06/03/2012

ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு - ஆர்.பன்னிருகைவடிவேலன்

கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பரப்பில் சொற்பொருள் விளக்கும் கருவி நூல்களான நிகண்டுகள் பல தமிழில் தோன்றியுள்ளன. அவற்றுள் "ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு'ம் ஒன்று.

மஞ்சிகன் என்பவரால் எழுதப்பட்டது இந்நூல். இது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்குரிய தாவரங்களைப் பற்றிக் கூறும் சிறிய நூல். ஆசிரியர், பெயர், ஐந்திணைச் சார்பு, அளவு, சிறுமை ஆகியன பற்றி இந்நூல் "ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு' எனப்பெயர் பெற்றது. இதன் பெயர் சிறு நிகண்டு என்று இருப்பதால், இவ்வாசிரியர் இயற்றிய பெருநிகண்டு ஒன்று இருந்திருக்கக்கூடும் என எண்ணத் தோன்றுகிறது.


நமக்குக் கிடைக்கிற நூல்கள் அனைத்திலும் கடவுள் வாழ்த்து, குரு வாழ்த்து, அவையடக்கம் போன்றவற்றால் ஏதாவது ஒன்று நூலின் தொடக்கத்தில் அமைந்திருக்கும். நிகண்டு நூல்களுள் இதைக்காண முடிகிறது. இந்நிகண்டில் இவைகளில் ஒன்றும் காணப்படவில்லை. இதற்குக் காரணம், அவை கிடைக்கப்பெறவில்லையா? மஞ்சிகன் என்பவர் இயற்றிய பெருநிகண்டு என்னும் ஒன்றின் தொடர்ச்சியாக இது அமைந்ததா? என அறிய இயலவில்லை.

இந்நிகண்டு மாகறல் தி.பொன்னுசாமி முதலியாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளதை இவர் தமது முன்னுரையில், மாகறல் கார்த்திகேய முதலியாரிடமிருந்து இந்நிகண்டு கிடைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், "கொல்லிமலை நிகண்டு, விநாயக நிகண்டு ஆகிய நிகண்டுகள் வெளிவராமல் போனதைப்போன்று மஞ்சிகன் ஐந்திணைப் பெருநிகண்டு ஒன்று இருந்து வெளியிடப்படாமல் போயிருக்கும்' என்று பதிவு செய்துள்ளார். இந்நிகண்டு பதிப்பிக்கப்பட்ட காலம் பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்கவில்லை.

இந்நூல், எளிதில் மனனம் செய்வதற்கு ஏற்றவாறு 122 ஓரடி நூற்பாக்களைக் கொண்டுள்ளது. மரங்களின் பெயர்களையும் பிற தாவரங்களின் பெயர்களையும் கூறுகிறது. இந்நூலில் 122 மரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மரத்துக்கும் பெரும்பான்மை 2 பெயர்களும் (தடவம், தணக்கு-56) சிறுபான்மை பெயர்கள் (பிசிதம், மந்தம், வெள்ளறுகு-68) என மூன்று பெயர்கள் வரை சுட்டியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும், மருத்துவ குணமிக்க மரங்களையும் வாசனைப் பொருள் மிகுந்த மரங்களையும் குறிப்பிடுகிறதேயன்றி, அவற்றின் பயன்பாடு பற்றிக் கூறப்படவில்லை.

பிரம்பு, சிறுமுன்னை, பெருமுன்னை, தென்னை, பனை, வெண்முருங்கை, மூங்கில், தகரை, ஈஞ்சு, நிலவேம்பு, ஆலம், மகிழ், கொன்றை, குரா, செருந்தி, சந்தனம், அரசு, கோங்கம், ஒதியம், புளி, குங்குமம், அனிச்சம், கொய்யா, ஆத்தி, தேறு, இரும்பிலி, தும்பிலி, கடம்பு, பிடா, ஊசிப்பாலை, பெருமரம், கருங்குன்றி ஆகிய மரங்களின் பெயர்களை இந்நூல் பட்டியலிட்டுள்ளது.

செடிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் கீரைவகைகள், கொடிவகைகள், மூலிகைகைள் அடங்குகின்றன.

மூலிகை (ஒடதி, ஒடதம்), கருநாகதாளி, அறுகு, சித்திரமூலம், நஞ்சுமுறிச்சான், முடக்கற்றான், பச்சிலை, ஆவிரை, தான்றி, பல்லி, பொருதலை, குதம்பை, தணக்கு, செம்பு, பிரமி, ஈயுணி, வெள்ளறுகு, காக்கணம், கஞ்சாங்கோரை, கொறுக்கை, நன்னாரி, நெடுங்கோரை, கரும் பிரண்டை, திரிதளமூலி, பாற்சொற்றி, சிறுநெல்லி, செந்தூதளை, வெண்தூதளை, கரிசலாங்கண்ணி, நெருஞ்சில், துளசி ஆகிய மூலிகைச் செடிகளின் பெயர்களையும், சிறுகீரை, தொய்யா, கானாங்கீரை, பொன்னாங்கண்ணி ஆகிய கீரை வகைகளும் கூறப்பட்டுள்ளன.

நறுவிலி, கோவை, ஆமணக்கு, பூனைக்காஞ்சொறி, பூனைக்காலி, தகரை, பீநாறி, நீர்மேல்நெருப்பு, பனிதாங்கி, மஞ்சாடி, மாதளை, கூவிளம், விண்டுகாந்தி, சூரியகாந்தி, எலுமிச்சை, வேளை, சின்னி, வேடு, எருக்கம், குதிரைக்குளம்பு, உடுப்பை, குருவி, படலைக்கள்ளி, கஞ்சா, கத்தரி, தும்பை, பசலை, புல்லுருவி, சிறுபுள்ளடை, அச்சங்கரணை, சவண்டல், நாயிறுதிரும்பி, நமை, பீர்க்கு, அவுரி, நொச்சி, மயிர்மாணிக்கம், அவரை, மயிர்ச்சிகை, நாரத்தை, வாகை, மஞ்சல்புல், குறிஞ்சி, தாழை ஆகியனவும், உம்பிலம், கோற்கொடி, வள்ளை, பூசனி ஆகிய கொடிவகைகளின் பெயர்களும் காணப்படுகின்றன.

திவாகரம், பிங்கலம் ஆகிய இரண்டு நிகண்டுகள், மரப்பெயர்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால், இந்நிகண்டு கூறியுள்ள அனைத்தும் அவற்றில் இல்லை. சான்றாக இந்நிகண்டு தென்னையின் பெயரைக் குறிப்பிடும்போது, நாலிநாரி, தெங்கு தென்னை (7) என்கிறது. ஆனால் திவாகரம், நாளிகேரம், தெங்கு தழை என நவில்வர் (திவா.702) என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிகண்டினை வேறு நிகண்டுகளின் மரப்பெயர்த் தொகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புதிய செய்திகள் பல புலப்படும். திவாகரம், பிங்கலம் ஆகியவற்றோடு பொருத்திப் பார்த்ததில் மாறுபட்டும், வேறுபட்டும், புதியதாகவும் இந்நூலின் கருத்துகள் தோன்றியுள்ளதைக் காணமுடிகிறது.

ஒவ்வொரு நூற்பாவும் ஆகும், எனப்படும், எனப்படுமே என்று முடிவதாக அமைந்துள்ளது. இந்நூலில் மரத்தின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளனவேயன்றி, பொருள் புரிந்து விளங்கிக்கொள்ளும் அளவிற்குரியதான பதிப்புகள் வரவில்லை.

இந்நிகண்டில் கூறியுள்ள பெயர்களைக் கொண்டு இன்று, இப்பெயர்கள் வழக்கில் இல்லை என்பதை அறிய முடிகிறது. உச்சரிப்பு ஒலியனின் வேறுபாட்டால் புதுப்பெயர்கள் அறிமுகமாகின்றன. நிகண்டு வளர்ச்சி வரலாற்றில் மரப்பெயர்களுக்குரிய தொகுதியாக விளங்குவதால் இந்நிகண்டும், நிகண்டு வளர்ச்சி வரலாற்றில் ஒரு பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: