கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

ஐந்திணை அறுபது - சாமி சிதம்பரனார்

 நூலின் சிறப்பு

ஐந்து திணை ஒழுக்கங்களைப் பற்றிக் கூறும் அறுபது பாடல்கள்
அடங்கியது. இதற்கே ஐந்திணை அறுபது என்று பெயர். இந்நூலைக்
கைந்நிலை என்னும் பெயருடன் வெளியிட்டிருக்கின்றனர்.

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையிலே ஐந்து
திணை ஒழுக்கங்களைப் பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றன.

இந்நூலிலே இப்பொழுது சிதையாமல் முழு உருவில் 43
வெண்பாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு திணையைப் பற்றியும் பன்னிரண்டு
பன்னிரண்டு வெண்பாக்கள் இந்நூலில் பாடப்பட் டிருக்கின்றன. குறிஞ்சித்
திணையைப் பற்றிய பன்னிரண்டு பாடல்களில் முதலும் எட்டாவதும்
சிதைந்திருக்கின்றன. பத்து வெண்பாக்களே முழு உருவில் உள்ளவை.
பாலைத் திணை பற்றிய பன்னிரண்டு வெண்பாக்களில் 2, 5
எண்ணுள்ள வெண்பாக்கள் சிதைந்திருக்கின்றன. 3, 4, 8 ஆகிய மூன்று
வெண்பாக்கள் இல்லை. 7 வெண்பாக்கள் தாம் முழு உருவில் இருக்கின்றன.
முல்லைத் திணையைப்பற்றிய வெண்பாக்களில் மூன்றே வெண்பாக்கள் தாம்
முழுசாக இருக்கின்றன. மூன்று முதல் பதினொன்று வரையில் உள்ள ஒன்பது வெண்பாக்கள் அழிந்துவிட்டன. மருதத்திணையிலே இரண்டாவது வெண்பா மட்டும் சிறிது சிதைந்திருக்கின்றது. ஏனைய பதினொன்றும் சிதைவின்றி அப்படியே இருக்கின்றன. நெய்தல் திணையைப் பற்றிய
பன்னிரண்டு வெண்பாக்களும் அப்படியேயிருக்கின்றன. மூன்றாவது
வெண்பாவில் இரண்டாவது அடியில் என்ற ஒரு எழுத்து மட்டும்
சிதைந்திருக்கின்றது. ஆதலால் இதைச் சிதைவு என்று
சொல்ல முடியாது.


அகத்திணை நூல்களிலே இதுவும் ஒரு சிறந்த நூல்; ஒவ்வொரு
நிலத்திலும் உள்ள இயற்கைக் காட்சிகளை அழகாக எடுத்துரைக்கின்றது.
இந்நூற் பாடல்கள் முழுவதும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின்
அறுபதாவது பாட்டிலே தென்னவனும், கொற்கை நகரும் காணப்படுகின்றன.
இச்செய்யுள் பாண்டியன் வெற்றியைப் பாராட்டுகின்றது. இதைக் கொண்டு
இவர் பாண்டிய நாட்டில் வாழ்ந்த ஒரு புலவர் என்று எண்ணலாம்.

 ‘‘வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்
சந்தனம் ஏந்தி அருவி கொண்ர்ந்திடூஉம்
                 
(பா.27)

தீயால் வெந்த புனத்திலே, அத்தீயில் சிக்கி மடிந்த உயிர்களின்
பிணநாற்றம் வீசுகின்றது. அந்தப் பிணநாற்றம் மறையும்படி மலையிலிருந்து
விழும் அருவிநீர் சந்தனத்தை ஏந்திக்கொண்டு வருகின்றது’’ என்பது
குறிஞ்சித் திணையின் சிறப்பைக் குறித்த பாடல்.

 ‘‘பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர்
காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும்.
               
 பாசி படர்ந்து பசுமையாகக் காணப்படுகின்ற சுனை; அதன் பக்கத்தில்
உள்ள பள்ளத்திலே ஊறிக் கிடக்கும் பழைய தண்ணீர்; அந்த நீரைச்
சினமுள்ள குரங்கொன்று அள்ளி அருந்துகின்றது; மரத்தில் உள்ள
கனியையும் பறித்துத் தின்று சுவைக்கின்றது’’. இதுவும் குறிஞ்சி நில
இயற்கைக் காட்சி.

இந்நூலில் காட்டப்படும் வருணனைகள் இவ்வாறு இயற்கையாகவே
அமைந்திருக்கின்றன.

கருத்துள்ள செய்யுட்கள்

காதலன் ஒவ்வொரு நாளும் இரவிலே காதலியைக் கண்டு கலந்துமகிழ
வருகின்றான். அதுபற்றித் தலைவி கவலை அடைகின்றாள். அவன் இரவில்
வருவதனால் அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது
என்பதுதான் அவள் கவலை. அவள் தன் காதலன் வரும் வரையிலும்
உறங்குவதில்லை. அவளுடைய உள்ளக் கவலை உறக்கத்தைக்
கெடுத்து வந்தது. இனி, வெளிப்படையாக மணம்புரிந்துகொண்டு வாழ்ந்தால்தான் கவலையற்று வாழமுடியும் என்று அவள் தன் தோழியிடம்
உரைக்கின்றாள். இந்த முறையிலே அமைந்துள்ளது ஒரு செய்யுள்.

‘‘தோழியே! நமது தலைவன் பொன்போன்ற பூங் கொத்துக்களையுடைய
வேங்கை மரங்கள் நிறைந்த மலை நாட்டையுடையவன். அவன்
மின்னலைப்போல் ஒளிவீசி இருளை ஓட்டுகின்ற வேலைக் கையிலேந்தி இந்த இருட்டிலே இப்பொழுது வந்து கொண்டிருப்பான். அவன் மலைக்காட்டு
வழியிலே, வந்து கொண்டிருக்கும் இந்த நள்ளிரவிலே, எனது கண்
இமைகள் ஒன்றோடு ஒன்று எப்படித்தான் பொருந்தும்? அவனை நினைத்து
என் கண்கள் உறங்க மறுக்கின்றன.
  
பொன் இணர் வேங்கைப் புனம்சூழ் மலைநாடன்,
மின்னின் அனையவேல் ஏந்தி, இரவினில்
இன்னே வரும்கண்டாய் தோழி! இடையாமத்து
என்னை இமைபொரு மாறு’’                          (பா.10)

இச்செய்யுளிலே ‘‘நெஞ்சிலே கவலையுள்ளவர்கள் நிம்மதியாக தூங்க
மாட்டார்கள்’’ என்ற உண்மை அடங்கியிருக்கின்றது.

மற்றொரு செய்யுள் மிகவும் அருமையானது. கணவன்மேல் கருத்து
வேறுபட்ட காதலிக்குத் தோழி சமாதானம் கூறுவதாக அமைந்த செய்யுள்
அது. கணவன்மனைவிகளுக்குள் கருத்து வேறுபாடு வளர்ந்தால் அவர்கள்
வாழ்க்கையிலே இன்பம்இருக்காது. ஆகையால், காதலனுடைய நண்பர்களும்காதலியின் நண்பர்களும், அவர்கள் இருவருக்கும் சிறிது மனவேற்றுமை ஏற்பட்டால்கூட உடனே அதைப்போக்க முயற்சிப்பார்கள். இதுவே தமிழ் மக்களின் பண்பு.

காதலன் பொருள் தேடப் போயிருக்கின்றான். அவன் பொருளைப்
பெரிதாக மதித்துத் தன்னைவிட்டுப் பிரிந்ததைப் பற்றிக் காதலியின்
உள்ளத்திலே ஒரு ஐயம் உண்டாகின்றது. நம்மைப் பற்றி அவன்
உள்ளத்திலே வைத்திருந்த அன்பு குறைந்து விட்டதோ என்று
எண்ணினாள். தலைவியின் இக்கருத்தைக் கண்ட தோழி அவளுக்குச்
சமாதானம் கூறினாள்.

‘‘கள்வர்கள் திரிந்துகொண்டிருக்கும் பாலைவனத்தைக் கடந்து
பொருள்தேடச் சென்றார் காதலர். அவர் உள்ளம் வேறுபட்ட
காரணத்தால்தான் நம்மைவிட்டுப் பிரியத் துணிந்தார், என்று நினைக்கின்றாய்
நீ! ஒளிவீசும் ஆபரணங்களை அணிந்த தலைவியே! நீ
அப்படி நினைக்காதே! அவர் நம்மிடம் கொண்ட அன்பிலே சிறிதும்
குறைந்தவர் அல்லர். துன்பந்தரும், மலைப் பிளவுகளைக் கடந்து
பொருள்தேடச் சென்றவர், நாம் காணும்படி விரைவில் வருதலை நீ
காண்பாய்.

கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர்
உள்ளம் பிரிந்தமை நீஅறிதி - ஒள் இழாய்!
தொல்லைவிடர் அகம் நீந்திப் பெயர்ந்தவர்,
வல்லைநாம் காணும் வரவு’’                         (பா.22)

இச்செய்யுளிலே ‘‘உன்னுடன் சேர்ந்து இல்லறத்தை இன்பமுடன்
நடத்துவதற்காகவே பொருளீட்டச் சென்றார். ஆதலால், அவர் அன்பிலே
ஐயங்கொள்ளாதே’’ என்று கூறும் கருத்தும் அமைந்திருப்பதைக் காணலாம்.

பொய்யை வெறுத்தல்

பொய் சொல்வது தவறு. பொய் சொல்வதை நல்லவர்கள்
வெறுப்பார்கள். பொய்யர்களை மக்கள் மதிப்பதில்லை. அவர்களோடு
முகங்கொடுத்துப் பேசவும் முன்வர மாட்டார்கள். இன்றும் பொய்
புகல்வோரைப் பொதுமக்கள் இகழ்ந்துரைப்பதைப் பார்க்கின்றோம்.இது
பண்டைத் தமிழர் பண்பாகும்.

காதலன் பரத்தையர் வீட்டுக்குப் போய்விட்டான். சில நாட்கள் கழித்து
வீட்டிற்குத் திரும்ப நினைத்தான். திடீரென்று திரும்பிவந்து வீட்டுக்குள்
புகுந்தால் காதலியின் வரவேற்பைப் பெறமுடியாது என்பது அவனுக்குத்
தெரியும். ஆதலால் அவன் பாணனை அனுப்பிக் காதலிக்குச் சமாதானம்
கூறும்படி செய்தான். தலைவனால் தூதாக அனுப்பப்பட்டு வந்த பாணன்,
தலைவியை அடைந்து ஏதேதோ பொய்யும் புளுகும் அளந்தான். ‘‘தலைவன்
இனித் தவறு செய்யமாட்டான். அவன் இப்பொழுது செய்த
குற்றத்திற்காக வருந்துகின்றான்; இக்குற்றத்தை மன்னிக்கும்படி
வேண்டுகிறான். இனி வேசையர் வாழும் திக்கைத் திரும்பிப் பார்ப்பதே
இல்லையென்று உறுதி கூறுகின்றான்’’ என்றெல்லாம் சொன்னான் பாணன்.

பாணன் இப்படிச் சொல்வது புதிதன்று. இதற்கு முன் எத்தனையோ
தடவை தலைவன் இவ்வாறு வாக்குறுதி தந்தது உண்டு. இது தலைவிக்குத்
தெரியும். ஆதலால் பாணன் கூறுவது பொய்யுரை என்றே அவள்
நினைத்தாள். நினைத்ததும் அப்பாணனைக் கடிந்து கொள்ளுகின்றாள்.

‘‘பயம்இல் யாழ்ப்பாண! பழுதாய கூறாது
எழு! நீபோ! நீடாது; மற்று.                     (பா.46)

பயனற்ற சொற்களைப் பேசும் யாழ் வாசிக்கும் பாணனே! குற்றமுள்ள
பொய் மொழிகளைப் பேசாமல் நீ எழுந்து போ! இங்கே தாமதிக்காதே’’

‘‘பொய்ப்பாண!
இருக்க! எம் இல் உள் வரல்                                              (பா.47)

பொய் சொல்லும் பாணனே! அப்படியே இரு! எம் வீட்டுக்குள்ளே
வரவேண்டாம்’’. இவ்விரண்டு செய்யுட்களும் பொய் பேசுவதைத் தமிழர்கள்
எவ்வளவு வெறுத்தனர் என்பதைக் காட்டும்.

பல்லி சொல்வதைத் தமிழர்கள் நம்பினர். பல்லி சொல்லுக்குப் பலன்
உண்டு என்று எண்ணினர்; இதனை இந்நூலின் 18-வது செய்யுளில்
அறியலாம். இத்தகைய பல கருத்துகொண்ட சிறந்த நூல் ஐந்திணை அறுபது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ