ஊரை, நாட்டை, உலகத்தை அரசாளும் நல்லதோர் அமைப்பு முறைக்கு "அரசியல்' என்று பெயர். இச்சொல் அந்தப் பொருளிலிருந்து சற்றுமாறி, பொருளைப் புலப்படுத்துமாறு இன்று எல்லாத்தரப்பிலும் சொல்லப்படுகிறது. பழகும் நண்பர்களுக்குள் நம்பகத் தன்மை குறையுமானால், ""நம்மிடமே அரசியலா?'' என்பர். பொதுவாழ்வில் ஏமாற்றிப் பிழைப்போரை, ""இப்படியா அரசியல் பண்ணுவது?'' என்று கூறுவதுண்டு. ஆக ஆட்சிமுறைச் சிறப்பை உணர்த்தும் குறியீடான அரசியல், ஏமாற்றி எத்திப் பிழைக்கும் கீழறுப்புக்குரியதாகிவிட்டது வேதனைக்குரியதாகும்.
விட்டுக் கொடுத்தோ அல்லது நல்லதைப் பாராட்டவோ மனமில்லாத ஒன்றுதான் இந்த இழிநிலைக்குக் காரணம். இக்கீழ்மை உணர்வு குடும்ப ஆட்சியிலிருந்து குவலய ஆட்சிவரை விரிந்து பரந்துள்ளதற்கு ஓர் இலக்கியப் பதிவே சான்றாகும்.
கற்பொழுக்கம் கடந்த கணவன் ஒருவன், தன் மனைவியை விட்டுப்பிரிந்து பொதுமகள் ஒருத்தியின் இன்பம் நுகர்ந்து வீடு திரும்புகிறான். அவனை மனைவி ஏற்க மறுத்ததால், அவன் தன் மனைவியின் தோழி மூலம் தன்னை ஏற்க முயற்சித்தபோது அவளும் மறுத்துரைப்பதாக அகநானூற்றுப் பாடலொன்றில் அக்கால அரசியல் பண்பு உவமையாகச் சுட்டப்பட்டுள்ளது.
தலைவனே! நீ, முந்தைய நாள் உன் மனைவி வருந்துமாறு பரத்தையை நாடிச் சென்றாய். அப்பரத்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அம் மகிழ்ச்சி உன் தலைவியை ஏளனம் செய்வதாக அமைந்துவிட்டது. கணவனைத் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ளாதவள் எனப் பரத்தை உன் மனைவியைச் சொல்லாமல் சொல்லிப் பழித்து மகிழ்வதாக உள்ளது எனத் தோழி மறுத்துரைத்தாள். இக்கூற்றில் தலைவன் பரத்தையிடம் சென்றதால் மனைவி வருந்த, பரத்தை மகிழ்ந்தாள் என்ற செய்திதான் அரசியலுக்கான பண்பை உணர்த்துவதாக நக்கீரரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாண்டிய மன்னன் பழையன் மாறனை, சோழமன்னன் கிள்ளிவளவன் போரில் வெற்றி பெற்றதால், சோழன் அடைந்த மகிழ்ச்சியைவிடப் போர் புரியாத சேரமன்னன் கோதைமார்பன் பெருமகிழ்ச்சி அடைந்தானாம்.
வெற்றிபெற்ற சோழனது மகிழ்ச்சியினும் போரே புரியாத சேரன் மகிழ்ச்சி அடைந்ததற்குக் காரணம், முன்பு நடந்த போரில் பாண்டியன் வெற்றிபெற்று மகிழ்ந்தபோது சேரன் தோல்வியுற்றுத் துன்பமடைந்தான். பாண்டியனை வெற்றிகொள்ள முடியாத சேரன், சோழனால், பாண்டியன் தோல்வி அடைந்தபோது மகிழ்கிறான்.
சேரனுக்கும் சோழனுக்கும் பாண்டியன் பொது எதிரியானாலும் தன்னால் தோற்கடிக்க முடியாதவன் இன்னொருவனால் தோற்கடிக்கப்படும்போது, தான் தோற்கடித்ததாகக் கருதும் மனநிலையைத்தான் அரசியல் அவலம் எனலாம். இயல்பான இல்லற இன்பத்தை அடைய வேண்டிய தலைவி வருந்துகிறாள். உரிமையில்லாத ஒருத்தி பெருமகிழ்வடைகிறாள்.
""எம்மனை வாரா யாகி, முன்நாள்
நம்மனை சேர்ந்த ஞான்றை, அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள்; நெடுந்தேர்
இழையணி யானைப் பழையன் மாறன்
மாடமலி மறுகின் கூடல் ஆங்கண்
வெள்ளத் தானையொடு வேறு புலத்திறுத்த
கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி
ஏதில் மன்னர் ஊர்கொள,
கோதை மார்பன் உவகையின் பெரிதே!'' (அக.346)
தோழி தலைமகனுக்கு வாயில் மறுத்ததாகக் கூறும் இப்பாடலில், கூட்டணி அரசியலின் அவலத்துளிர்ப்பைக் காணமுடிகிறது. போரிட்டு வெற்றிபெற்றவன் அடையும் மகிழ்ச்சியினும் போரிடாதவன் அடையும் மகிழ்ச்சி இரட்டிப்பாக உள்ளது. தான் வெற்றி அடைவதினும் எதிரியின் தோல்வியில் மகிழ்ச்சியைத் தேடும் அவலம்தான் இப்பாடலில் கொடிகட்டிப் பறக்கிறது. அதாவது, வெற்றிபெற்ற சோழனை வாழ்த்தி மகிழவேண்டிய சேரன், பாண்டியனின் தோல்விக்காகப் பெருமகிழ்வெய்துகிறான்.
இதை வேறு வகையாகவும் கூறலாம். முன்பு பாண்டியனிடம் தோல்வியடைந்தபோது பெற்ற வருத்தம் போலத்தான், சோழனிடம் தோற்ற பாண்டியனுக்கு வருத்தம் இருக்கும் எனத் தன் வருத்தத்தைப் பாண்டியன் வருத்தத்தோடு ஒத்திட்டுப் பார்க்கும் வாய்ப்பிருந்தும் அதற்கு மாறாகப் பாண்டியனின் தோல்விக்குச் சேரனின் மகிழ்ச்சியே பெரிதாக இருந்ததென்பதுதான் வேதனைக்குரியது.
இம்மகிழ்ச்சி, பழிக்கான பழியைத் தன்னால் செய்ய முடியாவிட்டாலும் இன்னொருவனால் முடிந்ததே என்னும் கீழமை, அற்ப அரசியலின் மகிழ்ச்சியாகத் தோன்றுகிறது. கீழறுப்பான இந்த அற்ப மகிழ்ச்சி அன்றுமட்டுமன்று இன்றும் தொடர்வதால்தான் கூட்டணிக் கட்சிகள் கால்மாறி ஆடிக்களிக்கின்றன.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள்