11/06/2014

கோயிலா? கோவிலா? - தி. அன்பழகன்

கோவில்' என்னும் சொல்லை தமிழறிஞர்கள் உட்பட பலரும் பிழையாக "கோயில்' என்று எழுதி வருகிறார்கள். சில பத்திரிகைகளிலும் கோயில் என்றே வெளியாகின்றன. கோவில் என்பது சரியா?, கோயில் என்பது சரியா? என்பதற்கான விடை காண்பதற்கு, "உடம்படுமெய்ப் புணர்ச்சி' என்னும் தமிழ் இலக்கணம் குறித்த தெளிவு அவசியம்.

ஒரு சொல்லின் முன் பகுதியை "நிலைமொழி' என்றும், அதன்பின் பகுதியை "வருமொழி' என்றும் சொல்வர். நிலைமொழி ஈற்று என்பது அதன் கடைசி எழுத்தாகும். ஒரு சொல்லின் நிலைமொழி ஈற்றும், வருமொழி முதலும் இணைவதே "புணர்ச்சி' எனப்படும்.

ஒரு சொல்லின் நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் மட்டும் ஒன்றுடன் ஒன்று இணையாது. இதற்கு, நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் இணைவதற்கு உடம்படுமெய் எனப்படும் "வ்' மற்றும், "ய்' என்னும் மெய்கள் தேவை. இவ்விரு உயிர்களுக்கு உருவம் கொடுக்க உடம்பாக இருந்து செயல்படுவதால் இவ்விரு மெய்களும் உடம்படுமெய் என்றானது.

வகர உடம்படுமெய்

அ, ஆ, உ, ஊ, ஓ என்னும் உயிரொலிகளுள் ஏதாவது ஒன்று நிலைமொழியின் கடைசியில் இருக்க, வருமொழி முதலில் பன்னிரண்டு உயிரெழுத்துகளுள் எது வந்தாலும் வகர மெய் தோன்றும்.

கோ+இல் என்பது புணர்ச்சியில் கோ+வ்+இல் என வகர உடம்படுமெய்யைப் (வ்) பெற்று கோவில் என்றாகும். (எ-டு) நா(நாக்கு) +இல் என்பது புணர்ச்சியில் நாயில் என மாறாது. உடம்படுமெய்யான "வ்' - வுடன் சேர்ந்து (நா+வ்+இல்) நாவில் என்றாகும். (எ.கா. மா+இலை = மாவிலை; திரு+ஆரூர் = திருவாரூர்) இருவகையாக எழுதும் சொற்களுள் (கோயில்-கோவில்; சுருசுருப்பு - சுறுசுறுப்பு; யாறு - ஆறு; எமன் - யமன்; ஐயர்-அய்யர்; பவளம் - பவழம்) இதுவும் (கோயில்-கோவில்) ஒன்று என்றாலும், இலக்கண விதிப்படி இனி "கோவில்' என்றே எழுதிப் பழகலாமே..!

நன்றி - தமிழ்மணி

10/06/2014

"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? - தமிழண்ணல்

பல சிற்றரசுகளை எல்லாம் ஒருங்கிணைத்த மகதப் பேரரசுதான் இந்திய வரலாற்றில் முதலிடம் பெறுகிறது. தொடக்கத்தில் பிம்பிசாரனும் அவன் மகன் அஜாதசத்துருவும் ஆட்சி செய்தனர். பிம்பிசாரன் இராஜகிருகம் என்ற தலைநகரிலிருந்து ஆண்டான். ஆனால் அவன் மகன் அஜாதசத்துரு தலைநகரைக் கங்கைக்கரைக்கு மாற்றினால், அரசை விரிவுபடுத்தவும் சிற்றரசுகளை அடக்கி ஆளவும் உதவும் என எண்ணினான். இவ்வாறு ஓரளவு நடுவண் உள்ள இந்தியப் பகுதியில், பாடலிபுத்திரம் என்ற நகரை மிகவும் திட்டமிட்டு, உலகிற் சிறந்ததாக உருவாக்கினான்.

150 ஆண்டுகள் மகதப் பேரரசு சிறந்து விளங்கியது. பின்னர் நந்தர்கள் என்ற சிற்றரசு மேலோங்கி, மகத நாட்டை, பாடலிபுத்திர நகரையே தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். ஏறத்தாழ 250 ஆண்டுகள் நந்தர்கள் ஆட்சி சிறந்தோங்கியது. நந்தர் புகழ் இந்திய நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும் அது பரவியதால், சங்க இலக்கியத்தில் அவர்கள் தொடர்பான குறிப்பு இடம்பெற்றுள்ளது.

கி.மு.550 முதல் கி.மு.322 வரை சிறப்புற்றிருந்த நந்தர்களைப் பற்றிக் குறிக்கும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் அக்காலத்தது என்பதில் ஐயம் இல்லை. "பாடலிபுத்திர நகரம்' எங்கே இருந்தது? கங்கைக் கரையோரம் இருந்ததாக வரலாற்றறிஞர் எல்லோரும் எழுதியுள்ளனர். ஆனால், அது கங்கையில் கலக்கும் "சோனை' என்ற சிறு கிளை நதியின் கரையில்தான் இருந்தது. சோனை நதி கங்கையிற் கலக்கும் சங்கமுகத் துறைக்கு இரண்டு கல் தொலைவில் அந்நகரம் இருந்தாலும், உலகறிந்த கங்கைக் கரையில் என எழுதும் பழக்கம் தொடர்ந்தது.

தளபதி வாடல் என்பார், அகழ்வாராய்ச்சி மூலம் 1892-இல் இதனை வெளியிட்டார். அதன் அடிப்படையில், இந்திய வரலாற்றறிஞர் வி.ஏ.ஸ்மித் விரிவாக எழுதியுள்ளார்.

""பாடலிபுத்திர நகரம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது; அது கங்கையுடன் சோனை நதி கலக்கும் சங்கமுகத் துறையை ஒட்டிய இடத்திலிருந்து, சோனை நதியின் வடக்குக் கரையில், கங்கையிலிருந்து சில கல் தொலைவில் உள்ளது அது’'

இந்த அரிய செய்தி, சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் பதிவாகியிருப்பதுதான் பெருவியப்பு அளிக்கிறது. குறுந்தொகையில், படுமரத்து மோசிகீரனார், ""வெண் கோட்டு யானை சோனை படியும், பொன்மலி பாடலி'' (75) என்று, சோனை நதிக்கரை என்பதைப் பதிவு செய்திருப்பது வேறு எங்கும் காணாததாகும். சங்க இலக்கியம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை நிறுவ இது வலுவான சான்றாக அமைகிறது.

நன்றி - தமிழ்மணி

சங்க இலக்கியத்தில் வன்புணர்ச்சியும் தண்டனையும்! - சு. சொக்கலிங்கம்

பாலியல் குற்றம் செய்வோருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென உலகில் பல மூலைகளிலிருந்தும் பலத்த குரல் இன்று எழும்புகின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த இவ் வன்கொடுமை அன்றாட நிகழ்வாக அமைந்துவிட்டமையால் வன்கொடுமை புணர்ச்சிக்கான எதிர்ப்புக் குரலில் வியப்பொன்றுமில்லை. சரியானதே.

பாலியல் குற்றம் புரிந்தோர்க்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருப்பதை சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. இத் தண்டனை வழங்கும் பொறுப்பை நடுவுநிலை தவறாச் சான்றோர் மக்கள் முன்னிலையில் வழங்கியுள்ளனர் என்பதே சிறப்பு.

அகநானூறு "மணிமிடைப் பவளத்தில்' இந்நிகழ்வு பாடப் பட்டுள்ளது. அழகு விளங்க பழைமையான புகழ்மிக்கப் பலவகையான பூக்கள் நிறைந்த வயல்களையும் கரும்பு மிக்க தோட்டங்களையும் உடைய சிறப்புடைய கள்ளூர் என்னும் ஊரினன் நிகழ்வாகக் கூறப்பட்டுள்ளது.

அழகிய நெற்றியியையுடைய இளையாள் ஒருத்தியடன் கூடி, அவளின் அழகிய நலத்தினைத் தீவினையே தொழிலாகக் கொண்ட ஒருவன் நுகர்ந்து விடுகிறான். அதன்பின் அவளை நாடி அவன் வரவே இல்லை. அவளைக் கைவிட்டு விடுகிறான். அந்நிலையில் என்ன செய்வதென்று அறியாத நங்கை இறுதியாகச் சான்றோரிடம் முறையிட்டுக் கதறுகிறாள்.

அவளின் துயர்நிலை கேட்ட சான்றோர், அத்தீயவனை அழைத்து உசாவுகின்றனர். அத் தீயவனோ சற்றும் மனசாட்சியின்றி "இதற்கு முன் இவளை அறியேன்'; இவள் யார் என்பது கூட தனக்குத் தெரியாதென்றும் துணிவுடன் பொய்சூள் கூறி அவளை ஏற்க மறுக்கிறான். நீதியிலா அவனின் சூளினை நன்கு ஆய்ந்த அவையினர், அவன் கூறியது முற்றிலும் பொய் என்பதைச் தக்க சாட்சியாளர் கூற்றினால் தெளிவடைகின்றனர். அதனால் அவன்மேல் மேலும் சினம் கொள்கின்றனர். அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்து, தண்டனையை மக்கள் முன்னிலையில் வழங்குகின்றனர்.

தளிர்கள் பொருந்திய மூன்று கவராய கிளைகளின் நடுவே அவனை இறுகப் பிணித்துக் கட்டி, அவன் தலையில் அதிக அளவில் நீற்றினைப் (சுண்ணாம்பு தண்ணீர்) பெய்கின்றனர். சுண்ணாம்பு தண்ணீர் தன் தலையில் பட்டதினால் எரிச்சல் தாங்காமல் அவன் துடிக்கிறான். "ஐயோ' என்று அலறுகின்றான். அவன் துடிப்பதைக் கண்ட ஊர் மக்கள் அவன் மேல் இரக்கம் கொள்ளாமல், மாறாக "இது அவனுக்குச் சரியான தண்டனையே' என்று எண்ணி மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்கின்றனர். இதனை, ..... ...... ...... 

காண்தகத் தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனி
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதற் குறமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன் அறியேன் என்ற
திறனில் வெம்சூள் அறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே!
(அகம் .256 )

என்று மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் என்ற புலவர் தோழியின் கூற்றாகப் பாடியுள்ளார்.

இப்பாடல் வன்புணர்ச்சி செய்வோருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்ற எண்ணம் அன்று தொட்டு இன்று வரை பால் வேறுபாடின்றி மக்களிடையே இருந்து வருகிறது என்பதையே புலப்படுத்துகிறது. நம் தமிழ்ச் செம்மொழி இலக்கியத்தில் இல்லாத செய்திகளே இல்லை என்பது உண்மையிலும் உண்மை!

நன்றி - தமிழ்மணி 2012

கருப்பும் கறுப்பும்! - தமிழண்ணல்

கருப்பு

கரிய நிறத்தை நேர் பொருளாய்க் குறிக்கும் சொல் "கருப்பு' என்பதே.
கறுப்பு - சினம், வெறுப்பு. அவன் எந்த நேரமும் கறுவுகிறான். கறுத்தோர் - பகைவர், கறுப்பு என்பதற்கு நேர் பொருள் "நிறம்' அன்று. சீற்றத்தால் கறுகறு என்று முகம் கறுத்தலும் சிவத்தலும் உண்டு. அவை நிழற் பொருளாக அரிதிற் பயன்பட்டன.

"கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' - என்ற இலக்கண உதாரணத்திற்கு, அட்டக் கறுப்பிலும் ஓர் அழகுண்டு என்பதாம்.
உரிச்சொல் இலக்கணத்தில்,

""... ... பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி
தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்'' (782)

பயிலாதவை - அடிக்கடி பயன்படுத்தாத அருஞ்சொற்கள். அவற்றை அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுடன் சார்த்தி, எச்சொல்லாயினும் வேறு நிழற் பொருள்களையும் தருதல் பாவலர்க்கு இயல்பு.
கருப்பு என்பது - கரிய நிறம். "வெளிப்படு சொல்லே கிடைத்தல் வேண்டா...'' என்பார் தொல்காப்பியர் (783).

கருப்பு நிறம் என்பது உலகறிந்த பொருள். துங்கக் கரிமுகத்துத் தூமணியே, கரு நெடுங்கண்ணி, கருவிழி, கரிகாலன், கருங்கனி நாவல், கருங்கார் குறிஞ்சி, கருங்குழலி, கார்வண்ணன், கரிது, கரி, காரி இவற்றில் எல்லாம் வல்லினத்தைப் போட்டுப் பாருங்கள். தொடர்புடைய சொற்கள் எல்லாம் கருப்பு என்பதிலிருந்தே கிடைக்கின்றன. 

கறுப்பு

"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள' (தொல்.855)

வெகுளி - கடுங்கோபம். இது சினத்தல், பகைத்தல். நிற்கறுத்தோர் அரணம் போல' - பகைத்தவரின் கோட்டை போல. "நீ சிவந்து இறுத்தி' (பதிற்-13) நீ சினந்து முற்றுகையிட்ட. "நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப' (856) நிறத்து உரு - நிறம் வேறுபடல் (கோபத்தால்). சீற்றத்தால் நிறமாற்ற மேற்படல் இயல்பு. கறுத்தோர் - பகைவர். மேகம் வானில் திரண்டு கறுப்பதுண்டு. நிறம் மாறி, கறுத்துக்கொண்டு வரும். "வானம் மாமலை வாழ்சூழ்பு கறுப்ப' (குறிஞ்சி-22) இது கருநிறம் மட்டுமன்று; மிக முற்றிய கருநிறம். "கவ்வை கறுப்பு' (அகம்.366) எள்ளின் இளங்காய் முற்றிய நிலை. அது கருநிறமாய் மாறிவருவது காட்டும். கவ்வை - எள்.

சினம் முற்றிய நிலையில் முகம் கறுத்துப் போகும். அல்லது கண்ணும் கன்னமும் எல்லாம் சிவந்து போகும். பயிர் முற்றிய நிலையில் நிறம் மாறிக் காட்டும். இது கருப்பு அன்று என்பதற்கே ஆசான் "நிறத்துஉரு' என்று குறிப்பிட்டுள்ளார். "எச் சொல்லாயினும் வேறு பொருள் கிளத்தல்' என்றபடி வந்தது இது. இது இடமும் சூழலும் நோக்கிக் கொள்ளப்பட வேண்டியது.

கருநிறத்தைக் குறிக்கும் கருப்பு நிலையானது. கறுப்பு, சிவப்பு இடம், சூழல் போன்றவற்றால் "நிறத்துரு' - தோற்றம் பெறும்; பிறகு மாறிவிடும். கறுப்பணசாமி என்றது கடுங் கோபக்காரச் சாமி என இடம் நோக்கிப் பொருள் கொள்ளவே ஆகும்.

"நின் புதல்வர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனை என்னுடன் அனுப்பு' என்றுதான் விசுவாமித்திரர், தயரதனிடம் கேட்கிறார்.

இன்றைய நிலையில் கருப்புப் பணம் என்பதற்கு இடையின "ரு' போடுவதுதான் பொருத்தமாக அமையும். "கறுப்புப் பணம்' என்று எழுதினால் உண்மையான பொருள் பொருந்தி வராது.

நன்றி - தமிழ்மணி

21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம் - புலவர் சு.தி.சங்கரநாராயணன்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் மரபுத் தொடர்களைத் தொகுத்து தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். அவருக்குப் பின் பல நூறு ஆண்டுகள் கழித்து வந்த இளம்பூரணரும், சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் தத்தம் உரைகளில் தொல்-சூத்திரங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகத் தென்பாண்டி நாட்டு வழக்குச் சொற்களைத் தந்துள்ளனர். உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டிய அந்த மரபுத் தொடர்கள் இன்றும் நெல்லைச் சீமைப் பேச்சுவழக்கில் உள்ளன.

கேட்டையா - கண்டையா

உண்மையல்லாத ஒன்றைச் சொல்லும் ஒருவருடைய கருத்தை மறுக்கும்பொழுது, ""அதை நீ... கேட்டையா... இல்ல... நீ கண்டையா...'' என்று பேசுவது தென்பாண்டி நாட்டின் சிற்றூர் மக்களிடையே இன்றும் கேட்கலாம்.

""கேட்டை என்றா நின்றை என்றா
காத்தை என்றா கண்டை என்றா
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி
முன்னுறக் கிளந்த இயல்பா கும்மே.''
(தொல்.சொல். எச்-சூ.30)

""கேட்டை எனவும், நின்றை எனவும், காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அம்முன்னிலை வினைச்சொல் நான்கும் முன்னிலைப் பொருளை உணர்த்தி நில்லாக்கால் மேற்சொல்லப்பட்ட அசை நிலையாம். இவையும் கட்டுரைக்கண் (பேச்சு வழக்கில்) அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் வந்து ஏற்புழி அசைநிலையாய் நிற்கும். இவையும் இக்காலத்து அரிய; இவை சிறுபான்மை வினாவொடு வருதலும் கொள்க''- இவ்வாறு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் தந்துள்ளார்.

""நின்றை, காத்தை - என்பன இக்காலத்துப் பயின்றுவாரா'' - எனச் சேனாவரையர் கூறுகிறார். அதனால், அவர் காலத்தில் கேட்டை, கண்டை எனும் இரு சொற்கள் மட்டும் பயின்றனவாகக் கொள்ளலாம்.

ஆகவே, தொல்காப்பியர் சுட்டிக்காட்டிய கேட்டையா, கண்டையா எனும் மரபுச் சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் இருப்பது வியப்புக்குரியது!

பெண்டாட்டி

உயர்திணைப் பெயர்களை வழங்கும் முறையைத் தொல்.சொல்.பெயரியல்-சூ.9 கூறுகிறது. அதில் வரும் ""பெண்மை அடுத்த இகர இறுதி'' என்பதற்குப் "பெண்டாட்டி' என்றே இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் உரை விளக்கம் தந்துள்ளனர்.

அம்மூவனார் பாடிய ஐங்குறுநூறு, செய்.113-இல் உள்ள ""ஊரார் பெண்டென மொழிப'' என்பதையும், மருதன் இளநாகனார் பாடிய கலித்தொகை, செய். 77-இல் உள்ள ""என்னை நின் பெண்டெனப் பிறர் கூறும் பழிமாறப் பெறுகற்பின்'' என்பதையும் நச்சினார்க்கினியர் மேற்கோளாகத் தந்துள்ளார்.

நெல்லைச் சீமைச் சிற்றூர் மக்கள் இன்றும் தாம் சந்திக்கும் உறவினர்களிடம் ""வீட்டிலே பெண்டு பிள்ளைகள் நல்லா இருக்காங்களா'' என நலம் கேட்பது சங்க இலக்கியத் தொடர்கள் அல்லவா! தொல்காப்பியரும் உரையாசிரியர்களும் வழங்கிய பெண்டு, பெண்டாட்டி எனும் சொற்கள் இன்றைய நாளிலும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது.

பெண் மகன்

""எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை அடுத்த மகனென் கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்''
(தொல்.சொல்.பெயரியல்.சூ.10)

""புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலரைப் "பெண் மகன்' என்று வழங்குப; பிறவும் அன்ன'' இவ்வாறு உரை தருகிறார் இளம்பூரணர். ""கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை அடுத்து, நாணுவரை இறந்து, புறத்து விளையாடும் பருவத்தான் பால் திரிந்த பெண் மகன் என்னும் பெயர்ச் சொல்லும், பெண் மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் (தொல்காப்பியர் காலம்) அவ்வாறே வழங்கினராயிற்று. இங்ஙனம் கூறலின்'' - என விளக்கம் தருகிறார் நச்சினார்க்கினியர்.

""புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோகத்தார் (கொற்கை சூழ்ந்த நாடு) இக்காலத்தும் பெண் மகன் என்று வழங்குப'' என விரிவுரை தந்துள்ளார் சேனாவரையர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் கொற்கைக்கு வடக்கே கடற்கரையை அடுத்ததாக மேல்மாந்தை எனும் ஊர் உள்ளது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் "மாறாந்தை' எனும் ஊர் உள்ளது. இவை சங்க காலத்துக் கொற்கை சூழ்ந்த மாறோகம் எனும் பகுதியின் இன்றைய எச்சங்களாகும். இங்கேதான் பெண் மகன் என்ற மரபுத்தொடர் வழங்குவதாகச் சேனாவரையர் குறிப்பிடுகிறார். பெண்மையை வீரத்தின் விளைநிலமாக்கிய மகாகவி பாரதியாரும் மாறோகத்தாரே!

பெண்ணுக்குப் பெருமை சேர்த்தது தொல்காப்பியர் காலம். இன்றும் அவர் காலம் ஒளிவீசக் காண்கிறோம். ஆகவே, இந்திய வரலாற்றுப் பெண் மகன்களான ஜான்சி ராணி, சரோஜினி நாயுடு, விஜயலட்சுமிப் பண்டிட், இந்திரா காந்தி, ராணி மங்கம்மாள், தில்லையாடி வள்ளியம்மை முதலியோரையும் தொல்காப்பியர் கூறும் தமிழ் மரபு வழியே "மாறோகத்தார்' எனும் தென்பாண்டி நாட்டாரின் வழக்கப்படி பெண்மகன்கள் என்று கூறி மகிழ்வோம்.

நன்றி - தமிழ்மணி