கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

வெள்ளை மரணங்கள் - அசோகமித்திரன்

முதல் உலக யுத்தத்தின்போது அங்கு தங்கிய வெள்ளைக்காரச் சிப்பாய்களுக்காக 300 அடி நீளமும் 40 அடி அகலமும்கொண்ட அந்த உயரமான சீமை ஓட்டுக் கொட்டகை கட்டப்பட்டு இருக்க வேண்டும். பின்னர், ராணுவம் கலைக்கப்பட்டதும் அந்த நீளக் கொட்டகை நிஜாம் ரயில் வேக்குக் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். அது 12 ஆகப் பிரிக்கப்பட்டு, அதில் கடைசி வீடு எங்கள் அப்பாவுக்குக் கொடுக்கப்பட்டது. அந்த வீடுகள் 'ரன்னிங் ஸ்டாஃப்' என்று கார்டு, டிக்கெட் பரிசோதகர்கள் போன்றவர்களுக்கு. எங்கள் அப்பா அலுவலகத்துக்கு 10 மணிக்குப் போய் அவருடைய மேலதிகாரிகள் வீட்டுக்குக் கிளம்பிய பிறகு கிளம்புவார். சில தருணங்களில் ஆபீஸ் காகிதக் கட்டுகளை வீட்டில் கொண்டுவந்து குறிப்பு எழுதுவார்.

எங்கள் வீட்டுக்கு முன் வாசல், கொல்லை, பக்கவாட்டில் வாயிற்படி என்று மூன்று வாயிற்படிகள் உண்டு. ஆதலால், ஒவ்வோர் இரவிலும் கவலை இல்லாமல் தூங்க மூன்று கதவுகளையும் பூட்ட வேண்டும். அலிகார் பூட்டுகள் என்று நாங்கள் பல பெரிய பூட்டுகளை வைத்திருந்தோம்.

கொட்டகை கிழக்கு மேற்காகக் கட்டப்பட்டது. நாங்கள் பக்கவாட்டுக் கதவைத் திறந்தால், வெயில் சுளீரென்று 12 மணி வரை அடிக்கும். அந்த நாளில் அரிசி, பருப்பு, கடுகு, மிளகாய் வற்றல் எல்லாமே பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றில் கலந்துள்ள குப்பை, சத்தை, கல், களிமண் உருண்டை முதலியவற்றை விலக்க வேண்டும். அரிசி, பருப்பைப் புடைக்க வேண்டியிருக்கும். அதற்கு மூங்கில் பிளாச்சுகளால் செய்யப்பட்ட முறம் வேண்டும். முறத்தையும் வாங்கினபடியே பயன்படுத்த முடியாது. காகிதத்தை ஆட்டுக்கல்லில் தண்ணீரும் வெந்தயமும்விட்டு அரைத்து, மெழுகு போலச் செய்து, அதை முறத்தின் இரு புறங்களிலும் பூசி உலரவைக்க வேண்டும். வீட்டுப் பெண்மணிகளுக்கு நாளெல்லாம் ஓயாத வேலை இருக்கும். எல்லாம் கிழக்கு வாசல் படியில்தான்.

இம்மாதிரி வீட்டு வேலையில் சிறிதும் உதவாது நானும் என் பெரிய அக்காவும் மைல்கணக்கில் பரந்திருந்த வெட்டவெளியில் சுற்றப் போய்விடுவோம். பூமி சம தரையாக இருக்காது. மேடும் பள்ளமுமாக இருக்கும். பயிர் செய்து பயன்படுத்த முடியாத மண். இந்த வெட்டவெளியில் ஓர் இடத்தில் ஆளுயரச் சுற்றுச்சுவர் கட்டி, அதற்கு இருந்த ஒரே கதவு பூட்டப்பட்டு இருந்தது. அதற்கு முன் சற்றுப் புதுக் கொட்டகை. வேலை இல்லாத முதிய ஏழைக் கிறித்துவர்களுக்கு, அவர்களுக்குத் தெரிந்த வேலை செய்து, சிறிது பணம் ஈட்ட ஒரு வொர்க் ஷாப். எளிய தச்சு வேலை. காலை சுமார் 9 மணிக்கு வந்து மாலை அவ்வளவு பேருமாக 5 மணிக்குக் கிளம்பிவிடுவார்கள். பகலில் கஞ்சி இலவசம்.

இந்தக் கொட்டகையைத் தாண்டி இருந்த இடம் எனக்கும் என் அக்கா வுக்கும் ஒரு புதிராக இருந்தது. விஸ் தாரமாக இருந்த இடத்தைத்தான் சுற்றிலும் சுவர் எழுப்பிப் பாதுகாத்துக்கொண்டு இருக்கிறார்கள். யார் அது?
அந்த வெளிக் கதவுப் பூட்டு பெரிதாக... ஆனால், மிகவும் பழையதாக இருந்தது. அதற்குச் சாவி உண்டா? இப்படி வருடக்கணக்கில் பயன்படுத்தாமல் இருந்ததால் பூட்டின் சாவி தொலைந்து போய் இருக்கக்கூடும்.

எல்லா நாட்களிலும் அக்காவால் என்னோடு வெட்டவெளிச் சுற்றலுக்கு வர முடியவில்லை. நான்தான் தனியாக அந்தக் குன்றுகளிடம் சென்று சுற்றிப் பார்ப்பேன். ஒன்றிலும் ஏற முடியாதபடி மேற்பரப்பு வழவழவென்று இருக்கும். அடுத்த குன்று, அதற்கடுத்த குன்று என்று போனவனுக்கு வழி தெரியவில்லை. கலவரம் அடைந்து தாறுமாறாக ஓடினேன். குன்றுகள் முடிந்து சற்றுத் தூரத்தில் இருப்புப் பாதை தெரிந்தது. அப்படியானால் அந்த இருப்புப் பாதையோடு சென்று ரயில் நிலையத்தை அடைந்துவிடலாம். ரயில் நிலை யத்தில் இருந்து எனக்கு வீடு திரும்ப வழி தெரியும்.

ரயில் பாதையை நெருங்கியபோதுதான் அங்கேயும் ஒரு பெரிய பாறை இருந்து அதற்குப் படிக்கட்டும் இருந்தது தெரிந்தது. வீட்டை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்தவுடன் எனக்குத் தைரியம் வந்தது. அந்தப் படிக்கட்டு மீது ஏறினேன். மேலே ஒரு கோயில். அனுமன் கோயில்.

அனுமார் கற்சுவரிலேயே குடையப்பட்டுக் காவி வண்ணம் சூட்டப்பட்டு இருந்தார். அந்தப் பக்கத்தில் அனுமன் என்றிருந்தால், அதற்கு ரெட்ஆக்ஸைட் என்ற வண்ணம் பூசிவிடுவார்கள். அங்கே மாத்துவப் பூசாரி ஒருவர் இருந்தார். ஆனால், அவருடன் பேசத் தயக்கம். அவர் துளசியும் உத்தரணி நீரும் கொடுத்தார். நான் கோயிலில் இருந்து கீழே இறங்கி, ரயில் பாதை ஓரமாக நடந்தேன். அரை மணி நேரத்தில் வீடு போய்ச் சேர்ந்துவிட்டேன்.

இப்போது எனக்கு இரு இடங்கள் புதிராக இருந்தன. முதல் புதிர், ஆளுயரச் சுற்றுச் சுவர் கட்டப்பட்ட இடம். இரண்டாவது, இந்த அனுமார் கோயில். ஏன், அப்பா இந்தக் கோயிலுக்கு எங்களை அழைத்துப் போனது இல்லை? அப்பாவுக்கே தெரியாதா?

நான் என் அக்காவிடம் மட்டும் சொன்னேன். ''இன்னிக்கு என்னையும் அழைச்சுண்டு போடா'' என்று கேட்டாள்.
''நாளைக்குப் போவோம்'' என்றேன்.

''எனக்கு அனுமார்னா ரொம்பப் பிடிக்கும்.''

''அந்தக் கோயிலே உனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு நேர் வழி தெரியாது. சுத்திண்டுதான் போகத் தெரியும்.''

''நானும் வரேன்.''

''சரி, நாளைக்கு.''

அடுத்த நாள் நான் பள்ளியில் இருந்து 4 மணிக்கே வந்துவிட்டேன். ஆனால், அக்காவுக்கு நாலரை மணியாகிவிட்டது.

அவசரம் அவசரமாக மோர் சாதமும் டீயும் சாப்பிட்ட பிறகு, நாங்கள் இருவரும் கிளம்பினோம். அம்மாவுக்குக் கோபம். ''வண்டி பத்துப் பாத்திரம் இருக்கு. எங்கே கிளம்பிட்டே?'' என் அக்கா ஏதோ முனகிவிட்டு வெளியே வந்துவிட்டாள். நாங்கள் ஓட்டமும் நடையுமாக ரயில் பாதையை அடைந் தோம். அதோடு நடந்து அனுமன் கோயிலை அடைந்தோம்.

அன்று அங்கே இன்னும் ஐந்தாறு நபர்கள் இருந்தார்கள். அன்று விசேஷ நாளாக இருக்க வேண்டும். நாங்கள் இருவராக இருந்ததால், தைரியமாகக் கோயிலை வலம் வந்தோம். அந்தச் சிறிய இடத்தில் ஒரு கிணறு. பொதுவாக, அந்த ஊரில் கிணறுகள் கிடையாது. இருக்கும் வீடுகளுக்குக் குழாய் இருக்கும். அது இல்லாதவர்கள், தெருக் குழாய்களில் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். அந்த அனுமார் கோயிலில் எப்படி, எப்போது கிணறு தோண்டினார்களோ?

அக்காதான் அங்கு இருந்தவர்களில் ஒரு பெண்மணியைக் கேட்க, அவள் அந்தக் கோயிலின் பெயரைச் சொன்னாள். லட்சுமண் ஜூலா.

இதன் பிறகு அக்கா அடிக்கடி அவளாகவே லட்மண் ஜூலாவுக்குப் போய்விடுவாள். அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொள்வாள். ஆனால், எங்களுக்குப் பயமே எழவில்லை. என்னால்தான் அந்தக் கோயிலுக்கு அதிகம் போக முடியவில்லை. விளை யாட்டுக்குக் கோஷ்டி சேர்ந்துவிட்டது.

ஒருநாள் அக்கா சொன்னாள், ''அந்தக் கோயிலுக்கு ஒரு குறுக்கு வழி இருக்கிறது.'' ''எப்படி?'' என்று கேட்டேன்.

''இந்த வொர்க் ஷாப் தாண்டி அந்த உயரமான காம்பவுண்டு சுவரையும் தாண்டிப் போனால், ஒரு குட்டை வரும். குட்டைக்கு அந்தப் பக்கம்தான் கோயில் மலை இருக்கு.''

நானும் அந்தக் குட்டைப் பக்கம் போயிருக்கிறேன். ஓட்டுச் சில்லை ஒரு மாதிரி சாய்த்து வீசினால், அது தண்ணீருக்குள் போகாமல் மீண்டும் மேலே கிளம்பி அடுத்த முறைதான் கீழே தண்ணீரில் மூழ்கும். இது எல்லா முயற்சிகளிலும் நேராது. குட்டைக்குப் பிறகு நான் மலைகளுக்குப் போய்விடுவேன். குட்டையைத் தாண்டி நேரே போக வேண்டும் என்று தோன்றியது இல்லை. என் அக்கா போயிருக்கிறாள்!

நான் அடுத்த நாளே அந்தக் குறுக்கு வழியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அக்காவுக்கு மாவு அரைக்கும் வேலை. என்ன காரணமோ எனக்கும் அவள் தனியாக அந்த வெட்டவெளியில் போவது சரி இல்லையோ என்று சந்தேகம் வந்துவிட்டது. அது அத்துவான வெளி. ஏதோ சில நாட்களில்தான் அங்கு ஆட்டிடையர்கள், மாடு மேய்ப்பவர்கள் கண்ணுக்குத் தெரிவார்கள். ஆடு மாடு மேய்க்கப் புல் இருக்க வேண்டும் அல்லவா? மழை பெய்த பத்துப் பதினைந்து நாட்களுக்குத்தான் சிறிது பச்சை நிறம் தெரியும். மற்ற நாட்களில் வெறும் கட்டாந்தரைதான்.

நான் வொர்க் ஷாப்பைத் தாண்டி அந்த ஆள் உயரச் சுவர்கொண்ட இடத்துக்கு வந்தேன். என் கண்களை நம்ப முடியவில்லை. அங்கே கதவு திறந்து இருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தேன். அது மிகப் பெரிய இடம். பல ஏக்கர்கள் இருக்க வேண்டும். சிறிதும் பெரிதுமாக அந்த இடமெல்லாம் தனித்தனிக் கட்டடங்கள். நாள் கணக்கில் பூட்டிக்கிடந்ததில் அங்கே நிறையப் புதர்களும் ஓரிரு இடங்களில் சப்பாத்திக் கள்ளிச் செடிகளும் இருந்தன. எனக்குக் காலில் செருப்பு இல்லை. ஜாக்கிரதையாக நடந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அது ஒரு கல்லறை என்று தெரிந்தது. எங்கள் ஊரிலேயே சில மாதா கோயில்கள் அருகில் சிறிய அளவில் கல்லறைகள் உண்டு. அவை தெருவில் இருந்து நன்றாகத் தெரியும். அங்கும் செடி புதர்கள் இருந்தாலும் பாதைகள் தெளிவாகத் தெரியும். இங்கே பாதைகள் இருந்த இடமே தெரியவில்லை.

கல்லறை வாசகங்கள் எல்லாமே ஆங்கிலத்தில் எழுதி இருந்தன. எல்லாம் பல ஆண்டுகள் பழையது. பெரிதாகக் கட்டப்பட்ட ஒரு கல்லறையில் சுமார் 20 பெயர்கள். அவ்வளவு உடல்களையும் ஒரே நாளில் அங்கு குழி தோண்டிப் புதைத்து இருக் கிறார்கள்.

திடீர் என்று எனக்குப் பயம் வந்தது. அந்தப் பழைய கல்லறையில் நான் தன்னந்தனியனாக மாலைப் பொழுதில் சிக்கிக்கொண்டு இருக்கிறேன். உடனே வெளியே போய்விட வேண்டும்.

என் கால்களில் முள் தைப்பதையும் பொருட்படுத்தாது கல்லறையின் வாசலை அடைந்தேன். அது மூடி இருந்தது. என் பயம் தாங்க முடியாது போயிற்று. கதவைத் தடதடவென்று தட்டினேன். ''கதவைத் திற! கதவைத் திற!'' என்று கத்தினேன்.

அந்தக் கதவை அப்போதுதான் மூடிப் பூட்டிஇருக்க வேண்டும். நல்ல வேளையாக அந்த ஆள் வெகு தூரம் சென்று இருக்கவில்லை. கதவு திறந்தது. அங்கே குள்ளமாக ஓர் ஆள் கரடுமுரடான முகத்துடன் நின்றுகொண்டு இருந்தான்.

''நீ எப்படா உள்ளே வந்தே?''

''கதவு திறந்து இருந்தது...''

''கதவு திறந்து இருந்தா, உள்ளே வந்துடறதா? இது நீ வர இடமா?''

நான் பேசாமல் நின்றேன். அந்தக் குள்ள மனிதனின் முகம் பயம் எழுப்புவதாக இருந்தது.

''போ... போ'' என்றான்.

நான் தயங்கியபடியே, ''அது என்ன இடம்'' என்று கேட்டேன்.

''இது கிறித்துவங்க கல்லறை. உள்ளே நிறைய பேரைப் பொதைச்சிருக்காங்க. போ... போ.''

இப்படிச் சொன்னபடி அந்த ஆள் அந்தக் கதவைச் சற்று முயற்சி எடுத்துத் தாளிட்டார். பூட்டை எடுத்து மாட்டி இரு கைகளாலும் மேலும் கீழுமாக அழுத்தினான்.

''சாவி இல்லையா?''என்று கேட்டேன்.

''ஏன்டா, நீ இன்னுமா இங்கே நிக்கிறே? அத்தனை பிசாசும் உன்கிட்டேதான் வரும். போ... போ.''

அந்த ஆள் காலைச் சாய்த்து சாய்த்து நடந்து சென்றான். நான் லட்சுமண் ஜூலா சென்றேன். நிஜமாகவே அது குறுக்கு வழி தான். இந்த முறை அங்கே பூஜை புரிபவர் ஆஞ்சநேயர் மீது பூசியிருந்த காவியை ஒரு விரலில் எடுத்து என் நெற்றியில் புள்ளியிட்டார். ''இது இருக்கிற வரைக்கும் உன்கிட்டே ஒரு பூதம் பிசாசு வராது'' என்றார்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சற்று முன்புதான் அந்தக் கல்லறை ஆள் 'அந்தக் கல்லறையில் உள்ள பிசாசுகள் எல்லாம் என்னிடம் வந்து சேரும்' என்றார். அது தெரிந்தது போலப் பூசாரி ஒரு பேய், பிசாசு என்னிடம் வராது என்று அறிவிக்கிறார்!

அன்றிரவு என் அக்காவிடம் சொன்னேன்,

''பூட்டியே இருக்குமே, அது என்ன தெரியுமா?''

''என்ன?''

''அது கல்லறை. நிறைய வெள்ளக்காரங்களைப் பொதைச்சிருக்காங்க.''

''நீ பாத்தியா?''

''ஆமாம். கதவு திறந்து இருந்தது. உள்ளே போனேன். நிறைய சின்னச் சின்ன துளசி மாடம் மாதிரி இருந்தது. ரெண்டு மூணு பெரிசாவும் இருந் தது. அதிலே எல்லாத்திலேயும் பேர் இருக்கு.''
''நாளைக்கும் போவியா?''

''எனக்குத் தெரியாது. அங்கே நிறையப் பிசாசுங்க இருக்கலாம்.''

''யார் சொன்னா?''

''குள்ளமா ஓர் ஆளு.''

''அப்போ அந்த ஆளே பிசாசோ என்னவோ?''

எனக்கு வயிற்றைக் கலக்கியது. இனி நானே அங்கு போகக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன். அன்றிரவு சரியாகத் தூங்க முடியவில்லை. விதவிதமான கனவுகள்.

அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் பாடங்களைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. பெங்கால் டைகர் வாத்தியார் கேட்ட கேள்விக்குச் சரியான பதில் தரவில்லை என்று அடி. அந்த வாத்தியாருக்குப் பிடித் தமான மாணவன் என்று எனக்கும் பெயர். ஆனால், பாடத்தைச் சரி யாகக் கவனிக்காவிட்டால் அவர் தன் பெயருக்கேற்பப் பாய்ந்துவிடுவார்.

வீட்டுக்கு வந்தவுடன் நான் வாய் பேசாமல் மோர் சாதம் சாப் பிட்டதைக் கவனித்த அம்மா, ''ஏன்டா, என்னாச்சு இன்னிக்கு?'' என்று கேட்டாள்.

''ஒன்றுமில்லையே.''

''ஏன், உன் மூஞ்சி ஏதோ மாதிரி இருக்கு?''

எனக்கும் தெரியவில்லை என்று அவளுக்குத் தெரியாதா? ஆனால், ஏதோ ரகசியம் இருக்கிறது என்பது மட்டும் அவள் தெரிந்துகொண்டாள்.

நான் வேகமாக வொர்க் ஷாப் பக்கம் போனேன். என்னை யாராவது தொடர்கிறார்களா என்று பார்த்தேன். யாரும் இல்லை. நான் வேகமாகப் பூட்டிய கதவருகே சென்றேன். பூட்டை இழுத்தேன். அது திறந்துகொண்டது. நான் மிகவும் சிரமப்பட்டுக் கதவைச் சிறிது திறந்துகொண்டேன். உள்ளே போய்க் கதவைச் சாத்தினேன்.

தரை எல்லாம் சருகு. பாம்பு இருந்தால் தெரியாது. என் வெறும் காலே நிறையச் சத்தம் எழுப்பியது. நான் அந்தக் கல்லறையில் மிகப் பெரிய மண்டபம் இருந்த இடத்துக்குப் போனேன். அங்கேதான் 20 பேர் புதைக் கப்பட்டு இருந்தார்கள். எல்லோருக்கும் 19 அல்லது 20 வயது. அவர்கள் பெயர்களுக்கு அடியில் இருந்த வாசகம், 'போர் முனையில் உயிரைவிட முன்வந்தவர்களைக் காலரா நோய் வென்றுவிட்டது!'

அந்த வாசகத்தின் கவித்துவம் எனக்கு அன்று புரியவில்லை. அந்தப் பெரிய காம்பவுண்டில் 200 கல்லறைகள்கூட இருக்கலாம். இவ்வளவு வெள்ளைக்காரர்கள் அந்த ஊரில் கடைசி மூச்சை விட்டிருக்கிறார்கள். அந்த இடத்துக்கு வருவதற்குச் சரியான பாதைகூடக் கிடையாது. ஆதலால், எல்லா உடல்களையும் தூக்கிக்கொண்டுதான் வந்திருக்க வேண்டும்.

திடீர் திடீரென்று என் அம்மா அழுவாள். எனக்கு அண்ணனாக இருந்தவன் எனக்கு இரண்டு வயது ஆவ தற்குள் வயிற்று வலி என்று சொல்லிக் கடைசியில் செத்தே போய்விட்டான். 10 வருடம் ஆன பிறகுகூட என் அம்மாவின் துக்கம் தீரவில்லை. இங்கே இவ்வளவு பேர் புதைக்கப்பட்டு இருக் கிறார்களே, இவர்களுடைய தாய் - தந்தையர் எவ்வளவு அழுது இருப்பார்கள்! அவர்கள் வரை இது அந்நிய நாடு. அவர்கள் இறந்தபோது அவர்கள் தாய் - தந்தையர் அருகில் இருந்திருக்க முடியாது. எல்லோரும் வெள்ளைக்காரச் சிப் பாய்கள். ஒருவேளை நாங்கள் இப்போது இருக் கும் அறைகளில்கூட அவர்கள் இருந்து இருக்கலாம். இப்போதே ஊரில் ஏழெட்டு மருத்துவர்கள்தான். இந்தச் சிப்பாய்கள் இருந்த நாட்களில் எவ்வளவு பேர் இருந்து இருப்பார்கள்? மருத்துவம் பார்க்கப்படாத காரணத்தால்கூட இவர்கள் மொத்தமாக இறந்து இருக்கலாம்.

அந்த வயதில் எனக்கு அழுகை வந்தது. அங்கேயே அழுதுகொண்டு நின்றேன்.

என்னை யாரோ முதுகில் தட்டி, ''அழாதேடா. எனக்கும் அழுகை வந்திடும்'' என்று சொன்னதும் திரும்பிப் பார்த்தேன். என் அக்கா.

''நீ எப்படி வந்தே?''

''எனக்குத் தெரியாதா நீ எங்கே போவேன்னு.''

''இந்தக் கதவுக்குப் பூட்டே கிடையாது.''

''இருக்கே.''

''அது பூட்டாது.''

''சரி, வா. நாம கோயிலுக்குப் போவோம்.''

நாங்கள் இருவரும் வெளியே வந்து கதவைத் தாளிட்டு, அந்தப் பூட்டை அழுத்திவைத்தோம். ஆனால், அது திறந்த மாதிரிதான் இருந்தது. இரண்டு நாளில் அடிக்கடி திறக்கப்பட்டது. பூட்டின் உள்ளே இருந்த துரு, அழுக்கை விலக்கி இருக்கும்.

நாங்கள் லட்சுமண் ஜூலா போய்விட்டுச் சுற்று வழியில்தான் வந்தோம்.

''இனிமே இங்கே வர வேண்டாம்'' என்று நான் சொன்னேன்.

''நானும் வரப்போறது இல்லை'' என்று அக்கா சொன்னாள்.

''ஒண்ணு தெரியுமா?'' என்று கேட்டாள்.

''என்ன?''

''உனக்கு முன்னாலயே நான் கல்லறையைப் பாத்துட்டேன்!''

நன்றி - விகடன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ