26/12/2011

மழைப் பயணம் – வண்ணநிலவன்

''அங்க போயி மரம் மாதிரி நிக்காதீங்க... ஒங்க தங்கச்சிகிட்டவும் அம்மாகிட்டவும் பேசுங்க!''

''என்னய போகச் சொல்லுதியே... நீயே போயிட்டு வந்தா என்ன?''

''ஒங்க தலையில என்ன களிமண்ணா இருக்கு? பொம்பள போயிப் பேசதுக்கும் ஆம்பள பேசதுக்கும் வித்தியாசம் இருக்குய்யா. நீங்க ஒங்க தங்கச்சி, அம்மாங்கிற உருத்தோட பேசலாம். நான் அப்பிடிப் பேச முடியுமா? என்ன இருந்தாலும் நான் அடுத்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தவதான?'' என்றாள் சிவகாமி.

பேச்சியப்பனுக்குத் தன் தங்கச்சியிடமும் அம்மாவிடமும் இதைப் போய்ப் பேசுவதற்கு இஷ்டம் இல்லை. மகேஸ் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறாள். அவளுடைய புருஷனுக்கு ஒழுங்கான வேலை கிடையாது. இட்லி சுட்டு, வடை சுட்டு என்று காலத்தை ஓட்டுகிறாள். சிவகாமி நினைப்பதுபோல் கயத்தாறில் அந்த இரண்டு வீடுகளுக்கு என்ன பெரிய வாடகை வந்துவிடும்? அதில் போய், ஒரு வீட்டு வாடகையைப் பங்கு கேள் என்கிறாளே சிவகாமி. அவனுக்கு அந்த யோசனையே சுத்தமாகப் பிடிக்கவில்லை.

''இதுக்கு எதுக்கு நேர்ல போகணுங்கேன்? மகேஸுகிட்டச் செல்லுல பேசுனா போதாதா?''

''வெவரம் புரியாமப் பேசாதீய... வாடகைப் பணத்தக் கேக்க மட்டும் போகல... ஒங்க அம்மய இங்க கூட்டிக்கிட்டு வரணும்லா? ஒங்க அம்மய அவ தன்கூட வச்சுக்கிட்டுதான் ரெண்டு வீட்டு வாடகைப் பணத்தையும் வாங்கி முடிஞ்சுக்கிடுதா!''

''அம்மய இங்க கூட்டிட்டு வந்து என்ன செய்ய? அவகூட சண்டை போடதுக்கா..?''

''ஒங்க அம்மன்னா ஒங்களுக்குப் பொத்துக்கிட்டு வந்துருமே... நான் என்னைக்கு ஒங்க அம்மகூடச் சண்டை போட்டேன்? பல்லு மேல நாக்கைப் போட்டுப் பேசுதேளே? ஒங்க அம்ம போடாத சண்டையா? அவ தான் எடுத்ததுக்கெல்லாம் சண்டை போடுவா, நின்னா குத்தம், நடந்தா குத்தம்னு அவ போடாத சண்டையா?''

''சரி... நீ சொல்லுத மாதிரி அவதான் சண்டைக்காரின்னு வச்சுக்கிடுவோம். இப்பம் அவளக் கூட்டிக்கிட்டு வந்து வச்சுக்கிட்டா மட்டும் சண்டை போட மாட்டாளா?''

''அதை நாமில்லா சமாளிச்சுக்கிடுதேன். ஒங்களுக்கென்ன? 'எங்க அம்மய வச்சுச் சாப்பாடு போடுதேன், சாப்பாடு போடுதேன்’னு சொல்லிக்கிட்டுத்தான அவ ரெண்டு வீட்டு வாடகையவும் வாங்கி வாங்கி முடிஞ்சுக்கிடுதா? நீங்களும் ஒங்க அம்மக்கிப் பொறந்த புள்ளதான? ஒங்களுக்கும் அந்த வாடகையில பங்கு உண்டுல்ல?''

''அவ புருசனுக்குச் சரியான வேலவெட்டி இல்ல. ரெண்டு பொட்டப் புள்ளைகள வச்சுக்கிட்டுக் கஷ்டப்படுதா. அவ பாவத்துல போயி அடிச்சு விழணும்கிறீயே?''

''ஏன்... நமக்குந்தான் ரெண்டு புள்ளைக இருக்குது. நாம என்ன அரமணையிலயா வாழுதோம்?''

சிவகாமியிடம் பேசி மீள முடியாது. மேலும், அவள் மனதில் ஒன்றை நினைத்து விட்டால் அதைச் செய்துமுடிக்காமல் விட மாட்டாள். சிவகாமி சொல்வது நியாயமே இல்லைதான் என்றாலும், கயத்தாறுக்குப் போகாமல் தீராது. இல்லை என்றால், போய்விட்டு வரும் வரை நச்சரித்துக்கொண்டே இருப்பாள். அவள் மீது வெறுப்பு வந்தது. போயும்போயும் இவளைக் கல்யாணம் செய்துகொண்டோமே. இவ்வளவு காலத்துக்குப் பிறகு அதை நினைத்து என்ன செய்வது?

சிவகாமிக்கும் நாற்பது வயதாகப்போகிறது. சேரன்மாதேவியில் சண்முகத்தக்கா வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்தபோதுதான், வெகு நாட்களுக்குப் பிறகு சிவகாமியைப் பார்த்தான். அப்போது சிவகாமி மதுரையில் கல்லூரிப் படிப்பை எல்லாம் முடித்திருந்தாள். முறைக்கு அவளும் ஒரு மாமாவுடைய பெண்தான்.

அவனுடைய அப்பாவுக்குத் தன்னுடைய தங்கச்சி மகளைத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று ஆசை. இவன்தான், கல்யாணம் என்றால் சிவகாமியைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தான். திருமணமாகி வந்த பிறகுதான் அவள் சரியான வாயாடி என்பது தெரிந்தது. படித்திருப்பதால்தான் இப்படி எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுகிறாள் என்று அப்பாவும் அம்மாவும் சொன்னார்கள். பெரியவன் சம்பத்துக்கு இரண்டரை வயதாகும்போது அப்பாவுக்கு மாரடைப்பு வந்து இறந்துவிட்டார்.

அப்பா இறந்த பிறகு அம்மாவுக்கு அவனுடன் இருக்கப் பிடிக்கவில்லை. சின்னவள் கோகிலாவுக்கு ஒரு வயதாகி விட்டது. இனி பிள்ளையைப் பார்க்கவும் ஆள் வேண்டியது இல்லை என்று அம்மா நினைத்தாள். மேலும், அவளுக்கும் சிவகாமிக்கும் நாளாக நாளாக சரிவரவில்லை. அதனால் கயத்தாறு மகேஸ் வீட்டுக்குப் போய்விட்டாள். கயத்தாறுதானே அவள் பிறந்த ஊர்; ஏதோ அவளுக்குப் பிடித்தமான இடத்தில் இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தான்.

கயத்தாறு வீடுகள் எல்லாம் அம்மாவுடைய அப்பா வழிச் சொத்து. ஒரு வீட்டில் மகேஸ் குடியிருந்துகொண்டு, மற்ற இரண்டு வீடுகளையும் வாடகைக்கு விட்டிருந்தாள். அவை நல்ல முரட்டு வீடுகள். அந்தக் காலத்துக் காரைக் கட்டடம். ஆனால், அந்த ஊரில் வாடகை அதிகமாக வராது. அந்த வீடுகள் டவுனில் இருந்தால் நாலாயிரம், அஞ்சாயிரம் வாடகை வரும்.

நாலு மணிக்கு மேல் கயத்தாறுக்குப் போவோம் என்று நினைத்தான். சிவகாமி காபி போட அடுக்களைக்குப் போய் விட்டாள். அதுவும் நல்லதுதான். இல்லை என்றால் திரும்பத் திரும்ப அதையே பேசிக்கொண்டு இருப்பாள். சம்பத்தும் கோகிலாவும் அவர்களுடைய நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். மகேஸுடன் ஒப்பிடும்போது அவனுக்கு ஒன்றும் வசதிக் குறைச்சல் இல்லை. நிரந்தரமான வருமானம் வரும் வேலை இருக்கிறது. ஆனால், மகேஸ் புருஷனுக்கு அப்படியா?

காபி சாப்பிட்டுவிட்டு ஐங்ஷன் பஸ் ஸ்டாண்டுக்குப் போனான். மகேஸ் வீட்டுக்கு நிறையப் பழங்கள் வாங்கிக்கொண்டான். கயத்தாறுக்கு அரை மணி நேரப் பயணம்தான். மேகமூட்டமாக இருந்தது. கங்கைகொண்டான் பக்கம் போகும்போதே மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. சடசட வென்று பஸ்ஸின் கூரையில் மழை தாரையாகக் கொட்டியது. ஆட்டுக்காரர்கள் மழை யில் கோணியைத் தலைக்குப் போர்த்திக் கொண்டு மந்தையை ஓட்டிக்கொண்டு இருந்தார்கள். கங்கைகொண்டானில் கொண்டான் ஆற்றுப்பாலம் தாண்டிச் சிறிது தூரம் வந்ததுமே மழை, தூறலாக மாறிவிட்டது. கயத்தாறில் பஸ்ஸைவிட்டு இறங்கியபோது மழை வெறித்திருந்தது.

கயத்தாறு இன்னும் டவுனாகவில்லை. அந்தக் காலத்து வீடுகள் ஓட்டுக்கை சார்புகளுடன் நின்றுகொண்டு இருந்தன. ஆர்ச் வைத்துக் கட்டப்பட்ட மாடிகளுடன் கூடிய வீடுகளின் கீழே கடைகள் வந்திருந்தன. அவன் கயத்தாறுக்கு வந்து இரண்டு இரண்டரை வருஷங்கள் இருக்கும். மகேஸுடைய சின்ன மகள் கோமதியின் சடங்குக்கு வந்தது.

மகேஸ் ஆசையோடு ஓடி வந்து அவனை வரவேற்றாள். ''மதினி, பிள்ளைகள்லாம் வரலியா அண்ணே..?'' என்று கேட்டாள். அன்றைக்கு வடை வியாபாரம்போல. வீட்டுத் தின்ணைதான் கடை. மகேஸுடைய பெரிய மகள் மீனாதான் எண்ணெய்ச் சட்டிக்கு முன்னால் உட்கார்ந்து வடை சுட்டுக்கொண்டு இருந்தாள். அவனைப் பார்த்ததும் எழுந்து நின்று ''வாங்க மாமா'' என்றாள். பேச்சியப்பன் சிரித்துக்கொண்டே அவளிடம் நலம் விசாரித்தான். இரண்டு பெண்கள் வடை வாங்குவதற்காக திண்ணையில் உட்கார்ந்து இருந்தார்கள். வீடு இருட்டாக இருந்தது. மகேஸ் உள்ளே நுழைந்ததும் சுவிட்சைப் போட்டாள். டியூப் லைட் எரியவில்லை. இன்னொரு சுவிட்சைப் போட்டதும் ஒரு பல்பு எரிந்தது.

சுவரோரத்தில் அம்மா கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள். அவ்வளவு நேரமும் அந்த இருட்டுக்குள்ளேயே அவள் உட்கார்ந்து இருந்திருக்கிறாள். தன்னையும் வயசாகிவிட்டால் இப்படித்தான் ஓர் ஓரத்தில் போட்டுவிடுவார்களோ என்று நினைத்தான். அம்மாவுக்குக் கண் பார்வை மங்கலாகிவிட்டது. விளக்கு எரிவதுகூடத் தெரியுமா என்று தெரியவில்லை. சிவகாமியுடைய சித்தப்பாவுக்கு அவனுடைய வீட்டில் வைத்துதான் கண் ஆபரேஷன் நடந்தது. அரவிந்தில்தான் காட்டி ஆபரேஷன் செய்துகொண்டு போனார்.

மகேஸ் அம்மாவுக்குப் பக்கத்தில் போய் ''அண்ணன் வந்திருக்கும்மா...'' என்றாள்.

''யாரு..? பேச்சியா வந்துருக்கான்..?''

''ஆமாம்மா...''

பழங்கள் இருந்த பாலிதீன் பையை மகேஸிடம் கொடுத்துக்கொண்டே அம்மாவின் அருகே வெறும் தரையில் உட்கார்ந்து கொண்டான்.

''இதெல்லாம் எதுக்கண்ணே..?'' என்று பையை வாங்கிக்கொண்டே கேட்டாள் மகேஸ். அவளிடம் இருந்து தோசை மாவு வாசனை வீசியது.

''இருக்கட்டும்... பிள்ளைகளுக்குக் குடு...'' என்றான்.

எல்லோரையும் பேச்சியப்பன் விசாரித்தான். அம்மா அவனுடன் சிறிது பேசி விட்டுப் படுத்துக்கொண்டாள். வீட்டுக்குள் கடலை எண்ணெய் வாசனை இருந்து கொண்டே இருந்தது. அவளுடைய புருஷனைப் பற்றிக் கேட்டான்.

''தேவர்கொளத்துல ஒரு கல்யாணம். ஆட்களோட கல்யாண வேலைக்குப் போயிருக்காக...'' என்றாள். வடை வாங்க வந்த பெண்கள் போய்விட்டார்கள். வெளியே மீண்டும் தூறல் விழுகிற சத்தம் கேட்டது. வீட்டுக்குள் ஈரமாகிவிடக் கூடாது என்று மகேஸ் அடுப்படியில் இருந்து சாக்குத் துண்டை எடுத்து வந்து வாசல் படியருகே போட்டாள்.

அந்த வீட்டில்தான் அவனும் மகேஸும் பிறந்தார்கள். அவர்களுடைய அம்மாச்சி பாம்படம் போட்டிருப்பாள். மகேஸை ஆச்சி எடுத்துவைத்துக் கொஞ்சும்போது, மகேஸ் ஆச்சியுடைய பாம்படங்களை ஆட்டுவாள்.

''பாம்படத்தை ஆட்டிக் காதை அத்துப்போடாதடி... ஏஞ் சாவுச் செலவுக்கு இந்தப் பாம்படம்தான் இருக்கு. ஆச்சி செத்தா நீங்கள்லாம் நெய்ப் பந்தம் புடிக்கணும்டி... என்ன புடிப்பியா..?'' என்று ஆச்சிக்கு மகேஸைக் கொஞ்சி மாளாது. அம்மாச்சிக்கு மகேஸ் என்றால் ரொம்பப் பிரியம்.

அப்போது அங்கே பெரிய வில் வண்டி இருந்தது. அவனும் மகேஸும் லீவில் தாத்தா வீட்டுக்கு வந்தால், லீவு முடிந்து டவுனுக்குப் போகும்போது காய்கறிகள், நவதானியம் இவற்றோடுதான் பேரனையும் பேத்தியையும் வில் வண்டியில் அனுப்பி வைப்பார். நாலாவது வளவில் இருந்த கந்தப்பிள்ளை மாமாதான் வண்டியை ஓட்டுவார்.

ஒரு சிறு பிளாஸ்டிக் தட்டில் மகேஸ் இரண்டு ஆம வடைகளை வைத்து எடுத்து வந்து கொடுத்தாள். சம்பிரதாயத்துக்காக ''எதுக்கு..?''’ என்றான்.

''சாப்பிடுங்க...'' என்றாள் மகேஸ்.

மகேஸுடைய சின்ன மகள் கோமதி அடுக்களைக் கதவோரத்தில் நின்றுகொண்டு இருந்தாள்.

''பிள்ளைகள்லாம் என்ன படிக்கிது..?'' என்று கேட்டான்.

''பெரியவ பத்தோட நின்னுட்டா. இவ ஒம்பது போறா...'' என்றாள் மகேஸ். கோமதியிடம், ''நல்லாப் படி...'' என்றான். கோமதி லேசாகச் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள். வடை மொறுமொறுவென்று ருசியாக இருந்தது.

''வடை நல்லா இருக்கு...'' என்றான்.

''காலையிலயும் ராத்திரியும் இட்லி போடுவேன். சாயந்தரம் வடை, இல்லன்னா பஜ்ஜி... ஏதோ இதுலதான் வண்டி ஓடுது...''

ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். புறப்படலாம்போல் இருந்தது. மகேஸ் ராத்திரி இருந்துவிட்டுப் போகலாம் என்றாள். அவன் ஒரேயடியாக மறுத்துவிட்டுப் புறப்பட்டான். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் மகேஸும் கோமதியும் அவனை வழியனுப்ப பஸ் ஸ்டாண்ட் வரை வந்தார்கள். ரோடெல்லாம் ஒரே சகதியாகக்கிடந்தது. மழைக் காலத்தில் இப்படி வெளியூருக்குப் போய் வெகு காலமாகிவிட்டது. கோவில்பட்டியில் இருந்து பஸ் வந்தது. அதில் ஏறிக்கொண்டான்!

நன்றி – ஆனந்த விகடன்

25/12/2011

மொழிப் பயிற்சி – 71 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

சதய நட்சத்திரம் ஓர் ஆண்டில் பன்னிரண்டு. ஒரோ வழி பதின்மூன்று வருமே. இருபத்தேழு நட்சத்திரங்கள் (விண்மீன்கள்) சுழற்சிமுறையில் வருவதால் மாதா மாதம் சதயம் வருகிறதே!

என்ன சொல்ல வேண்டும்? ஆண்டுதோறும் "ஐப்பசி - சதய நட்சத்திரத்தன்று' என்று மாதத்தின் பெயரையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். ஐப்பசித் திங்கள் சதய விண்மீன் நிலவும் நாளில் இராசராசச் சோழன் பிறந்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பத்தாம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து ஆட்சி செய்த மாமன்னன் இராசராசன்.

ஒரு கட்டுரையில் படித்தோம்: ""தீக்குச்சி எரிந்து கையைச் சுட்டு - கொப்புளம் வருமளவும் தன்னை மறந்திருக்கிறது தானே எழுத்தாளன்?'' இத்தொடரில் பிழையுள்ளதா? ஆம், உள்ளது.

மறந்திருப்பவன்தானே எழுத்தாளன் என்று இருந்தால் பிழையற்று அமையும். இத்தொடரைச் சிலர் வலிந்து பேசி சரிதானே என்பர். எப்படி? தன்னை மறந்திருக்கிறது எழுத்தாளன் தன்மை- அதை உடையவன் எழுத்தாளன் என்பதை அப்படி அழகுற எழுதியிருக்கிறார் என்பார்கள். இந்த முட்டுக்கால்கள் எல்லாம் நில்லா. பிழையைப் பிழை என ஏற்பதே அழகு.

எழுத்துக்களா? எழுத்துகளா?

கள் எனும் பன்மை விகுதி சேரும்போது புணர்ச்சி விதி பொருந்தாது என்று முன்னரே நாம் எழுதியிருந்தோம். அதனால் நாள்கள், வாழ்த்துகள் என இயல்பாக எழுதுதல் நன்று எனக் குறிப்பிட்டோம். ஆயினும் வாழ்த்துகள் என வல்லொற்று மிகுந்து ஒலிப்பினும் பிழையில்லை என்பதையும் குறிப்பிட்டோம். ஆனால் "இனிப்புக்கள் வேண்டா' (பொருள் திரிபு ஏற்படும் என்பதால்) என எழுதினோம்.

வாழ்த்துகள், எழுத்துகள் என எழுதுதல் பிழை என்று கருதுவார் உளர். அவர்களுக்காக ஒரு விளக்கம். திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதன்மையாக உடையது போல' என்று உரை எழுதுமிடத்து எழுத்துக்கள் என்றாண்டிருப்பது காண்க. அன்றியும் நன்னூல் விருத்தியுரைக்கு குறிப்புரை எழுதிய பெரும்புலவர் ச.தண்டபாணி தேசிகரும் எழுத்துக்கள் என்றே எழுதியுள்ளார். தொல்காப்பியத்துக்கு சுருக்கமான உரை எழுதியுள்ள மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களும் எழுத்துக்கள் என அவ்வுரையில் எழுதியுள்ளார். இவ்வாறு எழுத்துக்கள் என்று வல்லொற்று மிகுவதற்கு முன்னோர் சான்று உண்டு.

எழுத்துக்கள் என்பது சரியென்றால் வாழ்த்துக்கள் என்று எழுதுவதும் சரிதானே? எழுத்து, வாழ்த்து இரண்டும் வன் தொடர்க் குற்றுகரங்கள். அதனால் அன்பர்களே, "எமதுள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள்' எனவும், நல்வாழ்த்துக்கள் எனவும் இருவகையானும் சொல்லலாம், எழுதலாம்.

உரையாசிரியர்களைச் சான்று காட்டியுள்ளீர்களே, மூல ஆசிரியர்கள் எப்படி எழுதியுள்ளார்கள்? எனும் ஐயம் எழும். "எழுத்தென படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப' (தொல்) கள் விகுதியே பயன்படுத்தாமல் அக்காலத்து எழுதினர். அகர முதல் எழுத்தெல்லாம் (திருக்குறள்), "உயிரும் உடம்புமாம் முப்பது முதலே' (நன்) இப்படியே மூலநூலார் யாரும் "கள்' விகுதிக்கு இடம் தரவில்லை.

"லளவேற் றுமையில் றடவும்' என்னும் நன்னூல் சூத்திரம் வழியாக லகரம், ளகரம் எனும் இரண்டு ஈறும் வல்லினம் வந்தால் வேற்றுமையில் முறையே றகரம், டகரம் என மாறுபடும் என்றறிவோம். அதனால்தான் நாள் + கள் = நாட்கள் என்று சொல்லும் வழக்கம் தோன்றியது. ஆயினும் இலக்கியச் சான்றுகள் "நாள்கள் செலத் தரியாது' என்பதுபோல் இயல்பாகவே உள்ளது. ளகரம், டகரம் ஆகவில்லை. காரணம் நாம் முன்னர் குறிப்பிட்டதேயாகும்; கள் விகுதி என்பது தனிச்சொல் அன்று.

மேற்கண்ட சூத்திரத்திற்கு உரை கண்டவர்களும் காட்டியுள்ள எடுத்துக் காட்டுகள்: கல் +குறிது = கற்குறிது

முள் + குறிது = முற்குறிது (குறிது - குறுகியது)

புல் + தரை = புற்றரை, முள் + செடி = முட்செடி என்பவற்றையும் நாம் காட்டலாம். (புல், தரை, முள், செடி - எல்லாம் தனித் தனிச் சொற்கள்)

கள் விகுதி சேரும்போதும் இடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. பற்கள், சொற்கள் எனச் சொல்லுகிறோம். (பல்+கள், சொல்+கள்). புட்கள் (புள்+கள்) பறந்தன. (புள் - பறவை) பசும் புற்கள் முளைத்தன (புல்+கள்). ஆகவே கள் ஈறு சேரும்போது திரிதல் (மாறுபடுதல்) காண்கிறோம். ஏனிந்த முரண்பாடு?

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

19/12/2011

பாரதியின் 'தராசு' அல்லது பாரதி - பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்தது எப்போது? - ஆ.இரா.வேங்கடாசலபதி

'தராசு' என்ற சொல் பாரதியோடு இணைந்ததோர் உருவகம். 1941-42இல் சுதேசமித்திரன் நாளிதழின் ஆசிரியர் ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன் அதன் வாரப் பதிப்பில் தொடர் கட்டுரை எழுத வேண்டி, என்ன எழுதலாம் என்று தயங்கிக் கொண்டிருந்தாராம். கடைசியில் அதற்குத் தராசு என்று அவர் மகுடமிட்டதாகவும், அவ்வாறு தலைப்பிட்ட உடனே, 'கலகலவென்று சிரிப்பு காதில் பட்டது. நிமிர்ந்து பார்த்தேன். அகக் கண்முன் பாரதி பிரத்தியக்ஷம் ஆனார்' என்று கூறுமளவுக்குப் பாரதியோடு இணைந்த உருவகமாகத் தராசு விளங்குகிறது. 1942இல் இக்கட்டுரைத் தொடரை ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன் தராசு என்ற தலைப்பிலேயே நூலாக்கியபொழுது எழுதிய முன்னுரையின் இறுதியில், 'பாரதியின் தராசு, (பழம்பெரும் இதழாளர் எஸ். ஜி.) ராமாநுஜலு(நாயுடு)வின் படிக்கல், இவை சஹிதமாக இன்று கடையைத் திறந்துவிட்டேன்' என்று இவ்வுருவகத்தை விரிவாக்கியிருக்கிறார் (1980களில் தமிழ்ப் புலனாய்வு இதழியலைத் தோற்றுவித்த தராசு இதழையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம்).

பாரதியோடு தராசு இவ்வளவு நெருக்கமாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பினும், இடைப்பிறவரலான சில குறிப்புகளையும் ரா.அ. பத்மநாபன் எழுதிய ஒரு கட்டுரையினையும் தவிரத் தராசு பற்றிய விரிவான ஆய்வை இதுவரை நான் கண்ணுற்றதில்லை. கவிதை மட்டுமல்ல, நவீன உரைநடையும் கைவரப்பெற்றவன் பாரதி என்பதற்குத் தராசுவும் ஒரு சான்று. பாரதியின் கூர்மையான பார்வையும், அதனை வெகுசனம் புரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படுத்தும் ஆற்றலும், நுட்பமான நகைச்சுவையும், பொருத்தமான பழமொழிகளும் மண்டிக் கிடக்கும் பிரதி 'தராசு'. இந்தப் பகைப்புலத்தில் தராசு பற்றிய விரிவான ஆய்வுக்கு முன்னோட்டமாக இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது, தராசு எழுதி, வெளியிடப்பட்ட காலம், அதன் பாடம், அதன்வழி அறியலாகும் சில சமகாலச் செய்திகள், சுதேசி இயக்கத்தின் தோல்விக்குப் பின்பான பாரதியின் கருத்துநிலை முதலானவற்றை இக்கட்டுரை முக்கியமாகக் கருத்தில் கொள்கிறது. பாரதி-பாரதிதாசன் முதல் சந்திப்பு என்ற இலக்கிய வரலாற்று முக்கியத்துவமுள்ள நிகழ்ச்சிக்கு ஆதாரமாகக் கிடைக்கும் ஒரே சமகாலச் சான்று என்பதாலும் தராசுவின் காலக் கணிப்பு இன்றியமையாததாகிறது.

காலம்

சுதேசமித்திரன் நாளேட்டில் தராசு தொடராக வெளிவந்தது என்பது பொதுவாக அறியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படும் செய்தி. 'தராசு என்ற தலைப்பின் கீழ் பாரதியார் பல வியாசங்கள் எழுதினார். புதுவையிலிருந்து மித்திரனுக்கு வழங்கினார்' என்று ஸி.ஆர். ஸ்ரீநிவாஸனும்குறிப்பிடுகிறார். ஆனால் சுதேசமித்திரன் இதழிலிருந்து தொகுக்கப்படாத பாரதி எழுத்துகளைத் தொகுத்து, தொகுக்கப்பட்ட படைப்புகளுக்கு முதல் வெளியீட்டு விவரங்களையும் வழங்கிய பெ. தூரனின் பாரதி தமிழ் (1953) நூலில் தராசுவின் முதல் வெளியீடு பற்றிய குறிப்புகள் இல்லாதது வியப்புக்குரியது.

இருப்பினும், பாரதி காலமான ஓராண்டுக்கு முன், நவம்பர் 1920இல் 'சுதேசமித்திரன் ஆபீஸ்' வெளியிட்ட 'கவிராயர் சுப்பிரமணிய பாரதியார் எழுதிய அநேக விஷயங்கள் அடங்கிய' கதாமாலிகா என்ற நூலில் தராசுவின் கடைசிப் பகுதி (14) வெளிவந்துள்ளது. எனவே, சுதேசமித்திரனில்தான் தராசு தொடராக வெளிவந்தது என்பதில் ஐயமில்லை. மேலும், இதனைக் 'காளிதாஸன்' என்ற தம் புனைபெயரிலேயே பாரதி வெளியிட்டிருக்கிறார் என்பதும் கதாமாலிகாவிலிருந்து தெரிகிறது. நூலுக்குள்ளேயும் 'ஆஹா, காளிதாஸா, நல்ல கேள்வி கேட்டாய்! (ப. 63) என்றே தராசு, கதைசொல்லியை விளிக்கிறது (ப. 42). தராசுக் கடையில் நிகழும் உரையாடல்களிலும் 'காளிதாஸன்' ஒரு முக்கிய உறுப்பினனாகவே விளங்குகிறான்; 'தராசுக் கடை ஐயர்' என்றும்கூடச் சுட்டப்பெறுகிறான்.

இப்பொழுது நமக்குக் கிடைக்கப்பெறும் தராசுவின் பாடம் 1928இல் பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டது. 'பாரதி பிரசுராலயம்' என்பது பாரதியின் தம்பி சி. விசுவநாதன் வேறு இரண்டு பாரதி அன்பர்/உறவினர் உதவியுடன் தொடங்கிய பதிப்பகமாகும். பாரதி மறைந்த இரண்டொரு ஆண்டுகளில் தொடங்கப்பட்ட செல்லம்மா பாரதியின் பதிப்பகமான 'பாரதி ஆச்ரமம்' தோல்வியடைந்தபின் தொடங்கப்பட்ட பாரதி பிரசுராலயமே பாரதியின் எழுத்துகளைப் பெருமளவில் முதல் முறையாக நூலாக வெளியிட்டது. பாரதி பிரசுராலயத்தின் தராசு பதிப்பில் பதிப்புரை எதுவும் இல்லாததால் எதன் அடிப் படையில் நூல் வெளியிடப்பட்டது என்ற செய்தியை அறிய இயலவில்லை. ஏற்கனவே அச்சான நூல்களை மறுஅச்சிட்டதோடு, பல்வேறு இதழ்களில் வெளிவந்த படைப்புகளைப் பாரதியின் கோப்புகளிலிருந்தும் பிறவற்றைக் கையெழுத்துப்படிகளிலிருந்தும் வெளியிடுவதுமே பாரதி பிரசுராலயத்தின் நடைமுறையாக இருந்திருக்கிறது. தராசுவின் வடிவத்தை நோக்க, அது பத்திரிகையில் தொடராக வெளிவந்தது என்பது கண்கூடு. புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிவந்த My Journal of Thoughts and Deeds என்ற குறிப்பேட்டில் தாம் எழுதிவந்தவற்றின் பட்டியலில் தராசுவைக் குறிப்பிட்டிருக்கிறார். என்பதையும் கண்டறிய வேண்டியுள்ளது. இச்செய்திகளிலிருந்து இது நூலாகக் கருக்கொள்ளப்படவில்லை என்று உணர முடியும். அச்சிட்ட செய்தித்தாள் நறுக்குகளிலிருந்தே பாரதி பிரசுராலயம் தராசுவை வெளியிட்டது என்பதில் தவறில்லை. நூலின் முதல் பத்தியில், சில தொடர்கள்/வரிகள் இல்லை என்பதைக் காட்டும் புள்ளிகள் இடம்பெற்றிருப்பதும் சிதிலமடைந்த செய்தித்தாள் நறுக்குகளே மூலப்படி என்பதைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

பருவ இதழியலில் 'பத்தி எழுத்து' (column writing) என்ற வகையைச் சார்ந்தது தராசு. ஒரு குறிப்பிட்ட பார்வை அல்லது நிலைப்பாட்டிலிருந்து அவ்வப்போது நிகழும் செய்திகளைப் பற்றிக் கருத்துரைப்பது இதன் தன்மை. புனைபெயரில் பத்தி எழுதும்போது அதற்கேற்ப ஓர் ஆளுமையை அமைத்துக்கொண்டு அந்த அமைதிக்கேற்பப் பத்தி எழுதப்படுவதும் உண்டு. தராசு இவ்வகையைச் சார்ந்தது. அக்காலகட்டத்தில் சுதேசமித்திரன் போன்றதொரு நாளேட்டிலேயே இத்தன்மைத்தான ஒரு வடிவத்தைப் பாரதி கையாண்டிருக்க இயலும். தராசுவிலேயும்கூட இரண்டொரு இடங்களில் பாரதி சுதேசமித்திரனைக் குறிப்பிடுகின்றான்.

எக்காலப் பகுதியில் தராசு தொடராக வெளியானது என்பது அடுத்த கேள்வி. அகச் சான்றுகளிலிருந்தே இதைக் கணக்கிட வேண்டியுள்ளது.

1907ஆம் ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் நின்றுபோன பாரதியாரது கட்டுரைகள் சுதேசமித்திரனில் 1915ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்தான் மறுபடியும் வெளிவரலாயின. 1915 ஜூன் 15இல் 'எதிர் ஜாமீன்' என்ற கதை வெளியாயிற்று. பிறகு அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் 'கிச்சடி'யைப் பார்க்கிறோம். 1916 பிப்ரவரியிலிருந்து தொடர்ந்து கட்டுரைகள் வர ஆரம்பிக்கின்றன.

என்கிறார் பெ. தூரன். (ஆயினும் முன்பே குறிப்பிட்டவாறு தராசு பற்றிய எந்தக் காலப் பதிவையும் அவர் வழங்கவில்லை.)

பல இடங்களில் முதல் உலகப் போரைப் பற்றிக் குறிப்பிடுவதால் 'தராசு' 1914-1918 என்ற பகுதியில் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.

'சண்டை சமயத்தில் ராஜ்ய விஷயங்களைப் பற்றி....' (ப. 21)

'ஐரோப்பாவிலே சண்டை எப்போது முடியும்?...' (ப. 38)

'ஐரோப்பா யுத்தத்தைப் பற்றியது'. (ப. 51)

'சண்டையினால் கப்பல்களின் போக்குவரவு சுருங்கிவிட்டது' (ப. 61)

'சண்டை முடிகிறவரையிலும் ராஜாங்க விஷயமான வார்த்தை சொல்லுவதிலே தராசுக்கு அதிக ருசி ஏற்படாது' (ப. 72)

சென்னை ஒய்.எம்.சி.ஏ.வில் காந்தி ஆற்றிய உரை பற்றிய குறிப்பு 12ஆம் இயலில் உள்ளது. இது 27 ஏப்ரல் 1915இல் நிகழ்ந்ததாகும். அதே இயலில் அகமதாபாதில் காந்தி ஸத்யாக்கிரஹ ஆசிரமம் ஏற்படுத்திய செய்தியும் உள்ளது. சபர்மதி ஆசிரமம் 20 மே 1915இல் தொடங்கப்பட்டதாகும்.

புதுக்கோட்டை மன்னர் ஓர் ஆஸ்திரேலியப் பெண்ணை மணம் புரிந்ததைப் பற்றி 3ஆம் இயல் குறிப்பிடுகிறது. இத்திருமணம் நிகழ்ந்தது 10 ஆகஸ்டு 1915இல்.

தராசுவின் இரண்டாம் இயல் 'பம்பாயில் நடக்கப் போகிற காங்கிரஸ் ஸபை' பற்றிக் குறிப்பிடுகிறது. எனவே டிசம்பர் 1915க்குச் சில மாதங்களுக்கு முன் இது எழுதப்பட்டதைக் காட்டுகிறது.

அ. மாதவையா செய்யூரிலிருந்ததைப் பற்றிய குறிப்பும் (ப. 9) உள்ளது. அவருடைய மகன் மா. கிருஷ்ணனின் குறிப்பிலிருந்தும் இது 1915-16ஆக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

கடைசி இயலில் அன்னி பெசண்ட் உதகைக்குள் சிறைவைக்கப்பட்டதைப் பற்றிய குறிப்பு உள்ளது. இது நிகழ்ந்த காலம் 1917 ஜூன் 16 முதல் செப்டம்பர் 5 வரையிலுமாகும்.

இவற்றிலிருந்து தராசு எழுதப்பட்ட காலம் 1915 இடைப்பகுதியிலிருந்து 1917 இடைப்பகுதிவரை என்று துணியலாம். ஆனால் இதையும் சிறிது தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இன்று படிக்கக் கிடைக்கும் தராசு நூலின் பெரும் பகுதி (14இல் 12 இயல்கள்) 1915க்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

நூலின் ஈற்றயல் இயல் (13) 'சில தினங்களாக நமது தராசுக் கடையில் வியாபாரம் சரியாக நடக்கவில்லை' (ப. 60) என்று தொடங்குகின்றது. கடைசி இயல் 'தராசுக் கடையை நெடுநாளாக மூடிவைத்துவிட்டேன்' (ப. 66) என்ற பீடிகையுடனேயே தொடங்கி, 'தராசுக் கடை என்பதென்ன? பத்திரிகை படிப்போர் சிலருக்கு ஞாபகமிருக்கலாம். ஞாபகம் இல்லாவிட்டாலும் பெரிதில்லை' (ப. 66) என்று பாரதி தொடர்கிறான். இதில்தான் அன்னி பெசண்ட்டின் சிறைவாசம் பற்றிய குறிப்பும் உள்ளது. இதிலிருந்து கடைசி இயல் / இயல்கள் மட்டும் 1917இன் இடையில் வெளிவந்திருக்கலாம் - ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு.

இன்று கிடைக்கும் தராசுவின் பாடத்தில் சில இயல்கள் வரிசை மாறி முன்பின்னாக இருக்கவும் வாய்ப்புண்டு. சுதேசமித்திரன் இதழ்கள் முழுவதுமாகவோ, பாரதியின் கோப்புகளோ கிடைத்தால்தான் இது பற்றிய தெளிவு ஏற்படும்.

பாரதி - பாரதிதாசன் சந்திப்பு

தராசுவின் காலம் பற்றிய கணிப்பு வேறு ஒரு முக்கிய இலக்கிய வரலாற்றுச் செய்தியைத் தீர்மானிக்க இன்றியமையாததாகும். பாரதியைத் தமது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கர் மணவிழாவில் சந்தித்ததாகப் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பு 1908இலேயே நேர்ந்துவிட்டது என்ற கருத்து பாரதிதாசன் ஆர்வலர்களிடையே பொதுவாக நிலவுகிறது. மன்னர்மன்னன், ச.சு. இளங்கோ போன்றோர் இக்கருத்தைக் கொண்டுள்ளனர். பாரதி-பாரதிதாசனுக்கிடையேயான உறவைச் சுட்டும் 'பாரதியோடு பத்தாண்டுகள்' என்ற தொடர் பாரதியின் புதுவை வாழ்க்கையினையே (1908-1918) கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இரா. இளவரசு பிற சூழல்நிலைச் செய்திகளைக் கொண்டு 1910இன் இறுதி அல்லது 1911இன் தொடக்கத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் எனத் துணிந்துள்ளார்.

பாரதிதாசனைப் பற்றிப் பாரதி (பெயர் சுட்டாமலாயினும்) குறிப்பிடும் ஒரே இடம் தராசுவில்தான் பயில்கின்றது என்பது தமிழுலகம் நன்கு அறிந்த செய்தி. இருப்பினும் இதன் சுவை கருதியும் முக்கியத்துவம் கருதியும் அதனை இங்கு முழுமையாகக் காண்போம். (காண்க: பெட்டி)

பாரதிதாசனின் விருப்பத்திற்கிணங்க அவர் பெயரைச் சுட்டாது, சாதியைக் கொண்டே தராசு அவரை அடையாளப்படுத்துகிறது. மேலும் அவருக்கு இங்கிலீஷ் தெரியாது என்பதும் தெளிவுறுத்தப்படுகிறது. அதுவரை 'நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம். அது அத்தனை ரஸமில்லை' என்று அவர் விழிக்கிறார். அதன்பின் 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்ற புகழ்பெற்ற பாடலைப் பாரதிதாசன் பாடுகிறார். யாரிடம் தமிழ் படித்தார் என்று கேட்டுவிட்டு, 'சரிதான், ஆரம்பம் குற்றமில்லை' என்கிறது தராசு. கடைசியில் பாரதிதாசன் பாரதியை 'குரு' என ஏற்று வணங்கியதும், 'எழுக! நீ புலவன்!' என்று வாழ்த்தியபோதிலும், பாரதிதாசன் ஒரு பெருங்கவிஞராக மலரவிருக்கிறார் என்பதைப் பாரதி முன்னுணர்ந்ததாகக் கொள்ள தராசு இடம் தரவில்லை.

பாரதி - பாரதிதாசன் முதல் சந்திப்புப் பற்றி இன்று கொள்ளப்படும் காலக் கணிப்பைத் 'தரா'சின் பின்புலத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இச் சந்திப்புப் பற்றிய ஒரே சமகாலப் பதிவு தராசுதான் என்னும்போது, இதனையே முதன்மைச் சான்றாகக் கொள்ள வேண்டியுள்ளது. இரு பெருங் கவிஞர்களின் சந்திப்பைப் பற்றிப் பாரதி ஆய்வாளர்கள் அதிகம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பாரதி ரமணரைச் சந்தித்தாரா இல்லையா என்பது போன்ற முதன்மையற்ற செய்திகளே அவர்களை ஆட்கொண்டுள்ளன. பாரதிதாசன் ஆய்வாளர்களோ தராசின் காலத்தைப் பற்றி ஆராயாமல் வேறு பிற்சான்றுகளைக் கொண்டுள்ளது வியப்புக்குரியது.

பாரதியைப் பற்றிப் பல பாடல்களையும் கட்டுரைகளையும் பொழிவுகளையும் இயற்றிய பாரதிதாசன் தராசுவில் இடம்பெற்ற நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடாதது ஏன் என்பதும் புலப்படவில்லை. பாரதியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பதற்காகப் பாரதிதாசன் எழுதிய திரைக்கதையிலும் நாடகத் தன்மையுடன் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ற இந்நிகழ்ச்சி இடம் பெறாதது ஏன் என்பதும் தெரியவில்லை.

ஆயினும் தராசுவின் ஆதாரத்தைக் கொண்டு இரு பெருங்கவிஞர்களின் முதல் சந்திப்பு 1915இன் இடைப் பகுதியில் நிகழ்ந்தது என்று கொள்வதே இன்றைய நிலையில் பொருத்தமானது.

நோக்கமும் அமைப்பும்

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் அன்றாடம் நிகழும் செய்திகளைப் பற்றித் தன் பார்வையில் கருத்துரைப்பதே பாரதியின் நோக்கம்.

பலவிதமான செய்திகளையும் கலந்து பேச நேரிடுமாதலால் 'பலசரக்குக் கடை' என்று மகுடமெழுத உத்தேசித்தேன். அது அதிக விளையாட்டாக முடியுமாதலால் விட்டுவிட்டேன். எனக்கும் ஒரு செட்டியாருக்கும் சினேகம். அவரைப் போல் நாம் ஒரு பலசரக்குக் கடை வைத்தால் அவருக்குக் கோபம் ஏற்படுமென்று கருதி அந்த மகுடத்தை விலக்கினேன். ...... தராசு என்று பொதுப்படையாகப் பெயர் வைத்திருக்கிறேன். எல்லா வஸ்துக்களையும் நிறுத்துப் பார்க்கும். எல்லாச் செட்டியார்க்கும் இதனால் உதவியுண்டு

என்ற பீடிகை தொடக்கத்திலேயே உள்ளது.

மூன்றாம் இயலில் புதுக்கோட்டை மன்னரின் திருமணம் பற்றிக் கேட்கும்போது, 'பெரிய மூட்டை; சீமை வியாபாரம்; நாட்டு வியாபாரத்துக்குத்தான் நம்முடைய தராசு உதவும். வேறு கடைக்குப் போம்' என்று பாரதி விளையாட்டான தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறான்.

'எல்லாம் தெரிந்து எந்தக் கேள்வி கேட்டாலும் விடை சொல்லக்கூடிய மாயத் தராசு' என்றும் நூலிடையில் ஒருவர் பாராட்டுகிறார்.

மற்றுமோர் இடத்தில் (இயல் 6 தொடக்கத்தில்) 'இங்கு நீடித்த விலைமதிப்புள்ள ஸாமான் மாத்திரமே நிறுக்கப்படும். விரைவில் அழிந்துபோகக்கூடிய, விலை குறைந்த சாமான்கள் நிறுக்கப்பட்ட மாட்டா' என்று விளம்பரம் செய்யப்படுகிறது.

தராசுவின் அமைப்பு கதைசொல்லியும் தராசும் உடனிருக்க வெவ்வேறு வகையான ஆள்கள் உள்ளே நுழைந்து கேள்விகள் கேட்கவும் கதைசொல்லியின் கூற்றுகளை இடைமறித்தும் இடையிட்டும் தராசு கருத்துரைப்பதாகவும் அமைந்துள்ளது. தராசு கருத்துரைப்பதற்கு வாய்ப்பாகவே கதைசொல்லியின் கூற்றுகள் அமைகின்றன. கிரிக்கெட்டிலிருந்து ஓர் ஒப்புமையைக் கூற வேண்டுமென்றால் தராசு பவுண்டரி அடிப்பதற்கு வாகாகப் பந்து வீச வேண்டிய பொறுப்பு கதைசொல்லிக்கு உரியது. தராசுவின் ஆளுமை இதில் முக்கியமானது. சடப்பொருளாக இருப்பதால் அதனால் சமூகத்தின் எந்த ஒரு பிரிவையும் சாராமல், விலகி நின்று கருத்துச் சொல்லும் நிலைப்பாட்டுப் புள்ளி தராசுக்கு வாய்க்கிறது. ஆயினும் அதற்குரிய கருத்தியல் நிலை உண்டு என்பதையே அது வெளிப்படுத்தும் கூற்றுகள் காட்டுகின்றன. அதற்கென ஒரு மனித உருவம் இல்லாததால் வாசகனின் கற்பனை விரிவுகொள்வதற்கும் கருத்துரைப்பவரின் சார்பைக் கணக்கிலெடுக்காமல் கருத்தில் கவனம் செல்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்துகிறது. தராசு இருக்கும் அவையில் வெவ்வேறு ஆட்கள் வரவும், அவர்கள் கேட்கின்ற கேள்விக்கேற்பத் தராசு கருத்துச் சொல்வதுமாக நூல் அமைந்துள்ளது.

தராசு நீக்கப்பட்டால் இந்த அவை என்ன ஆகும் என்பதற்கு உதாரணமாகப் பாரதியின் 'உல்லாஸ சபை' கட்டுரை (சுதேசமித்திரன், 29 மார்ச் 1916) உள்ளது. தராசுவில் நடமாடும் ஜிந்தாமியான் ஸேட், எலிக்குஞ்சு செட்டியார், காளிதாசன் ஆகியோரும் இவ்வுல்லாஸ சபையில் அடங்குவர். தராசுவின் மையமான முக்கியத்துவத்தை தனது இன்மையின் மூலம் 'உல்லாஸ சபை' கட்டுரை எதிர்மறையாகக் காட்டுகிறது.

இங்குச் சமூகத்தின் அலகுகள் பற்றிய தராசுவின் பார்வையைக் குறிப்பிட வேண்டும். தராசுவில் இடம்பெறும் நபர்கள் எல்லாம் சாதிய அடையாளங்களோடுதான் இடம்பெறுகின்றனர் என்பது மட்டுமல்லாமல் சாதிய அடையாளத்தோடு மட்டுமே இடம்பெறுகின்றனர். செட்டியாருக்குக் கேலிப்பெயராக 'எலிக்குஞ்சு' என்ற அடை அமைகின்றது. பாரதிதாசன் பெயர்கூட இல்லாமல் 'கைக்கோள ஜாதி' எனச் சுட்டப்படுகிறார். தன்னைத் தானே 'தராசுக் கடை ஐயர்' என்றும் பாரதி கூறிக்கொள்கிறான். பிராமணப் பிள்ளை, செட்டிப் பிள்ளை என்ற சுட்டுகள் விளங்குகின்றன. இரண்டோ ரிடத்தில் மிக நுணுக்கமாகவே சாதியப் பிரிவுகள் பேசப்படுகின்றன. 'தம்பி, அய்யங்காரே உன் பெயரென்ன?' என்று தராசு கேட்டதும், 'லஷ்மி வராஹாசார்யர்; வடகலை; ஸ்வயமாசார்ய புருஷர் வகுப்பு' எனப் பதில் வருகிறது. இவ்வுரையாடல் நிகழும் தருணத்தில் நுழையும் ஒரு பாட்டி தெலுங்கு பிராமணர்களிலே 'நியோகி என்ற பிரிவைச் சேர்ந்தவள்' என்று அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

இவர்களெல்லாருமே மேல்சாதியினராகவும் இடைநிலைச் சாதியினராகவும் இருக்கின்றனர். கீழ்நிலைச் சாதிகள் யாருமே இல்லை. 'ஜிந்தாமியான் சேட்' மட்டும் ஒரு முஸ்லிம் என்ற குறிப்பு 'உல்லாஸ சபை'யில் காணப்படுகிறது. 'நம்ம குரான்' என்று கூறுவதோடு, 'உங்க ஹிந்துக்களுடைய நாலு வேதத்துக்குப் பெயர் என்ன?' என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார். 'பாட்டி' என்ற நிலையில் ஒரேயொரு பெண் மட்டுமே தராசுக் கடையில் பங்குகொள்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் உருவாகிவந்த பொதுக்களத்தின் (public sphere) உருவகமாகத் தராசுக் கடையைக் கொள்ள இயலும்.

அரசியல்

பாரதியின் எழுத்துகளில் பொதுவாக இடம்பெறும் கிழக்கு வூ மேற்கு என்ற இருமை எதிர்வு 'தராசு'விலும் வலுவாக இடம்பெறுகிறது. 'கிழக்கு' என்றால் 'பரமார்த்திகம்', 'மேற்கு' என்றால் 'லௌகீகம்' என்ற கீழைத்தேயவியல் வகைமாதிரி (Orientalist stereotype) பாரதியிடம் உரம் பெற்றுள்ளது.

'தமிழ்ச் சாதி' பாடலில் இடம்பெறும் மேலை மருத்துவம் x சுதேச மருத்துவம் என்ற உருவகங்களின் வழியாக வெளிப்படும் நவீன இந்திய அறிவாளர்களின் மரபுக்கும் மாற்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஈரடி நிலை தராசுவில் சுதேச மருத்துவத்தின் சார்பாகத் தீர்க்கப்படுகிறது.

வேதாந்தத்தைப் பின்பற்றி ஒழுகியதால் இந்தியாவுக்கு ஏற்பட்ட உலகியல் தாழ்வுகளைக் கண்டிக்கும் அதே வேளையில் இந்திய வைதீக மரபைப் பாரதியால் விட்டுக்கொடுக்க முடியவில்லை என்பதையும் தராசுவில் காண்கிறோம்.

அடிப்படை மாற்றங்களின் மூலமாகவோ இந்து சமயத்தின் ஆதாரக் கூறுகளை விமரிசனம் செய்வதன் மூலமாகவோ அல்லாமல் சீர்திருத்தங்களின் மூலமாக மட்டுமே இந்தியச் சமுதாயத்தைத் திருத்திவிட முடியும் என்ற நம்பிக்கையும் பாரதியிடம் தொழிற்படுகின்றது.

ஆங்கிலத்திற்கு எதிராகத் தமிழையும் தமிழ்க் கலைச் சொல்லாக்க முயற்சிகளையும் வரவேற்பதோடு, 'சொந்த பாஷை கற்றுக்கொள்ளாதவர்கள் (அடுத்த பிறவியில்) குரங்குகளாகப் பிறப்பார்கள்' என்று சபிக்கும் பாரதியின் தமிழ்ச் சார்பு, வடமொழியோடு ஒப்பிடுகையில் அவ்வளவு துலக்கமாக வெளிப்படவில்லை.

1915-16 உலகப் போர் உச்சத்திலிருந்த காலம். 'சென்ற சுபகிருது வருஷத்திலே ஒரு புதிய உணர்ச்சி உண்டாயிற்று' என்று பாரதி உரைத்த சுதேசி இயக்கம் ஒரு பெரும் வீச்சுக்குப் பிறகு 1911-12 அளவில் ஒடுங்கிவிட்டது. சுதேசி இயக்கத் தலைவர் பலர் சிறையிலிருக்கவும், ஆஷ் கொலைக்குப் பிறகு ஒரு பெரும் அச்சமும் நிலவியது. பாரதி புதுவையில் கரந்துறை வாழ்க்கை நடத்திவந்தான். தலைமேல் கத்தி என்பதுபோல் அச்சத்திலேயே அவன் வாழும் கட்டாயம் பல ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. (தராசுக் கடைக்கும்கூட ஒரு போலீஸ் உளவாளி வந்துபோகிறான்!) அரசியல் இயக்கம் நடைபெறாத காலம் இது.

இக்கட்டத்தில் எழுதப்பட்ட தராசுவிலும் இதன் வெளிப்பாடுகள் காணக் கிடைக்கின்றன. அரசியல் பற்றி எழுதக் கூடாது என்ற முன்நிபந்தனையின் பேரிலேயே மீண்டும் சுதேசமித்திரனில் எழுதும் வாய்ப்பு பாரதிக்கு 1915இல் வழங்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இது உண்மையாகவே இருக்கலாம். இதற்கேற்பவோ என்னவோ 'அரசியல் பேசமாட்டேன்' என்று பல இடங்களில் தராசு உறுதிபடக் கூறுகிறது.

ஊன்றிப் பார்க்கையில் உலகப் போர் என்பது இதற்கோர் முகாந்திரமாகவே இருக்கிறது. 'சண்டை சமயத்தில் ராஜ்ய விஷயங்களைப் பற்றி யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசாமலிருப்பதே நாம் இந்த ராஜாங்கத்தாருக்குச் செலுத்த வேண்டிய கடமையென்று... சொல்வது முழுதும் நியாய மென்பதை அங்கீகரித்து, நம்மால் கூடியவரை இந்த ராஜாங்கத்தாருக்குத் திருப்தியாகவே நடந்துவிட்டுப் போகலாமென்று' (ப. 21) தராசு தொடக்கத்தில் எடுக்கும் முடிவு, கடைசிப் பத்திவரை (ப. 72-73) நீடிக்கிறது:

'தராசு ராஜாங்க விஷயத்தை கவனியாது. சண்டை முடிகிறவரையிலும் ராஜாங்க விஷயமான வார்த்தை சொல்லுவதிலே தராசுக்கு அதிக ருசி ஏற்படாது. சண்டை பெரிது; நம்முடைய கடை சாதாரணம்; ராஜாங்க விசாரணைகளோ மிகவும் கடுமை.'

பாரதியின் பலவீனமாக அல்லாமல் இந்தியத் தேசியத்தின் ஒரு பெரும் பலவீனமாக இதைப் பார்க்கலாம். அரசியல் விடுதலையைச் சமூக விடுதலையோடு இணைத்து இயக்கம் நடத்தாத நிலையை இது காட்டுகிறது. இதனால் அரசியல் இயக்கம் வலுவிழக்கும் தருணங்களிலேயே சமூகச் சீர்திருத்த விஷயங்களில் அதன் கவனம் செல்கிறது. அரசியல் இயக்கம் தொய் வடைந்த தருணத்தில் இயற்றப்பட்ட தராசுவும் இதைக் காட்டுகிறது. அரசியல் இயக்கம் உச்சத்திலிருக்கும் வேளையிலோ 'ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி'தான்!

'எழுக! நீ புலவன்!' - பாரதி

இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார்; கைக்கோள ஜாதி; ஒட்டக்கூத்தப் புலவர்கூட அந்தக் குலந்தானென்று நினைக்கிறேன்.

இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார். ஆதலால் வெளிப்படுத்தவில்லை.

தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது. "இப்படி ஒரு கவிராயன் வந்தால் எனக்கு ஸந்தோஷம். எப்போதும் வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?" என்றது. "கவிராயரே, என்ன விஷயம் கேட்க வந்தீர்?" என்று தராசு கேட்டது.

"எனக்குக் கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை. அத்தகுதி பெற முயற்சி செய்து வருகிறேன். அந்த விஷயமாகச் சில வார்த்தைகள் கேட்க வந்தேன்" என்று கவிராயர் சொன்னார். "இதுவரை பாடின பாட்டுண்டானால் சொல்லும்" என்று தராசு கேட்டது.

"இதுவரை நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம். அது அத்தனை ரஸமில்லை" என்று சொல்லிக் கவிராயர் விழித்தார்.

"மாதிரி சொல்லும்" என்றது தராசு.

புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.

"காளை யொருவன் கவிச்சுவையைக் - கரை

காண நினைத்த முழு நினைப்பில் - அம்மை

தோளசைத் தங்கு நடம் புரிவாள் - இவன்

தொல்லறி வாளர் திறம் பெறுவான்.

ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா! - தம்பி

ஏழு கடலவள் மேனியடா!

தங்கும் வெளியினிற் கோடியண்டம் - எங்கள்

தாயின் கைப் பந்தென வோடுமடா!

கங்குலில் ஏழு முகிலினமும் வந்து

கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ ?

மங்கை நகைத்த ஒலியதுவாம் - அவள்

வாயிற் குறுநகை மின்னலடா!"

தராசு கேட்டது: "புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?"

கவிராயர்: "இன்னும் படிக்கவில்லை; இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்."

தராசு: "சரிதான் ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்தியும் அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமையேறும்."

இங்ஙனம் வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கையில் சீட்டிக் கடை ஸேட் வந்தார். . . .

கவிராயர் தராசை நோக்கி, "நம்முடைய ஸம்பாஷணைக்கு நடுவிலே கொஞ்சம் இடையூறுண்டாயிற்று" என்றார்.

தராசு சொல்லுகிறது: "உமக்கும் அதுதான் காணும் வார்த்தை. நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது. 'மஸ்லின்' நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்."

அப்போது புலவர் தராசை நோக்கி: "நீயே எனது குரு" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்.

தராசு: "எழுக! நீ புலவன்!" என்றது.

நன்றி - காலச்சுவடு 2006

18/12/2011

தனி ஒருவனுக்கு – புதுமைப்பித்தன்

அம்மாசிச் சாம்பான் பிறப்பில் பிச்சைக்காரன் அல்ல. இவன் பிறந்த மூன்றாவது மாதத்திலேயே இவனுடைய தகப்பனார் பாவாடை காலமாகி விட்டான். வீட்டிலிருந்த சொத்தை (கலப்பை முதலியன) சின்னக் கடன் விஷயங்களுக்கு, சேரி பாபத்திலும், பண்ணை சுப்பராயப் பிள்ளை பற்றிலுமாக பறிமுதல் செய்யப்பட்டது.

இவனுடைய வளர்ச்சிப் படலத்தைப் பற்றிய பிள்ளைத் தமிழ் யாரும் எழுதிவைக்காமல் போய்விட்டதால் இருபது வயது வரைமட்டுமுள்ள சரித்திரக் குறிப்புகள் கிடைக்கவில்லை. கொஞ்சநாள் பண்ணையில் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிகிறது. பிள்ளையவர்கள் மனமுவந்து கொடுத்த சிறிய கடன் தொகையைக் கொண்டு கலியாணமும் நடந்தது. நடந்த மூன்றாம் மாதம் இவன் தாய் பரகதி - பறையருக்கு பரகதியடைய உரிமையுண்டோ என்னவோ - செத்துப் போய்விட்டாள்.

என்ன காரணத்தாலோ இவனது பெண்டாட்டியும் தாய் வீடு நோக்கிக் கம்பி நீட்டி விட்டாள். ஆக இம்மாதிரி தொல்லைகளால் பழைய கடனும் கொடுக்க முடியாமல் புதிய கடனும் வாங்க மார்க்கமில்லாமல் இருக்கும் பொழுது ஒரு ரஸவாத பண்டிதர் - சாமியார் - அங்கே வந்து சேர்ந்தார்.

சாமியாருக்கும் அம்மாசிக்கும் எப்படியோ பழக்கம் ஏற்பட்டது. கேட்பானேன்; பிள்ளையவர்கள் வீட்டுப் பித்தளை செம்புப் பாத்திரங்களில் கை வைத்தால், அவ்வளவையும் சுவர்ணமாக்கித் தந்து விடுவதாகச் சுவாமியார் வாக்களித்தார்.

மொழிப் பயிற்சி – 70 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

ஏவலும் வியங்கோளும்:

வா, செய், படி, நில் - ஏவல் (கட்டளை)

வருக, செய்க, படித்திடுக, நிற்க - வியங்கோள்

இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து ஏவல் என்பது ஆணையிடுவதாகவும், வியங்கோள் என்பது வேண்டுகோளாகவும் இருக்கின்றன என அறிந்து கொள்ள முடியும்.

இந்த இரண்டும் இல்லாது, நாம் புதிதாகச் சொல்லிவரும் சொற்களான வரவும்,செய்யவும், படிக்கவும், நிற்கவும் என்பன போன்றவை பிழையானவை என்று முன்னரே எழுதியிருக்கிறோம். "உம்' என்பது இணைப்பு இடைச்சொல். இதனைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம்.

ஏவலுக்கும், வியங்கோளுக்கும் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகள் வினைமுற்றுகளாகும். ஏவல் வினைமுற்றுக்கும், வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி பள்ளியில் படித்திருக்கக்கூடும்.

ஏவல் வினைமுற்று, ஒருமை,பன்மை, வேறுபாடு உடையது.

(எ-டு) நீ வா, நீங்கள் வாருங்கள்

ஏவல் வினைமுற்று முன்னிலை இடத்தில் மட்டும் வரும்.

(எ-டு) நீ செய், நீங்கள் நில்லுங்கள் என்பதன்றி நான், நாங்கள் எனும் தன்மையோடும், அவன், அவள், அவர்கள் எனும் படர்க்கையோடும் இணையாது.

ஏவல் வினைமுற்று கட்டளைப் பொருளில் மட்டும் வரும்.

(எ-டு) ஓடு, ஓடாதே, அடி, அடிக்காதே

வியங்கோள் வினைமுற்று ஒருமை பன்மையில் வேறுபடாது.

(எ-டு) அவன் வாழ்க!, அவர்கள் வாழ்க!

வியங்கோள் வினைமுற்று மூவிடங்களிலும் வரும்.

(எ-டு) நாம் வாழ்க (தன்மை), நீவிர் வாழ்க (முன்னிலை), அவர்கள் வாழ்க! (படர்க்கை)

வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் எனும் பொருள்களில் வரும்.

(எ-டு) வாழ்க, வெல்க (வாழ்த்துதல்), ஒழிக, அழிக (வைதல்), வருக, உண்க (வேண்டுதல்), செய்க, நிற்க (விதித்தல்)

எதற்கு ஐயா இந்த விளக்கம் எல்லாம் என்று வினவுகிறீர்களா? நாம் பிறரை வாழ்த்துவதானாலும், வைவதானாலும், வேலை வாங்குவதானாலும், வேண்டுவதானாலும் இலக்கணப்படிப் பேசுவோமே! பேசினால் நல்லதுதானே என்னும் நோக்கத்தால் இவற்றை எழுதினோம். வியங்கோள் வினைமுற்று க, இய, இயர் என்னும் விகுதிகளைக் கொண்டு முடியும் என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது.

(எ-டு) வாழ்க, வாழிய, வாழியர் (வாழ்த்துப் பொருளில் மட்டுமே)

திருக்குறளில் பல அறநெறிகளைச் சொல்லியுள்ள திருவள்ளுவர் ஏவல் வினையில் பெரிதும் சொன்னதில்லை. எல்லாம் வியங்கோளாகவே காண்கிறோம்.

"கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக' (கற்க, நிற்க)

"எனைத்தானும் நல்லவை கேட்க

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க

செய்க பொருளை; அஞ்சுவது அஞ்சுக'

இப்படி நிரம்ப எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

ஒüவையின் ஆத்திச்சூடியில் இதற்கு நேர்மாறாக எல்லாம் ஏவலாக இருக்கக் காண்கிறோம். அறஞ்செய விரும்பு, இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், ஐயமிட்டு உண், ஒப்புரவொழுகு, ஓதுவது ஒழியேல். இப்படிப் பலவும்.

விரும்பு எனும் ஏவல் விரும்புக எனின் வியங்கோளாகும்.

உண் எனும் ஏவல் உண்க எனில் வியங்கோளாகும்.

ஒழுகு எனும் ஏவல் ஒழுகுக எனில் வியங்கோளாகும்

(கரவேல் - ஒளிக்காதே, விலக்கேல் - விலக்காதே, ஒழுகு - கடைப்பிடி, ஒழியேல் - விட்டுவிடாதே) இடமறிந்து இவற்றையெல்லாம் நம் எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தி வந்தால் தமிழ் நலம் பெறும்.

தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்

தெளிவாக அறிந்திருப்பவர் தெளிவாகப் பிறர்க்கு உரைக்க முடியும். உரைப்பவர்க்குத் தெளிந்த அறிவு இல்லையானால் கேட்பவர் குழப்பமே அடைவர். மேற்காணும் பாரதியின் வாக்கு அந்த மகாகவியின்,"உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்' என்னும் தொடரை நினைவூட்டுகிறது.

"ஆண்டுதோறும் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் இராசராசனுக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது' - இது ஒரு தொலைக்காட்சிச் செய்தி. இதில் பிழையொன்றும் இல்லை. ஆனால் தெளிவு இல்லை? எப்படி?

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

பாவைப் பாட்டும் பாவை நோன்பும் – சௌந்திர. சொக்கலிங்கம்

சங்க காலந்தொட்டு இன்று வரை நமக்குக் கிடைக்கும் சிற்றிலக்கிய வகைகளில் பாவைப் பாட்டும் ஒன்று. ‘பாவை’ என்றாலே நமக்குத் திருவெம்பாவையும் திருப்பாவையும்தான் நினைவுக்கு வரும்.

’பார்ப்பு’ எனும் சொல் பாப்பு – பாப்பா என்றாகிப் பின்னாளில் ‘பாவை’ எனத் திரிந்தது என்பர். இச்சொல்லுக்குப் புதுமை, கருவிழி, குரவமலர் முதலிய பல பொருள்கள் இருப்பினும் அழகிய உருவம் என்ற பொருளில் மிகுதியாக வழங்கப் படுகிறது.

பாவை விளையாட்டும் பாவைப் பாட்டும்

இளம் பெண்கள் அழகிய பாவைகளை வைத்து விளையாடினர்; மணலில் பாவை செய்து பூச்சூட்டி விளையாடினர்; மணல் பாங்கான இடம், நீர் நிலைகளின் அருகில் விளையாடினர்; தாம் நீராடும் போது பாவையினையும் நீராட்டி மகிழ்ந்தனர் எனப் பலச் செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.

அவ்வாறு இளம் பெண்கள் நீராடும் போது பாவையை நோக்கி ‘பாவாய்’ என அழைத்துப் பாடுவதே பாவைப் பாட்டாகும். இது நீராடல் பாட்டு என அழைக்கப் படலாம் ஆயினும், பாவையினை அழைத்துப் பாடப் படுவதால் பாவைப் பாட்டு எனப் படுவதாயிற்று. இப்பாடல்கள் ‘எம்பாவாய்’ என முடியும். தொல்காப்பியம் பொருளதிகாரம் கொச்சக ஒருபோகிற்கு இலக்கணம் கூற வந்த பேராசிரியர், பாவை அம்மானைப் பாடல்களின் அடிவரையறையைக் குறிக்கின்றார்.

நீராடும் போது மகளிர் பாடும் பாடலே ‘பாவைப் பாட்டு’ ஆகும். எனவே நீராடலும் பாவைப் பாட்டும் ஒரே சமயத்தில் நிகழ்வன என்பது தெளிவாகிறது.

அம்பா ஆடல்

மார்கழிப் பௌர்ணமி தொடங்கி தைப் பௌர்ணமி வரையிலும் இளம் பெண்கள் பொய்கையிலும் , சுனைகளிலும் நீராடி நோன்பு நோற்றனர். சங்க இலக்கியங்கள் இச்செயலைத் ‘தைந்நீராடல்’ எனக் குறிப்பிடுகின்றன.

இத் தைந்நீராடலில் இளம் பெண்கள் தம் தாயோடு நீராடினர். முதிய பெண்கள் நோன்பு நோற்கும் முறைமையையும் நீராடும் நெறியையும் எடுத்துக் கூறியபடி வையையில் நீராடினார்கள். எனவே இது ‘அம்பா ஆடல்’ எனப் பெயர் பெற்றது. இச்செய்தி பரிபாடலில் உள்ளது.

தைந்நீராடலின் போது பெண்கள் நல்ல கணவன் தமக்கு அமைய வேண்டுமென்று நோன்பு நோற்றதாகப் பரிபாடலுக்கு உரை எழுதிய பரிமேலழக்ரும், கலித்தொகைக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரும் குறிப்பிடுகின்றனர்.

தைந்நீராடலும் மார்கழி நீராடலும்

தைந்நீராடல் தை மாதம் பௌர்ணமியோடு நிறைவு பெற்றதால் அப்பெயர் பெற்றதெனவும், மார்கழி பௌர்ணமி அன்று தொடங்கியதால் ‘மார்கழி நீராடல்’ எனப்பட்டது எனவும் கூறுவர். எனினும் திருவாதவூரடிகள் புராணம் இந்நீராடல் மார்கழி பௌர்ணமி – திருவாதிரை கூடிய நாளுக்குப் பத்து நாட்கள் முன்பே தொடங்கி விடுவதாகக் கூறுகின்றது.

பரிபாடல் மார்கழிப் பௌர்ணமியும் திருவாதிரையும் கூடிய நாளன்று அம்பா ஆடல் நிகழ்ந்ததாகக் கூறுகின்றது. முதலில் தைந்நீராடல் என அழைக்கப் பட்டதே பின்னாளில் ‘மார்கழி நீராடல்’ எனப் பெயர் பெறலாயிற்று. திருவெம்பாவைக்குப் பிறகு தோன்றிய பாவைப் பாடல்கள் எல்லாம் ‘மார்கழி நீராடல்’ என்றே கூறுகின்றன.

பாவை விளையாட்டோடு கூடிய தைந்நீராடல் சமயச் சார்பு பெற்று வளர்ந்தை அகநானூறு 181 ஆம் பாடலில் ,

‘நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்

ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய

பொய்கை சூழ்ந்த பொழின்மனை மகளிர்

கைசெய் பாவை துறைக்கண் இறுக்கும்

.............புகார்’

என வரும் அடிகளும்

பரிபாடல் 11 ஆம் பாடலில் வரும்,

‘ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து

மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை

விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்

புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப

வெம்பா தாக வியனில வரைப்பென

அம்பா ஆடலின்’

என வரும் அடிகளும் தெளிவாகக் காட்டுகின்றன.

பாவை நோன்பின் நோக்கம்

சங்க காலத்தில், தைந்நீராடலோடு கடைபிடிக்கப்படும் நோன்புக்கு, மழை பொழிதலும், நல்ல கணவன் அமைதலும் ஆகிய இரண்டுமே முக்கிய நோக்கங்களாகும். இதனை நல்லந்துவனார் பாடிய பரிபாடல் 11 ஆம் பாடல் கூறுகின்றது.

திருவெம்பாவை, திருப்பாவை இரண்டிலுமே ‘மழை பொழிய வேண்டும்’ எனும் வேண்டுதல் உண்டு. சிவபக்தியில் சிறந்த மகளிர், சிவனடியார்களே தமக்குக் கணவனாக வரவேண்டுமென்று சிவபிரானை வேண்டுவதாகத் திருவெம்பாவையிலும், கண்ணனே தமக்குக் கணவனாக வர வேண்டுமென்று அவனிடம் ஆய்ப்பாடி மகளிர் வேண்டுவதாகத் திருப்பாவையிலும் நாம் காண்கிறோம்.

திருப்பாவையில் பாவை நோன்பு

‘கண்ணனே தமக்குக் கணவனாக அமைய வேண்டுமென்று ஆயர்குல மகளிர், மார்கழியில் காத்யாயினி தேவியை வேண்டி நோற்பதுவே ‘பாவை நோன்பு’ எனப் பாகவதம் கூறுகின்றது. இக்கருத்தினையே திருப்பாவைக்கு உரை எழுதியவர்களும் ஆதரித்துள்ளனர். திருப்பாவையிலும் பாவை நோன்புக்குரிய அகச்சான்றுகள் காணப்படுகின்றன.

சங்கு, பறை, பல்லாண்டு பாடுவார், விளக்கு, கொடி, விதானம் ஆகியன நோன்புக்கு வேண்டுமெனத் திருப்பாவை (26) கூறுகின்றது. நோன்பு எவ்விதம் நோற்க வேண்டுமென 2 ஆம் பாடலும், நோன்பு முடிந்த பின் என்ன செய்வர் என்பதனை 27 ஆம் பாடலும் குறிப்பிடுகின்றன. நோன்பு நடக்கும் இடத்தைப் ‘பாவைக் களம்’ என 13 ஆம் பாடலும், பாவைக்கு நீராட்டுதலை 2,3 ஆம் பாடல்களும் , மழை பொழிய வேண்டுவதனை 3,4, ஆம் பாடல்களும், கண்ணன் கணவனாக வர வேண்டும் என வேண்டுவதை 25, 28,29 ஆம் பாடல்களும் தெளிவாகவே கூறுகின்றன.

‘பறை’ எனும் சொல் திருப்பாவையில் அதிகமாகப் புழங்கும் சொல்லாகும். இதற்கு ‘கண்ணனைக் கூடி மகிழ்ந்திருத்தல்’ என வைணவ உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.

மேலும், காத்யாயினி தேவியைப் பற்றிய குறிப்பு திருப்பாவையில் இல்லை. மாறாக, பாவை என்பதற்கு ‘தையொரு திங்களிலே காம ஸமரச்யணம் பண்ணுகையாலே, பாவையென்று அவன்(காமன்) அகம் உடையாளான ரதியைச் சொல்லுதல்’ எனவும், ‘பாவைக் களம் புக்கார்’ என்பதற்கு, ‘கிருஷ்ணனும் தாங்களும் கழகமிடும் சங்கேத தலம் புக்கார்கள். கழகம் – ஓலக்கம்; சங்கேத தலமாவது – வர்ஷார்த்தமாக (மழை பொழிய) இந்த்ராணியையும், ஸம்ச்லேஷார்த்தமாக (கண்ணனைப் புணர) ரதியையும் நோற்கைக்குப் பெண்கள் திரளுமிடம்’ எனவும் வைணவ உரைகாரர்கள் எழுதியுள்ளனர்.

திருவெம்பாவையில் பாவை நோன்பு உண்டா?

மணிவாசகப் பெருமான் ‘சித்தத்தால் சிவமே ஆனவர்’ எனத் திருக்கோவையார் உரையில் பேராசிரியர் குறிப்பிடுவார். மணிவாசகர் திருப்பெருந்துறையில் உறைந்த போது, அந்நகரில் இருந்த பெண்கள் அம்மானை, ஊஞ்சல், சாழல், பூவல்லி, உந்தி முதலிய விளையாட்டுகள் விளையாடுவதைக் கண்டார். எங்கும் சிவத்தையே காணும் இயல்புடைய வாதவூரடிகள், பெண்களின் விளையாடல்களை எல்லாம் இறைவன் புகழ் பாடும் பாடல்களாக ஆக்குவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

தமக்கு மட்டுமேயன்றி இவ்வையத்தார்க்கும் தமதனுபவம் கிடைக்க வேண்டும் என்னும் பெருங்கருணை பற்றியே அவர் அவ்விதம் அருளிச் செய்தார். அவ்விதம் அவர் பாடியதே ‘திருவெம்பாவை’. இவ்வாறு திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் கூறுகின்றது.

‘வாதவூரடிகள் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருந்த போது, அங்கிருந்த இளம்பெண்கள் எல்லாம், மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு முன்னதாகிய பத்து நாட்களில் வீடுகள்தோறும் சென்று பெண்களை அழைத்து விடியற்காலத்தில் குளிர்ந்த நீரையுடைய தடாகத்தில் நீராடினார்கள். அவர்களுடைய இச்செயலைக் கண்ட வாதவூரடிகள், அவர்கள் பாடியதாக ‘திருவெம்பாவை’யை அருளிச் செய்தனர்.’ எனத் திருவாதவூரடிகள் புராணம் கூறும்.

திருவெம்பாவைக்குத் தத்துவப் பொருள் கூற வந்த பழைய திருப்பெருந்துறைப் புராணம் திருவாசகச் சிறப்புரைத்த சருக்கத்தில், ‘மல இருளில் அழுந்திக் கிடந்துவிடாமல், இறைவன் அருளாகிய குளிர்ந்த நீரில் நீராட வருக என உயிர்களை அழைப்பதே திருவெம்பாவை’ எனக் குறிப்பிடுகின்றது.

வாதவூரடிகளின் அருள் வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறும் முக்கியமான நூல்களான பெரும்பற்றப் புலியூர் நம்பி செய்த திருவாலவாய் உடையார் திருவிளையாடற் புராணம், கடவுள் மாமுனிவர் செய்த திருவாதவூரடிகள் புராணம், சுந்தரலிங்க முனிவர் இயற்றிய (பழைய) திருப்பெருந்துறைப் புராணம் எனும் மூன்றுமே, வாதவூரடிகள் ‘திருவெம்பாவையைப் பாவை நோன்பிற்காகப் பாடியருளினார்’ என்று ஏன் குறிப்பிடவில்லை? மாறாக, மூன்று நூல்களுமே ‘திருவாதிரைத் திருவிழாவினை ஒட்டி நிகழும் மார்கழி நீராடல்’ என்பதனையே திருவெம்பாவை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறுவானேன்?

பாவை நோன்பல்ல – பாவைப் பாட்டு

முன்னரே கூறியபடி, மணிவாசக்ப் பெருமான் மகளிர் விளையாடல்களை, இறைவன் புகழ்பாடுவதற்கு ஏற்ற செயல்களாக அமைத்துப் பாடினார் என்பதற்கு திருவாசகத்தில் வரும் திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருப்பூவல்லி, திருத் தோள்நோக்கம், திருவுந்தியார், திருச்சாழல், திருத் தெள்ளேணம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம் போன்ற பதிகங்களே சிறந்த சான்றாகும். இவ்வரிசையில் பாவைப் பாட்டாகிய ‘திருவெம்பாவை’ யும் சேர்த்திதான்.

நடைமுறையில் உள்ள செயல்களைப் புலவர்கள், பாட்டுடைத் தலைவனின் பெருமையை எடுத்துக் கூறுவதற்குப் பாடல்களாகப் பயன்படுத்துவது தமிழ் இலக்கிய மரபாகும். அம்மானை வரி, ஊசல் வரி, போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. தொல்காப்பியர் இதற்காக பாடாண் திணையுள் ‘கொற்றவள்ளை’ என்றொரு துறை கூறியிருக்கின்றார். ‘வள்ளை’ என்பது உரற்பாடல் என்பதும், இதன் மூலம் பாட்டுடைத் தலைவர் பாடப்படுவர் என்பதும் அப்பகுதி உரையினால் நாம் அறியலாம். இதுபோலவே அம்மானைப் பாடல், ஊசல் பாடல் முதலியவற்றாலும் பாட்டுடைத் தலைவர் பாடப்பட்டனர், கும்மிப் பாட்டு பள்ளுப் பாட்டு என்பது போல.

எனவே நீராடலின் போது நிகழ்வதாகிய ‘பாவைப் பாட்டு’ என்ற விளையாட்டினையே இங்கு வாதவூரடிகள் பயன்படுத்திக் கொண்டார். அப்பாடலையும் இயல்பாக நிகழ்ந்த தைந்நீராடலாகிய அச்செயலினை, இறைவன் புகழ் ஏத்துவதற்கு ஏதுவாக திருவாதிரைத் திருவிழாவின் போது அருளிச் செய்தனர். சமுதாயத்தை உயர்ந்த சமய வழியில் நெறிப்படுத்த வேண்டும் என்பதே அடிகளின் நோக்கமாகும்.

மேலும், ‘பாவை நோன்பி’னைக் குறிப்பதாகிய காத்யாயினி தேவி பற்றிய பாவை நீராடல் குறிப்புகளோ, பாவைக் களம், நோன்புச் செயல், நோன்பின் முடிவு பற்றிய குறிப்புகளோ திருவெம்பாவையில் காணப்படவில்லை.

மாறாக, சிவத்தினோடு பிரிப்பின்றி நிற்கும் சக்தியினது மேன்மையை வியந்து, அவளை சிவத்தின் அருளாகவே கூறும் நிலையைத் திருவெம்பாவை 14,16 ஆம் பாடல்களில் காண்கிறோம். எனவே, பாகவதம் குறிப்பிடும் பாவை நோன்பிற்கும் திருவெம்பாவையின் ‘சக்தியை வியந்தது’ என்ற குறிப்பிற்கும் எள்ளத்தனையும் தொடர்பில்லை என்பது தெளிவு.

இன்னும், திருப்பாவை போல இறைவனே கணவனாக அமைய வேண்டுமென்று கூறாது, ‘சிவனடியார்களே தமக்குக் கணவனாக் வர வேண்டும்’ என்று மகளிர் வேண்டுவதாக திருவெம்பாவை காட்டுகிறது. வைணவம் போல இறைவனை மணத்தல் என்பது சைவ சித்தாந்தச் செந்நெறிக் கொள்கையில் கிடையாது. சைவம் குறிப்பிடும் ‘சன்மார்க்கம்’ என்பது ‘ஞான நெறி’ யே அன்றி ‘ நாயக – நாயகி’ பாவம் அல்ல. இதனைத் தான் திருவெம்பாவை 9,19 ஆம் பாடல்கள் தெளிவாக்குகின்றன. காரைக்காலம்மையார் புராணத்திலும் இதை நாம் கண்டு தெளியலாம்.

திருவெம்பாவை ‘பாவைப் பாட்டி’னையும், திருப்பாவை ‘பாவை நோன்பி’னையும் குறிப்பிடுகின்றன என்பது தெளிவு.

எனவே, ‘பாவை’ என்னும் சொல் ஒற்றுமை ஒன்றையே கொண்டு திருவெம்பாவையும் ‘பாவை நோன்பி’னைக் குறிப்பதாகும் என்று கருதுவது பிழையாகும். மேலும், தமிழிலக்கியத்திலுள்ள எல்லாப் பாவைப் பாடல்களும் பாவை நோன்பினைக் குறித்துத் தோன்றியவை அல்ல.

திருப்பாவையின் கருத்து மற்றும் பொருள் நிலையும், திருவெம்பாவையின் கருத்து மற்றும் பொருள் நிலையும் மிகப் பெரும் வேறுபாடு உடையவை என்பதை நாம் உண்ர்ந்து கொள்ள வேண்டும்.

(ஓம் சக்தி மாத இதழ் 2009 ஜனவரியில் வெளியான கட்டுரை)

12/12/2011

மொழிப் பயிற்சி – 69 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

எது வசந்த காலம்?

நிலைமொழியில் இ, ஈ, ஐ, இருந்தால் "ய்' யும், ஏனைய உயிர்கள் இருந்தால் "வ்' வும் "ஏ' இருந்தால் இரண்டும் (ஏதாவது ஒன்று) உடம்படு மெய்யாக வரும். தே (த்+ஏ)+வ்+ஆரம்= தேவாரம். அவனே (ஏ)+ய்+அழகன் = அவனேயழகன்.

அமெரிக்காவில் "ஆ' இருப்பதால் "வ்' வந்தது. திருச்சியில் "இ' இருப்பதால் " ய்' வந்தது. தேவாரத்தில் "ஏ' காரம் உள்ளது. இதில் "வ்' வந்தது. அவனே - இலும் "ஏ' காரம் இருக்கிறது. இதில் "ய்' வந்தது. (இரண்டும் வரும்) ஆனால் கோவில், கோயில் என இரண்டு வகையாய் எழுதுதல் சரியன்று. கோவில் என்பதில் "ஓ' உள்ளது. "ஓ' இருந்தால் "வ்' தான் உடம்படு மெய். ஆதலின் கோவில் மட்டுமே சரி. கோ+இல் = கோ (க்+ஓ)வ் +இல் (வ்+இ=வி) கோவில்.

தெரிந்தும் தெரியாமலும்:

தெரிந்து செய்யும் பிழைகள், தெரியாமல் செய்யும் பிழைகள் என இரண்டு உண்டு. நம் வாழ்வில் நம் செயல்களில் நேர்கின்ற பிழைகள் மட்டுமல்ல ;

மொழியை எழுதுவதிலும் இப்பிழைகள் இரண்டும் நேர்கின்றன.

கணபதி என்பது ஒருவர் பெயர் (வடமொழிப் பெயர்தான்). இதனை ஆங்கிலத்தில் மிடுக்காக Ganpath - கண்பத் என்று சொல்லத் தொடங்கினர். இப்போது "கண்பத்'தும் போய் (பத்துக் கண்கள் அல்ல) "கண்பட்' ஆகிவிட்டதே! இதுதான் கொடுமை; இது தெரிந்தே செய்யும் பிழை.

இவ்வாறே பழனிச்சாமி என்ற அழகிய தமிழ்ப் பெயரை Palanisamy என்று ஆங்கிலத்தில் எழுதி அதிலுள்ள  Palani என்பதையும் சுருக்கி Pal - பால் என்றாக்கி, பால் சகோதரர்கள் 'Pal Brothers' என்று வணிக நிலையத்துக்குப் பெயர் வைக்கிறார்கள். மனம் தாங்காத இப்பிழையும் தாங்கித்தான் வாழுகிறோம்.

கோனார் தமிழ் உரைநூலின் முதலாசிரியர் ஐயன்பெருமாள் கோனார்; பெரும் புலவர். இந்தப் பெயரை ஐயன் பெருமாள் என்று சொல்லாமல் ஐயம் பெருமாள் என்று பேச்சு வழக்கில் உரைத்தனர். இது தொடர்ந்து இன்று அய்யன் கணபதி என்னும் பெயரை அய்யம் கணபதி என்று ஊடகங்களில் எழுதியும் வருகிறார்கள். இதிலுள்ள அய்யம், சந்தேகம் என்னும் பொருளைத் தருமே ஐயா. இது சரியா?

சித்திரை, வைகாசி மாதங்கள் இளவேனிற் பருவம்; இதனையே வசந்த காலம் என்பர். இப்போது (இதை எழுதும் நாளில்) ஐப்பசி மாதம் - இதில் ஒருநாள் தொலைக்காட்சிச் செய்தியில், ""இது வசந்த காலமாதலால் முதுமலை சரணாலயத்தில் விலங்குகள் அதிகம் கூட்டம் கூட்டமாய்க் காணப்படுகின்றன'' என்று படித்தார் ஒருவர். இந்தச் செய்தியை எழுதிய செய்தி ஆசிரியர்க்கோ, படித்தவர்க்கோ வசந்தகாலம் என்பது எது என்று தெரியவில்லை. ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலம் என்பார்கள். இந்தப் பருவத்தில் குளிர் மிகுதியாக இருக்கும். ஆதலின் இலக்கணத்தில் "கூதிர்காலம்' என்ற பெயர் உண்டு.

கூதிர் (குளிர்) காலத்தை வசந்த காலம் (இளவேனில்) என்றது தெரியாமல் செய்த பிழை. அவர்களுக்கு இந்தப் பருவங்களின் பாகுபாடு பற்றித் தெரியவில்லை. ஆயினும் பிழை, பிழைதானே?

ஒரு செய்தியில் "இராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் தாக்குதல்' என்று தலைப்புச் செய்தியில் சொன்னார்கள். நம் மீனவர்கள் எப்போது தாக்கத் தொடங்கினார்கள்? இவர்கள்தாம் அடிவாங்கி உதைபட்டு வருகிறார்களே! இந்தக் கொடுமை தீரவில்லையே! இந்த வாக்கியத்தில் ஒரு சொல்லை விட்டுவிட்டார்கள். "இராமேசுவரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்' என்று சொல்லியிருக்க வேண்டும். "மீது' விட்டுப் போனதால் வந்த வினை இது.

பேச்சு வழக்கில் படித்தவர்கள் கூட வியபாரம் என்றும், இராமியாணம் என்றும் பேசக் கேட்டிருக்கிறேன். வியாபாரத்தை (வணிகம்), இராமாயணத்தை இப்படிப் பிழையாகச் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டுவிட்டார்கள்.

கனவுப் பட்டறை என்று சரியாகச் சொல்லி கனவு பட்டறை என்று எழுத்தில் காட்டுகிறார்கள். மணிச் செய்திகள் என்று சொல்லி மணி செய்திகள் என்று எழுத்தில் காட்டுகிறார்கள். வேறுபாடு புரிவதில்லையா?

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

07/12/2011

கோலி - பூமணி

சுப்புவுக்குப் பள்ளிக்கூடம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி உட்காருவது நிற்பது பாடுவது படிப்பது ஒரே சமயத்தில் ஒண்ணுக்குப் போவது சாப்பிடுவது தண்ணீர் குடிப்பது ஒரே விளையாட்டைச் சேர்ந்து விளையாடுவது, அதென்ன படிப்பு. நெருக்கும் போது ஒண்ணுக் கடிக்கணும். தவிக்கும் போது தண்ணீர் குடிக்கணும். தோணும் போது விளையாடணும். இன்ன விளையாட்டு என்றல்லாம்  இஷ்டத்துக்கு விளையாடணும். வேப்ப மரத்தில் ஏறி ஊஞ்சலாடணும். வகுப்பில் ஒளிந்து தேடிப்பிடிக்கணும். பக்கத்திலுள்ள குமரன்கோயில் மலைக்கு ஓடி கால்வலிக்கப் படியேறி உச்சியில் நின்று ஊரை அளந்து விட்டு உருண்டு திரும்பணும். பள்ளிக்கூடக் கூரை விட்டத்தில் அருவியாக வடியும் குருவிக் கூட்டில் குடும்பம் நடப்பதை மல்லாந்து பார்த்தபடி கண்சொருகணும்.

கால்சட்டைப் பைக்குள் ரெண்டு கோலிக் காய்கள் துருதுருத்து உறுத்தின. அவ்வப்போது தொட்டுப் பிதுக்கி மோதவிட்டு சமாதானப்படுத்தினான். அவை பையை விட்டுக் கெலிக்கு முன் எடுத்து விரலுக்கொரு முறை வில்லாக வளைத்து 'அடி கடக்கோ' என்று தெறித்தால்தான் ஆசையடங்கும். எதிராளி முக்காமுக்கா மூணுதரம் கோலியைச் சுண்டி விரல்மொளி வீங்கணும். தேக்கித் தேக்கி முழங்கை தேயணும்.

ஊரும் மோசந்தான். எந்தப் பயலைப் பார்த்தாலும் ஏதாவது வேலை செய்கிறான். பெரிய வியாபாரி மாதிரி தோளில் பையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தாள் பொறுக்குகிறான். சீசா மூடியென்று கண்டதைக் கிண்டிக் கிளறுகிறான். கடையில் சைக்கிளுடன் மல்லுக்கட்டுகிறான். வண்டி தள்ளிக் கொண்டு கட்டை சுமந்துகொண்டு சைக்கிளில் தண்ணீர்க் குடங்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு... எல்லாம் நடக்கிறது. விளையாட்டைத்தான் காணவில்லை.

சிலநேரம் எல்லா இடத்திலும் விளையாட்டு நடக்கிறது. சாந்துச் சட்டியை சூட்டிக் கையாகக் கைமாற்றும் ஆட்கள் வாலிபால் விளையாடுகிறார்கள். கொத்தனார் கரண்டியால் சாந்தை சுவரில் வீசி பேட்மின்டன் விளையாடுகிறார். மம்பட்டி வேலைக்காரர்கள் ஹாக்கி விளையாடுகிறார்கள். சம்பளத்துக்காகச் சண்டை நடக்கும் போது சடுகுடு நடக்கிறது.

தெற்கு ரோடு மைதானத்தில் கொஞ்ச நாளைக்கு முந்தி ஹாக்கிமேச் நடந்தது. தூரத்திலிருந்தெல்லாம் விளையாட வந்திருந்தார்கள். ஊரே திரண்டு பார்க்கப் போனது. அவனுக்கு ஆசை. அம்மாவை அரித்தான். அவள் அசையவில்லை.

''வெளயாட்டுத்தானா சோறு போடுது''

சொல்லாமல் கம்பி நீட்டவும் முடியாது. ''அடே சுப்பு'' என்று வாய் வலிக்கத் தேடுவாள்.

எப்படியோ அவளை அசத்தி ஒருநாள் போய்விட்டான். மைதானத்தைச் சுற்றி ஏகக் கூட்டம். நடுவில் விளையாட்டுக்காரர்கள் சிதறிக் கிடந்தார்கள். எல்லாரும் பெரிய பெரிய ஆட்கள். சிலருக்கு மண்டை வழுக்கை சாயங்கால வெயிலுக்கு மின்னியது. வற்றிய குளத்து அயிரை மீன்களாக அவர்கள் துள்ளி விளையாடும்போது பையன்களாகிவிட்டார்கள். அவன் விளையாட்டைச் சொகமாகச் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்தான். மேச் காய்ச்சல் சின்னப்பையன்களைப் பிடித்துக் கொண்டது. வாழைத்தார்க் காம்பு வைத்து ரோட்டில் ஹாக்கி விளையாடினார்கள். கல்லுகூட பந்துதான். அப்படி விளையாடணும் போல் எச்சூறும். அம்மா விடணுமே. சே இந்த அம்மா ரொம்ப மோசம்.

கொஞ்சநேரம் சும்மா இருக்க முடியாது. எப்போதும் வேலைதான். காலையில் அக்காவுடன் கட்டையடுக்கணும. சுமந்து போய் தீப்பெட்டியாபீசில் சேர்க்கணும். வெத்துக்கட்டை வாங்கி வரணும். வரும் போது ரோட்டில் கல்லை எத்தி விளையாடக் கூடத் தோதிருக்காது. கட்டைமேல் உட்கார்ந்திருக்கும் குச்சுச் சாக்கு பயமுறுத்தும். கட்டையை இறக்கியதும் பள்ளிக்கூடப் பையைத் தூக்கணும்.

சாயங்காலம் வீடு திரும்பினால் வேலை சரியாக இருக்கும். மளிகைக் கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வரணும். கூடவே காத்திருந்து இட்லி தோசைக்கு மாவரைத்து வரணும். அந்த நேரத்திலும் விளையாட முடியாது. மாவு கொஞ்சம் குறைந்தால் அம்மாவிடம் வசவு வாங்கிக் கட்டணுமே.

ராத்திரி அந்திக்கடையில் அம்மாவுக்குத் துணையாக இருக்கணும். பஜாரில் பஸ்டாண்டுக்கு முன்னால் எட்டு மணிக்கெல்லாம் கடை போடணும். சுடச்சுட இட்லி தோசை கிடைக்கும். வடை மொச்சைக் கிழங்கு என்று வகைவகையாக அம்மாவும் அக்காவும் பண்டம் செய்வார்கள். பொடி சட்னி ருசிக்காகவே ரொம்ப ஆட்கள் வருவார்கள். மிளகாய் எள்ளு பருப்பு இப்படி பொடியில் பல ரகம் உண்டு. சட்னி வகையில் மல்லி தக்காளி வெங்காயம் புதினா இன்னும் என்னென்னமோ.

அந்திக்கடை வியாபாரம் குடும்பத்துக்கு ஏந்தலாக இருந்தது. கடை தொடர்ந்து ஓடுவதற்கு எங்கெங்கோ கவனித்துச் சரிகட்ட வேண்டியிருந்தது. யார் யாரோ வந்து ஓசியில் சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். அம்மா அக்கறையாகக் கவனித்துக் கொள்வாள்.

அவளே இலை விரித்து எல்லாம் பரி மாறணும். அம்மா இட்லி தோசை சுட்டுக் கொடுப்பாள். நேரம் கிடைக்கும்போது பொடியைக் குழைப்பதற்காக சிறுசிறு பாட்டில்களில் நல்லெண்ணெய் ஊற்றி வைக்கணும். அதோடு ராத்திரிச் சாப்பாட்டையும் முடித்துக் கொள்ளணும். சிலசமயம் லேசாக ஆடிக்கொண்டு பரிமாறு வான். ''அடே சுப்பு'' என்று அம்மா அதட்டுவாள்.

சாக்கடையை மூடியிருக்கும் சிமிண்டுப் பிளேட்டை விலக்கி உண்டு பண்ணிய வழியில் எச்சிலையைப் போட்டுக் கை கழுவணும். தண்ணீர் இல்லையென்றால் அவன் ஓடிப்போய் பம்பில் அடித்து வருவான். அது பெரிய வேலை.

திங்கள்கிழமை சந்தையென்பதால் கூட்டம் அதிகமிருக்கும். உட்கார நேரமிருக்காது. அம்மாவுக்கு இடுப்பு ஒடிந்துவிடும். நெருப்பு சூட்டில் கன்றிப் போன முகத்தைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.

ரெண்டாவது ஆட்டம் சினிமா முடியும் வரை கடையிருக்கும். அதுக்குப் பிறகு சாமான்களைக் கழுவி எடுத்துவைத்து வண்டியைத் தள்ளிக்கொண்டு போகணும். வீடுபோய்ச் சேருமுன் உறக்கம் சொக்கும். போகிற வழியிலும் விளையாட முடியாது. அப்படியும் வண்டி உருளுவதற்கேற்ப கால்பின்னி நடப்பான். அதையும் அம்மா கவனித்து விடுவாள்.

''ஏம்ல காலு ஒரு தரையில நிக்காதா...''

''நான் வண்டிதான் தள்ளுறென்...''

''தள்ளுற லச்சணத்தப் பாத்துட்டுத்தான வாறென்... நல்லாச் சாப்பிட்டயா...''

அவன் பலமாகத் தலையாட்டிவிட்டு வண்டியைத் தள்ளுவான். மேடான இடங்களில் அம்மா கை கொடுப்பாள். அவர்கள் போகும்வரை அக்கா முழித்திருப்பாள். அப்போதும் அவள் கை சும்மா இருக்காது. அன்றைக்குக் காலையில் கம்பெனியிலிருந்து கட்டை சுமந்து வரும்போது நடுரோட்டில் பசப்பசவென்று மாட்டுச்சாணி குமித்துக் கிடந்தது. கஷ்டப்பட்டுக் குனிந்து பார்க்கையில் காலில் ஒரு குறுகுறுப்பு. ஒரே மிதியில் ரெண்டாக வெட்டினால் சாணி துள்ளிக் குதித்துச் சிதறும் அழகே தனி. கிராமத்தில் அவனுக்கு சாணி வெட்டிச் சண்டீர் என்று பட்டப்பேர் உண்டு. அப்படி மிதித்து ரெம்ப நாளாயிற்று.

வலதுகால் தானாக எழும்பியது. நடுச் சாணியில் ஓங்கி மிதித்தான். உள்ளே ஆணி முங்கிக்கிடந்திருக்கிறது. பாதத்தில் வசமாகக் குத்திவிட்டது. வலிக்கிறுகிறுப்பில் நொண்டி நொண்டி வீட்டுக்குள் வந்தான்.

''இதும் தலையெழுத்தா சொன்னபடி கேக்கமாட்டங்கானே''

அம்மாவின் முந்தானை தினமும் ஈரமானது.

அனாவசியமாக ஆஸ்பத்திரிச் செலவு. அதைச் சரிகட்ட அக்காவுடன் அனேக நேரம் உட்கார்ந்து கட்டையடுக்க வேண்டியிருந்தது. காலில் கட்டவுக்கும் வரை அம்மா கட்டை சுமந்தாள். ஒருத்தருக்குச் சம்பளம் கொடுத்து அந்திக்கடை நடந்தது. அம்மா அவனுக்குச் செருப்பு வாங்கிக் கொடுத்தாள்.

ஒரு லீவு நாளன்று குமரன்கோயில் மலைப்பக்கம் போயிருந்த போது மாட்டுக்காரப் பையன்கள் சுத்தியல் வைத்து பெரிய பெரிய கோலியாகத் தட்டிக் கொண்டிருந்தார்கள். ஓங்கித் தட்டத் தட்ட கல்குழியில் கருங்கோலி எவ்வித் துள்ளி உருண்டையானது. அவ்வளவு பெரிய காய்களை மோதவிட்டால் எருமைச்சண்டை போலிருக்கும். விரல் வலித்தாலும் கவலையில்லை.

ரெண்டு கோலி இருந்தால் கூட்டாளி சேர்த்துக் கொண்டு கும்மாளம் போட்டு விளையாடலாம். தட்டிக் கொடுக்கச் சொல்லலாமென்றால் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. வீட்டில் வேலை காத்திருக்கும்.

ராத்திரி முழுக்க கனாவில் கோலி கோலியாக உருண்டது. கிராமங்களிலிருந்து பெரியவர்களும், சிறியவர்களும் பாறையளவு கோலிக்காய்களை டவுனுக்கு உருட்டிக் கொண்டு வருகிறார்கள். இரும்புத் தடியால் தெண்டித் தெண்டி உருட்டுகிறார்கள். நொடியான இடங்களை மம்பட்டியால் சரிப்படுத்திக் கொள்கிறார்கள். அடை கொடுப்பதற்கு வழியில் கற்களைக் காணவில்லை. எல்லாம் ரோட்டில் அமுங்கி உடைந்து முங்கிவிட்டது. பருத்திமார்க் கூடைகளை குப்புறக்கவுத்தி அடை கொள்கிறார்கள். வரவர அது இரும்புச்சட்டியாக மாறுகிறது. சொரசொரத்த ரோட்டுப் பாதை சமதளமாக விரிந்து வழுவழுத்த ரோடாகிறது. அதனால் சிரமமில்லாமல் உருட்டுகிறார்கள்.

ரோட்டுக்கு இருபுறமும் கரிசக்காடுகளை இரும்பு முள்வேலி வளைத்துப் போட்டிருக்கிறது. வேலிக்குள் வெள்ளைக் கட்டிடங் கள் முழிக்கின்றன. அதைச் சுற்றி என் னென்னமோ மரங்கள் செடிகள், புதுசு புதுசாகப் பூக்கள், சிரிப்பு சிந்தும் பருத்திப் பூவையும் ஆவரம்பூவையும் காணவில்லை.

சில நிலங்களில் அட்டைக்கம்பெனி விரட்டியடித்த கழிவுதான் களை முக்காடு போட்டுக்கொண்டு வெள்ளாமைப் பயிர்களும் செடிகளும் காற்றசைவில் அழுது புலம்புகின்றன. அமர்த்தி ஆறுதல் சொல்ல ஆளில்லை.

நெருங்க நெருங்க நிறைய நிலங்கள் கல்லறைத் தோட்டங்களாகத் தெரிகின்றன. எங்கு பார்த்தாலும் கல் முளைகள், குறுக்கும் நெடுக்குமாகச் சிந்திய செம்மண் பாதைகள், பெரும்பாதைகள் ரோட்டுடன் பின்னியி ருக்கின்றன.

இப்போது ரோட்டில் கோலிக்காய்களை வேகமாக உருட்டுகிறார்கள். அந்த வேகத் திற்கேற்ப ஆணும் பெண்ணும் ஓடி நடக்கிறார்கள்.

கோலிகள் உருளும் நறநறப்பு உறக்கத்திற்குத் தோதாக ஓயாமல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

குடும்பம் கிராமத்திலிருந்த காலமே தனி. அய்யா முக்குரோட்டில் டீக்கடை வைத்திருந்தார். அம்மா காட்டுவேலை செய்தாள். அக்கா வீட்டைக் கவனித்துக் கொண்டாள். அவன் பள்ளிக்கூடம் போனான்.

அப்போதெல்லாம் ராவும் பகலும் விளையாட்டுத்தான். நேரத்துக்கொண்ணு. திகட்டும் வரை ஓயாது.

வீட்டில் சகல விளையாட்டுப் பொருளும் இருக்கும். அம்மாவுடன் திருவண்ணாமலைக் கோயிலுக்கு போயிருந்த போது ஒரு பொட்டணம் தெல்லுக்காய் வாங்கி வந்தான். அதில் பாலாங்காய் பவளக்காய் போர்க்காய் கருப்புக்காய் எல்லாமே உண்டு. எச்சைத் தொட்டு குறிவைத்துத் தெறித்தால் என்னமாய் ஏறி அடிக்கும் தெரியுமா. காணாக் குறைக்கு பானையோட்டிலும் சோடா மூடியிலும் பலவிதமான தெல்லுக்காய் துணைக்குத் தயாராக இருக்கும்.

பம்பரத்தில் பத்து வகைக்குக் குறையாது. அத்தனைக்கும் தனித் தனிக்கயிறு. ஒவ் வொண்ணும் சுண்டிவிட்டால் அப்படி லொங்கும். அது போதாதென்று விளாம்பழப் பம்பரம் வேறு. கும்மென்று அதன் இரைச் சலே தனி.

அதுக்கடுத்து செதுக்கு முத்துக்கல் வரிசையாகப் படுத்திருக்கும். வழலை சாரை விருசு மங்கிணி என்று ஒண்ணொண்ணுக்கும் பேர் உண்டு. தரைக்குத்தக்கபடி எடுத்துத் தட்டிவிடணும். சர்சர் என்று பாய்ந்து புளிய முத்தை விரட்டியடிக்கும்.

அண்ணன் தம்பிகளைப் போல் பெரிசும் சிறிசுமாக கோலிக் காய்கள் பக்கத்தில் குமித்துக் கிடக்கும். எதை எடுத்து அடிக்கலாம் என்பது எதிராளியைப் பொறுத்தது.

பனங்கூத்து சோளத்தட்டை உடைந்த தோசைச்சட்டி சலிப்பு இரும்பு வளையம் இப்படி வண்டிகளும் உண்டு. ஊரைச் சுற்றிப் பார்க்கணுமென்றால்தான் வண்டி பூட்ட வேண்டியிருக்கும். அதுக்கு நிறையக் கூட்டாளிகள் சேரணும்.

எல்லாம் அய்யா கண்ணை மூடியதுடன் சரி. அத்தனை விளையாட்டும் மனசுக்குள் வற்றி வறண்டு வண்டலாகிவிட்டது. அவர் திடீரென்று கதையை முடித்துக்கொண்டார். கடுமையான காய்ச்சலில் மூணு நாள் முனங்கியவர் நாலாம்நாள் மூச்சையும் நிறுத்திக் கொண்டார். குடும்பம் திக்கித் திணறித் தவித்தது.

மூணுமாசம் கழித்து டவுனிலிருந்து வந்திருந்த மீனாட்சியத்தை அம்மாவுக்குத் தைரியம் சொன்னாள். குடும்பத்துடன் டவுனுக்கு வந்துவிடுமாறு யோசனையும் சொன்னாள். அவள் ரொம்ப நாளைக்கு முன் குடிபெயர்ந்து போனவள்.

அம்மா அழுது அழுது ஓய்ந்து அந்தப்படியே முடிவுசெய்தாள். ஊரை விட்டுக் கிளம்பும் போது சேக்காளிகளையும் விளையாட்டுகளையும் விட்டுப் பிரிய அவனுக்கு மனசே இல்லை. ரொம்ப வருத்தமாக இருந்தது. விளையாட்டுப் பொருட்களை சீதனம் கொடுத்துவிட்டு அம்மாவுக்குப் பின்னால் நடந்தான்.

மீனாட்சியத்தை பக்கத்து லைனில் வீடு பார்த்துக் கொடுத்தாள். அவன் மேலப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தான். முதலில் அம்மாவும் அக்காவும் தீப்பெட்டி வேலை செய்தார்கள். பிறகுதான் அந்திக்கடை ஏற்பாடு நடந்தது.

மூணுவருசத்துக்கு மேலாகிவிட்டது. அவன் டவுன்காரானாகிவிட்டான். பொங்கல் பூசைக்கு கிராமத்திற்குப் போனால் உண்டு. ரெண்டு நாள் சேக்காளிகளுடன் குளிக்கலாம் விளையாடலாம். தலைக்குமேல் வேலை கிடக்கிறதென்று அம்மா அடுத்தநாள் கிளம்பிவிடுவாள். மனசுக்குள் குதியாளம் போடும் விளையாட்டு அமுங்கியடங்க ரொம்ப நாளாகும்.

செவ்வாய்க் கிழமை ராத்திரி. இன்றைக்கு ரெண்டிலொண்ணு பார்த்துவிட வேண்டியதுதான். எத்தனை நாளைக்கு கோலிக் காய்களை கால் சட்டையை விட்டு மாற்றிக் கொண்டிருப்பது. உறங்கும்போது தப்பி விடாமல் பொத்திப் பொத்திக் காப்பாற்றுவது. அம்மா கொடுத்த காசில் மிச்சம் வைத்து கடைகடையாக ஏறி வாங்கியது. ரெண்டும் தக்கட்டிப்பழம்போல் கண்ணுக்குக் குளிர்ச்சியான நிறம்.

பஜாரில் கூட்டமில்லை. பஸ் ஸ்டாண்டிலும் குறைவுதான். செவ்வாய்க்கிழமையானதால் பிரயாணம் போகும் ஆட்கள் கம்மி.

அந்திக்கடையில் ரெண்டுபேர் மட்டுமே உட்கார்ந்திருந்தார்கள். அம்மா ஆவலுடன் அங்குமிங்கும் பார்த்தாள். நிறைய ஆட்கள் வரும் போது அவள் முகத்தில் சந்தோசக் களை அப்படி மினுங்கும். மாவைக் கலக்கி தோதுப்படுத்துவதும் இட்லிக் கொப்பரையைத் திறந்து வேக்காட்டைச் சரிபார்ப்பதும் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி கச்சிதமாக இளுகுவதுமாக அவள் கைகள் பம்பரமாகச் சூழலும். முந்தானையை இடுப்பில் சொருக நேரமிருக்காது. அந்த அவசரத்திலும் துட்டுக் கணக்கில் கவனமாக இருப்பாள்.

அவன் அடிக்கடி ரோட்டுப்பக்கம் வந்து பஸ் போக்குவரத்தைக் கவனித்தான். கொஞ்சநேரம் கிடைத்தால் போதும். ஒருமுறை அம்மா பார்த்துவிட்டு அரட்டினாள்.

''ஏய் சுப்பு அங்கென்ன வேல.''

அவனுக்குச் சப்பென்று போயிற்று. கிட்ட வந்ததும் கடிந்து கொண்டாள்.

"கடையெங்க இருக்குது ஒன் காலு எங்க திரியிது. வேலையக் கவனி. பசிச்சா சாப்பிட்டுக்கோ. இட்லி வேணுமா தோச ஊத்தவா...''

''எனக்குப் பசிக்கலம்மா, பெறகு சாப்பிட்டுக்கிறென்...''

ரோட்டுக்கு அந்தப்புறம் லாட்டரிக் கடையில் சீட்டுக்கள் காற்றுக்கு விசிறிக் கொண்டிருந்தன. ராத்திரியிலும் சீட்டு வாங்க ஆளில்லையென்றால் திறந்து வைத்திருப்பானா, பலகாரக் கடைகளில் சேவும் சீனிமிட்டாயும் கோபுரங்கட்டி நின்றன. சீனி மிட்டாய்க் கோபுரங்கள் தகர்ந்து சரிந்துவிடாமல் சுற்றிலும் அப்பியிருந்த தேன்குளவிகள் பிரயாசைப்பட்டுத் தாங்கிக்கொண்டிருந்தன.

ஆட்டோக்காரர்களின் சகடால் சச்சரவுகள் இல்லை. ரெண்டு மூணு ஆட்டோக்கள் மட்டும் அருவமில்லாமல் நின்றிருந்தன. உள்ளே டிரைவர்கள் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். நல்ல வருமானமில்லை போலிருக்கிறது. இல்லையென்றால் நேரமிருக்கவே நாலு தோசையும் மொச்சையும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பி விடுவார்கள்.

கடையில் இப்போது ஒருவர் காத்திருந்தார். அவருக்கு இலை போட்டு தண்ணீரும் வைத்துவிட்டான். எண்ணெயும் ரெடி.

அம்மா இட்லியை எடுக்கவும் தோசை போடவும் கொஞ்ச நேரமாகும். அதுக்குள் திரும்பிவிடலாம். அம்மாவை ஓரக்கண்ணால் கவனித்தப்படி மெல்ல ரோட்டுப் பக்கம் நழுவினான்.

பஸ்போக்குவரத்து அவ்வளவாக இல்லை. லாரிகள் மட்டும் விட்டுவிட்டு கூவிக் கொண்டு போனது. சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத் தயாரானான். அம்மாவையும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

ஒரு பஸ் வந்து நின்று புறப்பட்டது. உடனே ரோட்டோரம் வெளிச்சமான இடத்துக்கு ஓடி கால்சட்டைப் பைக்குள்ளிருந்து அவரசமாக கோலிக்காய்களை எடுத்து உருட்டினான். முந்திப் போனதைப் பிடித்து மற்றதைக் குறிவைத்து அடித்தான்.

''கடக்கோ.''

இப்போது ஒரு விரலுக்குச் சந்தோஷம் சொல்ல முடியாது. மற்ற மூணு விரலும் துடித்தன.

அடிபட்ட காய் நடுரோட்டுக்கு விரண் டோடியது. அதுக்கு இன்னொரு கொடுப்பு கொடுக்கு முன் ஒரு பஸ் வந்து மறைத்துக் கொண்டது.

''ஓடவா செய்ற... இரு வாறென்..''

அந்த பஸ் கடந்ததும் ரோட்டுக்கு ஓடி விரண்டு போன கா¨யை ஆவலாகத் தேடினான். நல்லவேளைக்கு அது பஸ்ஸின் மிதிக்குத் தப்பிவிட்டது. மேற்கே பார்த்தபடி காயை எடுத்துக் கொண்டு இந்தப் பக்கம் ஓடிவந்தான். கிழக்கேயிருந்து வேகமாக வந்த லாரிக்காரனுக்கு நிலைமை பிடிபடவில்லை. பையன் ரோட்டைத் தான் கடக்கிறானாக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டான். திரும்பி வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் பிரேக்கைப் பிடிக்காமல் ஓரேயடியாக மிதித்துவிட்டான்.

தோசையைப் புரட்டிப்போட்ட அம்மா ஏறிட்டுப் பார்த்துக் குரல் கொத்தாள்.

''அடேய் சுப்பு...''

கருப்பு ரோட்டில் அவனது உடல் முழுக்க எண்ணெயில் குழைத்த மிளகாய்ப் பொடியைப் போல் நசுங்கிப் போயிருந்தது. தலைமட்டும் காயப்படாமல் பெரிய கோலிக் காயாக தனித்துக் கிடந்தது.

*****

நன்றி - அழியாச் சுடர்கள்

பேனாக்கள் – பூமணி

அவன் தாத்தா ரொம்பநாளாய் ஒரு பேனா வைத்திருந்தார். அவன் சின்ன வயசாயிருக்கும்போதே அவர் பையில் இருந்தது. கடைசிவரைக்கும் புதிசுமங்காமல் வைத்திருந்தாரே அதுதான் பெரிய காரியம். பையிலிருந்து அபூர்வமாய்த்தான் எடுத்து இரண்டு வரி எழுதுவார். எழுதும்போது கவரைப் பையில் குத்தியாகணும். பேனாவுக்குப் பின்னால் சொருகி எழுதுவதேயில்லை. கை நடுக்கத்திலும் தானாகவே மையடைப்பார். வெள்ளைத் துணி வைத்து மெனக்கிட்டு துடைத்து வெண்கலக் குடம் மாதிரி விளக்குவார்.


இத்தனைக்கும் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்து ராம ஜெயம், நாலு பிள்ளையார் சுழிதான் எழுதியிருப்பார்.


தாத்தா கம்பூன்றி போகும் போதும் வரும்போதும் சட்டையில் மினுங்கிய பேனா அவனைத்  தொடர்ந்து உறுத்தியது. எத்தனையோ தடவை அபேஸ் பண்ணத் திட்டம் போட்டிருக்கிறான். பாச்சா பலிக்கவில்லை. அவர் பேனாவை கண்ணுக்குப் படும்படியாய் வைத்தால்தானே. ஒன்று அவர் போட்டிருக்கும் சட்டையில் இருக்கும் அல்லது மேஜை டிராயருக்குள்ளிருக்கும். டிராயர் சாவியையாவது வெளியே வைக்கட்டுமே. அரணாக் கயிற்றில் வாளிப்பு போட்டு வேட்டி மடியில் வைத்துக்கொள்வார். சில சமயம் குளிக்கையில் கழட்டி வைத்துவிடுவார் என்று கொட்டாவி விட்டிருக்கிறான். ஆனால் கைத்தடி மட்டுமே வீட்டு மூலையில் சாத்தியிருக்கும். சாவி அரணாக்கயிற்றில் மணியாட்டும்.


அவர் அசந்த நேரம் பார்த்து சாவியைக் கழட்டி விடலாமா என்றுகூட யோசித்தான். அப்படி அசந்த நேரமே தெரியாது. முக்கால் வாசி கண்ணை மூடிக்கொண்டுதான் இருப்பார். தூங்குகிற மாதிரி இருக்கும். எதிரே பூச்சி பறந்தால்கூட அருவங் கேட்டு விடுவார். எக்குத் தப்பாய் மாட்டிக்கொண்டால் கம்படி வாங்கிகட்ட வேண்டியதுதான்.


அவன் அப்பாவிடமும் ஒரு பேனா இருக்கத்தான் செய்தது. அது தாத்தா பேனா போல் இல்லை. அவன் வைத்திருந்த பேனாவுக்கும் மோசமாயிருந்தது. அவர் பஞ்சுக் கணக்கெழுதி பேனாவைப் படாதபாடு படுத்தியிருந்தார். அப்பா கூட தாத்தா பேனாவில் கண் வைத்திருப்பது பிந்தித்தான் தெரிய வந்தது. ஒரு நாள் பேச்சுவாக்கில் சொன்னார்:


”நயினா ஒங்களுக்கு இனி அந்தப்பேனா எதுக்கு சும்மாதானே வச்சிருக்கீக எனக்குக் குடுத்திருங்க. நாண் கணக்கெழுதிக்கிறென்”.


“ஏம்பா வேறபேனா கணக்கெழுத மாட்டன்னா சொல்லுது”.


அப்பா மறு பேச்செடுக்க வில்லை. தாத்தாவா கொக்கா.


அதற்குப் பிறகு தாத்தா அப்பாவிடம் அடிக்கடி பேனா கேட்க ஆரம்பித்தார்.


“ராமானுஜம் ஒம் பேனாவைக் கொஞ்சம் குடுத்து வாங்கிறயா. என்னதில் மையில்லையோ என்னமோ எழுத்து சரியாவே தெரியலே. கசியிற மாதிரியும் தோணுது.”


அப்பா முணுமுணுத்தவாறே பேனா கொடுப்பார்.


“கசியிதோ புதுசா”


அவன் பாட்டி அதைவிடக் கில்லாடி. கழுத்துப் பிடிக்காமல் நகை போட்டுக் கொண்டு கிறுங்காது. அவன் அம்மாவும் எத்தனையோ பிரயத்தனம் பண்ணிப் பார்த்து விட்டாள். மசியவில்லை.


பாட்டி குளிக்கும்போது நீட்டி முழக்கிக் கூப்பிடுவாள்.


“நாகலெச்சிமி ஓரெட்டு வந்து முதுகத் தேச்சுத் தண்ணி ஊத்தீட்டுப் போயிரு”


அம்மா காசலையாய்ப் போய் உடம்பெல்லாம் தேய்த்து விடுவாள். கழுத்தோரம் தேய்க்க வரும்போது மட்டும் பாட்டி சாதாரணமாயச் சொல்வாள்.


“இனி நான் தேச்சுக்கிறம்மா. நீ போயி வீட்டு வேலையப் பாரு”


திரும்பும்போது அம்மா சத்தம் கேட்கும்.


“அவ்வளவு சாமானவும் கழுத்திலை போட்டுக் குளிக்கீகளே, அடிக்கடி தண்ணி பட்ட என்னாத்துக்காகும் கண்ணி இத்துப்போகாதோ”


அதற்குங் கூட பாட்டி நடுக்கத்திலே பதில் வைத்திருப்பாள்.


“ஆமடியம்மா தண்ணிக்கு இத்துப்போற சாமானும் செஞ்சு குடுப்பான் பாரு எனக்கு”


அம்மா வெளியூருக்குப் போகிற சமயம் நகைகளை இரவல் கேட்டால்கூட பாட்டி கொடுப்பதில்லை.


“காலங் கெடக்கிற கெடையில சாமான் போடவா முடியுது. ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகவே பயந்து கெடக்குது. இருக்கிறதப் போட்டுட்டுப் போனாப் போதும். ஆரும் கேட்க மாட்டாக”


நல்லவேளை அவன் அப்பா கூடப் பிறந்த அத்தையோ சித்தப்பாவோ இல்லை. அப்பா ஒருவர்தான். எப்படித்தான் அவரைப் பத்துவரை படிக்க வைத்தார்களோ.


தாத்தா சாக நாள் பிடித்தது. சட்டை போட்ட வாக்கில் ஈஸி சேரில் கண்ணயர்ந்திருந்தவர் எழுந்திருக்கவில்லை. சட்டைப்பையில் குத்தியிருந்த பேனாவை அப்பா எடுத்து அவர் பையில் சொருகிக் கொண்டார்.


அவன் கல்யாணச் சோறு தின்றுவிட்டுத்தான் கண்ணை மூடுவேன் என்று அடிக்கடி சொல்லுவார். பாவம், அதுவரை கூட்டில் உயிர் தங்கவில்லை.


அந்த யோகம் பாட்டிக்குத்தான் அடித்தது. அவன் வாத்தியார் வேலைக்குப் போய் கல்யாணம் முடித்து ஒரு மகனைப் பார்க்கும்வரை திடமாகவே இருந்தாள்.


எத்தனையோ முறை உயிர் இந்தா போகிறேன் என்று மிரட்டி முடக்குவாள். இரண்டாவது நாள் புடைத்தெடுத்த மாதிரி எழுந்து வெயில் காய்வாள்.


அம்மாவும் பீ மோத்திரம் எடுப்பதிலிருந்து சகல வேளைக்கும் சளைக்கவில்லை. அவன் மனைவியும் அம்மாவும் நான் முந்தி நீ முந்தி என்று பணிவிடை செய்தார்கள். காணாக்குறைக்கு அயலூரிலிருந்து அவன் அக்கா வேறு வந்து இருப்பு போட்டுக் கவனித்தாள்.


கடைசியில் தாமதமாய்த்தான் மூன்று பேருக்கும் பாட்டியைச் சுற்றி உட்கார்ந்து அழ வாய்த்தது. மயானத்திலிருந்து அப்பா கொண்டுவந்த பாட்டியின் நகைகளை அம்மா வாங்கிக் கொண்டாள். அவ்வளவையும் மறுநாளே மஞ்சள் தேய்த்துக் கழுவி அழுக்கெடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டாள்.


அவன் அக்கா அதற்குப் பிற்கு அவ்வளவாய் வீட்டுக்கு வருவதில்லை. முக்கியமான காரியத்திற்கு வந்தாலும் அவன் மனைவியுடன்தான் பெரும்பாலும் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்படுவாள்.


தாத்தா பேனாவை அப்பா வைத்துக் கொண்டது அவனுக்குக் கூட வருத்தந்தான். வெளியே எவ்வளவோ நல்ல பேனா விற்கத்தான் செய்கிறான். எல்லாம் தாத்தா பேனாவாக முடியாது. என்னேரமும் தங்கமாய் மினுங்கும். மூடியெது கீழ்ப்பாகமெது என்று கண்டுபிடிக்க முடியாதபடி திரடில்லாத வழவழப்பு. பேப்பரில் வைத்தால் பொரிந்து தள்ளும். முந்தி ஒருநாள் எழுதிப்பார்த்தது. வைத்திருந்தால் அப்படிப் பேனா வைத்திருக்கணும்.


பள்ளிக்கூடம் போய் கொஞ்ச நாளில் அவன் மகன் பேனா கேட்டு அடம் பிடித்தான்.


ஒரு பழைய பேனாவை எடுத்து ஒக்கிட்டுக் கொடுத்தான். அது மறுநாளே இருந்த இடத்தில் வாய் பிளந்து கொண்டு கிடந்தது. அவன் வைத்திருந்த பேனாவையே கேட்டு அழுதான்.


அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அப்பா மேஜைப்பக்கம் கைகாட்டி விட்டான். அவ்வளவுதான் அவர் குளிக்கப் போன சமயம் பேனாவை எடுத்து தரையில் எழுதி பின்னால் வளைத்து நெக்கைத் திருகி மறை கழண்டு ஆட்டம் குளோஸ். தாத்தாவைப் போல் அப்பாவுக்கு முன்னெச்சரிக்கை கிடையாது.


அப்பா பையனை பிடித்து கண்டபடி காதைத் திருகி வீங்கவைத்த பிறகும் கோபம் தணியவில்லை. எல்லோரையும் திட்டித் தீர்த்தார்.


“வீட்ல புள்ளையா பெத்து வச்சிருக்குதுக. கால சனியனா எறங்கியிருக்கானே..ஆகமான பேனா போச்சே.”


“என்னமோ பேனா போனதுக்குப் போயி புள்ளய இந்தப்பாடு படுத்தியிருக்கீகளே. இதுல்லனா வேற ஒண்ணு வாங்கிக்கிறது.”


“ஒனக்கென்ன தெரியும் அறிவு கெட்டவளே. இப்படிப் பேனா எவங்கிட்ட இருக்கும்.”


அவனும் அவன் மனைவியும் ஒன்றுமே பேசவில்லை. பிறகும் இரண்டு மூன்று நாட்கள் பையனை அவர் கண்ணில் படவிடாமல் வைத்துக்கொண்டதோடு அவன் பேனாவைப் பத்திரப் படுத்தவும் செய்தான்.


தாத்தா பேனாவுக்கு எங்கும் நெக்குக் கிடைக்கவில்லை. அவன் கேட்டான்.


“அத எங்கிட்டக் குடுந்திருங்களேம்ப்பா. எப்படியாச்சும் நெக்குச் சம்பாரிச்சு எழுக்கிறேன்.”


“நீ சம்பாரிச்சு எழுதிக் கிழிச்சது போதும். அது எங்கிட்டயே இருக்கட்டும்.”


அவர் வேறு பேனாவை எழுதப் பயன்படுத்திய போதும் தாத்தா பேனாவை ஒரு பார்வைக்காக பையில் குத்தில் கொள்ளத் தவறுவதில்லை.


ஒருநாள் அவன் பள்ளிக்கூடன் கிளம்பிக்கொண்டிருந்த போது பையில் பேனாவைக் கவனித்து விட்ட அப்பா கேட்டார்.


“நல்லா பேனாவா சம்பாரிச்சிருக்கயே. இண்ணக்கி ஒருநாள் எழுதக்குடேன். என் பேனாவ ரிப்பேருக்குக் குடுத்திருக்கென்.”


அவனும் தயங்காமல் சொன்னான்.


“இது ஏற்கனவே ரிப்பேருப்பா. சும்மா கெடந்துச்சு. இண்ணக்கித்தான் ரிப்பேருக்குக் குடுக்கலாம்னு எடுத்திட்டுப் போறென்.”


நாலாவது நாள் அவன் ஒரு விளாரை எடுத்துக்கொண்டு மகனை விரட்டி விரட்டி அடித்தான். எல்லோரும் பிடிக்கப் பிடிக்க அடித்தான். அவன் அப்பா மிரண்டு போய் கண்டித்தார்.


“அடே ஒனக்கென்ன வந்திருச்சு இப்ப. புள்ளையா என்னன்னு நெனச்ச. மடத்தனமா அடிக்கயே.”


அவன் வயிற்றெரிச்சலில் கத்தினான்.


“அவன் பண்ணீருக்கிற காரியத்துக்கு முதுகுத் தொலிய உரிச்சாக் கூடக் காணாது. அருமையான பேனாவ ஆணிவேற அக்கு வேற கழட்டிப் போட்டுட்டானே பாவி.”


“பெரிய பேனா. போடா போ. அண்ணைக்கே ரிப்பேர்னு சொன்னயே. அது போயித் தொலஞ்சா இனியொண்ணு வாங்கிக்கயேன்.”


அவன் மகன் அவருக்குப் பின்னால் ஒளிந்து நின்றிருந்தான்.


***


நன்றி : ’தேடல்’( ஜூன் 1978)


நன்றி - அழியாச் சுடர்கள்

06/12/2011

விரித்த கூந்தல் - சுரேஷ்குமார இந்திரஜித்

இவ்வளவு பெண்கள் விரிந்த கூந்தலுடன் இருப்பது அவனுக்குத் திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பெண்கள் விரிந்த கூந்தலுடன் உட்கார்ந்திருந்தார்கள். நின்று கொண்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்தார்கள். பலர் நனைந்த ஆடைகளுடன் இருந்தார்கள். அருவி, பிரம்மாண்டமான தோற்றத்துடன் இருந்தது. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் நீர்வீழ்ச்சியில், பாறையுடன் தேனடை போல அப்பியிருந்தனர். மிகவும் குறுகிய ஒரு நீர்வீழ்ச்சியில் (ஒரு நபர் மட்டுமே நிற்கலாம்) வரிசையாய்ப் பெண்கள் நின்று தலையையும், உடலையும் நனைத்து வெளியேறிக் கொண்டிருந்தனர். நிற்கும் ஒவ்வொரு பெண்ணின் தலையிலும் நீர் விழுந்து முகத்திலும் உடலிலும்  வழித்து ஓடிக் கொண்டிருந்தது. விழும் நீரினூடே தெரியும் முகங்கள் தூய்மையடைந்து மின்னிக் கொண்டிருந்தன. அவனின் கண்ணெதிரே பிருஷ்டம் வரை மறைந்த நீண்டு விரிந்த கூந்தலுடன் ஒரு பெண் சென்று கொண்டிருந்தாள். இந்த இடத்திற்கு வந்ததிலிருந்து விரிந்த கூந்தல் ஏற்படுத்தும் தொந்தரவுகளை, அவன் தன் நண்பரிடம் அவருக்கு விளங்கியும், விளங்காத வகையிலும் கூறிக்கொண்டு தானிருக்கிறான்.

விரித்த கூந்தலுடன் நான்கு பெண்கள் தங்கள் ஆடவர்களுடன் அவனைக் கடந்து சென்றனர். சாலையோரத்தில் குஷ்டரோகி ஒருவன், காசு விழுந்த தகர டப்பாவை ஆட்டி ஓசையை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். பாறையில் அமர்ந்திருந்த ஒரு குரங்கு எதையோ நக்கிக் கொண்டிருந்தது. அவன், தன் நண்பரிடம் விரித்த கூந்தல் ஒரு குறியீடு போலத் தன்னைத் துரத்திக் கொண்டிருப்பதாகக் கூறினான். ''எல்லாம் நீங்கள் பாவித்துக் கொள்வதுதான்'' என்று நண்பர் கூறினார். ''விரிந்த கூந்தல் கோபத்தையும், பிடிவாதத்தையும் காட்டுகிறது'' என்றான் அவன். இருவரும் நடந்து ஒரு அடர்த்தியான மரநிழலின் கீழ் இருந்த பாறையில் அமர்ந்தனர்.

நண்பர், அவனிடம் அவளை தற்போது அடிக்கடி சந்தித்ததுண்டா என்று கேட்டார். சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்றும் அபூர்வமாக சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அவன் பதில் கூறினான். அவளின் மண வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அது மிகவும் கடினமானது, இந்தப் பாறையைப் போல் தன்னுடைய பிடிவாதத்தால் அவள் தன் மண வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டாள். ''அவளின் பிடிவாதம் அவளின் கணவனைச் சில எல்லைகளுக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பிடிவாதம் எற்படுத்தும் சினம் அவளிடமிருந்து பல வகைகளில் வெளிப்பட்டு அவரின் பிடிவாதம் மேலும் உறுதியாகிறது என்றே தோன்றுகிறது'' என்றான். தொடர்ந்து இருவரும் மெளனமாய் அமர்ந்திருந்தனர்.

அவளின் கைவிரல்களும், கால்களும், கழுத்தும், முகத்தின் பக்கவாட்டுத் தோற்றமும் மிகவும் அழகானவை. அவள் மெலிந்திருந்ததைக் கண்டு, அதை அவன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினான். அந்தச் சந்தர்ப்பத்தின் தொடர்ச்சியான ஒரு நிகழ்வில்தான் அவள் முதன்முதலாக மணவாழ்க்கை பற்றி அறிவதாக கூறியிருந்தாள். அன்று இரவில், இன்றுதான் தனக்கு முதன்முதலாக மணமானதாகக் கூறினாள். அவளுக்கும் அவளின் கணவனுக்கும் இடையே உள்ள தாம்பத்ய உறவு அவளின் பிடிவாதத்தினால் இவ்விதமாகவே இருந்தது.

நண்பர் 'விரித்த கூந்தல் உங்களைத் துரத்துவதாக நினைப்பது ஏன்?'' என்று கேட்டார். அவன் ஒன்றும் கூறவில்லை. நண்பருக்கு அவ்வப்போது அவன் கூறும் விஷயங்களிலிருந்து ஏதோ ஒரு வகையில் கோர்வைப்படுத்த முடிந்தாலும் பல விஷயங்கள் புரிபடாமல் யூக வெளியில் தன்னை வந்து அழைத்துச் செல்வதாக தோன்றியது.

மலைமேல் இருக்கும் ஒரு அருவியைக் காண எண்ணி இருவரும் எழுந்து நடந்தனர். சிகரெட் பற்ற வைத்துக் கொண்டனர். சாலைக்குச் சென்று அங்கிருந்து பிரியும் மலைப் பாதையில் செல்ல வேண்டும். ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது பாழடைந்த ஒரு தேரின் அருகே தரையில் அலங்கோலமான ஆடைகளுடன் இளவயதுப்பெண் அமர்ந்திருந்தாள். தலையில் கலர் காகிதங்களை பூப் போலச் சொருகியிருந்தாள். அவனுக்கு தன் மனதில் அவள் உருவம் ஓர் இடம்பிடிக்க முயல்வதாகத் தோன்றியது. இவன் உதற, உதற அவள் உருவம் தடுமாற்றமின்றி சகஜமாக நுழைவதாகத் தோன்றியது. நண்பர் அந்தப் பெண்ணை கவனித்திருந்தாரா என்பதும், அவனுக்குத் தெரியவில்லை. அவரிடம் விசாரித்தால் அப்போதுதான் அவர் கவனத்துக்கே வருவதாக இருக்குமோ என்று தோன்றியதால் அவன் மெளனமாகவே நடந்து வந்தான். மலைப் பாதையின் இருபுறமும் உயரமான மரங்கள் வினோதமான வடிவங்களில் இருந்தன. சம தளமற்ற பிரதேசங்களில் இஷ்டத்திற்கு அழகாக வளர்ந்திருந்தன.மரங்களினூடே ஒரு பெண் மறைந்திருந்து தோன்றினால் நன்றாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. மற்ற ஆண்களின் வாழ்க்கையும் இவ்விதமாகவே இருக்குமோ என்ற சம்சமயமும் அவனுக்குத் தோன்றியது. பின்னோக்கிப் பார்க்கையில் இரண்டு பெண்கள் வலை விரித்துத் தான் சிக்கிக் கொண்டதை நினைவு கூர்ந்தான். அவள்கூட ஒரு தடவை ''நீங்கள் என்னிடம் சிக்கிவிட்டீர்கள்'' என்ற தன்னிச்சையாக கூறியிருந்தாள். ஆனால் தற்போதுள்ள மனோரீதியான உறவு இதையெல்லாம் பொருட்படுத்த இயலாத வகையில் மிகவும் சீரியசாக வளர்ந்துவிட்டது. பால்ய காலத்தின் தன் மனம் தன்னிச்சையாக நாடிய ஒரு பெண்ணுக்கும், தனக்கும் ஸ்தூலமாய் உறவு ஏதும் நிகழவில்லை என்பதை அவன் இப்போது நினைத்துக் கொண்டான். அப்பெண்ணிடம் தன் மனம் கொண்டிருந்த உறவு களங்கமற்றது என்று தோன்றிய அதே நேரத்தில், தான் அப்போது ஒரு அப்பாவி என்றும் தோன்றியது. மரங்களினூடே அப்பெண்ணின் முகம் தெரியுமானால் சந்தோஷமாக இருக்குமென்று அவன் நினைத்துக் கொண்டான். இந்த எண்ணம் தோன்றியவுடன் தேர் அருகில் பார்த்த பெண்ணின் முகம் மரங்களினூடே தோன்றி மறைந்தது.

எதிரே வந்த ஒரு குடும்பத்தினர் அவர்களைக் கடக்க சென்றபோது 'டி.வி. மகாபாரதம்' என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. ''இது டி.வியில் மகாபாரதம் திரையிடும் நேரமா?'' என்று நண்பரிடம் கேடடான். நண்பர் வாட்சைப் பார்த்துவிட்டு ''ஆமாம்'' என்றார். அதைத் தொடர்ந்து சிந்தனையில் திடீரென்று அவனுக்கு ஒன்று தோன்றியது. அது அவனுக்குப் புதிதாகவும் இந்த இடத்தில் வந்ததிலிருந்து இதுவரை தோன்றாத விஷயமாகவும் தோன்றியது. எப்படி தனக்குத் தோன்றாமல் போனது என்று ஆச்சரியம் அடைந்தான். விரித்த கூந்தல் தொந்தரவு தருவதற்கான காரணம் விளங்கிவிட்டது போலவும் தோன்றியது. திரெளபதியின் விரித்த கூந்தல் நினைவுக்கு வந்ததே, அவன் தெளிவுக்கு காரணம். ஓர் ஆஸ்திரேலியருக்கோ, ஓர் அமெரிக்கருக்கோ விரிந்த கூந்தல் இவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவனுக்குத் தோன்றியது. இந்திய மரபின் பின்னணியில் தன்னையறியாது நம் மனதில் விரிந்த கூந்தல் தொந்தரவு ஏற்படுத்தியது போலும் என்று அவன் நினத்துக் கொண்டான்.

தற்போது தன் மனம் லேசாகிவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது. உற்சாகத்துடன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு நடந்தான். அவனும் நண்பரும் ஏதேதோ அளவளாவிக் கொண்டு அருவியை அடைந்தனர். சுற்றிலும் உயரமான மரங்கள் அமைந்திருந்த ஒரு பெரிய பாறையின் தலையிலிருந்து நீர் விழுந்து பாறைகளினூடே ஓடையாக ஓடிக் கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக மூன்று நான்கு குடும்பத்தினர் குளித்துக் கொண்டிருந்தார்கள். பெண்களின் விரிந்த கூந்தலை சாதாரணமாகப் பார்த்துக் கொண்ருந்தான். நண்பர் குளித்து முடித்து ஆடையணிந்த சற்று நேரத்தில் பசி எடுக்கவே இருவரும் கீழே இறங்க ஆரம்பித்தனர்.

வழியில் சென்று கொண்டிருந்த இரண்டு விரிந்த கூந்தலை இருவரும் கடந்து சென்றனர். மலைப் பாதை முடிந்து சாலையை அடைந்தனர். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, தேருக்கு எதிர்ப்புறம் உள்ள திருமண மண்டபத்திலிருந்து நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் தேர்ப் பக்கம் பார்வையைச் செலுத்தினான். தேரின் அருகில் ஏற்கனவே இருந்த இடத்தில் அந்தப் பெண்ணைக் காணோம். நன்றாகப் பார்த்த போது பெரிய சக்கரங்களுக்கு இடையே தேரின் அடியில் அந்தப் பெண் காய்ந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு, ஒரு காலை மடித்து, மறுகாலை குத்துக் காலிட்டு மணமகள் போல் அமர்ந்திருந்ததைக் கண்டான். சாலையில் தென்பட்ட பெண்களின் விரிந்த கூந்தல் அவனுக்கு இப்போது பயத்தை ஏற்படுத்தியது.

நன்றி அழியாச் சுடர்கள்

05/12/2011

ஏழுமலை ஜமா - பவா செல்லதுரை

சொந்த ஊருக்குப் போகிறோம் என்கிற நினைப்பே மற்ற எல்லாத் துயரத்தையும் வடியச் செய்தது. உடல் முழுக்க புது ரத்தம் ஊறுவது மாதிரியிருந்தது. பஸ் முழுக்க கூட்டம் நசநசவென்றிருந்தது.


எல்லாவற்றிற்கும் பழக்கப்பட்டிருந்தது மனசு. சிட்டி ரவுண்ட் மார்க்கெட் மோரி நாத்தம் பழகி புதிய மணமாய் அவனுள் உறைந்திருந்தது. சீட் நெம்பர் தேடி உட்கார்ந்து ஆசுவாசமாய் பக்கத்தில் பார்த்தான். அழுக்கும் சோர்வும் அப்பிய முகங்களில் அதையும் மீறின லேசான உற்சாகம் துளிர்ந்ததைக் கவனிக்க முடிந்தது. ஊருக்குப் போகிறோம் என்கிற, துளியே துளியான சந்தோஷம்  அது. கிராமத்தில் இரண்டொரு நாளில் அது மறையும். பக்கத்து சீட்டில் இருப்பவனைப் பார்த்து விட்டு இவ்வளவு யோசிக்க முடிகிறது. இப்போது பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தது.


பெங்களூரில் சாய்ந்த தலை ஓசூரில் வந்துதான் நிமிர்ந்தது. அப்புறமும் தூங்க முயன்று, முடியாமல் முழித்துக் கிடந்தபோது வந்த பயம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.


ஏன் இப்படி சம்மந்தமில்லாத நினைவுகள் வந்து அலைகழிக்கிறது? எல்லாவற்றையும் சிட்டி ரவுண்ட் மார்க்கெட் மோரியிலேயே கரைத்தாகிவிட்டது. எதைப் பற்றியும் நினைக்காமல் ஊர்போய்ச் சேர வேண்டும். மனசு மட்டும்தான் இப்படி நினைத்தது. கண்கள் இப்படியும் அப்படியும் அலைந்தது. பஸ்ஸில் உட்கார்ந்திருப்பவர்களில் சிட்டி ரவுண்ட் மார்க்கெட் முகங்கள் அடையாளம் தெரிகிறது. பழக்கூடை சுமந்து காய்ப்பேறிய கைகள் அவனைக் கஷ்டப்படுத்துகிறது. அழுகை அழுகையாய் வருகிறது.


இறங்கி விடலாமா?


இல்லை. இந்த நகரம் இனியும் எனக்கு வேண்டாம்.


ஊருக்குப் போய் என்ன பண்ண?


குடும்பத்தோட கொளத்துல விழுந்து மாஞ்சாலும் சரி, இங்க வேணாம். கம்பியில் தலை சாய்ந்து, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான். எதற்கோ காத்திருந்தது போல, எது ஞாபகம் வரக்கூடாதோ அதெல்லாம் பிய்த்துக்கொண்டு வந்தது.


‘ஏழுமலை, கூத்தாடும் போதுதான் இந்த ஜிட்டு தலப்பெல்லாம். கூடை தூக்குறப்போ வேணாம். கெராப்பு வெட்டிக்கோடா.’


சொல்றவனுக்கு இவன் மகன் வயசிருக்கும். இங்கு எல்லாருமே போடா வாடாதான். எத்தனை வயசுக்காரனயும் இப்படி சொல்ல சிட்டி ரவுண்ட் மார்க்கெட் சீனியாரிட்டி தைரியம் கொடுத்திருந்தது. யாரும் எதையும் பேச முடியாது. மரியாதைக்கெல்லாம் ஆசைப்பட்டா எவன் கை வேணுன்னாலும் நீளும். கைகள் ஊர்வாரியா, ஜில்லாவாரியா, ஜாதிவாரியா பிரியும்.


எந்த நேரமாயிருந்தாலும் கூடையை இறக்கி வைத்துவிட்டு ஆட வேண்டும். பாதங்களில் சலங்கைகளின் சப்தம் எழ, சுற்றி ஆடின ஊர் ஞாபகம் மனசில் முட்ட, மார்க்கெட் கொய்யா இலையும், சப்போட்டா இலையும் காலில் மிதிபடும். மார்க்கெட்டில பல உருவங்கள் நின்று பார்க்கும். ‘‘லூசு’’ என்ற புரிதல் பல முகங்களில் எதிரொலிக்கும். அதெல்லாம்தான் அவனுக்கு மரண அடிகள், வேட்டைநாய் மாதிரி துரத்தித்துரத்திக் குதறியது. தப்பிக்க, எங்கும் ஓடிப்போக முடியவில்லை. சுற்றிச்சுற்றி சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டுக்குள்ளேயே வாழ்க்கை அவனை இயக்கிக் கொண்டிருந்தது.


மீறியாகி விட்டது. இதுவரை இவன் மென்னியைப் பிடித்துக் கொண்டிருந்த வாழ்வின் கலகத்தைத் திருப்பி இறுக்கியாகி விட்டது. இனி ஊர்போய்விட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் வெளியாக இந்த எண்ணம் உருக்கொண்டது. ஊர்தான் இவனை நெட்டித் தள்ளி காண்டோன்மென்ட் நெரிசலில் தள்ளியது என்பதெல்லாம் இதுவரை இருந்த வெறியில் ஞாபகம் வரவில்லை. ஆனால் இந்த பஸ் பயணம் இப்போதே அதைக் கொண்டு வந்து ரப்பர் பந்து மாதிரி மனசில் மோதுகிறது.


சுற்றுப்பக்கம் இருபது மைலுக்கு இருபது மைல் ‘‘ஏழுமலை ஜமா’’ தான். பாக்கு வைக்கும்போதே கிராமங்களுக்குள் போட்டி கிளம்பும். அத்தனை மவுசிருந்தது ஏழுமலை ஜமாவின் சலங்கை சத்தத்திற்கு. கிராமங்களுக்குப் பெரும்பாலும் நடந்தே புறப்படுவார்கள். அது ஒரு மாதிரியான போதை. வழிநெடுகப் பேசிக் கொண்டே போவது. சாராயம் விற்கிற புதரை நோக்கிக் கால்கள் தானாக அடையும். ஒரு மாதிரியான பக்தியோடு யாருக்கும் அதிகமாகி விடாமல் மருந்துமாதிரி குடிப்பார்கள். அப்புறம் பேச்சு நின்றுவிடும். பாட்டு... பாட்டுதான் வழிநெடுக.


பாட்டின் சத்தமும், லயமும், இந்தப் பிறவிக்கான முழு சந்தோஷத்தையும் இம்மி, இம்மியாக அனுபவிக்கிற மாதிரி மற்றவர்களைப் பொறாமைப்படுத்தும் அடர்த்தியான அந்த ராத்திரிகளின் நினைவுகள்தான் இவனை பஸ் ஏற்றி விட்டிருக்கிறது. விடியவிடியக் கூத்து நடக்கும். மறக்க முடியாத கதைகள். கூத்து முடிய, காலை பத்து, பதினொன்றுகூட ஆகும். வேஷம் கலைக்காமலேகூட படுதாவுக்குப் பின்னால் சாராயம் குடிப்பார்கள். புதுசாய்ப் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாய் இருக்கும். பீமன், தர்மர், துரியோதனன், கர்ணன் என்று ஆளாளுக்கு ஒரு டம்ளரை உள்ளே இறக்குவார்கள்.


அநேகமாய்ப் பல ஊர்களில் ஏழுமலையை விட்டுவிட்டு ‘‘ஜமா’’ ஊர் திரும்பும். ஏழுமலைக்கென்று திறக்கும் கதவுகளும், ஒரு கோடி பிரியத்தோடு பரிமாறப்படும் மாட்டுக்கறியும், சாராயமும், ராத்திரிக்கு கிடைக்கும் ஒடம்பும் என அவனுடைய வாழ்வின் சுவாரஸ்யங்களே தனிதான். ரெண்டு மூன்று நாட்கள்கூட ஆகும் ஊர் திரும்ப.


திகட்டத்திகட்ட வாழ்கிற மாதிரி இருந்தது, செல்லங்குப்பம் கூழ்வார்க்கும் விழா நோட்டீஸ் வருகிறவரை. நம்பமுடியாமல் மறுபடி மறுபடி படித்தான். நோட்டிஸின் கீழே கொட்டை எழுத்துகளில் போட்டிருந்தது. இரவு எட்டு மணிக்கு ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே வீடியோ படம் காண்பிக்கப்படும். ஏதோ மனசுக்குள் அறுந்து விழுவது கேட்டது. இவன் திமிரத்திமிர ஒரு திகில் வந்து வலுக்கட்டாயமாய் இவனுள் நுழைவது புரிந்தது.


‘‘இன்னாடா இது, சாமிக்கு முன்னாடி, சினிமாக்காரனை ஆடவுட்ரானுங்க’’, வேதனை வாய்வழியே சிந்திவிடாமல் கேட்டான்.


அதன் நியாயம் பல வகைகளில் அவனுக்கு விளக்கப்பட்டது.


‘‘உங்களுக்குன்னா ரெண்டாயிரம், மூவாயிரம் ஆவும். இது முன்னூறு நானூறுல எல்லாம் முடிஞ்சிடும். மழை மாரி இல்லாத இந்த நேரத்தல ஜனங்க கைல காசு இல்லைன்னா...’’


‘‘போதும், போதும். நிறுத்திக்குங்க.’’ தாங்க முடியவில்லை. அவனுக்கு எல்லோருக்கும் முன்னால் ஆத்திரம் சிதறியது.


அப்பறம் சுத்துப்பக்க கிராமத்துல இருந்து வந்த எல்லா நோட்டீஸ்களிலும் நடிகர், நடிகைகள் பெயராகத்தான் மாறியிருந்தது. இத்தனைக்குப் பிறகும்கூட சில ஊர்த்தெருக்களில் கூத்து நடந்து கொண்டிருந்தது இவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.


‘‘இந்தக் காலனிக்காரனுங்கதான் இப்படி சினிமாக்காரனுக காலுல உழுந்துட்டானுங்க ச்சீ... இந்த ஜாதில பொறந்தம்பாரு’’ சதா இதே புலம்பல்தான். கூத்துக்காக இதுவரை ஊர்த்தெருவில் இந்தப் பாதம் பட்டதில்லை.


கரும்பு வெட்ட, சூளை போட, ரிக்ஷா ஓட்டவென்று, தர்மரையும், பீமனையும், பாஞ்சாலியையும் வாழ்க்கை பிரித்தனுப்பியது. இவன்தான் பிடிவாதமாய் எதிர்த்து நின்றான்.


எந்தப் பிடிவாதமும் ஒரு மாசத்துக்குக் கூட தாக்குப் பிடிக்கவில்லை. ஊருக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, நடுராத்தரியில் பெங்களூருக்கு பஸ் ஏறினான். போதும், போதும் என்னை நெரிக்காதே என்று ஏதோ எதிரில் நின்ற பிசாசிடம் கெஞ்சுவது மாதிரிதான் சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டில் இருந்து இதோ இப்போது தப்பியது.


தெருவில் நடக்கிறபோது ஒன்றிரண்டு வீட்டு அரிக்கேன் விளக்குகள் விழித்திருப்பது தெரிந்தது. நடை தானாகவே சத்தத்தை குறைத்துக் கொண்டது. இவனுக்கு இவ்வளவு அந்நியமாகிவிட்ட ஊரைப் பார்க்கப் பார்க்கக் கோபமாய் வந்தது.


சத்தம் போடாமல் வள்ளியை எழுப்பினான். ரெண்டு பேருக்குமே பேச ஏதுமற்றுப்போனது. விரித்திருந்த பாயில் படுத்து அவள் பழைய புடவையைப் போர்த்திக் கொண்டான். அவள் இவனைப் போர்த்திக் கொண்டாள்.


மத்தியானத்துக்கு மேல், இவன் வந்திருப்பது ஊருக்குத் தெரிந்தது. ஒவ்வொரு கூரையிலும், கேள்விகள் முளைத்தது. இதுக்குப் பயந்துதான் பெங்களூருக்கு ஓடினது. மீண்டும் அதே கேள்விகள். எப்படி ஏழுமலை வந்தாப்பலே?


இப்படித்தான் துவங்கின அவை. அப்புறம், அவை காயத்தில் குத்துகிற கோணி ஊசிகளாய் மாறும், மாறின. சித்தப்பிரமை பிடித்தவன் மாதிரி எல்லாருக்கும் ஒரே பதில் சொன்னான்.


‘‘அப்புறம் இன்னா பண்ணப் போற?” யார் மூலமோ வாழ்வு அவனைக் கேட்கிற அழுத்தமான கேள்வி இது. முடியவில்லை இதற்கு பதில் இல்லாமலே பெங்களூரை விட்டுப் புறப்பட்டிருக்கிறான்.


இருட்டினதுக்கப்பறம், ‘‘ஜமா’’ ஆட்கள் விசயம் கேள்விப்பட்டு வந்தார்கள். அதே மரியாதை இருந்தது ஒவ்வொரு மொகத்திலும். கரும்பு வெட்டக் கூப்பிட்டார்கள், சந்தையில் மாட்டுத்தரவு செய்வது கவுரவமான தொழில் என்றார்கள், எதையும் கேட்கிற மாதிரி இல்லை மனசு.


‘‘எவனுக்கும் கூத்த போடலாம் வாத்தியாரேன்னு சொல்ற தைர்யம் வரலையே’’ என்று குச்சியால் தரையைக் கிளறிக் கொண்டிருந்தான்.


எல்லாரும் போனபிறகு மனசு கனத்திருந்தது. எதுக்கோ ஏங்கியது. வாடகைக்கு சைக்கிள் பேசி எடுத்துக் கொண்டு வேளானந்தலை நோக்கி மிதித்தான். பிரிட்ஜ்ஜைத் தாண்டுகிற போது ஆசை வந்தது.


‘‘பாடிப் பார்க்கலாமா?”


முடியவில்லை திட்டுத் திட்டாய் மனதில் உறைந்திருந்த ரத்தக் கறைகளில் பாட்டும் சந்தோஷமும் ஒட்டிக் கிடந்தன. பாட்டுக்கு ஏதோ ஒன்று முட்டித் தள்ளுவதும், பின்பு அதுவே கையைப் பிடித்துக் கொள்வதுமாய் அவஸ்தைப் பட்டான்.


மொத்தமாய் நாலு டம்ளர் குடித்து, பச்சை மொளகா அதிகமா போடச் சொல்லி, மொச்சையை கையில் வாங்கி சைக்கிள் மிதிச்சப்போ நிதானம் இழக்க ஆரம்பித்தான். இன்னைக்கு மத்தியானம் கண்ணுசாமி காட்டின கோணலூர் கூழ் ஊத்ர நோட்டீஸ் ஞாபகம் வந்தது. ‘‘அம்மன் கோயில் கிழக்காலே’’ கலர்ப் படமாம்.


சொந்த ஊரே இவனை எட்டி ஒதைச்சி, வேணான்னு முடிவு செஞ்சிட்டப்புறம் இனி எவன் கூப்புடுவான்? சொந்த ஊர்க்காரனை விட, விஜய்காந்தும், ராதாவும் முக்கியமாகி விட்டது ஊருக்கு.


பிரிட்ஜ்ஜை தாண்டும்போது லாரி ஒன்று இவனைக் கடந்து போனது. நிதானமாக சைக்கிள் ஓட்ட முயன்றான்.


வடக்கே இருந்து கூத்துப்பாட்டு சத்தம் கேட்டது.


பிரமை. வெறும் பிரமை. நாளெல்லாம் இதே நெனப்போட இருந்தா இப்படித்தான்.


இல்லை சைக்கிள் நகர நகர பாட்டு துல்லியமாகிக் கொண்டே வந்தது.


இப்போது பெட்ரோமாக்ஸ் வெளிச்சமும் தெரிந்தது. வெறிபிடித்த பிசாசு மாதிரி சைக்கிள் வேகமெடுத்தது. மண்ரோட்டில் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தட்டுத் தடுமாறி மரத்தடிக்கு நடந்தான்.


பத்துப் பதினைந்து உருவங்கள் மங்கலாய்த் தெரிந்தன. மர ஸ்டூல் போட்டு ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். கையில் பெரிய நோட்டிருந்தது. கூத்துப் பழகிக் கொண்டிருந்தவர்கள் எல்லாருமே புது ஆட்கள், எல்லார் முகத்திலும் அது திட்டுத்திட்டாய்த் தெரிந்தது. ஒரு செடி, மனசுக்குள் முளைப்பது மாதிரி இருந்தது இவனுக்கு. தள்ளாடி விழப் போனவனை மரம் தாங்கிக்கொண்டது. கூர்ந்து அந்தக் கால்களைப் பார்த்தான். சரியில்லை. அந்தக் கிருதாக்காரனின் அடவு தப்புத் தப்பா வருது. உள்மனசு இவனுக்குள்ளேயே பேசிக் கொள்வது கேட்டது. என்ன வாத்தியார் இவன், அடவைக் கவனிக்காம புஸ்தகத்தைப் பாத்து படிச்சிட்டா போதுமா, ‘‘அடவு தாண்டா உசுரு ஆட்டத்துக்கு.’’


கிருதாக்காரன் தொடர்ந்து தப்புப் பண்ணிக் கொண்டே இருந்தான். ஏதோ உள்ளிருந்து கிளம்ப, ‘தகிதோம், தகிதோம்’ என அந்த வட்டத்துக்குள் பெரிய வன்முறையாளனைப் போலக் குதித்தான். அவசரமாய் ஒருவன் பெட்ரோமாக்ஸ் விளக்கை நகர்த்திக் கொண்டான். அவனுக்குள்ளிருந்த வெறிபிடித்த பேய் விடாமல் ஆடியது.


மடேரெனக் கீழே விழந்தபோது, ரெண்டொருவர் அதிர்ந்தனர். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், ஒரு கை மூக்கில் கை வைத்துப் பார்த்தது.


‘‘மூச்சி இருக்கு’’


‘‘போதை போலிருக்கு.’’


வாத்தியார் நிதானமாய் எழுந்து வந்தார். முகத்தைத் திருப்பி வெளிச்சத்தில் பார்த்தார்.


‘‘நம்ம கோணலூர் ஏழுமலை’’


எல்லோரும் வாத்தியாரையே பார்த்திருந்தார்கள். யாருமே எதிர்பார்க்காமல் அவர் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு ‘‘தண்ணி கொண்டாடா’’ என்ற சத்தத்திற்குப் பலகால்கள் ஓடின. அந்த வார்த்தைகளில் அவ்வளவு பிரியமும் ஏதோ நம்பிக்கையுமிருந்தது.


*******

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் - பவா செல்லதுரை

பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்திலேயே அற்புதம் பாட்டிக்கு முழிப்பு தட்டியது. பக்கத்தில் தன் கதகதப்பிலும், வெற்றிலைச் சாறின் கார நெடியிலும் பழக்கப்பட்டு தூக்கத்திலிருந்தவனைக் கிள்ளி எழுப்பினாள். பாட்டியின் நகங்கள் அவனைத் தவிர எல்லோருக்கும் பயமூட்டக்கூடியவை. அவள், நகநுனிகளில் உலகின் பல ஜால வித்தைகளை வைத்திருந்தாள். மூன்றாவது கிள்ளலில் துடித்தெழுந்தான். இருளின் அடர்த்தியைக் குறைக்க வெளியில் ஒரு முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கையில், பாட்டி தெருவில் நின்று வடக்கால் திரும்பி மலை பார்த்தாள். பனியும், தூறலும், பத்தாதென்று மேகமும் மறைந்த போதும், ஒரு சிம்னி விளக்கொளி மாதிரி தீபம் தெரிந்தது. கண்களில் தெரித்து விழுந்த ஈரத்துளிகளை வழித்துப் போட்ட கையோடு மலை நோக்கிக் கும்பிட்டாள். மறுபடி வீட்டுக்குள் நுழைந்து தயாராக மடிக்கப்பட்டிருந்த இரண்டு கொங்காணிகளை எடுத்து ஒன்றை அவனுக்குப் போட்டுவிட்டாள். ஒரு பெரிய கூடையை இடுப்பில் இடுக்கி சாக்கு போட்டு மூடினாள். அதில் ஒரு சிறு கூடை, ஒரு பித்தளை சொம்பு, அவள் வெத்திலை இடிக்கும் உரல், உலக்கை இருந்தது.


அவள் நடைக்கு அவன் ஓட வேண்டியிருந்தது. தார்ரோடு இரவெல்லாம் நனைந்த ஈரத்திலிருந்தது. செருப்பில்லாத கால்கள் ஈரத்தைத் தலை உச்சிவரை கொண்டுபோய்க் குளிரவைத்தது. அவள் உடல் நடுக்கத்திற்கு அவனை இழுத்தணைத்து நடத்தினாள்.


குறுக்கால் பிரிந்த மண்பாதையின் நுழைவிலேயே, தாறுமாறாய் வளர்ந்திருந்த சப்பாத்திக் கள்ளிகளின் நெருக்கம் யாருக்கும் தரும் லேசான பயத்தைத் தந்தவாறிருந்தது. அற்புதம் பாட்டியின் காய்ப்பேறிய கரங்களின் நெருக்கலில் அவன் இன்னும் ஒடுங்கினான். வழியெங்கும் யாரோ அளவெடுத்து நட்டு வைத்த மாதிரி வளர்ந்திருந்த பனைமரங்கள் அவர்களுக்கான பாதைக்கு வழிகாட்டிகளாய் நின்றிருந்தன. கேட்கும் மழை சத்தம், பறவைகளின் விடியற்கால ஆரவாரச் சப்தங்களை முற்றிலுமாக உறிஞ்சி விட்டிருந்தது.


நடை நின்று, நிலத்தில் ஊனியது கால்கள். சனிமூலை ‘மென‘ பிடித்தார்கள். ராத்திரி கவுண்டர் மல்லாட்டை பிடுங்க ஆள் கூப்பிடும்போதே அற்புதம் பாட்டி முடிவெடுத்தாள், மொத ஆளா நெலத்துல நின்னு, சனிமூலை மென புடிக்கணும்.
பிடித்தாள்.


கறுப்பேறி பழுத்திருந்த இலைகளும், இலை உதிர்ந்து மொட்டையாய் நின்றிருந்த காம்புகளும், காய்களின் உள்முற்றலை வெளிச்சொல்லிக் கொண்டிருந்தன. குனிந்து பத்து செடி புடுங்கியவளுக்கு, மெல்ல ஒரு பயம் தன் மீது கவிழ்வதை உணரமுடிந்தது.


அவசரப்பட்டு முன்னாலேயே வந்துட்டுமோ? நாம மட்டும் தனியா நிக்கறதைப் பாத்தா எவனும் என்ன நெனப்பான்? யோசனைகளைச் சுத்தமாய்த் துடைப்பது மாதிரி முப்பது நாப்பது ஆட்கள் தூறலில் நனைந்து கொண்டே நிலமிறங்கினார்கள்.


‘‘கெழக்கத்தி ஆளுங்களா?’’


அந்த நாளின் முதல் வார்த்தை அற்புதம் பாட்டியிடமிருந்து நடுங்காமல் கொள்ளாமல் மழை சத்தத்தை மீறிக் கேட்டது. பதிலையும் அவளே ஊகித்த மாதிரி, அதற்காகவெல்லாம் காத்திருக்காமல், இதுவே அதிகம் என்பது மாதிரி குனிந்தாள். மாரணைத்து குவிந்த செடிகளோடுதான், மீண்டும் நிமிர முடிந்தது. அவள் இருப்பை சுத்தமாக மறந்திருந்தாள்.


துவரஞ்சாலைக்குள் அடர்ந்திருந்த செடிகள், அவளின் ஆவேசமான அலசலில் வேரோடும், சேறோடும் குவிந்தன. முன்பே அறிந்ததுதான் எனினும், பாட்டியின் இந்த வேகம் அவனை நிலை குலைய வைத்தது. மேற்கு மரிச்சில் ஏறி நின்றுதான் திரும்பினாள். கெழக்கத்தி ஆட்கள் முக்கால் மெனை ஏறிவிட்டிருந்தார்கள்.  தூறலின் மீதே நிகழ்ந்த விடியலின் வெளிச்சம் அழகு நிரம்பியதாயிருந்தது.


புடுங்கிப் போட்டுக் குவித்திருந்த மல்லாட்டைச் செடிகள் அவனுக்கு மலைப்பாகவும், அவளுக்குச் சாயங்காலம் வரை தாங்குமா? என்றுமிருந்தது.  முழங்கை பெரிசுக்கு தடித்திருந்த ஒரு துவரஞ்செடிக்கு மேல், ஒரு பழம்புடவையை விரித்தாள். மழை பெய்தால் மழைக்கு, வெய்யிலடித்தால் வெய்யிலுக்கு.


பெரிய்ய கூடையைப் பக்கத்தில் இருத்தி, சிறு கூடையில் காய்களை ஆய்ந்தாள். பாட்டியின் உக்கிரமான முறுக்கலில் செடிகள் காய்களைக் கூடைக்குள் உமிழ்ந்தன. அந்த வேகம் ஒரு இயந்திரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கக் கூடியதாயிருந்தது.


அவன், பேருக்கு ஒன்றிரண்டு காய்களைக் காம்போடு பிய்ப்பதும், கூடைக்குள் போடுவதும், பித்தளைச் சொம்பில் நிரப்புவதும், நிரம்பும் முன் பெரிய கூடைக்குள் கவிழ்ப்பதுமாக, அந்த அதிகாலையை வேடிக்கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான். பாலேறி முற்றி, பெற்ற மழையீரத்தில் முளை விடத்தயங்கிய காய்களாகப் பொறுக்கி, பாட்டி அவனிடமிருந்து பிடுங்கிய பித்தளை சொம்பில் போட்டாள்.


அவள் கைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். செடிகளை முறுக்கி உதிரும் காய்களில், முத்துக்களை அவள் தனியே பிரிப்பதற்கு ஒரு துளியும் தனியே முயற்சிக்காது, அது தன்னால் பிரியும் என்பது போல இயங்கினாள். சொம்பு நிரம்பியதும் ‘‘உரிச்சி துண்ணு’’ என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவன் அந்த ஈரமான காலையில் உற்சாகமேறியிருந்தான். முதல் காயை எடுத்து உரித்தான்.


ரோஸ்நிறப் பருப்பில் இளம் மஞ்சளாய் முளைவிட்டிருந்த இடத்திலிருந்து ஓர் உயிர் துடிப்பதை உணர்ந்தான். இவனின் அதிர்வுக்கு முன்பே ஒரு இளவரசியைப்போல மின்னும் அழகோடு அவள் இவன் முன் உட்கார்ந்திருந்தாள். பிரமிப்பும், ஆச்சர்யமும், லேசான நடுங்குதலும், நிறைய சந்தோஷமும் குழைய, குழைய அடுத்த காயை உரித்தான், இதோ இன்னொரு இளவரசி.


இரண்டு இளவரசிகளும், இவனோடு காய் உரிப்பதில் சேர்ந்து கொண்டார்கள். உரிக்க உரிக்க ரோஸ் நிறப் பெண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் பேரழகோடு ஒளிர்ந்து இவன் கண்களைக் கூச வைத்தார்கள். இந்த விந்தைகளில் சம்மந்தமில்லாதவளாக அற்புதம் பாட்டி, சிறு கூடையை நிரப்புவதும், அதைப் பெருங்கூடையில் கொட்டுவதுமாய் இயங்கிக்கொண்டிருந்தாள்.


அவள் இவனையோ, இவள் எதிரிலும் பக்கத்திலுமாக சூழ்ந்திருக்கும் பெண்களையோ கவனிக்கும் பிரக்ஞையற்று இருந்தாள். துவரஞ் சாலைகளுக்கூடாக நீண்ட ரயில்பெட்டி மாதிரி நின்றார்கள் அச்சிறுமிகள். இவன் முதல் ஆளாக நின்றான். இவன் பின்பக்கச் சட்டையைக் கொத்தாகக் கசக்கிப் பிடித்து நின்றிருந்த பெண் ராஜாம்பாள் மாதிரியே இருந்தாள். அவள் மீதிருந்து கிளம்பிய லேசான வாசனை நிரம்பிய நாற்றம் ராஜாம்பாளிடமிருந்து ஏற்கனவே சுவாசித்தது. அவர்களின் ரயில் வண்டி சத்தமின்றி புறப்பட்டது. இந்த விந்தைகளைப் பார்க்காமலேயே அற்புதம் பாட்டியைப் போலவே கிழக்கத்தி ஆட்களும் காய் ஆய்வதில் மும்முரமாயிருந்தார்கள்.


இவர்கள் ரயில், கருவேடியப்பன் கோவில் வேப்ப மரங்களுக்கிடையே தேங்கி நின்ற இருட்டில் நின்றது. இவன் முற்றிலும் பயம் உதிர்ந்து குதூகலமாயிருந்தான். ராஜாம்பாள் உடனான நாட்களில் அவனிருந்தது போலவே இந்நாள் அவனை மாற்றியது.
‘‘இருளக் குட்டிக்கூட என்னடா வெளையாட்டு’’ என்று இவனை அறுத்துக் கொண்டு போய், டவுனில் டி.வி. ஆண்டனாவில் கட்டிப் போட்டு, தினம், தினம் வீசும் காற்றில் துடித்துக் கொண்டிருந்த நூல், இன்று அறுந்து விட்டது மாதிரியிருந்தது.
அச்சிறுமிகள் சிரிப்பதும், பேசுவதுமாயிருந்தார்கள். சிலர் லேசாக பாடக்கூடச் செய்தார்கள். எல்லாருமே, ராஜம்பாளின் முக ஜாடையை ஒத்திருந்தார்கள்.


இவர்கள் ரயில் வண்டி கருவேடியப்பனின் கோவிலில், உடைந்து சிதிலமாகிக் கிடந்த குதிரைகளில் ஏறி... அசைகிறதா? நிற்கிறதா? எனக் கணிக்கமுடியாத ஒரு நதியின் கரையில் நின்றது. நதியின் மேற்பரப்பு முழுக்க கண்ணாடியிட்டு மூடியிருந்தது மாதிரியும், எந்த விநாடியும் இது அவர்களை உள்ளே இழுத்துக்கொள்ள சித்தமாயிருப்பது மாதிரியும் இருந்தது.
ஓடி வந்த களைப்பில் நதியின் மடியில் இளைப்பாற அவர்கள் எல்லோரும் ஒரே நேரம் முடிவெடுத்தார்கள். பெரும் நாக மரங்கள் நதியின் கரையோரம் அடர்ந்திருந்தன. அது கார்த்திகை மாதமானதால் பழமோ காயோ அற்று, இலைகளால் மட்டும் அடர்ந்திருந்தது. காலை வரை நீடித்திருந்த தூறலின் மிச்சங்கள் ஒன்றிரண்டாய் சொட்டிக் கொண்டிருந்தது.


சப்தமற்று ஒருத்தி, உள்ளங்கால் மட்டும் நதியில் நனைய இறங்கி, தன் பாவாடையை ஏந்தினாள். கெண்டை மீன்கள் துள்ள, துள்ள அவள் ஓடிவந்த உற்சாகம் அங்கிருந்த எல்லோரையும் தொற்றிக் கொள்ள, ஓணான் கொடி பிடுங்கி நாக மரத்தில் ஏறி, ஊஞ்சல் கட்டினார்கள்.


மரம் முழுக்க சிறுமிகள் பூத்திருந்த பேரழகை நாக மரங்களும், களங்கமற்றிருந்த நதியும் மட்டுமே அன்று பார்த்தன. ஒவ்வொருத்தியாய் உட்கார்ந்த ஓணான்கொடி ஊஞ்சல் நதியின் கரையிலிருந்து, நதியின் நடுமுதுகுவரை அநாவசியமாகப் போய் வந்தது. அவர்கள் எல்லோருக்குமே நதியின் அக்கரைக்குப் போகும் ஆவல் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.  அவன் பெரும் உற்சாகத்திலிருந்தான். ஒவ்வொருத்தியாய் ஊஞ்சலில் உட்கார்த்தி வைத்து, தள்ளிவிடும் அவனின் உந்துதல் மேலும் வலுப்பெற்றிருந்தது. அதில் நதியின் அக்கரை நோக்கிய இலக்கிருந்தது.


ஒவ்வொரு சிறுமியின் ஸ்பரிசமும், ராஜாம்பாளின் தொடுதல் களையே நினைவூட்டின. நதியின் அக்கரையில் ஒவ்வொருவரும் நனைந்த உடைகளோடு விழுந்து கொண்டும், இறங்கிக் கொண்டுமிருந்தார்கள்.


மீன் பிடித்து மடியில் தேக்கி வைத்திருந்தவள், ஊஞ்சல் போகும் போது ஒரு கையில் ஓணான் கொடி பிடித்து, இன்னொரு கையில் மீன் நிரம்பிய மடி பிடித்தும் போனது மற்ற சிறுமிகளை ஆரவாரக் கூச்சலிடவைத்தது. எல்லோரையும் போய் சேர்த்து விட்ட ஓணான் கொடி ஊஞ்சல் திரும்பி வராமல் நதியின் இடையில் நின்று கொண்டது. அதுவரை பீறிட்ட அவன் உற்சாகத்தை திடீரென வந்த நதிநீர் அடித்து போனது.


அவன் ஊஞ்சலை தன் பக்கமிழுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோற்றான். நாகமரத்திலிருந்து நதியில் குதித்து நீந்துவது என முடிவெடுத்த கணம், நதியின் ஆழமும், குணமும் அறியாமல் குதிப்பது குறித்த எச்சரிக்கையும், கண்ணாடி போர்த்தி உறங்கும் அதன் பேரமைதி குறித்த பயமும் அவனுக்குள் முளைத்தது. எதிர்ப்பக்கச் சிறுமிகள் ஆரவாரமாய் இவனைத் தங்கள் பக்கம் அழைத்தார்கள்.


இஞ்சின் இன்றி அவர்கள் ரயில் அறுந்து கிடந்தது. அந்த நிமிடத்தில் எது நடப்பினும் பயமற்று நதியில் குதித்தான். இவன் நினைத்த மாதிரி எதுவுமற்று, நதி ஒரு குழந்தையைச் சுமப்பது மாதிரி தன் முதுகில் சுமந்து, இவனுடைய ராஜாம்பாள்களிடம் இவனைச் சேர்ப்பித்தது.


பெரும் கானகத்தின் நுழைவாயில், நதியின் அக்கரை. பருத்திருந்த மரங்களின் திண்மைகள் இதுவரை அவன் பார்த்தறியாதது. அடிக்கடி கேட்ட விநோதமான குரல்களும், கேட்டிராத சப்தங்களும், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருந்த பயத்தை உதிரச்செய்து முற்றிலும் பயமற்ற வெளிக்கு அழைத்து சென்றன. மரங்களுக்கிடையே படுத்திருந்த பாறைகள். நீண்ட கவனிப்புக்குப் பிறகே பாறைகள் என ஊர்ஜிதமாயின. ஒரு மரம் முழுக்க தலைகீழாய்க் காய்த்திருந்த வெளவ்வால்கள் அவர்களைத் தங்கள் மௌனம் நிரம்பிய உலகுக்கு அழைத்தன. அப்படிப் போக மனமற்று, சப்தமும், ஆராவாரமும், பெரும் கூச்சலும், பாடல்களும், பறவைகளின் கீச்சொலியும் நிரம்பிய உலகில் இருப்பதையே அவர்கள் எல்லோருமே விரும்பினார்கள்.
காய்த்து, பழுத்து இருந்த காய்களையும், பழங்களையும் பறித்து எல்லோருமே அவனுக்காக மட்டுமே தந்து கொண்டிருந்தார்கள்.


ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது.


வாழ்வு, அதுவரை தந்திராத சுவையை அவர்களுக்காக, வழங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி, மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள். அவர்கள் உற்சாகமும் விளையாட்டும் எல்லை கடந்திருந்தன.


கானக அமைதி கலைந்து, இவர்களால் குதூகலம் சூழ்ந்திருந்த, அதுவரை யாரும் யாரோடும் அறிந்திராத உலகத்தில் அவர்கள் சுற்றினார்கள். தொடர்ந்து நீண்ட விளையாட்டில், அவர்கள் களைப்புறாதவர்களாயிருந்தார்கள். நிமிடங்கள் கடக்க, கடக்க அவர்கள் புதுசாகிக் கொண்டேயிருந்தார்கள். புதுப்புது விளையாட்டு களில் மூழ்கி, எழுந்து, அடுத்ததற்குப் பயணமானார்கள்.


‘‘கண்ணாமூச்சி ஆடலாமா?’’


உடனே சம்மதித்தான். மரத்தில் முகம் புதைத்து நூறு வரை எண்ண வேண்டும். பரவியிருந்த மரங்களின் இடைவெளிகளில் அவர்கள் மறைத்தார்கள்.


மீன் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடுமென, செத்து, விரைத்திருந்த மீன்களை அவன் காலடியிலேயே கொட்டிவிட்டு ஓடினாள் அவள்.


ஒண்ணு... ரெண்டு... மூணு...
நூறு... நூறு...


கானகம் முழுக்கத் தேடியும் அவர்கள் யாரும் அகப்படவில்லை எல்லா மரப்பருமன்களும் அவர்களின் மறைவின்றிதான் இருந்தது. அவன் துக்கத்தின் ஆழத்திற்குப் போய்க்கொண்டேயிருந்தான்...


‘‘ராஜாம்பா... ராஜாம்பா... ராஜாம்பா...’’


அவன் குரல் சிதைந்து சுக்குநூறாகி நதியில் வீழ்ந்தது. அவர்களின் ஓணான்கொடி ஊஞ்சல் அறுந்து நதியில் மிதந்து கொண்டிருந்தது. பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்த அவன் அழுகை கொஞ்ச நேரத்திலேயே கேவலாய் மாறியது. கருவேடியப்பன் கோவில் வேப்பமர நிழலில்தான் அது நின்றது.


இருட்டிவிட கொஞ்சமே பொழுதிருந்த வேளை, அற்புதம் பாட்டி ஒவ்வொரு கிணறாய், அவனைத் தேடியலைந்து, களைத்து, அவனைக் கண்டெத்தாள். மல்லாட்டைக்குள்ளிருந்து வந்த ரோஸ் நிற ராஜாம்பாள்கள் குறித்து, எதுவும் அறியாதவளாய் அவனைத் திட்டித் தீர்த்தாள்.


அன்று ‘‘எட்டுக்கு ஒண்ணு’’ என்று அவள் ஆய்ந்த காய்கள் அளக்கப்பட்டது.


இருள் அடர்ந்து போயிருந்த போது, அவர்கள் வீட்டை அடைந்தார்கள். அவனுக்குள் அப்போதும் லேசான விசும்பல்கள் நீண்டிருந்தன. வாசலில் நின்று பாட்டி மலையைப் பார்த்தாள். தீபம் அவளுக்கு மட்டும் மினுக்கிட்டாம்பூச்சிப்போல் மின்னி மேகத்தில் மறைந்தது. அற்புதம் பாட்டி நடுவீட்டுக்குள் நின்று, தன் பின் கொசுவலத்தைத் தளர்த்தினாள். பாலேறி முற்றியிருந்த நெத்துக்களாய் மல்லாட்டைகள் உதிர்ந்தன.


அவன் அவசர அவரசமாய் ஒரு ரோஸ் நிற ராஜாம்பாளின் உயிர்ப்பின் எதிர்ப்பார்ப்போடு ஒரு காயை உரித்தான்.


*****


நன்றி: கீற்று