19/12/2011

பாரதியின் 'தராசு' அல்லது பாரதி - பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்தது எப்போது? - ஆ.இரா.வேங்கடாசலபதி

'தராசு' என்ற சொல் பாரதியோடு இணைந்ததோர் உருவகம். 1941-42இல் சுதேசமித்திரன் நாளிதழின் ஆசிரியர் ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன் அதன் வாரப் பதிப்பில் தொடர் கட்டுரை எழுத வேண்டி, என்ன எழுதலாம் என்று தயங்கிக் கொண்டிருந்தாராம். கடைசியில் அதற்குத் தராசு என்று அவர் மகுடமிட்டதாகவும், அவ்வாறு தலைப்பிட்ட உடனே, 'கலகலவென்று சிரிப்பு காதில் பட்டது. நிமிர்ந்து பார்த்தேன். அகக் கண்முன் பாரதி பிரத்தியக்ஷம் ஆனார்' என்று கூறுமளவுக்குப் பாரதியோடு இணைந்த உருவகமாகத் தராசு விளங்குகிறது. 1942இல் இக்கட்டுரைத் தொடரை ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன் தராசு என்ற தலைப்பிலேயே நூலாக்கியபொழுது எழுதிய முன்னுரையின் இறுதியில், 'பாரதியின் தராசு, (பழம்பெரும் இதழாளர் எஸ். ஜி.) ராமாநுஜலு(நாயுடு)வின் படிக்கல், இவை சஹிதமாக இன்று கடையைத் திறந்துவிட்டேன்' என்று இவ்வுருவகத்தை விரிவாக்கியிருக்கிறார் (1980களில் தமிழ்ப் புலனாய்வு இதழியலைத் தோற்றுவித்த தராசு இதழையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம்).

பாரதியோடு தராசு இவ்வளவு நெருக்கமாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பினும், இடைப்பிறவரலான சில குறிப்புகளையும் ரா.அ. பத்மநாபன் எழுதிய ஒரு கட்டுரையினையும் தவிரத் தராசு பற்றிய விரிவான ஆய்வை இதுவரை நான் கண்ணுற்றதில்லை. கவிதை மட்டுமல்ல, நவீன உரைநடையும் கைவரப்பெற்றவன் பாரதி என்பதற்குத் தராசுவும் ஒரு சான்று. பாரதியின் கூர்மையான பார்வையும், அதனை வெகுசனம் புரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படுத்தும் ஆற்றலும், நுட்பமான நகைச்சுவையும், பொருத்தமான பழமொழிகளும் மண்டிக் கிடக்கும் பிரதி 'தராசு'. இந்தப் பகைப்புலத்தில் தராசு பற்றிய விரிவான ஆய்வுக்கு முன்னோட்டமாக இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது, தராசு எழுதி, வெளியிடப்பட்ட காலம், அதன் பாடம், அதன்வழி அறியலாகும் சில சமகாலச் செய்திகள், சுதேசி இயக்கத்தின் தோல்விக்குப் பின்பான பாரதியின் கருத்துநிலை முதலானவற்றை இக்கட்டுரை முக்கியமாகக் கருத்தில் கொள்கிறது. பாரதி-பாரதிதாசன் முதல் சந்திப்பு என்ற இலக்கிய வரலாற்று முக்கியத்துவமுள்ள நிகழ்ச்சிக்கு ஆதாரமாகக் கிடைக்கும் ஒரே சமகாலச் சான்று என்பதாலும் தராசுவின் காலக் கணிப்பு இன்றியமையாததாகிறது.

காலம்

சுதேசமித்திரன் நாளேட்டில் தராசு தொடராக வெளிவந்தது என்பது பொதுவாக அறியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படும் செய்தி. 'தராசு என்ற தலைப்பின் கீழ் பாரதியார் பல வியாசங்கள் எழுதினார். புதுவையிலிருந்து மித்திரனுக்கு வழங்கினார்' என்று ஸி.ஆர். ஸ்ரீநிவாஸனும்குறிப்பிடுகிறார். ஆனால் சுதேசமித்திரன் இதழிலிருந்து தொகுக்கப்படாத பாரதி எழுத்துகளைத் தொகுத்து, தொகுக்கப்பட்ட படைப்புகளுக்கு முதல் வெளியீட்டு விவரங்களையும் வழங்கிய பெ. தூரனின் பாரதி தமிழ் (1953) நூலில் தராசுவின் முதல் வெளியீடு பற்றிய குறிப்புகள் இல்லாதது வியப்புக்குரியது.

இருப்பினும், பாரதி காலமான ஓராண்டுக்கு முன், நவம்பர் 1920இல் 'சுதேசமித்திரன் ஆபீஸ்' வெளியிட்ட 'கவிராயர் சுப்பிரமணிய பாரதியார் எழுதிய அநேக விஷயங்கள் அடங்கிய' கதாமாலிகா என்ற நூலில் தராசுவின் கடைசிப் பகுதி (14) வெளிவந்துள்ளது. எனவே, சுதேசமித்திரனில்தான் தராசு தொடராக வெளிவந்தது என்பதில் ஐயமில்லை. மேலும், இதனைக் 'காளிதாஸன்' என்ற தம் புனைபெயரிலேயே பாரதி வெளியிட்டிருக்கிறார் என்பதும் கதாமாலிகாவிலிருந்து தெரிகிறது. நூலுக்குள்ளேயும் 'ஆஹா, காளிதாஸா, நல்ல கேள்வி கேட்டாய்! (ப. 63) என்றே தராசு, கதைசொல்லியை விளிக்கிறது (ப. 42). தராசுக் கடையில் நிகழும் உரையாடல்களிலும் 'காளிதாஸன்' ஒரு முக்கிய உறுப்பினனாகவே விளங்குகிறான்; 'தராசுக் கடை ஐயர்' என்றும்கூடச் சுட்டப்பெறுகிறான்.

இப்பொழுது நமக்குக் கிடைக்கப்பெறும் தராசுவின் பாடம் 1928இல் பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டது. 'பாரதி பிரசுராலயம்' என்பது பாரதியின் தம்பி சி. விசுவநாதன் வேறு இரண்டு பாரதி அன்பர்/உறவினர் உதவியுடன் தொடங்கிய பதிப்பகமாகும். பாரதி மறைந்த இரண்டொரு ஆண்டுகளில் தொடங்கப்பட்ட செல்லம்மா பாரதியின் பதிப்பகமான 'பாரதி ஆச்ரமம்' தோல்வியடைந்தபின் தொடங்கப்பட்ட பாரதி பிரசுராலயமே பாரதியின் எழுத்துகளைப் பெருமளவில் முதல் முறையாக நூலாக வெளியிட்டது. பாரதி பிரசுராலயத்தின் தராசு பதிப்பில் பதிப்புரை எதுவும் இல்லாததால் எதன் அடிப் படையில் நூல் வெளியிடப்பட்டது என்ற செய்தியை அறிய இயலவில்லை. ஏற்கனவே அச்சான நூல்களை மறுஅச்சிட்டதோடு, பல்வேறு இதழ்களில் வெளிவந்த படைப்புகளைப் பாரதியின் கோப்புகளிலிருந்தும் பிறவற்றைக் கையெழுத்துப்படிகளிலிருந்தும் வெளியிடுவதுமே பாரதி பிரசுராலயத்தின் நடைமுறையாக இருந்திருக்கிறது. தராசுவின் வடிவத்தை நோக்க, அது பத்திரிகையில் தொடராக வெளிவந்தது என்பது கண்கூடு. புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிவந்த My Journal of Thoughts and Deeds என்ற குறிப்பேட்டில் தாம் எழுதிவந்தவற்றின் பட்டியலில் தராசுவைக் குறிப்பிட்டிருக்கிறார். என்பதையும் கண்டறிய வேண்டியுள்ளது. இச்செய்திகளிலிருந்து இது நூலாகக் கருக்கொள்ளப்படவில்லை என்று உணர முடியும். அச்சிட்ட செய்தித்தாள் நறுக்குகளிலிருந்தே பாரதி பிரசுராலயம் தராசுவை வெளியிட்டது என்பதில் தவறில்லை. நூலின் முதல் பத்தியில், சில தொடர்கள்/வரிகள் இல்லை என்பதைக் காட்டும் புள்ளிகள் இடம்பெற்றிருப்பதும் சிதிலமடைந்த செய்தித்தாள் நறுக்குகளே மூலப்படி என்பதைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

பருவ இதழியலில் 'பத்தி எழுத்து' (column writing) என்ற வகையைச் சார்ந்தது தராசு. ஒரு குறிப்பிட்ட பார்வை அல்லது நிலைப்பாட்டிலிருந்து அவ்வப்போது நிகழும் செய்திகளைப் பற்றிக் கருத்துரைப்பது இதன் தன்மை. புனைபெயரில் பத்தி எழுதும்போது அதற்கேற்ப ஓர் ஆளுமையை அமைத்துக்கொண்டு அந்த அமைதிக்கேற்பப் பத்தி எழுதப்படுவதும் உண்டு. தராசு இவ்வகையைச் சார்ந்தது. அக்காலகட்டத்தில் சுதேசமித்திரன் போன்றதொரு நாளேட்டிலேயே இத்தன்மைத்தான ஒரு வடிவத்தைப் பாரதி கையாண்டிருக்க இயலும். தராசுவிலேயும்கூட இரண்டொரு இடங்களில் பாரதி சுதேசமித்திரனைக் குறிப்பிடுகின்றான்.

எக்காலப் பகுதியில் தராசு தொடராக வெளியானது என்பது அடுத்த கேள்வி. அகச் சான்றுகளிலிருந்தே இதைக் கணக்கிட வேண்டியுள்ளது.

1907ஆம் ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் நின்றுபோன பாரதியாரது கட்டுரைகள் சுதேசமித்திரனில் 1915ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்தான் மறுபடியும் வெளிவரலாயின. 1915 ஜூன் 15இல் 'எதிர் ஜாமீன்' என்ற கதை வெளியாயிற்று. பிறகு அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் 'கிச்சடி'யைப் பார்க்கிறோம். 1916 பிப்ரவரியிலிருந்து தொடர்ந்து கட்டுரைகள் வர ஆரம்பிக்கின்றன.

என்கிறார் பெ. தூரன். (ஆயினும் முன்பே குறிப்பிட்டவாறு தராசு பற்றிய எந்தக் காலப் பதிவையும் அவர் வழங்கவில்லை.)

பல இடங்களில் முதல் உலகப் போரைப் பற்றிக் குறிப்பிடுவதால் 'தராசு' 1914-1918 என்ற பகுதியில் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.

'சண்டை சமயத்தில் ராஜ்ய விஷயங்களைப் பற்றி....' (ப. 21)

'ஐரோப்பாவிலே சண்டை எப்போது முடியும்?...' (ப. 38)

'ஐரோப்பா யுத்தத்தைப் பற்றியது'. (ப. 51)

'சண்டையினால் கப்பல்களின் போக்குவரவு சுருங்கிவிட்டது' (ப. 61)

'சண்டை முடிகிறவரையிலும் ராஜாங்க விஷயமான வார்த்தை சொல்லுவதிலே தராசுக்கு அதிக ருசி ஏற்படாது' (ப. 72)

சென்னை ஒய்.எம்.சி.ஏ.வில் காந்தி ஆற்றிய உரை பற்றிய குறிப்பு 12ஆம் இயலில் உள்ளது. இது 27 ஏப்ரல் 1915இல் நிகழ்ந்ததாகும். அதே இயலில் அகமதாபாதில் காந்தி ஸத்யாக்கிரஹ ஆசிரமம் ஏற்படுத்திய செய்தியும் உள்ளது. சபர்மதி ஆசிரமம் 20 மே 1915இல் தொடங்கப்பட்டதாகும்.

புதுக்கோட்டை மன்னர் ஓர் ஆஸ்திரேலியப் பெண்ணை மணம் புரிந்ததைப் பற்றி 3ஆம் இயல் குறிப்பிடுகிறது. இத்திருமணம் நிகழ்ந்தது 10 ஆகஸ்டு 1915இல்.

தராசுவின் இரண்டாம் இயல் 'பம்பாயில் நடக்கப் போகிற காங்கிரஸ் ஸபை' பற்றிக் குறிப்பிடுகிறது. எனவே டிசம்பர் 1915க்குச் சில மாதங்களுக்கு முன் இது எழுதப்பட்டதைக் காட்டுகிறது.

அ. மாதவையா செய்யூரிலிருந்ததைப் பற்றிய குறிப்பும் (ப. 9) உள்ளது. அவருடைய மகன் மா. கிருஷ்ணனின் குறிப்பிலிருந்தும் இது 1915-16ஆக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

கடைசி இயலில் அன்னி பெசண்ட் உதகைக்குள் சிறைவைக்கப்பட்டதைப் பற்றிய குறிப்பு உள்ளது. இது நிகழ்ந்த காலம் 1917 ஜூன் 16 முதல் செப்டம்பர் 5 வரையிலுமாகும்.

இவற்றிலிருந்து தராசு எழுதப்பட்ட காலம் 1915 இடைப்பகுதியிலிருந்து 1917 இடைப்பகுதிவரை என்று துணியலாம். ஆனால் இதையும் சிறிது தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இன்று படிக்கக் கிடைக்கும் தராசு நூலின் பெரும் பகுதி (14இல் 12 இயல்கள்) 1915க்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

நூலின் ஈற்றயல் இயல் (13) 'சில தினங்களாக நமது தராசுக் கடையில் வியாபாரம் சரியாக நடக்கவில்லை' (ப. 60) என்று தொடங்குகின்றது. கடைசி இயல் 'தராசுக் கடையை நெடுநாளாக மூடிவைத்துவிட்டேன்' (ப. 66) என்ற பீடிகையுடனேயே தொடங்கி, 'தராசுக் கடை என்பதென்ன? பத்திரிகை படிப்போர் சிலருக்கு ஞாபகமிருக்கலாம். ஞாபகம் இல்லாவிட்டாலும் பெரிதில்லை' (ப. 66) என்று பாரதி தொடர்கிறான். இதில்தான் அன்னி பெசண்ட்டின் சிறைவாசம் பற்றிய குறிப்பும் உள்ளது. இதிலிருந்து கடைசி இயல் / இயல்கள் மட்டும் 1917இன் இடையில் வெளிவந்திருக்கலாம் - ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு.

இன்று கிடைக்கும் தராசுவின் பாடத்தில் சில இயல்கள் வரிசை மாறி முன்பின்னாக இருக்கவும் வாய்ப்புண்டு. சுதேசமித்திரன் இதழ்கள் முழுவதுமாகவோ, பாரதியின் கோப்புகளோ கிடைத்தால்தான் இது பற்றிய தெளிவு ஏற்படும்.

பாரதி - பாரதிதாசன் சந்திப்பு

தராசுவின் காலம் பற்றிய கணிப்பு வேறு ஒரு முக்கிய இலக்கிய வரலாற்றுச் செய்தியைத் தீர்மானிக்க இன்றியமையாததாகும். பாரதியைத் தமது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கர் மணவிழாவில் சந்தித்ததாகப் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பு 1908இலேயே நேர்ந்துவிட்டது என்ற கருத்து பாரதிதாசன் ஆர்வலர்களிடையே பொதுவாக நிலவுகிறது. மன்னர்மன்னன், ச.சு. இளங்கோ போன்றோர் இக்கருத்தைக் கொண்டுள்ளனர். பாரதி-பாரதிதாசனுக்கிடையேயான உறவைச் சுட்டும் 'பாரதியோடு பத்தாண்டுகள்' என்ற தொடர் பாரதியின் புதுவை வாழ்க்கையினையே (1908-1918) கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இரா. இளவரசு பிற சூழல்நிலைச் செய்திகளைக் கொண்டு 1910இன் இறுதி அல்லது 1911இன் தொடக்கத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் எனத் துணிந்துள்ளார்.

பாரதிதாசனைப் பற்றிப் பாரதி (பெயர் சுட்டாமலாயினும்) குறிப்பிடும் ஒரே இடம் தராசுவில்தான் பயில்கின்றது என்பது தமிழுலகம் நன்கு அறிந்த செய்தி. இருப்பினும் இதன் சுவை கருதியும் முக்கியத்துவம் கருதியும் அதனை இங்கு முழுமையாகக் காண்போம். (காண்க: பெட்டி)

பாரதிதாசனின் விருப்பத்திற்கிணங்க அவர் பெயரைச் சுட்டாது, சாதியைக் கொண்டே தராசு அவரை அடையாளப்படுத்துகிறது. மேலும் அவருக்கு இங்கிலீஷ் தெரியாது என்பதும் தெளிவுறுத்தப்படுகிறது. அதுவரை 'நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம். அது அத்தனை ரஸமில்லை' என்று அவர் விழிக்கிறார். அதன்பின் 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்ற புகழ்பெற்ற பாடலைப் பாரதிதாசன் பாடுகிறார். யாரிடம் தமிழ் படித்தார் என்று கேட்டுவிட்டு, 'சரிதான், ஆரம்பம் குற்றமில்லை' என்கிறது தராசு. கடைசியில் பாரதிதாசன் பாரதியை 'குரு' என ஏற்று வணங்கியதும், 'எழுக! நீ புலவன்!' என்று வாழ்த்தியபோதிலும், பாரதிதாசன் ஒரு பெருங்கவிஞராக மலரவிருக்கிறார் என்பதைப் பாரதி முன்னுணர்ந்ததாகக் கொள்ள தராசு இடம் தரவில்லை.

பாரதி - பாரதிதாசன் முதல் சந்திப்புப் பற்றி இன்று கொள்ளப்படும் காலக் கணிப்பைத் 'தரா'சின் பின்புலத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இச் சந்திப்புப் பற்றிய ஒரே சமகாலப் பதிவு தராசுதான் என்னும்போது, இதனையே முதன்மைச் சான்றாகக் கொள்ள வேண்டியுள்ளது. இரு பெருங் கவிஞர்களின் சந்திப்பைப் பற்றிப் பாரதி ஆய்வாளர்கள் அதிகம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பாரதி ரமணரைச் சந்தித்தாரா இல்லையா என்பது போன்ற முதன்மையற்ற செய்திகளே அவர்களை ஆட்கொண்டுள்ளன. பாரதிதாசன் ஆய்வாளர்களோ தராசின் காலத்தைப் பற்றி ஆராயாமல் வேறு பிற்சான்றுகளைக் கொண்டுள்ளது வியப்புக்குரியது.

பாரதியைப் பற்றிப் பல பாடல்களையும் கட்டுரைகளையும் பொழிவுகளையும் இயற்றிய பாரதிதாசன் தராசுவில் இடம்பெற்ற நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடாதது ஏன் என்பதும் புலப்படவில்லை. பாரதியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பதற்காகப் பாரதிதாசன் எழுதிய திரைக்கதையிலும் நாடகத் தன்மையுடன் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ற இந்நிகழ்ச்சி இடம் பெறாதது ஏன் என்பதும் தெரியவில்லை.

ஆயினும் தராசுவின் ஆதாரத்தைக் கொண்டு இரு பெருங்கவிஞர்களின் முதல் சந்திப்பு 1915இன் இடைப் பகுதியில் நிகழ்ந்தது என்று கொள்வதே இன்றைய நிலையில் பொருத்தமானது.

நோக்கமும் அமைப்பும்

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் அன்றாடம் நிகழும் செய்திகளைப் பற்றித் தன் பார்வையில் கருத்துரைப்பதே பாரதியின் நோக்கம்.

பலவிதமான செய்திகளையும் கலந்து பேச நேரிடுமாதலால் 'பலசரக்குக் கடை' என்று மகுடமெழுத உத்தேசித்தேன். அது அதிக விளையாட்டாக முடியுமாதலால் விட்டுவிட்டேன். எனக்கும் ஒரு செட்டியாருக்கும் சினேகம். அவரைப் போல் நாம் ஒரு பலசரக்குக் கடை வைத்தால் அவருக்குக் கோபம் ஏற்படுமென்று கருதி அந்த மகுடத்தை விலக்கினேன். ...... தராசு என்று பொதுப்படையாகப் பெயர் வைத்திருக்கிறேன். எல்லா வஸ்துக்களையும் நிறுத்துப் பார்க்கும். எல்லாச் செட்டியார்க்கும் இதனால் உதவியுண்டு

என்ற பீடிகை தொடக்கத்திலேயே உள்ளது.

மூன்றாம் இயலில் புதுக்கோட்டை மன்னரின் திருமணம் பற்றிக் கேட்கும்போது, 'பெரிய மூட்டை; சீமை வியாபாரம்; நாட்டு வியாபாரத்துக்குத்தான் நம்முடைய தராசு உதவும். வேறு கடைக்குப் போம்' என்று பாரதி விளையாட்டான தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறான்.

'எல்லாம் தெரிந்து எந்தக் கேள்வி கேட்டாலும் விடை சொல்லக்கூடிய மாயத் தராசு' என்றும் நூலிடையில் ஒருவர் பாராட்டுகிறார்.

மற்றுமோர் இடத்தில் (இயல் 6 தொடக்கத்தில்) 'இங்கு நீடித்த விலைமதிப்புள்ள ஸாமான் மாத்திரமே நிறுக்கப்படும். விரைவில் அழிந்துபோகக்கூடிய, விலை குறைந்த சாமான்கள் நிறுக்கப்பட்ட மாட்டா' என்று விளம்பரம் செய்யப்படுகிறது.

தராசுவின் அமைப்பு கதைசொல்லியும் தராசும் உடனிருக்க வெவ்வேறு வகையான ஆள்கள் உள்ளே நுழைந்து கேள்விகள் கேட்கவும் கதைசொல்லியின் கூற்றுகளை இடைமறித்தும் இடையிட்டும் தராசு கருத்துரைப்பதாகவும் அமைந்துள்ளது. தராசு கருத்துரைப்பதற்கு வாய்ப்பாகவே கதைசொல்லியின் கூற்றுகள் அமைகின்றன. கிரிக்கெட்டிலிருந்து ஓர் ஒப்புமையைக் கூற வேண்டுமென்றால் தராசு பவுண்டரி அடிப்பதற்கு வாகாகப் பந்து வீச வேண்டிய பொறுப்பு கதைசொல்லிக்கு உரியது. தராசுவின் ஆளுமை இதில் முக்கியமானது. சடப்பொருளாக இருப்பதால் அதனால் சமூகத்தின் எந்த ஒரு பிரிவையும் சாராமல், விலகி நின்று கருத்துச் சொல்லும் நிலைப்பாட்டுப் புள்ளி தராசுக்கு வாய்க்கிறது. ஆயினும் அதற்குரிய கருத்தியல் நிலை உண்டு என்பதையே அது வெளிப்படுத்தும் கூற்றுகள் காட்டுகின்றன. அதற்கென ஒரு மனித உருவம் இல்லாததால் வாசகனின் கற்பனை விரிவுகொள்வதற்கும் கருத்துரைப்பவரின் சார்பைக் கணக்கிலெடுக்காமல் கருத்தில் கவனம் செல்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்துகிறது. தராசு இருக்கும் அவையில் வெவ்வேறு ஆட்கள் வரவும், அவர்கள் கேட்கின்ற கேள்விக்கேற்பத் தராசு கருத்துச் சொல்வதுமாக நூல் அமைந்துள்ளது.

தராசு நீக்கப்பட்டால் இந்த அவை என்ன ஆகும் என்பதற்கு உதாரணமாகப் பாரதியின் 'உல்லாஸ சபை' கட்டுரை (சுதேசமித்திரன், 29 மார்ச் 1916) உள்ளது. தராசுவில் நடமாடும் ஜிந்தாமியான் ஸேட், எலிக்குஞ்சு செட்டியார், காளிதாசன் ஆகியோரும் இவ்வுல்லாஸ சபையில் அடங்குவர். தராசுவின் மையமான முக்கியத்துவத்தை தனது இன்மையின் மூலம் 'உல்லாஸ சபை' கட்டுரை எதிர்மறையாகக் காட்டுகிறது.

இங்குச் சமூகத்தின் அலகுகள் பற்றிய தராசுவின் பார்வையைக் குறிப்பிட வேண்டும். தராசுவில் இடம்பெறும் நபர்கள் எல்லாம் சாதிய அடையாளங்களோடுதான் இடம்பெறுகின்றனர் என்பது மட்டுமல்லாமல் சாதிய அடையாளத்தோடு மட்டுமே இடம்பெறுகின்றனர். செட்டியாருக்குக் கேலிப்பெயராக 'எலிக்குஞ்சு' என்ற அடை அமைகின்றது. பாரதிதாசன் பெயர்கூட இல்லாமல் 'கைக்கோள ஜாதி' எனச் சுட்டப்படுகிறார். தன்னைத் தானே 'தராசுக் கடை ஐயர்' என்றும் பாரதி கூறிக்கொள்கிறான். பிராமணப் பிள்ளை, செட்டிப் பிள்ளை என்ற சுட்டுகள் விளங்குகின்றன. இரண்டோ ரிடத்தில் மிக நுணுக்கமாகவே சாதியப் பிரிவுகள் பேசப்படுகின்றன. 'தம்பி, அய்யங்காரே உன் பெயரென்ன?' என்று தராசு கேட்டதும், 'லஷ்மி வராஹாசார்யர்; வடகலை; ஸ்வயமாசார்ய புருஷர் வகுப்பு' எனப் பதில் வருகிறது. இவ்வுரையாடல் நிகழும் தருணத்தில் நுழையும் ஒரு பாட்டி தெலுங்கு பிராமணர்களிலே 'நியோகி என்ற பிரிவைச் சேர்ந்தவள்' என்று அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

இவர்களெல்லாருமே மேல்சாதியினராகவும் இடைநிலைச் சாதியினராகவும் இருக்கின்றனர். கீழ்நிலைச் சாதிகள் யாருமே இல்லை. 'ஜிந்தாமியான் சேட்' மட்டும் ஒரு முஸ்லிம் என்ற குறிப்பு 'உல்லாஸ சபை'யில் காணப்படுகிறது. 'நம்ம குரான்' என்று கூறுவதோடு, 'உங்க ஹிந்துக்களுடைய நாலு வேதத்துக்குப் பெயர் என்ன?' என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார். 'பாட்டி' என்ற நிலையில் ஒரேயொரு பெண் மட்டுமே தராசுக் கடையில் பங்குகொள்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் உருவாகிவந்த பொதுக்களத்தின் (public sphere) உருவகமாகத் தராசுக் கடையைக் கொள்ள இயலும்.

அரசியல்

பாரதியின் எழுத்துகளில் பொதுவாக இடம்பெறும் கிழக்கு வூ மேற்கு என்ற இருமை எதிர்வு 'தராசு'விலும் வலுவாக இடம்பெறுகிறது. 'கிழக்கு' என்றால் 'பரமார்த்திகம்', 'மேற்கு' என்றால் 'லௌகீகம்' என்ற கீழைத்தேயவியல் வகைமாதிரி (Orientalist stereotype) பாரதியிடம் உரம் பெற்றுள்ளது.

'தமிழ்ச் சாதி' பாடலில் இடம்பெறும் மேலை மருத்துவம் x சுதேச மருத்துவம் என்ற உருவகங்களின் வழியாக வெளிப்படும் நவீன இந்திய அறிவாளர்களின் மரபுக்கும் மாற்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஈரடி நிலை தராசுவில் சுதேச மருத்துவத்தின் சார்பாகத் தீர்க்கப்படுகிறது.

வேதாந்தத்தைப் பின்பற்றி ஒழுகியதால் இந்தியாவுக்கு ஏற்பட்ட உலகியல் தாழ்வுகளைக் கண்டிக்கும் அதே வேளையில் இந்திய வைதீக மரபைப் பாரதியால் விட்டுக்கொடுக்க முடியவில்லை என்பதையும் தராசுவில் காண்கிறோம்.

அடிப்படை மாற்றங்களின் மூலமாகவோ இந்து சமயத்தின் ஆதாரக் கூறுகளை விமரிசனம் செய்வதன் மூலமாகவோ அல்லாமல் சீர்திருத்தங்களின் மூலமாக மட்டுமே இந்தியச் சமுதாயத்தைத் திருத்திவிட முடியும் என்ற நம்பிக்கையும் பாரதியிடம் தொழிற்படுகின்றது.

ஆங்கிலத்திற்கு எதிராகத் தமிழையும் தமிழ்க் கலைச் சொல்லாக்க முயற்சிகளையும் வரவேற்பதோடு, 'சொந்த பாஷை கற்றுக்கொள்ளாதவர்கள் (அடுத்த பிறவியில்) குரங்குகளாகப் பிறப்பார்கள்' என்று சபிக்கும் பாரதியின் தமிழ்ச் சார்பு, வடமொழியோடு ஒப்பிடுகையில் அவ்வளவு துலக்கமாக வெளிப்படவில்லை.

1915-16 உலகப் போர் உச்சத்திலிருந்த காலம். 'சென்ற சுபகிருது வருஷத்திலே ஒரு புதிய உணர்ச்சி உண்டாயிற்று' என்று பாரதி உரைத்த சுதேசி இயக்கம் ஒரு பெரும் வீச்சுக்குப் பிறகு 1911-12 அளவில் ஒடுங்கிவிட்டது. சுதேசி இயக்கத் தலைவர் பலர் சிறையிலிருக்கவும், ஆஷ் கொலைக்குப் பிறகு ஒரு பெரும் அச்சமும் நிலவியது. பாரதி புதுவையில் கரந்துறை வாழ்க்கை நடத்திவந்தான். தலைமேல் கத்தி என்பதுபோல் அச்சத்திலேயே அவன் வாழும் கட்டாயம் பல ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. (தராசுக் கடைக்கும்கூட ஒரு போலீஸ் உளவாளி வந்துபோகிறான்!) அரசியல் இயக்கம் நடைபெறாத காலம் இது.

இக்கட்டத்தில் எழுதப்பட்ட தராசுவிலும் இதன் வெளிப்பாடுகள் காணக் கிடைக்கின்றன. அரசியல் பற்றி எழுதக் கூடாது என்ற முன்நிபந்தனையின் பேரிலேயே மீண்டும் சுதேசமித்திரனில் எழுதும் வாய்ப்பு பாரதிக்கு 1915இல் வழங்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இது உண்மையாகவே இருக்கலாம். இதற்கேற்பவோ என்னவோ 'அரசியல் பேசமாட்டேன்' என்று பல இடங்களில் தராசு உறுதிபடக் கூறுகிறது.

ஊன்றிப் பார்க்கையில் உலகப் போர் என்பது இதற்கோர் முகாந்திரமாகவே இருக்கிறது. 'சண்டை சமயத்தில் ராஜ்ய விஷயங்களைப் பற்றி யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசாமலிருப்பதே நாம் இந்த ராஜாங்கத்தாருக்குச் செலுத்த வேண்டிய கடமையென்று... சொல்வது முழுதும் நியாய மென்பதை அங்கீகரித்து, நம்மால் கூடியவரை இந்த ராஜாங்கத்தாருக்குத் திருப்தியாகவே நடந்துவிட்டுப் போகலாமென்று' (ப. 21) தராசு தொடக்கத்தில் எடுக்கும் முடிவு, கடைசிப் பத்திவரை (ப. 72-73) நீடிக்கிறது:

'தராசு ராஜாங்க விஷயத்தை கவனியாது. சண்டை முடிகிறவரையிலும் ராஜாங்க விஷயமான வார்த்தை சொல்லுவதிலே தராசுக்கு அதிக ருசி ஏற்படாது. சண்டை பெரிது; நம்முடைய கடை சாதாரணம்; ராஜாங்க விசாரணைகளோ மிகவும் கடுமை.'

பாரதியின் பலவீனமாக அல்லாமல் இந்தியத் தேசியத்தின் ஒரு பெரும் பலவீனமாக இதைப் பார்க்கலாம். அரசியல் விடுதலையைச் சமூக விடுதலையோடு இணைத்து இயக்கம் நடத்தாத நிலையை இது காட்டுகிறது. இதனால் அரசியல் இயக்கம் வலுவிழக்கும் தருணங்களிலேயே சமூகச் சீர்திருத்த விஷயங்களில் அதன் கவனம் செல்கிறது. அரசியல் இயக்கம் தொய் வடைந்த தருணத்தில் இயற்றப்பட்ட தராசுவும் இதைக் காட்டுகிறது. அரசியல் இயக்கம் உச்சத்திலிருக்கும் வேளையிலோ 'ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி'தான்!

'எழுக! நீ புலவன்!' - பாரதி

இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார்; கைக்கோள ஜாதி; ஒட்டக்கூத்தப் புலவர்கூட அந்தக் குலந்தானென்று நினைக்கிறேன்.

இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார். ஆதலால் வெளிப்படுத்தவில்லை.

தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது. "இப்படி ஒரு கவிராயன் வந்தால் எனக்கு ஸந்தோஷம். எப்போதும் வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?" என்றது. "கவிராயரே, என்ன விஷயம் கேட்க வந்தீர்?" என்று தராசு கேட்டது.

"எனக்குக் கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை. அத்தகுதி பெற முயற்சி செய்து வருகிறேன். அந்த விஷயமாகச் சில வார்த்தைகள் கேட்க வந்தேன்" என்று கவிராயர் சொன்னார். "இதுவரை பாடின பாட்டுண்டானால் சொல்லும்" என்று தராசு கேட்டது.

"இதுவரை நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம். அது அத்தனை ரஸமில்லை" என்று சொல்லிக் கவிராயர் விழித்தார்.

"மாதிரி சொல்லும்" என்றது தராசு.

புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.

"காளை யொருவன் கவிச்சுவையைக் - கரை

காண நினைத்த முழு நினைப்பில் - அம்மை

தோளசைத் தங்கு நடம் புரிவாள் - இவன்

தொல்லறி வாளர் திறம் பெறுவான்.

ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா! - தம்பி

ஏழு கடலவள் மேனியடா!

தங்கும் வெளியினிற் கோடியண்டம் - எங்கள்

தாயின் கைப் பந்தென வோடுமடா!

கங்குலில் ஏழு முகிலினமும் வந்து

கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ ?

மங்கை நகைத்த ஒலியதுவாம் - அவள்

வாயிற் குறுநகை மின்னலடா!"

தராசு கேட்டது: "புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?"

கவிராயர்: "இன்னும் படிக்கவில்லை; இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்."

தராசு: "சரிதான் ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்தியும் அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமையேறும்."

இங்ஙனம் வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கையில் சீட்டிக் கடை ஸேட் வந்தார். . . .

கவிராயர் தராசை நோக்கி, "நம்முடைய ஸம்பாஷணைக்கு நடுவிலே கொஞ்சம் இடையூறுண்டாயிற்று" என்றார்.

தராசு சொல்லுகிறது: "உமக்கும் அதுதான் காணும் வார்த்தை. நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது. 'மஸ்லின்' நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்."

அப்போது புலவர் தராசை நோக்கி: "நீயே எனது குரு" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்.

தராசு: "எழுக! நீ புலவன்!" என்றது.

நன்றி - காலச்சுவடு 2006

கருத்துகள் இல்லை: