25/03/2012

திருக்குறள் - சாமி. சிதம்பரனார்

திருக்குறள் மாண்பு

திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர்; பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களிலே தலைசிறந்து விளங்குவது திருக்குறள். இந்நூல் வரிசையால்
முப்பால் என்ற பெயரால் திருக்குறள் குறிக்கப்பட்டிருகின்றது; இந்நூல்
வரிசையிலே முதலில் தோன்றியது திருக்குறள். பதினெண் கீழ்க்கணக்கில்
உள்ள, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நான்மணிக் கடிகை, திரிகடுகம்,
ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, பழமொழி, நாலடியார் ஆகியவைகள் எல்லாம்
திருக்குறளுக்குப் பின் தோன்றிய நூல்களாகத்தான் இருக்க வேண்டும்.
திருக்குறளின் கருத்துக்கள் பல இந்நூல்களிலே காணப்படுகின்றன.

இன்று தமிழில் உள்ள நூல்களிலேயே திருக்குறள்தான் உலகப்
புகழ்பெற்ற நூலாக விளங்குகின்றது. உலக மக்கள் அனைவரும்
திருக்குறளைப் போற்றுகின்றனர். அதில் உள்ள உயர்ந்த கருத்துக்களைப்
பாராட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய
திருக்குறளில் உள்ள பல அறங்கள் இன்றைக்கும் பொருந்துவனவாயிருப்பது
இதற்கொரு காரணம்.


அன்றியும் திருக்குறளின் பெருமைக்கு மற்றொரு சிறந்த காரணம்
உண்டு. இந்நூலிலே கூறப்படும் கருத்துக்கள் உலக மக்கள் அனைவரும்
ஒத்துக்கொள்ளக் கூடியவை. இந்நூல் குறிப்பிட்ட ஒரு மதத்தினர்க்கோ ஒரு
இனத்தினர்க்கோ, ஒரு நாட்டினர்க்கோ, ஒரு மொழியினர்க்கோ என்று செய்யப்படவில்லை. மனித சமூகம் முழுவதற்கும்-உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவாகச் செய்யப்பட்டதாகும். இதனாலேயே இன்று திருக்குறள் உலகப் பொதுநூல் என்று கொண்டாடும்படி சிறந்து விளங்குகின்றது.

தமிழிலே முதன் முதல் தோன்றிய நீதி நூல் திருக்குறள் தான்.
வடமொழியிலே ஸ்மிருதிகள் பல உண்டு. அவைகள் மக்கள் இன்னின்ன
காரியங்களைச் செய்ய வேண்டும்; இன்னின்ன காரியங்களைச்
செய்யக்கூடாது; என்று கட்டளையிடுகின்றன. அந்நூல்களிலே, இல்லறத்தான்  கடமை, துறவிகளின் கடமை, அரசியல் அறங்கள், முதலியவைகள் கூறப்படுகின்றன. அவைபோன்ற நூல் தமிழிலே திருக்குறளுக்கு முன் ஒன்றேனும் இல்லை.

திருக்குறளை வடமொழியிலே ஸ்மிருதிகளுக்கு ஒப்பிடலாம். ஆனால்
ஒருவகையிலே அவைகளை விட உயர்ந்து நிற்கின்றது திருக்குறள்.
ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள்அனைத்தும் வருணாஸ்ரம தர்மத்தை
அடிப்படையாகக் கொண்டவை. சாதிக்கொரு நீதி கூறுவன.
திருக்குறளோ மனித சமுதாயத்தை ஒன்றெனக் கருதி, மக்கள்
அனைவர்க்கும் பொதுவான நீதிகளையே கூறுகின்றது. இதுதான்
திருக்குறளுக்குள்ள தனிச்சிறப்பு.

திருக்குறளின் மாண்பைக் காட்ட அதற்கு அமைந்திருக்கும் பெயர்களே
போதும். திருக்குறளுக்கு ஒன்பது பெயர்கள் அமைந்திருக்கின்றன. வேறு
எந்த அறநூல்களுக்கும் இத்தனை பெயர்கள் இல்லை.

1. திருக்குறள். 2. உத்தர வேதம் 3. திருவள்ளுவர், 4. பொய்யாமொழி,
5. வாயுரை வாழ்த்து, 6. தெய்வ நூல், 7. பொதுமறை. 8.முப்பால், 9. தமழ் மறை
இவைகளே திருக்குறளைக் குறிக்கும் ஒன்பது பெயர்கள்.

 ‘‘சீரார் திருக்குறள், உத்தர
வேதம், திருவள்ளுவர்,
பேரார் பொய் யாமொழி,
வாயுறை வாழ்த்துப், பெருந் தெய்வநூல்,
ஊரார் பொதுமறை, முப்பால்,
தமிழ் மறை, ஒன்பதும் நல்
காராளர் கற்றுணர் செய்யுட்கு
நாமங்கள் கார்குழலே

இப்பழம் பாட்டினால் அவ்வொன்பது பெயர்களையும் காணலாம்.

திருக்குறள் அமைப்பு

திருக்குறள், குறள் வெண்பாக்களால் அமைந்தது. இரண்டே அடிகளால்
அமைந்த ஒருவகை வெண்பாவுக்குக் குறள் வெண்பா என்று பெயர். பெரிய
செய்யுட்களைவிடச் சிறிய செய்யுட்கள் மக்கள் மனத்திலே அப்படியே
ஒட்டிக்கொள்ளும். ஆதலால்தான், மக்கள் பின்பற்றி நடக்க வேண்டிய
நல்லுரைகளை நவில வந்த வள்ளுவர், சிறிய குறள் வெண்பாக்களால் தமது
நூலை இயற்றினார். இதுவே அவரது உயர்ந்த அறிவுக்கு ஒரு
எடுத்துக்காட்டு.

திருக்குறளிலே ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்கள்
அமைந்திருக்கின்றன. இவைகள் பத்துப் பத்துப் பாடல்களாகப்
பிரிக்கப்பட்டிருக்கின்றன. பத்துப் பாடல்கள் கொண்டது ஒரு அதிகாரம்.
அவைகள் நூற்று முப்பத்துமூன்று அதிகாரங்களாகக் காட்சியளிக்கின்றன.
ஒவ்வொரு அதிகாரத்திற்குத் தலைப் பெயர்கள் உண்டு. 1. கடவுள் வாழ்த்து,
2. வான் சிறப்பு. 3. நீத்தார் பெருமை, 4. அறன் வலியுறுத்தல்,
5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் துணை நலம், 7. மக்கட்பேறு,
8. அன்புடைமை’’ என்று இவ்வாறு 133 அதிகாரங்களுக்கும் தலைப்
பெயர்கள் உண்டு.

திருக்குறள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது.
இதனால்தான் இதற்கு முப்பால் என்று பெயர். முதற் பகுதி அறத்துப்பால்,
இதில் இல்லறம், துறவறம் இரண்டைப் பற்றியும் முப்பத்தெட்டு
அதிகாரங்களில் கூறப்படுகின்றன.

இரண்டாவது பகுதி பொருட்பால், இதிலே, அரசாள்வோர்க்கு வேண்டிய
தகுதிகள்; அமைச்சருக்கு வேண்டிய தகுதிகள்; அரசாங்கத்திற்கு வேண்டிய
அங்கங்கள்; பொருளீட்ட வேண்டிய முறை; அரசாட்சியின் கடமை;
குடிமக்களின் கடமை; ஆகிய அனைத்தும் வலியுறுத்தப்படுகின்றன. எழுபது
அதிகாரங்களில் இச்செய்திகள் கூறப்படுகின்றன.

மூன்றாவது பகுதி காமத்துப்பால், இதிலே பண்டைத் தமிழர்களின்
குடும்ப வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறப்படுகின்றது. ஒரு ஆணும்,
பெண்ணும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொள்ளுவது; அவர்கள் உள்ளம்
ஒன்றுபட்டுக் காதலனும், காதலியுமாய் மறைந்து வாழ்வது; பிறகு அவர்கள்
எல்லாரும்காண மணம் புரிந்துகொண்டு இல்லறம் நடத்துவது. இதுவே
பழந்தமிழர் வாழ்க்கை முறை. இப்பண்பாட்டையே, களவியல், கற்பியல்
என்று இரண்டு பகுதியாகப் பிரித்துக் கூறுகின்றது. காமத்துப் பாலில் உள்ள
அதிகாரங்கள் இருபத்து ஐந்து.

இவ்வாறு அமைந்துள்ள திருக்குறளிலே, வள்ளுவர் தம் காலத்திலிருந்த
எல்லாப் பொருள்களைப் பற்றியும் விளக்கியிருக்கின்றார். இவ்வுண்மையை

 எல்லாப் பொருளும் இதன் பால் உள இதன் பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்

என்று ஒரு புலவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார்.
மற்றொரு புலவர் ‘‘ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும்
படித்தால் போதும்; சிறந்த தமிழ்ப் புலவராகிவிடலாம். மற்றொருவரிடத்திலே
வேறொரு நூலையும் பாடங்கேட்க வேண்டியதில்லை’’ என்று திருக்குறளைப்
போற்றியிருக்கின்றார்.

திருக்குறளைப் போன்ற அதிகார அமைப்பும், பால் அமைப்பும்
கொண்ட நூல் திருக்குறளுக்கு முன் வேறு ஒன்றுமேயில்லை.

திருவள்ளுவர்

திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர். அவர் ஒரு மாபெரும் புலவர்;
பல நூல்களையும் கற்றறிந்தவர்; உலகச் செய்திகள் பலவற்றையும்
உணர்ந்தவர். அவர் காலத்திலிருந்த சமுதாய நிலை; அரசியல் அமைப்பு;
எல்லாவற்றையும் நன்றாக அறிந்தவர். மனித சமுதாயம் நன்றாக வாழ
வேண்டும் என்னும் அன்பும் கருணையும் உள்ளவர்; (தனித்தனி) ஆண்கள்
பெண்கள் அனைவரும் மனிதத் தன்மையுடன், ஒழுக்கங் குன்றாமல் உயர்ந்த
நிலையிலே வாழவேண்டும் என்னும் கருத்துள்ளவர்.

திருவள்ளுவருடைய பிறப்பு வளர்ப்பு வரலாற்றைப் பற்றி உறுதியாக
ஒன்றும் கூற முடியவில்லை.

யாளிதத்தன் என்னும் அந்தணன். ஒரு சண்டாளப் பெண்ணை மணந்து
திருவள்ளுவர் முதலிய எழுவரைப் பெற்றான் என்பது ஒரு கதை. இது
ஞானாமிர்தம் என்னும் நூலில்காணப்படுகின்றது.

பகவன் என்னும் அந்தணன். ஆதி என்னும் புலைச்சியை மணந்தான்.
அவர்கள் யாத்திரை போகும்போது வழியிலேயே ஆதி ஏழு மக்களைப்
பெற்றாள். ஒவ்வொருபிள்ளையையும் பிறந்தவிடத்திலே அப்படி அப்படியே போட்டுவிட்டு ஆதியும், பகவனும்
போய்விட்டனர். அப்பிள்ளைகளைப் பார்த்தவர்கள் எடுத்து வளர்த்தனர்.
இவ்வாறு பிறந்த பிள்ளையே வள்ளுவர். அவர் மயிலாப்பூரில்
போடப்பட்டார்; ஒரு வள்ளுவன் அவரை எடுத்து வளர்த்தான். அதனால்
வள்ளுவர் என்று பெயர் பெற்றார். இது ஒரு கதை. இதற்குக் கபிலர் அகவல் என்னும் பிற்காலத்துச் சிறு நூலே ஆதாரம்.

திருவள்ளுவர் மதுரையிலிருந்தவர் என்று திருவள்ளுவ மாலையில் ஒரு
செய்யுளில் காணப்படுகின்றது.

திருவள்ளுவர், வள்ளுவர் மரபைச் சேர்ந்தவர்தான். வள்ளுவர் மரபைச்
சேர்ந்தவர் என்று இகழ்ந்துரைப்பவன் அறிவற்றவன்; அவர் அறிவாளி,
ஒழுக்கத்தால் உயர்ந்தவர் ஆதலால் அவரைப்போற்றுவதே அறிஞர் கடமை.
என்ற கருத்து திருவள்ளுவ மாலைச் செய்யுள் ஒன்றிலே காணப்படுகின்றது.

இவ்வாறு திருவள்ளுவர் வரலாற்றைப் பற்றி முரண்பட்ட கருத்துக்கள்
காணப்படுகின்றன. அவருடைய உண்மை வரலாற்றை அறிவதற்கு
இடமில்லை.

அவர் பிறப்பு வளர்ப்பு எப்படியாயினும், அவர் தமிழ்நாட்டில்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தெய்வப் புலவர் என்ற பெயர் பெற்று
வாழ்கின்றார். திருவள்ளுவரை நான்முகன் என்று போற்றியிருக்கின்றனர்.

அவரைப் பொய்யா மொழியார் என்று பாராட்டியிருக்கின்றனர்.
திருக்குறளைத் தமிழ் வேதம் என்று கொண்டாடி வருகின்றனர்.
திருக்குறளையும் பொய்யா மொழி என்று பாராட்டினர்; பாராட்டுகின்றனர்.

திருவள்ளுவர் தமிழ் நாட்டிலே பிறந்தவர்; சாதி மத பேதம்
பாராட்டாதவர்; மனித சமுதாயத்தையும், உலகையும் ஒன்றாகக் கருதிய ஒரு உத்தமத் தமிழ்ப் பெரியார்; இதுதான் நாம் அவரைப் பற்றி அறியும் உண்மை வரலாறு.

பல நூல்களின் சாரம்

உயர்ந்த அறங்களை யெல்லாம் ஒன்று திரட்டி உரைக்கும் நூல்

திருக்குறள். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் பலர் திருக்குறளின் மாண்பைப்
பாராட்டிப் பாடியிருக்கின்றனர். திருக்குறளின் பெருமையைத் தெரிந்து
கொள்ளுவதற்கு அவர்கள் வாய் மொழிகளே போதுமானவை

 ‘‘சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள்எல்லாம்-தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார்
எப்பா வலரினும் இல்

பல சாத்திரங்களும், வேதங்களும் கூறியிருக்கின்ற பொருள்களை
யெல்லாம், எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி மூன்று பகுதியாக வகுத்துக்
கூறிய திருவள்ளுவர் முதற்பாவலர் ஆவார். அவரைப் போன்ற கவிஞர் வேறு எம்மொழிக் கவிஞர்களிலும் இல்லை‘‘.

(ஆசிரியர் நல்லந்துவனார்)

 ‘‘செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே
வேதத்திற்கும், திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளுக்கும் பொருள்

ஒன்றதான்’’ (வெள்ளி வீதியார்)

 ‘‘எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும்-முப்பாற்குப்
பாரதம், சீராம கதை, மனுப் பண்டைமறை
நேர்வன; மற்றில்லை நிகர்.

எல்லாப் பொருள்களையும் எல்லோரும் அறிந்து கொள்ளும்படி
சொல்லியிருக்கின்ற திருவள்ளுவருடைய திருக்குறளுக்குப் பாரதம், இராமாயணம், மனுதர்மம், வேதம் இவைகளையே
ஒத்த நூல்களாகக் கூறலாம்; இவைகளைத் தவிர வேறு ஒன்றையும்
திருக்குறளுக்குச் சமமாகக் கூறமுடியாது’’ (பாரதம் பாடிய பெருந்தேவனார்)

                ‘‘வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓத வழுக்கற்றது உலகு

வேதத்திலே உள்ள உயர்ந்த பொருள்களையெல்லாம், திருவள்ளுவர்,
திருக்குறளின் மூலம் சொல்லியிருப்பதனால், உலகத்தாரின் ஒழுக்கம்
கெடாமல் காப்பாற்றப்பட்டது’’.

                ‘‘வேதப் பொருளை விரகால் விரித்து உலகோர்
ஓதத் தமிழால் உரை செய்தார்

வேதத்தில் உள்ள பொருள்களை உலகத்தார் தெரிந்து கொள்ளும்படி
திறமையுடன் விரிவாகத் தமிழிலே எழுதினார் திருவள்ளுவர்’’. (மதுரைப்
பெருமருதனார்)

மேலே காட்டியவைகள் அனைத்தும் பழந்தமிழ்ப் பாடல்கள்.
திருக்குறளை ஆராய்ந்து கற்றறிந்த புலவர்களால் பாடப்பட்டவை. இவைகள்
திருவள்ளுவ மாலை என்னும் நூலிலே காணப்படுகின்றன.

 ‘‘தேவர் குறளும் திருநான் மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்; வேதங்களின் முடிவுகளைக் கூறும்
உபநிடதங்கள்; சம்பந்தர், அப்பர், சுந்தரர் இம்மூவரும் பாடிய
தேவாரங்கள்; வேதாந்த சூத்திரம் என்று சொல்லப்படும் வியாச சூத்திரம்;
திருக்கோவையார்; திருவாசகம்; திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம்
ஆகிய இவைகள் எல்லாம் ஒரே பொருளைப் பற்றிக்கூறும் நூல்கள் என்று தெரிந்து கொள்ளுக’’

இது அவ்வையார் பாடல். இப்பாடலுக்கு வேறு விதமாகவும் பொருள்
கூறுவோர் உண்டு.

மேலே காட்டியவைகளிலிருந்து ஒரு உண்மையை நாம் காணலாம்.
திருவள்ளுவர் பல நூல்களையும் கற்றறிந்தவர்; வடமொழி நூல்களையும்
கற்றறிந்தவர் என்பதுதான் அவ்வுண்மை.

வள்ளுவர் பல நூல்களையும், கற்றறிந்தவர். பல நூல்களின்
கருத்துக்களையெல்லாம் திரட்டியே திருக்குறளை இயற்றினார்.
இவ்வுண்மையை அவருடைய வாய் மொழிகளே காட்டுகின்றன.


               
‘‘ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு


நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்று, துறந்தவர்களின் பெருமையைச் சிறப்பாகப் புகழ்ந்துரைப்பதே நூல்களின் முடிவாகும்’’.                               (கு.21)
               

‘‘பகுத்து உண்டு பல்உயிர் ஓம்புதல், நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.


பலருக்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு, பல உயிர்களையும் கொல்லாமல் காப்பாற்றுவதே அறநூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் அனைத்திலும் சிறந்த அறமாகும்’’.                                                                         (கு.322)
               

‘‘மிகினும் குறையினும் நோய் செய்யும், நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.


மருத்துவ நூலோரால் வாதம், பித்தம், சிலேத்துமம் என்று எண்ணப்பட்ட மூன்றும் தம் அளவில் அதிகமானாலும், குறைந்து போனாலும் நோயைத் தரும்’’. (கு.241)
இந்த மூன்று குறள்களுமே, வள்ளுவர் பல நூல்களையும் கற்றறிந்தவர்
என்பதற்குச் சான்றாகும். திருவள்ளுவர் எந்த நூல்களையும் படிக்கவில்லை;
எந்த நூல் பொருள்களையும் பின்பற்றவில்லை; எல்லாப்
பொருள்களைப்பற்றியும் தானே முழுதுணர்ந்து திருக்குறளை இயற்றினார்
என்று கூறுவோர்க்குச் சரியான விடையளிக்கின்றன.

பழந்தமிழ் முறை

திருவள்ளுவர் தமது நூலைப் பழந்தமிழர் பண்பைப் பின்பற்றியே
செய்திருக்கின்றார். முன்னோர் முறைக்கு மாறாக நூலியற்றும் வழக்கம்
பழங்காலத்தில் இல்லை. அறம், பொருள், இன்பம் மூன்றும் பொருந்தச்
செய்யுள் இயற்றுவர்; இம்மூன்றைப் பற்றியும் நூலியற்றுவர்; இதுவே
பழந்தமிழர் முறை,

திருவள்ளுவர் இந்த முறையைப் பின்பற்றியே திருக்குறளை முப்பாலாக
இயற்றினார். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று
பகுதியாகத் திருக்குறள் அமைந்திருக்கின்றது. இம்மூன்றும் அறம் பொருள்
இன்பங்களைப் பற்றிக் கூறுவன.

பழந்தமிழ் நூல் முறையை அறியாதவர்கள். திருவள்ளுவர் காமத்துப்பாலை ஏன் பாடினார் என்று ஒரு ஐயத்தைக் கிளப்புவர்.
காமத்துப்பாலில் என்ன இருக்கின்றது? அறமா? அரசியலா?
ஒன்றுமில்லையே; பேரறிஞரான வள்ளுவர் காமத்தைப் பற்றி இருபத்தைந்து
அதிகாரங்களிலே கூறுகின்றார். இவற்றால் என்ன பயன்? இவ்வாறு
கேட்போர் சிலர் உண்டு.

காமத்துப்பாலில் தமிழர்களின் உயர்ந்த பண்பாடு அமைந்து
கிடக்கின்றது. ஆணும், பெண்ணும் அன்புடன்
இணைந்து வாழ்வதால்தான் உலகம் நிலைத்து நிற்கின்றது; உலக மக்கள்
வாழ்கின்றனர்; வளர்கின்றனர்; மக்களிடையிலே அன்பும், கட்டுப்பாடும்,
சமுதாய நீதிகளும் நிலைத்து வளர்ந்து வருகின்றன.

ஆண் பெண்களின் ஒன்றுபட்ட உண்மையான உறவினால்தான்
தனித்தனிக் குடும்பங்கள் தோன்றின. தனித்தனிக் குடும்ப வாழ்வு
மக்களிடையே நிலைத்த பிறகுதான் அறமும் அரசியலும் தோன்றின.
மக்களுடைய குடும்ப வாழ்விலே இன்பமும், ஒழுக்கமும் வளர்வதற்கே,

அறநெறியும், அரசியலும் வேண்டியிருந்தன. அறநெறியிலே நிற்பதற்கும்,
இன்பத்துடன் வாழ்வதற்கும் செல்வம் இன்றியமையாதது. இத்தகைய
செல்வத்தை ஈட்டுவதற்கும், உண்டாக்குவதற்கும் துணை செய்வது
அரசியல்தான். அரசியல் இன்றேல் செல்வம் இல்லை. பொருள்
இல்லை.

அறம், பொருள் அனைத்தும் மக்கள், இன்ப வாழ்வுக்குத்தாம் என்பதே
தமிழர் கொள்கை. ஆதலால்தான் தமிழ் நூல்கள் அனைத்தும் அறம்
பொருள்இன்பங்களைப்பற்றியே கூறுகின்றன. சங்கநூல்களிலே
இன்பத்தைப்பற்றிக் கூறும் நூல்களே ஏராளம்;அகப்பொருளைப்பற்றிக் கூறும் செய்யுட்களே அதிகம்.

வள்ளுவரும், அறமும் பொருளும் இன்பத்தைப் பெறுவதற்கே என்ற
கருத்தில்தான் திருக்குறளை இயற்றினார். அதனால்தான் இன்பத்தைப்பற்றிக்
கூறும் காமத்துப்பாலை மூன்றாவது பகுதியாகக் கூறினார்.

இவ்வுண்மையையும், தமிழ் நூல் மரபையும் அறியாதவர்களே, வள்ளுவர்
காமத்துப்பாலை ஏன் இயற்றினார் என்று கேட்பர். இவர்கள் கேள்வி தவறு;
தமிழர் பண்பாட்டை அறியாமல் எழுந்தது என்று விட்டுவிடவேண்டும்.

உலகப்பொது நூல்

திருக்குறளிலே கூறப்படும் அறங்கள் உலகோர் அனைவருக்கும்
பொதுவானவை. எல்லா மக்களும் ஒப்புக் கொள்ளக்கூடியவை.
இவ்வுண்மையைக் காட்டும் சில குறட்பாடல்களை மட்டும் பார்ப்போம்.

‘‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

 இவ்வுலகில் இல்லறத்திலே இருந்து வாழவேண்டிய முறைப்படி
வாழ்கின்றவன் சிறந்தவன்; அவன் வானுலகிலே உள்ள தேவர்களிலே
ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்’’.
(கு.50)
    
‘‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தம்முடைய
இன்பத்திற்கே உரியதாகக் கொள்ளுவார்கள்; அன்புள்ளவர் தமது
எலும்பையும் பிறர் நன்மைக்கு உரிமையாக்குவர்’’.
(கு.72)

‘‘ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்
பேர்அறி வாளன் திரு

 உலகத்தார் தன்னை விரும்பும்படி நடந்துகொள்ளுகின்ற பெரிய
அறிவுள்ளவனுடைய செல்வம், ஊராரால் உண்ணப்படும் குளத்திலே நீர்
நிறைந்திருப்பது போலாகும்’’.
(கு.215)

‘‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின்.

 நல்ல பண்புகளை உடையவனிடத்திலே செல்வம் சேர்ந்திருக்குமாயின்,
அது பயன்தரும் மரம் ஒன்று ஊர் நடுவிலே பழுத்திருப்பதுபோல ஆகும்’’.
(கு.216)
    
‘‘மருந்துஆகித் தப்பா மரத்துஅற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
சிறந்த குணம் உள்ளவனிடம் செல்வம் தோன்றியிருக்குமாயின், அது
எல்லா உறுப்புக்களும் மருந்தாகி நின்று தவறாமல் மக்களுக்குப் பயன்படும் மரம் போன்றதாகும்’’                   (கு.217)

இல்லற வாழ்க்கை நடத்துவோன், இல்லறத்திலே செய்யவேண்டிய
கடமைகளையெல்லாம் தவறாமல் செய்யவேண்டும்; அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும்; அவனுடைய செல்வம் ஊருணிபோல்-நடுவூரில் பழுத்திருக்கும் மரம்போல்- எல்லா உறுப்புக்களும் மருந்துக்குப் பயன்படும் மரம்போல்-அனைவர்க்கும் பயன்படவேண்டும். இவ்வுண்மைகளையே மேற்காட்டிய குறட்பாக்கள் கூறின. இல்லறத்தார்க்கு உரைத்த இவ்வறங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யார்?
  
‘‘உற்றநோய் நோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை,
அற்றே தவத்திற்கு உரு.
தமக்கு வந்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல், மற்ற
உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை; அவ்வளவே தவத்தின் உருவமாகும்’’.
                                                                                                                     (கு.261)
   
‘‘தவமும் தவம்உடையார்க்கு ஆகும்; அவம் அதனை
 அஃதுஇலார் மேற்கொள் வது.

உண்மையான தவநெறியில் வாழ்வோர்க்கே தவக்கோலம் தகுந்ததாகும்.
தவநெறியைப் பின்பற்றாதவர் தவக்கோலம் பூண்பதால் பயன் இல்லை’’
                                                                                                                    (கு. 262)

‘‘மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்
        பழித்தது ஒழித்து விடின்.
உயர்ந்தவர்களால் வெறுக்கப்பட்ட தீயொழுக்கங்களை விட்டு விட்டால்,
தலையை மழுங்கச் சிதைத்துக்கொள்ளுவதும், தலைமயிரைச் சடையாக்கி
நீட்டி வளர்த்துக்கொள்ளுவதும் ஆகிய வெளி வேடங்கள் வேண்டாம்’’

(கு. 280)
தம்முடைய துன்பத்தைத் தாங்கிக் கொள்வது; ஏனைய உயிர்களுக்குத்
துன்பம் செய்யாமை; உண்மையான தவம்; வெளி வேடங்கொண்டு மக்களை
ஏமாற்றாமல் உண்மை ஒழுக்கமுடன் வாழ்வது; இவைகளே துறவிகளுக்கு
வேண்டிய ஒழுக்கங்கள்; என்று மேற்காட்டிய குறள்கள் உரைத்தன.
இவைகளை மறுக்கும் அறிஞர் ஒருவரும் இல்லை.


‘‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப்படும்.


நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குக்
கடவுள் என்று சிறப்பாக வைக்கப்படுவான்’’.         (கு.398)

               
‘‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.


காது வெறுக்கும்படி, மக்களால் குறை கூறப்படும் சொற்களையும்
பொறுத்துக் கொண்டிருக்கும் வேந்தனுடைய குடை நிழலில்தான உலகம்
நிலைத்திருக்கும். குறைகூறுவோர் மீது கடுமையான அடக்குமுறையை ஏவி
விடுகின்ற மன்னவன் ஆட்சி நிலைக்காது’’.

               
‘‘குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு


குடிகளின் கருத்தை ஆதரித்து நின்று, செங்கோல் செலுத்தும் பெரிய
நாட்டின் மன்னனுடைய அடியை உலகம் ஆதரித்து நிற்கும்’’. (கு.544)
இவைகள் தனிப்பட்ட அரசனுக்குக் கூறப்பட்ட அறங்கள். வள்ளுவர்
காலத்திலே குடிமக்கள் அரசாங்கம் இல்லை. மன்னர்களின் தனி அதிகார
ஆட்சிதான் நிலவியிருந்தது. ஆதலால் அரசனுக்கு அறவுரைகள்
கூறியிருக்கின்றார்.

அரசன் மக்களிடம் நீதி முறை தவறாமல் நடந்துகொள்ள வேண்டும்;
குடிகள் கூறும் குறைகளைக் கண்டு சீறிவிழக்கூடாது; பொறுமையோடு
கேட்டு, அக்குறைகளைப் போக்க வேண்டும்; குடிகளின் கருத்தைத் தழுவி
ஆட்சி நடத்த வேண்டும்; இக்கருத்துக்களையே மேலே காட்டிய குறள்கள்
வலியுறுத்தின. இக்கருத்துக்கள் குடிஅரசுக்கும் ஏற்றவை. எல்லா
நாட்டுஅறிஞர்களும் ஒத்துக்கொள்ளக் கூடியவை. இவற்றைத்தவறு என்று
மறுக்கும் அரசியல் அறிஞர்கள் ஒருவரும் இல்லை.


               
‘‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.


எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளை
அப்படியே ஒப்புக்கொள்ளாமல் அதன் உண்மைப்பொருளை ஆராய்ந்து,
உண்மையானால் ஒப்புக்கொள்ளவேண்டும்; பொய்மை யானால் தள்ளிவிட
வேண்டும்; இதுதான் சிறந்த அறிவாகும்’’.       (கு.423)

               
‘‘எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.


தான் உரைப்பனவற்றை, எளிதாகக் கேட்போர் உள்ளத்திலே பதியும்படி
உரைத்து, பிறர் வாயிலிருந்து வரும் அரிய பொருளைத் தான் தெரிந்து
கொள்ளுவதே அறிவுடைமையாகும்.’’       (கு.424)

        ‘‘எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு
        அவ்வது உறைவது அறிவு.       (கு.426)

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அவ்வாறு உலகத்தோடு ஒன்றுபட்டு
வாழ்வதே அறிவுடைமை யாகும்.’’

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் இவ்வாறு சிறந்த அறிவுடன்
விளங்குவார்களானால் ஒருவரை ஒருவர் ஏமாற்ற முடியாது; மக்களை மக்கள்
எந்தத் துறையிலும் அடிமைப்படுத்தி ஆள முடியாது. அறிவுடைய மக்கள்
ஏமாறமாட்டார்கள்; ஏமாற்றவும் மாட்டார்கள். அறிவைப்பற்றி வள்ளுவர்
கூறியிருக்கும் கருத்து உலக மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது.


    
‘‘தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.


செய்வதற்குரிய காரியத்தைத் தேர்ந்தெடுத்தல், அக்காரியம் வெற்றி
பெறுவதற்கான வழிகளை ஆராய்ந்து செய்தல், ஒன்றைப்பற்றி
இன்றைக்கொன்று, நாளைக்கொன்று என்று பேசாமல், இன்னதுதான் என்று
முடிவாகத் துணிந்து கூறுதல் ஆகிய இவற்றில் வல்லவனே
அமைச்சனாவான்.’’

(கு.634)
இது அமைச்சர்க்கு வேண்டிய தகுதியைப் பற்றிக் கூறியது.


    
‘‘நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஓட்டாரை ஒட்டிக் கொளல்.


நண்பர்க்கு உதவி செய்வதைவிட எதிரிகளோடு சேராதவர்களைத்
தம்முடன் சேர்த்துக்கொள்ளுவது விரைந்து செய்யவேண்டிய
காரியமாகும்.’’

(கு.679)
இது, சிறந்த அரசியல் தந்திரமாகும். ஆளுவோர்க்கு உரைத்தது.


        ‘‘உறுபசியும், ஓவாப் பிணியும் செறுபகையும்
        சேராது இயல்வது நாடு.
மிகுந்த பசியும், நீங்காத நோயும், அழிக்கின்ற பகையும் தன்னிடம்
சேராமல் காத்துக்கொண்டு வாழும் நாடே சிறந்த நாடாகும்.’’       (கு.734)

               
‘‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.


பல கருத்துள்ள கூட்டங்களும், உறவாடிக் கெடுக்கும் பகையும்,
ஆளுவோனைத் துன்புறுத்திக் கொல்லும் சிற்றரசர்களும் இல்லாத நாடே
சிறந்த நாடாகும்.’’

(கு.735)
               
‘‘பிணியின்மை, செல்வம், விளைவின்பம், ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து.


மக்கள் நோயில்லாமல் வாழ்வது, வேண்டிய செல்வப் பொருள், நல்ல
உற்பத்தி, எல்லோரும் இன்புற்று வாழ்தல், சரியான பாதுகாப்பு இவ்வைந்தும்
நிறைந்திருப்பதே ஒரு நாட்டிற்கு அழகாகும்.‘‘         (கு.738)

ஒரு நல்ல நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை இக்குறள்கள்
விளக்கியிருக்கின்றன. செல்வமும், அமைதியும் குடிகொண்ட நாட்டு
மக்கள்தாம் இன்பமாக வாழ்வார்கள் என்ற கருத்தை இக்குறள்களிலே
காணலாம்.


               
‘‘வெண்மை எனப்படுவது யாதுஎனின்; ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.


அறியாமை என்று அழைக்கப்படுவது யாதென்றால், ‘‘நாமே சிறந்த
அறிவுடையோம்’’ என்று தம்மைத்தாமே பெரிதாக எண்ணிக்கொள்ளும்
செருக்காகும்’’.

(கு.844)
               
‘‘ஏவவும் செய்கலான்; தான்தேறான்; அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.


பிறர் சொல்வதையும் கேட்டுச் செய்யமாட்டான்; தானே அறிந்தும்
செய்யமாட்டான்; அவ்வுயிர் ஒழியும் வரையிலும் இவ்வுலகிற்கு ஓர்
நோயாகும்.’’

(கு.848)
சொற்புத்தியும், சுயபுத்தியும் இல்லாதவனை மனிதன் என்று
குறிப்பிடாமல் அவ்வுயிர் என்று அஃறிணையாகக் கூறியிருப்பது
குறிப்பிடத்தக்கது.

இவைகள் அறிவற்றவன் யாவன் என்பதைக் குறித்துரைக்கும் குறள்கள்.இவ்வுண்மையை உலகினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர்.


               
‘‘செல்லாமை உண்டேல் எனக்குரை; மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை.


பிரிந்து செல்லாமல் இருப்பதானால், அதைப்பற்றி என்னிடம் சொல்.
பிரிந்து போய் விரைந்து வருகிறேன் என்று சொல்வாயானால், நீ வரும்
வரையிலும் யார் உயிரோடு வாழ்ந்திருப்பார்களோ அவர்களிடம் அதைப்
பற்றிச் சொல்’’.

(கு.1151)
இக்குறள் கற்புள்ள ஒரு பெண் தன் காதலனிடம் கொண்டிருக்கும்
அன்பைக் காட்டும் குறள். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தால் உயிர் வாழ
முடியாது என்ற முதிர்ந்த அன்புள்ளவர்கள்தாம் சிறந்த காதலர்கள்;
இல்லறத்திலே இன்பம் நுகர்வார்கள்; இல்லறத்தையும் நல்லறமாக இனிது
நடத்துவார்கள். இக்கருத்தைக் கொண்டதே மேலே காட்டிய குறள்.

மேலே காட்டிய அறங்கள் அனைத்தும் உலகத்தார் ஒப்புக் கொள்ளும்
பொது நீதிகள் எந்நாட்டினரும், எம்மதத்தினரும், எவ்வினத்தினரும்,

எம்மொழியினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே இவ்வறங்கள்
அமைந்திருக்கின்றன. இத்தகைய பொது நீதிகள் நிரம்பியிருப்பதனால்தான்
திருக்குறள் உலகப் பொது நூல் என்று பாராட்டப்படுகின்றது; திருவள்ளுவர்
உலகப் புலவர் என்று போற்றப்படுகிறார்.

வள்ளுவர் காலத் தமிழ் நாடு

திருவள்ளுவர் காலத்திலே தமிழ் மக்களிடம் கடவுள் நம்பிக்கை
குடிகொண்டிருந்தது. உருவ வணக்கமும் இருந்தது. சாதி வேற்றுமைகள்
இருந்தன. தமிழ் நாட்டில் வேத வேள்விகள் நடைபெற்றன. மறுபிறப்பு,
நல்வினை, தீவினை, ஊழ்வினை, சுவர்க்கம், நரகம், மோட்சம்,
முதலியவைகளிலே மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வாழ்த்தில்
உள்ள பத்துக் குறள்களும் கடவுளை வணங்கவேண்டியது மக்கள் கடமை
என்று வலியுறுத்துகின்றன.


    
‘‘அகர முதல எழுத்தெல்லாம், ஆதி
பகவன் முதற்றே உலகு.


எழுத்துக்கள் எல்லாம் அ என்ற எழுத்தைத் தலைமையாகக்
கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் முதல்வனாகிய கடவுளைத்
தலைமையாகக் கொண்டிருகின்றது’’ என்பது முதற் குறள். இது உலகம்

கடவுள் படைப்பால் தோன்றியது; கடவுள் சக்தியாலேயே உலகம் இயங்கி வருகின்றது; என்ற கருத்தைக் கொண்டதாகும்.


    
‘‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.


இவ்வுலகைப் படைத்த கடவுள், பிச்சை யெடுத்தாவது உயிர்
வாழவேண்டும். என்று விரும்பி உயிர்களைப் படைத்திருப்பானாயின்,
அவனும் அவ்வுயிர்களைப் போலவே அலைந்து அழிக’’.       (கு.1062)

இக்குறளும் இவ்வுலகைப் படைத்தவன் கடவுள் தான் என்ற கருத்தை
வலியுறுத்துகின்றது.
    
‘‘சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


மழை பெய்யாவிட்டால் இவ்வுலகிலே தெய்வங்களுக்கும் திருவிழாவும்
தினப்பூசையும் நடைபெறாது’’.

(கு.18)
குறிப்பிட்ட சில நாட்களில் கொண்டாடுவது திருவிழா. இதற்கே சிறப்பு
என்று பெயர். நாள்தோறும் நடைபெறுவது பூசனை. திருவிழாவை
நைமித்திகம் என்றும், பூசனையை நித்தியம் என்றும் கூறுவர்.

வள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் உருவ வணக்கம் இருந்தது
என்பதற்கு இக்குறள் ஒன்றே போதுமான சான்றாகும்.


    
‘‘மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும், பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.


வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்றுக்கொள்ளலாம். வேதம் கற்பவன் தன் பிறப்பிற்குரிய ஒழுக்கத்திலே தவறுவானாயின், அவன் குடிப்பெருமை அழியும்.’’

(134)
வள்ளுவர் காலத்திலே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், என்ற
நால்வகைப் பிரிவுகளும், இன்னும் பல பிரிவுகளும் தமிழர் சமுதாயத்தில்
இருந்தன. பிறப்பினால் உயர்வு தாழ்வு வேற்றுமைகளும் இருந்தன.
இவ்வுண்மையை இக்குறளால் காணலாம்.


    
‘‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.


அந்தணருடைய வேதத்திற்கும், அறத்திற்கும் அடிப்படையாகி நின்று
உலகத்தைக் காப்பாற்றுவது அரசனது செங்கோல்தான்.’’          (கு.543)

        ‘‘ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர்;
        காவலன் காவான் எனின்.
அரசன் நீதி முறைப்படி நாட்டைக் காப்பாற்றாவிட்டால் பசுக்களின்
பயன்குன்றும்; அந்தணர்கள் அறநூலை மறந்து விடுவர்.’’                          (560)

தமிழகத்தில் வேதங்களும், வேள்விகளும், வழங்கி வந்தன;
அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர்; வேள்விகளையும் வேதியர்களையும்
காப்பாற்ற வேண்டியது அரசாட்சியின் கடமை; இக்கருத்தை இவ்விரண்டு
குறள்களும் கூறின.


               
‘‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.


நெருப்பில் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் யாகம்
செய்வதைக் காட்டிலும் ஒரு பிராணியின் உயிரைக் கொன்று
தின்னாமலிருத்தல் சிறந்தது.‘‘

(259)
இக்குறளை எடுத்துக்காட்டித் திருவள்ளுவர் யாகத்தைக் கண்டிருக்கிறார் என்று கூறுவோர் உண்டு. புலால் உண்ணாமையின் சிறப்பைக் கூற வந்ததே இக்குறள். யாகம் தீமையானது; அதைச் செய்யக்கூடாது என்று இக்குறள் சொல்லவில்லை. யாகத்தால் வரும் புண்ணியத்தைவிடப் புலால் உண்ணாமயால் வரும் புண்ணியமே சிறந்தது என்றுதான் இக்குறள் உரைக்கின்றது. ஆதலால் இது வேதவேள்வியைக் கண்டிக்கும் குறளாகாது.


               
‘‘கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி


கற்க வேண்டிய நூல்களைக் கற்று இவ்வுலகிலே உண்மைப்
பொருள்களை உணர்ந்தவர் மீண்டும் இவ்வுலகிலே வந்து பிறக்காத நெறியை
உணர்வர்.‘‘

(356)
மறு பிறப்பு உண்டென்பதைத் திருக்குறள் ஒப்புக் கொள்ளுகிறது;
இதற்கு இக்குறளே போதுமானதாகும்.
    
‘‘அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.


அறத்தின் பயன் இதுவென்று வாயால் சொல்ல வேண்டாம். பல்லக்கில் ஏறி இருப்பவனோடு அதைத் தூக்கிச் செல்கின்றவன் இடையே உள்ள
வேற்றுமையால் தெரிந்துகொள்ளலாம்.’’

(கு.37)
இப்பிறப்பிலே நன்மை செய்தவன், வரும் பிறப்பிலே நன்மையடைவான்;
இப்பிறப்பிலேதீவினை செய்தவன் வரும் பிறப்பிலே தீமையடைவான்; சென்ற
பிறப்பிலே அறம் புரிந்தவர்களே இப்பிறப்பிலே இன்புற்று வாழ்கின்றனர்;
சென்ற பிறப்பிலே பாவம் செய்தவர்கள் தாம் இப்பிறப்பிலே துன்புற்று
வாழ்கின்றனர். இக்கொள்கையையே மேலே காட்டிய குறள் வலியுறுத்திற்று.
நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் பயனையும் எடுத்துக் காட்டிய
குறள் இதுவாகும்.


    
‘‘ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்ற
சூழினும் தான்முந் துறும்.


ஊழ்வினையை விட மிகுந்த வலிமை யுள்ளவை வேறு எவையுண்டு?
அதன் வலிமையை அழிக்க வேறு வழியை எண்ணினாலும், அவ்வழியிலும்
அவ்வூழ்வினையே முன்வந்து நிற்கும்.’’

(38)
பிதிர்க்கள் தென்றிசையில் வாழ்பவர்கள்; இல்லறத்தில் உள்ளவர்கள்
செய்யும் சிரார்த்தங்களின் மூலமே அவர்கள் நன்மையடைவார்கள்.
இக்கருத்தை இக்குறளால் காணலாம்.

               
‘‘அடக்கம் அமரர்உள் உய்க்கும், அடங்காமை
ஆர்இருள் உய்த்து விடும்.


அடக்கம் ஒருவனை இன்பந்தரும் தேவர் உலகத்தில் சேர்க்கும்;
அடங்காமை துன்பந்தரும் நிறைந்த இருட்டாகிய நரகத்தில்
சேர்த்துவிடும்.’’

(121)
தேவர் உலகம்-சுவர்க்கம்; ஆர் இருள்-நரகம்; சுவர்க்கம், நரகம்
என்பவை இவ்வுலகத்திற்கு அப்பாற்பட்டவை; தனி உலகங்கள்; இக்கருத்தை
அறிவிக்கும் குறள் இது.


               
‘‘யான்எனது என்னும் செருக்குஅறுப்பான், வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.


யான் என்னும் அகப்பற்றையும் எனது என்னும் புறப்பற்றையும்
ஒழிப்பவன் தேவர்களாலும் அடையமுடியாத உயர்ந்த வீட்டுலகத்தை
அடைவான்.’’
(346)
தேவலோகத்தை விட சுவர்க்கத்தைவிட உயர்ந்தது மோட்ச லோகம்.
அது அழியாதது. ஆசையற்றவனே அந்த மோட்சத்தை அடையமுடியும்.
இக்கருத்து இக்குறளில் அடங்கியிருக்கின்றது.

இவ்வாறு, கடவுள், உருவவழிபாடு, சாதி வேற்றுமை, வேத வேள்விகள்,
அந்தணர், மறுபிறப்பு, நல்வினை, தீவினை, ஊழ்வினை, சுவர்க்க நரகம்
மோட்சம் முதலியவைகளை ஒப்புக்கொள்ளும் குறள் வெண்பாக்கள் பல
உள்ளன. திருக்குறளைப் படிப்போர் அவைகளைக் காணலாம்.
இந்திரன், திருமால், கூற்றுவன், சீதேவி, மூதேவி, வானோர் முதலிய
தெய்வங்கள் திருக்குறளிலே காணப்படுகின்றன. பேய் பிசாசுகளும்
காணப்படுகின்றன.

முன்னேற்றத்திற்கு வழி

வள்ளுவர் காலத்திலே தமிழ் நாட்டில் சாதிகள் இருந்தன; பிறப்பினால்
உயர்வு தாழ்வு உண்டு என்றநம்பிக்கை இருந்தது. ஆயினும் வள்ளுவர்
பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்னும் கொள்கையை ஒப்புக்
கொள்ளவில்லை.


               
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா
  செய்தொழில் வேற்றுமை யான்


எல்லா மக்களுக்கும் பிறப்பு ஒரு தன்மையாகும்; பிறப்பிலே
வேற்றுமையில்லை. ஆனால் அவரவர்கள் செய்யும் தொழில்
வேற்றுமைகளால் சிறப்பின் தன்மை ஒத்திராது வெவ்வேறாக
இருக்கும்’’.
(கு.972)
இக்குறள் மக்களுக்குள் பிறப்பால் உயர்வு தாழ்வில்லை. அவரவர்கள்
செய்யும் தொழிலால்தான் உயர்வு தாழ்வுகள் ஏற்படுகின்றன என்று கூறிற்று.
மக்கள் அனைவரும் பிறப்பிலே ஒரு தன்மையுள்ளவர்கள் தாம் என்ற
உண்மையைக் கூறிற்று.


               
‘‘ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
  இழிந்த பிறப்பாய் விடும்.


ஒழுக்கம் உடைமையே சிறந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கமற்ற செயல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்’’.
(கு.133)
ஒருவன் உயர்ந்த குடியிலே பிறந்தவன் ஆயினும் ஒழுக்கமற்றவனாயின்
அவன் தாழ்ந்த குடியினன் ஆகிவிடுவான்; ஒருவன் தாழ்ந்த குடியிலே
பிறந்தவனாயினும் நல்லொழுக்கம் உடையவனாக இருந்தால் அவன் உயர்ந்த குடியில் பிறந்தவனாகிவிடுவான். இக்கருத்தை இக்குறளில் காணலாம்.
ஒழுக்கத்தினால்தான் உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்ற பெருமை சிறுமைகள்
ஏற்படுகின்றன. ஒழுக்கமுடையவன் உயர்ந்தவன்; ஒழுக்கமற்றவன்
தாழ்ந்தவன்; பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டுவதால் பயனில்லை.இதுவே வள்ளுவர் கருத்தாகும்.

ஊழில் பெருவலி யாஉள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்


என்று ஊழ்வினையின் வலிமையைக் கூறிய வள்ளுவர், அதை
மாற்றுவதற்கும் வழி கூறுகின்றார்.

‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர்; உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்.


எந்தக் காரியத்திலும் சோர்வில்லாமல், காலந்தாழ்த்தாமல், முயற்சி
செய்கின்றவர்கள், ஊழ்வினையையும் புறமிட்டு ஓடும்படி செய்வார்கள்.

(கு.620)

இதனால் ஊழ்வினையை விரட்டியடிக்க வழி கூறினார். முயற்சியினால்
ஊழ்வினையை விரட்டியடிக்க முடியும் என்பதே வள்ளுவர் கருத்து.

‘‘ஆள்வினை உடைமை’’ என்னும் அதிகாரத்தில் உள்ளது இக்குறள்.
‘‘தலைவிதி என்று எண்ணிக்கொண்டு சோம்பித் திரியாதே; ஊழ்வினையை
நினைத்துக்கொண்டு உறங்கிக் கிடக்காதே; முயற்சி செய்! இடைவிடாமல்
உழைப்பாய்! சோர்வடையாதே! வெற்றி பெறுவாய்’’ இக்கருத்தையே
அவ்வதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களும் கூறுகின்றன.

‘‘யாதானும் நாடாமால்; ஊராமால்; என்ஒருவன்
சாம்துணையும் கல்லாத ஆறு.

கல்வி கற்றவனுக்கு எந்நாடும் தன்னாடு; எவ்வூரும் தன்னூர்
இவ்வாறாயின் ஒருவன் தான் சாகும் அளவும் கல்வி கற்காமல்
காலங்கடத்துவது ஏன்?’’

(கு.397)
உலக மக்கள் அனைவரும் கல்வி கற்றிருப்பார்களாயின் அவர்கள்
ஒன்றுபட்டு வாழ முடியும். கற்றவர்கள் சாதிமத வேற்றுமைகளைப்
பாராட்டமாட்டார்கள். மொழி, இனம், நிறம், நாடு என்ற வேற்றுமைகளையும்
பொருட்படுத்த மாட்டார்கள். மனிதத் தன்மை ஒன்றையே பாராட்டி
ஒற்றுமையுடன் வாழ்வார்கள். ஆதலால் உலக ஒற்றுமை தழைத்தோங்க
அனைவரும் கல்வி கற்கவேண்டும். இக்கருத்தை எடுத்துரைத்தது இக்குறள்.
இவ்வாறு மக்கள் முன்னேறுவதற்கான உயர்ந்த கருத்துக்களை
வள்ளுவர் கூறியிருக்கின்றார். பலவாறு பிரிவுபட்டுக் கிடக்கும் மனித சமூகம்
அன்புடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கான உயர்ந்த கருத்துக்கள் பல வள்ளுவர் வாய்மொழியிலே காணப்படுகின்றன.

வள்ளுவர் காலம்

வள்ளுவர் காலத்தைப் பற்றி-திருக்குறள் தோன்றிய காலத்தைப் பற்றி-
பலதிறப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இன்றுள்ள தமிழ் நூல்களில்
எல்லாம் காலத்தால் முற்பட்டது திருக்குறள் என்போர் உண்டு.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற சங்க இலக்கியங்கள் எல்லாம்
திருக்குறளுக்குப் பின்னே தோன்றியவை என்போர் உண்டு. இவர்கள்
கூறுவது உண்மைதானா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இறையனார் அகப்பொருள் முதலிய தமிழ் நூல்களில் முச்சங்க
வரலாறுகள் கூறப்படுகின்றன. அவற்றுள் முதற்சங்கம், இடைச்சங்கம்,
கடைச்சங்கம் இருந்த காலங்களில் இயற்றப்பட்ட நூல்கள் இன்னின்னவை
என்று சொல்லப்படுகின்றன; அக்காலத்தில், வழங்கியிருந்த நூல்கள் இவை
இவை யென்றும் சொல்லப்படுகின்றன. திருக்குறள் சங்க கால நூலாகவோ, அதற்கு முற்பட்ட நூலாகவோ இருந்தால் சங்க நூல்களின் வரிசையிலே
இச்சிறந்த நூலின் பெயரைச் சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள்.
ஆதலால் கடைச்சங்க காலத்துக்குப் பின்னர்தான் திருக்குறள்
தோன்றியிருக்க வேண்டும்.

சங்ககால நூல்களில் காணப்படும் கொள்கைகளிலே பல, திருக்குறளிலே
ஒப்புக்கொள்ளப்படவில்லை; சங்க காலத்து மக்களைவிடத் திருக்குறள்
காலத்து மக்கள் ஆன்மீகத் துறையிலே சிறந்து விளங்கினர். ஆதலால்
சங்ககாலத் தமிழர் பழக்கவழக்கங்கள் சிலவற்றை வள்ளுவர் கண்டித்துக்
கூறுகின்றார். அவைகளைக் கூடா ஒழுக்கம் என்றும் சொல்லியிருக்கின்றார்.

சங்க இலக்கியங்களிலே புலால் உண்ணுவதைப் பற்றிக்
கண்டிக்கப்படவில்லை. மதுபானமும் விலக்கப்படவில்லை. சங்க
காலத்துத் தமிழர்கள் பெரும்பாலும் புலால் உணவைப் போற்றி
உண்டவர்கள், வள்ளல்கள் எல்லாம் மாமிசம் உண்டவர்கள்;
மதுவருந்தியவர்கள்; கபிலர், ஒளவையார் போன்ற புலவர்
பெருமக்கள் எல்லோரும், புலாலும் மதுவும் அருந்தினார்கள். புலாலும்
மதுவும் சிறந்த உணவுப் பொருளாகக் கருதப்பட்டன. வள்ளல்களும்,
வசதியுள்ள செல்வர்களும், தம்மிடம் வந்த விருந்தினர்க்குப் புலால்
உணவும், மதுவும் கொடுத்து மகிழ்ச்சியூட்டுவார்கள். இந் நிகழ்ச்சிகளைப்
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களிலே காணலாம்.
புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, கொல்லாமை, ஆகிய ஒழுக்கங்கள்
சங்க நூல்களில் வலியுறுத்தப்படவில்லை. இவ்வொழுக்கங்கள் திருக்குறளிலே
வலியுறுத்திக் கூறப்படுகின்றன. புலால் மறுத்தல் என்பது ஒரு தனி
அதிகாரம்; கொல்லாமை என்பது ஒரு தனி அதிகாரம்; கள்ளுண்ணாமை
என்பது ஒரு தனி அதிகாரம்.

சங்ககாலத்து நூல்களிலே பலதார மணம் மறுக்கப்படவில்லை. ஆண்கள்
விலைமகளிரை நாடித் திரிவதையும் கண்டிக்கவில்லை. மணம்
புரிந்துகொண்ட பெண்கள்தாம் ஒருவனைப்பற்றி ஓரகத்தில் இருக்கவேண்டும்;
ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற வழக்கத்தைக்
கூறுகின்றன.

திருக்குறள், ஏக தார மணமே சிறந்தது என்ற கருத்தை
வெளியிடுகின்றது. ‘‘வாழ்க்கைத் துணை நலம்’’ என்ற அதிகாரத்தைப்
படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம்.

ஆண்கள் விலைமகளிரை நாடித்திரிவதைத் திருக்குறள் கண்டிக்கின்றது.
வரைவின் மகளிர் என்ற அதிகாரத்தால் இவ்வுண்மையைக் காணலாம்.
பெண்களுக்குக் கற்புவேண்டும் என்பதுபோலவே ஆண்களுக்கும் கற்பு
வேண்டும் என்னும் கருத்தும் திருக்குறளில் காணப்படுகின்றது. இதனைப்
பிறன் இல் விழையாமை என்னும் அதிகாரத்தால் அறியலாம்.

மேலே காட்டிய காரணங்களை ஆராய்ந்தால் திருக்குறள் சங்க
இலக்கியங்களுக்குப் பின்னே தோன்றியதாகத்தான் இருக்க முடியும்.
சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்களுக்கு முன்னும்,
பத்துப் பாட்டு எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களுக்குப்
பின்னும் உள்ள இடைக்காலத்தில் தான் திருக்குறள்
பிறந்திருக்கவேண்டும்; திருவள்ளுவர் வாழ்ந்திருக்கவேண்டும்.

பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று தொகை
நூல்களை வரிசையாக வைத்து வழங்கு கின்றனர். இவ்வரிசையிலும் பதினெண் கீழ்க்கணக்கு என்று தொகை
நூல்களை வரிசையாக வைத்து வழங்குகின்றனர். இவ்வரிசையிலும் பதினெண்
கீழ்க்கணக்கு மூன்றாவதாக-சங்க நூல்களுக்குப்பின் தோன்றியதாக-வழங்கப்படுகின்றது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே ஒன்றுதான்
திருக்குறள். ஆதலால் இவ்வழக்கும் திருக்குறள் சங்க இலக்கியங்களுக்குப்
பின்னே தோன்றியது என்ற கருத்தையே வலியுறுத்துகின்றது.

காலத்தால் முற்பட்டது என்பதால் மட்டும் ஒரு நூலுக்குப் பெருமை
வந்துவிடாது. காலத்தால் பிற்பட்டது என்பதால் ஒரு நூலின் பெருமை
குறைந்துவிடாது. நூலின் சிறப்பு கருதியே மக்களால் அந்நூல்
கொண்டாடப்படும். திருக்குறளுக்கு இணையான நூல் எம்மொழியினும்
இல்லை. எந்நாட்டினும் இல்லை. ஆதலால் அந்நூல் உலகமக்களால்
போற்றப்படுகின்றது.

திருக்குறள் சங்க இலக்கியங்களுக்குப் பின் பிறந்த நூல் என்பதனால்,
அந்நூலின், மாண்பை யாரும் குறைத்துவிட முடியாது. இவ்வுண்மையை
உணர்ந்தவர்கள், வள்ளுவர் காலத்தைச் சங்க இலக்கியங்களுக்கு
முன்வைத்துக் கூறுவதில் காலங் கடத்திக்கொண்டிருக்க மாட்டார்கள்.

வயிரமும் பொன்னும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே
நிலத்திலிருந்து எடுக்கப்பட்டால் என்ன? நேற்றோ அல்லது அதற்கு
முன்தினமோ நிலத்திலிருந்து புதிதாக எடுக்கப்பட்டால்தான் என்ன? வயிரம்
வயிரந்தான்; தங்கம் தங்கந்தான். ஆதலால் திருக்குறள் எக்காலத்திலே
தோன்றிய நூலாயினும் அதற்கு ஒப்பான நூலும் இல்லை; அதைவிட
உயர்ந்த நூலும் இல்லை; இது உண்மை.

உலகம் போற்றும் உத்தமர்

உலக மக்கள் அனைவர்க்கும் பொது நூலாக விளங்கும் திருக்குறளை
ஒரு சிலர் சாதிச் சிறைக்குள் அடைக்க விரும்புகின்றனர்; சமயச் சிறைக்குள்
அடைக்க முன் வருகின்றனர்; மொழி வெறுப்புக்கும், இன வெறுப்புக்குங்கூட
இதைக் கருவியாகக் கொள்ளுகின்றனர்.

திருவள்ளுவர் நாத்திகர்; அவர் ஆரிய நாகரிகத்தை வெறுப்பவர்;
திராவிட நாகரிகத்தைப் போற்றுகின்றவர்; திருக்குறளே தமிழர் சமயநூல்;
என்று கூறுகின்றனர்.

இவர்கள் திருக்குறளில் உள்ள சில வெண்பாக்கள் தங்கள் கருத்திற்கு
முரணாயிருப்பதைக் கண்டு திகைக்கின்றனர். அச்செய்யுட்களுக்குத் தங்கள்
மனம் போனவாறு பொருள் பண்ணுகின்றனர். பழந்தமிழர் நாகரிகத்துக்கும்,
பண்பாட்டுக்கும் முரணாகப் பொருள் பண்ணுகின்றனர்.

இவர்கள், ‘‘திருக்குறள்தான் தமிழர் சமயநூல்; திருவள்ளுவர் கூறுவது
தமிழர் பண்பாடு; தமிழர் நாகரிகம்;’’ என்று உண்மையாக
நம்புகின்றவர்களாயிருந்தால், யாரையும் வெறுக்க மாட்டார்கள்; எந்த
மொழியையும், தூற்ற மாட்டார்கள். திருக்குறளில் உள்ள கருத்துக்களை
எல்லா மதத்தினரும் போற்றுகின்றனர். எல்லா இனத்தினரும் ஒப்புக்
கொள்ளுகின்றனர். வடமொழி நூல்களும், ஏனைய மொழி
நூல்களும் ஒப்புக் கொள்ளுகின்றன. இவ்வுண்மையை மறந்துவிட்டு, தமக்குப்
பிடிக்காத இனத்தினரையும், மொழியினரையும் திருக்குறளின் பெயரால்
எதிர்ப்பதிலே பொருளில்லை.

திருக்குறளையும், திருவள்ளுவரையும், இனவெறுப்புக்கும், மொழி
வெறுப்புக்கும், பயன்படுத்துவோர் திருக்குறளுக்குப் பெருமை
தருகின்றவர்கள் அல்லர்;
திருவள்ளுவரைப் போற்றுகின்றவர்கள் அல்லர். திருக்குறளுக்கும்,
திருவள்ளுவர்க்கும் மாசு தேடுகின்றவர்களே ஆவார்கள். திருக்குறளுக்கும்,
திருவள்ளுவர்க்கும் பெருமை தருவதாக நினைத்துக் கொண்டு இவர்கள்
செய்யும் காரியங்கள் தவறானவை; தமிழுக்கும், தமிழர்க்கும் இழுக்குதரும்
செயல்களாகும்.

திருவள்ளுவர் கூறுவதுதான் தமிழர் பண்பாடு; திருக்குறள்தான் தமிழர்
சமயநூல் என்பதிலே தவறில்லை. இது உண்மைதான்; மறுக்கமுடியாத
கொள்கை. இக்கொள்கையை உறுதியாகப் பின்பற்றுவோர் உலக மக்களுடன்
ஒன்றுபட்டு வாழத்தான் முயற்சிப்பார்கள். மக்கள் சமுதாயத்திலே
வெறுப்பையும், கலகத்தையும் கிளப்பிவிட முயற்சிக்க மாட்டார்கள்.
திருக்குறளை நன்றாக நடுநிலையிலிருந்து படிப்போர் இந்த முடிவுக்குத்தான்
வருவார்கள்.

திருவள்ளுவர் மனித சமுதாயத்திற்குப் பொதுவான நீதிகளையே
கூறுகின்றார்; உலக மக்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய
அறங்களையே உரைக்கின்றார்; அவர் இன்ன இனத்தினர்க்கு, இன்ன
மதத்தினர்க்கு இன்ன நீதி என்று பிரித்துக் கூறவில்லை. இந்த உண்மையைத்
திருக்குறளைப் படித்தோர்- படிப்போர், எல்லோரும்
ஒப்புக்கொள்ளுகின்றனர். இதையும் திருக்குறளைப் படிப்போர் உள்ளத்திலே
கொள்ளுவார்களாயின், திருவள்ளுவர் உலக மக்கள் எல்லாருக்கும்
பொதுவானவர்; திருவள்ளுவர் உலகம் போற்றும் உத்தமர்;
திருக்குறள் உலக மக்களுக்கெல்லாம் பொது நூல்; என்றுதான்
உறுதியாக எண்ணுவார்கள்.

கருத்துகள் இல்லை: