05/12/2011

மொழிப் பயிற்சி – 68 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

பரங்கிக்காயும்

பூசணிக்காயும்!

குற்றியலுகரம் ஆறுவகையாக அமையும்.

குற்றியலுகரம் க்,ச், ட், த், ப், ற் எனும் ஆறு வல்லின மெய்கள் மேல் ஏறிவரும். அதாவது கு,சு,டு,து,பு,று என்றே அமையும். இந்த ஈற்றெழுத்துகளின் அருகில் (முன்) இருக்கும் எழுத்தைக் கொண்டு ஆறு வகைப் பிரிவு செய்யப்பட்டுள்ளன.

பாக்கு - வன்தொடர்க் குற்றியலுகரம்

வண்டு - மென்தொடர்க் குற்றியலுகரம்

பல்கு - இடைத்தொடர்க் குற்றியலுகரம்

பயறு (ய்+ அ ) - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

அஃது - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

நாடு - நெடில் தொடர்க் குற்றியலுகரம்

"ய' என்னும் உயிர் மெய் எழுத்தின் முடிவில் "அ' எனும் உயிர் ஓசை கொண்டு இதனை உயிர்த்தொடர் என்பர். நெடில் தொடரில் ஆடு என்று உயிரோ காடு என்று உயிர்மெய்யோ வரலாம். நெட்டெழுத்தாக இருத்தல் வேண்டும். புரிந்தும் புரியாமலும் இருக்கிறதா? திரும்பத் திரும்பப் பொறுமையாகப் படித்துப் பார்த்துத் தெளிவு பெறுக.

எப்படி நேர்கின்றன?

பிழைகள் சில எப்படி நேர்கின்றன என்று புரியவில்லை. ஒரு செய்தியறிக்கையில், "மரப்பாலம் உடைந்து விபத்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள்' என்று நீண்டது அச்செய்தி. படிக்கும்போது நாக்குத் தடுமாறி, விபத்து என்னும் சொல் இடையில் புகுந்ததோ?

பூசணிக்காய் என்பதும் பரங்கிக்காய் என்பதும் வேறானவை. பச்சை நிறத்தின் மேல் வெண்படலம் பூசினாற்போல் புறத்தோற்றம், உள்ளே வெள்ளை நிறத்தில் சதைப் பகுதி இருப்பது பூசணிக்காய். பரங்கிக்காய் இளையதாக இருக்கும்போது பச்சையாக இருக்கும். நன்றாக முற்றிய பின் (பழுத்து) பழுப்பு நிறத்தில் இருக்கும். அறுத்தால் உள்ளே மஞ்சள் நிறத்தில் சதைப்பகுதி இருக்கும். பூசணிக்காயை வெள்ளைப் பரங்கி என்று சொல்லும் வழக்கமுண்டு. பாரதி, "வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே' என்று பாடியுள்ளார். யாரும் பரங்கிக்காயைப் பூசணிக்காய் என்று சொல்லார்.

ஒரு தொலைக்காட்சியில் பூசணிக்காய்த் திருவிழா என்று செய்தியில் சொன்னார்கள்; காட்டப்பட்டதோ, நன்றாகப் பழுத்த (பழுப்பு) பரங்கிக் காய்களாகும். இஃதொரு பிழையா எனில், ஆம், பிழையே. தமிழில் இருவேறு பொருளுக்கு இருவேறு பெயர்கள் உள்ளன என்பதை அறியாமல் பேசுவது பிழையன்றோ?

"ஒவ்வொரு பூக்களுமே' திரைப்பாடல் வெளிவந்தபோதே ஒவ்வொரு பூவும் என்றுதானே வரும்? பூக்கள் என்றது பிழை என்று பேசப்பட்டதைப் பலரும் அறிவர். "இதழில் வெளிவரும் ஒவ்வொரு துணுக்குகளும் அருமை' எனும் வாக்கியத்தைப் படித்தபோது மேற்சொன்ன பாடல் பற்றிய செய்தி நினைவில் எழுந்தது. ஒவ்வொரு துணுக்கும் என்றோ எல்லாத் துணுக்குகளும் என்றோ எழுதிட வேண்டும்.

இவ்வாறே "ஐந்து பேரின் மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது'. இந்த வாக்கியத்திலும் ஒருமை, பன்மை மயக்கம் உள்ளது. ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று முடித்தல் வேண்டும்.

"சட்டத்தைத் திரும்பப் பெறப்பட வேண்டும்' என்று ஒரு செய்தியாளர் படித்தார். சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும். அல்லது சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று இத்தொடர் அமைந்திட வேண்டும்.

அமெரிக்காவில் மணியடித்தான்!

எதற்கு என்று வினவுகிறீர்களா? எதற்குமில்லை. அமெரிக்காவில் என்பது தனி; மணியடித்தான் என்பது தனி. இரண்டையும் ஏன் இங்கே காட்டினோம் என்பது பற்றிப் பார்ப்போம்.

அமெரிக்கா, ஒரு நாட்டின் பெயர். அஃதென்ன "வில்'? அது "வில்' அன்று "இல்' எனும் உருபு "வில்'லாக மாறியது. எப்படி? அமெரிக்கா (க்+ஆ= கா) எனும் சொல்லில் இறுதி, "ஆ' என்று உயிரெழுத்து ஓசையில் முடிகிறது. இல் என்னும் உருபுவில் "இ' என்னும் உயிரெழுத்து இருக்கிறது. இரண்டு உயிர்களையும் ஒன்றிணைக்க ஈண்டு "வ்' எனும் மெய்யெழுத்து பயன்பட்டது. இதற்கு உடன்படு மெய் என்று பெயர். இரண்டு உயிர் எழுத்துகள் ஒன்றொடொன்று சந்திக்கும்போது அவற்றை உடம்படுத்த (சேர்க்க) பயன்படும் மெய். அமெரிக்கா + இல், அமெரிக்கா+வ்+இல் = அமெரிக்காவில்.

மணியடித்தான் என்பதைப் பிரித்தால் மணி+ அடித்தான் என்றாகும். இவற்றுக்கு இடையில் "ய்' என்னும் மெய்யெழுத்து வந்து இரண்டையும் இணைக்கிறது. மணி (ண்+இ)+ய்+அடித்தான் (ய்+அ=ய) மணியடித்தான்.

ஆக, வ்,ய் எனும் இரண்டும் உடம்படு மெய்கள் என்று இலக்கணம் சுட்டுகிறது. நாம் இந்த இலக்கணத்தைப் பார்த்தா பேசுகிறோம்? நாம் பேசுவதில் இந்த இலக்கணம் அமைந்து கிடக்கிறது. அமெரிக்காவில் (வ்), இந்தியாவில் (வ்), திருச்சியில் (ய்) இங்கு ஏன் "ய்' வர வேண்டும்?

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: