கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

ஐந்திணை எழுபது - சாமி. சிதம்பரனார்

 நூல் வரலாறு

இது ஐந்து திணைகளைப் பற்றியும் கூறும் எழுபது வெண்பாக்கள்
கொண்டது. ஆதலால் ஐந்திணை எழுபது என்ற பெயர் பெற்றது. குறிஞ்சி,
முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற வரிசையிலே ஐந்து திணைகளைப்
பற்றியும் கூறுகின்றது; ஒவ்வொரு திணையைப் பற்றியும் பதினான்கு
பாடல்கள் அமைந்திருக்கின்றன.

இந்நூலில் இன்றுள்ள வெண்பாக்கள் அறுபத்தாறுதான்.
முல்லையைப்பற்றிய பாடல்களில் இரண்டு வெண்பாக்கள் இல்லை. நெய்தல்
பற்றிய பாடல்களிலே இரண்டு வெண்பாக்கள் இல்லை.
இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உண்டு. இது விநாயகரைப்
பற்றியது. இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளின் நடையும், போக்கும்,
நூலாசிரியரால் பாடப்பட்டது அன்று எனத் தெரிகின்றது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய காலத்தில் விநாயகர் என்ற
தெய்வம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆதலால் பிற்காலத்தார்
யாரோ இந்த வாழ்த்துப் பாடலைச் செய்து இதனுடன் இணைத்து விட்டனர்.


இந்நூலைச் செய்த ஆசிரியர் பெயர் மூவாதியர் இவரைப்பற்றிய
வரலாறு ஒன்றும் தெரியவில்லை. இவர் பாடிய வேறு நூல்களைப் பற்றியோ,
செய்யுட்களைப் பற்றியோ ஒன்றும் காணக் கூடவில்லை. இந்நூற்
பாடல்களிலே, இயற்கைக் காட்சிகளையும், இனிமையையும் காணலாம். அழகிய கற்பனைகளும்அமைந்திருக்கின்றன.

செய்யுட் சிறப்பு

தலைவியிடம், அவள் காதலனைப் பழித்துப் பேசினாள் தோழி.
அதைத் தலைவியால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. ‘‘தலைவன்
இரக்க சிந்தை படைத்தவன்; அவன் என்னை என்றும் கைவிட்டு
விடமாட்டான்; அவன் நம்மைக் கைவிட்டாலும், நாமாக அவனை விட்டுப்
பிரிய மாட்டோம்’’ என்று கூறினாள்.

‘‘காட்டுப் பசு ஒன்று மேய்ந்துகொண்டிருக்கின்றது. ஒரு குரங்கு, தானே
பழுத்து முதிர்ந்த பலாப் பழத்தின் சுளைகளை நன்றாகத் தின்றது. பழம்
சாப்பிட்டபின் பால் சாப்பிட வேண்டும் அல்லவா? ஆகையால் அந்த மந்தி,
அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுவின் மடியிலே வாய் வைத்துப் பால்
குடிக்கத் தொடங்கியது. பசு, அந்தக் குரங்கைத் திரும்பிப் பார்க்கவில்லை.
தன் கன்றுதான் பால் குடிக்கிறது என்று நினைத்துக்கொண்டு
பாலைச் சுரந்து நின்றது. இத்தகைய பார்க்கத் தகுந்த காட்சியமைந்த அழகிய
மலைநாடன் அவன். அவனை எக்காலத்திலும் நம் உயிருள்ள வரையிலும்
விட்டுப் பிரிவதில்லை’’ என்றாள் தலைவி. இப்பொருள் பொதிந்த
பாட்டுத்தான் கீழ் வருவது.

மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டுவந்து மந்தி, முலைவருடக், கன்றுஅமர்ந்து
ஆமா சுரக்கும், அணிமலை நாடனை
யாமாப் பிரிவது இலம் (பா.4)

இச்செய்யுளில் பசுவின் தன்மை குறிக்கப்பட்டுள்ளது. அது
விரும்பினால்தான் தன் கன்றுக்குப் பால்தரும்; விரும்பாவிட்டால், கன்று
ஊட்டினால்கூட, பாலைச் சுரக்காமல் அடக்கிக்கொள்ளும்; இத்தன்மை
பசுவுக்கு உண்டு.

மற்றொரு பாட்டு மருத நிலத்தில் நடக்கும் நிகழ்ச்சியை உரைப்பது.
கணவன், மனைவியை விட்டுச்சென்று பரத்தையர் வீட்டில் வாழ்கின்றான்.
அவன் தன் இல்லத்திற்குத் திரும்ப நினைத்தான். தன் பிரிவால் மனைவி
கோபங்கொண்டிருப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். திடீரென்று
வீட்டுக்குள் நுழைந்தால் இல்லக் கிழத்தியின் சினத்திற்கு இலக்காக
வேண்டும் என்று எண்ணினான். மனைவியின் சினத்தைத் தணித்து அவள்
உள்ளத்திலே சாந்தம் பிறந்த பின்பே வீட்டுக்குள் நுழையலாம் என்று முடிவு
செய்தான்.

ஊடியிருக்கும் காதலியின் ஊடலைத் தணிக்க அக்காலத்திலே
பாணர்களைத் தூதாக அனுப்புவார்கள். அவ்வழக்கப்படி காதலன் தனக்கு
வேண்டிய ஒரு பாணனைக் காதலியிடம் சமாதானத் தூதாக அனுப்பினான்.
தூதாக வந்த பாணன், அவளிடம் ஏதேதோ சமாதானப் பேச்சு பேசினான்.
தலைவனைப் பற்றி அவன் சொல்லியதை அவள் ஏற்றுக்
கொள்ளவில்லை. அதை அறிவிக்கும் வகையிலே அவள் தூதனிடம்
பேசினாள்.

யாணர்நல் லூரன் திறம்கிளப்பல்! என்னுடைய
பாண! இருக்க; அதுகளை; நாண் உடையான்!
தன்உற்ற எல்லாம் இருக்க, இரும்பாண!
நின்உற்றது உண்டேல் உரை.                      (பா48)

என்பதே அச்செய்யுள். இச்செய்யுளிலே, கணவன் மேல் சினங்கொண்ட
மனைவி, தன் வெறுப்பை வெளியிடும் அழகைக் காணலாம்.

‘‘எனது அருமையான பாணனே! புதிய செல்வங்கள் வளரும் சிறந்த
ஊர்களையுடைய தலைவனது மேன்மையைப் பற்றி என்னிடம்
அளக்கவேண்டாம்! சும்மா இரு! அந்தப் பேச்சை விட்டுத் தள்ளு! அடடா!
அவன் பிற பெண்களைப் பார்க்க வெட்கப்படுகிறவன்தான்! அவன் அடைந்த துன்பமெல்லாம் இருக்கட்டும்! பெரிய யாழை உடையவனே! அவனைப்பற்றிச் சொன்னது போதும்! உனக்கு ஏதேனும் குறையிருந்தால் கூறு! உன்மீது எனக்கு வெறுப்பில்லை. உன் குறையைத் தீர்க்கின்றேன். அவனைப்பற்றி மட்டும் சொல்லவேண்டாம்!’’ இதுவே இப்பாட்டில் அமைந்துள்ள பொருள்.

இச்செய்யுளிலே தமிழர்களின் சிறந்த பண்பொன்றைக் காணலாம்.
எய்தவனிருக்க அம்பை நோவது அறியாமை என்றொரு பழமொழியுண்டு.
குற்றவாளியை விட்டு விட்டுக் குற்றவாளியால் தூண்டப்பட்டவனைக்
கோபித்துக் கொள்வது அறியாமை என்பதே இப்பழமொழியின் கருத்து.
இக்கருத்துக்கு இலக்காகாதவர்கள் நல்ல குடியிலே பிறந்த பெண்கள்.
அறிவுள்ள பெண்களும் இக்கருத்துக்கு இலக்காக நிற்கமாட்டார்கள். இந்த
உண்மையை இப்பாடலிலே காணலாம்.

அறியாத பெண்களாயிருந்தால், தூது வந்த பாணன் மேல் சீறி
விழுவார்கள். இந்தத் தலைவி அப்படிச் செய்யவில்லை. பாணன் மீது பரிவு காட்டினாள். குற்றம் புரிந்த கொழுநனையே கோபித்துக் கொண்டாள்.
இச்சிறந்த கருத்தமைந்த செய்யுள் இது. இதுபோன்ற இன்னும் பல
செய்யுட்களை இந்நூலிலே காணலாம்.

சிறந்த பல செய்திகள்

‘‘அறிவுள்ளவர்களின் நட்பே சிறந்தது. அது எப்பொழுதும் அழியாமல்
நிலைத்து, நிற்கும். அவர்கள் நட்பே என்றும் வலிமையுள்ள துணையாக
நிற்கும். மேலும் மேலும் பல நன்மைகளைத் தரும்

சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி
வலியாகிப் பின்னும் பயக்கும்’’.                     (பா.5)

கற்புள்ள பெண்கள் தங்கள் கணவனையே உயிர் என்று கருதியிருந்தனர்.
அவன் உயிர் வாழ்ந்தால் தான் தாம் உயிர் வாழ்வர். அவன் வீழந்தால்
தாமும் வீழ்வர். இதை விளக்கும் செய்யுள் கீழ்வருவது;

‘‘குறை ஒன்று உடையேன்மன் தோழி! நிறையில்லா
மன்உயிர்க்கு ஏமம் செயல் வேண்டும்; இன்னே;
அராவழங்கும் நீள்சோலை நாடனை, நம் இல்
இராவாரல்! என்பது உரை!                    (பா.14)

தோழியே எனக்கு ஒரு குறையுண்டு; அது நின்னால்தான்
முடியவேண்டும்; என்பால் நிலையில்லாமல் இருக்கும் என்னுயிர்க்கு ஒரு
பாதுகாவலைச் செய்யவேண்டும்; இப்பொழுதே அதைச் செய்யவேண்டும்.
நமது தலைவன் பாம்புகள் திரிந்து கொண்டிருக்கின்ற நீண்ட
சோலையையுடைய நாட்டின் தலைவன்; அவனிடம் அச்சோலையை இரவிலே கடந்து நம் வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறவேண்டும்’’ என்றாள்.இதனால் காதலும் கற்பும்நிறைந்த மாதரின் இயல்பைக் காணலாம்.

முயற்சியினாலேயே செல்வம் உண்டாகும். பெரிய சிறந்த முயற்சிக்கு
ஏற்றாற்போல் சிறந்த செல்வம் கைகூடும். இதுவே பண்டைத்தமிழர்
நம்பிக்கை.

பெருந்தகு தாளாண்மைக் கேற்ப
அரும்பொருள் ஆகும்.       (பா.29)

செல்வத்திலேயே சிந்தையைச் செலுத்தியவர்கள் எப்பொழுதும் அதைச்
சேர்ப்பதிலேயே குறியாய் இருப்பார்கள்; அவர்கள் சிறிதும் இரக்கம்
காட்டமாட்டார்கள்; தயவு தாட்சண்யம் என்பது எள்ளளவும் அவர்களிடம்
இராது. ‘‘தாட்சண்யம் தனநாசம்’’ என்பதைப் பின்பற்றி நடப்பர்.

 ‘‘மெல்லியல், கண்ணோட்டம் இன்றிப் பொருட்கு இவர்ந்து
நில்லாத உள்ளத் தவர்.                                   (பா.30)

இரக்கத் தன்மையாகிய கருணை சிறிதும் இல்லாமல், பொருள்
தேடுவதிலேயே விருப்பங்கொண்டு, நம்மிடம் அன்பு நிலைபெறாத உள்ளம்
உடையவர்’’ என்பதனால் இவ்வுண்மையைக் காணலாம்.

இல்லறமே சிறந்ததாகும். அறிஞர்கள், ஆராய்ச்சியுள்ளவர்கள், இல்லறம்
துறவறம் இரண்டிலே இல்லறமே சிறந்தது என்று கூறினர். ஆதலால் அதுவே
அனபுடன் விரும்பத்தக்கதாகும்.

‘‘உள்நாட்டம் சான்றவர் தந்த நசையிற்று.           (பா.53)

ஆழ்ந்த ஆராய்ச்சி நிறைந்த அறிஞர்கள் சிறந்தது என்று ஏற்படுத்தியது;
அன்புடன் கூடியது’’ என்பது இவ்வுண்மையை விளக்கும்.

பழக்க வழக்கங்கள்

பண்டைக்காலப் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் இந்நூலால்
அறியலாம்.

பசுக்கள் இடையர்கள் ஊதும் கொன்றைக்குழலின் இனிய ஓசையைச்
சுவைக்கும். அவர்கள் அக்குழலை ஊதினால் பசுக்கள் கூடும்; அவர்கள்
ஊதிக்கொண்டே சென்றால், அவர்களைத் தொடர்ந்து அவைகள் செல்லும்.

‘‘கொன்றைக் குழல் ஊதிக் கோவலர் பின் நிரைத்துக்
   கன்று அமர் ஆயம்புகுதர                                 (பா.22)

கொன்றைக்குழலை ஊதிக்கொண்டு போகும் இடையர்கள் பின்னே,
வரிசையாக கன்றை விரும்பும் பசுமந்தை ஊர்க்குள் நுழைய’’ என்பதனால்
பசுக்களின் இசையுணர்ச்சியை அறியலாம்.

தும்மல் இயல்பாக வருவதன்று; யாரோ நம்மை நினைப்பதனால்தான்
தும்மல் வருகின்றது. என்பது நம்பிக்கை.
  
இந் நம்பிக்கையுள்ளவர்கள் இன்றும் இருக்கின்றனர். பண்டைத்
தமிழர்களிடமும் இந்த நம்பிக்கை இருந்தது. இதனை இந்நூலின் நாற்பதாவது
செய்யுளால் அறியலாம்.

பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மையுண்டு. கனவுக்குப் பலன்
உண்டு. நெஞ்சத்திலே எழும் நினைப்பு காரணமாக, உடம்பின்
உறுப்புக்களிலே மாற்றம் ஏற்படும், பல்லி சொல்வதற்குப் பலன் உண்டு;
இத்தகைய நம்பிக்கைகள் பழந்தமிழர்களிடம் இருந்தன.
  
  ‘‘பூம்கண் இடம்ஆடும்; கனவும் திருந்தின
ஓங்கிய குன்றம் இறந்தாரையாம் நினைப்ப
வீங்கிய மென்தோள் கவினிப் பிணிதீரப்
பாங்கத்துப் பல்லி படும்.              (பா.41)

உயர்ந்த மலையைக் கடந்து சென்ற நம் காதலரைப் பற்றி நாம்
நினைத்த உடனே, அழகிய கண்களிலே இடக்கண் துடிக்கின்றது; கண்ட
கனவுகளும் நல்ல கனவுகளாக இருந்தன; இளைத்துப்போன மெல்லிய
தோள்கள் அழகுடன் பருத்தன; நம் துன்பம் தீரும்படி பக்கத்திலே பல்லியும்
சொல்லும்’’ இதனால் மேலே கூறிய நம்பிக்கைகளைக் காணலாம். இத்தகைய
பல சிறந்த கருத்துக்களையுடையது ஐந்திணை எழுபது என்னும் நூல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ