ஒரு மொழியின் வளத்தையும் வளர்ச்சியையும் அளவிட உதவுவது நூல் ஆகும். நூலின் இயல்பு, தன்மை, நோக்கம், நடை முதலிய கூறுகளின் மூலம் ஒரு மொழியின் சிறப்பையும், குறைகளையும் தெளிவாகக் காணலாம்.
நூல் என்பது மொழி தோன்றிய உடனே தோன்றியதல்ல. வழிவழியாக முன்னோர்கள் மூலம் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்பட்ட நீதிகளையும், கருத்துகளையும் பதிந்து வைக்க ஒரு கருவி தேவைப்பட்டது. அக்கருவியே நூலானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே "நூல்' எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைத் தொல்காப்பியம் வரையறுக்கிறது.
முதல் நூல், வழிநூல் என மரபுநிலை திரியாது சிறப்போடு கூடிய நூல்வகை இரண்டாகும். செய்த வினையின் பயனை அடையாத, தூய ஆழமான அறிவுடைய முன்னோன் ஒருவனால் செய்யப்பட்டது முதல் நூலாகும். அதன் வழியில் வருவது வழிநூலாகும் என்கிறது தொல்காப்பியம் (1593-94-95).
வழிநூல் என்பது, முதல் நூலில் உள்ள கருத்துகளைத் தொகுத்து நூலாக்கல், விரித்து நூலாக்கல், தொகுத்தும் விரித்தலும் மற்றும் மொழி பெயர்த்தலுமாம் (தொல். பொரு.1597) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.
உரை எழுதும் நிலையில் நூற்பாக்கள் எழுதப்பட வேண்டும். சுருக்கமாக உரை எழுதிய காண்டிகை என்பதும், பத்துவகைக் குற்றங்கள் இன்றியும், முப்பத்திரண்டு வகை உத்திகளோடு பொருந்திவந்தால் அது "நூல்' எனப்படும். குற்றமில்லாத நூற்பா ஒன்று, தான் உணர்த்தக் கருதிய பொருளை, மறைத்தலின்றி வெளிப்படையாகத் தெளிவாகக் கூறுவது காண்டிகையாகும் (தொல்.பொரு.1601). நூற்பாவின் உட்பொருளையும், அத்துடன் கருத்துத் தொடர்பு கொண்ட செய்திகளையும் இணைத்து, தொகுத்து உரைப்பது "உரை' எனப்படும். (தொல்.பொரு.1603). கூறவந்த பொருள் விட்டுப்போகாமலும், தேவையற்ற விளக்கங்கள் இல்லாமலும், தேவையான விரிவுடன் பொருத்தமாகச் சுட்டிக்காட்டப்பட்ட நூலின் பயனை உண்டாக்குதல் பொருட்டு, காரண, காரிய நடையில் அமைந்தது நெறியுடைய நூலாகும்.
எதிர்த்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடைகளுடனும், தான் எழுதிய நூல்களாலும், முன்பே எழுதப்பட்ட ஒரே கருத்துகள் கொண்ட நூல்களாலும் எடுத்துக்காட்டி, படிப்போர்க்கு உண்டாகும் ஐயத்தையும், பொருள் மாறுபாட்டையும் முழுவதுமாக நீக்கி, தெளிவாகப் பொருள்தரும் ஒரு தன்மையுடன் நிற்பது நூலின் சிறப்பாகும். மேலே கூறப்பட்ட வழி நூலுக்கான இலக்கணங்களிலிருந்து பிறழ்ந்தால் அது சிதைந்த நூலாகும்.
முதல் நூலின் யாப்பு அல்லது தொகுக்கப்பட்ட விதம் ஒன்றாகவும், வழிநூலின் யாப்பு வேறொன்றாகவும் இருப்பின் அது சிதைவு நூலாகும்.
நூலில் அமையக்கூடிய பத்துக் குற்றங்கள்:
""சிதைவு எனப்படுபவை வசை அறநாடின்
கூறியது கூறல், மாறுகொளக் கூறல்,
குன்றக் கூறல், மிகைப்படக் கூறல்,
பொருள் இல மொழிதல், மயங்கக் கூறல்,
கேட்போருக்கு இன்னா யாப்பிற்று ஆதல்
பழித்த மொழியான் இழுக்கம் கூறல்
தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்
என்ன வகையினும் மனங்கோள் இன்மை
அன்ன பிறவும் அவற்று விரி யாகும்'' (தொல்.பொரு.1608)
இந்நூற்பாவின்படி, முன்பு கூறியவற்றைத் திரும்பவும் கூறல், முன்பு கூறியதற்கு முரண்பாடாகக் கூறல், முழுவதும் கூறாமல் குறைவாகக் கூறல், அதிகமாக மிகைப்படுத்திக் கூறல், பொருளல்லாதவற்றைச் சொல்லல், படிப்போர் பொருள் மயக்கம் (ஐயம் ஏற்படும்படி) கொள்ளும்படிக் கூறல், கேட்பவர்க்கு இனிமையில்லாதவற்றைச் சொல்லல், நூலின் கருத்தைக் கூறாதொழிந்து, தன் கருத்தை வெளிப்படும்படிக் கூறல், கேட்போர் மற்றும் படிப்போரின் மனம் கொள்ளாத, ஒவ்வாத நிலையில் சொல்லுதல் இவை பத்தும் நூலின் குற்றங்களாகும்.
நூலின் உத்திகள் முப்பத்தியிரண்டு. அவை: சொன்னதைத் தெளிவாக அறிதல், பகுப்புமுறை, இறுதியில் தொகுத்துக் கூறல், வகைப்படுத்தி உண்மையை நிலைநாட்டல், முதலிய 32 உத்திகளையும் இவை போன்ற பிற உத்திகளையும் இணைத்துக்கொண்டு சுருக்கமாக, விளக்கமாக, தெளிவுபடுத்தும் வகையில், மனதிலேயே பலமுறை ஆராய்ந்து, பிழைகளை நீக்கி, நூல்வகை முறையில் சேர்த்து உணர்த்துதல் வேண்டும். இவ்வாறு உணர்த்துவதே "நூல்' (தொல்.பொரு.1610) ஆகும் என உரைப்பர் அறிவுடையோர் என்று நூலுக்கான இலக்கணத்தைத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள்