கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

திணைமொழி ஐம்பது - சாமி சிதம்பரனார்

நூலின் அமைப்பு

ஐந்து திணைகளைப்பற்றிக் கூறும் ஐம்பது பாடல்கள் அடங்கிய நூல்
இது. இதற்கே திணைமொழி ஐம்பது என்று பெயர்

இந்நூலை இயற்றியவர் கண்ணன் சேந்தனார் என்பவர். இவர்
தந்தையார் பெயர் சாத்தந்தையார். இதைத் தவிர இவருடைய வரலாறு வேறு
எதுவும் தெரியவில்லை.

ஐந்திணைகளைப் பற்றிக் கூறும் மற்ற நூல்களைக் காட்டிலும்
இதற்கொரு தனிச்  சிறப்பு உண்டு. இந்நூலிலே ஐந்திணைகளையும்
வரிசையாக அமைத்திருக்கும் முறை சிறந்ததாகும்.

முதலில் குறிஞ்சித்திணை; குறிஞ்சி நிலத்தில்தான் காதலனும் காதலியும்
முதல் முதலாகச் சந்திப்பார்கள். அவர்களிடம் காதல் பிறக்கும்;
மணமக்களாவதென்று உறுதி செய்து கொள்ளுவார்கள்.

இரண்டாவது பாலைத்திணை; இது காதலன் காதலியை விட்டுப்
பிரிவதைப்பற்றிப் பேசுவது. காதலன், மணம் புரிவதற்கு முன்போ மணம்
புரிந்துகொண்ட பிறகோ பொருள் தேடப் பிரிவான். அவளை அவன்
மணம்புரிவதற்கு முன்பே அவள் பெற்றோர் அறியாமல்
தன்னுடன் அழைத்துச் செல்வான். இவ்வாறு பிரிவை உணர்த்துவதே
பாலைத்திணையாகும்.

மூன்றாவது முல்லைத்திணை; காதலன் பிரிந்ததனால் வரும் துன்பத்தைப்
பொறுத்துக் கொண்டிருத்தல். தன் உள்ளத்திலே எவ்வளவு துயரம்
பெருகினாலும் அதை அடக்கிக்கொண்டு காதலன் வருகையை
எதிர்பார்த்திருப்பாள் கற்புள்ள காதலி. இந்த நிகழ்ச்சியை உரைப்பதே
முல்லைத்திணை.

நான்காவது மருதத்திணை; இத்திணையிலே இல்லறம் நடத்தும் காதலன்
காதலிகளுக்குள் நிகழும் ஊடல் கூறப்படும். எந்தெந்தக் காரணங்களினால்
அவர்களுக்குள் ஊடல் தோன்றுகின்றது என்றெல்லாம் சொல்லப்படும்.

ஐந்தாவது நெய்தல் திணை; காதலன் பிரிவுக்காகக் காதலி வருந்துதல்,
தன் துன்பத்தைக் காதலி வெளிப்படையாகக் கூறுவாள்.

இவைகளே ஐந்திணை ஒழுக்கங்கள். இவற்றைச் சுருக்கமாகக் கூறினால்,
கூடல்,பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்று கூறிவிடலாம்.

மேலே காட்டிய வரிசைப்படியே இந்நூலில் ஐந்திணைகளும்
அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு திணையைப்பற்றியும் பத்துப்பத்து
வெண்பாக்கள் பாடப்பட்டிருக்கின்றன. இவ்வெண்பாக்கள் படிப்பதற்கு
இனிமையானவை; எளிமையானவை; அழகிய கற்பனைகள்
அமைந்தவை. அகப்பொருளைப் பற்றிச் சொல்லும் பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களிலே இது ஒரு சிறந்த நூல்.

பாட்டின் சிறப்பு

இந்நூற் செய்யுள்களின் சிறப்புக்குச் சில உதாரணங்களைக் காண்போம். ஒரு காதலனும், காதலியும், கள்ள நட்புகொண்டு வாழ்கின்றனர். இதற்குக் களவு மணம் என்று பெயர். கள்ள நட்புக்குப் பிறகுதான் அவர்கள் ஊரார் அறிய மணம் புரிந்துகொண்டுஇல்லறம் நடத்துவார்கள். அப்பொழுது கற்பு மணம் என்று பெயர்.

இவர்கள் களவு மணத் தம்பதிகளாய் வாழும்போது, காதலன் இரவு
நேரத்திலே வருவான்; ஒரு குறிப்பிட்ட இடத்திலே தலைவியைக் கண்டு
அளவளாவிச் செல்லுவான். இப்படிப் பல நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.
இந்தக் களவு மணத்திலிருந்து மாறிக் கற்பு மணம் புரிந்து கொள்ளவேண்டும்
என்பது தலைவியின் ஆவல்; அவளுடைய தோழியின் எண்ணமும் இதுதான்.
இந்த எண்ணத்தை ஒருநாள் தலைவனிடம் தெரிவிக்கின்றாள் தோழி.
இந்த நிகழ்ச்சியைக் கூறும் செய்யுள் ஒன்று. அச்செய்யுள் மிகவும் சிறந்த
கருத்துடன் அமைந்திருக்கின்றது.

‘‘நன்மணம் கமழும் மலைச்சாரலிலே தினைப்புனங்காப்பவர்கள்
திரிந்துகொண்டிருப்பார்கள்; அந்த மலைப் பாதையிலே நீங்கள் இனிமேல்
வரவேண்டாம்; ஏனென்றால் அவர்களுக்கு இனிய மொழிகள் பேசத்
தெரியாது; அவர்கள் கொல்லுதற்கு உதவும் வில்லைக் கையிலே
பிடித்திருப்பார்கள்; நெருங்குகின்றவர்களைக் குத்திக் கொல்லும் வேலும்
வைத்திருப்பார்கள்; விரைந்து பாயக்கூடிய கணைகளையும்
வைத்திருப்பார்கள்;அவர்கள் கல்லிலே (மலையிலே) வாழ்கின்றவர்கள்;
ஆதலால் அவர்கள் நெஞ்சமும் கல்லாகத்தான் இருக்கும்; அவர்கள்
எங்களைச் சேர்ந்தவர்கள்தாம்; ஆயினும்கொடியவர்கள்.

விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்;
வரையிடை வாரன்மின்! ஐய!-உரைகடியர்;
வில்லினர்; வேலர்; விரைந்துசெல் அம்பினர்;
கல்லிடைவாழ்நர்எமர்’’.                               (பா.5)

இச்செய்யுள் தலைவியின் கருத்தைத் தலைவனுக்குக் குறிப்பாக எடுத்துக்
காட்டுகின்றது ‘‘இரவில் வந்து போவது ஆபத்து; வெளிப்படையாகக் கற்பு
மணம் புரிந்துகொண்டு வாழ்வதே சிறந்தது’’ என்று குறிப்பிடுகின்றது.
அன்றியும், தலைவி தலைவன் மீது கொண்டுள்ள அன்பையும்
அறிவிக்கின்றது. கற்புள்ள மனைவி தன் காதலனுக்கு எவ்விதத் துன்பமும்
உண்டாகக்கூடாது என்பதிலே எவ்வளவு கவலைகொண்டிருப்பாள்
என்பதற்கும் இச்செய்யுள் ஒரு எடுத்துக்காட்டு.

களவு மணம் தமிழர் பரம்பரை வழக்கம்; களவு இல்லாமல் கற்பு
நிகழாது; இதுவே தமிழர் கொள்கை. ஆயினும், நாளடைவில் கற்பு
மணத்தையே சிறப்பாக மதித்தனர். களவு மணத்தைப் பழிக்கவும்
தொடங்கினர். ஆதலால் உள்ள நட்புள்ள காதலர்கள் விரைவில்
கற்பு மணத் தம்பதிகளாகிப் பழிப்பின்றி வாழவே விரும்பினர். இந்த நிலை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தோன்றிவிட்டது.
இவ்வுண்மையை விளக்கும் செய்யுட்களை அகத்திணை நூல்களிலே
காணலாம்.

‘‘யாழும், குழலும், முழவும் இயைந்தென
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
மாழைமான் நோக்கியும் ஆற்றாள் இரவரின்;
ஊர்அறி கௌவை தரும்.                              (பா.7)

யாழும், புல்லாங்குழலும், மத்தளமும் தம்முள் ஒத்து இசைப்பன போல
அருவி நீர் ஒலித்துக்கொண்டு விழுகின்றது. இத்தகைய சிறந்த
மலைநாட்டையுடையவனே! அழகிய கண்களையுடைய தலைவியும் நீ இரவு
நேரத்திலே வருவதற்குப் பொறுக்கமாட்டாள்; நானும் சம்மதியேன்; உன்
செய்கை ஊரார் அறியும் பழிப்பையும் உண்டாக்கும்’.
‘‘உனக்கும் தலைவிக்கும் உள்ள கள்ள நட்பு வெளிப்பட்டால் ஊரார்
பழிப்பர். ஆதலால் விரைவில் தலைவியைப் பலரும் அறிய
மணம்புரிந்துகொள்’’ என்ற கருத்தையே தோழி இவ்விதம் தலைவனிடம்
உரைத்தாள்.

கற்புள்ள பெண்ணுக்குக் கணவனே தெய்வம்; அவனை விட்டால்
அவளுக்கு வேறு கதியில்லை; இதுவே பழந்தமிழர் கொள்கை.
இக்கொள்கையை வற்புறுத்துகிறது இந்நூல்.

மனைவி ஊடியிருக்கின்றாள். அவள் ஊடலைத் தணிக்கும்படி, காதலன்
தோழியிடம் வேண்டிக்கொள்ளுகின்றான். அப்பொழுது அவனுக்குத் தோழி
விடையளிக்கின்றாள்.அவ்விடையிலே இக்கருத்து அடங்கி யிருக்கின்றது.

‘‘செந்தாமரைகள் பூத்திருக்கின்ற வயல்களையுடைய மருதநிலத்
தலைவனே! நாங்கள் உன்மேல் வருத்தப்பட்டு என்ன செய்ய முடியும்?
என்னுடைய தலைவிக்கு நல்ல அழகைத் தந்தவனும் நீதான்! அந்த அழகைத்
திருப்பி எடுத்துக்கொண்டவனும் நீயேதான்! ஆதலால்
எங்களால் ஆவது ஒன்றும் இல்லை; உன் விருப்பத்தின்படியே செய்.

செந்தாமரை மலரும் செவ்வயல் நல்ஊர,
நொந்தால் மற்றுஉன்னைச் செயப்படுவதுஎன் உண்டாம்
தந்தாயும் நீயே! தரவல்ல நல்நலம்
கொண்டாயும் நீ! ஆயக் கால்’’                               (பா.36)       

இவ்வாறு காதலன் காதலிகளின் அன்பு நிறைந்த வாழ்க்கை முறையை
எடுத்துக்காட்டுவதே இந்நூலாகும். ஆணும் பெண்ணும் இணைந்து
ஒன்றுபட்ட உள்ளமுடன் வாழும் நிலை ஏற்பட்ட பிறகுதான்
மக்களிடையிலே நாகரிகம் தழைத்தது. அறம், பொருள், வீடு பற்றிய
எண்ணங்கள் எல்லாம் தோன்றி வளர்ந்தன. இவ்வெண்ணங்கள் தோன்றி
வளர்வதற்கு அடிப்படை ஆண் பெண்களின் அன்பிலே தோன்றிய குடும்ப
வாழ்வுதான்.

தெய்வ வணக்கம்

‘‘தேவர்கள் வானுலகிலே வாழ்கின்றவர்கள். அவர்கள் எல்லா
வல்லமையும் படைத்தவர்கள்; அவர்களை வணங்கி வழிபாடு செய்தால் நாம்
விரும்புவதைப் பெறலாம்’’ இந்த நம்பிக்கை தமிழர்களிடம்
குடிகொண்டிருந்தது.

தேவர்களைப் பல வகையிலே மக்கள் வணங்கி வந்தனர். அவைகளில்
நறுமணப் புகையிட்டு வணங்கும் வழக்கம் ஒன்று. இதைத்தான் தூபமிட்டு
வணங்குதல் என்று கூறுவர். இன்றும் சாம்பிராணி, தசாங்கம், குங்கிலியம்,
ஊதுவத்தி முதலிய தூபங்களால் தெய்வங்களை வணங்குவதைக்காண்கிறோம்.
இது பழந்தமிழர் பண்பாடுதான்.

புகழ் மிகு சாந்துஎறிந்து, புல்எரி ஊட்டிப்
புகை கொடுக்கப் பெற்ற புலவோர், -துகள்பொழியும்
வான் உயர் வெற்ப இரவின் வரல்வேண்டா
யானை உடைய சுரம்                                       (பா.1)


‘‘நீ வரும் வழியிலே யானை உண்டு. ஆதலால் நீ இனி இரவிலே
வரவேண்டாம்’’ என்று தலைவனுக்குக் கூறுகின்றாள் தோழி. அப்பொழுது
அவனுடைய மலையிலே நடைபெறும் தெய்வ வழிபாட்டை
எடுத்துரைக்கின்றாள். ‘‘சந்தனக் கட்டையை வெட்டிக் குவித்து நெருப்பூட்டி
அப்புகையால் தேவர்களை வணங்குகின்றனர். இப்புகையைப் பெற்ற
தேவர்கள், மழையைப் பெய்யச் செய்கின்றனர்’’ என்ற கருத்துள்ளதே
இச்செய்யுள். இதனால் மழை வேண்டித் தெய்வத்தை வணங்கும் வழக்கம்
பண்டைக் காலத்தில் இருந்ததைக் காணலாம்.

நீதிமொழி

அகத்திணை நூல்களிலும் நீதிகளை அமைத்துக் காட்டும் வழக்கம்
உண்டு. நீதிகளை உவமானங்களாக உரைப்பார்கள்.

கடைஆயார் நட்பே போல் காஞ்சிநல் ஊர!
உடைய இள நலம் உண்டாய்!            (பா.31)


பரத்தையர் வீடு சென்று திரும்பிய தலைவனிடம் தோழி சொல்லியது
இப்பாட்டு. அவன் தலைவியின் பெண்மை நலத்தை நுகர்ந்தான்.
அவளுடைய அழகையெல்லாம் கவர்ந்து விட்டான். அதன் பின் அவன்
பரத்தையர்களின் அழகிலே மயங்கி அவர்களிடம் சென்று இன்பம் நுகர்ந்து
திரும்பினான். அப்பொழுதுதான் தோழி அவனைப் பார்த்து
இப்படிப் பேசினாள்.

‘‘காஞ்சி மரங்கள் நிறைந்த நல்ல ஊரையுடையவனே தலையாயாரிடம்
நட்புகொண்டால் அவர்கள் நமக்கு வேண்டுவனவற்றை உதவுவார்கள்; நமக்கு
உதவுவதே அவர்கள் நோக்கமாக இருக்கும்; நம்மிடம் சுரண்டமாட்டார்கள்.
கடைப்பட்டவர்களின் நட்போ இதற்கு எதிரானது. அவர்கள் நமக்கு உதவ
மாட்டார்கள். நம்மை மொட்டையடிப்பதே அவர்கள் கருத்து. நம்மிடம்
உள்ள எல்லாவற்றையும் சுரண்டிக் கொள்ளுவார்கள். இதைப் போல நீயும்
என் தலைவியின் இளமைப் பருவ அழகு முழுவதையும் கொள்ளை கொண்டு
விட்டாய்!’’ என்பதே இந்த அடிகளின் பொருள்.

தலைவன், தலைவியின் அழகைக் கவர்ந்ததற்கு எடுத்துக்
காட்டியிருக்கும் இவ்வுதாரணம் மிகவும் பொருத்தமானது.
கடைப்பட்டவர்களிடம் நட்புகொள்ளுவதனால் பயனில்லை; அது
ஆபத்தானது; என்ற அறிவையும் நாம் பெறுகின்றோம்.

திணைமொழி ஐம்பதில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிகவும்
சுவையுள்ளவை. எல்லா வெண்பாக்களும், மோனையும் எதுகையும் அமைந்த
இனிய வெண்பாக்கள்.


 பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் - சாமி சிதம்பரனார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ