கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

தன்னை வியத்தல்! - கா.மு.சிதம்பரம்

கிரேக்க நாட்டில் ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெயர் நார்கிசோஸ். அவன் ஒருநாள் குளத்துத் தண்ணீரில் தன் உருவத்தைக் கண்டான். அதன் அழகில் மயங்கி, தன் உருவத்தையே காதலித்தான். தொடர்ந்து பலகாலம் ரசிக்கத் தொடங்கினான். அவன் இறக்கும்வரை அக்காதல் நீடித்தது. இறந்தபின் அக்குளத்தில் ஒரு மலராகவே மாறிவிட்டான். அம்மலருக்கு அவனுடைய பெயர் சூட்டப்பட்டது. உலகில் யாரெல்லாம் தங்கள் அழகை, திறமையை தாங்களே போற்றிக் கொள்கிறார்களோ, அந்தப் பண்பு, அந்த இளைஞனின் பெயரால் "நார்சிசிசம்' என்று அழைக்கப்படுகிறது' என ஆக்ஸ்போஃர்டு அகராதி கூறுகிறது.

தமிழில் அப்பண்பை, "தன்னை வியத்தல்' என்று குறிப்பிடலாம். அப்பண்பு தமிழிலக்கியத்தில் எவ்வாறு பதிவாகியுள்ளது என்பதைக் காண்போம்.

""தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்றற் புகழ்தல் தகைமை அன்றே''
என்று நன்னூலும்,

""தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் - மன்னிய
பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்
செல்வம் உடைக்கும் படை''
என்று திரிகடுகமும் (38),

தன்னை வியக்கும் பண்பு பற்றி கண்டிக்கப்பட்டிருந்தாலும், சிலநேரங்களில் அப்பண்பு வாழ்வில் தவிர்க்க முடியாததாக அமைந்துவிடுகிறது.
ஓர் அழகிய இளம்பெண் முற்றத்தில் நடந்து வருகிறாள். அம்முற்றத்தின் சுவர்கள் வெண் பளிங்கால் ஆனவை. அதில் அவளுடைய மேனி அழகு அப்படியே தெரிகிறது. அவ்வழகு அவளுக்கே ஒரு மயக்கத்தை உண்டாக்குகிறது. மீண்டும் மீண்டும் பார்த்துக் களிப்படைகிறாள். இப்பளிங்கில் தெரிகிற இவள்தான் என் தலைவனுக்கு உயிரன்னவள்; நான் அல்லள் என்றெண்ணும் அவள் கண்களில் நீர் நிரம்புகிறது. அதை விளக்கும் கம்பராமாயணப் பாடல்:

""மெய்ப்போதின் தங்கைக்கு அணியன்னவள் வெண்பளிங்கில்
பொய்ப்போது தாங்கிப் பொலிகின்ற தன்மேனி நோக்கி
இப்பாவை எம்கோக்கு உயிரன்னவள் என்னஉன்னி
கைப்போதினோடும் நெடுங்கண் பணிசோர நின்றாள்''
(கம்ப-பூக்கொய் படலம்-13)

மங்கை ஒருத்தி தன்னைப் பலவகையிலும் ஒப்பனை செய்துகொள்கிறாள். அவளது சேடி ஒரு கண்ணாடியை எடுத்து அவள் முன் காட்டுகிறாள். கண்ணாடியில் தன் அழகைப் பார்த்த அம்மங்கை ""என்னை எனக்கே அடையாளம் தெரியவில்லையே'' என்று கூறி வியப்படைகிறாள்.

""சேடியர்
காட்டும் படிமக் கலத்துக் கமலத்தை
ஓட்டும் வதனத்து ஒளிமலர்ந்து
...... ...... ......
முன்னை வடிவும் இழந்தேன் முகநோக்கி
என்னை அறிகலன்யான் என்செய்கேன்!''
(மூவருலா-1:170-71, 180-81)

இளமையும் எழிலும் நிறைந்த பெண் ஒருத்தி தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். இறுகும் வழி இறுகவும், நெகிழும் வழி நெகிழவும் கூடிய வகையில் கச்சினால்(கச்சை) தன் கொங்கைகளைக் கட்டுகிறாள். பிறகு அவற்றின் மேல் ஒரு துகிலை இட்டு மறைக்கிறாள். இக்காட்சியைக் காணும் எவருக்கும், கொங்கைகளை மறைப்பதற்கு கச்சு, துகில் ஆகியவற்றுள் ஒன்று போதுமே, இரண்டு எதற்கு என்ற ஓர் ஐயம் தோன்றும். இதுவரை அந்த ஐயத்துக்குத் தீர்வு ஒரு புலவருக்குத்தான் தெரிந்திருக்கிறது. அவர் கண்டுரைத்த விளக்கம்,

""மகளிர் தம் கொங்கைகளைக் கச்சிட்டு
மறைப்பது தான் காணாது இருக்க; துகிலிட்டு
மறைப்பது பிறர் காணாது இருக்க''
(தக்கயாகபரணி-83 உரை) என்பதுதான். தன் உறுப்புகளைத் தானே கண்டு மகிழ்தல் தன்னை வியத்தல் என்னும் பண்பின்பாற்படும்.

பெண்கள் மட்டுமன்றி, ஆண்களும் தம் அழகைக் கண்ணாடியில் கண்டு மகிழ்ந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. சோழ மன்னன் இராஜராஜன் திருவீதி உலா செல்லப் புறப்படுகிறான். தன் அலங்காரத்தைக் கண்ணாடியில் காண்கிறான். அது, அவன் தனக்குச் செய்துகொண்ட அலங்காரமாக அவனுக்குத் தெரியவில்லை. ஊரில் உள்ள பெண்களின் உள்ளங்களின் மேல் தான் தொடுக்கப்போகும் போருக்கு முன் மன்மதன் தன்னைத் தயார்செய்து கொள்ளும் ஒரு போர்க்கோலமாகவே அவனுக்குத் தெரிகிறது.

""குவளைப் பூங்
கார்க்கோலம் ஆடியிற் காண்பான் மகன்காமன்
போர்க்கோலம் காண்பானே போற்கண்டு''
(மூவருலா-3:46)

தன்னை வியக்கும் பண்புக்குப் பெண், ஆண், துறவி யாரும் விலக்கல்லர், கடவுளே இப்பண்பை உடையவராக இருந்தார் என்பதிலிருந்து அதன் பாதிப்பை அறிய முடிகிறது. திருவையாறு சிவாலயத்தில் உள்ள சிவபெருமானும், மதுரையில் உள்ள "இம்மையில் வரந் தருவார்' கோயிலில் உள்ள சிவபெருமானும் தன்னைத் தானே வழிபடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இவை எல்லாவற்றையும்விட, கி.பி. 2010-இல் தைவான் நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி தன்னை வியத்தல் என்னும் பண்பின் உச்சகட்டமாகத் திகழ்கிறது. சென்-வெய்-யுயி என்னும் முப்பது வயதுப் பெண்மணி, தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர் முன்னிலையில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டாராம்.

""சுய திருமணம் செய்துகொண்டதால், மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறேன். மற்றவர்களை நேசிக்கும் முன் நம்மை நாமே நேசிப்பது மிகவும் முக்கியம்'' என்று அப்பெண்மணி கூறியிருக்கிறார். இனி, தன்னை வியக்கும் பண்பை "சென்-வெய்-யுயியிசம்' என்று அழைத்தாலும் வியப்பதற்கில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ