15/03/2012

நான்மணிக் கடிகை - சாமி. சிதம்பரனார்

நூலின் பெருமை

நான்மணிக் கடிகை ஒரு சிறந்த நூல். இதனுள் இன்று 106 வெண்பாக்கள்
காணப்படுகின்றன. நூறு வெண்பாக்கள் தாம் நூலாசிரியரால் பாடப்பட்டிருக்க
வேண்டும். ஆறு வெண்பாக்கள் எப்படியோ வந்து சேர்ந்துவிட்டன.
இவற்றுள் இரண்டு வெண்பாக்கள் கடவுள் வாழ்த்தாக இருக்கின்றன.
இரண்டும் திருமாலைப் பற்றியே கூறுகின்றன இந்த இரண்டும், நூலினுள்
நான்கும்இந்நூலாசிரியரால் பாடப்பட்டவை அல்ல என்றே கொள்ள
வேண்டும்.

நான்மணிக் கடிகை-நான்கு மணிகள் பதித்த ஆபரணம். ஒவ்வொரு
பாடலும் ஒவ்வொரு அணிகலன். அந்த அணிகலன்களிலே நான்கு நான்கு
இரத்தினங்கள் பதித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே நான்மணிக் கடிகை
என்பதன் விளக்கம்.


நான்மணிக் கடிகையின் ஒவ்வொரு வெண்பாவும் நந்நான்கு நீதிகளைத்
தெளிவாகக் கூறுகின்றன. படிப்பவர்களுக்கு நன்றாக விளங்கும்விதத்தில்
நறுக்கு நறுக்கென்று நீதியைச் சொல்லுகின்றன.

திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி என்னும் நூல்களின்
வெண்பாக்களைவிட இந்நூல் வெண்பாக்கள் இனிமையானவைதெளிவானவைவிளக்கமானவை. திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி மூன்றும் மருந்தின் பெயரைக் கொண்டவை; ஆதலால் அவைகளின் நடையிலும் கொஞ்சம் கசப்பும் காரமும் அமைந்திருப்பது இயற்கை. நான்மணிக் கடிகையோ ஒளிபொருந்திய மணியாரம்; ஆதலால் இதன் செய்யுட்கள் அவைகளைவிட ஒளிபெற்று விளங்குவதும் இயல்புதான். இந்நூலாசிரியர் பெயர் விளம்பிநாகனார். இவர் பெயர் நாகனார் இவர் வாழ்ந்த ஊர் அல்லது பிறந்த ஊர் விளம்பியாக இருக்கலாம். ஆதலால் ஊர்ப்பெயரும் சேர்ந்து விளம்பிநாகனார் என்று பெயர் பெற்றார். இவரைப் பற்றிய வேறு வரலாறு ஒன்றும்தெரியவில்லை.

பாடல்களின் சிறப்பு

எதையும் தெளிவாகக் கூறுவதே இந்நூல் வெண்பாக்களின் சிறப்பாகும்
சில வெண்பாக்களைப் படித்தாலே இந்த உண்மையைக் காணலாம்.

  ‘‘கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும்; மான்வயிற்றின்
ஒள்அரி தாரம்பிறக்கும்; பெரும் கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்
நல்ஆள் பிறக்கும் குடி.

புகைத்தால் நறுமணம் தரும் அகில் கட்டை கள்ளியின் நடுவிலே
உண்டாகும். மானின் வயிற்றிலே ஒளியுள்ள அரிதாரம் பிறக்கும்;
உப்புச்சுவையுள்ள பெரிய கடலிலே மிகுந்த விலையுள்ள முத்து உண்டாகும்.
ஆதலால் நல்ல மக்கள் பிறக்கும் குடி இன்ன குடிதான் என்று யார்
அறிவார்?’’ (பா.4)

ஒருவனுடைய குடிப் பிறப்பைக்கண்டு அவனை உயர்வாகவோ
தாழ்வாகவோ எண்ணக் கூடாது; அவனுடைய கல்வி, அறிவு, ஒழுக்கங்களைக்கொண்டே அவனை மதிக்க வேண்டும்; இழிந்த குடியிலே பிறந்தாலும் கல்வி அறிவு, ஒழுக்கமுள்ளவன் உயர்ந்தவன்; இவைகள் இல்லாதவன் உயர்ந்த குடியிலே பிறந்தவனாயினும் இழிந்தவன்; என்ற கருத்தை வலியுறுத்துகின்றது இச்செய்யுள்.

உறக்கம் இல்லாமல் துன்புறுகின்றவர்கள் யார் யார்? என்று
உரைக்கின்றது ஒரு செய்யுள்.

 ‘‘கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை; காதலி மாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்

திருடுவோம் என்று எண்ணிக் காலம் பார்த்திருக்கும் கள்வர்களுக்கும்
தூக்கம் இல்லை; எப்பொழுதும் காதலியிடமே உள்ளத்தை
அடிமையாக்கியிருப்பவர்களுக்கும் உறக்கம் இல்லை. சிறந்த செல்வப்
பொருளை விரைவிலே பெருக்குவோம் என்று எண்ணி உழைப்பவர்களும் தூங்கமாட்டார்கள்; உழைத்துச் சேர்த்த பொருளைக் காப்பாற்றுகின்றவர்களுக்கும் உறக்கம் இல்லை’’ (பா.7) இந்நால்வகையினரும் தங்கள் நினைப்பை வேறு இடத்திலே செலுத்தியிருப்பார்கள்; ஆகையினால் மன அமைதியுடன் உறங்க மாட்டார்கள்.

சிலருக்குத் தம்மூர், வேற்றூர் என்ற வேறுபாடே தோன்றாது; எல்லா
வூரையும் தம்மூர் போலவே எண்ணுவார்கள். அவர்களுக்குத் தம்மூரிலே
கிடைக்கும் அத்தனையும் வேற்றூரிலும் கிடைக்கும். இத்தகையோர் யார்?
என்று சொல்லுகிறது ஒரு பாட்டு.

‘‘நல்லார்க்கும் தம்ஊர் என்று ஊர் இல்லை; நன்னெறிச்
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை;- அல்லாக்
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; தம் கைத்து
உடையார்க்கும் எவ்வூரும் ஊர்.

கல்வி அறிவு, ஒழுக்கங்களிலே சிறந்த நல்லவர்களுக்கும் தம்முடைய ஊர்
என்று ஓர் ஊர் இல்லை; நன்னெறியிலே நடப்போர்க்கும் தம்முடைய ஊர்
என்று ஓர் ஊர் இல்லை. உயர்ந்தவர்கள் அல்லாத கீழ்மக்கட்கும் தம்முடைய ஊர் என்று ஓர் ஊர் இல்லை; தம் கையிலே செல்வம் உள்ளவர்களுக்கும் எல்லா ஊரும் சொந்த ஊர்தான்’’              (பா.82)

நல்லவர்கள் எல்லா ஊர்களிலும் பாராட்டப்படுவார்கள். உண்மை
ஒழுக்கமுள்ள உயர்ந்தவர்கள் எல்லா ஊர்களிலும் வரவேற்கப் படுவார்கள்.
தீமை செய்யும் கீழ்மக்கள் உள்ளூரிலும், வெளியூர்களிலும்
வெறுக்கப்படுவார்கள். செல்வம் உள்ளவர் எங்கு சென்றாலும்,
பணத்தைக்கொண்டு சொந்த ஊர்போல் வசதி செய்து கொண்டு வாழலாம்.
இக்கருத்தையே இப்பாடல் தெளிவாக உரைத்திருக்கின்றது.

அரசியலைப் பற்றி

அரசாள்வோருக்கு அறிவுறுத்தும் அறவுரைகள் இந்நூலிலே பல உண்டு. அவை ஆளுவோர் தங்கள் உள்ளத்திலே மறவாமல் கொள்ள வேண்டியவை.
‘‘நாட்டு ஆக்கம் நல்லன் இவ்வேந்து என்றல்     (பா.18)

ஒரு நாட்டுக்கு உயர்வு, இந்நாட்டை ஆளும் வேந்தன் நல்லவன்;
என்று குடிமக்களால் பாராட்டப்படுவதாகும்’’

‘‘மண் அதிர்ப்பின் மன்னவன் கோல் அதிர்க்கும்

நாட்டில் உள்ள குடிமக்கள் கலங்குவார்களாயின் மன்னவனது ஆட்சியும்
கலங்கி விடும்; நிலைக்காது’’                                       (பா.19)

‘‘கோல்நோக்கி வாழும் குடி எல்லாம்

குடிகள் எல்லாம் அரசனது செங்கோலை நோக்கியே உயிர்
வாழ்வார்கள்; ஆதலால் நீதி தவறாது ஆட்சிபுரிய வேண்டும்’’         (பா.27)

‘‘மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும்
தவம்இலார் இல்வழியில்லை; தவமும்
அரசன் இலாவழியில்லை; அரசனும்
இல்வாழ்வார் இல்வழிஇல்.

மழையில்லாவிட்டால் இவ்வுலகில் வாழ்வோருக்கு வாழ்வில்லை;
மழையும் தவம் இல்லாதவர்கள் வாழும் இடங்களில் இல்லை; தவமும்
அறநெறியைக் காக்கும் அரசன் இல்லாதவிடத்தில் இல்லை; அரசனும்
குடிமக்கள் இல்லாதவிடத்தில் இல்லை’’                                           (பா.47)

இச்செய்யுளிலே தவத்தோரால்தான் மழை பெய்கின்றது; தவசிகளைக்
காப்பாற்றுவது அரசன் கடமை; என்று கூறியிருப்பது பழங்கால மக்கள்
நம்பிக்கை. குடிமக்கள் நன்றாக வாழாவிட்டால், அரசன்-அரசாட்சி-இல்லை
என்று கூறியிருக்கும் உண்மை என்றும் அழியாதது.

மேலே கூறப்பட்டிருப்பவை அரசியலைப்பற்றி அறிவுறுத்தும்
உண்மைகள்.

அறவுரைகள்

சினம் கொள்வதால் நன்மையில்லை. ஆத்திரம் அறிவைச் சிதைக்கும்.
உண்மையைக் காணவிடாது சினத்தை அடக்குவதே அறிஞர் கடமை.
இவ்வுண்மையை வலியுறுத்துகிறார் இவ்வாசிரியர்.

‘‘எல்லாம், வெகுண்டார் முன் தோன்றாக் கெடும்

எல்லா நன்மைகளும் கோபங்கொள்கின்றவர்களிடம் காணப்படாமல்
அழிந்துவிடும்’’ (பா.8)

‘‘என்றும், விடல்வேண்டும் தம்கண் வெகுளி

எப்பொழுதும், தம்மிடம் உள்ள கோபத்தை விட்டுவிட வேண்டும்;
கோபமே கூடாது’’(பா.11)

‘‘வெல்வது வேண்டின் வெகுளி விடல்

பிறரை வெல்ல வேண்டினால் வெகுளியை-அதாவது கோபத்தை-
விட்டுவிட வேண்டும்; அப்பொழுதுதான் ஆழ்ந்து சிந்தித்து
அவரைத்தோற்கடிக்கலாம்’’ (பா.15) இவைகள் சினத்தைப் பற்றிக் கூறியவை.

புலவர் தேவர்களுக்குச் சமமானவர்கள். ‘‘தேவர் அனையர்
புலவரும்’’ புலவர்கள் தேவர்களைப் போன்றவர்கள். (பா,74)

இல்லத்திலே இருந்துகொண்டு விபசாரம் செய்கின்றவள் எமன் ஆவாள்.
‘‘கூற்றமே இல்லத்துத் தீங்கு ஒழுகுவாள்’’ இல்லத்திலே
இருந்துகெட்டவழியிலே நடக்கின்ற பெண், தன் கணவனுக்கு எமன்
ஆவாள்(பா.83)

என்றும் நன்மைகளைச் சிந்திப்பவர்களே அந்தணர் ஆவார். ‘‘என்றும்
நன்று ஊக்கல் அந்தணர் உள்ளம்’’ எப்பொழுதும் நல்ல செயல்களிலே
கருத்தைச் செலுத்துவதே அந்தணர்களின் எண்ணமாக இருக்க வேண்டும்(பா.85)

பலதார மணம் தவறு; பல மனைவிகளை மணந்திருப்பவன் வறுமையால்

வாடுவான். ‘‘நிரப்பிடும்பை பல்பெண்டிர் ஆளன் அறியும்’’ வறுமைத்
துன்பத்தைப் பல பெண்களை மணந்தவனே அறிவான்.                        (பா.95)

கொள்கைகளும் நம்பிக்கைகளும்

மாந்திரிகர் மந்திரத்தினால் பாம்பின் கோபத்தை அடக்கிவிடுவார்கள்;
அதைத் தன் வசப்படுத்திக் கொள்வார்கள்                        (பா.10)

தான் இறந்தபின் தன்னுடன் வருவது தான் செய்த அறத்தின்
பயனைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.                                  (பா.15)

தன் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆளும் தன்மையுள்ளவனே தவம்
புரிவதற்குத் தகுதியுள்ளவன்.                                                                           (பா.16)

கொல்லுவதற்காகவே பிற உயிர்களை வளர்ப்பது குற்றமாகும்;
விலைக்குப் புலால் வாங்கிச் சமைத்துச் சாப்பிடுவதும் குற்றமாகும். (பா.26)

அந்தணர்கள் உயர்ந்த பிறப்புள்ளவர்கள்.                                    (பா.33)

மையிட்டுக் கொள்வதனால் கண்கள் அழகாகக் காணப்படும்.
ஆதலால்தான் பெண்கள் கண்ணுக்கு மையிட்டுக் கொள்ளும் வழக்கம் நீண்ட
காலமாக நிலவி வருகின்றது(பா.36)
தெய்வத்தை அடைந்து வாழ்த்தி வணங்கினால் வேண்டும் வரங்களைப்
பெறலாம்.                                                                                (பா.61)

திருமகள் கருணையினால்தான் ஒருவனுக்குச் செல்வம் உண்டாகும்(பா.65)

தந்தையின் பெருமையையும், பண்பையும், அவனுடைய மகனால்
அறிந்து கொள்ளலாம்; பூர்வ வினையை வெல்ல முடியாது; அது தன்
பலனைத் தந்தே தீரும். புலால் உண்ணல் அறமன்று; கள்ளுண்டல் தீமை
தரும், போர் செய்வதற்குரிய படைகளிலே யானைப் படைகளே சிறந்தவை.
கல்வி கற்பது மக்கள் கடமை; கற்றவர்களே சிறந்தவர்கள். இக்கருத்துக்கள்
பல பாடல்களிலே காணப்படுகின்றன.

திருக்குறள் கருத்துக்கள்

நான்மணிக் கடிகையிலே திருக்குறளின் கருத்துக்கள் பலவற்றைக்
காணலாம். ‘‘கெட்டறிப கேளிரால் ஆயபயன்’’ தமக்குக் கேடுவந்தபோது
உறவினரால் ஆகும் பயனைக் கண்டறிக; (பா.3) என்பது நான்மணிக் கடிகை.
‘‘கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை, நீட்டி அளப்பது ஓர் கோல்’’ என்பது திருக்குறள். இரண்டும் ஒத்த கருத்துடையன.

‘‘பிறர் செய்த நன்றியை நன்றாக் கொளல் வேண்டும்’’ பிறர்
செய்த நன்றியை மறவாமல் என்றும் மனத்திலே கொள்ள வேண்டும்;
(பா.11)இது நான்மணிக்கடிகை. ‘‘தினைத்துணை நன்றி செயினும்
பனைத்துணையாக், கொள்வர் பயன்தெரிவார்’’ என்பது திருக்குறள். இவை
இரண்டிலும் கருத்தொற்றுமை காணப்படுகின்றது.

‘‘பொருள் பெறினும் நாடாதி, நட்டார் கண் விட்டவினை’’ பெரும்
பொருள் கிடைப்பதாயினும், நண்பர்களின் பொறுப்பிலே செய்வதற்கு
விட்டிருக்கும் தொழிலிலே தலையிடாதே; அதைப்பற்றி ஆராயாதே; (பா.25)
என்பது நான்மணிக்கடிகை, ‘‘தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்,
தீரா இடும்பை தரும்’’ என்பது திருக்குறள். இவ்விரண்டிலும் ஒத்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.

‘‘எற்றுள்ளும், இன்மையின் இன்னாதது இல்லை’’ எதனுள்ளும்,
வறுமையைப் போலத் துன்பந்தருவது வேறு ஒன்றுமேயில்லை. (பா.30)
என்பது நான்மணிக்கடிகை. ‘‘இன்னாமையின் இன்னாதது யாது எனின்
இன்மையின் இன்மையே இன்னாதது’’ என்பது திருக்குறள் இவையிரண்டும்ஒத்த கருத்துடையன.

‘‘முன்னம் முகம்போல முன் உரைப்பது இல்’’ ஒருவனுடைய
உள்ளத்தில் இருப்பதை அவனுடைய முகத்தைப் போல முதலில்
தெரிவிப்பது வேறொன்றும் இல்லை; (பா.46) என்பது நான்மணிக்கடிகை.
‘‘அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்’’
என்பது திருக்குறள். இவை இரண்டும் ஒரே கருத்துடையன.

‘‘சுருக்குக செல்லா இடத்துச் சினம்’’ தன் சினம் செல்லாத இடத்திலே
அச்சினத்தைச் செல்லாமல் சுருக்கிக் கொள்ளுக; என்பது நான்மணிக்கடிகை.
(பா.87) தன்னைக் காட்டினும் வலியாரைச் சினந்து கொள்வதால்
தனக்குத்தான் தீமையுண்டாகும். தன்னை விட வலியாரிடம் தன் சினம்
செல்லாது. ஆதலால் அச்சினத்தை அடக்கிக்கொள்ளுவதே
அறிவுடைமையாகும். இக்கருத்து, ‘‘செல் இடத்துக் காப்பான் சினம் காப்பான்
அல் இடத்துக், காக்கின் என் காவாக்கால் என்?’’ என்ற திருக்குறளிலே அமைந்திருப்பதைக் காணலாம்.

திருக்குறளின் கருத்தைக் கொண்ட இவைபோன்ற பல பாடல்கள்
நான்மணிக்கடிகையிலே அமைந்திருக்கின்றன. நான்மணிக் கடிகையைப்
படிப்போர் அவற்றைக் காணலாம். இந்நூல் தமிழரின், பண்பாட்டை
விளக்கும் சிறந்த நூலாகும். அறநெறியிலே நடந்து கொள்ளும்படி
அறிவுறுத்தும் அழகான வெண்பாக்களைக் கொண்ட அருமையான நூல்.

கருத்துகள் இல்லை: