வரலாற்றுக்கு முந்தைய காலத்திலும், பின்னர் வேத காலத்திலும், ஏன், சங்க காலத்திலும் கூட மது அருந்துவது மக்களிடம் இயல்பாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் இருக்கிறது என்பது வெள்ளிடை மலை.
ஆயினும், விதிவிலக்காக ""உண்ணற்க கள்ளை'' என்ற வழியில், கள் குடியா சான்றோர்கள் சிலர் இருந்தனர் என்பதும், அதிலும் அரசுரிமைபெற்ற தலைவன் கூட குடிப்பழக்கம் இல்லாது இருந்தான் என்று நாம் அறியும் போது நம்மையும் அறியாமல் நம் தலை தாழ்ந்து வணக்கம் செய்கிறதல்லவா?
கள் குடியாக் காவலன் காரி என்பதை உறுதி செய்கின்ற ஒரு நிகழ்ச்சியைத்தான் ""உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்'' என்று பொருந்தில் இளங்கீரனாரால் பாராட்டப்பட்ட கபிலர் இயற்றிய பாடல் ஒன்றால் நாம் அறியமுடிகிறது.
""இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'' (737)
என்ற தெய்வப் புலவர் மொழிக்கு விளக்கமாய் விளங்கிய மலாடு நாட்டின் தலைநகர் திருக்கோவலூரில் அரசு கோலோச்சியவன் கடையெழு வள்ளல்களில் ஒருவனான திருமுடிக்காரி என்ற குறுநில மன்னன்.
வஞ்சமிலா நஞ்சை, புஞ்சை கொண்ட தென் பெண்ணை நதியும், இரந்தோர்க்கு வழங்கிய அவனது கொடையும், வீரம் கொப்பளிக்கும் அவனது போர்ப்படையும், காரியை பாரிக்கு நிகரெனக் காட்டியது புலவர்களின் பாக்கள்.
கபிலர் பெருமானும், காரியின் கனிந்த பார்வை நிழலில் குடியிருந்த காலமது. இதனால் காரியின் அன்றாட அலுவல் மட்டுமல்லாது, அவனது அருங்குணங்களை கவனித்தறியும் வாய்ப்பு கபிலருக்குக் கிட்டியது.
இவ்வழியில்தான் கபிலர், காரி பெருவீரன் மட்டுமல்லாது, அரசு கட்டிலில் அமர்ந்து, செம்மாந்த நிலையில் ஆட்சி புரியும் மன்னன் மட்டுமல்லாது, வரையாது வழங்கும் வள்ளல் மட்டுமல்லாது, நல்லொழுக்கங்களில் தலை நின்ற குணசீலன் என்பதையும் கண்டறிந்தார்.
கபிலர் தான் வாழ்ந்த காலத்தில் பல நாட்டு மன்னர்களைக் கண்டு மகிழ்ந்தவர். பலரிடத்தும் பரிசில்கள் பல பெற்றவர். இதனால் அந்தந்த நாட்டு மன்னர்களின் குணநலன்கள் மற்றும் ஒழுகலாறுகளைக் கண்டு உணர்ந்தவர்.
ஒரு ஒப்புமை நோக்கில் எண்ணுகிறார். பல அரசர்கள் தம்மைப் புகழ்ந்து பாடும் புலவர்கள் பலருக்கு கரியிலும், பரியிலும், பொன்னையும், பொருளையும் ஏற்றி, கூடவே தேர்களையும், கொடுத்து அனுப்புவதைக் கண்டிருக்கிறார். ஆனால், அவையெல்லாம் அரசன் இயற்கை அறிவோடு இயல்பான நேரத்தில் வழங்கியது என எண்ண இயலாது. ஆம், பல நேரங்களில் பரிசில்கள் வழங்கும்போது மதுவுண்டு, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கும் நேரமாக இருந்திருக்கக்கூடும்.
மது உண்டபின், மதி மயங்கியபோது யாம் என்ன செய்கிறோம் என்பதறியாது இருந்தபொழுது அது! இதன் காரணமாக பரிசில் பெறுபவர் தகுதியும், தான் அளிக்கும் பொருளின் மதிப்பும், அருமையும் அறியாது அளிப்பர்.
இயல்பாக ஒருவன் தன் சுய நினைவோடு இருந்து வழங்கும் செய்கையாக இதைக் கருதுதல் இயலாது. இந்நிலையில், பரிசில் வழங்கிய அரசனும், பெற்ற புலவனும், பெருமைக்குரியவர் அல்ல. மாறாக, மதுவுண்ட மயக்கத்தின் இடையே யாரும் பெரும் பரிசில் அளிப்பது எளிதான செயலே!
ஆனால், வள்ளல் திருமுடிக்காரி வழங்கிய பரிசில் பொருள்களின் அளவும், அவன் மதுவுண்டு அறியாதவன் என்பதும், கபிலர் அவனைப் புகழ்ந்து பாடக் காரணமாயிற்று. கபிலர் சிறப்புமிக்கதொரு பாடல் ஒன்றைப் புனைந்து, காரியின் புகழ் பரப்புமாறு பாடினார்.
""நாள்கள் உண்டு நாள் மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே!
தொலையா நல்லிசை விளங்கும் மலையன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே''(123)
கள்ளே மயக்கம் தரவல்லது. அதிலும் நாள்கள் பல ஆகிய கள் இன்னும் அதிக மயக்கத்தைத் தரும். இதை அருந்திய நிலையில் கரியோ, பரியோ, தேரோ, புவியோ எதையும் எவர்க்கும் வழங்குவது எளிதே!
ஆனால், மலாடு நாட்டை ஆளும் அரசன் -நற்குணங்களால் புகழப்பெறும் திருமுடிக்காரி மது அருந்திப் பழகாதவன் என்றும், இயற்கை அறிவோடு அவன் வழங்கிய மணிகளால் இழைக்கப்பட்ட தேர்களின் எண்ணிக்கை அவனது நாட்டில் உள்ள முள்ளூர் மலையின் மீது விழும் மழைத்துளிகளைக் காட்டிலும் அதிகம் என்றும் சான்றுரைக்கிறார் கபிலர்.
ஆக, கள்குடியாக் காவலன் காரி என்பதால், "அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி' என்ற மொழிக்கு ஏற்ப அவனது நாட்டில் மக்கள் மது அருந்தவும் இல்லை. கொள்வார் இல்லாமையால் கள் கொடுப்பாரும் இல்லை என்பது புலனாகிறது.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள்