கண்ணுக்கினிய தோற்றம் காட்டி, கருத்தைக் கவரும் பலவும் பின் தொடரும் காலத்தில் வருத்தம் மேலிட வைக்கலாம். இயற்கையில் மட்டுமல்ல; மனிதர்களிலும் சிலருக்கு இரட்டைக் குணமுண்டு.
முதல் பார்வைக்கு முள்கள் நிறைந்த பலாப்பழத்தைப்போலத் தோன்றும் சிலர், பழகப்பழகப் இனிக்கும் சுளையாய் இருப்பதுண்டு. சிலரது குணமோ கரும்பைப்போல, முதலில் சலிப்பை ஏற்படுத்தும்; பிறகோ அவரது அருங்குணங்கள் முழுவதுமாய் வெளிப்படும்போது அவர் மீதான அன்பை அதிகப்படுத்தும்.
இதற்கு நேர்மாறாகச் சிலரது குணம். முதலில் அழகும், இனிப்பும் கலந்திருக்கும். பிறகோ வெறுப்பும், கசப்பும் விரவியிருக்கும்.
இதேபோல, இரட்டைக் குணம் காட்டுகிறானே தன் தலைவன் என தலைவி ஒருத்தி வாடித் தவித்திருக்கிறாள்.
தொடக்கத்தில் தூய அன்பைத் தொடர்ச்சியாய் வெளிப்படுத்திய அவன், நாள்கள் செல்லச்செல்ல நடந்து கொள்ளும் விதம் அவளை நலியச் செய்தது.
தரையெல்லாம் செழித்து வளர்ந்து சின்னச்சின்ன இலைகளையும், தங்கத்துக்குப் போட்டியாய் மலர்ந்துகிடக்கும் பூக்களையும் உடைய நெருஞ்சிச் செடிகள், தனித்திருக்கும் அவள் கண்ணில் படுகின்றன.
பசிய மஞ்சள் வண்ணத்துடன் மனதை வசியப்படுத்தும் விதமாய் இந்த நெருஞ்சி மலர்தான் எத்தனை அழகு! வியக்கிறாள் அவள். ஆனால், இந்த மலர்தான் சில நாள்கள் கழித்து காயாகி, கனிந்து, பாதங்களைப் பதம்பார்க்கும் கொடிய முட்களாய் உருமாறி விடுகிறது. முன்பொரு நாள் முள் தைத்த நினைவுவர, மறுகணம் அவள் முகம் மேலும் வாடுகிறது.
தலைவியின் வாட்டத்தைப் போக்க வந்து சேர்கிறாள் தோழி. பாலில் நீராய்க் கலந்திருந்தவன் இன்று தாமரை இலைத் தண்ணீராய் மாறிய கதையை, கண்ணீர் கலந்து தெரிவிக்கிறாள் தலைவி. தோழியோ தலைவனுக்காகப் பரிந்து பேசுகிறாள்.
அவளை இடைமறித்து இப்படிக் கூறுகிறாள் தலைவி: இல்லக் கிழத்தியாய் அவன் என்னை ஏற்ற சிறிது காலம்வரை கள்ளமில்லா உள்ளத்துடன் கலந்திருந்தான். கண்ணுக்கினிய தோற்றமும், காதுக்கினிய அவனது மொழிகளும் இந்த நெருஞ்சி மலர்களைப்போல அழகாக இருந்தன. அழகுக்குப் பின்னே ஆபத்து வரும் என்பதைப்போல இன்றோ அவனது மொழிகளும், செய்கைகளும் நெருஞ்சி முட்களைப்போல இருக்கின்றன. அது என் உள்ளத்தை எவ்வளவு வருத்துகிறது தெரியுமா?
குறிஞ்சிப் பூக்களைப் பாடும் தலைவிகளுக்கு இடையே நெருஞ்சிப் பூக்களைப் பற்றிப் பாடும் இந்தத் தலைவியின் கூற்றாய் புலவர் அள்ளூர் நன்முல்லையார் வடித்த குறுந்தொகைப் பாடல் இதோ:
நோம்என் நெஞ்சே, நோம்என் நெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முள்பயந் தாஅங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே....(202).
முட்களுக்கும் காதலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டுபோலும். சகுந்தலையின் காலில் குத்திய முள்ளில் மலர்ந்தது, துஷ்யந்தனுடனான அவளது காதல் மலர். அதில் கிடைத்தது சாகுந்தலம் என்னும் அழியாக் காவியம். இங்கே தலைவியின் கண்களில் தென்பட்ட மலர், காதல் மண வாழ்க்கையில் "முள்' கூடாதென எடுத்துரைக்கிறது.
காலில் குத்திய முள்ளை எடுத்துப் போட்டுவிட்டு, புலவர் ஏதோ சிந்தனையுடன் போயிருந்தால் இந்தப் பாடல் கிடைத்திருக்காது. முள் அவரது காலில் குத்தவில்லை. இதயத்தில் குத்தியதால்தான் இந்த அரிய, இனிய பாடல்.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள்