கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 33 : தமிழ்மொழி அமைப்பு!

 கா.சுப்பிரமணிய பிள்ளை

திராவிட மொழிகள்

இந்தியாவில் வழங்கும் மொழிகளுள் பல திராவிட குடும்பத்தைச் சார்ந்தவை. ஆரிய குடும்பத்தைச் சேர்ந்தவையுள்ளும் பல மொழிகள் திராவிட இலக்கணப் போக்கைத் தழுவியுள்ளன. ஆதலால், இந்தியாவில் பெரும்பான்மையும் திராவிடச் சார்புடைய மொழிகளே பேசப்படுகின்றன. இந்திய மக்களுள் பெரும்பான்மையோரும் திராவிட உடற்கூறு உடையவர்களே.
திராவிடர்களே தென்னிந்தியாவின் பண்டை மக்கள். அதற்கு மாறான கொள்கைக்குத்தக்க சான்றில்லை. "மண்டர்' மொழி பேசுவோர் மங்கோலியக் கலப்புடைய திராவிடரே. பெலிசிஸ்தானத்தில் "பிராகுயி' மொழியை ஆதியிற் பேசியவர் திராவிடரே. வங்காளத்தில் இராஜமகால் மலைச்சாரலில், பண்டை நிலையில் திராவிட மக்கள் வாழ்கின்றார்கள். ஐதரேயப் பிராம்மணத்தில், ஆந்திரர், சபரர் முதலியோர் விசுவாமித்திரர் வழிவந்தோராகப் பேசப்படுகின்றனர். மனு நூலில் திராவிடர், க்ஷத்திரியருட் பதிதர் என்று பேசப்படுகிறது. அவ்வாறே மகாபாரதத்திலும் கூறப்படுகிறது. பாகவதம் ஸ்கந்தம் 8, அத்தியாயம் 24, சுலோகம் 13-இல் "இந்திய நோவோ'வாகிய சத்தியவிரதன் என்பான் திராவிடத் தலைவன் என்று அழைக்கப்படுகிறான். "திராவிடர்' என்ற சொல், கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டவரான "மிசிர'ருடைய "பிருகச்சம்மிதை'யிற் காணப்படுகிறது.


திராவிடர் என்ற சொல் தமிழ் நாட்டைக் குறிப்பதற்கு, வான்மீகி இராமாயணம் பயன்படுகின்றது. குமரிலபட்டர் என்பார் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் திராவிடம் என்ற சொல்லைத் தமிழ் மொழியைக் குறிக்கவே வழங்கினர். "ஆந்திர-திராவிட பாஷைகள்' என்பது அவர் வாக்கியம். தமிழ் நாட்டைக் குறிக்கும் அச்சொல் ஒடி வளைந்துள்ளதென்று பொருள்படும் என்ப.
"திரமிளேசுரன்' என்ற சொல் மச்சபுராணத்துள் ஒரு தமிழ் மன்னனைக் குறிப்பதாம். தாரநாத் என்பவர் 1573-இல் எழுதிய புத்தமத நூலில் "திரமில்' என்ற சொல் தமிழைக் குறிக்கின்றது. "பஞ்சத் திராவிடர்' என்ற சொல் தென்னாட்டுப் பிராம்மணரைக் குறித்ததென்ப. போர்த்துக்சேசியர் 1577-இல் தமிழை "மலபார்' என்ற சொல்லாற் குறித்தல், பாலி பாஷையில் எழுதப்பட்ட மகாவமிசத்தில் "தமிழோ' என்ற சொல் பயன்படுகிறது. கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் தமிழ் நாட்டை "தமிரிசி' என்ற சொல்லாற் குறித்தார். அக்காலத்தில் இந்தியாவின் மூன்று பிரிவுகளில் ஒன்றாகத் தமிழகம் கருதப்பட்டது.

மேலைநாட்டுப் புலவர்களுள் தமிழறியாத கோல்புருக் என்பவரே "தமிழ் பிராகிருத மொழிகளுள் ஒன்று' என்ற கருத்தைத் தழுவினார். தமிழும் வடமொழியும் வேறு வேறிலக்கணமுடையன என்பதை ஆசிரியர் சிவஞான யோகிகளும் பிறரும் செவ்விதினுரைத்தனர். தமிழ் நூல்களிலே வடமொழிக் கலப்பு மதிப்புப் பெறுவதில்லை. அஃதில்லாமையே நூலுக்குச் சிறப்பு. பாட்டுக்களிலும் பாமரர் பேச்சிலும் "தனித்தமிழ்' மொழியே மிகுதியும் காணப்படும். சமய நூல்களிலே பிற்காலத்தில் வடமொழி மிகுதி பயில்வதாயிற்று.

திராவிட மொழிகளினின்று நீர், மீன் போன்ற பல சொற்களை வடமொழி பெற்றிருக்கிற தென்பதைப் பலர் அறிவதில்லை. திராவிட மொழிக்கும் வடமொழிக்கும் உள்ள வேறுபாடுகளிற் சில வருமாறு:
வடமொழியில் ஆண், பெண், அலி என்ற பகுப்பு சொல்லைப் பொறுத்தது. பாஷாணம் (கல்) ஆண்பால், சிலை (கல்) பெண்பால், தாரம் (மனைவி) அலிப்பால், திராவிட மொழியில் பகுத்தறிவு இல்லாதனவும், உயிரில்லாதனவும் அஃறிணைப்பாலன.

வடமொழியில், ஒருமை, இருமை, பன்மை என்ற முப்பகுதியுள்ளன. ஒருமை, பன்மையே தமிழிலுள்ளன.திராவிட மொழியில் பின்னசைச் சொற்களே உருபு மாறாது வேற்றுமை குறிப்பன. உருபுகளும் விகுதிகளும் ஒருமைக்கும் பன்மைக்கும் ஓரினத்தனவே. வடமொழியில், வேற்றுமை தோறும் உருபுகள் வேறாய், பெயர்களோடு உட்பிணைந்து நிற்பன. வடமொழியைப்போல, தமிழில் உரிச்சொற்களுக்குத் திணைபால் உருபுகள் இணைக்கப்படுவனவல்ல. திராவிடத்தைப்போல உடன்பாடும், எதிர்மறையும், வினையின் பகுதிகளாக அமைதல் வடமொழியிலில்லை. திராவிடத்தில், தொடர்சுட்டு (ரிலேட்டிவ் பாஃம்) என்பது கிடையாது.

திராவிடத்தில் தழுவுஞ்சொல் முடியுஞ் சொல்லுக்கு முன் நிற்கும். அது, ஆரிய மொழிகளிற் பின்னிற்றலுண்டு. வடமொழியின் உதவியின்றித் திகழக்கூடிய திராவிட மொழிகளிற் சிறந்தது தமிழே யென்பது டாக்டர் "கால்டுவெல்'லின் கொள்கையாகும்.

தமிழர் வடநாடெங்கும் பரவியிருந்தனர். சிந்துநதிக் கரையிலிருந்த ஒரு சாதியார் சூத்திரர் எனப்பட்டனர். ஆரியர் முதலில் வென்றனர். சூத்திரர் என்பது அடிமைப்பட்ட சாதியார்க்குப் பெயராகப் பிற்காலத்தில் வழங்குவதாயிற்று. அடிமைப்பட்ட வரைச் சூத்திரரென்றும், அடிமைப்படாத எதிரிகளைத் தாசியுக்களென்றும், ஆரியர் வழங்கினரென்பது டாக்டர் "கால்டுவெல்'லின் கொள்கை. ஆரியரல்லாத திராவிடரைச் சூத்திரரென்றல், பிற்காலத்தில் ஏற்பட்ட வழக்கமென்க.

பண்டைத் தமிழர் கடவுட் கொள்கையராய், கோயில், அரண் முதலியன உடையராய் அரசு, உழவு, போர், இசை முதலியவற்றிற் சிறந்தும், பனையோலையில் எழுத்தெழுதியும், நெய்தல் தொழில் உணர்ந்தோராய், மணவாழ்க்கை, சட்டம், மருத்துவம் அறிந்தோராய்த் திகழ்ந்தன ரென்பதும், பாண்டியரே தமிழ் நாகரிகத்தைக் கொற்கையில் வீற்றிருந்து வளர்த்தன ரென்பதும், அகத்தியர் முதலில் வந்த ஆரியப் பிராமணத் தலைவர் என்பதும், டாக்டர் கால்டுவெல்லின் கருத்து. அகத்தியர், பாண்டியர்க்குக் குருவாயிருந்த தமிழ் முனிவர் ஆவார். அவர் வடநாட்டிற்குச் சென்று தெற்கே திரும்பியது பற்றி அவரை ஆரியரென்பது மரபாயிற்று.

எட்வர்டு தாமஸ் என்பவர், வடநாட்டில் ஆதியில் தமிழெழுத்தே வழங்கிற்றென்றும், அதனின்றே வடநாட்டு லிபி ஏற்பட்டதென்றுங் கூறுகிறார். சிலர் மாறுபட்ட கருத்துடையர். எவ்வாறாயினும், கிரந்த எழுத்துத் தமிழ் எழுத்தின் வழித்தாக வந்ததென்பது யாரும் ஒப்புக்கொள்ளக் கூடியதே..

நன்றி - தமிழ்மணி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ