நூல் வரலாறு
ஐந்திணைகளைப்பற்றியும் வரிசையாகச் சொல்லுவது; நூற்றுஐம்பது
பாடல்கள் அடங்கியது; திணைமாலை நூற்றைம்பதாகும்.
பெயர், திணைமாலை நூற்றைம்பது; ஆனால் இதிலிருக்கும்
வெண்பாக்களின் எண்ணிக்கை நூற்றுஐம்பத்து மூன்று. இதன் இறுதியிலே
பாயிரச் செய்யுள் ஒன்று காணப்படுகின்றது. ஆக இந்நூலில் இன்றுள்ள
பாடல்கள் 154 ஆகும்.
படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்
என்று ஒரு பழமொழி உண்டு. பழங்காலத்திலே நூல்கள் எல்லாம்
பனையோலையில் எழுதப்பட்டு வந்தன. அப்பொழுது ஒருவர் படிப்பார்;
மற்றொருவர் எழுதுவார். படிப்பவர் தப்பாகப் படிப்பதும் உண்டு;
எழுதுகிறவர் தப்பாக எழுவதும் உண்டு. இதுமட்டும் அன்று, அவர்கள்
தங்களுக்குப் பிடித்தமானவற்றைச் சேர்த்தும் எழுதிவிடுவார்கள். இந்த
உண்மையைக் குறிப்பதுதான் மேலே காட்டிய பழமொழி.
இந்நூலுள் அளவுக்குமேல் உள்ள மூன்று பாடல்கள் பிற்காலத்தினரால்
சேர்க்கப்பட்டிருக்கலாம். பாயிரச் செய்யுள் ஆசிரியர் பாடியதன்று.
வேறொருவரால் நூலைச் சிறப்பித்துப் பாடப்பட்டதாகும்.
குறிஞ்சியில் 31 வெண்பா; நெய்தலில் 31 வெண்பா; பாலையில் 30
வெண்பா; முல்லையில் 31 வெண்பா; மருதத்தில் 30 வெண்பா; திணையும் இந்த வரிசையிலேயே அமைந்திருக்கின்றது. குறிஞ்சியிலும் நெய்தலிலும்
முல்லையிலும் ஒவ்வொரு வெண்பா மிகுந்திருக்கின்றது.
இந்நூலாசிரியர் பெயர் கணிமேதாவியார். கணி என்றால் சோதிடர்;
மேதாவியார் என்றால் வல்லுநர்; கணிமேதாவியார் என்றால் சோதிடத்திலே
வல்லுநர் என்று பொருள் கொள்ளலாம். இவரைப்பற்றிய வரலாறு வேறு
ஒன்றும் தெரியவில்லை.
இந்நூலின் வெண்பாக்கள் சிறிது கடினமானவைதாம்; எல்லோரும்
படித்து எளிதில் பொருள் தெரிந்து கொள்ளமுடியாது; எல்லா
வெண்பாக்களிலும் மோனையும் எதுகையும் அழகாக அமைந்திருக்கின்றன.
ஆயினும் அவ்வளவு இனிமையான நடையென்று நவில முடியாது.
பல பாடல்களுக்கு நேராகப் பொருள் கூறலாம்; சில பாடல்களுக்கு
நேராகப் பொருள் சொல்ல முடியாது. பதங்களை மாற்றியமைத்துப் பொருள்
சொன்னால்தான் தெளிவாக விளங்கும். பழந்தமிழ்ச் சொற்கள் பல இந்நூல்
பாடல்களிலே பயின்று வருகின்றன. இப்பாடல்களிலே குறிப்பிடப்படும் சில
மலர்கள், மரங்களைப்பற்றி இன்று அடையாளம் காண முடியாது. போதுமான
தமிழ்ப் பயிற்சியில்லாதவர் இந்நூலைப் படிக்கும்போது சிறிது பொறுமையும்,
முயற்சியும் காட்டித்தான் ஆகவேண்டும்.
ஒவ்வொரு திணையைப்பற்றிய பாடல்களும், அந்தந்த நிலத்தில் உள்ள
இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்தது போல எடுத்துக்காட்டும். இயற்கை
நிகழ்ச்சிகளை எடுத்துரைப்பதிலே இந்நூலாசிரியர் மிகவும் வல்லுநர். தமிழர்
பண்பாட்டையும் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் இந்நூலாசிரியர்
குறிப்பிட்டுள்ளார்.
பாடல்கள்
இந்நூற்பாடல்களின் பொருட் சிறப்பைக்காண இரண்டொரு
வெண்பாக்களே போதும். உதாரணமாகச் சில பாடல்களைக் காண்போம்.
மணமாகாத மங்கை ஒருத்தி; குறிஞ்சி நிலப் பெண்;
தினைப்புனங்காத்திருந்தாள். நாளடைவில் அவளுடைய தோற்றத்திலே
மாறுதல் காணப்பட்டது. அதனால் அவளுடைய நடத்தையிலே ஐயமுற்றனர்
பெற்றோர். உடனே ‘‘தினைப்புனம் காத்ததுபோதும்; வீட்டுக்கு
வந்து விடு’’ என்று சொல்லி அந்தப் பெண்ணை வீட்டிலேயே
வைத்துவிட்டனர். வைத்தும் அவளிடம் ஏற்பட்ட மாற்றம் மட்டும்
மறையவில்லை. மேலும் மாறிக்கொண்டே வந்தாள். அவளுடைய மாறுதல்
வளர்ந்து கொண்டே வந்தது.
அந்த மங்கையை வளர்த்த செவிலித்தாய் அவளுடைய மாறுதலுக்குக்
காரணத்தை அறிய விரும்பினாள். அக்காரணம் தோழிக்குத் தெரியும்; அவள்
தனக்குத் தெரிந்ததை மறைக்காமல் செவிலித்தாயிடம் சொல்லுகின்றாள்.
‘‘நமது மலையுள் பலாமரங்கள் நிறைந்திருக்கின்றன; இன்னும் பல
வளங்களும் நிறைந்திருக்கின்றன. அதன் அண்டையிலே உள்ள
தினைப்புனத்திலே நானும் என் தலைவியும் பரண் மேலே அமர்ந்து காவல்
காத்துக் கொண்டிருந்தோம். அச்சமயத்தில் பருத்த துதிக்கையையுடைய ஒரு
யானை - அதுவும் மதம் பிடித்த யானை - எங்களை நோக்கிச் சினத்துடன்
ஓடிவந்தது. உடனே ஒரு கட்டிளங்காளை தோன்றினான்; அந்த
யானையை அலறிக்கொண்டு ஓடும்படி அடித்து விரட்டினான். எங்களைக்
காப்பாற்றினான். அவனையே என் தலைவியின் தோள்கள்
தழுவிக் கொள்ளும்; வேறொருவன் தோள்களைத் தொடுவதற்குச் சம்மதிக்கமாட்டா’’ என்றாள் தோழி. இதன் மூலம் தன் தலைவியின் மாறுதலுக்கான காரணத்தைக் கூறினாள். எங்கள் உயிரைக் காப்பாற்றிய அவனுடைய நன்றியை எம் தலைவி மறக்கமாட்டாள். நன்றி மறத்தல் தமிழர் பண்பாடன்று; என்ற தமிழர் நெறியையும் உரைத்தாள் தோழி, இதை உணர்த்தும் செய்யுள் கீழ் வருவது.
வருக்கை
வளமலையுள், மாதரும் யானும்
இருக்கை இதண் மேலேம் ஆகப்; -பருக்கைக்
கடாஅ மால் யானை கடிந்தானை அல்லால்,
தொடாஅ ஆல், என் தோழி தோள். (பா.14)
இச்செய்யுளின் வழியாகத் தமிழரின் நன்றி மறவாத உயர்ந்த
பண்பாட்டைக் காணலாம். தமிழரின் பண்பாட்டைக் குறிக்கும் மற்றொரு
பாடலையும் கீழே காண்போம்.
களவு மணவாழ்க்கையிலே வாழும் தம்பதிகள் இருவர். அவர்கள் தம்
களவு வெளிப்படுவதற்கு முன்பு கற்பு மணத்தம்பதிகளாகி விடவேண்டும்
என்று முடிவு செய்தனர். இதன்பின் தலைவன், தன் காதலியை அவளுடைய பெற்றோர் அறியாமல் தன்னுடன் அழைத்துக் கொண்டுபோய் விட்டான். கருத்து ஒருமித்த காதலர்கள் மணம் புரிந்து கொள்ளுவதற்கு,
ஏதேனும் தடை ஏற்பட்டால், இவ்வாறு செய்வது பண்டைக் கால வழக்கம்.
தலைவியை வீட்டிலே காணாத செவிலித்தாய், அவளைத்
தேடிக்கொண்டு புறப்பட்டாள். பாலை நிலத்தின் வழியே அவள்
போகும்போது எதிரிலே வந்த மற்றொரு தம்பதிகளைப் பார்த்தாள்.
அவர்களிடம் ‘‘உங்களைப்போல் இருவரை இவ்வழியிலே
கண்டீரோ’’ என்று கேட்டாள். அவள் கேள்விக்கு ஆடவன்
விடையளித்தான்.
‘‘விரைவாக
நீங்கள் நடந்து போங்கள். அவர்கள் நம்மிடம்
அகப்பட்டுக் கொள்ளுவார்கள்; நீங்கள் எண்ணும் எண்ணமும் விரைவில் கைகூடும்; நீங்கள் நினைத்துக் கொண்டு வந்த சூரியனைப்
போன்ற அந்த ஆடவனை நான் பார்த்தேன். சந்திரனைப் போன்ற அந்த
மங்கையை என் துணைவி பார்த்தாளாம்’’ என்றான் அவன்.
நண்ணிநீர் செல்மின்! நமர் அவர் ஆபவேல்
எண்ணிய எண்ணம் எளிது அரோ!
எண்ணிய வெம்சுடர் அன்னானை யான்கண்டேன்; கண்டாளாம்
தண்சுடர் அன்னாளைத் தான் (பா.89)
இச் செய்யுள் ஒரு உயர்ந்த பண்பை எடுத்துரைக்கின்றது ஒரு ஆடவன்
பிற பெண்களைக் கண்ணால் நோக்குதலும் தவறு என்பதே அப்பண்பு. இது
தமிழர்களின் சிறந்த பண்பாடுகளுள் ஒன்று. பெண்களைப் போலவே
ஆண்களும் பிற பெண்களை பார்க்காத கற்புள்ளவர்களாயிருக்க வேண்டும்
என்பதே இதன் கருத்து. பண்டைக் காலத் தமிழர் ஒழுக்கத்திற்கு இச்
செய்யுள் ஒரு சிறந்த உதாரணம்.
இயற்கைக் காட்சிகளை இந்நூலாசிரியர் எவ்வாறு எடுத்து காட்டுகிறார்
என்பதற்கு ஒரு உதாரணம் மருத நிலத்தின் காட்சியைக் கூறும் ஒரு
வெண்பா மிகவும் தெளிவும் இயற்கையை அப்படியே சித்திரிக்கும் அழகும்
அமைந்தது அது.
ஒரு எருமை சிவந்த கண்கள் வலிமையான கொம்புகள் அது நீர
நிறைந்த வயல்களையும் அவற்றை அடுத்து பள்ளங்களையும் பார்த்து
மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை ஆனந்தமாக கனைத்துக் கொண்டது அழகான
கழனிகளிலும் பள்ளங்களிலும் பாய்ந்து நெடுநேரம் கிடந்த்து பிறகு கரையேறி
வரும்போது அதன் முதுகின் மேல் குவளை பூக்கள் இருந்தன சிவந்த கயல்
மீன்கள் இருந்தன தவளைகளும் உட்கார்ந்து கொண்டிருந்தன இவைகளை
சுமந்து கொண்டு அந்த எருமை கரையேறி வருகின்றது.
செம்கண் கரும் கோட்டு எருமை, சிறு கனையால்
அம் கண் கழனிப் பழனம் பாய்ந்து-அங்கண்
குவளைஅம் பூவொடு, செம் கயல் மீன் சூடித்
தவளையும் மேல் கொண்டு வரும். (பா.147)
என்பதே மேல் உள்ள பொருள் அமைந்த வெண்பா. நீர் நிறைந்த
வயல்கள்; குளங்கள்; குவளை மலர்கள்; மீன்கள்; எருமைகள்; இவைகள்
மருத நிலத்தில் எங்கும் உள்ளவை. இந்த இயற்கையை எடுத்துரைத்தது
இவ்வெண்பா.
தெய்வங்கள்
திருமால், பலதேவன், முருகன் ஆகிய தெய்வங்களைக் குறிப்பிடுகின்றார்
இவ்வாசிரியர்
‘‘மாயவனும் தம்முனும்’’ (பா.56) என்பது திருமாலையும்,
பலதேவனையும் குறிப்பது. ‘‘ஆழியான்’’ (பா.96) என்பதும் திருமாலைக்
குறித்தது. ‘‘மாயவன்’’(பா.97) என்பதும் திருமால்.
‘‘இரும் கடல் மா கொன்றான் வேல்’’ (பா.93) என்பது
முருகனைக் குறித்தது. ‘‘பெரிய கடலிலே மா மர வடிவாகி நின்ற சூரனைக் கொன்ற முருகனது வேல்’’ என்பதே இதன் பொருள்.
நம்பிக்கைகளும் பழக்கங்களும்
நல்வினையால்தான் ஒருவருக்குச் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை
பண்டைத் தமிழரிடம் இருந்தது. ‘‘வினை விளையச் செல்வம் விளைவது
போல்’’ (பா.5) என்பது உதாரணம்.
நல்ல நாளிலே தொடங்கும் காரியம் இடையூறில்லாமல் வெற்றி பெறும்
என்பது பழந்தமிழர் நம்பிக்கை. பெண் கேட்கச் செல்வார் நல்ல நாள்
பார்த்து அந்நாளிலே புறப்படுவார்கள். ‘‘நாள் கேட்டுத் தாழாது வந்தால்
நீ எய்துதல் வாயால்’’ (பா.46)
‘‘நல்ல நாள் கேட்டுக் கொண்டு தாமதமில்லாமல் வந்தால் இப்பெண்ணை
அடைவது உண்மை’’ என்பது இதன் பொருள்.
நாள்பார்த்து, நல்ல நேரத்திலே திருமணம் புரியும் வழக்கமும்
பழந்தமிழர் வழக்கமாகும். ‘‘நாள் ஆய்ந்து வரைதல் அறம்’’ (பா.52)
என்பதனால் இதனைக் காணலாம்.
சோதிடர்களே நல்ல நாட்களைக் குறித்துக் கொடுப்பார்கள். அந்த நல்ல
நாளிலே திருமணம் முதலிய மங்கலமான செயல்களை நடத்துவார்கள்.
இவ்வழக்கம் தமிழகத்தில் இருந்தது. ‘‘குறிஅறிவார்க் கூஉய்க் கொண்டு
ஓர், நாள் நாடி நல்குதல் நன்று’’ (பா.54) ‘‘நல்ல குறிகளை அறிந்து
சொல்லும் சோதிடர்களை அழைத்து, ஓர் நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து
மணம்புரிந்து கொடுத்தல் நலமாகும்’’ என்பதே இதன் பொருள்.
இதனால் சோதிடர்களைக் கொண்டு நாள் பார்க்கும் செய்தியைக் காணலாம்.
குறிகேட்கும் வழக்கமும் பண்டைக் காலத்தில் இருந்தது. குறி
சொல்வோர் கழங்குக் காய்களை வைத்துக் கொண்டு, அவற்றை எண்ணிக்
குறிசொல்வார்கள். குறிசொல்லுகின்றவர்கள் தெய்வத்தின் உதவியினாலேயே உண்மையை அறிந்து உரைக்கின்றனர் என்று நம்பி வந்தனர். இதனை இந்நூலின் 90-வது வெண்பாவால் காணலாம்.
மக்கள்மேல் தெய்வம் ஏறி நிற்பதாக நம்பினர்; முருகனுக்குப் பூசை
செய்யும் பூசாரி, கையில் வேலேந்தி ஆவேசங் கொண்டு ஆடுவான். குறி
சொல்வான். வேலைக் கையிலேந்தி ஆடுவோனுக்கு வேலன் என்று பெயர்.
தெய்வத்திற்கு ஆட்டுக் குட்டிகளையும் பலிகொடுப்பர். கள்ளும் வைத்துப்
படைப்பார்கள். இது பழந்தமிழர் வழக்கம். ‘‘வேலனார் போக, மறிவிடுக்க,
வேலியும் பாலனார்க்கு ஈக’’.(பா.12) வெறியாடுவதற்காக வந்த வேலேந்திய
பூசாரி போகட்டும்; ஆட்டுக் குட்டியையும் விட்டுவிடுங்கள்; மணமுள்ள மதுவை அதை விரும்பும் தன்மையுள்ளவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்’’ என்பதே இதன் பொருள். இது தமிழர்கள் தெய்வத்தைப் பூசித்த முறையைக் கூறிற்று.
இவ்வுலகத்திற்கு அப்பால் இன்பம் நுகரக் கூடிய சுவர்க்கலோகம் ஒன்று
உண்டென்று நம்பினர். இதனை 62-வது வெண்பாவிலே காணலாம்.
சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு என்பவை திருமாலின் படைகள்
பொன்னால் இப்படைகளைச் செய்து குழந்தைகளின் கழுத்திலே
கட்டியிருப்பார்கள். இதற்கு ஐம்படைத்தாலி என்று பெயர். இத்தகைய
ஐம்படைத்தாலி அணியும் வழக்கம் இந்நூலில் கூறப்படுகின்றது. இதை
இந்நூலின் 66-வது வெண்பாவால் அறியலாம்.
குழந்தைகள் பூணும் நகையையே பண்டைக் காலத்தில் தாலி என்று கூறிவந்தனர். பிற்காலத்தில்தான் தாலி என்பது, கணவனால் மனைவியின் கழுத்திலே கட்டப்படும் ஒரு குறிப்பிட்ட அணியைச் சுட்டி வந்தது.
இந்நூலிலே கூறப்பட்டிருக்கும் ஒரு உண்மை நமக்கு வியப்பைத்
தருகின்றது. சூரிய வெப்பத்தால்தான் நிலத்தில் உள்ள நீர் ஆவியாக
மேலெழுந்து மேகமாகி மழை பெய்கின்றது என்பதுதான் அவ்வுண்மை.
‘‘எல்லைதருவான், கதிர் பருகி ஈன்ற கார்’’ (பா.105) ‘‘பகலைத் தருகின்ற
சூரியனுடைய கிரணங்கள், நிலத்தில் உள்ள நீரைப்பருகிப் பெற்ற மேகங்கள்’’
என்பதே அவ்வரியின் பொருள்.
மேகங்கள் தனிப்பொருள்கள்; இந்திரன் ஆணைக்கு அடங்கியவை;
உயிர் உள்ளவை; என்று மக்கள் நம்பியிருந்த அக்காலத்தில் இவ்வாசிரியர்
இவ்வுண்மையைக் கூறியிருப்பது வியப்புக்குரியதல்லவா?
கருத்துகள்