11/03/2012

சங்க இலக்கியங்கள் படித்தாரா பாரதி? - முனைவர் ய.மணிகண்டன்

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பாரதி சங்க நூல்களை அறிந்திருந்தார் என்பதை பாரதிதாசன் பாரதியிடம் தாம் தொடுத்த வினாவிற்கு பாரதி அளித்த விடையாக-பாரதியின் கூற்றாலேயே பின்வருமாறு எடுத்துக் காட்டியுள்ளார்.

இந்த பிற்கால இலக்கியங்களில் தமிழகத்தை பார்த்தது கிடையாது. நான் தமிழர் நாகரிகம், தமிழரின் இலக்கியங்கள் முதலியவற்றை ஆராய வாய்ப்பிருந்ததில்லை.

பண்டைத் தமிழகத்தை பார்க்க வேண்டுமானால் நான் சங்க நூற்களில் காண வேண்டும். எனக்கு போன ஆண்டு வரைக்கும் பழந்தமிழ் நூற்களில், தொல்காப்பியம் அகம், புறம் முதலியவைகள் பற்றி ஒன்றும் தெரியாது, உண்மையறிந்து கொண்ட பிறகே தமிழகத்தை எங்கள் தந்தையர் நாடு என்று சொன்னேன். தமிழர் நாடு என்பது நாவலந்தீவே என்பது என் இப்போதுள்ள கருத்து.


என்று விரிவாகவும் உண்மையாகவும் கூறினார். (பாரதிதாசன், குயில், 20-09-1960 பக்.13)

சங்க நூல்களை குறித்துப் பாரதி பொது நிலையில் அறிந்திருக்கின்றார் என்பதை இக்குறிப்பு உணர்த்துகின்றது.

மகாகவி பாரதி சங்க இலக்கியங்களில் சிலவற்றை நூல்களாக வாங்கி யிருக்கின்றார் என்னும் குறிப்பையும், சில சங்க நூல்களை படித்திருக்கின்றார் என்னும் குறிப்பையும் வழங்குவனவாகப் பாரதியின் மனைவி செல்லம்மா பாரதியும், பாரதிதாசனும் பல்லாண்டுகளுக்குப் பின்னர் நினைவு கூர்ந்து எழு திய வாழ்க்கை வரலாற்று நூலிலும், கட்டுரையிலும் இடம் பெறும் செய்திகள் அமைந்துள்ளன. இவை முறையே கால் நூற்றாண்டு, அரைநூற்றாண்டு இடை வெளிக்குப் பின்னர் நினைவுக் கூர்ந்து எழுதப்பட்டனவாதலின் காலம், நூற்பெயர் ஆகியவற்றில் சில பிழைகள் உள்ளன. பாரதிக்குச் சங்க இலக்கியம் தெரியுமா? தெரியாதா? என்னும் விவாதங்கள் எழாத காலக்கட்டங்களில், அத்த கைய கேள்விகளுக்கு விடையளிக் கும் நோக்கத்தில் உருப்பெறாத இவ்விரு பதிவுகளும் இயல்பாக பாரதி சில சங்க இலக்கியங்களை நூல்வடிவில் வாங்கியிருந்திருக்கின்றார்; படித்திருக்கின்றார் என்னும் அடிப்படையைக் காட்டி நிற்கின்றன.

எட்டயபுரம் மகாராஜா ஒரு சமயம் டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு சென்றிருந்தார். அவர் கூட அவரது பரிவாரங்களும் சென்றிருந்தார்கள். பாரதியா ரும் அவரது நண்பர்களும் சென் றார்கள். போகும் சமயத்தில்செல்லம்மா! வரும் போது உனக்கு தேவையான சாமன் களை வாங்கி வருகிறேன்என்று சொல்லிச் சென்றார். நானும் ஆவலாக அவர்கள் திரும்புவதை எதிர்நோக்கி இருந்தேன். பதி னைந்து தினங்கள் கழித்து எட் டயபுரம் திரும்பினார். குதிரை வண்டிகள் இரண்டு வாயிலில் வந்து நின்றன. ஒன்றிலிருந்து தாம் மட்டும் இறங்கினார். மற் றொரு வண்டியிலிருந்த மூட்டை களை வண்டிக்காரன் உள்ளே கொணர்ந்து வைத்தான். மூட் டைகள் கூடத்தை நிரப்பின. அத்தனையும் புடவைகள், வெள் ளிப் பாத்திரங்கள் முதலியவை களாயிருக்கலாமென்று மனம் பூரித்தேன். அவரது நண்பர்கள் முத லியோர் வந்து விசாரித்துச் சென் றார்கள்.

நான் கடைசியாக மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்ததும் எனக்கு கோபந்தான் வந்தது. அத்தனையும் புஸ்தகங்கள்! புறநானூறு, அகநானூறு, பதிற் றுப் பத்து, சிலப்பதிகாரம், வள் ளுவர், வள்ளலார், கம்பராமாயணம், ஆங்கில புஸ்தகங்கள்! ஒரே ஒரு புடவை மட்டும் வாங்கி வந்திருந்தார். “இதென்னஇது! மகாராஜா எவ்வளவு பணம் கொடுத்தார்?” என்று கேட்டேன். “ரூபாய் 500 கொடுத்தார்என்று உரைத்து பணப்பையை என்னிடம் நீட்டினார். திறந்து பார்த்தால் ரூ.15தான் இருந்தது. இவருடன் சென்ற இவரது நண்பர், வீட்டிற்கு வேண்டிய சாமான்களையும் வாங்கிக் கொண்டு, கையிலும் ரூ.300 கொணர்ந்தார். எனது முகக் குறிப்பை உணர்ந்து, “செல்லம்மா! நீ பணத்திற்கு ஆசைப் படாதே! அழியும் பொருளைக் கொடுத்து அழியாத கல்விச் செல்வத்தை கொணர்ந்தேன். என் மனதிற்கு புஸ்தகங்களே ஆனந்தங்கொடுக்கின்றன. எனக்கு சந்தோஷம்-உனக்கு திருப்தி இல்லையா?” என்றார். நான்ரொம்ப திருப்திஎன்றேன். (செல்லம்மா பாரதி, தவப் புதல்வர் பாரதியார் சரித்திரம், பக். 32-34)

இக்குறிப்பில், பாரதி சுதேச மித்திரன் இதழில் பணியாற்றச் செல்வதற்கு முன்னதான காலத்தில், காசியிலிருந்து மீண்டு வந்து, எட்டயபுரம் அரசவையில் பணி மேற்கொண்ட காலத்தில் அரச ரோடு சென்னை சென்று வந்த போது வாங்கி வந்த நூல்களை பட்டியலிடுகையில் தமிழ்ப் புலவ ராகவோ தமிழ் நூல்களை நன் குணர்ந்தவராகவோ இல்லாத செல்லம்மா, பாரதிபுறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, சிலப் பதிகாரம், வள்ளுவர், வள்ளலார், கம்பராமாயணம்....” என நூற் பெயர்களை, நூலாசிரியர் பெயர் களை குறிப்பது கவனத்திற்கொள் ளத்தக்கது.

திருக்குறளிலும், சிலப்பதிகாரத் திலும், கம்பராமாயணத்திலும், வள்ளலாரிலும் பாரதிக்கிருந்த ஈடுபாடு தமிழுலகம் அறிந்ததே. இப்பட்டியலில்புறநானூறு, அக நானூறு, பதிற்றுப்பத்துஆகிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. இக்குறிப்பானது சங்க இலக்கியங்களுள் சில நூல்களை பாரதி சென்னையிலிருந்து வாங்கி வந்தார் என்பதை நன்குணர்த்துகின்றது. எனினும், இப்பதிவுள் ஒரு பிழை உள்ளது. இந்த நிகழ்ச்சி பாரதி சுதேசமித்திரன் பணியாற்றச் செல்லும் முன், மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரி யர்ப் பணியை ஆற்றச் செல்லும் முன் நடந்ததாகும். சேதுபதிப் பள்ளியின் பணிக்கு பாரதி சென்றது 1904ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதமாகும். எனவே, இதற்கு முன் னதான காலக்கட்டத்தில்தான் இந்நூல்களை அவர் வாங்கி வந்திருக்க வேண்டும். பத்துப் பாட்டு 1889ஆம் ஆண்டிலும், புறநானூறு 1894ம் ஆண்டிலும், ஐங்குறுநூறு 1903ஆம் ஆண்டி லும், பதிற்றுப்பத்து 1904ஆம் ஆண்டிலும் நூல்களாக வெளிவந்துள்ளன. பதிற்றுப்பத்து 1904 ஆனி மாதம் வெளிவந்துள்ளது. அதாவது, சேதுபதி பள்ளி பணிக்குச் செல்லுவதற்கு முன்பே வெளிவந் துள்ளது. ஆனால், செல்லம்மா பாரதி குறிக்கும் அகநானூறு, 1918ஆம் ஆண்டில்தான் வெளிவந் துள்ளது.

மிகப்பல ஆண்டுகளுக்குப் பின் நினைவுக்கூர்ந்து எழுதப்படும் போது நூற்பெயர்களில் பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பாரதி அகநானூற்று நூலை வாங்கி வர வாய்ப்பில்லை. புறநானூற்றையும் பதிற்றுப்பத்தையும் வாங்கி வந்திருக்கக்கூடும். இப்பெயர்களி லும் நினைவுக்கூர்வதன் காரண மாக மாற்றங்கள் இருந்தாலும், இக்குறிப்பானது அடிப்படையில் ஒருச்செய்தியை தெளிவுப்படுத்துகின்றது. அது பாரதி வாங்கி வந்த நூல்களுள் ஓரிரு சங்க இலக்கிய நூல்களும் இருந்தன என்பதே ஆகும்.

(மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும் நூலிலிருந்து)

கருத்துகள் இல்லை: