மகாகவி பாரதியார் தமிழ் இலக்கியத்தளத்தில் தொடாத துறைகளே இல்லை எனும் அளவுக்கு எல்லாத் துறைகளிலும் தம்முடைய தனித்தன்மை விளங்க, தரம்மிக்க படைப்புகளைத் தந்திருக்கிறார். எனினும், அவர் தாலாட்டுப் பாடியதில்லை. ஒப்பாரியும் வைத்ததில்லை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்வில், மானுடம் உறங்கிவிடுவதிலும், இறந்துபோவதிலும் மகாகவிக்கு விருப்பம் இல்லை போலும். உறங்குவதுபோலும் சாக்காடு என்பதால், இவ்விரண்டையும் பாடவில்லையோ என்னவோ? ஆனால், அவர் ஊஞ்சல் பாட்டுப் பாடியிருக்கிறார் என்பது உண்மை.
அது அவரது திருமணத்தில் நிகழ்ந்த இனிய நிகழ்வு. பதினான்கு வயதுச் சிறுவன் பாரதி. அவரை மணமுடித்த மணமகள் செல்லம்மாளோ ஏழுவயதுச் சிறுமி. அதிவிமரிசையாய் எட்டயபுரத்தில் நிகழ்ந்தது திருமணம். திருநெல்வேலி மாவட்டத்தில் சில காலம் வரையில் அந்தக் கல்யாண விமரிசை மக்கள் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. எங்கும் அது பற்றியே பேச்சு என்று மணப்பெண் பின்னர் நினைவுகூர்ந்து குறிப்பிடும் அளவுக்கு மாபெரும் விழாவாக நடந்த மணவினை.
இராமநாதபுரம் ராஜாவிடமிருந்தும், சேத்தூர், தலைவன்கோட்டை ஜமீன்தார்களிடமிருந்தும், பட்டும் பட்டாவளியுமாக, சால்வைகள், மோதிரங்கள், முத்துமாலைகள் முதலியன வெகுமதிகளாக ஏராளமாய் வந்தன. தங்க நாதஸ்வர வித்துவான் ரத்தினசாமியை, ராமநாதபுரம் ராஜா அனுப்பியிருந்தார். அந்தச் சமயம், கியாதி அடைந்திருந்த திருநெல்வேலி அம்மணி பரதநாட்டியம். பாரதியாருக்குப் பால்ய விவாகத்தில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிடினும், ரசிக்கத்தகுந்த கேளிக்கைகள் மிகுதியாயிருந்தமையால், திருமணத்தில் உற்சாகமாகவே காணப்பட்டார்.
"எல்லோருக்கும் எதிரில், என்னைப்பார்த்துக் காதல் பாட்டுகள் பாடுவார்' என்று குறிப்பிடும் செல்லம்மாபாரதி, அப்பாடல்கள் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தில் உள்ளதைக் கண்ணி மாற்றிப் பாரதியார் பாடியவை என்றும் பதிவு செய்கிறார். தொடர்ந்து அவரே, பாரதியார் சுயமாய் எழுதிப் பாடிய ஊஞ்சல் பாடல் குறித்தும் பதிவு செய்திருக்கிறார். அந்தச் சுவைமிகு நிகழ்வு பின்வருமாறு:
ஊர் மெச்சிய ஊஞ்சல் பாட்டு: திருமணத்தின் நான்காம் நாள். பலரும் கண்டு அதிசயிக்க, திருமண ஊர்வலம் முடிந்து, ஊஞ்சல் நிகழ்ச்சி நிகழ்கிறது. அதுபோது, மணமகன் - அதாவது பாரதியார் இனிய ராகத்தில் ஓர் ஊஞ்சல் பாடலைப் பாடுகிறார். பாடியதோடு அதன் பொருளை விளக்கிச் சொற்பொழிவும் நிகழ்த்துகிறார். ஊரே வியக்க நடந்த அந்த அதிசய நிகழ்வை நினைவுறுத்தி மணப் பெண்ணான செல்லம்மாபாரதி பின்னொரு காலத்தில் தமது "பாரதியார் சரித்திரத்தில்' எழுதுகிறார்:
""கிராமத்தில் பழகிய, ஒன்றும் தெரியாத, ஏழு வயதுச் சிறுமிக்கு கவிஞர்களின் காதல் ரச அனுபவம் எப்படிப் புரியும்?
விவாகத்தின் நான்காம் நாள். ஊர்வலம் முடிந்து, பந்தலில் ஊஞ்சல் நடக்கிறது. ஓர் ஆசு கவி இயற்றினார். அதை இனிய ராகத்தில் பாடி, பொருளும் உரைத்துக் குட்டிப் பிரசங்கம் ஒன்று செய்தார். கல்யாண விமரிசையைப் புகழ்ந்து, அதை நடத்தியவர்களின் சலியா உழைப்பையும், என் தகப்பனார் கல்யாணத்துக்குக் கஞ்சத்தனமின்றி மிகத் தாராளமாகச் செலவு செய்ததையும் வியந்து, வித்துவான்களின் சங்கீதத் திறமையை மெச்சி இயற்றிய பாடல் அது. அதைக் கேட்டு, யாவரும், பலே! பேஷ்! என்று ஆரவாரித்து, மாப்பிள்ளை வாய்த்தாலும் செல்லப்பா அய்யருக்கு வாய்த்ததுபோல், வாய்க்க வேண்டும். மணிப்பயல், சிங்கக்குட்டி என்றெல்லாம் அவரவர் போக்கின்படி புகழ்ந்தார்கள். என் தகப்பனார் மாப்பிள்ளையைக் கண்டு உள்ளம்பூரித்து, உடல் பூரித்து மகிழ்ச்சியடைந்தார்''.
வளரும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல், ஆசுகவியாகவும், இசைப்பாடகராகவும், கருதியது உரைக்கும் சிறந்த பொழிவாளராகவும் பாரதியார் பின்னர் சிறந்து ஒளிர முன்னோடியேபோல் நடந்த நிகழ்வு இது.
மாமனார் மெச்சிய மருமகன்: என்ன நடந்ததோ, அதை அப்படியே தன் உள்ளப்பாங்கின்படி பாடி, உணர்த்த வல்ல ஆற்றலைச் சின்னஞ்சிறு வயதிலேயே பாரதியார் பெற்றிருந்தார் என்பதை விடவும், மாமனாரின் பெருமையைப் புகழ்ந்து பாடி, அவர்தம் பணிகளை மெச்சிய மருமகனாகத் திகழ்ந்தார் என்பது மகிழ்வுக்குரியதுதான். தமது திருமண விழாவுக்குச் சலியாது உழைத்த உழைப்பாளிகளை அந்த வயதில் பாரதியார் உணர்ந்து பாடியது அற்புதம்தான்.
வந்திருந்தோரின் சிந்தை குளிர்வித்த அச்சிறந்த கவிதை இன்னமும், எட்டயபுரத்துத் தெருக் காற்றில் இசைத்துக் கொண்டேயிருக்கலாம். அந்த வித்தகப் பாடலைப் பதிவு செய்து விளக்க, விஞ்ஞானம் ஏதேனும் கருவி கண்டுபிடிக்காமல் விட்டுவிடுமா என்ன?
நன்றி - தமிழ்மணி
கருத்துகள்