நூல் வரலாறு
நாலடியார் ஒரு சிறந்த நூல். இது ஒரு நீதிநூல். நானூறு வெண்பாக்கள்
அமைந்திருக்கின்றன. நாலடி நானூறு என்ற மற்றொரு பெயரும் இதற்கு
உண்டு.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு
உறுதி; இப்பழமொழி நாலடியாரின் பெருமையைக் காட்டும்; திருக்குறளின்
சிறப்பையும் உணர்த்தும். ‘‘நாலு’’ என்பது நாலடியார்; ‘‘இரண்டு’’ என்பது
திருக்குறள்.
‘‘பழகு தமிழ்ச்சொல் அருமை நாலிரண்டில்’’ என்பதும் நாலடியின்
சிறப்பையும், திருக்குறளின் பெருமையையும் காட்டும்.
இந்த நாலடியாரின் மாண்பை விளக்கும் மற்றொரு கதையும் உண்டு.
ஒரு காலத்திலே வட நாட்டிலே பெரும் பஞ்சம் உண்டாயிற்று;
எண்ணாயிரம் சமண முனிவர்கள் பஞ்சம் பிழைக்கப் பாண்டிய நாட்டுக்கு
வந்தனர். அவர்கள் மதுரையிலேயே தங்கினர். பாண்டிய
மன்னன் அவர்களை ஆதரித்து வந்தான்.
பஞ்சம் தீர்ந்தது; நாடு செழித்தது; முனிவர்கள் தங்கள் நாட்டிற்குப்
போக விரும்பினர். பாண்டியன் அவர்கள் செல்வதை விரும்பவில்லை.
தன்னுடைய நாட்டிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று
விரும்பினான்.
அந்தச் சமண முனிவர்கள் தமிழ் நாட்டில், பாண்டியன் பாதுகாப்பில்
பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தனர். இதற்குள் அவர்கள் தமிழை
நன்றாகக் கற்றிருந்தனர். கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தனர்.
இறுதியில் அவர்கள், தாங்கள் தங்கியிருந்த குடிசைகளில், தங்கள்
ஆசனங்களுக்கு அடியில் வெண்பாக்களை எழுதி வைத்தனர். இரவோடு
இரவாகப் பாண்டியனிடம் சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுப் போய்
விட்டனர்.
அவர்கள் போய்விட்டதை அறிந்தான் பாண்டியன்; அவர்கள் இருந்த
குடிசைகளைச் சோதனையிட்டான். அவர்கள் எழுதி வைத்த ஏடுகள்
கிடைத்தன.
எல்லாவற்றையும் படித்துப் பார்க்கும்படி புலவர்களுக்குக்
கட்டளையிட்டான். அப்பாடல்கள் ஒன்றிற்கு ஒன்று தொடர்பில்லாமல்
தனித்தனிப் பாடல்களாகக் காணப்பட்டன. இதை அறிந்த பாண்டியன்
அவைகளை வைகையாற்றிலே போட்டுவிடும்படி கூறினான்.
அரசன் கட்டளைப்படி அவைகள் வைகை வெள்ளத்தில் விடப்பட்டன.
அவைகளில் நானூறு வெண்பாக்கள் வெள்ளத்தோடு போகாமல் எதிர்த்து
வந்தன. அந்த நானூறு ஏடுகளையும் பொறுக்கினர். அவைகளில் இருந்த
நானூறு பாடல்களையும் சேர்த்தனர், நாலடியார் என்ற நூலாக்கினர்.
இதுதான் நாலடியாரைப் பற்றிய கதை.
அந்த எண்ணாயிரம் ஏடுகளில், வெள்ளத்திலே போய்விடாமல்
அங்கங்கே பல ஏடுகள் தங்கிக் கிடந்தன. அவைகளையும் ஒன்று
சேர்த்தனர்; நானூறு ஏடுகள் தேறின. அந்த நானூறு ஏடுகளில் இருந்த
நானூறு வெண்பாக்களையும் சேர்த்துப் பழமொழி என்ற நூலாக்கினர்.
இக்கதை பழமொழியை விட நாலடியார் சிறந்த நூல் என்பதற்காகவே
எழுந்தது.
நாலடியாரைப் பற்றிய இக்கதை கட்டுக் கதைதான். ஆனால்
நாலடியாரின் பெருமையை விளக்கவே இக்கதை பிறந்திருக்க வேண்டும்.
இக்கதையில் உள்ள இரண்டு உண்மைகளை மறுக்க முடியாது. ஒன்று,
நாலடியாரில் உள்ள வெண்பாக்கள் சமண சமயத்தவரால்
செய்யப்பட்டவை. இரண்டு, நாலடியார் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்ட நூல்
அன்று; பல ஆசிரியர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த இரண்டு
உண்மைகளும் அக்கதையிலிருந்து விளங்குகின்றன.
திருக்குறளிலே உள்ள பல கருத்துக்களை நாலடியாரிலே
காணலாம்.திருக்குறளைப் போலவே நாலடியாரும் மூன்று பால்களாகப்
பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
என்பவை. துறவறத்தைப் பாராட்டிப் பேசுதல்; உலக இன்பத்தை
வெறுத்துரைத்தல்; பெண்ணின்பத்தை நிலையற்றதென்று மறுத்துப்
பேசுதல்; ஊழ்வினை, மறுபிறப்பு, புலால் உண்ணாமை உயிர்க்கொலை
புரியாமை முதலியவைகளை வலியுறுத்தல்; இவைகள் சமண சமயத்தாரின்
சிறந்த கொள்கைகள். நாலடியாரிலே இக்கொள்கைகள் வலியுறுத்திக்
கூறப்படுவதைக் காணலாம்.
நாலடியாரைத் தொகுத்தவர் பதுமனார் என்னும் புலவர். இவரும் சமண
சமயத்தவர். இவர் நாலடியாரைப் பால், இயல், அதிகாரங்களாக வகுத்தார்.
அதற்கொரு பொழிப்புரையும் இயற்றினார்.
அறத்துப்பாலில் முதலில் துறவறத்தைப் பற்றிய பாடல்களே
தொகுக்கப்பட்டிருக்கின்றன. முதல் அதிகாரம் செல்வம் நிலையாமை;
இரண்டாவது அதிகாரம் இளமை நிலையாமை; மூன்றாவது அதிகாரம்
யாக்கை நிலையாமை.
‘‘செல்வம் நிலைக்காது; அழிந்துவிடும்; இளமைப் பருவமும் சிலநாட்கள்
தாம்; இளமைப் பருவம் கழிந்தால் கிழப்பருவம் வந்துவிடும்; நீர்மேல்
குமிழிபோன்றது உடம்பு; திடீரென்று மறைந்துவிடும். ஆகையால் செல்வம்
உள்ளபோதே-இளமைப்பருவம் இருக்கும்போதே-உயிரோடு வாழும்போதே-
உலக மக்களுக்கு நன்மை செய்யுங்கள். தந்நலந் துறந்து
வாழுங்கள். இந்தக் கருத்தையே முதல் மூன்று அதிகாரங்களிலும் உள்ள
முப்பது பாடல்களும் மொழிகின்றன.
திருக்குறளில் ஒரு அதிகாரத்தில் பத்துப் பாடல்கள் இருப்பதுபோலவே
நாலடியாரிலும் ஒரு அதிகாரத்தில் பத்துப் பாடல்கள் இருக்கின்றன. இவ்வாறு
நாற்பது அதிகாரங்களைக் கொண்ட நானூறு பாடல்களே நாலடியார்.
ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தலைப்பெயர்கள் உண்டு.
பழைய நூல்களிலே-சிறப்பாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே
உள்ள வெண்பாக்களில் நாலடியாரின் வெண்பாக்கள் மிகவும்
இனிமையானவை. இந்நூலை இரண்டு மூன்று முறை பொருள் உணர்ந்து
படித்தால் போதும்; அவ்வளவு வெண்பாக்களும் மனப்பாடமாகிவிடும்.
இதுதான் உயர்ந்த பாடல்களின் தன்மை.
சொல்லும் திறமை
சொல்லும் பொருளைத் தெளிவாக விளக்கிக் கூறுவதிலே நாலடிப்
பாடல்கள் மிகவும் சிறந்தவை. அப்பாடல்களிலே காட்டப்படும்
உவமானங்கள் அப்படியே உள்ளத்தைக் கவர்வனவாக இருக்கும்.
ஒரு மாமரம், அது நன்றாகக் காய்த்துப் பழுத்துக் குலுங்கியிருக்கின்றது.
ஒரே கிளையில் பழங்களும் இருக்கின்றன; காய்களும் இருக்கின்றன.
இச்சமயத்தில் ஒரு பெருங்காற்று வீசுகின்றது. இந்தக் காற்றிலே கனிகள் உதிர்ந்துவிடும்; காய்கள் உதிராமல் கிளைகளில் தங்கிவிடும்; என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அப்படிநடக்கவில்லை. கனிகளிலே சில உதிராமல் தங்கிவிட்டன; காய்கள் பல உதிர்ந்துவிட்டன. இந்த இயற்கை நிகழ்ச்சியை மனித வாழ்வோடு இணைத்துக் காட்டுகின்றது ஒரு பாட்டு.
‘‘மற்றுஅறிவாம் நல்வினை; யாம் இளையம்; என்னாது
கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்!
முற்றியிருந்த கனி ஒழியத், தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு
நல்வினைகள் செய்வதைப் பற்றிப் பிறகு எண்ணிப்பார்க்கலாம்.
இப்பொழுது நாம் இளமைப் பருவம் உள்ளவராகத்தானே இருக்கின்றோம்.
இப்பொழுதென்ன அவசரம் என்று நினைக்காதீர்கள்! கையில் பொருள்
உள்ள போதே ஒளிக்காமல் நல்லறங்களைச் செய்யுங்கள். முற்றியிருந்த கனி
உதிராமல் அப்படியே தங்கியிருக்கும்; கொடுங்காற்றால், பழுக்காத நல்லகாய்
உதிர்ந்து போவதும் உண்டு’’ (பாட்டு 19) இச்செய்யுள் மிகவும்அருமையான
செய்யுள். வயதேறியவர்கள் வாழ்வதும், இளையவர்கள் இறப்பதும் இயற்கை
என்பதை எடுத்துக் காட்டிற்று. இதன் மூலம் இளமைப் பருவத்தை நம்ப
வேண்டாம் என்றும் உரைத்தது.
மற்றொரு பாடல், மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தியை
உதாரணமாகக் காட்டி ஒரு நீதியை உணர்த்துகின்றது.
நாய் கடித்தால் அதைத் திருப்பிக் கடிப்பவர் யாரும் இல்லை. கடித்த
நாயைத் திருப்பிக் கடிக்க வேண்டும் என்று எந்தப் பைத்தியக்காரனும்
கருதமாட்டான்.
கெட்ட குணம் உள்ள சில அற்பர்கள், மனிதத் தன்மையின்றி, சில
நல்ல மனிதர்களின் மேல் வசைமாரி பொழியலாம் நல்ல மனிதர்கள்
அவர்களுக்கு எதிர்மாற்றம் கொடுக்கமாட்டார்கள்; ஒதுங்கித்தான்
போவார்கள். இக்கருத்தை விளக்குகிறது இச்செய்யுள்.
‘‘கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம் வாயால்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை-நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்கள் தம் வாயால் மீட்டு கோபங்கொண்டு நாய் தன் வாயால்
கடிப்பதைக் கண்டும், தாம் அந்த
நாயைத் தம் வாயினால் கடிப்பவர் யாரும் இல்லை. அதுபோல
மனிதத்தன்மையில்லாமல், கீழ்ப்பட்ட மக்கள் கீழான
வார்த்தைகளைக்கூறினால், உயர்ந்தவர்கள், அவைகளுக்கு மாறாகத் தாமும்
கீழான சொற்களைச் சொல்லமாட்டார்கள். (பாட்டு. 70)
மனிதத் தன்மையற்ற முறையில் வசை மொழிகளை அள்ளி
இறைப்பவர்களை, நாய்கள், என்று சொல்லிற்று இச்செய்யுள்.
மற்றொரு பாட்டு உலக இயற்கையை அப்படியே படம்பிடித்துக்
காட்டுகிறது. மக்களுடைய சுயநலத் தன்மையைத் தெளிவாக விளக்கிக்
காட்டுகின்றது.
‘‘கால்ஆடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
மேல்ஆடு மீனில் பலர் ஆவார்-ஏலா
இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட
தொடர்பு உடையேம் என்பார் சிலர்.
ஒருவர் செல்வம் உள்ளவராய்த் திரியும்போது. அவருக்கு உறவினர்கள
மிகுதியாக இருப்பார்கள். அவர்கள் வானில் மின்னுகின்ற நட்சத்திரங்களைக்
காட்டிலும் அதிகமாயிருப்பார்கள். குளிர்ந்த குன்றுகளையுடைய
பாண்டியனே! ஒருவர் தாங்க முடியாத துன்பங்களை அடைந்தபோது
அவருக்கு உறவினர்கள் மிகுதியாக
இருக்கமாட்டார்கள்; ஒரு சிலர்தான் உறவினர் என்று
சொல்லிக்கொள்ளுவார்கள்’’
(பாட்டு.113)
இன்றைய உலகிலே தமக்கென்று ஏதாவது சேர்த்து வைத்துக்
கொண்டிருக்கும் மக்கள்தாம் வாழ முடியும். ஒன்றுமில்லாத ஏழைகள் வாழ
முடியாது. செல்வம் படைத்தவர்களைத்தான் பலர் உறவு முறை பாராட்டிச்
சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஏழைகளை எவரும், தங்கள் உறவினர் என்று
சொல்லிக் கொள்ள மாட்டார்கள். இந்த இயற்கை உண்மையை எடுத்துக்
காட்டிற்று இவ்வெண்பா.
நட்பைப்பற்றிச் சொல்லும் மற்றொரு அழகான பாட்டு குறிப்பிடத்தக்கது.
அச்செய்யுளில் உள்ள உவமானம் படிப்போர் உள்ளத்திலே அப்படியே
படிந்துவிடும்.
‘‘நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியர் ஆயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்!
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்.
நாயின் கால்களில் உள்ள சிறியவிரல்கள் இடைவெளியின்றி
நெருங்கியிருக்கும்.
இதுபோல நன்றாக நெருங்கிப் பழகினாலும், ஈயின் சிறுகால் அளவுகூட
உதவி செய்யாதவர்களின் நட்பினால் பயன் இல்லை. வயல்களிலே பாய்ந்து
அவைகளிலே தானியங்களை விளையச் செய்கின்ற வாய்க்கால்
போன்றவர்களின் நட்பையே தேடிக்கொள்ள வேண்டும். அவர்கள்
தொலைத்தூரத்தில் இருந்தாலும் தேடிக்கொண்டுபோய் அவர்களுடைய நட்பைப் பெற வேண்டும்’’.(பாட்டு.218)
இச்செய்யுளிலே நெருங்கிப் பழகுவதற்கு, நாயின் கால் விரல்களும்,
சிறிய உதவிக்கு ஈயின்காலும் உவமானங்களாகக் காட்டப்பட்டன.
பொருத்தமான உவமானங்கள்.
கல்வி கற்பதின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக, கற்காதவனைப்பற்றி
இழித்துரைக்கும் செய்யுட்கள் எல்லாம் மிகச் சிறந்தவைகள். கல்லாதவனுக்குக்
காட்டும் உவமானங்கள் படிப்போர்க்கு நகைப்பை ஊட்டுவன. அவற்றுள்
ஒரு செய்யுள் கீழ் வருவது,.
‘‘கல்லாது நீண்ட ஒருவன், உலகத்து
நல் அறிவாளர் இடைப்புக்கு,-மெல்ல
இருப்பினும் நாய் இருந்து அற்றே; இராஅது
உரைப்பினும் நாய்குரைத்து அற்று.
கல்வி கற்காமல் மரம்போல் நீண்டு வளர்ந்த ஒருவன் நல்ல
அறிஞர்கள் நடுவிலே இருப்பதற்குத் தகுதி அற்றவன். அவன
நல்லறிஞர்களின் நடுவிலே புகுந்து மெல்ல உட்கார்ந்திருந்தாலும், ஒரு நாய்
உட்கார்ந்திருப்பதுபோல ஆகும். சும்மா இருக்காமல் ஏதேனும் சொல்லத்
தொடங்கி விடுவானாயின், நாய் குரைத்ததுபோல ஆகிவிடும்’’.
இச்செய்யுள் மூடனை நாய்க்கு ஒப்பிட்டது. அவன் பேசுவதை நாய்
குரைப்பதற்கு ஒப்பாக உரைத்தது. நாய் குரைப்பதிலும் பொருள் இருக்காது;
வெறும் ஒலிதான் உண்டு. கல்லாதான் சொற்களிலும் பொருள் இராது;
வெறும் ஓசைதான் நிரம்பியிருக்கும்.
நகைப்பையூட்டும் மற்றொரு சிறந்தவெண்பா குறிப்பிடத்தக்கது.
பலராலும் இகழத்தக்க மனிதர்கள் இன்னார்
என்று சுட்டிக் காட்டுகின்றது. அவ்வெண்பா, ஆழ்ந்த சிந்தனையும், அறிவும்
பெருந்தன்மையுள்ள குணமும் உடையவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின்
மதிப்புக் குரியவர்களாயிருப்பார்கள். தற்பெருமையும், வெகுளித் தன்மையும்
உள்ளவர்கள் பிறர் பழிப்புக்குத்தான் உரியவர்களாயிருப்பார்கள். இது
உலகில் நடக்கும் உண்மை நிகழ்ச்சி.
உறவினர்களிலே அதிகமாகப் பரிகசிப்பதற்கு உரிமை பெற்றவர்கள்
மைத்துனர்கள்; மச்சான் முறையிலே உள்ளவர்கள் எவ்வளவு
வேண்டுமானாலும் பரிகாசம் பண்ணலாம். தற்பெருமையுள்ளவர்களுக்கு
இத்தகைய மைத்துனர்கள் பெருகி விடுவார்களாம்.
‘‘கற்றனவும், கண் அகன்ற சாயலும், இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடுஎய்தும்; தான் உரைப்பின்
மைத்துனர் பல்கி, மருந்தில் தணியாத
பித்தன், என்று எள்ளப் படும்.
ஒருவனுடைய கல்வியைப் பற்றியும், தாராள குணத்தைப் பற்றியும்,
அவனுடைய குடும்பப் பெருமையைப் பற்றியும், பக்கத்தில உள்ளவர்கள்
பாராட்டிப் பேசவேண்டும். அப்பொழுதுதான் அவனுக்குப் பெருமை உண்டு.
இப்படியில்லாமல் தானே தன்னுடைய கல்வியைப் பற்றியும், தன்னுடைய
தாராளத் தன்மையைப் பற்றியும், குடும்பப் பெருமையைப் பற்றியும் புகழ்ந்து
பேசிக் கொண்டிருப்பானாயின் அவனுக்கு மைத்துனர்கள் பெருகி
விடுவார்கள். ‘‘அவனுக்குப் பைத்தியம் முற்றிவிட்டது; எவ்வளவு மருந்து
கொடுத்தாலும் அவன் பைத்தியம் தணியாது’’ என்று கேலி
பண்ணுவார்கள்’’
(பாட்டு.340)
தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுகின்றவன் பைத்தியக்காரன்; அவன்
பலர் நகைப்புக்குப் பாத்திரமாக இருப்பான்; என்ற உண்மையை இவ்வெண்பா எடுத்துக் காட்டிற்று.
தெரிந்த செய்திகள்; விளங்கக்கூடிய உவமானங்கள்; நகைச்சுவை தரும
பொருள்கள்; இவைகளைக் காட்டி உண்மைகளை உணர்த்துவதிலே நாலடிப்
பாட்டுக்கள் சிறந்தவை. மேலே எடுத்துக் காட்டியவை போன்ற பல
பாடல்கள் நாலடியிலே இருக்கின்றன. அவைகள் படித்துச் சுவைக்கத்
தக்கவை. ஆகையால்தான் நாலடியாரைத் திருக்குறளுக்கு அடுத்த சிறந்த
நூலாகப் போற்றுகின்றனர்; பாராட்டுகின்றனர்.
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையில்லாதவர்கள் எந்தக் காரியத்திலும் வெற்றி
பெறமாட்டார்கள். வெற்றியளிக்கும் கருவி தன்னம்பிக்கையேயாகும். ‘‘நம்மால்
என்ன செய்ய முடியும்? எல்லாம் ஆண்டவன் செயல். அவனன்றி அணுவும்
அசையாது. நாம் நினைப்பது ஒன்று; நடப்பது ஒன்று’’. இவ்வாறு வேதாந்தம்
பேசும் சில மனிதர்களைப் பார்க்கின்றோம். இப்படிச் சலிப்படைந்து
பேசுகின்றவர்கள் ‘‘நடப்பது நடக்கட்டும்’’. என்று சும்மா
உட்கார்ந்திருப்பார்களாயின் அவர்கள் வாழ்க்கையே பாழாகும். அவர்கள்
ஒரு காரியத்திலும் வெற்றிபெற மாட்டார்கள்.
தன்னம்பிக்கையும், அறிவும், முயற்சியுமே ஒரு மனிதனுடைய வெற்றி
நிறைந்த வாழ்வுக்குக் காரணம், இவை இன்மையே ஒரு மனிதனுடைய
தோல்விக்கும் வாழ்வின்மைக்கும் காரணம். இக்கருத்தை ஒரு பாடல்
எடுத்துக் காட்டுகின்றது.
‘‘நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழ்இடு வானும், நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.
தன்னை நல்ல நிலையிலே வாழ வைத்துக் கொள்ளுகின்றவனும்
தானேதான். தன்னுடைய நிலைமையைக் கெடுத்துத் தன்னைக் கீழ்
நிலையிலே தள்ளிக் கொள்ளுகின்றவனும் தானேதான். தான் இருக்கும்
நிலையைக் காட்டினும் இன்னும் உயர்ந்த நிலையிலே தன்னை வாழ
வைத்துக் கொள்ளுகின்றவனும் தானேதான். தன்னைத் தலைமைப்
பதவியிலிருக்கும்படி முதன்மையாகச் செய்து கொள்ளுகின்றவனும் தானேதான்’’.
(பா.248)
வாழ்க்கைக்கு அடிப்படை தன்னம்பிக்கைதான் என்பதை இச்செய்யுள்
உணர்த்தியது. வணிகர்கள், அரசியல்வாதிகள், வேறு துறைகளில்
ஈடுபட்டிருப்பவர்கள் அனைவர்க்கும் தன்னம்பிக்கையே வெற்றப் பாதைக்கு
வழிகாட்டும் விளக்காகும். இவ்வுண்மையை நாலடிச் செய்யுள் நமக்கு
அறிவிக்கின்றது.
செல்வத்தின் பயன்
ஒரு மனிதன் தன்னுடைய நன்மைக்காக மட்டும் செல்வம் சேர்ப்பதை
நாலடிப் பாட்டுக்கள் வெறுத்துரைக்கின்றன. உறவினர், ஊரினர், நாட்டினர்
நன்மைக்காகவே பொருள் சேர்க்கவேண்டும்; என்று பல பாடல்களிலே
கூறப்படுகின்றன.
‘‘பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க.
ஏர் உழுது பெற்ற செல்வத்தைப் பலரோடும்பகிர்ந்து உண்ணவேண்டும்’’
(பா.2)
‘‘ஆற்றப், பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின். (பா.6)
மிகவும் நிறைந்த செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கின்றவர்களே!
அவைகளை வறியவர்களுக்குக் கொடுங்கள்’’
‘‘தூய்த்துக் கழியான், துறவோர்க்கு ஒன்று ஈகலான்
வைத்துக் கழியும் மடவோன்.
தானும் அனுபவித்துக் கழிக்கமாட்டான்; செல்வம் அற்ற வறியோர்க்கும்
ஒன்றும் உதவமாட்டான்; பயனின்றிப் பொருளைச் சேர்த்து வைத்துவிட்டு
இறப்பான்; இவன் அறிவற்ற மடையன்’’.
(பா.273)
இவ்வாறு செல்வத்தைப் பற்றிப் பல பாடல்களிலே கூறப்படுகின்றன.
செல்வம்அனுபவிப்பதற்கே யன்றிச் சேர்த்து வைத்துப் பார்த்து மகிழ்வதற்காக
அன்று என்பதை ஒரு பாட்டு தெளிவாகக் கூறுகின்றது. செல்வத்தைச்
சேர்த்து வைத்துக்கொண்டு சும்மா பார்த்துக் கொண்டிருப்பவனும், செல்வம்
இல்லாதவனும் சமமானவர்கள் என்று அச்செய்யுள் எடுத்துக் காட்டுகின்றது.
‘‘எனது எனது என்றிருக்கும் ஏழை பொருளை,
எனது எனது என்றிருப்பன் யானும்,-தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன் துவ்வான்,
யானும் அதனை அது.
அறிவில்லாதவன் தான் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை
‘‘என்னுடையது, என்னுடையது’’ என்று நினைத்துக் கொண்டிருப்பான்.
அவனைப் போலவே யானும் அச்செல்வத்தை ‘‘என்னுடையது.
என்னுடையது’’ என்று எண்ணிக் கொண்டிருப்பேன். அது அவனுடைய
செல்வமாயிருக்குமானால் அவன் அதை எடுத்து அனுபவிப்பான்; பிறருக்கும்
கொடுப்பான்; அப்படி அவன் அதனைப் பிறருக்கு வழங்குவதில்லை; அதன்
பயனை நுகர்தலும் இல்லை. யானும் அச்செல்வத்தை அவனைப் போலவே.
பிறருக்குக் கொடுக்காமலும், அனுபவிக்காமலும் வைத்திருக்கின்றேன்.’’
இச்செய்யுள் வழங்காமலும், அனுபவிக்காமலும் வைத்திருக்கின்றவனுடைய
செல்வம் அவனுக்கு உரியது அன்று என்பதை விளக்கி உரைத்தது. இவை
போன்ற பல செய்யுட்கள் செல்வப் பொருளை வீணாகச் சேர்த்து
வைத்திருப்பதனால் பயனில்லை என்று கூறுகின்றன. வாழ்வதற்கும்,
வழங்குவதற்குந்தான் செல்வம் வேண்டும் என்று கூறுகின்றன.
பெண்ணுரிமை
நாலடியார் காலத்திலே பெண்களுக்கு உரிமையிருந்ததில்லை. அவர்கள்
ஆண்களுக்கு அடங்கி நடக்கும் அடிமைகளாகத்தான் கருதப்பட்டார்கள்.
ஆயினும் இல்லற வாழ்வு தழைக்கப் பெண்கள்தாம் காரணம் என்று
கருதப்பட்டனர். ‘‘ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால்’’ என்ற
கொள்கை தமிழகத்தில் நீண்டகாலமாக உண்டு. அன்பும், அறிவும்,
நற்பண்பும், திறமையும் உள்ள பெண்களால் தான் குடும்பங்கள்
சிறப்படையும்; இவையற்ற பெண்கள் வாழும் குடும்பத்திலே எந்த இன்பமும்
இராது; அக்குடும்பமும் பாழாகும்.
‘‘மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதுஓர் காடு,
சிறந்த குணங்கள் அமைந்த மனையாளைப் பெறாதவனுடைய வீடு
பார்ப்பதற்குப் பயங்கரமான ஒரு காடாகும்’’.
(பா.361)
இதனால் இல்வாழ்வு இனிது நடைபெற வேண்டுமானால் பெண்கள்
நற்பண்புள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இல்வாழ்வுக்குத்தகுதியற்ற பெண்டிர்-கணவனுக்கும், குடும்பத்திற்கும் தீமை
விளைக்கும் பெண்டிர்-எவர் என்பதை ஒரு பாட்டு விளக்கிக் கூறுகின்றது.
விரும்பத்தகாத கொடுங்குணம் படைத்த பெண்ணை மனையாளாகக்
கொண்டவன் என்றும் துன்புறுவான்.
‘‘எறிஎன்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி; -அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.
அடி என்று சொல்லிக்கொண்டு கணவனை எதிர்த்து நிற்பவள் எமன்;
விடியற்காலத்திலேயே சமையல் கட்டையடைந்து உணவுப் பொருள்களைச்
சமைக்காதவள் ஒரு பெரிய நோய்; சமைத்த உணவைப் பசி நேரத்தில்
பரிமாறாதவள் வீட்டில் வாழும் பேய்; இக்குணமுள்ள பெண்கள் தம்மைக்
கொண்ட கணவனைக் கொல்லும் ஆயுதம் ஆவர்’’.
கணவன் சொல்லுக்குக் கீழ்ப்படிவது; காலதாமதம் இன்றிச் சமையல்
செய்வது; சமைத்ததை அன்புடன் பரிமாறுவது; இவை மனைவியின் சிறந்த
கடமை என்று வற்புறுத்துகிறது இச்செய்யுள். கணவனுக்குப் பணிவிடை
செய்யவேண்டியதே மனைவியின் கடமை என்பது பழந்தமிழ் நாட்டுப் பண்பு.
வீட்டிலிருந்துகொண்டு இல்லறத்தை நன்றாக நடத்த வேண்டுவதுதான
பெண்கள் கடமை. ஆயினும் அவர்களும் கல்வி கற்றிருக்கவேண்டும்.
ஆண்களைப் போலவே கல்வி கற்கும் உரிமை பெண்களுக்கும் உண்டு.
இக்கொள்கையை நாலடியார் ஒப்புக்கொள்ளுகிறது.
‘‘குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டு அழகும்,
மஞ்சள் அழகும் அழகல்ல;-நெஞ்சத்து
நல்லம் யாம், என்னும் நடுவுநிலைமையால்
கல்வி அழகே அழகு
தலைமயிரின் அழகும், வளைந்து கொடுக்கும் துணியின் கரையழகும்,
மஞ்சள் பூசிக்கொள்ளுவதனால் உண்டாகும் அழகும் அழகல்ல. உள்ளத்திலே, ‘‘நாம் நல்ல வழியில் நடக்கின்றோம்; நடுவு
நிலைமையில் வாழ்கின்றோம்’’ என்னும் குற்றமற்ற நிலைமையை
உண்டாக்குவதனால், கல்வியின் அழகுதான் சிறந்த அழகாகும்’’. (பா.131)
இச்செய்யுள் ஆண்களுக்கும் கல்வி வேண்டும்; பெண்களுக்கும் கல்வி
வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. குஞ்சி-என்பது ஆண்களின்
தலைமயிர்; உடுக்கும் ஆடையிலே கண்ணைக் கவரும் கரை அமைந்திருக்க
வேண்டும் என்று ஆண்களும் விரும்புவர்; பெண்களும் விரும்புவர்; மஞ்சள்
பூசிக்கொண்டு குளிப்பது பெண்கள் வழக்கம். ஆகையால் இது
இருபாலர்க்கும் பொதுவான செய்யுள்.
மானமுள்ள வாழ்வு
எவ்வளவு துன்பம் வந்தாலும் மானங்கெடாமல் வாழவேண்டும்.
பசிப்பிணியால் சாவதாயிருந்தாலும் தன்னை இழிவாக மதிப்பவர்களின்
இல்லத்திலே உணவருந்தக் கூடாது இதுவே தமிழர்களின் சிறந்த பண்பாடு.
இந்தப் பண்பாட்டை நாலடிப் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
‘‘தன் உடம்பின்
ஊன் கெடிதும் உண்ணார்கைத்து உண்ணற்க
தன் உடம்பில் உள்ள சதை வற்றிப்போனாலும் - உடம்பு
எலும்புந்தோலுமாக இளைத்துப் போனாலும்,-உண்ணத்தகாத பகைவர்
கையிலிருந்து உணவு பெற்று உண்ணக் கூடாது’’. (பா.80)
‘‘பொற்கலத்துப் பெய்த புலி உகிர் வான்புழுக்கல்
அக்காரம், பாலோடு, அமரார் கைத்து உண்டலின்
உப்புஇலி புற்கை, உயிர்போல் கிளைஞர்மாட்டு,
எக்கலத்தானும் இனிது.
பொன் பாண்டத்திலே புலிநகம் போன்ற வெண்மையான சோறு,
சர்க்கரை, பால் இவைகளைத் தம்மை மதியாதாரிடம் பெற்று உண்பதனால்
இன்பம் இல்லை. இதைவிட உயிர்போன்ற உறவு பூண்டவரிடம், உப்பில்லாத
கூழை மண்பாண்டத்திலே பெற்று உண்டாலும் இனிமையுண்டு‘‘.
(பா.206)
‘‘நாள்வாய்ப் பெறினும் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்
நாள்தோறும் குறித்த நேரத்திலே கிடைப்பதாயினும், தன்னை
விரும்பாதார் இல்லத்திலே அவர்கள் உதவும் பொரிக்கறியோடு கூடிய சோறு
இனிமை தராது; உண்டால் வேம்பு போலவே கசக்கும்’’. (பா.207)
இவைகள் விரும்பாதார்-மதியாதார்-பகைவர் இல்லத்திலே உணவுண்பது
தீமை என்பதை எடுத்துக் காட்டின. அவ்வாறு செய்வது மனிதத் தன்மையற்ற
செயல்; மானங்கெட்ட நடத்தை என்பதையும் உணர்த்தின.
சாதி வேற்றுமை
நாலடியார் காலத்திலே தமிழ் நாட்டிலே சாதி வேற்றுமை
நிலைத்திருந்தது. வருணாசிரம தருமக் கொள்கைகள் வேரூன்றியிருந்தன.
பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கருத்து பரவியிருந்தது.
‘‘தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணில் கடைப்பட்டான்
தோணி ஓட்டுகின்றவன், பழமையான நால்வகை வருணங்களிலே,
ஆராய்ந்து பார்த்தால் கடைப்பட்ட வருணத்தைச் சேர்ந்தவன்’’
தமிழகத்திலே பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்னும் நான்கு
வருணங்களும் இருந்தன. கடைப்பட்ட சூத்திர வருணத்தைச் சேர்ந்தவர்களே தோணிகள் ஓட்டும் தொழில் செய்து
வந்தனர். மேற்கண்டவரிகள் இவ்வுண்மையைக் கூறின.
‘‘சான்றாண்மை, சாயல், ஒழுக்கம், இவைமூன்றும்
வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது-வான்தோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெரும்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.
வானை அளாவிய-மேகங்கள் தவழும் மலைகளையுடைய பாண்டியனே!
நிறைந்த நற்பண்புகள், அடக்கம், நல்லொழுக்கம், இவை மூன்றும் உயர்ந்த
குடியிலே பிறந்தவர்களிடம் மட்டுமே காணப்படும். உயர்ந்த குடியிலே
பிறக்காதவர்கள் செல்வத்தைப் பெற்றாலும், இக்குணங்களைப்
பெறமாட்டார்கள்’’.
(பா.142)
‘‘செல்லா விடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
செல்இடத்தும் செய்யார் சிறியவர்.
நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் செல்வாக்கையிழந்த
வறுமைக்காலத்திலும் பிறர்க்குத் தம்மால் இயன்ற உதவியைச் செய்வார்கள்.
கீழ்ப்பட்ட குடியிலே பிறந்தவர்கள், செல்வாக்குள்ள-பணம் படைத்த
காலத்திலும் பிறகுக்கு உதவி செய்யமாட்டார்கள்’’. (பா.149)
இவைகள் குடிப்பிறப்பால் மக்கள் குணங்கள் வேறு பட்டிருக்கின்றன
என்பதை உணர்த்தின. உயர்ந்த குடும்பத்திலே பிறந்தவர்களிடம் உயர்ந்த
குணங்கள் இருக்கும். இழிந்த குடியிலே பிறந்தவர்களிடம் தாழ்ந்த குணங்கள்
காணப்படும். இவை முன்னோர் நம்பிக்கை.
ஆயினும் பிறப்பைக்கொண்டு மட்டும் ஒருவரை உயர்வாகவோ
தாழ்வாகவோ எண்ணிவிடக்கூடாது. எக்குடியிலே பிறந்தோராயினும்
கற்றறிந்தவர் சிறந்தவர். அவர்களைச் சிறந்தவராகப் பாராட்ட வேண்டும்.
அறிவும்
ஒழுக்கமுமே மக்களுக்கு மதிப்பைத் தருவன; பிறப்பு மட்டும் அன்று.
இச்சிறந்த கொள்கையையும் நாலடியார் எடுத்துரைக்கின்றது.
‘‘களர்நிலத்துப் பிறந்த உப்பினைச், சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
கடைநிலத்தோர் ஆயினும், கற்றறிந்தோரைத்
தலைநிலத்து வைக்கப்படும். (பா.133)
களர் நிலத்திலே ஒன்றும் விளையாது; மட்டமான நிலம். ஆயினும்
அந்த நிலத்திலே விளைந்த உப்பை அறிஞர்கள் ஒதுக்கிவிடமாட்டார்கள்.
நல்ல விளைநிலத்திலே பிறந்த நெல்லைக் காட்டினும் சிறந்ததாகக்
கொள்ளுவார்கள். அதைப்போலக் கடைப்பட்ட குடியிலே பிறந்தவராயினும்,
கற்றறிந்தோர் உயர்ந்த இடத்திலே பிறந்தவர் போல் வைத்துப்
பாராட்டப்படுவார்கள்’’.
இச்செய்யுள் கல்வி கற்றவர்கள் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுவார்கள்
என்பதை எடுத்துக்காட்டிற்று. மேற் காட்டியவைகளால் கல்வி, அறிவு,
ஒழுக்கங்களால், பிறப்பினால் ஏற்படும் உயர்வு தாழ்வுகள் ஒழியும் என்பதை
அறியலாம்.
வடக்கும் தெற்கும்
வடநாடு புண்யபூமி; தென்னாடு பாவ பூமி என்று ஒரு கொள்கையுண்டு.
வட நாட்டில் உள்ளவர்கள் புண்யம் செய்வார்கள்; சுவர்க்கம் பெறுவார்கள்;
தென்னாட்டினர் வடநாட்டிற்குச் சென்றால் ஒழுக்கத்திலே உயர்ந்து
உத்தமராக மாறுவர். வடநாட்டினர் தென்னாட்டிற்கு வந்தால்
ஒழுக்கங்கெடுவார்கள்; கீழ்மைக்குணம் அடைவார்கள். இத்தகைய நம்பிக்கை
பண்டைக்காலத்திலிருந்தது.
இக்கொள்கையை நாலடியார் பாட்டு ஒன்று மறுத்துரைக்கின்றது.
‘‘அவரவர்கள் தன்மைக் கேற்றபடியே நன்மை தீமை பெறுவார்கள்; அவர்கள்
பெறும் நன்மை தீமைகளுக்கு அவர்கள் வாழும் நாடு காரணம் அன்று’’
என்று கூறுகின்றது அச்செய்யுள்.
‘‘எந்நிலத்து வித்துஇடினும் காஞ்சிரம்காழ் தெங்கு ஆகா
தென்னாட்டவரும் சுவர்க்கம் புகலால்;
தன்ஆற்றான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன் ஆளர் சாலப் பலர்
எந்த நிலத்திலே விதையைக்கொண்டு போய்ப் போட்டாலும் காஞ்சிரம்
விதை தென்னை மரமாக முளைத்துவிடாது. தென்னாட்டில் உள்ளவர்களும்,
நற்கருமங்களைச் செய்கின்றனர்; சுவர்க்கம் அடைகின்றனர். வடநாட்டிலும்
வீண்பொழுது போக்குவோர் பலர் உண்டு. அவர்கள் நற்கதி பெறுவதில்லை;
நரகத்தையே அடைகின்றனர். ஆதலால் ஒருவன் மறுமையிலே பெறும்
நன்மைக்கு நாடு காரணம் அன்று; தன் ஒழுக்கமே - நடத்தையே
காரணமாகும்’’.
(பா.243)
இச்செய்யுள் வடநாடு புண்ணிய பூமி; தென்னாடு பாவபூமி என்னும்
கொள்கை தவறு என்பதை எடுத்துக் காட்டிற்று.
திருக்குறள் கருத்துக்கள்
நாலடியார் பாடல்களிலே பல, திருக்குறளின் கருத்துக்களை விளக்கிக்
கூறுகின்றன. திருக்குறளை நன்றாகக் கற்ற ஆசிரியர்களால் பாடப்பட்ட
பாடல்களே நாலடிப் பாடல்கள் என்று எண்ணலாம்.
கூடு தனித்திருக்கும்படி, அதில் உள்ள பறவை பறந்து போவது
போன்றதாகும் உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு’’ என்பது
திருக்குறள். இக்குறளின் கருத்து,
‘‘குடம்பை தனித்தொழியப் புள்பறந்து அற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.
கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள்;-வாளாதே
சேக்கைமரன் ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.
என்ற நாலடிப் பாட்டிலே காணப்படுகின்றது. சேக்கை-கூடு.
‘‘தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று எல்லாம்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.
தவம் செய்பவரே தம்முடைய கடமையைச் செய்கின்றவர்; தவம்
செய்யாதவர்கள் இவ்வுலக இன்ப ஆசையிலே அகப்பட்டுக்கொண்டு வீண்
செயல்களைச் செய்கின்றவர் ஆவர்’’ இத்திருக்குறளின் கருத்தை
‘‘நிலையாமை நோய்மூப்புச் சாக்காடு என்றெண்ணித்
தலைஆயார் தம்கருமம் செய்வார்’’
என்ற நாலடி வெண்பாவிலே காணலாம்
‘‘பகை, பாவம், அச்சம், பழி யென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்
பிறன் மனையாளிடம் நெறிதவறிச் செல்கின்றவனிடம், பகை, பாவம்,
பயம், பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் நீங்காமல் நிலைத்திருக்கும்’’ என்பது திருக்குறள்.
‘‘அறம், புகழ் கேண்மை பெருமை இந்நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா-பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோடு இந்நாற் பொருள்’’
என்பது நாலடியார். இவை இரண்டும் ஒரே கருத்துடையன. இந்நாலடி
வெண்பா மேலே காட்டிய திருக்குறளுக்குப் பொருள் கூறுவதுபோல்
அமைந்திருக்கிறது.
‘‘ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஓருங்கு.
சிறந்த செல்வத்தை மிகுதியாகச் சேர்த்து வைத்திருப்பவர்களுக்கு, மற்ற
அறம், இன்பம் இரண்டும் எளிதிலே கிடைக்கும் பொருள்களாம்’’ இது
திருக்குறள்.
‘‘வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்;
நடுவணது எய்தாதான் எய்தும் வையத்து
அடுவது போலும் துயர்’’.
இது நாலடி வெண்பா. மேலே காட்டிய திருக்குறளும், இந்த நாலடியும்
ஒரே பொருளைக் கூறுகின்றன.
உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
என்னும் திருக்குறளும்,
விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு
என்ற நாலடியும் ஒத்திருக்கின்றன. கண்ணை மூடுவதைச் சாவுக்கும்,
கண்ணைத் திறப்பதைப் பிறப்புக்கும் உவமானமாகக் கூறியிருக்கின்றன.
தினைத்துணை நன்றிசெயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
என்றது திருக்குறள்
தினைஅனைத்தே ஆயினும் செய்த நன்று உண்டால்
பனைஅனைத்தா உள்ளுவர் சான்றோர்
என்பது நாலடியார். இவைகள் இரண்டும் ஒரே கருத்தைக் கொண்ட
செய்யுட்கள்.
இவ்வாறு நாலடியாரிலே திருக்குறளின் கருத்துக்கள் பலவற்றைக்
காணலாம். நாலடியாரைப் படிப்போர் அவைகளைக் கண்டுணரலாம்.
நம்பிக்கை, பழக்க வழக்கங்கள்
நாலடியார் காலத்திலே தமிழகத்து மக்களிடம் குடி கொண்டிருந்த பல
நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் இந்நூலிலே காணலாம்.
தர்க்கமும், சோதிடமும் பயனற்றவை. அவைகளிலே நம்பிக்கை
வைப்பதால் பயன் இல்லை. தர்க்க நூலைப் படித்துக்கொண்டு
பொழுதுபோக்குவதனால் எந்த நன்மையையும் அடைந்துவிட முடியாது;
சோதிடம் பார்த்துத் தம் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள
முடியாது. சோதிடம் பார்ப்பதால்-அதை நம்புவதால்-தம் வாழ்க்கையிலே
இன்ப துன்பங்களைத் தேடிக்கொள்ள முடியாது. தருக்கத்தையும்,
சோதிடத்தையும் நம்புகின்றவர்கள் பைத்தியக்காரர்கள்; அவர்களைக்
காட்டிலும் அறிவற்றவர்கள் எவரும் இல்லை.
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
பித்தரில் பேதையார் இல். (பா.52)
என்பது மேலே கூறி கொள்கையை வலியுறுத்துகின்றது.
பாம்பு மந்திரத்திற்குக் கட்டுப்படும் என்று நம்பினர். மந்திரித்த
திருநீற்றை வீசினால் படமெடுத்தாடும் பாம்பு அடங்கிவிடுமாம்; படத்தைச்
சுருக்கிக்கொள்ளுமாம்.
‘‘இடுநீற்றல் பை அவிந்த நாகம்; (பா.66) முன்னே போட்ட திருநீற்றால்
படம் அடங்கிய பாம்பு’’ என்பது இதை உணர்த்துகின்றது.
நாலடியார் காலத்திலே நல்ல நாள் பார்த்து அந்நாளிலே திருமணம்
செய்யும் வழக்கம் இருந்தது. திருமணக் காலத்தில் பலரும் அறியும்படி
வாத்தியங்கள் முழங்கும்.
‘‘பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க மெல்இயல்.
பலரும் அறியும்படி பறையடித்து, நல்ல நாள் கேட்டு, கல்யாணம்
புரிந்துகொண்டு மனைக்குள் புகுந்த மெல்லிய தன்மையுடையவள்’’
(பா.85)
பறையடிப்பதிலே மணப்பறை, பிணப்பறை என்று இரண்டு வகைப்
பறைகள் உண்டு; மணம் செய்யும் போது அடிக்கும் பறை மணப்பறை;
இறந்தவர்க்காக அடிக்கப்படும் பறை பிணப்பறை.
மன்றம் கறங்க மணப்பறை ஆயின
அன்றுஅவர்க்கு ஆங்கே பிணப்பறையாய்ப் பின்றை
ஒலித்தலும் உண்டாம். (பா.23)
கல்யாண மண்டபம் முழுதும் ஒலிக்கும்படி மணப்பறையாக
அடிக்கப்பட்ட பறை. அன்றே, அவருக்கு அவ்விடத்திலே பிணப்பறையாக
மாறி ஒலிக்கவும் கூடும்’’.
தீவினை செய்தவர்கள் தாம் செய்த தீவினைகளின் பயனை மீண்டும்
பிறந்து அனுபவிப்பார்கள். இந்த நம்பிக்கை நாலடியார் பாடல்களில்
காணப்படுகின்றது.
‘‘அக்கே போல் அங்கை ஒழிய விரல் அழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே,-அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால் (பா.123)
சங்குமணியைப் போன்ற வெள்ளையான எலும்புடன் உள்ளங்கை மாத்திரம்
இருக்க, ஏனைய விரல்கள் எல்லாம் அழுகித், துன்பத்தைத் தரும்
தொழுநோயால் வருந்துவர். முன்பிறப்பிலே நண்டைக் காதலித்து அதன்
காலை முறித்துத் தின்ற பழவினையின் கொடுமை வந்தால் இவ்வாறு
துன்புறுவர்’’. தொழுநோய்- குட்டநோய். தொழுநோய்க்குக் காரணம்
பழந்தீவினைதான் என்று உரைத்தது இச்செய்யுள்.
சீதேவி, மூதேவி, கலைமகள், இலக்குமி, இந்திராணி, சிவன், திருமால்,
கூற்றுவன் முதலிய தெய்வங்கள் நாலடியாரிலே காணப்படுகின்றன.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே இன்றும் நாலடியார் ஒரு சிறந்த
நூலாகக் காணப்படுகின்றது. இந்நூலிலே கூறப்படும், நீதிகளும், அறங்களும்
அனைவர்க்கும் பொதுவானவை.
கருத்துகள்