கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

கார் நாற்பது - சாமி. சிதம்பரனார்

 நூல் வரலாறு

கார் காலத்தைப்பற்றிக் கூறுவது; நாற்பது வெண்பாக்களைக் கொண்டது.
கார் நாற்பதாகும்.

கார், கருமை நிறம், மழை பெய்யும் மேகம் கருமை நிறம் உள்ளது.
கருமை நிறம் உள்ள மேகம் மழை பெய்யும் காலம் கார் காலம். கார் காலம்
முல்லை நிலத்திற்கு உரியது. ஆகவே இது முல்லைத் திணையைப்பற்றி
உரைப்பதாகும்.

ஒரு தலைவன் ஏதேனும் ஒரு காரணத்தால் மனைவியை விட்டுப் பிரிந்து
செல்லுகின்றான்; செல்லும்போது ‘‘நான் கார் காலம் வருவதற்குள்
வந்துவிடுவேன்’’ என்று உறுதி கூறிச் செல்கின்றான். கார் காலமும்
வந்துவிட்டது. கணவன் வரவில்லை. அப்பொழுது மனைவி, அவன் வருவான்
என்று நம்பித் தன் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கின்றாள். இதுவே
முல்லைத் திணை நிகழ்ச்சியாகும்.


காட்டின் காட்சி; மழை நாளின் இயற்கை; காதலியின் அன்பு;
கணவனுடைய காதல்; இவைகளையெல்லாம் முல்லைத்திணையிலே
காணலாம். இந்த நூலின் ஆசிரியர் மதுரைக்கண்ணங்கூத்தனார் என்பவர்.
இவர் பெயர் கூத்தனார்; இவர் தந்தையார் பெயர்கண்ணன். தந்தையார்
பெயரையும் தன் பெயரோடு சேர்த்து வைத்துக் கொண்டார்.
இப்படிப் பெயர் வைத்துக்கொள்வது பண்டை மரபு. இவர் மதுரையில்
வாழ்ந்தவராகவோ அல்லது பிறந்தவராகவோ இருக்க வேண்டும்.
ஆதலால்தான் மதுரைக்கண்ணங்கூத்தனார் அழைக்கப்பட்டார். இவர் இந்நூலைத் தவிர வேறு எந்நூலையும் இயற்றியதாகத் தெரியவில்லை.

செய்யுட் சிறப்பு

இந்நூலின் செய்யுட்கள் படிப்பதற்கு இனிமையானவை. இயற்கைக்
காட்சிகளை நம் கண் முன்னே நிறுத்திக் காட்டுவன. இந்நூலாசிரியர்
எடுத்துக்காட்டும் உவமானங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இயற்கையோடு இணைந்து காணப்படும். இந்நூல் பாடல்களின் சிறப்பைச்
சில உதாரணங்களால் காண்போம்.

கார் காலம் வந்துவிட்டது; பிரிந்து சென்ற காதலன் இன்னும்
வரவில்லை. காதலி பசலை நோயால் வருந்துகின்றாள். இந்த நிலையைக்
கண்டாள் தோழி, ‘‘காதலன் வந்துவிடுவான்; கார் காலத்தைக் கண்டால்
அவன் சென்ற இடத்திலே தாமதிக்கமாட்டான். நீ வருந்த வேண்டாம்’’
என்று ஆறுதல் கூறினாள். இந்தமுறையில் பல பாடல்கள்
அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒரு பாடல் கீழ் வருவது:


                 ‘‘ஆடும் மகளிரின் மஞ்சை அணிகொளக்
காடும் கடுக்கை கவின்பெறப் பூத்தன;
பாடுவண்டு ஊதும்பருவம் பணைத்தோளி!
வாடும் பசலைக்கு மருந்து.        (பா.4)

நடனமாடும் பெண்களைப் போல மயில்கள் அழகாக ஆடுகின்றன;
காடெல்லாம் கொன்றை மலர்கள் கவினுடன் பூத்திருக்கின்றன; பாடுகின்ற
வண்டுகள் எல்லாம் மலர்களிலே உட்கார்ந்து ஊதுகின்றன; இதுதான் காதலர்
வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம்; மூங்கில் போன்ற அழகிய
தோளையுடையவளே! இப்பருவந்தான் நீ வருந்துகின்ற பசலை நோய்க்கு மருந்துமாகும்.’’

இந்தப் பாடலில் கூறப்பட்டிருக்கும் காட்சி, இயற்கைக் காட்சி, காட்டிலே
இக்காட்சியைக் கார் காலத்தில் இன்றும் காணலாம்.

மற்றொரு அருமையான செய்யுள். இச்செய்யுளும், தலைவிக்குத் தோழி கூறும் ஆறுதல் மொழியாக அமைந்திருப்பது.

  ‘‘கல்பயில் கானம் கடந்தார் வர, ஆங்கே
நல்இசை ஏறொடு வானம் நடுநிற்பச்,
செல்வர் மனம்போல் கவின்ஈன்ற; நல் கூர்ந்தார்
மேனிபோல் புல்என்ற காடு.                      (பா.8)

மலை நெருங்கிய காட்டைக் கடந்து சென்ற தலைவர் திரும்பி
வருவதனால், அவர் வரும் வழியிலே மிகுந்த இடியோடு கூடிய மேகம்
வானத்தின் உச்சியிலே நின்று மழையைப் பொழிந்தது. அதனால்
வறுமையுள்ளவர்களின் உடம்பைப் போல வாடி வதங்கியிருந்த காடுகள்
செல்வம் உள்ளவர்களின் உள்ளம் போல் அழகைத் தந்தன’’.

மழையில்லாத காலத்தில் காட்டில் உள்ள மரம் செடி கொடிகள் வாடிச்
சோர்ந்து கிடந்தன; வெயில், அக்காட்டை வாட்டி வதக்கிக்கொண்டிருந்தது.
ஆதலால் அந்தக் காடு பார்ப்பதற்கு அழகில்லாமல் பொலிவிழந்து கிடந்தது.
மழை பெய்தபின் காடு செழித்தது. மரம், செடி, கொடிகள் தழைத்துக்
காய்த்துக் குலுங்கியிருந்தன. இது கண்ணுக்கினிய காட்சியாக இருந்தது.
கோடையால் வாடியிருந்த காடு வறுமையால் வாடுகின்றவன்
உடம்பைப்போல் வற்றியிருந்தது; மழையால் செழிப்புற்ற காடு
செல்வமுள்ளவன் நெஞ்சம்போல் செழித்திருந்தது; என்று இக்காட்சியை
உவமையுடன் விளக்கியிருப்பது மிகவும் பொருத்தமானது.

செல்வச் சிறப்பு

செல்வம் உள்ளவர்களே வாழ்க்கையில் இன்பம் அடைய முடியும்; புகழ்
உள்ளவர்களாக வாழ முடியும்; செல்வம் இருந்தால்தான் வறியோர்க்கு
வழங்கி உதவி செய்யலாம்; ஆதலால் இல்லறத்தில் வாழ்வோர்
பொருளீட்டுவதை முதன்மையாகக் கொள்ளவேண்டும். இது இவ்வாசிரியர்
கருத்து.

   ‘‘புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்

இம்மை மறுமை இன்பங்கள் பொருந்துவதற்குரிய செல்வத்தைத்
தேடிக்கொண்டுவரும் பொருட்டுச் சென்றார்’’ (பா.11)

   ‘‘கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போல்
படாஅமகிழ் வண்டு பாண்முரலும்

அழியாத புகழை விரும்புகின்ற செல்வர்களின் சிந்தையைப்போல,
கெடாத மகிழ்ச்சியை உடைய வண்டு இசை பாடிக்கொண்டிருக்கும்” (பா.32)
இவைகள் செல்வத்தால் பெறும் இன்பத்திற்கு எடுத்துக் காட்டுக்கள்.

  ‘‘நச்சியார்க்கு ஈதலும் நண்ணார்த் தெறுதலும்
தன்செய்வான் சென்றார்.

தம்மை நாடி வந்தவர்க்குக் கொடுப்பதும், பகைவரை அழிப்பதும்
தமக்குப் புகழ்தரும் என்று நினைத்துப் பொருள் தேடச் சென்றார்’’. (பா.7)

  ‘‘மண்இயல் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப்
பெண்இயல் நல்லாய் பிரிந்தார்.

பெண்தன்மை நிறைந்த சிறந்தவளே! அவர் இவ்வுலகிலே நிலையான
புகழைப்பெற விரும்பியே பொருள் தேடப் பிரிந்தார்’’ (பா.8)

இவைகள் செல்வமே புகழுக்குக் காரணம் என்பதை எடுத்துக் காட்டின.

பழக்க வழக்கங்கள்

இந்நூலாசிரியர் காலத்திலே தமிழ்நாட்டிலே வேள்விகள் நடைபெற்று
வந்தன. ‘‘புகழ் வேள்வித் தீப்போல எச்சாரும் மின்னும் மழை’’
‘‘புகழுக்குரிய யாகாக்கினிபோல, மேகம் எப்பக்கமும் ஒளிவீசும்படி
மின்னுகின்றது’’(பா.51) திருமால், பலதேவன் ஆகிய தெய்வங்களைப் பற்றி
இந்நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கி்ன்றார். பொரு கடல் வண்ணன்
(பா.1) என்பது திருமால். ‘‘நாஞ்சில் வலவன்’’ (பா.19) என்பது பலதேவன்.

கார்த்திகை நாளிலே வரிசையாக விளக்கு வைத்து விழாக்
கொண்டாடும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இருந்தது. இதனை

   நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி.       (பா.26)

நன்மை மிகுந்த கார்த்திகைத் திருநாளில் நாட்டினர் கொளுத்தி வைத்த
முதல் நாள் விளக்குகளைப் போல, தோன்றிப் பூக்கள், எல்லா இடங்களிலும்
அழகுடன் பூத்திருந்தன’’ இத்தகைய சிறந்த செய்திகளைக் கார் நாற்பதிலே
காணலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ