04/03/2012

யானையை மறைத்த அம்புகள் - மீனா சுந்தர்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் "களவழி நாற்பது' போர்க்களம் குறித்த பாடல்களின் தொகுப்பாக விளங்குகிறது. சோழ மன்னன், சேர மன்னனை வெற்றி கொண்ட செய்தியை கற்பனை வளத்தோடும், கருத்துச் செறிவோடும் எடுத்தியம்பும் பாடல்களாக உள்ள இவற்றை, சங்கப் புலவரான பொய்கையார் பாடியுள்ளார். மொத்தம் உள்ள 41 பாடல்களும் வெண்பா இலக்கணத்திலேயே புனையப்பட்டுள்ளன.


சோழன் செங்கணானும், சேரன் கணைக்கால் இரும்பொறையும் போர்செய்த செய்தியும், அதில் வென்றவன் சோழன் என்பதைக் "காவிரிநாடன்' செங்கண்மால், செங்கட்சினமால் என்று அழைக்கப்படுவதிலிருந்தும், "கொங்கரையட்டகளத்து' "வஞ்சிக்கோவட்டக்களத்து' என்று கூறப்படுவதிலிருந்தும், தோற்றவன் சேரன் என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும். மேலும், "காவிரிநாடன் கழுமலங்கொண்டநாள்' என்ற தொடரால் வென்ற இடம் "கழுமலம்' என்பதும் புலனாகும்.

சோழன், போரில் தோற்ற சேர மன்னனை குணவாயில் கோட்டத்தில் சிறையில் அடைத்தான். இச்செய்தியை அறிந்து சேரனின் அவைப் புலவரான பொய்கையார் தன் மன்னனை விடுவிக்க வேண்டி, தம்முடைய கவித்திறத்தால் சோழனைப் புகழ்ந்து பாடிய பாடல்களே "களவழி நாற்பது' என்றும், அப்பாடல்களைக் கேட்ட சோழ மன்னன், சேரனை விடுவித்து பரிசிலும் வழங்கிச் சிறப்பித்தான் என்றும் கூறப்படுகிறது. இதை,
 ""பொறையனைப் பொய்கைக் கவிக்குக் கொடுத்து
 களவழிப்பா கொண்டோனும்''
 என்று "குலோத்துங்கச் சோழன் உலா' குறிப்பிடுவதன் மூலம் அறியலாம்.

களவழி - களமாகிய இடம். போர்க்களத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை களவழி என்றது ஆகுபெயர். நால்வகைப் படைகளுள் ஒன்று யானைப்படை. இந்நூலில் யானைப்போர் மிகுதியாகக் கூறப்படுகிறது. மேலும், திருக்கார்த்திகை திருவிழா குறித்தும் கூறப்பட்டுள்ளது. பாடல்களில் எடுத்தாளப்பட்டுள்ள உவமைகள் கற்போருக்கு மிகுந்த இன்பமளிக்கக் கூடியனவாக உள்ளன. மேலும், ஒவ்வொரு பாடலும் "அட்டகளத்து' என்ற சொல் கொண்டு முடியுமாறு எழுதப்பட்டுள்ளது.

அழகமைந்த முரசை உடைய செங்கட் சோழனின் முரசு கோடைக் காலத்து இடிபோல் ஒலிக்கும் தன்மையுடையது. மதகுகளின் இருபுறங்களிலும் கட்டறுத்துப் பாய்ந்தோடும் வளமுடைய காவிரியைச் சொந்தமாகக் கொண்டவன் சோழன். அவன் பகைவர்களைப் போரில் கொன்றொழித்தான். அவன் வீரர்கள் அம்பு மழை பொழிந்தனர். மகளிரின் கொடிய கண்களைப் போன்றிருக்கும் அவ்வம்புகள் போரில் இறந்த யானைகளின் உடலெங்கும் பாய்ந்து குத்திட்டு நின்றன. இறந்த யானைகள் ஒன்றன் மீது ஒன்றாகக் கிடந்தன. இந்த யானைகளின் மீதிருந்த அம்புகள் யானைகளையே மறைத்திருக்குமாறு செய்தன. இக்காட்சி, சிகரங்களையுடைய மலைகள் போன்றிருந்த யானைகள் மீது பாய்ந்திருந்த அம்புகள் மலைகளில் மொய்த்திருக்கும் குருவிக் கூட்டங்களைப் போலிருந்தன என்று பொய்கையார் நயம்பட எடுத்துரைத்துள்ளார்.
 ""யானைமேல் யானை நெரிதர வானாது
 கண்ணேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப-வெவ்வாயு
 மெண்ணருங் குன்றிற் குரீ இயினும் போன்றவே
 பண்ணா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாட
 னண்ணாரை யட்ட களத்து'' (பா.8)
 இப்பாடலில் கற்பனை வளம் மிகுந்து காணப்படுவதைப்போலத் தோன்றினாலும், ஊடாக சோழனின் போர்த்திறத்தை மிகச் சிறப்பாகவும், வலுவாகவும் எடுத்தியம்பியுள்ளார். போரில் வலிமை மிக்க யானைப் படையையே கொன்றழித்ததையும், யானைகள் மீது பதிந்திருந்த அம்புகள் யானைகளையே மறைத்திருந்தன என்பதிலிருந்து சோழனின் படைத்திறத்தையும், வேகத்தையும் வீச்சையும், சோழனிடம் போர் புரிந்தவன் தப்பிக்க வழியில்லை என்பதையும் பாடலின் உட்கருத்தாகக் கொண்டு கற்பனை நயத்தோடு படைத்திருக்கிறார்.

அம்புகள் குருவிகள் போலிருந்தன என்பதிலிருந்து, "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்கிற நாட்டுப்புற சொல் வழக்குக்கு ஏற்றாற்போல வலிமைமிக்க யானைப்படைக்கு இச்சிறு அம்புகளே போதுமானது என்றும், போர் என்று வந்துவிட்டால், குருவிகள் சட்டெனக் கூடி மொய்ப்பதைப்போல சோழநாட்டு வீரர்கள் மொய்த்து விடுவார்கள் என்றும், ஆகவே, எதிர்த்தவர் புறமுதுகிட்டு ஓடுவது உறுதி என்றும், உள்ளீடாக சோழநாட்டுச் சிறப்பையும் புலவர் பொய்கையார் நுட்பமாக எடுத்தியம்பியுள்ளார்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: