உலகம் புகழ உயர்வுற உயர்ந்த தமிழ் என்னும் அமுதத் தமிழ் மொழியை விரித்தும், தொகுத்தும், விளக்கிய தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும், திருக்குறள் முதலிய அறநெறி இலக்கிய நூல்களும், கணக்கதிகாரம், ஏரம்பம் முதலிய கணித நூல்களும் மனிதன் எண்ணத் தெரிந்த காலம் முதல், தொன்றுதொட்டு வழங்கி வந்ததைத் தமிழ்கூறும் நல்லுலகம் உணர்ந்தும் உணர்த்தியும் வந்திருக்கிறது.
மனிதனின் மனநிலையை அடிப்படையாகக்கொண்டு கண்டும் கேட்டும் உணர்வதற்கு ஐம்பொறிகளுள் கண்ணும் செவியும் முதற்கருவியாக விளங்குகின்றன. ""கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும், உணர்வுடை மாந்தர்க்கு அல்லது நகை முதலிய சுவையின் நயம் தெரிய முடியாதென்று'' தொல்காப்பியர், மனநிலையின் இன்றியமையாமையை வற்புறுத்தி இருப்பதிலிருந்து தெளிவாக விளங்கும். அவ்விரு பொறிகளுள் கட்பொறி தலையாயது என்பதை, ""கண்ணில் சிறந்த உறுப்பில்லை'' என்ற தொடரும், ""கண்களே சொல்லும் வாய்திறந்தே'' என்ற தொடரும் மனிதருக்கு கண்கள் இன்றியமையாதன என்பதை வலியுறுத்தும். ""கண்ணுடையரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையவர் கல்லாதர் (393)'' என்ற திருக்குறட்பாவும், கண், கண்மணி, கண்பாவை முதலிய கண்ணின் உறுப்புகளை ""கருமணியிற் பாவாய் (1123)'' என்ற தொடரும் குறிப்பிடும். ஆனால், வாழும் உயிர்க்கு கண்கள் எனப்படுபவை "எண்ணும் எழுத்தும்' என வள்ளுவர் கூறியுள்ளார்.
இங்கு "எண்' என்பது கணிதம்; இது தமிழ்க் கணக்கைக் குறிக்கிறது. "எழுத்து' என்பது தமிழ் எழுத்து; இது தமிழ் இலக்கண இலக்கியங்களைக் குறிக்கிறது. இவ்விருவகை நூல்களையும் மக்களுள், உணர்வு மிகுதியுடையார் விரும்பிக்கற்றல் வேண்டும்.
பண்டைத் தமிழ் அரசர்கள், தமிழ்க்கணக்கையே அடிப்படையாகக்கொண்டு ஆட்சிநடத்தி வந்தனர். 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழ்க்கணக்கின் ஆட்சிமுறை இருந்தது. ஏன்? 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இம்முறை நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
தமிழ்க்கணிதத்தில் ஒன்றுக்குக், கீழ் முந்திரி வரையில் உள்ள கீழ் எண்களுக்கு உருவங்களும், நெல் முதலிய தானியங்களின் அளவுகளைக் குறிக்கும் எண்களுக்குத் தனி உருவங்களும் இருந்திருக்கின்றன.
இலக்கம்:
இது முந்திரி இலக்கம், நெல் இலக்கம் என இருவகைப்படும். முந்திரி இலக்கத்தில், முந்திரி முதல் 1 வரை உள்ள கீழ் எண்களும், ஒன்று முதல் தாமரை வரை உள்ள மேல் எண்களும் எழுதப்பட்டிருக்கும். முந்திரிக்குக் கீழ்ப்பட்ட எண்களும் உண்டு. முந்திரிக்கு, முந்திரி, கீழ்முந்திரி என்றபடி முந்திரியில் 320-இல் ஒரு பங்கு கீழ் முந்திரி எனப்படும். இக்கீழ் முந்திரிக்கு கீழே "இம்மி' என்று ஒன்றுண்டு. இம்மி 101/2 கொண்டது கீழ்முந்திரியாகும். முந்திரி 320 கொண்டது ஒன்றாகும். எனவே, 101/2 320 320, 10, 75, 200 இம்மி கொண்டது ஒன்று. அதேபோல் நெல் இலக்கத்திலே சோடு முதல் கலம் வரையில் உள்ள சிற்றெண்களும், கலத்திற்கு மேற்பட்ட, வரை கரிசை, பாரம் முதலியனவும் காட்டப்பட்டிருக்கும். இவ்வெண்கள் நெல் முதலிய தானியங்களை முகந்து அளப்பதற்கு உபயோகம் ஆகும். பண்ணையார்களின் களநடை குறிப்பு முதலிய நெற்கணக்குகளுக்கும், தானிய வணிகர்களின் கணக்குகளுக்கும் இவ்வெண்களையே பயன்படுத்தினர்.
சிற்றெண் முந்திரி இலக்கத்திற்கு உள்ளதுபோலவே, நெல் இலக்கத்திற்கும் விரிவாய் உண்டு. மேற்சொன்ன இருவகை இலக்கங்களும், தமிழ்க் கணிதத்திற்கு கருவி நூல்களாகும். இச்செய்தியை, "எண்ணென்ப' என்ற குறளும் பரிமேலழகர் உரையும் நன்கு விளக்கும்.
எண் சுவடி:
இது 30 வாய்களை உடையது.
""நெடுமால் திருமருகா நித்தன் மதலாய்
கொடுமால் வினையகற்றும் குன்றே - தடுமாறாது
எண்முப் பதுவாயும் என்சித்தத் தேநிற்கப்
பண்ணுத் தமனே பரிந்து''
என்னும் காப்புச் செய்யுளைத் தலைப்பாகக்கொண்டு தொடங்கப்படும். இம் 30 வாய்களும், முதற் பத்தி வாய்கள் பேரெண்களின் பெருக்கல்களைக் குறிக்கின்றன. அப்பாலுள்ள பதினைந்து வாய்களும் முந்திரி, அரைக்காணி, காணி, அரைமா, முக்காணி, ஒருமா, மாகாணி, இருமா, அரைகால், மும்மா, மூன்று வீசம், நாலுமா, கால், அரை, முக்கால் என்கிற சிற்றெண்களைக் குறித்தவை. இவற்றின் பின்னுள்ள நாழி, குறுணி, தூணி, கலம் என்ற நான்கும் நெல்லிலக்கத்தின் பெருக்கல்களைக் குறிக்கும். ஈற்றில் உள்ள சதுரவாய் நிலஅளவைக் குறித்து நின்று மனைகள் சதுரிப்பதற்குப் பயன்படும்.
எண் சுவடிக்குப் பிறகு கீழ்வாய், குழிமாற்று என்னும் 2 சுவடிகளும் கணக்கதிகாரம், ஏரம்பம் முதலிய நூல்களும் உண்டு. இவற்றுள் கீழ்வாய் இலக்கம் என்பதில், ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண்களின் பெருக்கல் வாய்ப்பாடு கூறப்படும். குழிமாற்று என்பது நில அளவைக் குறிக்கிறது. கணக்கதிகாரம் என்னும் நூல் செய்யுள் வடிவமானது. இதில் பொன், இதர பொருள்கள் எண்ணை முதலியவற்றின் நிறை அளவை முதலின கணக்கிட்டுத் தரும் வகைகள் காட்டப்பட்டிருக்கும். இக்காலத்தில் காணாமல் போய்விட்டன.
சிற்றூர் பள்ளிகளில் கணித வகையில் இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, கீழ்வாய் இலக்கம், குழிமாற்று என்னும் சுவடிகளோடு நிறுத்தி, இவற்றைப் பயன்படுத்தும் முறைகளைப் பேர்க்கணக்கு, சேவித்தான் கணக்கு, வட்டிக்கணக்கு முதலிய கணக்குகளைக்கொண்டு ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பார்கள். இவ்வாசிரியர்கள் "கணக்காயர்' என்று பெயர் பெற்று விளங்கினார்கள். எண், எழுத்து என்னும் இரண்டையும் முற்றும் கற்றும், பிறருக்கு உரைத்தும் விளங்கிய ஆசிரியர் "பேராசிரியர்' எனப் போற்றப்பட்டார்.
தமிழ்மொழிப் பயிற்சியில் புகுந்து கணிதமும், இலக்கணங்களும் கற்றுத்தேறி, அகக்கண் உடையவரானவர்கள் அவ்விரண்டையும் கருவியாக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடு என்ற இவற்றின் திறம் கண்டு, தான் கண்டவற்றை அரசர் முதலியவர்களுக்குக் காட்டி விளக்கினார்கள். அவை, அவர்கள் செய்த நூல்களால் விளங்குகின்றன.
இவ்வாறாக, தமிழ் மொழியின் கண்களாக விளங்குபவை எண்ணும், எழுத்தும் ஆகும். பண்டைக் காலத்தில் ஒளியோடு விளங்கிய இவ்விரு கண்களும் 19-ஆம் நூற்றாண்டு இறுதியில் பாதுகாப்பின்றி ஒளி மழுங்கி வருவதை நினைத்து வருந்திய பாண்டித்துரைத் தேவர், நான்காம் தமிழ்ச் சங்கம் கண்டு அவ்விரு பேரொளியையும் உலகில் ஒளிரச் செய்தார். அதைத் தொடர்ந்து நடத்திய தமிழவேள் பி.டி.இராசன், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் வாயிலாக வேண்டிக்கொண்டபடி, செந்தமிழ்க் கல்லூரி தொடங்கி எழுத்தாகிய இலக்கிய, இலக்கணத்தைப் பரப்பினார். ஆனால் இன்று, தமிழ்க்கணித நூல்களைப் பற்றிக் கவனிப்பார் இல்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தியாகும்.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள்