நூலின் சிறப்பு
களவழி நாற்பது என்றால் களத்தைப் பற்றிப்பாடிய நாற்பது என்று
பொருள். இதில் நாற்பது வெண்பாக்கள் தாம் இருக்க வேண்டும். ஆனால்
இந்நூலில் 41 வெண்பாக்கள் இருக்கின்றன. எப்படியோ ஒரு வெண்பா வந்து
சேர்ந்து விட்டது. வெண்பாவிலே நாலு அடிகளுக்கு மேல் வருமாயின்
அதைப் பஃறொடை வெண்பா என்பர். இந்நூலில் பஃறொடை
வெண்பாக்களும் இருக்கின்றன. பஃறொடை-பல்தொடை; பல அடிகள்
தொடர்ந்திருப்பவை.
களவழிப் பாடல்களிலே இரண்டு வகையுண்டு. உழவர்கள்
நெற்கதிரை அறுத்துக் களத்திலே கொண்டுவந்து சேர்த்து. அடித்து,
நெல்லைக் குவிக்கும் ஏர்க்களத்தைப் பாடுவது ஒன்று. நால்வகைப்
படைகளையும் கொண்டு போர் செய்யும் போர்க்களத்தைப் பாடுவது
மற்றொன்று. ஏர்க்களம், போர்க்களம் இந்த இரண்டைப் பற்றியும் பாடும்
பாடல்களுக்கும் களவழிப் பாடல்கள் என்று பெயர்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இந்தக் களவழி
நாற்பது போர்க்களத்தைக் குறித்துப் பாடப்பட்டது.
சோழன் செங்கண்ணான் என்பவன், சேரமான் கணைக்கால்
இரும்பொறை என்பவனுடன் போர்புரிந்தான். இந்தப் போர் கழுமலம்
என்னும் ஊரிலே நடந்தது. இப்போரில் சேரன் தோற்றான்; சோழன்
வென்றான். தோற்ற சேரன் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். சேரனுடைய
நண்பர் பொய்கையார் என்னும் புலவர். அவர் சோழனுடைய வெற்றியைப் புகழ்ந்து பாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார். இதுவே இந்நூல் தோன்றுவதற்குக் காரணமாகக் கூறப்படும் வரலாறு.
புறநானூற்றில் உள்ள 74-வது பாட்டு சேரமான் கணைக்கால்
இரும்பொறை பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்செய்யுளின்அடியிலே
ஒரு குறிப்பு காணப்படுகின்றது. ‘‘சேரமான் கணைக்கால் இரும்பொறை,
சோழன் செங்கணானோடு போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக்,
குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து, தண்ணீர் தாவென்று பெறாது,
பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்தது. உண்ணான் சொல்லத் துஞ்சிய
பாட்டு’’ என்பதே அக்குறிப்பு.
செங்கண்ணானுடன் போர் செய்து தோற்ற சேரன், குடவாயிற்
கோட்டத்திலே சிறைப்பட்டிருந்தான். தண்ணீர் கேட்டான். காவலர்கள்
அவமதித்துப் பேசினர்; பிறகு தண்ணீர் தந்தனர்; அதை உண்ண
விரும்பாமல் இப்பாடலைப்பாடி உயிர் துறந்தான் என்பதே இக்குறிப்பின்
பொருளாகும்.
களவழியின் வரலாறு சேரமான் சிறையிலிருந்து விடப்பட்டான் என்று
கூறுகின்றது. புறநானூற்று அடிக்குறிப்பு சேரன் சிறையிலேயே மாண்டான்
என்று கூறுகின்றது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண். ஆதலால்
புறநானூற்றுப் பாடல் பாடிய சேரன் கணைக்கால் இரும்பொறை வேறு;
களவழி நாற்பதின் மூலம் விடுதலையடைந்த சேரன் வேறு, என்று
கருதுவதற்கே இடந்தருகின்றது. இவ்வாறே சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
பொய்கையார் என்னும் இப்புலவர், பொய்கை என்னும் ஊரிலோ,
அல்லது பொய்கை என்னும் நாட்டிலோ பிறந்தவராதல் வேண்டும். ஆதலால் இப்பெயர் பெற்றார். ஆனால் இவர் என்ற ஊரினர் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
தொண்டியென்பது சேரநாட்டுத் துறைமுகம் மேற்குக் கடற்கரையில் இருந்தது.
பொய்கை ஆழ்வார் என்பவர் முதலாழ்வார்களில் ஒருவர். இந்த
ஆழ்வாரும், இப்பொய்கையாரும் ஒருவர் என்று சிலர் எண்ணுகின்றனர்.
பொய்கையாழ்வார் வேறு; இந்தப் புலவர் வேறு. பொய்கையார் பெயரால்
உள்ள பாடல்கள், புறநானூற்றில் இரண்டும், நற்றிணையில் ஒன்றும்
காணப்படுகின்றன. அவர் வேறு இவர் வேறு என்று எண்ணத்தான் இடம்
உண்டு.
பாடற் பெருமை
இந்நூலிலே யானைப் போரைப் பற்றிய பாடல்களே மிகுதியாகக்
காணப்படுகின்றன. சேரமானிடம் யானைப் படைகளே அதிகம்.
சேரநாட்டில்தான் யானைகள் மிகுதி. ஆதலால்,சேரனுக்கும், சோழனுக்கும்
நடந்த போரிலே யானைப் படைகளின் சிதைவைப் பற்றிக் கூறுவது
வியப்பன்று.
போர்க்களத்தில் நடைபெறும் கொடுமை; போரால் மக்கள் மாண்டு
மடியும் பயங்கரக் காட்சி; பார்ப்போர் உள்ளத்திலே அச்சத்தை ஊட்டும்
போர்க்களக் காட்சி; இவைகளை இக்களவழிப் பாடல்களிலே காணலாம்.
இந்நூலைப் படிப்போர் போரை வெறுப்பார்கள்; அமைதியையே
விரும்புவார்கள்.
போரினால், மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் பல பண்டங்கள்
பாழாகும். இது ஒருபுறம் இருக்கட்டும். போரிலே பல வீரர்கள் மடிவதன்
காரணமாகப் பல மக்கள் ஆதரவற்ற அநாதைகளாகின்றனர். போர் நடந்தால்
- போர்க்களத்திலே வீரர்கள் மாண்டால்- பிள்ளைகளையிழந்து தவிக்கும் பெற்றோர்கள் பலர்; காதலர்களை இழந்து கவலைப்படும் மனைவிகள் பலர்;
தந்தைகளையிழந்து தவிக்கும் பிள்ளைகள் பலர்; ஆதலால்தான் மக்கள்
சமுதாயத்திலே ஒற்றுமையையும், நல்வாழ்வையும் விரும்புகின்றவர்கள்
போரை வெறுக்கின்றனர். சமாதானத்தை விரும்புகின்றனர். இக்கருத்தை
இந்நூலின் பாடல்களிலே காணலாம்.
சோழன் போர் புரிந்த போர்க்களத்திலே, தங்கள் உறவினர்களாகிய
வீரர்களையிழந்த மக்கள் நாற்றிசையும் கேட்கும்படி அலறி அழுகின்றனர்;
ஓடுகின்றனர். இப்படி அழுகின்றவர்களில் பெண்களே பெரும்பாலோராகக்
காணப்படுகின்றனர். இக்காட்சி, மரங்கள் அடர்ந்த சோலையிலே,
பெருங்காற்று புகுந்து வீசுவதைக்கண்டு, அஞ்சிய மயிலினங்கள், வெவ்வேறு
திசைகளிலே சிதறி ஓடுவதைப்போல இருந்தது; என்று கூறுகின்றது ஒரு
செய்யுள்.
கடிகாவில் காற்று உற்று எறிய, வெடிபட்டு
வீற்றுவீற்று ஓடும் மயில் இனம்போல்-நாற்றிசையும்
கேளிர் இழந்தார் அலறுபவே; செங்கண்
சினமால் பொருத களத்து. (பா.23)
செங்கட்சோழன் போர் செய்த போர்க்களத்திலே, மரங்கள் அடர்ந்த
சோலையில் காற்று புகுந்து கடுமையாக வீச, அதைக்கண்டு பயந்து பிரிந்து
பிரிந்து ஓடுகின்ற மயிற் கூட்டத்தைப்போல, தம் உறவினரை இழந்தவர்கள்
நான்கு திசைகளிலும் ஓடிஓடி அலறி அழுகின்றனர்.
இச்செய்யுளைப் படிப்பவர்கள், போர் எவ்வளவு கொடுமையானது;
மக்களுக்கு எவ்வளவு மனவேதனையைத் தரக்கூடியது; என்பதை உணராமல்
இருக்க முடியாது.
மற்றொரு பாட்டிலே தச்சன் வேலை செய்யும் இடத்தையும்,
போர்க்களத்தையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். இக்காட்சியைக் காணும்போது
யாருடைய உள்ளமும் உருகாமல் இருக்காது.
தச்சன் வேலை செய்யும் இடத்தைப் பார்த்தால் அலங்கோலமாகத்தான்
காணப்படும். வேலை செய்யும் ஆயுதங்கள் பல இடங்களிலே கிடக்கும்;
வெட்டப்பட்ட மரங்கள்; அறுபட்ட மரங்கள்; துண்டுபோடப்பட்ட மரங்கள்;
துளை போடப்பட்ட மரங்கள்; மரங்களிலே செதுக்கிய, இழைத்த, சிறியவும்
பெரியவுமான சிராய்த் தூள்கள்; இவைகள் எங்கு பார்த்தாலும் சிதறிக்
கிடக்கும்.
போர்க்களத்திலும் ஆயுதங்கள் பல சிதறிக்கிடக்கும்; பல பிணங்கள்
குவிந்து கிடக்கும்; தனித்தனியாகவும் கிடக்கும்; வீரர்களின் கால் கைகள்
துண்டிக்கப்பட்டுக் கிடக்கும்; உடல்கள் சிதைந்து உருமாறி எங்கும்
கிடக்கும். யானை, தேர், குதிரை முதலியவைகளும் சிதைந்து கிடக்கும்.
இத்தகைய போர்க்களத்திற்குத் தச்சுப்பட்டறையை ஒப்பிட்டது மிகவும்
பொருத்தமானது.
‘‘கொல்யானை பாயக் குடைமுருக்கி எவ்வாயும்
புக்கவாய் எல்லாம் பிணம் பிறங்கத், தச்சன்
வினைபடு பள்ளியில் தோன்றுமே செங்கண்
சினமால் பொருத களத்து.
கோபத்தையுடைய செங்கட்சோழன் போர் செய்த களத்திலே,
எவ்விடத்திலும், குடைகளையழித்துக் கொல்லுகின்ற யானைகள்
பாய்ந்து பொருகின்றன. அவைகள் புகுந்த இடமெல்லாம் பிணங்களே குவிந்து
கிடக்கின்றன. அவைகள் தச்சன் வேலை செய்கின்ற இடத்தைப் போலத்
தோற்றம் அளிக்கின்றன’’.
இச்செய்யுள் போர்க்களத்தின் பயங்கரக் காட்சியை நமக்குக் காட்டுகின்றது
.இதுபோல் போர்க்களத்தின் காட்சியைக் காட்டும் பாடல்கள் பல.
பழக்க வழக்கங்கள்
தமிழ் நாட்டிலே கார்த்திகை விழாக் கொண்டாடிய செய்தி இந்நூலிலும்
காணப்படுகின்றது.
‘‘கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்ற (பா.17)
கார்த்திகைத் திருவிழாவின்போது கொளுத்தி வைக்கப்பட்ட மிகுதியான
விளக்குகளைப் போலக் காணப்பட்டன.’’
பாம்பு பிடிப்பதனால் சந்திரகிரகணம், சூரியகிரகணம் ஏற்படுகிறதென்ற
நம்பிக்கை பண்டைத் தமிழர்களிடம் இருந்தது.
‘‘கோடுகொள் ஒண்மதியை நக்கும்பாம்பு ஒக்குமே.
(பா.22)
கலை நிரம்பிய ஒளி பொருந்திய சந்திரனை நக்கி விழுங்கும் பாம்பை
ஒத்திருந்தது’’
ஐந்து தலைப்பாம்பு உண்டு என்ற நம்பிக்கையும் அக்காலத்
தமிழர்களிடம் இருந்தது. இதனை ‘‘ஐவாய்வயநாயகம்’’ (பா. 26)
என்ற தொடரால் அறியலாம்.
நிலத்தைப் பூமிதேவி என்று, பெண்ணாகக் கருதும் வழக்கம்
அக்காலத்திலிருந்தது.
‘‘மையில் மாமேனிநிலம் என்னும் நல்லவள்
குற்றமற்ற அழகான மேனியை யுடைய நிலமெனும் நல்லமாது’’
மந்திரத்திலும் தமிழர்களுக்கு நம்பிக்கையிருந்தது.
‘‘மாநிலம் கூறும் மறைகேட்ப போன்றவே-பூமிதேவி கூறுகின்ற மந்திரத்தைக் கேட்பது
போல இருக்கிறது’’ (பா.41)
மேலே காட்டியவைகள் தமிழர்களின் பழைய நம்பிக்கைகளையும், பழக்க
வழக்கங்களையும் காட்டுகின்றன. இவ்வாசிரியர் கூறும் உவமானங்கள் மிகவும்
அழகாகவும்,பொருத்தமாகவும் அமைந்திருக்கின்றன. இந்நூலைப்
படிப்போர் இவற்றின் அருமைகளை அறியலாம்.
கருத்துகள்