சங்க இலக்கியங்களுள் தலைவன், தலைவி, தோழி, தாய், செவிலித்தாய் முதலிய பாத்திரங்கள் தனித்தனிச் சிறப்புப் பெற்று விளங்குவதைக் காண்கிறோம். ஆனால், தோழி மட்டுமே தலைவிக்குத் தாயாகவும், செவிலித் தாயாகவும் சிறப்புத் தகுதி பெற்று பரிணமிக்கிறாள்.
தலைவனைக் காணாதபோது தலைவிக்கு ஏற்படும் துன்பத்திலிருந்து தலைவி மீண்டுவர, பல வழிமுறைகளைக் கையாண்டு தலைவிக்கு உற்ற துணையாயிருப்பவள் தோழி. அவ்வாறு தலைவனைக் காணாதபோது தலைவியின் உடல் நோய் (பசலை) கண்டு வருத்தப்படுமே என்ற தாய்மையின் உள்ளத்தோடு தலைவனின் வருகைக்காக கூகையின் தடையைத் தகர்க்கிறாள். மேலும், கூகையின் அலறலால் வீட்டில் உள்ள அனைவரும் விழித்து எழுந்து விட்டால், தலைவிக்குக் கேடு சூழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு செவிலித்தாயின் அக்கறையோடு தலைவியைக் காப்பாற்றுகிறாள்.
இவ்வாறாகத் தோழியின் பண்பும், பங்கும், தலைவிமேல் கொண்ட அன்பும், சமயோஜித புத்தியும், அறிவுத் திறனும், வீரமும் அகப்பாடல்களுள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், பெருந்தேவனார் என்ற புலவர் இயற்றிய, நற்றிணை - குறிஞ்சித் திணைப் பாடல் ஒன்று தோழியின் பண்பை மிகவும் சிறப்பாக விளங்குகிறது.
தலைவியைக் காண தலைவன் இரவுக்குறியிடத்து வரும்போது, கூகையானது
(கோட்டான்) தனது கடூர குரலை எழுப்பி, வீட்டில் உள்ள அனைவரையும் துயில் களையச் செய்கிறது. இதனால், தலைவனின் வருகை தடைபடுகிறது. தலைவியைக் காண முடியாமல் தலைவன் வந்தவழியே திரும்புகிறான். தலைவனைக் காண இயலாமல், அத்துன்பத்தைத் தாங்கமாட்டாது தலைவி வருத்தமுற்று முகம் வாடுவதைக் கண்ட தோழி, கூகையிடம், "" ஏ! கூகையே!
எங்கள் ஊரின் முகப்பிலுள்ள பொய்கையின் அருகில் கடவுள் வீற்றிருக்கும் முதிய மரத்தின் மீதிருந்து வளைந்த வாயையும், தெளிந்த கண்களையும், கூரிய நகத்தையும் வைத்துக்கொண்டு பறையோசை போன்ற உன் குரல் ஒலியால் பிறரை வருத்துகிறாய். நாங்கள் ஆட்டிறைச்சியோடு நெய்ச்சோற்றினையும், வெள்ளெலியின் சூடான இறைச்சியையும் உனக்கு நிறையக் கொடுப்போம். எம்மிடம் அன்பு நிறைந்த எம் காதலர் வருவதை விரும்பி, இரவில் கூட துயில்கொள்ளாமல் உள்ளம் சுழன்று வருந்துகிறோம். அவ்வேளையில், யாவரும் அஞ்சி விழித்துக் கொள்ளும்படியாக உன் கடுமையான குரலை எடுத்துக் குழறி எங்களை வருத்துகிறாய். அவ்வாறு எங்களை வருத்தாதே'' என்று கூறுகிறாள்.
கூகையின் ஒலியால் தலைவனைக் காணமுடியாமல் வருத்தமடையும் தலைவியின் வருத்தம் கண்டு பொறுக்காத தோழி, கூகையிடம் இவ்வாறு தாழ்மையுடன் கெஞ்சி, கூகையைக் குளிர்விக்கிறாள். கூகையிடம் தோழி கெஞ்சிக் குளிர்விக்கும் பாடல் வருமாறு:
""எம்மூர் வாயில் ஒண்துறைத் தடைஇய
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கண் கூர்உகிர்
வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாங் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே''
(நற்றிணை - பா. 83)
கருத்துகள்