01/12/2011

மொழிப் பயிற்சி – 67 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

குழந்தைப் பேறு என்பதில் மகனோ, மகளோ பிறக்கக்கூடும். இவ்விரண்டிலும் "மக'தான் உள்ளது; "மகவு' இல்லை. ஆதலின் மகப்பேறு என்று குறிப்பதில் தவறில்லை. மகன், மகள் என்னும் சொற்கள், தொல்காப்பியம், சங்கநூல்கள் எனப் பண்டுதொட்டு இருப்பனவேயாம். மக்கள் என்னும் சொல்லும் "மக' அடிப்படையில் உருவானதாக இருக்கக்கூடும்.

"கள்' விகுதி பயன்பாட்டில் மிகுதியாக இல்லாத காலத்திலேயே மக்கள் எனும் சொல் உண்டு. "உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே' (தொல்), "மக்கள், தேவர், நரகர் உயர்திணை' என்று நன்னூல் பிற்காலத்தில் நவின்றது.

"என்மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன்' புறநானூறு, பாரிமகளிர் (மகள்+இர்) இர் பலர்பால் விகுதி-மகள்-மகளிர் சங்கச் சொல்லே.

மகம்+நாளில்-மகநாளில் இதிலுள்ள மகம் என்பது வேறு. இது மக மீனைக் குறிக்கும் (மக நட்சத்திரம்) மகவு-மக என்பது வேறு. மகவுப்பேறு என்பதனினும் மகப்பேறு எனச்சொல்லுதல் எளிது. அதனால் மகப்பேறு நிலைபெற்றுவிட்டது.

வல்லொற்றின் பின் மெய்யெழுத்து வராது

இதுபற்றித் தொடக்கப்பள்ளியிலேயே ஆசிரியர் சொல்லித் தந்திருப்பார். வல்லினப்புள்ளி எழுத்துக்கள் (எ-டு: ட்,ற்) பின்னே மற்றொரு ஒற்று வராது எனக்கூறி கற்க்கண்டு என எழுதக்கூடாது. கற்கண்டு என்று எழுதுக எனச்சொல்லியிருப்பார்.

ஆயினும் இன்னும் பலர் பயிற்ச்சி என்று எழுதுகிறார்கள். "ற்' ஓசையே அழுத்தமாக இருப்பதால் "ச்' அழுத்தம் தனியே வேண்டாம் என்றே இலக்கண நூலார் "ற்' றோடு "ச்' சேராது என்றனர். சொல்லாக உச்சரிக்கும்போது அந்த ச் ஒலி இருக்கிறது என்பதை உணர்க. அதனால்தாம் சிலர் தம்மையறியாமலேயே பயிற்ச்சி என்று எழுதிவிடுகிறார்கள்.

பற்ப்பசை என்பதும் அத்தகைய ஒரு சொல். பற்பசை என்றே எழுத வேண்டும். இவ்வாறே உட்கார் என்பதை உட்க்கார் என்றெழுதுவதும் பிழை. இனி நீங்கள் எழுதும்போது கவனமாக உட்காருங்கள், பற்பசை கொடுங்கள், கற்கண்டு எடுத்துக்கொள்ளுங்கள், நாளும் பயிற்சி செய்யுங்கள் என்று தவறின்றி எழுதுவீர்களாக.

வல்லொற்று இரட்டித்தல் உண்டு; இது வேறு. எந்த வல்லொற்று வந்ததோ அதே எழுத்து- இன்னொரு சொல்லோடு சேர்கிறபோது இரட்டித்தல் அது. (எ-டு) காட்டரண் (காடு+அரண்) ட் இரட்டித்தது, சோற்றுப்பானை (சோறு+பானை) ற் இரட்டித்தது.

இலக்கணம் எதற்கு?

பேசுவதற்கும் எழுதுவதற்கும் எதற்கு இலக்கணம்? நாமறிந்தபடி பேசுவதில் என்ன தவறு என்று சிலர் கருதக்கூடும். இலக்கணம் என்பது புதிதாகத் திணிக்கப்படும் ஒரு கருத்தன்று. காலம் காலமாக நம் பேச்சில், எழுத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நெறியே இலக்கணம். முன்னரே எழுதப்பட்ட இலக்கியங்களின் றே இலக்கண விதிகள் எடுக்கப்பட்டன.

இதனை "எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதுபோல் இலக்கியத்திலிருந்து இலக்கணம் எடுக்கப்பட்டது' என அறிஞர் உரைப்பர். எடுத்துக்காட்டாக ஒரு செய்தியைக் காண்போமே.

"நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்' என்று சொல்லுகிறோம். இதில் வாக்களித்தனர் என்பதைப் பிரித்தால் வாக்கு+அளித்தனர் என்றாகும். இப்படிச் சேர்ந்தபோது ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது என்ன? வாக்கு என்ற சொல்லில் (க்+உ=கு) இறுதியில் நின்ற "உ' எனும் ஓசை நீங்கிவிட்டது. "கு'வில் "உ' நீங்கினால் "க்' இருக்கும். இதனோடு வருமொழி முதலில் உள்ள "அ' சேர்ந்து க்+அ=க வாக்களித்தனர் என்றாகிறது.

"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' என்பது விதி. இந்த விதியைப் பார்த்தா நாம் பேசுகிறோம்? இயல்பாக நாம் பேசும்போது இவ்விதி அதனுள் அடங்கியிருக்கிறது. இன்னும்சில காட்டுகளைப் பார்ப்போமா?

நேற்று+இரவு=நேற்றிரவு

நண்டு+ஓடி=நண்டோடி

சரி, மேற்சொன்ன நூற்பாவின் (சூத்திரம்) விளக்கம் சொல்லவில்லையே. வருமொழி முதலில் உயிர் எழுத்து வருமானால், நிலைமொழி இறுதியில் உள்ள குற்றியலுகரம் தான் ஏறியிருந்த மெய்யெழுத்தை விட்டு நீங்கிவிடும்.

முதலில் இருக்கும் சொல் நிலைமொழி; அதனுடன் சேரும் சொல் வருமொழி.

வாக்கு-நிலைமொழி; அளித்தனர்-வருமொழி. வாக்குவில் உள்ள இறுதி "உ' குறுகிய ஓசைகொண்ட உகரம் ஆகும் (குற்றியலுகரம்). "உ' என்னும் எழுத்துக்கு ஒரு மாத்திரை ஒலியளவு. (கை நொடிப்பொழுது ஒரு மாத்திரை)

வாக்கு என உச்சரிக்கும்போது "கு'வில் உள்ள "உ' முழுமையாக ஒலிக்கிறதா? இல்லை. நடு, நாடு-இரண்டையும் உச்சரித்துப் பாருங்கள் "நடு'வில் உள்ள "உ' முழுமையாக ஒலிக்கும்; நடுவில் உள்ள "உ' அரையளவு ஒலிக்கும். இதற்கு அரை மாத்திரை மட்டுமே.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: