20/09/2011

நாட்டுப்புற பாடல்களில் படைப்புக் கற்பனை - முனைவர் வை. விநாயகம்

நாட்டுப்புறவியல் என்பது மக்களிடையே வழங்கும் மரபுவழிபட்ட நம்பிக்கைகள், புராணங்கள் பழக்க வழக்கங்கள் முதலியவற்றைக் கதைப்பாடல், பாடல் ஆகியன வாயிலாகக் கூறுவன.

கற்பனையாவது கவிஞன் தான் உணர்ந்த உணர்ச்சிணை, பெற்ற அழகின் அனுபவத்தைக் கற்பவரும் உணருமாறு செய்வது. சிறந்த கவிதைக்கு மிகவும் இன்றியமையாக் கூறாகக் கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகிய நான்கினையும் கூறுவர்.

படைப்புக்கற்பனை

படைப்புக் கற்பனை என்பது, கவிஞன் தன்னுடைய அனுபவத்தில் கண்ட பண்புகளை தானே தேர்ந்தெடுத்து அவற்றை ஒன்றாக இணைத்துப் புதியதொரு முழுநிறைவான வடிவத்தை அமைத்துக் காட்டுவதாகும். க.திருநாவுக்கரசின் நாட்டுப்புறப் பாடல்களின் இன்னாசை, கேட்போர் மனங்களை மயங்க வைக்கும்.

பண்டைய இலக்கியங்களில் குழந்தையைப் பாடுபொருளாக வைத்துப்பாடும் மரபு உள்ளது. ''குழவி மருங்கினும் கிழவதாகும்.'' குழந்தையை தாலாட்டிப் பாடும் பருவம் தாலப்பருவம் ஆகும். நாட்டுப்புறத் தாலட்டுப் பாடல்கள் அமைந்த தாலாட்டுப் பாடல்களைத் திவ்வியப் பிரபந்தத்தில் காணலாம். தாய்க்கு குழந்தையே உலகம், எண்ணம். எனவே பக்திப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்த பெரியாழ்வார் தாய்மை நிலையில் கண்ணனைக் குழந்தையாகக் கற்பித்துப் பாடினார்.

''மாணிக்கங்கட்டி வயிரமிடை கட்டி

ஆணிப் பொன்னாற் செய்த வண்ணச் சிறுதொட்டில்

பேணி உனக்கும் பிரமன் வீடுதந்தான்

மாணிக் குறளனே தாலேலோ

வைய மளந்தானே தாலேலோ.''

என உயர்வு நவிற்சிக் கற்பனையாக இப்பாடல் அமைகிறது.

''ஆனந்தக்களிப்பு'' என்பது நாட்டுப்புறப்பாடல் வகையில் காணப்படும் ஒரு வர்ணமெட்டு. இதை இசைநூலார் தாது என்பர். ஆனந்தக்களிப்பை அழகுறக் கையாண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தாயுமானவர், கோபால கிருஷ்ண பாரதியார், வடலூர் இராமலிங்க சுவாமிகள் முதலியோர் ஆவர்.

''பாட்டினைப் போல் ஆச்சரியம்பாரின்மிசை

இல்லையடா''

என்று வியந்து போற்றுவார் பாரதியார். நாட்டுப்புறஇயல் பாடல் கூறுகள் அவரது கற்பனை, உணர்ச்சி, கருத்து, வடிவத்திற்குப் பெரிதும் உதவின. சொல்லும் பொருளும் ஓவியமும் பாட்டின் அடிப்படைக் கூறுகள். அவை அவரது பாடல்களில் ஆட்சிபுரிவதைக் காணலாம். பாரதியார் கண்ணன்பாட்டில் கண்ணனைத் தோழன், குரு, தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், குழந்தை, விளையாட்டுப்பிள்ளை, காதலன், காதலி, ஆண்டான், குலதெய்வம் முதலிய பல்வேறு நிலைகளில் வைத்து அந்தந்த நிலைகளுக்குத் தக்க முறையில் பாவனைகளும் மெய்ப்பாடுகளும் தோன்றுமாறு பாடியுள்ளார்.

தந்தை

கண்ணனைத் தந்தையாகக் காணும் பாரதி குழந்தையாகி விடுகிறார்.

''வயது முதிர்ந்து விடினும் - எந்தை

வாலிபக் களையென்றும் மாறுவதில்லை

துயரில்லை, மூப்புமில்லை, என்றும்

சோர்வில்லை, நோயொன்று தொடுவதில்லை''

என்ற பாடலின் வாயிலாகப் பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவன் கடவுள் என்றும் இளையவன் என்றும் காட்டுகிறார்.

சேவகன்

தந்தையைக் கண்ட பாரதி அடுத்துக் கண்ணனைச் சேவகனாகப் பார்க்கின்றார். சேவகனாகிய கண்ணன் பாரதிக்கு பணிவதை மிக அழகாக எடுத்துக்காட்டுகிறார். கவிஞர் ஒரு சேவகனைத் தேடுகிறார். ''சேவகரில்லா விடினும் காரியம் நடக்காது'' என்பர். சேவகரால்தான் பெரும் தொல்லைகள் பட்டுவிட்டதாகக் கூறுகிறார். சேவகனாகிய கண்ணன் பொருள் ஒன்றும் கேட்கவில்லை அவன்,

''பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்

எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதியென்று சொன்னான்

இங்கிவனையான்பெறவே என்ன தவஞ்செய்து விட்டேன்

கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள் முதலாய்.''

இங்கு ஆண்டவன் அடியாரிடம் கொண்டுள்ள அன்பை மிகவும் இனிமையான முறையில் கற்பனை நயத்துடன் பாய்ச்சுகின்றான்.

குழந்தை

கண்ணனைப் பெண்குழந்தையாகப் படைத்து இன்பம் காணுகிறார். மழலை இன்பத்தைப் பாரதியார் புலப்படுத்தும் விதம் அன்னையின் துன்பங்களைப் போக்கிவிடும். குழந்தையின் முல்லைச்சிரிப்பு மனக்கவலைகளை அகற்றிவிடும் என்பார்.

''சொல்லு மழலையிலே - கண்ணம்மா

துன்பங்கள் தீர்த்திடுவாய்;

முல்லைச் சிரிப்பாலே - எனது

மூர்க்கந் தவிர்த்திடுவாய்''

என மழலைச் சொல்லின் பெருமையைப் போற்றுவார்.

நாயகன் நாயகி பாவம்

பாரதியார் கண்ணனை நாயகனாகவும் கண்ணம்மாவை நாயகியாகவும் வைத்துப் பாடுகிறார். நாயகி இருள்படர்ந்த காட்டினுள் நுழைந்து தன் காதலனைத் தேடுகிறாள். அங்கே ஒரு பயங்கரமான கரிய உருவம். கையில் கூரிய கொலைவாள், அதைக்கண்டவுடன் கண்கள் திறக்காமல் நினைவிழக்கின்றாள். அப்போது அந்த உருவம் பேசுகிறது. கண்ணே, உன் அழகு என்னைப் பித்தனாக்கி விட்டது. உன்னைத் தழுவிக்களித்திருக்க வேண்டும். கறியும், கள்ளும், கனியும் உண்டு கூடிக்களிப்போம் என்றான். இக்கொடிய சொற்கள் அவள் செவிபுகுந்து சுட்டுப் பொசுக்கினவாம்.

நாயகி எப்படியாவது தப்பிவிட எண்ணுகிறாள். வேடனாயிருந்தாலும் பெண் என்றால் இரக்கம் கொள்ளக்கூடும்; அதுவும் ஏற்கனவே பிறருக்கு வாழ்க்கைப்பட்ட பெண் என்றால் மனம் மாறக்கூடும் என்ற எண்ணத்தில்,

''அண்ணா உனதடியில் வீழ்வேன் - எனை

அஞ்சக் கொடுமை சொல்ல வேண்டா - பிறன்

கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை - உன்றந்

கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?''

என்று கொஞ்சும் குரலில் கூறுகிறாள். ஆனால் அந்தக் காமக்களியில் மூழ்கிற வேடன் காதில் அது எப்படி ஏறும்? என்பதை.

''ஏடி, சாத்திரங்கள் வேண்டேன் - நினது

இன்பம் வேண்டுமடி! கனியே நின்றன்

மோடி கிறுக்குதடி தலையை - நல்ல

மொந்தைப் பழையகள்ளைப் போல''

எனக் கூறி அவளைத் தீண்ட முனைகிறான். இக்கொடிய சொற்களைக் கேட்டதும் அவள் நாயகனைக் கூவி மயங்கி விழுகின்றாள். சிறிது நேரம் கழித்து விழித்துப் பார்க்கின்றாள் என்ன அதிசயம்! அவள் தேடிச்சென்ற நாயகன் கண்ணனே அவன். மணிவண்ணா! என அபயக்குரலில் என்னை வாழ்விக்க வந்த அருள் வாழி என அப்படியே கட்டித்தழுவி கலந்துவிடுகிறாள். இந்நிகழ்ச்சி ஜ“வாத்மா பரமாத்மாவை நாடிச்செல்லும் முயற்சியில் பல இடையூறுகள் ஏற்பட்டு அலைக்கழிக்கும் என்பதை உணர்த்துகிறது. பாரதியார் இக்கற்பனைக் கதைமூலம் உணர்த்துவது எதையும் பொருட்படுத்தாது துணிவுடன் முன்னேறினால் கண்ண பரமாத்மா காட்சி தந்து அருள்புரிவார் என்பதாம்.

பாஞ்சாலி சபதத்தில் சூதாடல் என்னும் பகுதியால் பதின்மூன்று பாடல்கள் உள்ளன. சூதாட்டவர்ணனை, அதில் ஏற்படும் பரபரத்த வார்த்தைகள் தொனிகள் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளன.

''மாயச்சூதினுக்கே -ஐயன்

மனமி ணங்கி விட்டான்!

தாயம் உருட்ட லானார் - அங்கே

சகுனி ஆர்ப்ப ரித்தான்!''

சொல்லப்படும் பொருளோடு பாட்டின் ஓசையும் இயைந்து வரும் நிலையை ஒலி அனுகரணம் என்பர். இந்த ஒலி அனுகரத்தை நாட்டுப்புறப்பாடலிலேகண்டு இடத்திற்கேற்ப இணைத்தது பாரதியின் திறமையாகும். இவ்வாறே அவர் முத்துமாரி அம்மன் பாட்டிற்குப் பூசாரிகள் பாடும் உடுக்குப்பாட்டுக்கேற்ப பாடலை இசைநயத்தோடு அமைத்துள்ளார்.

அன்னியருக்கு அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியநாடு விடுதலைபெற மக்கள் எழுச்சித் தேவைப்பட்டது. மகாகவி பாரதியின் கவிதைகள் நாட்டுப்புறவியல் அமைப்பில் வீறுபெற்று எழுந்து அவரை தேசியக்கவியாக்கியது. பாடுபொருளாக இதிகாசக்கதைகள் உதவின. அன்னியர்க்கு எதிராக தேச விடுதலையும், மக்கள் அடிமை நிலையும் மாற அவரது கற்பனை வளம் பெரும்பங்கு வகித்தது.

நன்றி: வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை: