06/03/2012

அறவிளக்கம் அவசியமில்லை! - தெள்ளாறு ந.பானு

அறம் என்ற சொல் ஆழ்ந்த, செறிந்த, நுணுக்கமான பொருள் உடையது. ஒழுக்க நெறிகளுக்குரிய விதிமுறைகளின் தொகுப்பே அறம் எனலாம். "அறு' என்ற வினைச்சொல்லின் அடிப்படையில் உதித்ததே அறம். "அறு' என்பதற்கு அறுத்துச்செல், வழியை உண்டாக்கு, வழியை உருவாக்கு என்று விரிவுபடுத்திப் பொருள் உணரலாம்.

அறமாவது, மனு முதலிய நூல்களில் "விதித்தன செய்தலும் விலக்கின ஒழித்தலும் ஆம்' என்பார் பரிமேலழகர்.


அறமாவது, "உயிர்களுக்கு இதமான செய்தலும்; சத்தியம் சொல்லுதலும்; தான தர்மங்கள் செய்தலுமாம்' என்பது பதுமனார் உரை.

நீதி, கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம் என்ற பல பரிமாணங்களில் அறம் என்ற சொல் வழங்கப்பட்டு வருகிறது.

 பண்டைத் தமிழ் இலக்கியங்களுள் "அறம்' என்னும் சொல் "ஒழுக்கம்' என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியர், அறம் பற்றி மிகவும் நுட்பமாகவும் உயர்வாகவும் விளக்கிச் சொல்லியுள்ளார்.

 ""மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
 ஆகுல நீர பிற'' (குறள்-34)
 என்ற திருக்குறள், மனத்துக்கண் குற்றம் இல்லாமல் தூய்மையாக இருப்பதே அறம் என்று விளக்கி, அறத்தின் பெயரால் செய்யப்படுகின்ற மற்ற செயல்கள் அனைத்தும் ஆரவாரத்தன்மை உடையனவாகும் என்று கூறி மனத்தூய்மை பெற,

 ""அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச்சொல் நான்கும்
 இழுக்கா இயன்றது அறம்'' (குறள்-35)
 அதாவது, பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளாமையும், பேராசையும், சினமும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லுதலும்÷ஆகியவற்றைக் குற்றம் உடையனவாகக் கருதி, அவற்றை நீக்கி வாழ்வதே என்றும் வள்ளுவர் கூறியுள்ளார்.

"அறவிளக்கம் அவசியமில்லை' என்று தலைப்பு இருக்க, கட்டுரை அறம் குறித்து நீள்கிறதே! இது என்ன முரண்? என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா...! நாலடியாரில் ஒருபாடல் இப்படித்தான் எண்ண வைக்கிறது.

மானிடப் பிறவி என்பது அரிதான ஒன்று. அதிலும் உடற்குறைவின்றிப் பிறப்பது அதனினும் அரிது. அப்படிப் பிறந்த நாம் சில செயல்களில் செவிடாகவும், குருடாகவும், ஊமையாகவும் இருக்க வேண்டும் என்கிறது இப்பாடல். அதாவது, பிறருடைய ரகசியங்களைக் கேட்பதில் செவிடாகவும்; அயலார் மனைவியரைக் காமக் கருத்துடன் பார்ப்பதில் குருடாகவும்; கொடியதான புறஞ்சொல் பேசுவதில் ஊமையாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒருவன் இருப்பானானால், அவனுக்கு எந்த ஓர் அறம் குறித்தும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிறது இப்பாடல். பாடல் வருமாறு:

 ""பிறர்மறை யின்கண் செவிடராய்த் திறன்அறிந்து
 ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
 புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல் யாதும்
 அறங்கூற வேண்டா அவற்கு'' (நால:பா-158)

 அண்ணல் காந்தியடிகள் வைத்திருந்த மூன்று குரங்கு பொம்மைகள் (கெட்டதைப் பேசாதே, கெட்டதைப் பார்க்காதே, கெட்டதைக் கேட்காதே) இந்த நாலடிப் பாடலைத்தான் நமக்குச் சொல்லாமற் சொல்லுகிறதோ...!

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: