06/03/2012

சொல்லவந்தது இதுதான்!

உலகின் ஈடு இணையற்ற நம் தாய்மொழி தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் உள்ளன. ஒன்பாண் சுவையும் விரவிக்கிடக்கின்ற பல பாடல்கள் பாடிய புலவர்களின் கவிநயத்தையும், கற்பனைத் திறனையும், சொக்கவைக்கும் சொல்லாடல் கலையையும் அவர்தம் படைப்பாற்றலையும் நமக்கு விளக்குவனவாகும்.

பல அறநெறிக் கருத்துகளை உள்ளடக்கிய விவேக சிந்தாமணியின் பல பாடல்கள், தமிழ்த் திரைப்படங்களில் கூட எடுத்தாளப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றன. கிராமங்களில் வாழும் கல்லாதார் கூட விவேக சிந்தாமணியின் பல பாடல்களை செவிவழிக்கேட்டு, சிந்தையில் ஏற்றி எடுத்துக்காட்டிப் பேசும் இயல்பினராக இன்றும் விளங்குவதைக் காணலாம்.


நம்முடைய அன்றாட வாழ்வியல் பயன்பாட்டில் உள்ள ஏழு நாள்கள், பன்னிரெண்டு ராசிகள், இருபத்தி ஏழு நட்சத்திரங்கள், அறுபது ஆண்டுகளின் பெயர்கள் இவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட விவேக சிந்தாமணியின் ஒரு பாடல் வரிகள் நம்மை வெகுவாக ஈர்க்கின்றன. படிப்பவர்களுக்கு விடுகதைபோலவும், கேட்பவர்களுக்கு சட்டென விளங்கா பொருளுடனும் விளங்கும் அப்பாடலில், புலவர் சொல்ல வந்த செய்தி இதுதான்!

""கன்னியே! உன் செவ்வாயை எனக்குத் தருமாறு கேட்டேன். உன் விடையை எனக்குச் சொல்வாயாக! நான் கேட்டபடி விடை தந்தால், உனக்கு வெற்றி உண்டாகும். நான் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. மன்மதன் தரும் துயரத்தை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை மானே!''

இதை நேரிடையாகப் புலவர் கூறவில்லை. தன்னுடைய பாடலைப் புரிந்துகொள்ள, வாரம், நட்சத்திர வரிசை, ராசி, தமிழ் ஆண்டுகளின் பெயர்கள், கணிதம் ஆகிய பல்துறை அறிவும் பெற்றிருக்க வேண்டும் என விரும்பினார்போலும்.

""ஒரு நான்கு ஈர்அரையும் ஒன்றே கேளாய்!
உண்மையாய் ஐஅரையும் அரையும் கேட்டேன்;
இருநான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்;
இம்மொழியைக் கேட்ட படி ஈந்தாயாயின்,
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய், பெண்ணே,
பின்னைஓர் மொழிபுகல வேண்டா மின்றே
சரிநான்கும் பத்தும்ஒரு பதினைந் தாலே
சகிக்கமுடி யாது இனிஎன் சகியே மானே''
பாடல் - 18

இப்பாடலில், புலவர் "கன்னியே' என்று விளிக்கவில்லை. மாறாக நான்கும், இரண்டு அரையும், ஒன்றும் (ஆக, கூடுதல் ஆறு) ராசி மண்டலத்தில் மேஷம் முதலாக எண்ணில் ஆறாக வருவது கன்னிராசி - எனவே, கன்னியே கேளாய்! என அழைக்கிறார். மேலும், உண்மையில் ஐந்து அரையும் (இரண்டரை), அரையும் - கூடுதல் மூன்று - அதாவது, வாரத்தின் மூன்றாம் நாளான செவ்வாயை - உன் சிவந்த வாயை எனக்கு அளிக்குமாறு கேட்டேன். எனவே, இருநான்கு, மூன்று, ஒன்று (4+4+3+1 = 12) அதாவது, 12-, இருபத்தேழு நட்சத்திர வரிசையில் பன்னிரெண்டாக வருகின்ற உத்தரத்தை - உத்தரம் - பதில் - நான் கேட்ட கேள்விக்கு எனக்குத் தருவாயானால், பெருநான்கும், அறு நான்கும் (4+(6x4 = 24) = 28) அதாவது, தமிழில் வழங்கப்படும் இருபத்தெட்டாவது ஆண்டான "ஜெய'த்தை - வெற்றியை நீ பெறுவாய் பெண்ணே! நான் வேறு ஒரு சொல்லையும் சொல்ல வேண்டியது இல்லை. சரியாக நான்கும், பத்தும், பதினைந்தும் (4+10+15=29) கூடியதால் - 29- ஆம் ஆண்டு "மன்மத') மன்மத வேதனையை என்னால் சகிக்க முடியாது மானே! என்கிறார்.

என்னே புலவரின் நுண்மான் நுழைபுலம்!

கருத்துகள் இல்லை: