம் உயிரை மாய்த்துக் கொள்ளும் சூழல் உருவாகிவிடும். இதனைத்தான் "கரணம் (திருமணம்) தப்பினால் மரணம்' என்ற சொல்வழக்கு பிற்காலத்தில் பொருள் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

 "கற்பு' என்ற ஒன்றிற்காக பயந்த காலம் சங்ககாலம். ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. சங்ககாலத்துக்கு முன் காலத்தில் திருமணம் (கரணம்) என்ற சடங்கே நிகழாமல் களவு மணத்துடன் மட்டுமே இருந்துவிடும் நிலைமை இருந்த காலத்தில், தற்பொழுது உள்ளதுபோல சில கயவர்களும் அக்காலத்திலும் இருந்துள்ளனர். பல பெண்கள் அதனால் பாதிக்கப்பட்டதை உணர்ந்த பெரியவர்கள், பல்லோரும் அறிய, ஆடவரும் பெண்டிரும் திருமணம் செய்தால்தான் நல்லது என்ற காரணத்தை முன்னிட்டு, கரணம் என்ற வதுவைச் சடங்கை ஏற்படுத்தினார்கள் என்ற உண்மையை இடைச்சங்க காலத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம்,

 ""பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
 ஐயர் யாத்தனர் கரண் என்ப''

என்று கூறுவதன் மூலம் நன்கு புலனாகிறது. ஒரு பெண்ணுக்கு ஆடவனுடன் திருமணம் என்பது ஒரு சடங்குதான். ஒருத்தி, ஒருவனை நினைத்துவிட்டாலே உள்ளத்தளவில் திருமணம் (மணம் புரிந்ததாகவே) ஆகிவிட்டதாகவே பொருள்.

கலித்தொகை, முல்லைக்கலியில் ஒரு தலைவி,
 ""விரிநீர் உடுக்கை வியனுலகம் பெறினும்
 அருநெறி கண்ட ஆய மகளிருக்கு
 இருமணம் கூடுதல் இல் இயல்பன்றே''

என்று கூறுவதன் மூலம், "நினைத்தாலே போதும் அதுவே கரணத்துக்கு ஒப்பு' என்னும் கருத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். கண்ட மாத்திரத்தில் உள்ளத்தளவில் கரணம் செய்து கொள்வதைத்தான் சங்க இலக்கியம், "உள்ளப் புணர்ச்சி' அல்லது "தெய்வப் புணர்ச்சி' என்று கூறியுள்ளது. ஆனால், இது தலைவியிடம் மட்டும் நிகழும் ஒன்று.

இதிலிருந்து, தமிழர்களின் திருமணம் பற்றிய நுட்பமான உண்மை தெளிவாகிறது. எல்லோரும் கூறுகிறார்கள் என்பதற்காக, எந்தவொரு சொல்லுக்கும் தவறான பொருள் கொள்ளாமல் "மெய்ப்பொருள்' காண்பது சாலச்சிறந்தது.

நன்றி - தமிழ்மணி

1 கருத்து:

prasanna சொன்னது…

ஐயா எனக்கு உபகரணம் எனும் சொல்லில் கரணம் எனும் வார்த்தையின் அர்த்தம் வேண்டும்.