நூல் வரலாறு
சிறு பஞ்சமூலம் என்பது ஒரு மருந்தின் பெயர் மூலம்-வேர். சிறிய ஐந்து
வேர்கள் என்பதே சிறுபஞ்ச மூலம் என்பதன் பொருள்.
கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி
வேர்,நெருஞ்சி வேர் இவைகளே சிறு பஞ்சமூலம். இந்த ஐந்து வேர்களும்
மருந்துப் பண்டங்கள். இவற்றால் உடல் நோய்கள் பலவற்றைப் போக்க
முடியும்.
இந்த நூலில் உள்ள ஒவ்வொரு பாட்டிலும் ஐந்து ஐந்து பொருள்கள்
கூறப்படுகின்றன. அந்த ஐந்து வேர்களும் உடல் நோயை ஒழிக்கும்;
உடம்பை நன்றாக வைத்திருக்க உதவிசெய்யும். இந்த நூலில் ஒவ்வொரு
வெண்பாவிலும் சொல்லப்படும் ஐந்து பொருள்களும் மக்களின்
மனப்பிணியை மாய்க்கும்; உள்ளத்தைப் பரிசுத்தமாக வைத்துப் பாதுகாக்கும்.
இந்தக் கருத்தில்தான் இந்நூலுக்குச் சிறுபஞ்ச மூலம் என்று பெயர்
வைக்கப்பட்டது.
சிறுபஞ்ச மூலம்; சிறுமை, பஞ்சம், மூலம் என்ற மூன்று மொழிகளைக்
கொண்டது. இந்த மூன்று சொற்களில் சிறுமை என்னும் ஒரு சொல்தான்
தமிழ்ச் சொல், பஞ்சம், மூலம் என்னும் இரண்டு சொற்களும் வட சொற்கள்.
நூலின் பெயரிலேயே ஒரு பாகம் தமிழ்ச் சொல்லாகவும், இரண்டு பாகம்
வடசொல்லாகவும் அமைந்திருப்பது உற்று நோக்கத்தக்கது. இதைக்கொண்டு இந்நூலாசிரியர் வடமொழிப்பயிற்சியுள்ளவர்; வட நூல்களின் பொருள்களையும் இந்நூலிலே கூறியிருக்கின்றார்; என்று எண்ணலாம். இதில் தவறில்லை.
சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர் காரியாசான்; இவருடைய ஆசிரியர்
மாக்காயனார்,ஆதலால் இந்நூலாசிரியர் பெயரை மாக்காயனார்
மாணாக்கன் காரியாசான் என்று அழைப்பர். இந்நூலிலே இன்று 97
வெண்பாக்கள்தாம் இருக்கின்றன. முதலில் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று.
இறுதியில் பாயிரப் பாடல் ஒன்று. இரண்டையும் சேர்த்துக் கொண்டால் 99
வெண்பாக்கள்.
நூலின் பாடல்கள் மிகவும் எளியவை; இனியவை; என்று செல்லிவிட
முடியாது. மிகவும் கரடு முரடானவை என்று கூறிவிடவும் முடியாது.
நடுத்தரமானவை. நூலின் பெயரில் மூன்றில் இரண்டு சொல் வடமொழியாக
இருந்தாலும், நூலில் உள்ள வெண்பாக்களில் வடசொற்கள் அதிகம் இல்லை.
இது இவ்வாசிரியரின் தமிழ்ப் புலமையின் சிறப்பைக் காட்டுவது.
சிறந்த பாடல்கள்
சிறுபஞ்ச மூலத்திலே பல சிறந்த கருத்துள்ள பாடல்களைக் காணலாம்.
மக்களுக்கு அழகைத் தருவன இன்னின்னவை என்று இரண்டு
வெண்பாக்களிலே கூறப்படுகின்றன. அழகைப்பற்றிக் கூறும்
அவ்வெண்பாக்கள் மிகவும் அழகாகவே அமைந்திருக்கின்றன.
‘‘கண்வனப்புக் கண்ணோட்டம்; கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல்;-பண்வனப்புக்
கேட்டார் நன்றுஎன்றல்; கிளர்வேந்தன் தன்நாடு
வாட்டான் நன்றுஎன்றல் வனப்பு.
கண்ணுக்கு அழகு கண்ணாடி அன்று; அல்லது மை தீட்டிக்கொள்வது
அன்று; துன்பப்படும் மக்களிடம் இரக்கங்காட்டுவதே கண்ணுக்கு அழகு;
மதியாதார் தலைவாசலை மிதிப்பதற்குச் செல்லாமைதான் காலுக்கு அழகு; இத்துணை என்று தவறாமல் கணக்கிட்டுக் கூறுதலே கணக்குக்கு அழகாகும்; கேட்பவர்கள் நன்று! நன்று! என்று சொல்லிச் சுவைக்கும்படி
பாடுவதுதான் பாட்டுக்கு அழகாகும்; அரசனுக்கு அழகு தனது நாட்டு
மக்களைத் துன்புறுத்தமாட்டான் என்று சொல்லப்படுவதாகும்’’ (பா.9)
‘‘மயிர்வனப்பும்; கண்கவரும் மார்பின் வனப்பும்;
உகிர்வனப்பும்; காதின்வனப்பும்; செயிர்தீர்ந்த
பல்லின்வனப்பும்; வனப்பல்ல, நூற்குஇயைந்த
சொல்லின்வனப்பே வனப்பு.
தலைமயிரை அழகு செய்துகொள்வது வனப்பன்று; பார்ப்போர்
உள்ளத்தைக் கவரும்படியான அகன்ற எடுப்பான மார்பும் அழகன்று;
சொத்தையில்லாமல் - அழகாக - உருண்டு திரண்டிருக்கும் நகமும்
வனப்பன்று; காதின் அழகும் அழகன்று; சிறிதும் பழுது சொல்ல முடியாமல்
முத்துப்போல் வரிசையாக அமைந்திருக்கும் பல்லும் அழகன்று; தான்
படித்திருக்கும் நூல்களுக்குத் தகுந்தவாறு, அவைகளின் கருத்துக்களைக்
கேட்போர்க்கு விளங்கும்படி எடுத்துரைக்கும் சொல்லின் அழகே அழகாகும்’’
(பா.37) இவை இரண்டு வெண்பாக்களும் மக்களுக்கு அழகைத் தருவன
இவையிவை யென்று தெளிவாகத் தெரிவிக்கின்றன.
ஆள்வோர் கடமை
அரசாள்வோர் கடமையைப் பற்றிப் பல பாடல்களிலே கூறப்படுகின்றன.
அவற்றுள் ஒரு சிறந்த வெண்பா கீழ்வருவது.
‘‘வார்சான்ற கூந்தல்! வரம்புஉயர; வைகலும்
நீர்சான்று உயரவே; நெல்உயரும்;-சீர்சான்ற
தாவாக் குடிஉயரத்; தாங்கரும்சீர்க் கோஉயரும்;
ஓவாது உரைக்கும் உலகு.
நீண்ட கூந்தலையுடைய பெண்ணே! நிலத்திலே நீர் தங்கும்படி கரை
உயர்ந்திருக்கவேண்டும்; கரை உயரமாயிருந்தால்தான் நிலத்திலே தண்ணீர்
தங்கி நிற்கும்; தண்ணீர் தேங்கி நின்றால்தான் பயிர் செய்யப்படும் நெற்பயிர்
ஓங்கி வளரும்; நெய்பயிர் ஓங்கி வளர்ந்தால்தான் குடிமக்கள் உணவுப்
பஞ்சமின்றிச் செல்வங்கள் எல்லாம் பெற்று உயர்ந்து வாழ்வார்கள்.
குடிமக்கள் உயர்வாக வாழ்ந்தால்தான் அரசன் உயர்வாக வாழ்வான்.
(அரசாட்சி சிறப்படையும்)’’ (பா.46)
நாட்டிலே உணவுப் பொருள் உற்பத்தி பெருகுவதற்கான முயற்சியிலே
அரசாங்கம் முதலிலே ஈடுபடவேண்டும். அப்பொழுதுதான் பஞ்சம்
தலைகாட்டாது; நாட்டில் அமைதி நிலைக்கும்; மக்களிடம் ஒற்றுமைக்
குறைவும்,ஒழுக்கக் கேடும் தோன்றமாட்டா; மக்கள் அனைவரும் மகிழ்ந்து
வாழ்வார்கள்.இது எக்காலத்திலும் எந்த அரசாங்கமும் கண்ணும்
கருத்துமாகச் செய்யவேண்டிய கடமையாகும்.
தேசத் தொண்டு
மழை குறைந்த நாடுகளில் மரம் வளர்க்கவேண்டும் என்னும் கிளர்ச்சி
இன்று வலுத்து வருகின்றது. இருக்கும் காடுகளை அழித்துவிடக்கூடாது;
அவைகளைப் பாதுகாக்கவேண்டும்; நாடெங்கும் புதிய மரங்களை
வளர்க்கவேண்டும் என்ற உணர்ச்சி எல்லா நாடுகளிலும்
தலையெடுத்திருக்கின்றது. பண்டைய இலக்கியங்களிலே செடிநட்டு மரம்
வளர்ப்பதை ஒரு கடமையாகக் கூறியிருக்கின்றனர். திருமணச் சடங்கில்,
இறுதியில் மரம் நடுவதையும் ஒரு சடங்காக வைத்திருக்கின்றனர். கல்யாணத்திலே அரசாணிக்காலாக இருந்த ஒதியமரத்தை நட்டுப் பயிர் செய்வது வழக்கம். ஒவ்வொரு மனிதனும் தன் ஆயுள் காலத்திலே பால் தரும் ஐந்து மரங்களையாவது நட்டுப் பயிர் செய்யவேண்டும் என்பதை முன்னோர்கள் ஒரு கடமையாகக் கொண்டிருந்தனர். நாட்டிலே மழை வளம் குறையாமலிருப்பதற்கே இந்த ஏற்பாடு.
நாடு நன்றாக வாழ-நாட்டிலே நீர்வளம் குறையாமலிருக்க-உணவுப்
பொருள் உற்பத்தி பெருக-என்னென்ன காரியங்கள் செய்யவேண்டும்
என்பதைச் சிறுபஞ்சமூல ஆசிரியர் தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
‘‘குளம்தொட்டுக் கோடு பதித்து, வழிசீத்து,
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப்,
பாகுபடும் கிணற்றோடு, என்றுஇவ் ஐம்பால் படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது.
தண்ணீர்த் தட்டு ஏற்படாமல் இருப்பதற்காகப் பெரிய ஆழமான குளம்
தோண்டவேண்டும்; தளிர்த்து வளரக் கூடிய மரக்கிளைகளை நிலத்திலே
நட்டு நீர்விட்டு வளர்க்க வேண்டும்; மக்கள் நடப்பதற்கான வழிகளை
முட்புதர்களோ மேடுபள்ளங்களோ இல்லாமல் நன்றாகச் செப்பனிட்டு
வைக்கவேண்டும்; தரிசு நிலத்தை வெட்டிப் பண்படுத்தி உழுது பயிர்
செய்யத்தக்க நன்செய் நிலமாக்குவதோடு நன்றாக விளையும்படி செழிப்புள்ள
நிலமாக்க வேண்டும்; சுற்றிலும் கரை கட்டப்பட்ட கிணறுகளையும் தோண்ட
வேண்டும். இந்த ஐந்து பகுதிகளையும் செய்தவனே இனிய சுவர்க்கத்தை
அடைவான்’’. (பா.66)
இவ்வெண்பாவிலே சொல்லியிருக்கும் ஐந்து செய்திகளும் என்றும்
போற்றத்தக்கவை. இதைப் பின்பற்றி நடக்கும் நாட்டிலே பஞ்சம் ஏற்படாது.
நாய்கள்
இவ்வாசிரியர் ஒழுக்கமற்றவர்களின் மேல் காய்ந்து விழுகிறார்.
ஒழுக்கமற்றவன் மனிதனே அல்லன்; அவனும் சரி; நாயும் சரி; என்பதே
இவர் கொள்கை.
‘‘நாண்இலன் நாய், நன்கு நள்ளாதவன் நாய், பெரியார்ப்
பேணிலன் நாய், பிறர் சேவகன் நாய்-ஏண்இல்
பொருந்திய பூண்முலையார் சேரிகைத்து இல்லான்
பருத்தி பகர்வுழி நாய்.
வெட்கங்கெட்டவன் நாய்; பிறரோடு நன்றாக நட்பு கொள்ளாதவன்
நாய்; பெரியார்களைப் பாதுகாக்காதவன் நாய்; பிறருடைய பணியாளனாய்
இருந்து வயிறு வளர்க்கின்றவன் நாய்; அழகற்ற ஆபரணங்களை அணிந்த
பரத்தையர் சேரியிலே பணமில்லாமல் திரிகின்றவன் பருத்தி விற்பனை
செய்யும் இடத்திலே அலைந்து கொண்டிருக்கும் நாய்’’
(பா.88)
ஒழுக்கமற்றவனை நாயைப் போன்றவன் என்று கூடச் சொல்லவில்லை.
இவ்வாசிரியர். நாய்தான் என்று உருவகமாகவே உரைத்துவிட்டார்; இதனால்
ஒழுக்கத்தை உயிரினும் சிறந்ததாக மதிக்கிறார் இவ்வாசிரியர் என்பதைக்
காணலாம்.
மனைவியின் கடமை
இல்லாளின் கடமையைப் பற்றி இவ்வாசிரியர் கூறியிருப்பது
குறிப்பிடத்தக்கது. குடும்பத்தை நடத்தும் பொறுப்பு முழுவதும் பெண்களைச்
சேர்ந்தது என்ற கருத்தையே இவர் வலியுறுத்துகிறார்.
‘‘வருவாய்க்குத் தக்க வழக்கு அறிந்து, சுற்றம்
வெருவாமை வீழ்ந்து, விருந்து ஓம்பித்-திரு ஆக்கும்
தெய்வதையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு
செய்வதே, பெண்டிர் சிறப்பு.
தன் கணவனுடைய வருமானத்தின் அளவைத் தெரிந்து கொள்ள
வேண்டும்; அந்த வருமானத்திற்குத் தகுந்த அளவிலே செலவு
செய்யவேண்டும்; சுற்றத்தார்கள் மேல் சீறி விழாமல் அவர்களை அன்புடன்
ஆதரிக்க வேண்டும்; விருந்தினர்களை உபசரிக்க வேண்டும்; செல்வத்தைக்
கொடுக்கும் தெய்வத்தை எந்நாளும் வணங்கவேண்டும்; இவைகளே
பெண்களின் சிறப்பாகும். (பா.43)
பெண்கள் படித்திருக்க வேண்டும் என்னும் கருத்தும் இவ்வெண்பாவில்
அடக்கம். பெண்களுக்குப் படிப்பில்லாவிட்டால், கணவன் வருவாய்க்குத்
தக்கவாறு செலவு செய்யும் கணக்கு அவர்களுக்கு எப்படித் தெரியும்?
இச்செய்யுள் செல்வம் கொடுக்கும் தெய்வத்தை வணங்கச் சொல்லுகிறது.
வள்ளுவர் கணவனையே தெய்வமாக வணங்கச் சொல்லுகிறார். இது
குறிப்பிடத்தக்கது.
சிறந்த கருத்துக்கள் சில
இன்னும் பல சிறந்த கருத்துக்கள் இந்நூலிலே உண்டு. அவைகளில்
சிலவற்றைக் காண்போம்.
நன்றாகத் தமிழ்மொழியைப் படிக்காதவன்-தமிழ் இலக்கிய
இலக்கணங்களிலே தேர்ச்சி பெறாதவன்-கவிகள் எழுதுவானாயின் அது
சிரிப்புக்கிடமாகும். அச்செய்யுளிலே இனிய சொற்களோ, அரிய பொருளோ
அமைந்திருக்க முடியாது. ஆதலால் அப்பாடலைப் படிப்போர் இதுவும்
பாட்டுதானா? என்று எள்ளி நகைப்பார்கள்.
‘‘செந்தமிழ் தேற்றான் கவிசெயலும்
நாவகமே நாடின், நகை. (பா.12)
செந்தமிழ் நூல்களைக் கல்லாதான் கவி இயற்றுவதை நாவிலே வைத்து
ஆராய்ந்தால் சிரிப்புக்கு இடமாகும்’’.
தங்கள் பழம் பெருமையைப் பற்றிப் பிதற்றுகின்றவர்கள்; தங்கள்
அழகைத் தாமே வியந்துகொள்ளுகின்றவர்கள்; இவ்விருவரும் இரண்டு
கால்களைக் கொண்ட எருதுகளாம்.
‘‘துன்பம் இலேம் பண்டு, யாமே வனப்புடையேம்
என்பார் இருகால் எருது
முன்பு துன்பமில்லாமல் இன்பமாக வாழ்ந்தோம்; நாங்கள் தாம் அழகிலே
சிறந்தவர்கள்; என்று சொல்லிக்கொள்ளுவோர் இரண்டுகால் எருதுகள்’’
(பா.20)
உழவுத் தொழில் செய்கின்றவன், தன் கீழ் வேலை பார்க்கும்
உழவனுடன் ஒற்றுமையாக இருக்கவேண்டும்; அவனுடன் பகைத்துக்
கொள்ளக்கூடாது; பகைத்துக் கொண்டால் விவசாயம் பாழ்படும்; வருமானம்
குறையும்; என்று அறிவுரை கூறுகின்து இந்நூல்.
‘‘தொழில்மகன் தன்னோடு மாறாயின் என்றும்
உழுமகற்குக் கேடு என்று உரை.
வேலை செய்யும் தொழிலாளியுடன் பகைத்துக் கொண்டால் அதனால்
தொழிலாளிக்குக் கெடுதியில்லை. உழுவிப்போனாகிய நிலக்காரனுக்குத்தான்
கெடுதி என்று தெரிந்து கொள்’’ (பா.50) நிலச் சொந்தக்காரர்கள் இந்த
உண்மையை உணர்ந்திருப்பார்களாயின் உற்பத்தி குறையாது; விவசாயிகளும், நிலக்காரர்களும் இன்புற்று வாழ்வார்கள்.
சென்னை போன்ற நகரங்களிலே ஒரு அதிசயத்தைக் காணலாம். பால்
கறப்பவர்கள் தங்கள் தோளிலே தோலால் செய்த கன்றுக்குட்டியைச் சுமந்து
கொண்டு வருவார்கள். அவர்கள் பின்னே மாடு வந்துகொண்டிருக்கும்.
பின்னே வரும் மாடு, பால்காரனுடைய தோளிலேயுள்ள வைக்கோல் திணிக்கப்பட்ட அந்தக் கன்றைத் தன் கன்றாகவே நினைத்துக்கொண்டு வரும். கன்று உயிரோடிருந்தால், பால் வீணாகும் எனபதற்காகவே, பால்காரர்கள் இப்படிச் செய்கின்றனர். காசுக்கு ஆசைப்பட்டுக் கன்றைக் கொன்று விடுகின்றனர். இந்த மாபாதகச் செயல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் இருந்ததென்று இந்நூலால் தெரிகின்றது. ‘‘தோல்கன்று காட்டிக் கறவார்’’ (பா.84) என்பதனால் இதனைக் காணலாம்.
நம்பிக்கைகள்
கடவுளால் சொல்லப்பட்ட நூல்கள் முதல் நூல்கள்; அந்நூல்களில்
கூறப்படும் அறங்களைப் பின்பற்றி நடப்பவனே தவசியாவான். (பா.8)
ஒருவர்க்காகப் பரிந்து பொய்ச்சாட்சி சொல்லுகின்றவர்களுடைய நாக்கு
அறுந்துவிடும். ஆதலால் பொய்ச் சான்று கூறுதல் தீமை (பா.10)
பெண் இன்பத்தை விரும்பாத பிரமச்சாரியே சிறந்த ஆசிரியன்
ஆவான்.
(பா.29)
தவம் புரிவதால் சுவர்க்கம் பெறலாம்; ஞானத்தால் வீடு பெறலாம் (பா.36)
நாள், முகூர்த்தம், கிரகம், யோகம் இவைகளைப் பார்த்து, இவைகளின்
பலனையும் அறிந்து, திருமணம் முதலிய நல்ல காரியங்களைச்
செய்யவேண்டும். (பா.44)
குடிப்பதற்கு நீர், தங்குவதற்கு நிழல், இருப்பதற்கு இடம், உண்பதற்கு
உணவு, ஆகியவைகளைக் கொடுப்போரும், அன்னசாலை அமைப்போரும்
பேரின்பத்தை அடைவார்கள்.
(பா.63)
முன் பிறப்பிலே, மற்றவர்களுடைய தலைநோய், பைத்தியம்,
வாய்ப்புற்று, க்ஷயநோய், மூலநோய் இவைகளைத் தீர்த்தவர்களே
இப்பிறப்பில் நோயற்ற வாழ்வு வாழ்வார்கள். (பா.76)
பஞ்சகாலத்தில் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துத்தானும் உண்பவன்; தன்
செல்வத்தால் பிறர்க்கு உதவி செய்கின்றவன்; போர்க்களத்திலே அஞ்சாமல்
நின்று, பகைவர்களை அழித்துத் தன் படையைக் காப்பவன்; ஒவ்வொரு நாளும் பிறருக்கு உணவிட்ட பின்பே தான் உண்பவன்; பசியால் வாடும்
குழந்தைகளுக்கு உணவளிப்பவன்; ஆகிய இந்த ஐவரும் எண்பது வயதுக்கு
மேலும் உயிர் வாழ்வார்கள். (பா.79)
இவை போன்ற இன்னும் பல கருத்துக்கள் இந்நூலிலே
காணப்படுக்கின்றன. திருக்குறளின் கருத்துக்கள் பலவற்றை இந்நூல்
வெண்பாக்களிலே பார்க்கலாம். சிறுபஞ்ச மூலம் முழுவதையும் படிப்போர்
அவற்றைக் காணலாம்.
புலால் உண்ணாமையைப் பற்றிப் பல பாடல்களில் கூறப்படுகின்றன.
புலால் உண்ணாதவர்கள்தாம் சுவர்க்கம் பெறுவார்கள்; மோட்சம்
பெறுவார்கள் என்று கூறுகின்றன.
கொலை செய்வது கூடாது; கள்ளுண்டல் தீது; பொய் புகலக்கூடாது;
சூதாடுவதால் கெடுதியுண்டாகும்; என்ற நீதிகள் பல பாடல்களிலே
காணப்படுகின்றன.
வேசையர் நட்பை வெறுக்கவேண்டும்; பிறர் மனைவியை விரும்புதல்
கூடாது. பெண்கள் கற்புள்ளவர்களாய் வாழவேண்டும்; என்ற அறங்களையும்
பல பாடல்களிலே காணலாம்.
துறவிகள் ஒழுக்கமுடன் நடந்துகொள்ளவேண்டும்; ஞான நெறியைப்
பின்பற்றி நடக்கவேண்டும். சடைமுடி போன்ற
வெளி வேடத்தால் பயன் இல்லை; பிறர் வசை கூறினாலும்
பொறுத்துக்கொள்ளும் பொறுமைக் குணம் வேண்டும். துறவற நெறியைப்
பின்பற்றி நடக்க முடியாதவர்கள் துறவறம் பூணுவதை விட இல்லறத்தில்
வாழ்வதே ஏற்றதாகும்.
சிறுபஞ்ச மூலச் சிறப்பு
நான்கு வரிகள் கொண்ட பாடலிலே ஐந்து பொருள்களை அமைத்துப்
பாடுவதற்கு ஆற்றலும் புலமையும் வேண்டும். இவ்வகையில் நூறு
பாடல்களைப் பாடிய இவ்வாசிரியர் திறம் போற்றத்தக்கது. இவ்வாசிரியர்
பெருமையையும், இந்நூலின் சிறப்பையும் பாராட்டிக் கூறும் பாயிரச்
செய்யுள் ஒன்று இந்நூலின் இறுதியிலே அமைந்திருக்கின்றது.
‘‘மல்இவர்தோள் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப்
பல்லவர் நோய்நீக்கும் பாங்கினால்-கல்லா
மறுபஞ்சம் தீர்மழைக்கை மாக்காரி ஆசான்
சிறுபஞ்ச மூலம் செய்தான்.
வலிமை நிறைந்த தோள்களையுடைய மாக்காயன் என்பவருடைய
மாணாக்கன்; இம்மாநிலத்திலே உள்ள மக்கள் பலருடைய அறியாமையாகிய நோயை நீக்கும் தன்மையுடையவன்; பஞ்சத்தை நீக்கும் மழையைப்போலக் கைம்மாறு கருதாது உதவி செய்யும் குணமுள்ளவன்; மாக்காரியாசான் என்னும் பெயருள்ளவன்; பலநூல்களைக் கற்காத மக்கள் மனத்திலே
உள்ள குற்றங்கள் நீங்கும்படி, சிறு பஞ்சமூலம் என்னும் இந்நூலைச்
செய்தான்’’.
இதுவே இந்நூலின் சிறப்பை உணர்த்துவதற்குப் போதுமானதாகும்.
பழந்தமிழ் மக்களின் சமுதாய நிலையை அறிவதற்கு இந்நூல்
பெருந்துணையாக நிற்கின்றது.
கருத்துகள்