20/09/2011

சங்க அகப்பாடல்களில் கூற்றுமுறை - முனைவர் நா.பாலகிருட்டிணன்

சங்க இலக்கியங்கள் அகம், புறம் என்னும் பொருளடிப்படையில் பாடப்பெற்றவை. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்களாகும். எட்டுத் தொகையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களில் உள்ள பாடல்களும், பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை ஆகிய மூன்று நெடும்பாடல்களும் அகப்பொருள் சார்ந்தவை. இப்பாடல்கள் அனைத்தும் மாந்தர் கூற்றுமுறையில் அமைத்துப் பாடப்பெற்றவை. இம் முறையில் அகப்பாடல்களைப் பாடும்போது சங்கப் புலவர்கள் பல வகையான புனைவு முறைகளைக் கையாண்டுள்ளனர். அவற்றை ஆராய்ந்து காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

சங்க இலக்கியங்கள் பெரிதும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் பின்பற்றி அமைந்தவை. ஆதலின் மாந்தர் கூற்றுமுறை தொடர்பாகத் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் கூறும் இலக்கண விதிகளும் இவ்வாய்விற்குத் துணைபுரிகின்றன.

அகப்பாடல் பாடுவதற்கு அடிப்படை மரபுகள்

அகப்பொருள் பரந்துபட்ட வரலாறு உடையது; பல்வேறு சூழல்களைக் கொண்டது. ஒவ்வொரு சூழலிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழும். அவ்வாறு நிகழும் நிகழ்ச்சிகள் பலவற்றை ஒருங்கு சேர்த்து அகப்பாடலில் பாடுதல் கூடாது. குறிப்பிட்ட ஒரு சூழலில் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி மட்டுமே அகப்பாடலில் பாடப் பெறவேண்டும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். (தொல்.பொருள் நூ.502, இளம்பூரணர்பதிப்பு) அந்நிகழ்ச்சியைப் புலவர்கள் பாடலில் அமைத்துப் பாடும்போது தாம் கூறுவது போலப் பாடக்கூடாது. அகப்பொருள் நிகழ்ச்சியைக் கூறுவதற்கு என்றே மாந்தர் பலர் படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூறுமாறே என்றே மாந்தர் பலர் படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூறுமாறே அந்நிகழ்ச்சி பாடப்பெற வேண்டும். அவர்களுள் ஒருவர் கேட்குமாறே பாடப்பெறவேண்டும். இவை போன்ற வரையறுத்த மரபுகளைத் தொல்காப்பியர் கூற்றுத் தொடர்பாக எடுத்துக் கூறுகின்றார். இம்மரபுகளின் வழிநின்று பாடல் அமைத்துப் பாடப்படும்போது, அப்பாடல் ஒரு சின்னஞ்சிறிய நாடகமாக அமைந்து விடுகிறது.

கூற்றிற்கு உரிய மாந்தர்

அகப்பொருளில் களவில் கூற்று நிகழ்த்துதற்கு உரியர் என்று சிலரும், கற்பில் கூற்று நகழ்த்துதற்கு உரியர் என்று பலரும் வரையறுக்கப்பட்டுள்ளனர். தலைவன், தலைவி, தோழி, செவிலி, பார்ப்பான், பாங்கன் ஆகிய அறுவரும் களவில் கூற்று நிகழ்த்துதற்கு உரியர். இவ்வறுவரும் மற்றும் பாணண், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர், ஆகிய அறுவருமாகப் பன்னிருவரும் கற்பில் கூற்று நிகழ்த்துதற்கு உரியர். இம்மாந்தர்கள் கூறுவது போலவே சங்க அகப் பாடல்கள் பாடப்பட்டன.

மாந்தர் கூற்றுமுறை வகைகள்

அகப்பாடல்களை மாந்தர் கூற்றுமுறையில் அமைத்துப் பாடும்போது சங்கப் புலவர்கள் கீழ்கண்ட இருவகையில் பாடினர்.

1. ஒருவர்கூற்று முறையில் மட்டும் அமைத்தல் (monologue)

2. இருவர் தம்முள் மாறி மாறி உரையாடும் முறையில் அமைத்தல் (Dialogue)

இருவர் உரையாடல் முறைப்பாடல்கள்

இருவர் தம்முள் மாறி மாறி உரையாடுவது போல அமைத்துப் பாடப்பெறும் பாடல்கள் கலித்தொகையில் மட்டும் அமைந்துள்ளன. ஏனை, அகத்தொகை நூல்களில் ஒன்றேனும் அமையவில்லை. கலித்தொகையில் தலைவன் - தலைவி, தலைவி -தோழி, தோழி - தலைவன் என்றவாறு முற்றிலும் இருவர் உரையாடல்களாகவே சில பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்கள், படிப்பார் கண்முன்னர் ஓர் அழகிய நாடகக் காட்சி ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்தும் திறம் படைத்ததவை, இத்திறனை ஒரு பாடலின் வழிநின்று காண்போம். (கலிக்தொகை. 108)

தலைவன்: அன்றொரு நாள் மோர்விற்று நீ மீளுகின்ற போது, இளம் மாவடுவைப் பிளந்தால் ஒத்த நின் கண்களால் என் நெஞ்சை நினக்கு உரியதாக்கிக் கொண்டாய். அதனால் நீ ஒரு கள்வி அல்லையோ?

தலைவி: நின் நெஞ்சை எமக்கு உரியதாக்கிக் கொள்வதனால் என்ன பயன் உள்ளது? அந்நெஞ்சுதான் புனத்தில் இருக்கும் என் தமையனுக்கு உணவு கொண்டு சொல்லுமோ? ஆநிரை மேய்க்கும் இடத்தில் இருக்கும் என் தந்தைக்குக் கறவைக் கலம் கொண்டு செல்லுமோ? அல்லது தினைக் கொல்லையில் என் தாய் விடுத்த கன்றுகளை மேய்க்குமோ? கூறுவாயாக.

தலைவன்: நீ இட்ட அனைத்து ஏவல்களையும் செய்து முடிப்பேன். பிடியானை தூங்குவது போன்ற கரிய பாறையின் அருகில் உள்ள சுனையில் என்னோடு நீராடி விட்டு, முல்லைப் பூக்களைப் பறித்துக் கூந்தலில் சூடிக்கொண்டு, காயம்பூந் தண்பொழிலில் எம்மொடு சிறிது நேரம் தங்கிவிட்டு அப்பால் நின் ஊர்க்குச் செல்வாயாக.

தலைவி: நீயோ நாள்தோறும் ஆய்ச்சியர் பலரைக் கண்டு காமுற்றுத் திரிகிறாய். அவ்வாறு இருக்கும்போது நின்னை யான் காதலிப்பது யங்ஙனம்?

தலைவன்: மண்ணுலகில் நின்னினும் சிறந்த அழகுடையவளை யான் கண்டிலேன், திருமால் திருவடியை என் தலையால் தொட்டுச் சூளுரைக்கிறேன். உன்னையன்றி வேறொருத்தியின் மீது யான் அன்பு கொள்ளவில்லை.

தலைவி: நீ சூளுற்றுக் கூறும் உறுதிமொழிகளைப் பொய்ப்பவன் என்று எனக்குத் தெரியும். எனினும் நினது நிலை இரங்குதற்கு உரியதாய் உள்ளது. எனவே நீ, நான் தோழியருடன் எம் ஊர் மன்றத்தில் குரவைக் கூத்து ஆடிக்கொண்டிருக்கும் போது, எவரும் அறியாவண்ணம் நான் மட்டும் அறியும்படி ஆம்பல் குழலால் பண்ணை எழுப்பி வருவாயாக.

இவ்வாறு இருவர் தம்முள் மாறி மாறி உரையாடும் பாடல்கள் சுவையான நாடகப்போக்கு முறையில் பாடப்பட்டன.

ஒருவர் கூற்றுமுறைப் பாடல்கள்

தலைவன், தலைவி, தோழி முதலியோருள் யாரேனும் ஒருவரது கூற்றாக மட்டும் அமைத்துப் பாடப்பெறும் பாடல்கள் ஒருவர் கூற்று முறைப் பாடல்கள் எனப்படும். இத்தகு பாடல்களை டாக்டர் மு. வரதராசனார் ''நாடகத் தனித்கூற்று வகைப் பாடல்கள்'' (Dramatic Monologues) என்கிறார் பாடலில் கூற்று நிகழ்த்தும் ஒருவர் கூறுவதை வைத்தே அகப்பொருள் நிகழ்ச்சி, அதனைக் கேட்போர், அதன் பின்புலம் (Background) முதலான நாடகச் சார்புகள் அறியப் படுதலின் இப்பாடல்களை அவ்வாறு கூறுதல் பொருத்தமானதே ஆகும்.

நாடகத் தனிக்கூற்று வகைப் பாடல்களில் ஒரு மாந்தர் கூற்று நிகழ்த்தும் முறை கேட்போரை நோக்கி இருவகைப் பட்டிலங்குகிறது.

1. முன்னிலை மொழி

2. முன்னிலைப் புறமொழி

தொல்காப்பியர் கருத்துப்படி கேட்போர், மாந்தர் மட்டுமின்றி கூற்று நிகழ்த்துபவரின் நெஞ்சு மற்றும் ஞாயிறு, திங்கள், அறிவு, விலங்கு, மரம், பறவை முதலிய அஃறிணைப் பொருள்களும் ஆகும் (தொல். பொருள் நூல் 492 -501)

முன்னிலை மொழி

இவ்வகையிலே சங்கப் புலவர்கள் மிகுதியான அகப்பாடல்களைப் பாடினர். அவ்வாறு பாடும்போது கீழ்க்கண்ட மூன்று கூற்று முறைகளைக் கையாண்டனர்.

1. ஒருவர் பிறிதொருவர் கேட்குமாறு கூறல்

2. ஒருவர் தமது நெஞ்சு கேட்குமாறு கூறல்

3. ஒருவர் அஃறினைப் பொருள் கேட்குமாறு கூறல்

இம்மூன்று முறைகளுள்ளும், முதலாவது முறையிலேயே மிகுதியான பாடல்கள் பாடப்பட்டன. இக்கூற்றுமுறைப் பாடல்களில் இருவர் மட்டும் நேரடியாகத் தோன்றுவர். ஒருவர் கூறுபவர். மற்றொருவர் கேட்பவர். கேட்பவர் பெரும்பாலும் கூறுபவர்க்கு முன்னிலையில் நின்று கேட்பார். முன் நிற்பாரை நோக்கி அவர் கேட்குமாறு மொழிவதால் இதனை முன்னிலை மொழி எனல் மிகவும் பொருந்தும். இக்கூற்று முறையில் அமையும் பாடல்களில் கேட்போர், கூறுபவர் கூற்றுக்கு எதிராகப் பேசுவது எதுவும் இராது. இது நாடகத் தனிக்கூற்று வகைப் பாடல்கள் அனைத்திற்கும் உரிய பொதுப்பண்பாகும். ஓர் அகப்பாடல் வழிநின்று இக்கூற்று முறையைக் காண்போம்.

தலைவன் பரத்தவையின் பிரிந்து மீண்டும் வந்தான். அவன் வருவதற்கு முன்பு அவன்பால் வெறுப்புக் கொண்டிருந்தாள் தலைவி. அவன் வந்ததும் அவ்வெறுப்பு நீங்கினாள். அவனோடு அளவளாவி மகிழ்ந்தாள். அப்போது அவனை நோக்கி,

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை யாயினும்

நீ ஆகி யர்என் கணவனை

யான்ஆகி யர்நின் நெஞ்சுநேர் பவளே'' (குறுந்தொகை.49)

என்று கூறுகின்றாள். இப்பாடல் தலைவி, தலைவனை முன்னிலைப்படுத்தி அவன் கேட்குமாறு கூறும் முறையில் பாடப்பட்டுள்ளது.

முன்னிலைப் புறயமொழி

இவ்வகைப் பாடல்களும் மூன்று கூற்று முறைகளில் பாடப்பட்டன.

1. ஒருவர் பிறிதொருவருக்குக் கூறுவது போல மற்றொருவர் கேட்குமாறு கூறல்.

2. ஒருவர் தமது நெஞ்சிற்குக் கூறுவது போலப் பிறிதொருவர் கேட்குமாறு கூறல்.

3. ஒருவர் அஃறினைப் பொருளுக்குக் கூறுவது போலப் பிறிதொருவர் கேட்குமாறு கூறல்.

இவற்றுள் முதலாவது முறையிலேயே பெரும்பாலான பாடல்கள் பாடப்பட்டன. அத்தகு பாடல்களில் மூன்று மாந்தர் தோன்றுவர். ஒருவர் கூறுபவர். இருவர் கேட்பவர். கூறுபவர் அவ்விருவருள் ஒருவரை விளித்து அவரிடம் கூற்று நிகழ்த்துவார். அவர் கூறுபவர்க்கு முன் இருப்பார். ஆனால் கூறுபவருடைய நோக்கம் தாம் கூறுவதனை அவர் மட்டும் கேட்க வேண்டும் என்பதாக இராது. மூன்றாமவர் ஒருவர் இருக்கிறாரே அவர் கேட்கவேண்டும் என்பதாகவே இருக்கும். அம்மூன்றாமவர் பாடலில் கூறுபவரால் யாண்டும் விளிக்கப்படமாட்டார். யாண்டும் சுட்டப்படவும் மாட்டார். அவர் கேட்கிறார் என்பது பாடலில் மிகமிகக் குறிப்பாகவே அறியப்படும். அவர் கூறுபவர்க்கு முன்னிலையிலே, சற்று அயலிலோ, ஒரு மறைவான இடத்திலோ இருப்பார். இத்தகு கூற்று முறையைத் தொல்காப்பியர் முன்னிலைப் புறமொழி என்கிறார் (தொல். பொருள் நூ.165)

இம்முறையில் அமைந்த பாடல்களில் கூறுபவர் தமது கருத்தைப் பெரும்பாலும் குறிப்பாகப் புலப்படுத்துவார். கேட்பவரும் அக்குறிப்பைத் தெளிந்து உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உடையவராய் விளங்குவார். இத்திறத்தை ஒரு பாடல் வழிநின்று காண்போம்.

தலைவியின் மேனி வேறுபாடு கண்ட செவிலித்தாய் அவ்வேறுபாடு எதனால் உண்டாயிற்று என்று அறிதற் பொருட்டுக் குறி பார்ப்பவளாகிய கட்டுவிச்சியை அழைத்து வந்து குறி பார்க்கின்றாள். கட்டுவிச்சி குறி கூறத்தொடங்கும் முன்பு, தான் அறிந்த மலைகளின் வளத்தையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வருணித்துப் பாடுவது வழக்கம். எனவே, அவள் ஒவ்வொரு மலையின் வளத்தையும் வருணித்துப் பாடலானாள். தலைவி தலைவன் மீது கொண்ட காதலைச் செவிலித்தாயிடம் அறிவித்துவிட வேண்டும் என்ற எண்ணமுடைய தோழி அதற்கு ஏற்ற சூழலை எதிர்நோக்கியிருந்தாள். அத்தகு சூழலும் அவளுக்கு வாய்த்தது. ஒவ்வொரு மலையை வருணித்துப் பாடி வந்த கட்டுவிச்சி இயல்பாகவே தலைவனுக்கு உரிய மலையையும் புகழ்ந்து பாடி முடித்து விட்டு வேறொரு மலையைப் பற்றிப் பாடத்தொடங்கினாள். அப்போது தோழி கட்டுவிச்சியை இடைமறித்து,

அகவன் மகளே அகவன் மகளே

மனவுக்கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்

அகவன் மகளே பாடுக பாட்டே

இன்னும் பாடுக பாட்டே அவர்

நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே (குறுந்தொகை,23)

என்று கூறுகின்றாள். இங்குத் தோழி தனக்கு முன்னிருக்கும் அகவை மகளை (கட்டுவிச்சியை) விளித்து அவளிடமே கூறுகிறாள். ஆனால் அவளது நோக்கம் தான் கூறும் அதனை அகவன் மகள் கேட்க வேண்டும் என்பது அன்று. அவளுக்குப் பக்கத்திலே நிற்கும் செவிலித்தாய் கேட்க வேண்டும் என்பதேயாகும். தலைவியினது மேனிவேறுபாடு தலைவனால் உண்டாயிற்று என்று தான் கூற விரும்பும் செய்தியைச் செவிலித்தாய்க்குத் தோழி ''இன்னும் பாடுக பாட்டே! அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே! என்ற சொற்களின் வாயிலாகக் குறிப்பாக உணர்த்துகிறாள். தோழியின் வாயிலாகக் குறிப்பாக உணர்த்துகிறாள். ''தோழிக்கு இந்த மலையைப் பற்றிய பாட்டில் மட்டுமே அத்துணை ஈடுபாடு ஏன்! அவர் நன்னெடுங் குன்றம் என்று கூறுகின்றாளே; அவர் என்றால் எவர்?'' என்று பலவாறு ஆராய்வாள். அவர் எவர் என்று தோழியை வினவுவாள். தோழியும் செவிலித் தாய்க்கு அறத்தொடு நிற்கும் முகத்தான் தலைவி தலைவன் மீது கொண்ட காதலைக் கூறுவாள்.

இங்குக் காட்டிய பாடல், தோழி தான் கூறும் செய்தியைக் கேட்டறிதற்குரிய செவிலித்தாய் முன்னே இருக்கவும் அவளை விளித்துக் கூறாமல், அகவன் மகளை விளித்துக் கூறும் முறையில் பாடப்பட்டதாகும்.

இதுகாறும் ஆராய்ந்து கண்டவற்றறால் சங்க அகப்பாடல்கள் மாந்தர் கூற்று முறையில் பாடப்பட்டன என்பதும், அவ்வாறு பாடப்படும் பொழுது ஒருவர் கூற்று முறையிலும் இருவர் உரையாடல் முறையிலும் அமைத்துப் பாடப்பட்டன என்பதும், ஒருவர் கூற்றுமுறைப் பாடல்கள் முன்னிலை மொழியாகவும் முன்னிலைப் புறமொழியாகவும் அமைத்துப் பாடப்பட்டன என்பதும், முன்னிலைப் புறமொழிப் பாடல்கள் குறிப்பாற்றல் பண்பு சிறந்திலங்கப் பாடப்பட்டன என்பதும் அறியப்படுகின்றன.

நன்றி: தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2007

கருத்துகள் இல்லை: