18/09/2011

மொழிப் பயிற்சி – 57 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

நிலஅபகரிப்பும் நிலப்பறிப்பும்: செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சியிலும் நில அபகரிப்பு வழக்குகள் பற்றிய செய்திகள் நிரம்ப வந்து கொண்டுள்ளன. மற்ற எல்லாரும் நில அபகரிப்பு என்றே வழங்கிவர, நமது தினமணியில் மட்டும் நிலப்பறிப்பு என்று தூய தமிழ் ஆளப்படுவது கண்டு மகிழ்ச்சி. சிலர், சில நேரங்களில் நில அபகரிப்பு என்பதை நில ஆக்கிரமிப்பு என்றும் செய்திகள் வெளியிட்டார்கள். நமது நிலப்பரப்பில் சீனாவோ, பாகித்தானோ ஒரு பகுதியைப் பிரித்து வைத்துக் கொண்டபோது அதனை ஆக்கிரமிப்பு என்று சொல்லி வந்தோம். ஆனால் இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு என்னும் சொல் பொருந்துவதாக இல்லை. ஆக்கிரமித்தல் என்றால் ஆங்காரம் பண்ணுதல் என்று பொருள். ஆங்காரம் என்பது ஆணவமாகும்.

மக்கள் பேச்சு வழக்கில் "ரொம்பவும் ஆங்காரம் பிடித்தவன்/ள்' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். நாம் நினைப்பது போல ஒன்றை ஓரிடத்தை வன்முறையில் கைப்பற்றுவது ஆக்கிரமிப்பு ஆகாது. வலுக்கட்டாயமாக (வலுவந்தமாக) பறித்துக் கொள்ளுதலைக் குறிக்க ஆக்கிரகித்தல் என்ற ஒரு சொல் உண்டு. அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, ஆக்கிரகித்தல் எனும் மூன்று சொற்களும் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல.

முடிவாகத் தனிநபர்கள் பிறரை மிரட்டி, அச்சுறுத்தி எடுத்துக் கொள்ளுவதை நிலப்பறிப்பு, வீடு பறிப்பு என்றே எழுதிடலாம். அந்நிய நாடு நம்நாட்டின் நிலப்பரப்பைத் தம்மதாக வன்முறையில் ஆக்கிக் கொள்ளுவதைக் கைப்பற்றிக் கொண்டது என்றோ வன்முறையால் பறித்துக் கொண்டது என்றோ எழுதிடலாம். தவிர மோசடி என்னும் சொல் புழக்கத்தில் உள்ளது. இதற்கு வஞ்சித்தல் என்பதே நல்ல தமிழ்ச்சொல்லாகும்.

சொற்றொடர் (வாக்கிய) அமைப்பில் கருத வேண்டியவை: நாம் எழுதுகின்ற சொற்றொடர் தவறான பொருளுக்கு இடம் தராத வகையில் அமைந்திட வேண்டும்.

"பெண் வங்கி அதிகாரி படுகொலை' என்று ஒரு செய்தி சில நாள் முன்னர் ஓரேட்டில் கண்டோம். பெண் வங்கி என்று தொடங்கும்போது, பெண்களுக்கான வங்கி எனும் பொருள் தருமன்றோ? (அப்படி ஒரு வங்கி இல்லை என அறிவோம்).

ஆனாலும் பொருள் மயக்கம் ஏற்படாதவாறு வங்கிப் பெண் அதிகாரி படுகொலை என்று எழுதலாமே.

இதுபோலவே, "பெண்கள் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கம்' என ஒரு பெயர்ப் பலகை ஒரு சமயம் பார்க்க நேர்ந்தது. இத்தொடரை "நுகர்வோர் மகளிர் கூட்டுறவுச் சங்கம்' என்று மாற்றி எழுதுதல் வேண்டும். முன்னர் உள்ள சொற்றொடர் ஒரு தவறான கருத்துக்கு இடம் தருகிறது. பெண்களை நுகர்வோர் (அனுபவிப்பவர்) என்ற பொருள் ஏற்படும் என்பதை அறிக. ஆதலின் மிகக் கவனமாக நாம் சொற்றொடர்களை அமைத்திடல் வேண்டும்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களையும் அகநானூறு, புறநானூறு நூல்களையும் பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் என்று ஒரு கட்டுரையில் அண்மையில் படித்தோம். அகநானூறும், புறநானூறும் எட்டுத் தொகை நூல்கள் எனும் தொகுப்பில் அடங்கியவைதாம். அவற்றைத் தனியே எழுதுவது பொருளற்றது. பல புலவர்களால் பாடப் பெற்ற பாடல்களை எட்டு நூல்களாகப் பிற்காலத்தில் தொகுத்தமைத்தனர். அவையே எட்டுத் தொகை நூல்கள் எனப்பட்டன.

பெண்கள் மட்டுமா?

""சில சொற்கள் பெண்களை மட்டுமே குறிப்பனவாக இருக்கின்றன; அவற்றுக்கு ஆண்பாற் சொற்கள் தமிழில் இல்லை'' என்று கூறி விபசாரி, விதவை- இச்சொற்களுக்கு ஆண்பால் என்ன? ஆண்கள் எப்படியும் இருக்கலாம். பெண்களுக்கு மட்டுமே இந்த இழிவு'' என்று சொல்கிறார்கள்.

விபசாரி என்பதுபோல் விபசாரன் இல்லாமையால் ஆண் பல பெண்களோடு உறவு கொள்ளலாம், அவனுக்கு ஒழுக்கக் கட்டுப்பாடு இல்லை என்றும், இதுபோலவே விதவை என்பதுபோல் விதவன் என்று இல்லாமையால், மனைவியை இழந்தவன் மறுமணம் செய்து கொள்ளலாம் என்று பொருளுரைத்துப் பெண்ணடிமைத்தனத்தின் சின்னங்கள் இச்சொற்கள் என்று கொள்ளுவதில் தவறில்லை. ஆனால் இவ்விரண்டும் தமிழ்ச் சொற்கள் அல்ல. வடசொற்கள்.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: