06/03/2012

உயர்திணைக்கு சாட்சி - அஃறிணை!

களவு, கற்பு என்ற இருவகையான வாழ்க்கைப் படிநிலையில், தலைமக்களின் அன்பு நிலையை உணர்த்த அஃறிணை உயிர்களின் வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுவது புலவர்களது மரபு. அதைச் சங்க இலக்கியத்தில் குறிஞ்சி, பாலைத் திணைப் பாடல்களில் காணமுடியும். பாலைத்திணைப் பாடல்களில்தான் அப்பதிவு மிகுதியாக உள்ளன.

விலங்குகளின் அன்பு நிலையைச் சுட்டிக்காட்டும் பாடல்கள் அதிகமாக உள்ளன. ஆயினும், குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில் தலைமக்களின் களவொழுக்கத்துக்கு அஃறிணை உயிர்கள் சாட்சியாக உள்ளதாகப் பாடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.


கொல்லன் அழிசி என்ற புலவர் பாடிய குறுந்தொகை 26-வது பாடல் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இது செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றதாகும். குறிஞ்சி நிலத் தலைவனை விரும்பிய தலைவி ஒருத்தி, அவனைக் காண முடியாமல் வருந்தி இருந்தாள். சரியான உணவும், உறக்கமும் இல்லாதிருந்ததால் உடல் மெலிந்தாள். இதை அறிந்த தாய், இம்மாற்றத்துக்குக் காரணம் யாது என்று கட்டுவிச்சியை அழைத்துக் குறிகேட்க, அவளோ, மலைநாட்டு தெய்வந்தான் காரணம் என்றாள். இதைக் கேட்ட தோழி, "தலைவி நோய்க்குக் காரணம் மலைநாட்டுத் தலைவன்தான் என்பதை மலையிலே பல குட்டிகளுக்குத் தந்தையான ஆண்குரங்கு (கடுவன்) அறியும்' என்றாள். அத்தோழி கூற்றுப்பாடல் வருமாறு:

""அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேற்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போலத் தான்தீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவது அன்றே
தேக்கொக்கு அருந்தும் முள் எயிற்றுத் துவர்வாய்
வரைஆடு வன்புறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும் அக் கொடியோ னையே''

பொதுவாக பறவை, விலங்குகளைச் சுட்டிக்காட்டி அவைகளின் அன்பு நிலையை விளக்குவதும், அதன் வழித் தலைமக்களுக்கு அன்பின் ஆழத்தை உணர்த்துவதும்தான் புலவர்களின் நோக்கம். ஆனால், தலைவனும் தலைவியும் கலந்திருந்ததற்கு இப்பாடலில், ஆண் குரங்கு சாட்சியாகக் காட்டப்பட்டுள்ளது. இது பொது மன்றத்துக்கு வந்து தலைவிக்குத் துணையாக சாட்சி சொல்லப்போவதில்லை. பிறகு எதற்காக சாட்சிகள் போல் காட்டப்பட்டிருக்க வேண்டும்?

தலைமக்கள் இருவரும் கலந்திருந்ததைக் குட்டிகளோடு - குடும்பத்தோடு இருந்த கடுவன்தான் பார்த்தது. அதைப்பார்த்தும் தலைவன் இன்னும் இல்லறத்தானாக மாறாமல் இருக்கிறானே என்பதுதான் இப்பாடலில் தோழி கூற விரும்பிய கருத்து.

ஆக, அஃறிணைகள் எல்லாம் அதனதன் நோக்கத்தில் உறுதியாக இருக்க, உயர்திணையைச் சார்ந்த தலைவனோ அவ்வாறு இல்லையே என்பதைச் சுட்டுவதே இப்புலவர் பாடிய பாடலின் உள்நோக்கம்.

கருத்துகள் இல்லை: