29/10/2011

கலையும், படைப்பு மனமும் - சுந்தர ராமசாமி

நண்பர் கள்ளழகர் அவர்கள் ‘கலையும், படைப்பு மனமும்’ என்ற தலைப்பில் பேசும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். விரிந்த பரப்பைத் தலைப்பு கொண்டிருந்தால் பேச்சாளர் உல்லாசமாகத் துள்ளித் திரியலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். பலவற்றையும் உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்குத் தலைப்பு விசாலமானதாக இருந்தால் நெருக்கடி இல்லை என்றும் அவர் எண்ணியிருக்கலாம். தலைப்பு எதுவாக இருந்தாலும் சரி; நான்கு பேர் முன்னிலையில் பேசுவதே ஒரு நெருக்கடி சார்ந்த விஷயம்தான். தொழில்முறை பேச்சு பழக்கத்திற்கு வந்து மொழி எந்திரமயமாகி பேச்சாளனை அது ஒரு கருவியாக ஆக்கிக் கொண்டு நன்கு அறிந்த தண்டவாளத்தில் வழக்கமான கூச்சல்களை எழுப்பியவாறு ஓடத் தொடங்கும்போது பேச்சாளருக்கு நெருக்கடி என்பது இல்லை. மரபில் பதிவாகிவிட்ட கருத்துக்களை நினைவாற்றலின் வலுவில் தொகுத்து மேற்கோள் காட்டி வின்னியாசம் புரிகிற போதும் நெருக்கடி என்பதில்லை. ஆனால் பேசுகிறவன் தலைப்புடன் ஒரு தீவிரமான உறவை ஏற்படுத்திக் கொண்டு தலைப்புக்குத் தன் மனம் கற்பிக்கும் பொருள் என்ன என்று சிந்திக்கத் தொடங்கினால் - அது பரந்த பலவற்றையும் ஏற்றுக் கொள்கிற தலைப்பாக இருந்தாலும் கூட - நெருக்கடி தவிர்க்க முடியாததுதான்.

படைப்பாளியோ - பேச முற்படும்போது மட்டுமல்ல - எப்போதும் உள்ளூர நெருக்கடியுடன் இருக்கிறான் என்பது என் எண்ணம். காலம், பிரக்ஞை சார்ந்த நெருக்கடி இது. நான் மதிக்கும் படைப்பாளிகளுடன் நெருங்கிப் பழகிய நேரங்களில் அவர்களது நெருக்கடியை அநேக சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். அவர்கள் உல்லாசமாக இருப்பது போன்ற பாவனையைக் காட்டிக் கொண்டிருக்கும் போது கூட மனதின் அடி ஆழத்தில் நெருக்கடி அலை மோதிக் கொண்டிருக்கும். இந்த அவதானிப்பு உண்மை என்றால் படைப்பாளி ஏன் நிம்மதி இல்லாமல் இருக்கிறான் என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

இப்போது கலை என்றால் என்ன ? படைப்பு மனம் என்றால் என்ன ? இவை பற்றி என் மனதிலிருக்கும் பிம்பங்களை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இங்கு நான் பயன்படுத்தும் ‘பிம்பங்கள்’ என்ற சொல் முக்கியமானது. நான் பயன்படுத்தியிருக்க வேண்டிய சொல் ‘சிந்தனைகள்’ என்பது. இந்த இரண்டு சொற்களுக்கான வேற்றுமையைப் பற்றி நாம் யோசிக்கலாம்.

சிந்தனையின் தளத்துக்குள் நுழைய முடியாமல் தொடர்ந்து நாம் வெளியே வழுக்கி விழுந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். கலை என்றால் என்ன என்ற கேள்வி எழுந்ததும் ஆங்கில மொழி மூலமாகத்தான் அதற்கு விடை கிடைக்கும் என்றே தொடர்ந்து நம்பி வந்திருக்கிறோம். படைப்பு மனம் என்றால் என்ன என்ற கேள்வி சார்ந்தும் இதே நம்பிக்கைதான் வெளிப்பட்டிருக்கிறது. நம் உப்பு, புளி பிரச்சனைகளைப் பற்றி நாமே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வாழ்க்கை சார்ந்த அடிப்படை பிரச்சினைகளைப் பற்றி நமக்காகவும் மேற்கத்திய உலகம் சிந்தித்து வருகிறது என்று நம்ப ஆசைப்படுகிறோம்.

இருபதாம் நூற்றாண்டுக்குரிய சிந்தனைத் தளம் பற்றிய கற்பனை ஒன்று நம் மனத்தில் இருக்கிறது. இந்தக் கற்பனை, வாசிப்பு சார்ந்த பிம்பங்களால் உருவாக்கப்பட்டது. ஆங்கில வாசிப்பின் மூலம் தெளிவின்றியும் இடறி விழுந்தும் திரட்டிக் கொண்ட சிந்தனைகள் பலவும் இந்த வாசிப்பு சார்ந்த வெளிப்பாடுகள் - பேச்சு அல்லது எழுத்து இரண்டுமே - ஆங்கில மொழி அறியாதவர்களுக்கும் சிந்தனை சார்ந்த கற்பனைத் தளத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. நம் வாழ்வு சார்ந்தும் நம் இலக்கிய மரபு சார்ந்தும் ஒரு சிந்தனைத் தளத்தை உருவாக்க நம்மால் இன்று வரையிலும் முடிந்ததில்லை. இன்றைய நம் வாழ்க்கையை மேற்கத்திய சிந்தனை சதா கசக்கிக் கொண்டிருக்கிறது. இதை ஒரு அவஸ்தை என்று சொல்லலாம். சிந்தனைத் தளத்திற்குள் நுழைய முடியாமல் நாம் சறுக்கி விழுந்து கொண்டிருப்பதால் நம் மனங்களில் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தத்துவங்களைச் சார்ந்த தெறிப்புக்களைப் பிம்பங்கள் என்றுதான் சொல்ல முடியும். கலை பற்றியும் படைப்பு மனம் பற்றியும் நம் மனங்களில் இருக்கக்கூடிய பிம்பங்களை நாம் ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். அல்லது இரவல் சிந்தனைக்குள் போய் இரவல் சிந்தனைதான் என்பதைக் காட்டிக் கொள்ளும் வகையிலோ அல்லது காட்டிக் கொள்ளாத வகையிலோ சில வித்தைகள் செய்து காட்ட முடியும். வெட்கப்பட வேண்டிய இந்த வித்தைகளை வெட்கப்படாமல் பலரும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நம் வாழ்க்கை சார்ந்து சிந்திக்க முடியாமல் போன வெட்கம் நம்மீது கவியாமல்போனது, நாம் வாழ்க்கை சார்ந்து சிந்திக்க முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம்.

கலை ஒரு வலுவான பொருள் என்பது ஒரு பிம்பம். ஒரு பொருள் அதன் உள்ளார்ந்த சக்தியின் எழுச்சியில் சுவாசிக்கத் தொடங்கிவிடுகிறது. ‘கல்லும் பிராணன் எடுத்து மேலெழுந்து பறந்தது’ என்று தொடங்குகிறது என் கவிதை ஒன்று. கல் பறவையாக மாறும் கதைதான் கலையின் கதை. இது மிக விந்தையானது. ஆனால் இந்த விந்தைதான் பரிணாமத்தில் நிகழ்ந்தது. ஜடத்திலிருந்து மனிதன் தோன்றியது போல் ஜடப்பொருளுக்கு உயிர் தருகிறான் மனிதன். கலையில் ஒளுரும் இந்த உயிரம்சம்தான் முக்கியம். அந்த அம்சம்தான் மனத்தைத் தொடுகிறது. தொடர்ந்து மனித மனங்களை ஸ்பரிசித்துக் கொண்டேபோகிறது. இந்த ஸ்பரிசம் காலத்தின் மீதான ஒரு பயணத்தைக் கலைக்கு சாத்தியப்படுத்துகிறது. மனித உறவு நிகழவில்லையென்றால் கலை ஜடமாகிவிடும். மனித உறவு நிகழும் போது கலை உயிர்ப்புக் கொள்ளும். நான் கண்ட கனவு ஒன்றில் குழம்பி மறிந்த ஒரு காட்சியைத் தெளிவுபடுத்திச் சொல்வது என்றால் உறங்கிக் கொண்டேயிருக்கும் ஒருவனின் கட்டிலருகே மற்றொருவன் வந்து கூர்ந்து பார்க்கும் போது அவன் விழித்துக் கொள்கிறான். பார்ப்பவன் விலகி மறைந்ததும் மீண்டும் தூக்கத்தில் அவன் ஆழ்ந்துவிடுகிறான். இது விட்டுவிட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஓவியத்தை ஒருவன் பார்க்கும் போது அது உயிர் பெறுகிறது. நாவலை ஒருவன் படிக்கும் போது அது உயிர்ப்புக் கொள்கிறது. மனித உறவை நம்பித்தான் கலைகள் உயிர்வாழ முடிகிறது.

இப்போது கலை என்ற சொல்லை விட்டுவிட்டு படைப்பு என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அதாவது இலக்கியப் படைப்பை. நமக்குள் பொதுவாக நிற்பது அது. படைப்பில் மனித உறவை சாத்தியப்படுத்தும் கூறு எப்படிக் கூடுகிறது ? நான் போற்றும் படைப்புக்கு என் மனம் தரும் பொருள் என்ன ? ஒரு உதாரணத்தை முன்வைத்துப் பார்க்கலாம். நான் என் 25 வயதிற்கு மேல் 30 வயதிற்குள்ளான ஐந்தாண்டு காலத்தில் லேவ் தல்ஸ்தோயின் ‘போரும் வாழ்வும்’ நாவலை இருமுறை படித்தேன். இப்போது அந்த நாவலைப் பற்றிய என் அனுபவத்தை என் மனத்தில் மறு உருவாக்கம் செய்வது, அந்த ஐந்தாண்டுகாலத்தில் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மறு உருவாக்கம் செய்வதைவிடச் சுலபமாகப்படுகிறது. அப்படியென்றால் எது ஆழமான பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறது. வாழக்கையா ? படைப்பா ? ஏறத்தாழ கடந்த நாற்பது வருடங்களில் ‘போரும் வாழ்வும்’ தந்த அனுபவம் பெரிய அளவுக்குப் பின்னகர்ந்துவிடவில்லை என்பதும் தெரிகிறது. அன்று உருவான காட்சிகள் இன்றும் தெளிவாகவே இருக்கின்றன. பல குதிரைகளின் முகங்கள் நினைவில் இருக்கின்றன. அவற்றின் உடல்களின் பல்வேறு இடங்களை அவை சிலிர்த்துக் கொள்கின்றன. ஆனால் ஒவ்வொரு குதிரையும் தன் உடம்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டுமே சிலிர்த்துக் கொள்ளும் காட்சி வடிவம் காலத்தின் போக்கில் எந்தவிதமான மாற்றமும் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. துணை கதாபாத்திரங்களின் பெயர்கள் மங்கிப் போன ஒன்றுதான் காலம் அனுபவத்தின் மீது சரிந்ததற்கு ஒரே அடையாளமாக மிஞ்சியிருக்கிறது. அப்படியென்றால் வாழ்க்கையின் சாராம்சம் மனதில் பதிவது போல் வாழ்க்கை பதியவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.

படைப்பு எந்த அளவுக்கு வாழ்க்கையின் சாராம்சத்தைத் தேக்குகிறதோ அந்த அளவுக்கு அது உயிர்ப்புப் பெறுகிறது என்று சொல்லலாமா ? படைப்புக் கொள்ளும் உயிரின் இழைகளைப் பிரித்துக் கொண்டே போனால் அதனுள் மொழிக்கும் படைப்பாளிக்குமான ஒரு பிரத்யேகமான உறவு, மனித ஜீவன்கள் - அவர்கள் எப்படியிருப்பினும் சரி - அவர்கள் மனித ஜீவன்கள் என்பதாலேயே அவர்கள் மீது படைப்பாளி கொள்ளும் ஒரு பிரத்யேக நேசம், வாழ்க்கை தரும் தத்தளிப்பைப் பற்றிய ஊடுருவல்கள், பிரபஞ்ச நாடகத்தின் பிரம்மாண்டம், மனித மனங்களின் அடியாழங்களில் சதா கசிந்து கொண்டிருக்கும் நெகிழ்ச்சி என்று பல ஆற்றல்களின் கூடி முயங்கிய சங்கமம் நம் நினைவிற்கு வருகிறது. படைப்பு என்பதை நாம் ஈரம் என்று சொல்லத் தோன்றுகிறது. சிறு கசிவாகவோ அல்லது பெரிய கடலாகவோ. எப்படியும் ஈரம். மனித வாழ்க்கைக்கு ஆதாரமாக இன்றுவரையிலும் இருப்பதும் இதுவாகவே இருக்கலாம்.

படைப்பு மனத்தின் கூறுகளைப் பற்றிப் பார்க்கலாம். படைப்பு மனத்தைத் தமிழ் மனம் என்றோ இந்திய மனம் என்றோ பிரிக்காமல் உலகப் படைப்புக்கள் அனைத்தையும் உருவாக்கிய ஒரே மனம் என்ற கற்பனையில் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும் அளவுக்குப் பல கூறுகள் எல்லா படைப்பாளிகளுக்கும் பொதுவாக இருக்கின்றன.

சமூக இயக்கத்திற்கு அவசியமான நெறிகளையும் சமயம் போற்றும் நெறிகளையும் - இவை ஒன்றோடொன்று கலந்து கிடக்கின்றன என்று நினைக்கிறேன் - வாழ்க்கையின் ஆரோக்கியம் சார்ந்த கூறுகளாக நாம் எடுத்துக் கொள்வோம் என்றால் படைப்பாளியை ஒரு ‘நோயாளி’ என்றுதான் நாம் வரையறை செய்ய நேரும். சமூக இயக்கங்களும் சமய இயக்கங்களும் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு நன்னெறிப்பாதையில் படைப்பாளி விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட ஒரு ஜீவனாகவே இருந்து வந்திருக்கிறான். ஏன் படைப்பாளியை சமூகம் உள்ளூர ஒதுக்க வேண்டும் ? அவ்வாறு தன்னை ஒதுக்கும் சமூகத்தைப் படைப்பாளி வென்றெடுத்த வரலாறைப் பின்னகர்த்தி வைத்து நாம் இப்போது சிந்திக்க வேண்டும். வென்றெடுத்த பின்பும் புறக்கணிப்பின் எச்சங்கள் இன்றும் பாக்கி இருக்கின்றன. பின்னகர்ந்து கிடக்கும் சமூகங்களின் முக்கியமான குணங்களில் ஒன்று படைப்பாளிகளை அசட்டை செய்வது.

தமிழ்ச் சமூகத்தின் ஆசிரியர் வர்க்கம் படைப்பாளிகளை மதிக்கிறதா ? அரசியல்வாதிகளும், வணிகர்களும், சமயத் தலைவர்களும், சக மனிதனைக் கவிழ்ப்பதற்குத் திரைப்படம் எனும் அறிவியல் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறவர்களும் படைப்பாளிகளை நேசிக்கிறார்களா ? இந்தக் கேள்விக்கான பதிலைக் காண நீங்கள் ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினால், ‘படைப்பாளிகளை நாங்கள் நேசிக்கத்தானே செய்கிறோம்’ என்ற கெட்டிக்காரத்தனமான பதிலில் படைப்பாளிகளின் ஜடங்களைத்தான் அவர்கள் நேசிக்கிறார்கள் என்ற நடைமுறைவாதம் இருப்பதை நாம் பார்க்க முடியும்.

புதுமைப்பித்தனை நேசிக்கச் செய்ய நாம் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. புதுமைப்பித்தனிடம் உயிர்ப்பு இருக்கிறதென்றால் அவரிடம் சாராம்சம் இருக்கிறது என்று பொருள். அந்தச் சாராம்சம் தமிழ் வாழ்வின் சரிவை அனுபவப்படுத்துகிறது. சரிவை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் சரிவின் மீது கவனத்தைத் திருப்புபவர்களை நேசிப்பார்களா ? சாராம்சம் சார்ந்த பார்வை வலுப்படும்போது சமூக விமர்சனம் கூர்மை கொள்கிறது. உயிரியக்கத்திற்கும் உறக்கத்திற்குமான வேற்றுமையும் உறக்கத்திற்கும் ஜடத்தன்மைக்குமான வேற்றுமையும் புலப்படத் தொடங்குகின்றன. அதிகாரத்தின் சகல பீடங்களிலும் வெவ்வேறு முகங்களுடன் உட்கார்ந்து கொண்டிருக்கும் எல்லோருமே உயிரற்ற, சதையற்ற, வனப்பிற்குரிய கோலங்களுமற்ற எலும்புக்கூடுகளாகவே இருப்பதை உணர முடிகிறது. ஆற்றல் வேறு, ஆற்றல் சார்ந்த பாவனைகள் வேறு. இதை நாம் பிரித்தறியும் போது பாவனைகள் கலகலக்கத் தொடங்குகின்றன. பாவனைகளைக் கண்டுகொள்ளவும் ஆற்றலின்மையை உணரவும் அவசியமான கூர்மையைப் படைப்பு உருவாக்க முயல்கிறது. மொத்த படைப்புக்களிலிருந்து பெற்ற அனுபவங்களை இப்படித்தான் சுருக்கிச் சொல்ல முடிகிறது.

படைப்பாளி ஒரு பாதுகாப்பற்றச் சூழலில்தான் இயங்க வேண்டியிருக்கிறது. சமூகம் ஏற்பது - சமூகம் மறுப்பது. இந்தப் பிரிவினையின் அடிப்படையில் படைப்பாளி சிந்திப்பதில்லை. இது தன் இருப்பைப் படைப்பாளி கணக்கிலெடுத்துக் கொள்ளும் சிந்தனை. படைப்பாளியின் சிந்தனை ஒரு விசேஷ அர்த்தத்தில் கனவு சார்ந்த சிந்தனை. அதை புரட்சிகரமான கனவு என்று நாம் சொல்லலாம். அது எப்போதும் நிதர்சனம் சார்ந்த, நடைமுறைவாதம் சார்ந்த புரட்சிகரத்தைவிடப் புரட்சிகரமானது. வரலாறு படைப்பாளியின் புரட்சியை பலமுறை ஆமோதித்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் புரட்சிகரமான சமுதாயத்தை உருவாக்க முயன்ற புரட்சிவாதிகளின் கைகளில் படைப்பாளிகள் மிக மோசமான கொடுமைகளுக்கு ஆளானார்கள். இந்தக் கொடுமை முற்பட்ட நூற்றாண்டுகளிலும் நிகழ்ந்திருக்கிறது. இது நிதர்சனம் சார்ந்த புரட்சிகரத்தைவிடப் படைப்பாளியின் கனவு சார்ந்த புரட்சி, புரட்சிகரமானது என்பதைத்தான் காட்டுகிறது. இக்கருத்தை நாம் இங்கு விவாதிக்க முற்பட்டால் தமிழ் வாழ்க்கை சார்ந்த உதாரணங்களை நான் உங்களுக்குத் தர முடியும்.

படைப்பாளி சார்ந்த உணர்வுகளை நாம் தொகுக்கும்போது நாம் விரும்பியோ விரும்பாமலோ அதன் மீது ஒரு புனிதம் ஏறிவிடுகிறது. படைப்பாளிகளில் ஒரு பகுதியினரேனும் அந்தப் புனிதத்தைத் தொடர்ந்து உடைத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். சமூகப் பார்வையில் படைப்பாளி ஆற்றல் மிகுந்தவனாகவும் பலவீனம் மிகுந்தவனாகவும் இருக்கிறான். படைப்பாளிகள் லெளகீகம் சார்ந்த தன் கையாலாகாத்தனத்தைச் சுய மதிப்பீட்டில் உணர்ந்து வந்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் பொருந்தாமல் போய்விடும் அவலம் அவர்களை ஆட்கொள்கிறது. மொழியை எந்தக் காரியத்திற்காகத் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் பயன்படுத்துகிறார்களோ அந்தக் காரியத்திற்காக அதைப் பயன்படுத்தக் கூடாது என்ற பிடிவாதம் படைப்பாளிக்கு இருக்கிறது. இவ்வாறு லெளகீகத் தளத்திலும் மேல்நிலைப் பயணம் என்ற ஆன்மீகத் தளத்திலும் மொழி பொருந்தாமல் இருக்கும் அவலம் படைப்பாளியின் மீது கவிகிறது. தன் படைப்புடன் தொடர்பு கொண்டு நிற்கும் போதோ அல்லது மற்றொரு படைப்பில் தன்னை இழக்கும் போதோதான் படைப்பாளிக்கு தன் இருப்பு நிறைவாக இருக்கிறது. பிற நேரங்களில் படைப்பாளி தன் இருப்பு சார்ந்த அடையாளத்தை உணரமுடியாமல் தவிக்கிறான்.

படைப்பு நீங்கலான பிற லெளகீகப் பணிகளை ஏற்பதில் படைப்பாளி கொள்ளும் தயக்கம் பிறருடைய பார்வையில் அவனைச் சோம்பேறி ஆக்குகிறது. லெளகீகத்தை முற்றாகத் தவிர்க்க முடியாத படைப்பாளி தன் சோம்பேறித்தனத்தை நினைத்து வருந்துகிறான். அவன் மிகப்பெரிய உழைப்பாளியுங்கூட. ‘உழைப்பாளியாகிய நான் எப்படி சோம்பேறியாக இருக்கிறேன் ?’ என்பது அவனுக்கு விளங்காமல் இருக்கிறது. மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவன் போல் தங்களைக் காட்டிக் கொள்ளும் படைப்பாளிகளில் பலரும் மிகுந்த தாழ்வு மனப்பான்மைக்கு ஆளானவர்கள். இளமையில் கவ்விய தாழ்வு மனப்பான்மை, புற்று நோய் உடலைப் பாதிப்பது போல் அவர்கள் மனங்களைச் செல்லரித்திருக்கிறது. வாளின்றிக் கேடயம் மட்டுமே கொண்ட ஒரு வீரன் எதிராளியின் வாள் வீச்சு தன் மீது பாயாமல் தடுத்துக் கொள்வது போல் படைப்பை முன்வைத்துத்தான் படைப்பாளி வாழ்க்கையின் வாள் வீச்சைத் தடுத்துக் கொள்கிறான்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிக மோசமான அவமானத்திற்கோ அல்லது புறக்கணிப்பிற்கோ அல்லது ஈவிரக்கமற்ற மிதிபடலுக்கோ ஆளாகும் போது படைப்பாளி, ‘நான் மிகச் சிறந்த படைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்’ என்று தனக்குத்தானே அரற்றிக் கொள்கிறான். தன்னைப் புறக்கணிக்கும் சமூகத்திற்கு மிகப்பெரிய படைப்புக்களை அளித்து அதை அவமானத்திற்கு ஆட்படுத்திவிட முடியும் என்று அவன் கற்பனை செய்து கொள்கிறான். அவனுடைய பழிவாங்கல் முறை இது. சமூகத்தின் தடித்தனம் அவன் அறியாதது அல்ல. திரைகளை அகற்றி யதார்த்தத்தின் நிஜ முகங்களை நிரூபிக்கவும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கற்பனை படைப்பாளிக்குத் தேவையாக இருக்கிறது. இப்படிப் பார்க்கும் போது படைப்பாளி புனிதங்கள் எதுவுமற்று துன்பியல் நாடகத்தின் கதாநாயகன் போல் காட்சி தருகிறான்.

திருநெல்வேலி ஹோட்டல் ஆரியாஸில், உரைகல் (இலக்கிய வட்டம்) கூட்டத்தில் வாசித்த கட்டுரை. 12.12.1998. (சொல்புதிது, ஜூலை-செப். 1999)

தமிழ்ப் படைப்புலகம் - சுந்தர ராமசாமி

இக்கூட்டத்தின் தலைவரும் என் நண்பருமான பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திருமதி ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கருத்தரங்கை உருவாக்கிய நண்பர் பச்சைமால் அவர்களுக்கும் அவருடன் உடனின்று செயல்பட்ட நண்பர்களுக்கும் என் படைப்புலகத்தைத் தங்கள் மதிப்பீடுகள் மூலம் வாசகர்கள் முன் வைத்த எழுத்தாளர் நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ப் படைப்புலகம் பற்றி ஒருசில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முற்றாகவோ முடிவாகவோ சொல்ல எனக்கு அதிகம் இல்லை. நான் இக்கருத்துக்களை முன் வைப்பதனாலேயே நீங்கள் அவற்றை ஏற்றுக் கொண்டுவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. என் கருத்துக்களை நீங்கள் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே கொண்டிருக்கிறேன். ஏற்கும் கருத்துக்களை ஏற்று, மறுக்கும் கருத்துக்களை நீங்கள் மறந்துவிடலாம். ஏற்கும் கருத்துக்களைப் பற்றி நீங்கள் தொடர்ந்து சிந்தித்து அவற்றையேனும் உங்களால் இயன்ற அளவு தமிழ்ச் சமூகத்தில் பரப்பலாம்.

இலக்கியம், கலைகள், திரைப்படம், தொலைக்காட்சி, கல்வித்துறை இவை சார்ந்து நாம் வெகுவாகப் பின்தங்கி நிற்கிறோம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. இந்தப் பின்தங்கலுக்கான காரணங்கள் பற்றி யோசித்து வருகிறேன். சில காரணங்கள் தட்டுப்படுகின்றன. ஒவ்வொரு துறை சார்ந்தும் நாம் பெற்றிருக்கும் அறிவு குறைவு. இத் துறைகள் பற்றி என்னைவிடவும் அதிகம் அறிந்தவர்கள் தமிழ்நாட்டில் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் துறை சார்ந்த சீரழிவுகளை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். அவ்வாறு பகிரங்கப்படுத்துவது பணிகள் சார்ந்து அவர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தத்தம் துறைகளில் உள்ள பிரச்சனைகளைச் சொல்லலாமே என்று தோன்றுகிறது. சொல்லலாம். ஆனால் சொல்வதில்லை என்பது நமக்குத் தெரியும். விமர்சனம் என்பது வம்பு என்றும், தமிழ் ஜென்டில்மேன் விமர்சனத்தை முன் வைக்காதவன் என்றும் நமக்குள் ஒரு எண்ணம் இருக்கிறது. ஜென்டில்மேன்கள் அழித்த கலாச்சாரத்தைத்தான் இப்போது நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். நாகர்கோவிலை அடுத்திருக்கும் பாம்பன்விளை என்ற இடத்தில் எழுத்தாள நண்பர்கள் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை கூடிப் பேசுகிறோம். மிக சமீபத்தில் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். நிகழ்ச்சி நிரல் என்று திட்டவட்டமாக எதுவுமில்லை. கல்வித்துறையைப் பற்றிய விவாதம் இயற்கையாக வந்தது. கல்வித்துறைப் பற்றி எனக்கு உயர்வான எண்ணம் ஒன்றுமில்லை. வளர்ந்த சமூகங்களில் கல்வித் துறைகள் எவ்வாறு இயங்கி வருகின்றனவோ அந்த அளவுக்கு நம்மால் இயங்க முடியாவிட்டாலும் அவர்கள் நிறுவியிருக்கும் தரத்தின் முக்கால் பங்கை அல்லது அரைப்பங்கை நாம் எட்டிவிட்டாலே நம் சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழும். பாம்பன்விளையில் கல்வியின் சீரழிவைப் பற்றிப் பேசியவர்கள் ஆசிரியர்கள். மேல்நிலைப் படிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் முன்வைக்கும் செய்திகள் ஒவ்வொன்றுமே மிகப் பெரிய அதிர்ச்சியை எனக்கு அளித்தன. அதாவது கல்வித்துறை பணிகள் செம்மையாக நடைபெறவில்லை என்ற எண்ணத்தில் இருந்து கொண்டிருக்கும் எனக்கே அவை அதிர்ச்சியாக இருந்தன. பேராசிரியர் ஜேசுதாசன் அவர்கள், மதிப்பிற்குரிய ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்கள் போன்ற நேற்றைய லட்சியவாதிகளான ஆசிரியர்கள் பாம்பன்விளையில் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் முன்வைத்த விமர்சனங்களைக் கேட்டிருந்தால் தாங்கிக் கொள்ள இயலாத வேதனையை அடைந்திருப்பார்கள். அந்த ஆசிரியர்கள் முன் வைத்த செய்திகளை நான் இங்கு சொல்லவில்லை. அவை என் பேச்சின் மையம் அல்ல. தமிழ் சமூகத்தை முன்னின்று வளர்க்க வேண்டிய துறை வெகுவாகப் பின்தங்கிச் சிறுமைக்கும் சீரழிவுக்கும் ஆளாகிவிட்டது என்பதை மட்டுமே நினைவுபடுத்துகிறேன்.

தமிழில் எண்ணற்ற இதழ்கள் வெளிவருகின்றன. ஒரு லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம், நான்கு லட்சம் என்று அவை விற்பனையாகின்றன. எல்லா இதழ்களின் மொத்த விற்பனையையும் கூட்டிப் பார்த்தால் மாதம் ஒன்றுக்கு விற்பனையாகிற இதழ்கள் ஒரு கோடிக்கு மேலேயே இருக்கும். மாதம் ஒன்றுக்குத் தமிழர்கள் இந்தச் சஞ்சிகைகளை வாங்குவதற்காகச் செலவிடும் தொகை ஒரு சில கோடிகள் இருக்கும். அத்தனை இதழ்களின் பக்கங்களும் சீரான புத்தகங்களாக மறு அச்சாக்கம் பெற்றால் ஆயிரம் பக்கங்கள் கொண்ட எத்தனை தொகுதிகள் வரும் என்பதை எனக்குக் கணக்கிட்டுச் சொல்லத் தெரியவில்லை. இதற்குப் பயன்பட்ட காகிதங்களுக்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் என்பதையும் எனக்குக் கணக்கிட்டுச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒன்று எனக்குத் தெரியும். இத்தனை பக்கங்களில் தமிழ் வாழ்வைப் பற்றித் தமிழனைச் சிந்திக்க வைக்கிற அல்லது மிக முக்கியமான அனுபவத்துக்கு அவனை ஆளாக்குகிற அல்லது கூரான புதிய மொழியுடன் அவனை இணைக்கின்ற ஒரு பக்கம் கூட கிடையாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

லாபத்திற்காகக் கலாச்சாரத்தைச் சீரழிப்பவர்கள் இவர்கள். லாபத்திற்காக மதிப்பீடுகளை அழிப்பவர்கள். பாலியல் வக்கிரங்களைத் தூண்டிக் கொண்டிருப்பவர்கள். பெண்மையை இழிவுபடுத்திக் கொண்டிருப்பவர்கள். சமூகத்திலுள்ள பெரிய மனிதர்களுக்கு எதிராகவோ அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிராகவோ இவர்களில் சிலர் முன் வைக்கும் செய்திகள் உங்கள் நினைவுக்கு வரலாம். பரபரப்பான செய்திகள் இதழின் விற்பனையைக் கூட்டும் என்ற நியதியில் நம்பிக்கை வைத்துச் செய்யப்படும் காரியங்கள் இவை. அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. இச்செய்திகளை வெளியிட அவர்கள் பயன்படுத்தும் மொழி உண்மையைத் தொடுவதற்கே வலுவற்றது.

தமிழில் நல்ல சிறுகதைகள் எழுத இன்றும் சிலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். சிலர் நல்ல நாவல்கள் எழுத முயன்று கொண்டிருக்கிறார்கள். அறிவியல், வரலாறு, இலக்கியம் சார்ந்து தரமான கட்டுரைகளை எழுத முயன்று கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய எழுத்தை எந்தப் பிரபல பத்திரிகையும் வெளியிடாது. பல மொழிகளிலும் பிரபல பத்திரிகைகள் நடுத்தரமான எழுத்துக்களுக்கு ஒருசில பக்கங்களையும் தீவிரமான எழுத்துக்களுக்கு ஒருசில பக்கங்களையும் ஒதுக்கி வருகின்றன. தமிழ் இதழ்களிலோ தீவிர எழுத்துக்கோ நடுத்தர எழுத்துக்கோ இடமில்லை. கேளிக்கை எழுத்துக்களுக்கு மட்டுமே இடம் தரப்படுகிறது. மிகச் சிறந்த நூல் ஒன்று தமிழில் வெளிவந்திருக்கும் தகவலைக் கூட பிரபலமான பத்திரிகைகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியாது. தமிழில் பொருட்படுத்தத் தகுந்த எழுத்துக்கள் எல்லாம் பெரும்பாலும் சிற்றிதழ்களில்தான் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் அதிகபட்சம் ஐயாயிரம் வாசகர்களைச் சென்றடையும் வாய்ப்பையே தீவிர எழுத்தாளர்கள் பெறும் நிலை உள்ளது. பிரபல கேளிக்கை எழுத்தாளர்கள் வளைத்துப் போட்டிருக்கும் வாசகர்களின் எண்ணிக்கை பத்து லட்சமாகக் கூட இருக்கலாம். இவ்வளவு மோசமான ஒடுக்குமுறையிலும் தமிழ் இலக்கியம் உயிரை தன் குரல் வளையில் தக்க வைத்துக் கொண்டிருப்பது உலக அதிசயங்களில் ஒன்று.

தமிழில் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் எல்லாமே பொதுவாக இன்று பலவீனமாகத்தான் இருக்கின்றன. உண்மையான படைப்பாளிகளை ஒரு சமூகம் அங்கீகரிக்க மறுத்து ஒதுக்கித் தள்ளும்போது இவ்வாறு நிகழ்ந்துவிடுவது இயற்கையான காரியம்தான். சிறுகதைகளைவிடவும், நாவல்களை விடவும், கவிதைகள் பலவீனமாக இருக்கின்றன. கடந்த நாலைந்து வருடங்களில் சற்றே வலுப்பெற்றிருப்பது கட்டுரை இலக்கியம் மட்டுமே. கட்டுரை இலக்கியம் இந்த அளவுக்கு இதற்கு முன் எப்போதும் வலுப்பெற்றிருந்ததில்லை என்று கூடச் சொல்லலாம். இவ்வாறு நான் சொல்வதில் சற்று மிகை உண்டு. ஒரு உண்மையை அழுத்த அந்த மிகை தேவையாக இருக்கிறது.

இந்தக் கட்டுரைகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். சுயசிந்தனை சார்ந்த கட்டுரைகள் என்றும் தகவல்களைத் தொகுத்துத் தரும் கட்டுரைகள் என்றும் பிரிக்கலாம். நாம் அறிந்திராத சிந்தனை ஒன்றை அறிந்து அது நம் வாழ்வுக்கு ஊட்டம் தரும் என்று நம்பி அதனைத் தன்னளவில் செரித்துக் கொண்டு அச் சிந்தனைகளைத் தமிழ் வாழ்வோடு இணைக்கும் விவேகத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகளையே சுய சிந்தனை சார்ந்த கட்டுரைகள் என்று கூறுகிறேன். இங்கு கட்டுரையாளரின் குறிக்கோள் தமிழ் வாழ்வின் மேன்மை. மற்றொரு வகை நாம் அறிந்திராத சிந்தனைகளை, அந்த சிந்தனைகளின் புதுமைக்காகவே திரட்டித் தருவது. இங்கு குறிக்கோள், எழுத்தாளர் தன்னை அறிவாளி என்று காட்டிக் கொள்வது. ஆக, ஒட்டு மொத்தமாகப் பார்க்கிறபோது கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகிய இலக்கிய வடிவங்களில் சுய சிந்தனைகள் சார்ந்த கடடுரைகள் மட்டுமே ஆறுதல் தரும் அளவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இன்றையப் படைப்புக்களில் சற்று வலுவானவற்றை ஒருவர் சுட்டிக்காட்டி என் வாதத்தை மறுக்க முன்வரலாம். அதுபோன்ற மறுப்பு தோன்றுவதை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அப்போது இன்றைய இலக்கியப் படைப்புக்களை ஏன் பலவீனமானவையாகக் கருதுகிறேன் என்பதை விளக்க எனக்குக் கூடுதல் சந்தர்ப்பம் கிடைக்கும். மேலும் எந்த இலக்கிய உருவங்கள் சார்ந்தும் வெளிப்படும் விதிவிலக்குகளை வைத்து இலக்கியத்தின் பொதுக் குணத்தையோ வலுவையோ நிர்ணயிக்க முடியாது. நல்ல படைப்புக்கள் விதிவிலக்காக இருப்பதே படைப்புக்கள் பலவீனமானதாக இருக்கின்றன என்பதைத்தான் காட்டுகிறது.

மேலும் சாதனைகளை அளக்கத் துல்லியமான அளவுகோல்கள் இல்லை. நடுத்தரமான படைப்புக்களை மீண்டும் மீண்டும் படித்து ஒருவன் அனுபவம் பெறும்போது நடுத்தரமான எழுத்தே அவனது அதிகபட்ச எல்லையாகிவிடும். கேளிக்கை எழுத்தில் ஒருவன் முங்கி முங்கி எழுந்து கொண்டிருந்தால் அவனிடம் ஒரு சிறந்த படைப்பைத் தரும்போது அப்படைப்பில் கேளிக்கை இல்லையென்று சொல்லி அவன் அதை உதறிவிடுவான். தமிழன் அவனுடைய நடுத்தரமான படைப்புக்களுக்கு ஏற்ப அவனுடைய பார்வையைச் சுருக்கிக் கொண்டு வருகிறான். நடுத்தரமான படைப்புக்களை மேலான படைப்புக்கள் என்று சாதிக்க தங்கள் பார்வைகளை எந்த அளவுக்குச் சுருக்கிக் கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்குப் படைப்பாளிகள் சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படைப்பாளிகளை ஊக்குவித்து உரம்போட இலக்கிய விமர்சனத்தின் ஆனா ஆவன்னா கூடத் தெரியாத விமர்சகப் பெருந்தகைகளும் இருக்கிறார்கள். மேலான படைப்புக்கள் வரும்போது அவை தங்கள் நடுத்தரமான படைப்புக்களைப் பின்னகர்த்திவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இவர்களைத் தூக்கிப்பிடிக்கும் விமர்சகர்களுக்கும் இவ்வகையான படைப்பாளிக்கும் தனியான வாழ்வு இல்லாததால் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு தங்களுக்கு ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ள அலைகிறார்கள்.

ஒரு படைப்பாளிக்கு நேற்றையத் தமிழ் சார்ந்த சவால் மனதில் இல்லாவிட்டால் அவனைப் படைப்பாளி என்றே சொல்ல முடியாது. தொல்காப்பியன் வரையறுத்த மொழி இது. நுட்பமான கருத்துக்களை மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வேகமாகவும் சொன்ன வள்ளுவன் வளர்த்த மொழி. கம்பனும், இளங்கோவும் சாதனைகள் புரிந்த மொழி. இந்த நூற்றாண்டில் மட்டும் சிந்தனைகள் சார்ந்தும் சிறுகதைகள் சார்ந்தும் கவிதைகள் சார்ந்தும் பல கலைஞர்கள் சாதனை புரிந்த மொழி. உலக மொழிகளில் மிகத் தொன்மையான மொழி. நம் மக்கள் தொகை உலக இனங்கள் பலவற்றையும் தாண்டி நிற்பது. இந்தப் பின்னணிகள் எல்லாம் படைப்பாளியின் மனதில் இருந்தால்தான் அவனுக்கு சவால் இருக்கும்.

நான் உருவாக்கும் விமர்சனக் கருத்துக்கள் என்னுடைய நடுத்தரமான படைப்புக்களின் ஆயுளைக் கூட்டுவதற்காக உருவாக்கப்படுபவை அல்ல. என் விமர்சனக் கருத்துக்களை என் வாசகர் சரிவரப் புரிந்து கொள்கிற போது அவனிடமிருந்து முதல் ஆபத்து எனக்கு வருகிறது. என் விமர்சனக் கருத்துக்களை அறியாத நிலையில் மிகச் சிறப்பாக நாவல்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று அவன் என்னைப் பாராட்டுகிறான். என் விமர்சனக் கருத்துக்களைத் தெரிந்து கொண்ட நிலையில் சிறந்த உலக நாவல்கள் போலவோ, சிறந்த இந்திய நாவல்கள் போலவோ ஒன்றை ஏன் உங்களால் படைக்க இயலவில்லை என்று அவன் என்னிடம் கேட்கிறான். என்னை நிராகரிக்க நான் அவனுக்குக் கற்றுத் தந்து, நான் எழுதவிருக்கும் படைப்புக்கள் மூலம் என்னை அவனால் நிராகரிக்க முடியாமல் ஆக்குவதே நான் ஏற்றுக் கொண்டிருக்கும் சவால்.

எல்லா மொழிகளிலும் கவிதைகளும், சிறுகதைகளும், நாவல்களும், நாடகங்களும், இலக்கிய விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றை வைத்து அம்மொழி சார்ந்த இலக்கியம் மதிப்பிடப்படுகிறது. பொதுவான உண்மை இது என்றாலுங் கூட இன்று உலக மொழிகளில் அம்மொழி சார்ந்த இலக்கியம் உறுதிப்பட, அம்மொழியில் வெளிவந்துள்ள நாவல்கள்தான் அதிகப் பங்காற்றியிருக்கிறது. கவிதையைவிட, சிறுகதையைவிட, நாடகங்களைவிட அதிகப் பங்காற்றக்கூடியவையாக நாவல்கள் இருக்கின்றன.

இன்றைய உலகில் நாடுகளின் எல்லைகள் மங்கிப் போய்விட்டன. மொழிபெயர்ப்புகள் மூலம் மொழிகளின் எல்லைகள் மங்கிப் போய்விட்டன. கடல்கள் தாண்டிப் பறக்க மனிதன் கற்றுக் கொண்ட பின் தேசங்கள் மிகவும் நெருங்கி வந்துவிட்டன. மனித உறவுக்கு உலகத் தளம் உறுதியாகிவிட்டது. வாசிப்பு மூலம் உறுதிப்படும் உறவு இது. மனிதனுடைய பல அடிப்படையான பிரச்சினைகள் உலகம் சார்ந்த பிரச்சினைகளாக இருக்கின்றன. எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி இன்று உலக மனிதனின் பொதுக் கேள்வியாகிவிட்டது. இந்தக் கேள்விக்கு பின்னால் நிற்கும் கேள்வி எதற்காகச் சீரழிந்து கொண்டிருக்கிறேன் என்பதுதான். அதற்கும் பின்னால் நிற்கும் கேள்வி சீரழிவிற்கு நான் ஏன் துணை நிற்கிறேன் என்பதுதான். மற்றொரு கேள்வி நான் யார் என்பது. என் அடையாளம் என்ன என்பது. என் முகம் எங்கே என்பது. மிகப் பெரிய சந்தையில் மிகப் பெரிய சந்தடியில் பணம் சார்ந்த போட்டா போட்டியில், புகழ் சார்ந்த போட்டா போட்டியில், பொருட்களை வாங்கிக் குவிக்கும் போட்டா போட்டியில், நான் என்னை இழந்து கொண்டிருக்கிறேனா என்பது.

தமிழனைப் பொறுத்தவரையில் இந்தக் கேள்விகள் அவனிடம் இல்லையென்றும் அவன் துருத்தியில் சோற்றை அடைத்து அவன் இடுப்பில் கெளபீனத்தைக் கட்டிவிட்டால் நுகத்தடியை ஒருபோதும் கழற்ற மாட்டான் என்றும் பலர் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். உலக மக்களுக்கு இருக்கக்கூடிய சகல பிரச்சினைகளும் தமிழனுக்கும் இருக்கின்றன. ஆனால் அந்தப் பிரச்சினைகள் இங்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை. அந்தப் பிரச்சினைகளுக்கு இன்று மொழி உருவம் இல்லை. ஒரு பிரச்சினைக்கு மொழி உருவம் இல்லையென்றால் அந்தப் பிரச்சினையில் அழுந்தி கிடப்பவனால் கூட அவன் பிரச்சினையைத் தெரிந்து கொள்ள இயலாது. பிரச்சினைகளுக்கு மொழி உருவம் ஏற்படாத நிலையில் அவற்றுக்குப் பரிகாரம் காண முடியாது. தான் போக வேண்டிய திசையும் அவனுக்குத் தட்டுப்படாது. துன்பத்தைத் துல்லியமாக வரையறுக்கும் மொழியற்ற நிலையில் எதார்த்தத்தை எதிர் கொள்ள முடியாதவனாக ஆகிவிட்டான் தமிழன். இந்த நெருக்கடியிலிருந்து உருவாகும் மனக் கலக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அவன் போதை வஸ்துக்களைத் தழுவிக் கொள்கிறான். போதை வஸ்து ரசாயனத் திடப் பொருளாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. போதை வஸ்து திரவமாக இருக்க வேண்டுமென்பதுமில்லை. திரைப்படங்களில் வெளிப்படும் பெண்ணுடல், உடலுறவு சமிக்ஞைகள், வன்முறை, இதழ்கள் தரும் கிளுகிளுப்பு, மேடையில் முழங்கும் மொழி அலங்காரம், லாட்டரிச் சீட்டு, அரசியல், திரையுலக கிசுகிசுப்புகள், வம்புகளில் கொள்ளும் ஆர்வம், மனதில் கற்பனை எதிரிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் எல்லாமே எதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாத மலட்டுத்தனம் உருவாக்கித் தரும் போதை வஸ்துக்களே. இந்தப் போதை வஸ்துக்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தாத தமிழ் ஜென்டில்மேன் ஒருவன் கூட இன்று தமிழகத்தில் இல்லை. பலவற்றையும் ஏக காலத்தில் பயன்படுத்தி வருபவர்கள் எங்கும் நீக்கமற காண முடிகிறது.

தமிழ் வாழ்வு நமக்கு இரண்டு முகங்களைத் தந்திருக்கின்றன. ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம். மேடையில், சமூகக் கண்களின் முன், ஜாதியை முற்றாகத் தாண்டிவிட்டதான பாவனையை நாம் கொள்கிறோம். இங்கு ஜாதியைத் தாண்ட முயன்று கொண்டிருப்பதாகக் கூறும் நேர்மையாளர்களைக் கூட அவ்வளவாகப் பார்க்கக் கிடைப்பதில்லை. ஆனால் நம் குடும்பங்கள் ஜாதியில் அழுந்திக் கிடப்பது நமக்குத் தெரியும். நம் உறவும் சுற்றமும் ஜாதியைத் தக்க வைத்துக் கொள்ள பிரயாசை மேற்கொண்டு வருவது நமக்குத் தெரியும். குடும்பத்திற்காக முகமும் குடும்பத்திற்கு வெளியே முகமூடியும் நமக்கு இருக்கின்றன. ஜாதியை விட்டு மதத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டாலும் இதே கதைதான். படைப்பாளியாக நாம் போற்றுவது வள்ளுவனை, கம்பனை, இளங்கோவை, பாரதியை, பாரதிதாசனை. நாம் படிப்பது வணிக இதழ்களில் வரும் தொடர்கதைகளை. கிளுகிளுப்பூட்டும் எழுத்துக்களை. இலக்கியத்தைப் போற்றுபவர்கள் உண்மையாகவே சிறந்த நவீன படைப்புக்களை வாங்கத் தொடங்கினால் நல்ல புத்தகங்களின் முதல் பதிப்பு இருபத்தையாயிரம் பிரதிகள் ஆகிவிடும். இப்போது நல்ல புத்தகங்கள் ஆயிரம் பிரதிகள் அச்சேற்றப்பட்டு இரண்டு மூன்று வருடங்களில் அவை விற்று முடிகின்றன. இங்கும் முகமும், முகமூடியும் இருப்பதை நாம் உணரலாம். ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம் ஒரு பக்கம் மிக அதிகம். கற்பைக் கடைத்தேற்ற தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் பெண் இன்றும் நம் மனங்களில் இலட்சிய உருவமாகவே நிற்கிறாள்.

ஆனால் நாம் எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பது தொலைக்காட்சி திரைப்படங்களில் வெளிப்படும், நம் பண்பாட்டுக்கு எதிரானவை என்று நாம் நம்பும், காட்சிகளையே. நம் பண்பாட்டை மீறுபவை என்று நாம் கருதும் சொற்களை எழுத்துருவமாக கண்டால் பதறித் துடிக்கும் நாம், நம் பண்பாட்டை மீறும் காட்சிகளைக் குடும்பமாகக் கூடியமர்ந்து ரசித்து மகிழ்கிறோம். இங்கும் முகமும் முகமூடியும் வெளிப்படுகிறது. இவ்வாறு வாழ்வின் தளத்தில் ஒவ்வொரு நிமிடமும் முகமும் முகமூடியும் இணைந்து அவற்றிற்குரிய காரியங்களை மாறி மாறி செய்து கொண்டிருக்கிற போது, எது முகம் எது முகமூடி என்பதில் நமக்கு மிகுந்த குழப்பம் ஏற்படுகிறது. நான் உறங்கும்போது முகமூடி இல்லாமல் உறங்குகிறோம் என்று கற்பனை செய்து கொள்ள எனக்கு ஆசையாக இருந்தாலும் முகமூடிகளை உற்பத்தி செய்யும் ஆழ்மனம், விழித்திருக்கும் நிலையைப் பார்க்கிலும் உறக்கத்தில் அதிகச் சுறுசுறுப்புக் கொள்வதால், அந்த ஆழ்மனங்கள் உருவாக்கும் கனவுகளில் எண்ணற்ற முகமூடிகளை நான் அணிந்திருக்கும் துரதிர்ஷ்டத்தைப் பார்க்க வேண்டியவனாகிறேன்.

தமிழனின் சுய அடையாளம் சார்ந்த பிரச்சினையை அவன் தாய் மொழியை வைத்துப் புரிந்து கொள்ள முயலலாம். தாய் மொழிக்கும் தமிழனுக்குமான உறவு என்ன ? தன் எண்ணங்களைத் தெளிவாகச் சொல்லவும் பிறருடைய எண்ணங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் அவசியமான அளவுக்கு ஒருவன் தாய்மொழியில் பயிற்சி பெற்றிருந்த சமூகத்தை மொழி சார்ந்து அவன் நிம்மதியாக எதிர்கொள்ள வேண்டும். இந்த நிம்மதி தமிழனுக்கு இன்றில்லை. வரலாற்றில் எந்த காலகட்டத்திலேனும் அவன் இந்த நிம்மதியைப் பெற்றிருக்கிறானா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது. தமிழ் மொழியின் பயிற்சி தராத நிம்மதியை, கெளரவத்தை மற்றொரு மொழியின் பயிற்சி தரும் என்ற நிலை, அந்த நிலை உருவாக்கும் அமைதியின்மை வரலாற்றில் எப்போதும் அவனிடம் இருந்திருக்குமா ? ஒரு சந்தர்ப்பத்தில் அம்மொழி சமஸ்கிருதமாக இருக்கிறது. மற்றொரு சந்தர்ப்பத்தில் தெலுங்காகவோ, கன்னடமாகவோ, மராட்டியாகவோ இருக்கிறது. இப்போது நெடுங்காலமாக அது ஆங்கிலமாக இருக்கிறது. தமிழ் மட்டுமே கற்றவர்கள் அடைந்திருக்கும் அவமானங்கள், இன்றும் அடைந்து வரும் அவமானங்கள் ரகசியமானவை. கற்றிருக்க வேண்டிய ஆங்கிலத்தைக் கற்காமல் போனது தன்னுடைய குறை என்று தமிழன் நம்புவதால் ஆங்கில மொழி சார்ந்து அவன் பட்ட அவமானங்களை அவன் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. அலுவலகங்களில், நீதி மன்றங்களில், மருத்துவமனைகளில் ஆங்கிலம் அவனை அவமானப்படுத்துகிறது. சிறுநீர் என்ற சொல்லைப் பயன்படுத்தும் தமிழனான அலோபதி டாக்டர் ஒருவரைக் கூட நான் இன்று வரையிலும் பார்த்ததில்லை. மிகப் பெரிய தமிழ் புலவர்கள், தங்கள் புலமையின் காரணமாக தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியவர்கள் ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்திற்காக உள்ளூர கூசிக் குறுகிக் கொண்டிருக்கிறார்கள். உலக அரங்கில், இந்திய அரங்கில் தமிழனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ள பல நியாயங்கள் இருக்கின்றன. தமிழ் மண்ணிலேயே தமிழனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது ஆங்கிலம். தமிழும் ஆங்கிலமும் சார்ந்தும் தமிழனுடைய நெருக்கடியை நாம் பார்க்கலாம். தமிழனுடைய அடிப்படைப் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சுய அடையாளம் சார்ந்த பிரச்சனையே. 'ஐடென்ட்டி கிரைஸிஸ் ' என்று ஆங்கிலத்தில் சொல்லும் பிரச்சனை. மற்றொன்று வாழ்வியல் நெருக்கடி சார்ந்த பிரச்சனை. 'எக்ஸிஸ்டென்சியல் கிரைசிஸ் ' என்று ஆங்கிலத்தில் சொல்லும் வாழ்வியல் சார்ந்த நெருக்கடி.

தமிழன் தன்னுடைய நெருக்கடிகளைப் பகிரங்கமாக விவாதிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் இருக்கிறான். இந்த விவாதத்தின் பல்வேறு முகங்கள், மிகப் பெரிய சவாலை ஏற்றுக் கொள்ளும் நாவலாசிரியர்களைச் சார்ந்து இருக்கிறது. நம் வாழ்க்கை சார்ந்த அடிப்படைகளை இதற்கு முன் எவரும் விவாதிக்கவில்லையா ? முதன் முதலாக விவாதிக்கப் போவது நாவலாசிரியர்கள்தானா என்ற கேள்வி எழலாம். விவாதங்கள் நடந்திருக்கின்றன என்றும், நடக்க வேண்டிய தளத்தில் விவாதங்கள் நடக்கவில்லை என்றும் சொல்லலாம். அரசியல், சமூகவியல், வரலாற்றியல் சார்ந்த விமர்சனங்கள் பார்வையில் ஒருமையை வற்புறுத்துபவை. அதாவது ஒரு குரலின் நீட்சியாக நிற்பவை. இத் துறைகள் சார்ந்த விவாதங்கள் மூலம் பிரச்சனையின் முழுமையைத் தேடி நாம் போக முடிவதில்லை. அரசியல், விவாதம் எப்போதும் அரைகுறையானது. அதிகாரத்தைக் கைப்பற்ற அவசியமான கண்டுபிடிப்புகளை மட்டுமே அது முன் வைக்கிறது. அதிகாரத்திற்கு இட்டுச் செல்லத் தடையாக நிற்கும் எதிர்நிலை கருத்துக்கள் எப்போதும் அரசியலில் மறைக்கப்படுகின்றன.

மேலும் வரலாற்றாய்வு, சமூகவியல் ஆய்வு எல்லாம் இன்று நிறுவனங்கள் சார்ந்தவை. நிறுவனங்கள் அரசாங்கத்தின் அங்கமாகச் செயல்படுகின்றன. அவர்கள் வாழ்வியல் சார்ந்த சிந்தனைகளை முழுமைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

படைப்பாளி அவன் உண்மையான படைப்பாளி என்றால் அதிகாரத்திற்கு வெளியே நிற்கிறான். நிறுவனத்திற்கு வெளியே நிற்கிறான். அறியாத உண்மைகளைத் தொகுத்து நம் பார்வையை விரிவுபடுத்த முன்னுகிறான். அவனிடம் மகத்தான நவீன கலைச் சாதனம் ஒன்று இருக்கிறது. அந்தக் கலைச் சாதனமான நாவலில் எதிரும் புதிருமான எண்ணற்ற குரல்களைஅவன் எழுப்பிக் கொண்டு போக முடியும். புறமனதைத் தாண்டி அக மனதிற்குள் அவன் நுழைய முடியும். சருமத்தைத் தாண்டி சாரத்திற்கு அவன் போக முடியும். கண்ணுக்குத் தெரியாமல் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் அடிமனங்களின் ஆழங்களை அவன் தோண்ட முடியும். இதுதான் நவீன நாவலாசிரியனின் செயல். நாவல் பெரிய கலை உருவமாக தமிழில் நிறுவுவதற்கு ஏற்ற சூழலைத்தான் நாம் உருவாக்க முடியும். பெரிய நாவலை உருவாக்குவது பெரிய நாவலாசிரியனின் செயல்பாடு.

முதலில் நம் வாழ்வு சார்ந்து மறைக்கப்பட்ட உண்மைகளை நாம் பகிரங்கப்படுத்த முயல வேண்டும். இவ்வாறு பகிரங்கப்படுத்துவதன் மூலம் படைப்பாளி அவனுக்குரிய சுதந்திரத்தையும் அவன் முன் அடிவானம் வரையிலும் விரிந்து கிடக்கும் வெளியையும் உணரலாம். உலக மொழிகளில் தோன்றியுள்ள பெரிய நாவல்களின் குறிக்கோள்களை சூட்சுமமாக வகைப்படுத்தி அந்த வகைப்படுத்தலின் முன் நாம் படைத்துள்ள நாவல்களின் சோகை தட்டிய தன்மையை, சோனித் தன்மையை அனுபவ ரீதியாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு நாம் வரவேண்டும்.

சமூகத்தின் மீது நாவல் கொண்டுள்ள ஆட்சியை நாம் மிகைப்படுத்த வேண்டியதில்லை. குறைத்து மதிப்பிட வேண்டியதுமில்லை. புதிய சமூகத்தைப் புதிய நாவல்கள் மூலமே உருவாக்கிவிட முடியாது. இன்றைய சமூகத்தை அதன் மறைக்கப்பட்ட ஆழம் சார்ந்து புரிந்து கொள்ளாத வரையிலும் புதிய சமூகத்தை உருவாக்க முடியாது. இன்றைய சமூகத்தின் சூட்சுமங்களை உணர நாவல் மிகப் பெரிய கருவியாக செயல்பட முடியும்.

மனித சூட்சுமங்களை முன்னிறுத்தி நாவல் சமூகத்தைப் புரிந்து கொள்ள வழிவகை செய்கிறது. நம் அடிப்படைப் பிரச்சனைகளை நாவல்களுக்குள் பல்வேறு நோக்கில் கண்டு நாம் தெளிவடைய முடியும். நம் பிரச்சனைகளுக்கு மொழி உருவம் கிடைக்கும். பல்வேறுபட்ட பின்னணிகள் கொண்ட படைப்பாளிகள் உருவாக்கும் பெரிய நாவல்கள் மூலம் மொத்த வாழ்வின் பெரும் பகுதி துலக்கம் பெற வாய்ப்புண்டு. மொழி மிகப் பெரிய ஆற்றல் பெறும். மொழி பெறும் ஆற்றல்கள் மூலம் இன்று நாம் வெளிப்படுத்த திக்கித் திணறிக் கொண்டிருக்கும் எண்ணற்ற விஷயங்களைக் கூர்மையாக முன் வைத்துவிட முடியும். நம்மை நாம் அறிந்து கொள்ள விழையும் திசையை நோக்கித் தள்ளுகின்றன பெரிய நாவல்கள். பெரிய நாவலாசிரியர்களின் வருகைக்காக தமிழ் காத்துக் கொண்டிருக்கிறது.

நாகர்கோவில், சுந்தர ராமசாமி படைப்புகள் பற்றிய ஆய்வு கருத்தரங்குச் சிறப்புரை 31.5.1991

என்னைக் கவர்ந்த என் படைப்பு - சுந்தர ராமசாமி

என்னைக் கவர்ந்த என் படைப்பு என்று நான் எழுதியுள்ளவற்றில் எதைச் சொல்வேன் ? ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் என் மற்ற படைப்புக்களுக்கும் எனக்குமான உறவு என்ன ? அவை என்னைக் கவராத படைப்புக்களா ?

நான் நாற்பத்தைந்து வருடங்களாகத் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். கவிதைகளும், சிறுகதைகளும் நாவல்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். கட்டுரைகளில் அதிகமும் இலக்கிய விமர்சனத் துறையைச் சார்ந்தவை. பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பும் சிறிது செய்திருக்கிறேன். நீண்ட கால எழுத்துப் பணி என்று பார்க்கும் போது படைப்பின் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது. இரண்டு நாவல்களும் சுமார் ஐம்பது சிறுகதைகளும் ஐம்பது கட்டுரைகளும் நூறு கவிதைகளும் எழுதியிருக்கிறேன். குறைவாக எழுதியிருக்கும் நிலையிலும் எனக்கு மன நிறைவைத் தரும் சில விஷயங்களும் உள்ளன. என் எழுத்தின் உருவம் எதுவாக இருந்தாலும் சரி, எழுதும் காலத்தில் எனக்கிருந்த ஆற்றலையும் அறிவையும் மனத்தையும் முழுமையாகச் செலுத்தியே எழுதியிருக்கிறேன். அத்துடன் ஒவ்வொரு படைப்பையும் செம்மை செய்யவும் செப்பனிடவும் என்னால் இயன்ற அளவு முயன்றிருக்கிறேன். அவசரமாகவோ கவனக்குறைவாகவோ எதையும் எழுதிய நினைவு இல்லை. இந்தப் பின்னணியில் எனக்கும் என் படைப்புக்களுக்குமான உறவு சற்று நெருக்கமானது. இந்த நெருக்கமான உறவு கொண்டுள்ள படைப்புக்களிலிருந்து ஒன்றை மட்டும் குறிப்பிட்டு அது என்னைக் கவர்ந்துள்ளதாகக் கூறுவதற்கு சிறிது மனத்தடை இருக்கிறது.

எனக்கு தரப்பட்டுள்ள தலைப்பை ‘என்னை அதிகம் கவர்ந்த என் படைப்பு எது’ என்ற கேள்வியாக இப்போது மாற்றிக் கொள்கிறேன். ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ என்ற தலைப்புக் கொண்ட என் இரண்டாவது நாவல்தான் என் மனதில் சற்றுச் சிறப்பான இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

புதுமை மீது எனக்குத் தீராத கவர்ச்சி உண்டு. புதுமை என்று மொழி சார்ந்து நிற்கும் வடிவத்தை மட்டுமே நான் குறிப்பிடவில்லை. புதுமை என்பது முக்கியமாக எனக்கு விஷயம் சார்ந்த விமர்சனம் ஆகும். அது வாழ்க்கை சார்ந்த புதிய பார்வையும் ஆகும். இன்றைய வாழ்க்கை சார்ந்த தாழ்வுகளை விவாதித்து குறைகளை இனம் கண்டு அவற்றை நீக்கும் வழிவகையாகும். இந்த வேட்கை சார்ந்ததுதான் என்னுடைய புதுமை. புதிய படைப்பு இன்று வரையிலும் படைப்பாளிகள் போயிராத வாழ்க்கையின் புதிய பிராந்தியத்திற்குள் போயிருக்க வேண்டும். புதிய அனுபவங்களைக் கொண்டு வந்து வாழ்க்கை சார்ந்த பார்வைகளை விரிவு படுத்தியிருக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி நம் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்தியிருக்கவேண்டும். பழைய மொழியை வைத்து இந்த லட்சியங்களை நிறைவேற்ற முடியாது. வாழ்க்கையின் விமர்சனம் தரும் புதிய மொழிதான் புதிய அனுபவங்களையும் சிந்தனைகளையும் படைத்துக் காட்டும். மொழி கூடி வந்த வகையிலும் விமர்சனம் கூர்மை கொண்ட விதத்திலும் வாழ்க்கை சார்ந்த என் கவலைகள் வெளுப்பட்ட முறையிலும் ‘ஜே.ஜே : சில குறிப்புக்கள்’ மீது எனக்குத் தனியான மதிப்பு இருக்கிறது.

உலகச் சிந்தனையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம் நிலை இன்று பல விதங்களிலும் தாழ்ந்து கிடக்கிறது. இந்திய மொழிகளில் கூட நவீன கலைகளும் நவீனச் சிந்தனைகளும் நம்மைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கின்றன. நமக்குப் பண்டை இலக்கியச் செல்வம் நிறைய இருக்கிறது. அதன் இருப்பை உணர்ந்து நாம் பெருமிதம் கொள்வது மிகவும் இயற்கையான காரியம். ஆனால் இன்றைய வாழ்வை எதிர் கொள்ள இன்றைய காலத்திற்கு உரித்தான அறிவியல் பார்வையும் நவீனச் சிந்தனைகளும் நவீனப் படைப்புகளும் நமக்குத் தேவை. சென்ற கால இலக்கியச் சாதனைகளான சங்ககாலக் கவிதைகள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் போன்றவற்றிற்கு நிகரான சிகரச் சாதனைகளை நாம் இன்றும் உருவாக்கினால்தான் இந்தியாவிலுள்ள பிற மாநிலத்தினர் நம்மை மதிப்பார்கள். உலகம் நம்மை மதிக்கும். இன்றைய நம் தமிழ் வாழ்வை மறு பரிசீலனை செய்யும் ஆக்கங்கள் நம்மிடம் இல்லையென்றால் நேற்று இருந்தவற்றைப் பற்றி மட்டுமே பேசுவது பழம் பெருமை பேசுவதாகிவிடும்.

இன்றையத் தமிழ் வாழ்வின் நிலை எவ்வாறு உள்ளது ? தமிழன் இன்றைய காலத்திற்குரிய பார்வையைக் கொண்டிருக்கிறானா ? அரசியல் சார்ந்தும் கலைகள் சார்ந்தும் அவனுடைய விழிப்பு நிலை எவ்வாறு இருக்கிறது ? நேற்றைய இலக்கியச் செல்வங்களையும் வரலாற்றையும் இன்றைய வாழ்க்கையைச் செம்மை செய்யும் லட்சியத்தை முன் வைத்து அவனால் மறு பரிசீலனை செய்ய முடிகிறதா ? தமிழனுடைய ஈடுபாடுகள், பழக்க வழக்கங்கள் எந்த நிலையில் இருக்கின்றன ? தமிழன் விரும்பிப் பார்க்கும் திரைப்படங்களின் தரம் என்ன ? அவன் படிக்கும் பத்திரிகைகளும் அவன் பேசும் அரசியலும் நாள் முழுக்க அவன் பார்த்துக் கொண்டிருக்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் எந்த அழகில் இருந்து கொண்டிருக்கின்றன ? அவன் விரும்பிப் படிக்கும் புத்தகங்களின் உள்ளடக்கம் என்ன ? மக்களுக்குத் தொண்டாற்றும் நிறுவனங்களையும் அமைப்புக்களையும் கல்வித் துறைகளையும் அவன் வாழ்வுக்குகந்த அரசையும் அவனால் உருவாக்க முடிந்திருக்கிறதா ? இன்றையத் தமிழ் சமுதாயத்தில் தத்துவப் பிரச்சனைகள் எவை ? நெருக்கடிகள் எவை ? உலகத் தளத்திலிருந்தும் இந்தியத் தளத்திலிருந்தும் தமிழ்ச் சமுதாயம் தன் வளர்ச்சியை முன் வைத்து எவற்றைப் பெற்றுக் கொண்டிருக்கிறது ? இந்திய கலாச்சாரத்திற்கும் உலகக் கலாச்சாரத்திற்கும் தமிழ்ச் சமுதாயம் எதைக் கொடுத்து பெருமை தேடித் தந்திருக்கிறது ?

நான் எழுத ஆரம்பித்த 1950ஆம் ஆண்டிலிருந்து ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ எழுதி முடித்த 1980 ஆம்ஆண்டு வரையிலும் எனக்கு முக்கியமாக இருந்த கேள்விகள் இவைதாம். இந்தக் கேள்விகளை தமிழ் அறிஞர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் எழுத்தாளர்களும் உரக்கக் கேட்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதாவது இந்தக் கேள்விகள் சார்ந்த விவாதங்கள் தமிழ் சமூகத்தில் நடைபெற வேண்டும் என்று விரும்பினேன். ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ என்ற நாவலின் படைப்பாக்கத்திற்குப் பின்னால் நின்ற குறிக்கோள் இதுதான்.

‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ தொடராக வெளுயிடப்பட்டதல்ல. அது புத்தக உருவத்திலேயே வாசகர்களைச் சந்தித்தது. இப்படிப் பார்க்கும்போது அதைக் கணிசமான வாசகர்கள் படித்தார்கள் என்றே சொல்வேன்.

ஆனால் துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் இன்று தீவிரமான வாசகர்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கிறார்கள். அந்தத் தீவிரமான வாசகர்களிலும் எழுத்தாளர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையைக் கழித்துவிட்டால் வாசகர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவு. தமிழகத்தில் ஒரு தீவிர எழுத்தாளன் வாசகனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறானா அல்லது சக எழுத்தாளனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறானா என்று கேட்கும் நிலையில்தான் சூழல் இருந்து கொண்டிருக்கிறது. இதனால் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் உறவு நிலை ஒரு படைப்பைச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பாதித்துவிடுகிறது. படைப்பைச் சார்ந்த வாசக மதிப்பீடு ஒரு பாதிப்புச் சக்தியாக பெரும்பாலும் உருவாகி வருவதில்லை.

தமிழகத்தில் ஒவ்வொரு துறையும் அந்தந்தத் துறைகளில் நுட்பமான தேர்ச்சி பெறாதவர்கள் கைகளிலேயே இருந்து கொண்டிருக்கிறது. துறை சார்ந்த தேர்ச்சிகள் பெற்று அரிய காரியங்களைச் சாதிப்பதைப் பார்க்கிலும் குறுகிய நோக்கங்களை முன் வைத்து மேலோட்டமான காரியங்களைச் செய்து புகழும் பணமும் தேடிக் கொள்வதே ஒரு வாழ்க்கை முறையாக இன்று உருவாகிவிட்டது. தமிழ் வாழ்வின் கலை விமர்சனங்களாக தமிழ்த் திரைப்படங்கள் இல்லை. அவை வெறும் கேளிக்கைகளாகவே இருக்கின்றன. அதிக விற்பனை கொண்ட பத்திரிகைகள் தமிழ் வாசகனுக்கு எதுவும் கற்றுத் தருவதில்லை. நுனிப்புல் மேய்பவர்களாக அவர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. சகல வணிகக் கலைகளின் நோக்கமும் வாசகர்களை அல்லது பார்வையாளர்களின் பாலுணர்ச்சிகளை வெளுப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ சுரண்டுவதாகவே இருக்கிறது. மக்கள் விரும்பிப் பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அவர்களுடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் மழுங்கடிக்கக் கூடியதாக இருக்கின்றன. உழைப்பு, சாதனை, தொண்டு, உண்மை, மனித நேயம் போன்ற அரிய சொற்களுக்கு இன்று தமிழ் வாழ்வில் இடமில்லை. சீரழிந்த அரசியலைப் பந்தாடத் தெரிந்தவர்கள் சகல வெற்றிகளையும் இன்று தம் காலடிகளில் போட்டு மிதித்துவிட முடியும்.

தமிழ் வாழ்வில் இன்றைய சீரழிந்த நிலையை ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ ஒரு விவாதப் பொருளாக்குகிறது. விருப்பு வெறுப்பற்ற தீவிரமான வாசகர்கள்தான் ‘ஜே.ஜே : சில குறிப்புக’ளை ஒரு விவாதப் பொருளாக மாற்ற முடியும். சீரழிந்த தமிழ் வாழ்வு பல துறைகளையும் சீரழித்து நிற்பதுபோல் தமிழில் தீவிர வாசகர்களையும் முடிந்த வரையிலும் சீரழித்திருக்கிறது. இந்தச் சூழலில் அப் படைப்பை உருவாக்கிய நோக்கம் போதிய அளவு நிறைவேறவில்லை. காலத்தின் மாற்றத்தில் புதிய வாசகர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்களுடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது என் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’.

தில்லி, ஆல் இண்டியா ரேடியோ, அயல் நாட்டு ஒலிபரப்பில் ஒலிபரப்பப்பட்டது. 15.6.95

பொன்னீலன் - சாகித்ய அகாடமி பரிசு - சுந்தர ராமசாமி

அன்பார்ந்த தலைவர் அவர்களே, நண்பர்களே,

அண்மையில் சாகித்ய அகாடமி பரிசு பெற்றுள்ள நண்பர் பொன்னீலன் அவர்களை நாம் மனந்திறந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். பொன்னீலன் ‘புதிய தரிசனங்கள்’ முதல் பாகம் மட்டும் நான் படித்து முடித்திருக்கிறேன். ஆகவே அப்படைப்புப் பற்றி நான் பேசுவது முறையான காரியமல்ல என்று என்னை இக்கூட்டத்திற்கு அழைக்க வந்த ஆசிரியர்களிடம் கூறினேன். அவர் பொன்னீலனைப் பற்றி நான் பேசினால் போதும் என்றார்கள். இந்தப் பரிசு, படைப்பைச் சார்ந்த குறிக்கோள்கள் எதுவுமில்லாத, கலையாற்றல்கள் இல்லாத மூன்றாந்தர தமிழ் எழுத்தாளர்களுக்குப் பல வருடங்கள் போய்ச் சேர்ந்திருக்கிறது. சாகித்ய அகாடமியின் அணுகுமுறைக்கு எதிராகக் கடந்த முப்பது வருடங்களாக தமிழ் எழுத்தாளர்களிடையே விமர்சனமும் இருந்து வருகிறது. சாகித்ய அகாடமி பரிசு ராஜாஜி எழுதிய ‘வியாசர் விருந்து’ என்ற மகாபாரதக் சுருக்கத்திற்கு அளிக்கப்பட்டபோது அதைக் கண்டித்து ‘சரஸ்வதி’ சிற்றிதழில் க.நா. சுப்பிரமணியம், தொ.மு.சி. ரகுநாதன், டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் விமர்சனங்களைத் தொடுத்த காலத்திலிருந்து சாகித்ய அகாடமியின் தேர்வுகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்து வருகின்றன. சாகித்ய அகாடமியின் தவறான அணுகுமுறைகளை நான் என் கட்டுரைகளில் கடுமையாக விமர்சித்தும் வந்திருக்கிறேன். அவர்களது தவறான தேர்வுகள் மூலம் தரமற்ற படைப்புகள் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க நேரும் போது தமிழுக்குத் தலைக்குனிவு ஏற்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி இனி வரவிருக்கும் 25 வருட காலம் சாகித்ய அகாடமி பரிசை ஏற்க மறுத்து ஐம்பது முக்கிய எழுத்தாளர்கள் ஒன்றாக இணைந்து அறிக்கை விடவேண்டும் என்றும் என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இவற்றைத் தவறான அணுகுமுறைக்கு எதிரான தார்மீகக் கோபம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொன்னீலனை நான் சம்பிரதாயமாகப் பாராட்ட விரும்பவில்லை. எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் சம்பிரதாயமாகப் பாராட்டிக் கொள்வது பண்பாட்டைத் தகர்ப்பதாகும். கலாச்சாரத்தைச் சீரழித்து உண்மைக்குப் பெரும் ஊறு விளைவிப்பதாகும். ஒரு எழுத்தாளனின் படைப்புக்களைப் படிக்காமலே மற்றொரு எழுத்தாளன் பாராட்ட முற்பட்டால் அந்தப் போலியின் முகத்தை பாராட்டைப் பெறும் எழுத்தாளன் அந்த இடத்திலேயே கிழித்துவிடவேண்டும். மாறாக தன் படைப்புக்களைப் படிக்காமலேயே ஒருவன் பாராட்டும்போது எழுத்தாளனுக்கு அது மகிழ்ச்சியைத் தரும் என்றால் படிக்க அவசியமில்லை என்று அவனே நம்பும் எழுத்தை அவன் எழுதுவதை விட்டுவிடலாம். ஆனால் இந்தச் சீரழிவுகள் எல்லாம் இன்றைய வாழ்க்கையில் வழக்கங்கள் ஆகிவிட்டன. இவற்றை இனங்கண்டு கொதிக்கும் அளவுக்கு எழுத்தாளனின் உணர்வுகள் கூர்மையாகவும் இல்லை. கலாச்சாரச் சீரழிவின் ஒரு பகுதியாக எழுத்தாளனே மாறிக் கொண்டிருக்கும் போது தன் விமர்சனத்தை யாருக்கு எதிராக அவன் தொடுக்கப்போகிறான் ?

வணிக முயற்சிகளால் தமிழ் நாகரிகமே அழிக்கப்பட்டு வருகிறது. முக்கியமான வணிக முயற்சிகளாகப் பிரபலமான தமிழ் இதழ்களையும் திரைப்படங்களையும் சொல்லலாம். அத்துடன் அரசியலையும் ஒரு வணிகம் என்று சேர்த்துச் சொல்ல வேண்டும். அது முதலீடு இல்லாத வணிகம். லாபம் அதிகம் தரும் வணிகம். இந்த மூன்று வணிகங்களும் தமிழ் வாழ்வைச் சீரழித்து வருகின்றன. இவற்றை ஊக்குவிக்கும் துணை வணிகங்களென சகல மத நிறுவனங்களையும் சொல்லலாம். சகல ஜாதி சங்கங்களையும் சொல்லலாம். வீட்டுக்குள் புகுந்து பண்பாட்டைக் கொள்ளையடிக்கும் டி.வி.யைச் சொல்லலாம். கல்வி என்பது இன்று மிகப் பெரிய வணிகமாகிவிட்டதால் பல்கலைக்கழகங்களையும் வணிக நிறுவனங்கள் என்று சொல்லலாம். இன்று இந்த வணிக கலாச்சாரத்திற்கு வெளியே நிற்பவர்கள் என்று சிற்றிதழ் மரபைச் சேர்ந்தவர்களை மட்டுமே சொல்ல முடியும். சில எழுத்தாளர்களையும் சில தீவிர வாசகர்களையும் சில தீவிர சிந்தனையாளர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். வணிகக் கலாச்சாரம் என்றால் என்ன ? மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி சுய லாபத்தைத் தேடிக் கொள்ளும் முயற்சிதான் வணிகம். இதைத்தான் பெரிய பத்திரிகைகள் இன்று செய்து வருகின்றன. பாலுணர்வைத் தூண்டும் கதைகள், அற்பத் துணுக்குகள், பெண்மையை இழிவுபடுத்தும் படங்கள், ஆழம் சார்ந்து நின்று அறிவு பூர்வமாக எதையும் ஆராயாமல் நுனிப்புல் மேயும் கட்டுரைகள் போன்றவற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். இந்தச் சீரழிவுதான் டி.வி.யையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தச் சீரழிந்த கலாச்சாரத்திற்கு எதிரானவர் பொன்னீலன். அவர் ஆத்மார்த்தமானவர். கடுமையான உழைப்பாளி. சக மனிதனை நேசிப்பவர். ஜாதி, மதம் போன்ற சகல பிரிவுகளுக்கும் எதிரானவர். ஏற்றத் தாழ்வற்ற குறைந்த பட்சம் ஏற்றத்தாழ்வு மிகுதியாக இல்லாத வாழ்வு இந்த மண்ணில் இறங்கி வரவேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். அந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக எழுதி வருகிறார். எழுத்தைத் தாண்டிய செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் விமர்சனம் உண்டு. ஆனால் வெறுப்பு இல்லை. வெறுப்பு, வன்முறை ஆகிய இழிவுகளை முற்றாக அகற்றி சமூக மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டவர்கள்தான் சிறிய அளவிலேனும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். பொன்னீலன் மார்க்சியத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் என்று சொல்கிறார்கள். இருக்கலாம். மார்க்சியம் அவரைப் பாதித்திருக்கலாம். ஆனால் நான் அவரை நாராயணகுருவின் சீடர் என்று மதிப்பிடவே விரும்புவேன். அப்படிச் சொல்வதுதான் என் பார்வைக்குப் பொருத்தமானதாகத் தெரிகிறது. இவ்வளவு காரணங்களுக்காகவும் நான் பொன்னீலனை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். சாகித்ய அகாடமி பரிசு பெற்றதின் மூலம் ஏதோ பெரிய கெளரவம் அவருக்குக் கிடைத்துவிட்டதென்று நான் நினைக்கவில்லை. கிடைத்த பரிசைவிட பொன்னீலனின் ஆளுமை பெரியது.

பொன்னீலன் எடுத்தாளும் விஷயங்கள் சார்ந்து எனக்கும் அவருக்கும் எந்தவிதமான கருத்து வேற்றுமையும் இல்லை. இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ள விரும்புபவர்கள் அவருக்கும் எனக்கும் இடையில் இருக்கிறார்கள். கருத்துக்களை முன் வைக்கும் முறை சார்ந்த தமிழ் இடதுசாரிப் படைப்புகளை நான் விமர்சித்திருக்கிறேன். சுய அனுபவங்கள் சார்ந்தே ஒரு எழுத்தாளன் படைக்க முடியும் என்பது என் அடிப்படையான நம்பிக்கைகளில் மிக முக்கியமானது. இந்த நம்பிக்கையை நான் கொண்டிருப்பதால் சுய அனுபவங்களைச் சார்ந்து பொன்னீலன் எடுத்தாளும் விஷயங்களை நான் வரவேற்கலாம்; மதிப்பிடலாம்; நிராகரிக்க முடியாது. படைப்பு என்பது மிக மிகக் கூரான ஆயுதம் என்பது என்னுடைய மற்றொரு அடிப்படையான நம்பிக்கை. படைப்பை மிகக் கூரான ஆயுதமாக மாற்ற நாம் முயற்சிகள் எடுத்துக் கொண்டோம் என்றால் நம் படைப்புகளே நம் முயற்சிகளை கட்டாயம் வெளிப்படுத்தும்.

அரசியல்வாதிகளைப் போல் எழுத்தாளர்களும் இன்று ‘மக்கள்’ என்ற சொல்லைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களுக்காகத் தான் எழுதி வருவதாகப் பிரகடனம் செய்யாத இடது சாரி எழுத்தாளனே இல்லை. நான் சுமார் 45 வருடங்களாக எழுதி வருகிறேன். இவ்வளவு நீண்ட காலம் எழுதிய பின்பும் நான் தமிழில் ஐயாயிரம் பேர்களைத்தான் எட்டியிருக்கிறேன் என்று சொல்லலாம். மிகையாகச் சொல்ல ஆசைப்பட்டு பத்தாயிரம் பேரை எட்டியிருக்கிறேன் என்று சொல்லலாம். மிகையாகக் கூட அதற்கு மேல் சொல்ல முடியாது. பொன்னீலன் என்னைவிடவும் பிரபலமான எழுத்தாளர் என்பதால் இருபத்தையாயிரம் பேரை எட்டியிருக்கக்கூடும் என்று சொல்லலாம். ஏழு கோடி தமிழர்களில் பத்தாயிரத்திலிருந்து இருபத்தையாயிரம் பேர்கள் வரையிலும்தான் எங்கள் எழுத்துக்களை இன்று படித்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான விஷயம். இது பத்தாயிரம் பேருக்கு மூன்று பேர் என்ற கணக்கில் அமையும். இப்படிப் பார்க்கும் போது நாங்கள் மக்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று கூறுவது யதார்த்தம் இல்லாத அவகாசம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. வாசகர்களுக்காகதான் நாங்கள் இன்று எழுதிக் கொண்டிருக்கிறோம். மக்களில் ஒரு பகுதியினரையேனும் பாதிக்க வேண்டும் என்றால் எங்கள் வாசகர் தொகையைப் பலமடங்கு பெருக்க வேண்டும். எங்கள் எழுத்துக்கள் மூலம் சிறுபான்மையினரான வாசகர்கள் கடுமையான பாதிப்பைப் பெற்றால்தான் கடலென விரிந்து கிடக்கும் மக்களை நோக்கி நாங்கள் நகர முடியும். கலையாற்றலின்றி வாசகர்களை பாதிக்க முடியுமா ? மிகக் கூர்மையான பாதிப்பை நிகழ்த்த முடியுமா ? மூளைக்குள் காலங்காலமாக உறைந்து கிடக்கும் பழமையின் பாசி படிந்த பாறைகளைத் தகர்க்க வேண்டுமென்றால் கலை எவ்வளவு பெரிய ஆயுதமாக மாற வேண்டும் ?

கலையாற்றல் என்றால் என்ன ? எனக்கு ஒரு அனுபவம் ஏற்படுகிறது. இந்த அனுபவம் ஆழமானது. தீவிரமானது. அதைப்பற்றி நான் எழுதுகிறேன். கதையாகவோ சிறுகதையாகவோ நாவலாகவோ நான் எழுதுகிறேன். என் படைப்பை ஒருவன் படிக்க நேரும்போது அவன் அந்த அனுபவத்தின் தீவிரத்தை, கடுமையை ஆழத்தை உணருகிறான். இந்த அனுபவப் பரிமாற்றத்தை நிகழ்த்தும் ஆற்றல்தான் கலையாற்றல். இன்று கண்முன் காணக் கிடைப்பது முற்றிலும் சீரழிந்து போன ஒரு வாழ்க்கை. இந்தச் சீரழிவை சிறுபான்மையினரான வாசகர்களுக்கு நீங்கள் இன்று உணர்த்த வேண்டும். அவர்கள் பெறும் கடுமையான பாதிப்பு அவர்களைத் தாண்டி சமூக நீரோட்டங்களில் பரவ வேண்டும். இது சாத்தியப்பட மிக ஆழமான படைப்புக்களைத்தான் இன்று படைக்க வேண்டியிருக்கிறது. ஆழமற்ற படைப்புகள் தற்காலிகக் கூட்டங்களைக் கூட்டும். கலாச்சாரம் சார்ந்த பாதிப்புகளை நிகழ்த்தாது. அத்துடன் கலை என்பது ஒரு தனிப்பெரும் ஆற்றல். மேடைப்பேச்சு சார்ந்த திறன் வேறு. கலையாற்றல் வேறு. துண்டுப் பிரசுரம் எழுதும் திறன் ஒன்று; நாவல் எழுதும் திறன் மற்றொன்று. கருத்துக்களை நேரடியாக முன் வைப்பது சுலபம். அனுபவப் பரிமாற்றங்களை நிகழ்த்திக் காட்டுவது மிகக் கடினம். கூட்டம் சேர்ப்பது சுலபம். வாழ்க்கை சார்ந்த மிக மேலான மிக நுட்பமான ஈவிரக்கமற்ற முழுமையான புரிதல்களை உருவாக்குவது மிகப் பெரிய கலையாற்றலுக்கே உரித்தான மிகப் பெரிய சவால். அந்த கலையாற்றலை நம் எழுத்தாளர்கள் தேடிக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பொன்னீலனின் சமூக பார்வைகளை நான் வரவேற்கிறேன். சமூக மாற்றத்தின் மூலம் மனமாற்றம் நிகழ்வதும் மனமாற்றத்தின் மூலம் சமூக மாற்றம் விரைவு பெறுவதும் பிரிக்க இயலாத கண்ணிகளாகும். மனத்தைச் செழுமைப்படுத்தும் மிகப் பெரிய ஆற்றல் கலைக்கு உண்டு. பெரும் மாற்றத்தை நிகழ்த்த விரும்பும் எழுத்தாளன் கலையாற்றல் மிகுந்த படைப்புகள் மூலம்தான் அந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும். பொன்னீலன் கலையாற்றல் மிகுந்த பல படைப்புகளைத் தந்து தமிழ் கலாசாரத்தை செழுமைப்படுத்த வேண்டும். அவருடைய நம்பிக்கைகளில் அவர் உறுதியாக நின்று வருகிறார். என் மனப்பூர்வமான பாராட்டுக்களை அவருக்கு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை இங்கு பேச அழைத்த தலைமையாசிரியருக்கும் பிற ஆசிரியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தக்கலை அரசு உயர்நிலைப்பள்ளி ஏப்ரல், 1994

நவீன எழுத்தாளனின் தலைவிதி - சுந்தர ராமசாமி

கன்னியாகுமரி மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நான்காவது சிறப்பு மாநாட்டை ஒட்டி நடைபெறவிருக்கும் இக் கருத்தரங்கின் தொடக்கவுரையை நிகழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நானும் இதில் பங்கு பெற வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த என் நண்பர் டாக்டர். பத்மனாபன் அவர்கட்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல தலைப்புக்களில் பல்வேறு அறிஞர்கள் இங்கு கட்டுரைகள் படிக்க இருக்கிறார்கள். கல்வி, வரலாறு, திருக்கோயில்கள், பண்டைய இலக்கியம், தற்கால இலக்கியம், கலைகள், நாட்டார் கலைகள், இதழியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற புலவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்து இந்தக் கருத்தரங்கிற்கு வலிமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். எழுத்தாளர் மாநாட்டைச் சார்ந்து நடக்கும் கருத்தரங்கம் என்பதால் இன்றைய தமிழ்ப் பின்னணியில் நவீன எழுத்தாளனின் தலைவிதி பற்றி ஒருசில வார்த்தைகள் கூறுவது தவறாக இருக்காது என்று நம்புகிறேன்.

தமிழ் மொழி உலக மொழிகளில் மிக மேலானது என்பது நமக்குத் தெரியும். மேலான மொழி என்றால் என்ன ? எந்த மொழியிலும் ஒருவர் பேச அந்த மொழி அறிந்த மற்றொருவருக்குப் புரிகிறது. ஒருவர் எழுத மற்றொருவர் படித்துத் தெரிந்து கொள்கிறார். ஓசையில் மட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகளும் இருக்கின்றன. ஓசையிலும் எழுத்து வடிவிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகளும் இருக்கின்றன. கருத்துப் பரிவர்த்தனை எல்லா மொழிகளிலுமே நிகழ்ந்து கொண்டிருக்கும் போது தமிழின் தனிச் சிறப்பு என்ன ? ஏன் அதை வளர்ச்சியடைந்த மொழி என்கிறோம் ? அதன் தொன்மையைச் சொல்லி ஏன் பெருமிதம் கொள்கிறோம் ?

மொழி மேலானது என்றால் அந்த மொழியில் மேலான இலக்கியங்கள் இருக்கின்றன என்று அர்த்தம். சங்கக் கவிஞர்களும் தொல்காப்பியனும், வள்ளுவனும், கம்பனும், இளங்கோவும், பாரதியும் மேலானவற்றை, உலக இலக்கியங்களோடு ஒப்பிடத் தகுந்தவற்றை எழுதியிருக்கிறார்கள். இவை போன்ற படைப்புக்களைக் கழித்துவிட்டால் பரிமாற்றத்திற்கு மட்டுமே உபயோகப்பட்டு நிற்கும் ஒரு சாதனமாகத் தமிழ் சுருங்கிவிடும்.

நேற்று வாழ்ந்த தரமான படைப்பாளிகள் நம் மொழியையும் கலாச்சாரத்தையும் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் வழியில் தோன்றியிருக்கும் இன்றைய எழுத்தாளர்கள் தங்களால் இயன்ற அளவு தரத்தைக் கூட்டி நம் மொழியையும் கலாச்சாரத்தையும் செழுமைப்படுத்தி வருகிறார்கள். உலக இலக்கியங்களுடன் ஒப்பிடத்தகுந்த படைப்புகள் தமிழில் குறைவாகவும் இந்திய இலக்கியங்களுடன் ஒப்பிடத்தகுந்த படைப்புக்கள் தமிழில் நிறைவாகவும் வந்துகொண்டிருக்கின்றன.

ஆக, இந்த எழுத்தாளர்கள்தாம் நம் மொழியின் வளத்தை, கலாச்சாரத்தின் செழுமையை, சிந்தனைகளின் கூர்மைகளைத் தமிழில் உருவாக்கி வருகிறார்கள். இவர்களை மட்டுமே நான் எழுத்தாளர்கள் என்று அழைக்கிறேன். இவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள். சோரம் போகாமல், சமரசங்களில் சரியாமல், இழிவுகளை ஏற்க மறுத்து, புறக்கணிப்புகளால் மனம் குன்றாமல் உயர்வானவற்றையும் உன்னதமானவற்றையும் இயன்ற வரையிலும் இவர்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பார்வை சார்ந்து, ஏற்று நிற்கும் தத்துவங்கள் சார்ந்து, தங்கள் நம்பிக்கைகள் சார்ந்து, இவர்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு வகையினர் மொழியைத் தங்கள் சுய லாபங்களுக்காக, பணம், புகழ், பரிசு ஆகிய மூன்று சுய லாபங்களுக்காக, பயன்படுத்தி சந்தைக்கு ஏற்ப சரக்குகளைத் தயாரித்து அவற்றை விற்றுத் தங்கள் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள். லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட பிரபல இதழ்கள் மூலம் இவர்களின் தயாரிப்புகள் பொழுதுபோக்கு வாசகனை எட்டுகின்றன. எந்த மேலான விதிகள் சார்ந்தும் இவர்கள் ஒழுகவில்லை. இதழின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இவ்விதழ் ஆசிரியர்கள் என்னும் வர்த்தகர்கள் எந்த விதமான சரக்கைக் கொள்முதல் செய்ய விரும்புகிறார்களோ அதற்கேற்ப சரக்கைத் தயாரித்துக் கொடுக்கக்கூடிய வணிக உற்பத்தியாளர்கள் இவர்கள். மறைமுகமான அல்லது நேரடியான ஆபாசம், பாலுணர்வைத் தூண்டும் தந்திரங்கள், தமிழ் வாழ்க்கையில் பார்க்கக் கிடைக்காத காதல் காட்சிகள், நிஜமான வாழ்க்கைக்கு எதிராகப் பொய்யான வாழ்க்கை, உண்மையான பிரச்சனைகளுக்கு எதிராகப் போலியான பிரச்சனைகள், மெய்யான தீர்வுகளுக்கு எதிராக கற்பனையான தீர்வுகள் இவையே அவர்களுடைய வழிமுறைகள். இவர்களுக்கு வருமானம் உண்டு. புகழ் உண்டு, அரசியல் செல்வாக்கு உண்டு. வானொலியிலும் டி.வியிலும் சந்தர்ப்பங்கள் உண்டு. பல்கலைக் கழகங்கள் ஆதரிக்கின்றன. ஆராய்ச்சி மாணவர்கள் இவர்களுடைய ஜோடனைகளை ஆராய்ச்சி செய்து பட்டம் பெறுகிறார்கள். எழுத்தாளர்கள் தங்களைத் தேடி பரிசுகள் வருவதற்காக நெடுங்காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வணிக எழுத்தாளர்கள் பரிசுகளுக்குக் கொடுக்க வேண்டிய அரசியல் விலை தந்து உடனுக்குடன் அவற்றைப் பெற்று முந்தியில் சொருகிக் கொண்டு போகிறார்கள். அத்துடன் மூன்றாம் தர வணிகத் தயாரிப்புகள்தான் இன்று நூல் நிலையங்களையும் பெரிதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன.

மேலானவற்றை உருவாக்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளன் ஐந்நூறு அல்லது ஆயிரம் பிரதிகள் விற்கும் சிறு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறான். தமிழ் மக்களின் எண்ணிக்கை 5 கோடிக்கு மேல் என்கிறார்கள். மேடையில் முழங்குகிறவர்கள் இன்னும் அதிகமாகக் கூடச் சொல்கிறார்கள். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. தமிழ் எழுத்தாளன் ஒருவன் அவன் மேலானவற்றைப் படைக்க வேண்டும் என்று எண்ணிவிட்டான் என்றால், ஐம்பது வருடம் விடாப்பிடியாக எழுதிய பின்பும் அவனால் இரண்டாயிரம் வாசகர்களைச் சென்றடைய முடியாது. அவன் தனியாக சிற்றிதழ்களுக்கு வெளியே நின்று ஒரு புத்தகம் எழுதினால், அதுவும் தரமான புத்தகம் என்றால் ஆயிரம் பிரதிகள் விற்க ஐந்து வருடங்கள் வரையிலும் ஆகும். ஐம்பது வருடங்கள் தொடர்ந்து எழுதிய பின்பும் அவன் ஒரு சமூக சக்தியாக உருவாவது இல்லை. திட்டமிட்ட புறக்கணிப்புகள் மூலம் அவன் குரல்வளை நெரிகிறது. இருப்பினும் அவன் எழுதிக் கொண்டிருக்கிறான். தரத்தைக் காப்பாற்ற முன்னும் தமிழ் எழுத்தாளனின் சோதனைகள் மிகக் கொடுமையானவை. எனக்குத் தெரிந்து உலக மொழிகள் எவற்றிலும் மதிப்பீடுகளையும் தரங்களையும் போற்றும் எழுத்தாளன் இந்த ஒரே காரணத்திற்காக இவ்வளவு மோசமான சோதனைகளை எதிர்கொள்வதில்லை.

ஆனால், காலம் அவ்வளவு கொடுமையாக இல்லை. எழுத்தாளனின் படைப்புக்கள் காலத்தை எதிர்த்து வெல்லும் போது, பொழுதுபோக்கு ஜோடனைகள் காலத்தால் சாகடிக்கப்படுகின்றன. ஆனால் காலத்தின் நடவடிக்கைகள் சாவகாசமானவை. எழுத்தாளனின் ஆயுளோ அதிகமாகவும் இல்லை. பாரதியைப் புறக்கணித்த புலவர்கள் இருந்த இடம் இன்று தெரியவில்லை. பாரதி நின்று கொண்டிருக்கிறார். கல்கி தேய்ந்து கொண்டிருக்கிறார். புதுமைப்பித்தன் வளர்ந்து கொண்டிருக்கிறார். தாம் வாழ்ந்த காலத்தில் மிக மோசமான புறக்கணிப்புகளுக்கும் வசவுகளுக்கும் ஆளான வையாபுரிப் பிள்ளை மறு அவதாரம் எடுத்திருக்கிறார். அவரைத் தூற்றிய புலவர்களின் வாரிசுகள் வையாபுரிப் பிள்ளைக்கு உரிய மதிப்புத் தந்து அவரை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று இப்போது வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். டி.கே.சியின் தமிழ் பற்று, கவிதைப் பற்று, தமிழ் இசைப் பற்று ஆகியவை இன்று தமிழ் வாழ்வின் ஒரு பகுதியாக மலர்ந்து விட்டன. இக் கருத்துக்களை அவர் கூறிவந்த காலங்களில் அவர் மிக மோசமான விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டி இருந்தது

ஆனால் தன் ஆயுளுக்குப் பின் நிதி வழங்கப்படும் காலத்தை மட்டுமே நம்பி ஒரு எழுத்தாளன் வாழ நிர்ப்பந்திக்கப்படுவது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தின் இருப்பைக் காட்டவில்லை. அரசியல், கல்வித்துறைகள், இலக்கிய அமைப்புகள், திரைப்படங்கள், சமய நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் வணிக மதிப்பீடுகளை ஏற்றுக் கொண்டு குறுகிய வழிகளில் செயல்படுவதைப் போற்றும் ஒரு சமூகம் நோயுற்ற ஒரு சமூகம் என்பதில் தவறில்லை. இந்த நோயின் காரணமாக மேலான மதிப்பீடுகள் இன்று முற்றாகச் சரிந்து விட்டன. மட்டுமல்ல தாழ்ந்து கிடக்கும் மதிப்பீடுகள்தான் நடைமுறை சாத்தியமானவை என்ற நியாயமும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. வணிக சினிமாவின் சீரழிந்த மதிப்பீடுகள்தான், தமிழ் அறிவுவாதிகள் என்று கூறிக் கொண்டு நெளியும் அநேகரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அடிப்படையில் இது நிலவுடைமை சமூகத்தின் மதிப்பீடுகள் ஆகும். யார் உண்மையில் அறிவுவாதிகளோ, யார் தரத்திற்காகவும் மேன்மைக்காகவும் நிற்கிறார்களோ அவர்களை மக்களுக்குத் தெரியாது. யார் யாரை மக்களுக்குத் தெரியுமோ அவர்கள் மக்களின் அடிப்படை நாகரிகத்தையே சிதைத்து அந்தச் சிதைவிலேயே தங்கள் குறுகிய நோக்கங்களின் வெற்றிகளில் திளைப்பவர்கள். இப்படிப் பார்க்கும் போது தமிழ் எழுத்தாளனின் தலைவிதியும் தமிழ் சமூகத்தின் தலைவிதியும் ஒன்றுதான். இதுதான் இன்றைய தமிழின் தலையாய பிரச்சனை. இந்தப் பிரச்சனைகளை விரிவாக, மிக ஆழமாக ஆராய்வதுதான் இன்றைய தமிழ் எழுத்தாளர்களின் முதல்பட்ச வேலை.

கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நான்காவது சிறப்பு மாநாட்டின் தொடக்கவுரை - 28.12.90

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை - சுந்தர ராமசாமி

'ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை ' என்ற தலைப்பில் என்னை இளைஞர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பு மிகவும் வித்தியாசமானது. ஒரு படைப்பாளி என்று கூறுகிற போது என்னை நான் சிறிது வரையறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் மொழி சார்ந்த ஒரு படைப்பாளி என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஓவியம் சார்ந்தோ, சிற்பம் சார்ந்தோ, இசை சார்ந்தோ படைப்புத் தொழிலில் ஈடுபட்டவனல்லன் நான். படைப்பாளி என்ற வார்த்தையை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். இலக்கியமே வாழ்க்கையைச் சார்ந்திருக்கிறது. வாழ்க்கையைப் படைப்பு முறையில் அணுக விரும்புகிற ஒரு படைப்பாளி என்று நான் என்னைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய முதல்பட்சமான அக்கறைகள் வாழ்க்கையைப் பற்றியவை. இந்த அக்கறைகளைச் சார்ந்துதான் இலக்கியப் படைப்புக்கள் உருவாகின்றன. ஆக, ஒரு இலக்கியப் படைப்பாளி என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி, வாழ்க்கையைப் படைப்புக் கண்ணோடு பார்க்க விரும்புகிறவன் என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி முதல்பட்சமாக நான் ஒரு வாசகனாக இருப்பதையே உணருகிறேன்.

பெரும்பாலும் இலக்கியப் படைப்பாளிகள் எல்லோருமே அவர்கள் தீவிரமான படைப்பாளிகள் என்றால், படைப்பாளி என்ற சொல்லுக்கு அருகதை உள்ளவர்கள் என்றால், அவர்கள் தீவிரமான வாசகர்களாகவும் தான் இருப்பார்கள் என்று நம்புகிறேன். இளவயதில் ஒருவனுக்கு இந்த வாசிப்பு ஏற்பட்டு மிகச் சிறந்த படைப்புக்களோடு மோதல்கள் நிகழ்ந்து, படைப்பின் ஊற்றுக்கண் திறந்து அவனும் ஒரு படைப்பாளியாக மாறிக் கொள்கிறான் என்று நினைக்கிறேன். படைப்புக்கு முன்னும், படைக்கும் காலங்களிலும், படைக்க முடியாத காலங்களிலும் அனுபவ வறட்சியாலோ அல்லது வயோதிகத்தாலோ அல்லது பொறிகள் சுருங்கிப் போவதாலோ படைக்க முடியாத காலங்களில் கூட படைப்பாளிகள் வாசகர்களாக இருக்கிறார்கள். இப்போது முன்புபோல் எழுத முடியவில்லை; படிக்கத்தான் முடிகிறது என்று சொல்கிறார்கள். ஆக எந்த நிலையிலும் தொடரக்கூடிய ஓர் நிகழ்வாக இந்த வாசிப்பு இருந்துகொண்டிருக்கிறது.

வாசிப்பு என்று நாம் சொல்லக்கூடிய வார்த்தையின் உண்மையான பொருள் என்ன ? வாசிப்பு என்பது மற்றொருவர் உரையாட, நாம் கேட்டுக் கொண்டிருப்பது. உரையாடக்கூடியவர் அங்கில்லை. ஆனால் அவரது உரையாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதுகூட அவர் அறியாத காரியமாக இருக்கும்; அப்போதும் அந்த உரையாடல் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் ஆயிருக்கும். அப்போதும் அவர் நம்மைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தைத் தரும் இந்த வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறபோது இது மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாக எனக்குப்படுகிறது.

மாணவர்களாகிய நீங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறீர்கள். நம்முடன் உரையாட வந்தவர்கள் ஏதோ சாதாரண விஷயங்களைப் பற்றி நம்மிடம் சொல்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மிகச் சாரமான பகுதியை - மிக மேலான பகுதியை - அதிக அளவிற்குப் பொருட்படுத்தத் தகுந்த பகுதியைப்பற்றியே நம்மிடம் பேசுகிறார்கள். அந்த அர்த்தத்தில் இன்று நாம் வள்ளுவனுடன் பேச முடியும்; கம்பனுடன் உறவாட முடியும்; ஷேக்ஸ்பியரின் மிகச் சாராம்சமான பகுதிகள் என்ன என்பதைத் தெளிளத் தெளிவாக, துல்லியமாக நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்தக் காலத்தில் வாழ்கின்ற எல்லா சிறந்த எழுத்தாளரையும் நாம் இருக்குமிடத்திலிருந்தே சந்திக்க முடியும். இந்தப் பெரிய வாய்ப்பை எண்ணி எவன் புளகாங்கிதப்படுகிறானோ அவனைத்தான் நான் சிறந்த வாசகன் என்று கருதுகிறேன்.

ஆக, மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் மிகுந்த பரவசத்தோடு பெற்றிருக்கும் இந்த வாய்ப்பை, சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் விசேஷமான வசதியுடன் வாழ்ந்திருந்தாலும் கூட, இந்த அளவிற்கு விரிவாகப் பெற்றிருக்க முடியாது. புத்தகங்கள் அச்சேறத் தொடங்கிய பின் ஒரு மிகப் பெரிய அறிவுப் புரட்சி, கலைப்புரட்சி, கலாச்சாரப் புரட்சி நிகழ்ந்து வருகிறது. இதைப் பற்றித் துல்லியமாகத் தெரிந்து கொள்கிற வாய்ப்பை இந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பெற்றிருக்கிறோம். இப்படி யோசிக்கும்பொழுது இன்று வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடிய ஒருவன் ஏதோ ஒரு துறையைச் சார்ந்து பணியாற்றக் கூடியவன், குடும்பம் சார்ந்து இயங்கக் கூடியவன், உறவினர்களிடம் நட்புப் பாராட்டக் கூடியவன் அதாவது பிரத்யட்சமான வாழ்க்கையை, எதார்த்தமான வாழ்க்கையை எதிர்கொள்ளக் கூடியவன் எதற்காகப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற கேள்வியையும் நாம் எழுப்பிக் கொள்ளலாம்.

இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுதான் கூர்மையான பொறிகளை நாம் பெற்றிருந்தாலும் கூட, நம்முடைய கவன வட்டங்கள், நம்முடைய அறிவு வட்டங்கள், நம்முடைய அனுபவ வட்டங்கள் மிகக் குறுகிய எல்லைகளிலேயே இயங்குகின்றன. தொலைதூரம் என்னால் பார்க்க முடியாது. தொலை தூரத்தில் இருக்கக்கூடிய வாசனையை என்னால் நுகர முடியாது. என்னுடைய அனுபவங்கள் எனக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அந்த அளவு அவை என்னிடம் மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவுக்குக் கூட எனக்குப் பிறருடைய அனுபவங்கள் தெரியாது. ஆகவே இந்த வாழ்க்கையின் அகண்டகாரமான தன்மையையும், இந்த வாழ்க்கையில் பூமிப் பந்தில் ஒரு எறும்பு ஒட்டிக் கொண்டு இருப்பது போல் இருக்கக்கூடிய என்னுடைய நிலையையும் நினைத்துப் பார்க்கும்பொழுது பிறருடைய வாழ்க்கை சார்ந்த உண்மைகளையும் பிறருடைய வாழ்க்கை சார்ந்த சாராம்சங்களையும் சத்தான பகுதிகளையும் தெரிந்துகொண்டு அதன் மூலம் இந்த முழு வாழ்க்கையைப் பற்றி, இந்த வாழ்க்கையின் பல்வேறுபட்ட பரிமாணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். இதுதான் வாசிப்பின் தேவையை வற்புறுத்தக் கூடிய காரணமாக அமைகிறது.

இந்தக் காலத்தை எதிர்கொள்ளக்கூடிய மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ ஒரு விதத்தில் முழு வாழ்க்கையின் கோலங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். இவர்கள் காலத்தால் பின்தங்கிப் போய்விடாமல் உருவாகி வரும் மிக மோசமான காலத்தை - மிக மோசமான காலம் ஒன்று உருவாகி வருகிறது; நாம் அதைப்பற்றி அறிந்திருக்கலாம்; அறியாமல் இருக்கலாம். ஆனால் காலத்தினுடைய மோசமான விளைவுகளை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் - எதிர்கொள்வதற்கு வாழ்க்கையின் முழுக் கோலங்களைப் பற்றிய உணர்வுகளை, அனுபவங்களை, அறிவுகளை மாணவர்கள் முடிந்த மட்டும் தேடிக் கொள்வது நல்லது என்று படுகிறது.

மாணவர்கள் இயன்ற வரையிலும் தீவிரமான வாசகர்களாக இருக்கக்கூடிய பெரும் வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நாம் வற்புறுத்திக் கூற விரும்பும் கருத்து. இது மிகவும் முக்கியமானது. மற்றொன்று உங்கள் துறை சார்ந்த விஷயங்கள். மாணவர்கள் கல்லூரிகளில் பல்வேறுபட்ட துறைகளைக் கற்றிருக்கலாம். அந்தத் தேர்வுகள் சுத்தமாக நிகழ்கின்றனவா என்பதைப் பற்றி எனக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. அநேக சந்தர்ப்பங்களில் முதிர்ச்சி அடையாத மனநிலையில், அல்லது ஒரு பதட்டத்தில், அவசரத்தில் தனக்கு வழிகாட்ட போதிய விவேகம் கொண்ட தந்தையோ, தாயோ அல்லது குடும்ப உறவினர்களோ இல்லாத நிலையில், மாணவர்கள் பல்வேறுபட்ட துறைகளை எடுத்துப் படிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆக தங்களுடைய கண்ணோட்டத்தைச் சேர்ந்த, தங்களுடைய ஆளுமையைச் சேர்ந்த, தங்களுடைய ருசிகளுக்கு ஏற்ற துறையைத்தான் எப்போதும் அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இளமைக் காலத்தில் 18 - 20 வயது வரும்போது தமக்கு அதிக வயதாகிவிட்டது; நாம் விரைவில் கல்வியை முடித்துக் கொண்டு ஏதாவது ஒரு தொழிலுக்கு அல்லது ஒரு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற அவசர உணர்வும் இளைஞர்களுக்கு ஏற்படுவது இயற்கை என்று எனக்குத் தோன்றுகிறது.

என்னைப் பொறுத்த வரையில் ஒருசில இழப்புகளுக்கு நீங்கள் உங்களை ஆளாக்கிக் கொண்டாலும் கூட, ஒரு சில சிரமங்களுக்கு உங்களை நீங்கள் ஆளாக்கிக் கொண்டாலும்கூட அல்லது உங்களுடைய ஆசைகளிலிருந்தோ அல்லது உங்களுடைய குடும்பத்திலிருந்தோ சில விமர்சனங்களுக்கு நீங்கள் ஆட்பட்டார்கள் என்றாலுங்கூட, சரியான துறையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லுவேன். இந்தத் துறைகளை மாற்றிக் கொள்ளக்கூடிய விஷயம் இங்கு முக்கியமாக இந்தியாவில் அல்லது தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையை தரக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால், மேல்நாட்டில் பலரும் தவறான துறையை விட்டு சரியான துறையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். 50, 55 வயதிலும் கூட ஒருவர் இப்போதுதான் என்னுடைய துறை, என்னுடைய ருசி, என்னுடைய அணுகுமுறை அல்லது என்னுடைய ஆளுமை எனக்குத் தெரிந்தது; ஆகவே, நான் என்னுடைய துறையை மாற்றிக் கொண்டு விட்டேன் என்று சொல்லக்கூடிய சோதனைகள், இந்த சோதனையில் அடையக்கூடிய வெற்றிகள், இவை நிரந்தரமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்குப் பல்வேறு உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.

ஆக, மாணவர்கள் அல்லது மாணவிகள் கல்லூரியில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயமல்ல. ஒருசமயம் அவர்கள் சரியான துறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒருக்கால் அவ்வாறு தேர்ந்தெடுக்கவில்லை என்ற உணர்வு அவர்களுக்கு இருக்குமேயானால் அவர்கள் விரும்பக்கூடிய துறையைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்றைய உலகில் அதிக அளவு உள்ளன. அந்தத் துறையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் அதைச் சார்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் போது - இந்தியாவிலும் சரி, குறிப்பாகத் தமிழகத்திலும் சரி - நான் சந்திக்கக்கூடிய பலரும் அந்த துறையைச் சார்ந்த ஒரு வல்லமையைத் தேடிக் கொண்டவர்களை விட, அதிகமாக அந்தத் துறையைச் சார்ந்து நின்று தங்கள் வாழ்க்கைக் கோலத்திற்கு ஏற்றவாறு அதைச் சமாளிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் - அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் - அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் - அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.

இளைஞர்களாகிய நீங்கள் இந்தச் சுலபமான வழியில் விழுந்துவிடக் கூடாது என்று ஆத்மார்த்தமாக விரும்புகிறேன். ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்வது என்பது அவ்வளவு கடினமான விஷயமல்ல. அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து நாம் அதில் தேர்ச்சி பெறும் போது மிகுந்த தன்னம்பிக்கை பெறுகிறோம். அந்தத் துறையைச் சார்ந்த மரபுரீதியான விஷயங்கள் மட்டுமல்ல, பாடபுத்தகங்களைச் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல, இன்று அந்தத் துறை அடைந்திருக்கும் வளர்ச்சியைப் பற்றியும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அதையும் கற்றுத் தேர்ந்தால்தான் இன்றைய காலத்தை எதிர்கொள்ள முடியும். ஆக, துறையை நன்றாகக் கற்றுக் கொள்ளும் போது வாழ்க்கையில் அணுகு முறையிலேயே ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது. நீங்கள் உள்ளூர மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக மாறுகிறீர்கள். உங்களைப் பற்றியே உங்களுக்கு உயர்வான எண்ணம் ஒன்று ஏற்படுவதற்கு இது அடிப்படையான காரணமாக அமைகிறது. இதற்கு மாறாக துறை சார்ந்து சமாளித்துக் கொண்டிருப்பவர்கள் அந்தச் சமாளிப்பினால் பிற்காலத்தில் அந்தத் துறையைக் கற்றுக் கொள்வதற்கான ஆற்றலையே இழந்து விடுகிறார்கள். இவ்வளவு நாட்கள் இந்தத் துறையைச் சமாளித்துக் கொண்டிருந்துவிட்டோம், குறை நாட்களையும் சமாளித்துத் தீர்த்து விடுவோம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இவர்கள் கடைசி வரையிலும் தன்பலம் என்பதை உணராமல் - ஆத்ம வீரியத்தை உணராமல் - உள்ளூர பலகீனமான சமூகத்தை எதிர்கொள்கிற கோலத்தை நாம் பார்க்கிறோம். இதை ஒரு எச்சரிக்கையாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மாணவ மாணவிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றொரு விஷயம் தாழ்வு மனப்பான்மை சம்பந்தப்பட்டது. பொதுவாகத் தமிழ் மக்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பது என் எண்ணம். நான் அவர்களுடைய புத்தகங்களைப் படித்ததன் மூலம் அறிந்து கொண்ட சில விஷயங்கள், சமூக வாழ்க்கையில் நான் அவர்களுடன் பழகும் போது எனக்குக் கிடைக்கக்கூடிய செய்திகள் ஆகியன பெரும்பாலும் தமிழ் மக்கள் தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. இது மிகக் கொடுமையான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் நான் இதை எடுத்துக் கூறும்போது தங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை எதுவும் இல்லை என்ற தோரணையில் அவர்கள் பல வாதங்களை முன் வைப்பதை நான் கண்டிருக்கிறேன். அந்த வாதங்களின் சாராசம்களை நான் ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தாழ்வு மனப்பான்மை நோய் கொண்டவர்கள் மட்டுமல்ல, தாழ்வுமனப்பான்மையை மறுக்கக்கூடிய நோயும் கொண்டவர்கள்; ஆக இரண்டு நோய்கள் கொண்டவர்கள் என்ற முடிவுக்கு நான் வர முடிந்தது.

ஒரு இனம் ஏதோ ஒரு காலகட்டத்தில் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுகிறது என்பது மிக மோசமான, அருவருக்கத் தகுந்த, அல்லது வெட்கப்பட தகுந்த ஒரு விஷயமல்ல. ஆனால் ஸ்தியைப் பற்றி - நாம் இருக்கும் நிலையைப்பற்றி - உணராமல் இருப்பது, தன்போதம் இல்லாமல் இருப்பது, சுயபோதம், சுய அறிவு இல்லாமல் இருப்பது, சுய கணிப்பு இல்லாமல் இருப்பது என்பது மிக மோசமான விஷயம். இதற்கான காரணங்கள் இந்த இனத்திற்கு - மிக செழுமையான பாரம்பரியம் கொண்ட இந்த இனத்திற்கு, தொல்காப்பியத்தைத் தோற்றுவித்த இந்த இனத்திற்கு அல்லது வள்ளுவர், கம்பன், பாரதி போன்ற மிகப் பெரிய கவிஞர்கள் வாழ்ந்த இந்த இனத்திற்கு, சிற்பக் கலையில் மிகுந்த வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு, கட்டிடக் கலையில் மிக வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு ஒரு காலத்தில் கடல்மீது மிகுந்த ஆட்சி கொண்ட இந்த இனத்திற்கு - ஒரு மொழியை இரண்டாயிரம் வருடங்களாக செம்மையாகத் தக்க வைத்துக் கொண்டு, இன்று தோன்றும் கருத்துக்களைக்கூடத் தெளிளத் தெளிவாக சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு மொழியைக் காப்பாற்றி வரும் ஒரு இனத்திற்கு - ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை ஏன் 200 வருடங்களாக ஏற்பட்டது என்பதை எனக்குச் சொல்ல தெரியவில்லை. அதைப்பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இந்தத் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுகள் எவை என நாம் எடுத்துக் கொண்டோமென்றால் பல்வேறுபட்ட குணங்கள் மூலம் அந்த நோயின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள முடியும். மிகத் தெளிவான ஒரு நோய்க்கூறு - எல்லோருக்கும் புரியக்கூடிய நோய்க்கூறு - என்னவென்றால் தமிழனுக்கும் ஆங்கிலத்துக்கும் இருக்கக்கூடிய உறவு. அந்த உறவில் தமிழனிடம் இருக்கக்கூடிய மயக்கம் - உறவல்ல, அதில் இருக்கக்கூடிய மயக்கம் - ஆங்கிலத்தின்பால் அவன் கொண்டிருக்கக்கூடிய மயக்கம் மிகச் சிறந்த ஒரு மொழியைத் தன்னளவில் கொண்டிருந்தும் கூட - மிகப் பெரிய பாரம்பரியத்தைத் தன்னளவில் கொண்டிருந்தும் கூட - ஆங்கில மொழியின் மீது தமிழன் கொண்டுள்ள மயக்கம், அதனுடைய கோலங்கள் மிக விரசமானவை. அதை நாம் பரஸ்பரம் பேசிக்கொள்வதைவிட அதை நினைத்துப் பார்ப்பதே நாகரிகமான காரியமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தமிழனுடைய தாழ்வு மனப்பான்மை எப்போதும் தெளிளத் தெளிவாகக் காட்டக்கூடிய அறிகுறிகளில் ஒன்று, மற்றொரு வகையில் சிந்தித்தால், கடந்தகாலத்தில் நமக்கு இருந்த அளவுக்குச் சாதனைகள் இன்று இல்லாமல் போனது. முக்கியமாக ஒரு 50 ஆண்டுகள் நமக்குச் சாதனைகள் இல்லாமல் போனது. இவை நம்முடைய தாழ்வு மனப்பான்மை வளர்வதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ என்று நான் சந்தேகப்படுகிறேன். தமிழினம் மிகப் பெரிய ஒரு நிகழ்வை நினைத்துப் பரவசம் கொள்ளக்கூடிய எந்த சந்தர்ப்பத்தையும் கடந்த 50 வருடங்களில் உருவாக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.

பிளாரன்ஸ் என்ற ஒரு கறுப்பு நிறப் பெண் ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தயத்தில் முன்னே வந்து மற்ற இனத்தைச் சேர்ந்த பெண்களைத் தாண்டி - மற்ற தேசத்தைச் சேர்ந்த பெண்களைத் தாண்டி - முன்னால் வந்து நிற்பது என்பது ஓட்டப்பந்தயம் சம்பந்தமான விஷயம் மட்டுமல்ல; ஒரு இனம் தன்னுடைய பெருமையை வற்புறுத்தக்கூடிய காரியமும் கூட என்று தோன்றுகிறது. அந்த நிகழ்வைப் பார்க்கக்கூடிய கோடிக்கணக்கான கறுப்பர் இனம் ?காலங்காலமாக தங்களை வெளிளை இனம் தாழ்த்திக் கொண்டு வந்திருக்கிறது; அவர்களுக்கு இருக்கக்கூடிய குணாதிசயங்கள் நமக்கில்லை; அந்தச் குணாதிசயங்களை நம்மால் பெற முடியாது என்று நம்மை மட்டம் தட்டி வைத்திருப்பது உண்மை அல்ல ? என்று அந்நேரம் உணர்ந்து பரவசம் கொள்கிறது.

கடந்த 50 வருடங்களில் தமிழனும் இது போன்ற ஒரு பரவசத்தை - கூட்டுப் பரவசத்தை - அடையவில்லை. தனிப்பட்ட முறையில் சில பரவசங்களை அடைந்திருக்கலாம். தனிப்பட்ட முறையில் நம்பிக்கை பெற்றிருக்கலாம். ஆனால் இந்த இனம் மொத்தமாக நம்பிக்கை பெறுவதற்கான காரணம் கடந்த 50 வருடங்களில் உருவாகவில்லை என்று படுகிறது.

கடந்த காலங்களில் நம்முடைய கலாச்சாரத் தலைமை - நம்முடைய அரசியல் தலைமை - நம்முடைய கலைத் தலைமைகள் ஆகியவற்றால் நமக்குப் பெருமை வரவில்லை. மட்டுமல்ல நாம் வெட்கி அவமானப் படக்கூடிய அளவுக்குப் பல சிறுமைகளுக்கும் நாம் ஆளாகியிருக்கிறோம் என்பதையும் கூற வேண்டியிருக்கிறது. எவ்வளவுதான் நாம் உண்மையாகப் பேசிக் கொண்டிருந்தாலும் நம்முடைய அரசியல் தலைவர்களின் தரத்தைப் பற்றி நீங்கள் ஆத்மார்த்தமாக யோசித்துப் பார்ப்பீர்களேயானால் அவர்களுடைய தரத்தை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய திறமைகள், அவர்களுடைய சவடால்கள் அல்லது சாமர்த்தியங்கள் உள்ளூர் சந்தையில் விலை போகலாம். ஆனால் உலகம் அவர்களை மதிக்காது என்று உள்ளூர நமக்குத் தெரியும்.

நம்முடைய மிகச் சிறந்த எழுத்தாளர்களைத்தான் கலாச்சார தலைவர்கள் என்று நாம் சொல்ல வேண்டும். லட்சக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படிக்கும் நம்முடைய எழுத்தாளர்களின் தரத்தை நீங்கள் ஆராய்ந்தால் அவர்களில் பெரும்பான்மையரின் தரத்தை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நுட்பமான வாசனை கொண்ட வாசகர்களுக்கு இது நன்றாகவே தெரியும். நம்முடைய திரைப்பட இயக்குநர்கள் எவரையும் உலகத் திரைப்படம் ஏற்றுக் கொள்ளாது என்பது நமக்குத் தெரியும். வங்காளத்தில் ரவீந்தரநாத தாகூர் தோன்றினார். அவர் மறைவுக்கு சில வருடங்களுக்கு உள்ளாகவே சத்யஜித் ரே என்ற திரைப்பட இயக்குநர் தோன்றி உலகப் படங்களுக்கு நிகரான திரைப்படங்களை எடுத்து வங்காள இனம் தன்னுடைய வல்லமையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். இது போன்ற ஒரு நிகழ்வு இன்று வரையிலும் இந்த நூற்றாண்டில் நம்மிடம் நிகழவில்லை. பக்கத்தில் இருக்கக்கூடிய கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள் அரசியல் சார்ந்து ஈ. எம். எஸ். நம்பூதிரிபாடு - இலக்கியம் சார்ந்து சிலர்.

மேற்கத்திய நாகரிகம் என்று சொல்லும் போது ஆடை, அணிகலன்கள் சம்பந்தமான விஷயங்களை நான் சொல்லவில்லை. அவை மேம்போக்கான விஷயங்கள். அடிப்படையாக வாழ்வோடு கொள்ளவேண்டிய உறவுமுறை சம்பந்தமான விஷயங்களில் மேற்கத்திய நாகரிகம் செலுத்தக்கூடிய பாதிப்புகள் நம்மிடம் மிக விரைவாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தக் குறுக்கீடு நம்மைக் கண்டு கொள்வதற்கு - நம்மை நாமே கண்டு கொள்வதற்கு - பெரும் தடையாக இருக்கிறது. நம்மைச் சார்ந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் நமக்கு ஒரு அலட்சியமும், மேல் நாட்டிலிருந்து வரக்கூடிய எல்லா விஷயங்களைப் பற்றி மிகுந்த மோகமும் கொண்டவர்களாக நாம் பொதுவாக இருந்து வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல முடியும். இப்போது உலகெங்கும் அலோபதி வைத்தியத்திற்கு எதிரான ஒரு மனோபாவம் உருவாகி வருகிறது. இந்த வைத்தியத்தை உருவாக்கியவர்கள் உண்மையில் வைத்தியத்தை முதன்மைப்படுத்தியவர்கள் அல்லர் என்றும், அவர்கள் மருந்து வியாபாரிகள் என்றும், மருந்து வியாபாரிகளுடைய சுயநலங்களுக்கு ஆட்பட்ட மருத்துவர்கள் என்றும் சொல்லலாம் என்கிறார்கள். நோயிலிருந்து நிவாரணம் தரக்கூடிய மார்க்கங்களையே இந்தத் துறை சிந்தித்திருக்கிறது. ஆனால் வைத்தியத் துறையின் அடிப்படையான நோக்கம் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பது. அந்த அடிப்படை இந்தத் துறைக்கு இல்லை என்பதை எண்ணற்ற மேல்நாட்டுச் சிந்தனையாளர்கள் இப்போது பரப்பி வருகிறார்கள். ஆக உலகத்திற்குப் பொதுவான வைத்தியம் ஒன்று இருக்க முடியாது என்றும், ஒவ்வொரு நாட்டிலும் தொன்றுதொட்டு எந்த வைத்தியமுறைகள் உருவாகி வந்திருக்கிறதோ அந்த வைத்தியமுறைகள் தான் அந்த மக்களுக்கு உகந்ததாக இருக்கமுடியும் என்றும், அந்த வைத்தியத் துறைகளை வளர்த்து எடுப்பது தான் அந்த மக்களுடைய இலட்சியமாக இருக்கவேண்டுமே ஒழிய பிற நாட்டிலிருந்து வைத்தியத்தை இறக்குமதி செய்வது அவர்கள் நோக்கமாக இருக்க கூடாது என்றும் சிறந்த வைத்தியர்கள் கூறி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் இவான் இலியா எலிவிச் என்கிற ரஷ்ய மருத்துவர். அவர் தன்னுடைய ஒரு புத்தகத்தில் தான் ஆரம்ப நாட்களில் காந்தியினுடைய சிந்தனைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகின்றார். இந்தச் சிந்தனையைக் காந்தி கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னாலேயே ?ஹிந்து சுயராஜ் ? என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

நாம் மேல் நாட்டு சிகிச்சைக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நமக்கு உகந்த சிகிச்சை முறைகள் நம்முடைய முன்னோர்கள் நமக்கு உருவாக்கி வைத்திருக்கிறார்கள், அதை நாம் வளர்த்துக் கொண்டு போக வேண்டும் என்ற கருத்தை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே காந்தி கூறியிருக்கிறார். ஆனால் அந்தக் கருத்துக்களை இங்கிருக்கும் அறிவாளி வர்க்கம் போதிய அளவுக்கு முக்கியம் தந்து எடுத்துக் கொள்ளவில்லை. இதே கருத்துக்கள் மேல் நாட்டிற்குச் சென்று, அந்தக் கருத்துக்கள் அவர்களுடைய சூழ்நிலைக்கேற்ப சிறிது மாற்றப்பட்டு புத்தகங்கள் மூலம் சொல்லப்படும் பொழுது, அவை மிகப்பெரிய கருத்துக்களாக நமக்குத் தோன்றி அதைப் பின்பற்றத் தொடங்குகிறோம். இதே மனோபாவத்தில் தான் மோகம் - வாழ்க்கையைப் பற்றிய ஒரு மோகம் - சார்ந்து வாழ்ந்து வருகிறோம்.

இனிமேல் தனித்து நின்று நமது சிந்தனையை வளர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியமான விஷயமல்ல. உலகத்தில் தோன்றியுள்ள எல்லா சிந்தனைகளையும் நம்முடைய சிந்தனைகளைச் சார்ந்த தெளிவுகளுக்கு உரமாக எடுத்துக் கொள்ளும் பயிற்சியை நாம் பெறலாம். ஆனால் நம்முடைய சிந்தனைகளை விட்டுவிட்டு - நமக்குச் சுயமான விஷயங்களை நாம் முற்றாக விட்டுவிட்டு - வேறு சூழ்நிலையில் வேறு காரணங்களுக்காக உருவான கருத்துக்களை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையின் நிதானத்தை மிகுந்த அளவுக்குக் குறைத்துக் கொண்டு வருகிறோம் என்று நான் நினைக்கிறேன்.

முக்கியமாக இன்று நான்கு விஷயங்களை நான் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். ஒன்று வாசிப்பு சம்பந்தபட்ட விஷயம்; மற்றொன்று உங்களுக்கு உகந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் நீங்கள் போதிய திறமை பெற்று நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய விஷயம். மூன்றாவது தாழ்வு மனப்பான்மை என்று நான் நம்பக்கூடிய நோயிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான வழிகள். நான்காவது இந்திய வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையை எதிர்கொள்ளுவதன் மூலம் நமக்குச் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை நாம் உருவாக்கி கொள்ளக்கூடிய முயற்சி. இந்த நான்கு கருத்துக்களையும் விவாதத்திற்காக உங்கள் முன் வைக்கிறேன்.

தமிழனுக்குத் தாழ்வு மனப்பான்மை இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். எந்தக் காரணத்தைக் கருத்தில் கொண்டு இதைக் கூறினீர்கள். விளக்க முடியுமா ?

தன்னால் எவற்றைச் செய்ய முடியுமோ, அவற்றைக் கூடத் தொடர்ந்து செய்யாமல் இருப்பது; இது தன்னைப் பற்றிய ஒரு தாழ்வான எண்ணத்தை உருவாக்கக்கூடும். ஆசிரியர்களுக்கும், உங்களுக்கும் புரியக்கூடிய இரண்டு உதாரணங்களை நான் முன் வைக்க முடியும். சமூகம் சார்ந்து எண்ணற்ற கருத்துக்களை நான் சொல்ல முடியும். அல்லது திரைப்படம் சார்ந்து பல கருத்துக்களைச் சொல்ல முடியும். அந்தப் படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அல்லது பார்க்காமல் இருக்கலாம். ஆனால் மாணவர்களும், ஆசிரியர்களும் படிப்பதற்கான வாய்ப்பு மிகுதி என்பதால் புத்தகம் சார்ந்த உதாரணத்தை எடுத்துக் கொள்கிறேன்.

டாக்டர் மு. வரதராசன் ?இலக்கியத் திறன் ? என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். முக்கியமாக, தமிழ் துறையைச் சேர்ந்தவர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்திருக்கக்கூடும். என்னுடைய பெரும் மதிப்பிற்குட்பட்டவர் அவர். தமிழ்ப் புலமையாளர்களில் மு.வ.வை நான் மிகவும் மதிக்கிறேன். அவரை நான் ஒரு சிறந்த படைப்பாளி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை ஒரு படைப்பாளி என்றே எற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தன் புலமையை மிக நேர்மையாக, மிகத் தெளிவாக முன் வைத்தவர் அவர் என்ற மதிப்பு எனக்கு உண்டு. ?இலக்கியத் திறன் ? என்ற புத்தகம் தமிழ்க் கவிதையைப் பற்றி ஆராயக்கூடிய புத்தகம். இரண்டாயிரம் வருடங்களில் நம்முடைய பாவினங்கள் எப்படி ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்திருக்கின்றன என்பதைப் பற்றி அந்தப் புத்தகத்தில் மிக நேர்மையாக, சுத்தமாக, தெளிவாக, இன்றைய இலக்கியம் சார்ந்த விஞ்ஞானக் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு முன் வைக்கிறார் டாக்டர் மு. வ. இந்நூலின் கடைசிப் பக்கங்கள் தமிழில் இன்று வந்து கொண்டிருக்கும் புதுக்கவிதை என்ற இயக்கத்தை மனமார வரவேற்கிறது. தமிழ்ப் புலவர்கள் புதுக் கவிதைக்கு எதிராக ஒரு தார்மீகமான கோபம் கொண்டிருந்த காலத்தில், இது தவிர்க்க முடியாத காலத்தின் நியதி என்று உணர்ந்து மு. வ. ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த புத்தகத்தை நீங்கள் படிப்பீர்கள் என்றால் ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியவரும். மு.வ. அப்புத்தகத்தில் கவிதை சார்ந்த ஒரு கோட்பாட்டை உருவாக்கவில்லை.

கவிதை சார்ந்து மிக எளிமையான கருத்துக்கள் இருக்கின்றன. ஒன்று, கவிதை தெளிளத் தெளிவாகப் புரிய வேண்டும் என்ற கருத்து. மற்றொன்று கவிஞன் ஒரு குழந்தை உள்ளம் கொண்டவன் என்பது. இவை போன்ற மிக எளிய கருத்துக்களைக் கூட விளக்க மேல்நாட்டு அறிஞர்களான கவிதை விமர்சகர்களான மாத்யூ அர்னால்டு, ஹட்சன், டி.எஸ்.எலியட், டபிள்யூ. ஹெச். ஆடன், ஷெல்லி போன்றோர்களின் பெயர்களைப் பக்கத்துக்குப் பக்கம் மேற்கோள் காட்டி எழுதிக்கொண்டு போகிறார். பிரிட்டிஷ் இனம் எந்த அளவுக்குக் கவிதைகளுக்குச் சொந்தமான இனமோ, எந்த அளவுக்கு கவிதை சார்ந்த நெடிய நீண்ட பாரம்பரியம் பிரிட்டிஷ் மக்களுக்கு உண்டோ, அந்த அளவுக்குக் கவிதை சார்ந்து தொன்மையான நீண்ட பாரம்பரியம் கொண்ட இனம் தமிழினம். கவிதை பற்றிய கோட்பாட்டைத் தன்னைச் சார்ந்து உருவாக்க முடியாமல் கவிதை சம்பந்தப்பட்ட எளிய கருத்துக்கஆளைக் கூட மற்ற இலக்கிய விமர்சகர்களிடமிருந்து கையேந்தி வாங்கக்கூடிய ஒரு மனோபாவம் தாழ்வு மனப்பான்மை என்று நான் நினைக்கிறேன். இது மிக முக்கியமான ஒரு உதாரணம்.

நான் குறிப்பிட்ட இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்து அதில் இக்கருத்துக்கள் சரியாக இருக்கின்றனவா அல்லது என்னுடைய வாதத்திற்கு ஏற்ப நான் கருத்துக்களை முன் வைக்கிறேனா என்பதை ஆசிரிய நண்பர்கள் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்று தமிழகத்தில் எந்தத் துறையைச் சேர்ந்த விஷயங்களையும் எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக, நாட்டுப் பாடல்கள், புராதனக் கலைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வோம். சமீப காலங்களில் நாம் அதிக அளவுக்குக் கவனம் செலுத்தி வருகின்ற ஒரு துறை இது. இந்தத் துறை சார்ந்து அதிக அளவுப் பேச்சுக்களும் அத்துடன் சில உண்மையான காரியங்களும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்கின்ற வில்லிசைக் கலை, கணியான் ஆட்டம் போன்ற கலைகளைப் பற்றி அமெரிக்க ஆராய்ச்சி மாணவரான Stuart Blackburn என்பவர் மிகச் சிறந்த ஒரு புத்தகத்தை உருவாக்கி உள்ளார். இவர் தமிழ் நாட்டில் ஐந்தாறு ஆண்டுகள் தங்கி தமிழைக் கற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பல மாதங்கள் தங்கியிருக்கிறார். நாங்கள் நண்பர்கள் நடத்திய கூட்டத்தில் வந்து கலந்துகொண்டிருக்கிறார். நம் மாவட்டத்திலுள்ள பல கிராமத்திற்கும் பயணம் செய்தவர். நம்முடைய பழக்க வழக்கங்களை முற்றாகத் தெரிந்து கொண்டவர். எந்த ஜாதியில் எந்தப் பெண் ருதுவானாலும் அதற்காக அந்த வீட்டில் என்னென்ன செய்வார்கள் எப்படிக் கொண்டாடுவார்கள் என்றால் அவருக்கு அது அத்துப்படியாகத் தெரியும். நம் மக்களுடைய சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் விருப்பு வெறுப்புகள் ஆகியவை அவருக்குத் தெரியும். ஒரு வீட்டில் கோலம் போட்டிருந்தால் அதற்கு என்ன அர்த்தம் ? எந்தெந்த விசேஷங்களுக்கு என்னென்ன கோலங்கள் போடுவார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அவர் அறிந்திருக்கிறார். நம்மைப் பற்றி நமக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அதைவிட பலமடங்கு அவர் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் பின்னால் உருவாக்கிய புத்தகத்தைப் போன்ற ஒன்றை நம்மாலும் உருவாக்கியிருக்க முடியும். நமக்கு உருவாக்குவதற்கான வசதிகள் அதிகம். நமக்கு இந்த மக்கள் பேசக்கூடிய மொழி தெரியும். நம்முடைய ஊர் என்பதால் நமக்கு அதிக அளவுக்குப் பழக்க வழக்கங்கள் தெரியும். நமக்குத் தொடர்புகள் மிகுதி. இருந்தாலும் அந்தப் பணியை நாம் செய்யவில்லை. அது போன்ற ஒரு புத்தகத்தைச் சார்ந்து இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் குறைந்த பட்சம் பத்து தமிழ்ப் புத்தகங்களேனும் வரும். அத்தனை புத்தகங்களிலும் அவருடைய பெயரை மேற்கோள் காட்டி, அவரை மிக உயர்வாகப் போற்றிச் சொல்லுவார்கள். இதுபோன்ற எண்ணற்ற காரணங்களை முன் வைத்து நாம் நம்பிக்கை பெறாமல் இருப்பதால்தான் இதற்கு ஈடான சாதனைகளைச் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன்.

மாணவ நண்பர்களுக்கு இதற்கு மாறான கருத்துக்கள் இருக்குமென்றால் அது மிக நல்ல விஷயம். மிக உயர்வான விஷயம். ஏதோ ஒரு காரணத்தினால் என்னுடைய வாதங்கள் தவறு என்று ஏற்படுவதை நான் விரும்புகிறேன். நம் இனம் நம்பிக்கை கொண்ட இனம் என்பது உண்மையென்றால் நாம் பல சாதனைகள் செய்து நம்முடைய கண்ணோட்டத்தையும் சாதனையையும் உலகம் பொருட்படுத்தும் அளவுக்குச் செய்ய வேண்டும்.

மு.வ. ஒரு படைப்பாளி இல்லை என்றீர்கள் ? அதற்குக் காரணம் கூற முடியுமா ? அப்படியென்றால் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய தகுதிகளை மதிப்பீடு செய்யுங்களேன் . . . ?

இதற்கு முன்னால் இல்லாமல் இருக்கக்கூடிய ஒன்றைச் செய்து காட்டக் கூடியது தான் படைப்பு. அது தான் அதன் அடிப்படையான பொருள். இவர் ஒரு நாவல் எழுதி இருக்கிறார். நாவல் என்றால் அது முற்றிலும் புதுமையானதாக இருக்க வேண்டும். நம் மொழியில் இருக்கக்கூடிய ஒன்றையோ பிற மொழிகளில் இருக்கக்கூடிய ஒன்றையோ நகல் செய்ததாக இருக்கக்கூடாது. இந்த படைப்பு ஒருவன் வாழ்க்கையை சுயமாக எதிர் கொள்ளுவதன் மூலம் - அந்த எதிர்கொள்ளுதலிருந்து பெறக்கூடிய அனுபவங்களைச் சார்ந்து - அந்த அனுபவங்களின் சாராம்சம் என்ன என்ற agonyியிலிருந்து, வேதனையிலிருந்து - படைப்பு தோன்றுகிறது.

மு.வ. அவருடைய நாவல்களில் தமிழ்ச் சமுதாயம் அவருக்கு முன் அறிந்திராத எந்த அனுபவத்தையோ அல்லது கருத்துக்களையோ முன் வைக்கவில்லை என்று கருதுகிறேன். அவர் கூறிய கருத்துக்கள் காலம் காலமாக தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த அறிஞர்கள் கூறிய - அதிகமும் வள்ளுவர் கூறிய - கருத்துக்களே ஆகும். இந்தக் கருத்துக்களின் கூட்டுத் தொகுப்பு ஒரு படைப்பாகாது. படைப்பும் சமூக இயல் சார்ந்த நூல்களும் அடிப்படையில் வேறானவை. திருக்குறள் ஒரு நாவல் அல்ல. காரணம் அது வாழ்க்கையைப் பற்றி ஒரு கவிஞர் கண்டடைந்த முடிவான கருத்துக்களைக் கூறுகிறது. வாழ்க்கையின் அனுபவங்களைப் பற்றியோ அந்த அனுபவங்களி லிருந்து இந்தக் கருத்து நிலைக்கு வந்து சேர்ந்த பயணங்களைப் பற்றியோ அந்த நூலில் எந்தத் தடயமும் இல்லை.

ஆக, இரண்டு விதமான நூல்கள் இருக்கின்றன. ஒன்று படைப்பு சார்ந்த நூல்கள். மற்றொன்று ஒரு துறை சார்ந்த - விஞ்ஞானம் அல்லது சட்டம் அல்லது மதம் அல்லது அறவியல் போன்ற துறை சார்ந்த - நூல்கள். இவற்றிற்கு அடிப்படையான வேற்றுமை: ஒன்று அனுபவம் சார்ந்து இயங்குகிறது. அதில் முற்றான முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படவில்லை. வாழ்க்கையைப் பற்றிய கவனங்கள் கொண்டு வரப்படுகின்றன. வாழ்க்கை சார்ந்த மிக மேலான அனுபவங்கள் தேக்கப்படுகின்றன. மற்றொன்றில் முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படுகின்றன. இந்த முடிவான கருத்துக்களை வற்புறுத்திய ஆசிரியராகத்தான் மு.வ.வை எடுத்துக் கொள்கிறேன். மாறாக வாழ்க்கையைச் சார்ந்த அனுபவங்களை அவர் முன் வைத்தார் என்று என்னால் கூறமுடியவில்லை. அதனால் ஒரு படைப்பாளியாக அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நோய்களைக் கண்டுபிடிக்கிற, உயிர் காக்கும் மருந்துகளையும் கருவிகளையும் கொண்ட அலோபதி வைத்தியத்தின் மீது நாம் ஏன் மோகம் கொள்ளக்கூடாது ?

இது வைத்திய சாஸ்திரம் சம்பந்தப்பட்ட கேள்வி. நான் சொல்ல வந்தது அலோபதி வைத்தியத்தைப் பற்றி இன்று உலகத்தில் வாழும், சமூக அக்கறைகள் கொண்ட வைத்தியர்கள் என்ன கூறி வருகிறார்கள் என்பதைத்தான். அலோபதி என்ற சிகிச்சை முறை, மொத்த நலங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டதல்ல. நோயாளிகளின் பிறப்பு, வளர்ப்பு அவர்களுடைய பழக்க வழக்கங்கள், அவர்களுக்கும் அவர்கள் எதிர் கொள்கிற சமூகத்திற்கும் உள்ள உறவுகள், அவர்களுக்கும் அவர்கள் ஆற்றக்கூடிய காரியங்களுக்கும் உள்ள உறவுகள், அவர்களுக்கு இருக்கக்கூடிய வசதிகள் இவற்றைத் கருத்தில் நிறுத்திக் கொண்டு உருவான ஒரு சிகிச்சை முறை அல்ல. மாறாக ஒரு நோய்க்கு உடனடியாக நிவாரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மருந்து விற்பனையானர்களின் லாபத்தை அடிப்படையாகக் கொண்ட துறை என்று மருத்துவத்தைச் சார்ந்த சிலரே முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதே கருத்துக்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் காந்தியால் முன்வைக்கப்பட்டன. அப்போது அந்தக் கருத்துக்களை முதன்மையாக எடுத்துக் கொள்ளாத இந்தியாவிலுள்ள அறிவு வர்க்கம் இன்று இந்தக் கருத்துக்களுக்கு முதன்மையான இடம் தந்து பேசுகிறது. மேல் நாட்டில் தான் சிறந்த கருத்துக்கள் வர முடியும் என்கிற ஒரு மனோபாவத்தை இது காட்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக இதைச் சொன்னேன். நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய வைத்திய முறைகள் அலோபதியா, ஆயுர்வேதமா, ஹோமியோபதியா என்பதைப் பற்றிச் சொல்வதற்கான அடிப்படைத் தகுதிகள் எவையும் எனக்குக் கிடையாது.

நான் கூற வந்த விஷயம் நாம் கொண்டிருக்கும் மோகம். நம் முன்னோர்கள் கூறிய விஷயங்களை உதாசீனம் செய்துவிட்டு, அதே விஷயங்கள் மேல் நாட்டிலிருந்து வரும்போது அவற்றை மிகப் பெரிய விஷயங்களாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை நான் சொல்லுகிறேன். இதே மனோபாவத்தை நீங்கள் பல்வேறு விஷயங்களில் பார்க்கலாம். ?சுற்றுப் புறச்சூழல் இயக்கம் ? என்று ஒன்று இன்று மேல் நாட்டில் உருவாகி வருகிறது. உங்களுடைய சுற்றுப்புறங்களை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிதன் அவசியத்தை இப்போது மிகப் பெரும் அளவுக்கு வற்புறுத்தி வருகிறார்கள். மரங்களை வெட்டக்கூடாது; நெடுஞ்சாலை ஓரங்களில் குடியிருப்பு பகுதிகள் அமைக்கக்கூடாது; நதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்; எந்த ஜீவராசிகளையும் முற்றாக அழித்துவிடக் கூடாது என்று ஒரு இயக்கத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதே காரியங்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வற்புறுத்தியுள்ளார்கள். காந்தி இதைப் பல தடவை வற்புறுத்தியிருக்கிறார். சுற்றுப்புற சூழ்நிலைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவருடைய எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகின்றன. ஆனால், இது இன்று இயக்கமாக மேல்நாட்டிலிருந்து வரும்போது அதை அப்படியே நாம் ஏற்றுக் கொள்கிறோம். அங்கு ஏற்பட்ட பல பிரச்சனைகள் காரணமாக அந்த இயக்கம் சார்ந்து பல்வேறுவகைப்பட்ட அழுத்தங்கள் அங்கு இருக்கின்றன. நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்ப அந்த இயக்கத்தை மாற்ற வேண்டும் என்று எண்ணாமல் அவர்களுடைய சோகங்களை - அவர்களுடைய மனோபாவத்தை - அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

ஆங்கில மொழியினால் நமக்குச் சில வசதிகள் கிடைக்கின்றன. அந்த மொழியினால் சில அவசியத் தேவைகள் நிறைவேறுகிறது. அப்படியானால் அந்த மொழியின் மீது ஏன் மோகம் கொள்ளக்கூடாது ?

ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய ஒரு மொழி என்பது உண்மையான விஷயமல்ல. உலகத்தில் மிகச் சிறுபான்மையான மக்கள் அறிந்த ஒரு மொழிதான் ஆங்கிலம். ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு உங்களுக்கு பிரிட்டிஷ் தீவுகளில் அல்லது அமெரிக்காவில் நீங்கள் சில காரியங்களைச் செய்ய முடியும். நீங்கள் ஐரோப்பாவிற்குச் சென்றிருந்தால், சீனாவுக்குச் சென்றிருந்தால் அல்லது ருஷ்யாவுக்குச் சென்றிருந்தால் இந்த ஆங்கிலத்தை நீங்கள் காலணாவுக்குக் கூட அங்கெல்லாம் விற்க முடியாது. அங்கு செல்லுபடியாகாது. நீங்கள் ஆங்கிலம் அறிந்தவர்களா இல்லையா என்பது அங்கெல்லாம் பிரச்சனையே அல்ல. ஆங்கில மொழி சம்பந்தமாக இந்தியர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு மயக்கம், அதைத்தான் தவறு என்று கூறுகிறேன்.

ஆங்கில மொழியை மோசமான மொழி என்று நான் சொல்ல வில்லை. ஆங்கில மொழியைக் கற்பதால் நாம் அதிகமான பயன்களை அடைய முடியாது என்றும் நான் சொல்லவில்லை. ஆங்கில மக்களுடன் இருநூறு ஆண்டுகளில் நமக்கு ஏற்பட்ட உறவினால் அவர்களிடமிருந்து நமக்கு வந்த கலாச்சாரப் பழக்க வழக்கங்களை நாம் முற்றாக நீக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இரண்டு இனங்கள் ஒன்றுக்கொன்று கூடி வாழும் போது ஒரு இனம் மற்றொரு இனத்திலிருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ளும். வசதியைக் கருதி கற்றுக் கொள்ளும். அதைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பது ஒரு சாதாரண விதி. சிலவற்றை வெளிளையரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம். அவற்றை நாம் தக்க வைத்துக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை.

அறிவு என்பதை ஆங்கிலத்தின் மூலம்தான் பெற முடியும் என்பது உண்மையான விஷயமல்ல. ஒருக்கால் உங்களுக்கு ஆங்கிலம் தெரியாமல் ஜெர்மன் மொழி தெரிந்திருப்பின் அதன் மூலம் பெற முடியும். இன்று முக்கியமாக ஜெர்மன் மொழியும் பிரஞ்சு மொழியும் ஆங்கிலத்துக்கு இணையாக, ஒரு சமயம் ஆங்கிலத்தைத் தாண்டியும் வளர்ந்துவிட்டன. ஆங்கிலத்துக்கும் நமக்கும் இருக்கக்கூடிய உறவுகளில் நாம் கொண்டிருக்கக்கூடிய ஆரோக்கியத்தைப் பற்றி, நேர்மைகளைப் பற்றி நான் சொல்லவில்லை. நாம் அந்த மொழியைச் சார்ந்து நிற்கும் மயக்கங்களைப் பற்றிச் சொல்கிறேன். ஒரு அறிவாளியை அளப்பதற்கு முதன் முதலாக acid test என்று அவருக்கு ஆங்கிலம் தெரியுமா என்றுதான் இன்று பார்க்கப்படுகிறது. இங்கு ஒரு மனிதன் பிழையாக ஆங்கிலம் பேசும்போது அவன் மிகுந்த வெட்கமடைகிறான். ஆனால் அவன் பிழையாக தமிழ் பேசும்போது எந்தவிதமான வெட்கத்தையும் அடைவதில்லை. பேசும்போது மட்டுமல்ல எழுதும்போதும் அவன் அடைவதில்லை. இன்று நீங்கள் ஒரு தமிழ் அறிஞரை மதிக்கும்போது அவர் தமிழ் அறிஞர் என்பதற்காக மதிக்கிறீர்களா அல்லது அவர் ஆங்கிலமும் அறிந்த தமிழ் அறிஞர் என்பதற்காக மதிக்கிறீர்களா என்று பார்த்தால் அவர் தமிழ் அறிஞர் என்பதற்கு மேலாக ஆங்கிலமும் அறிந்தவர் என்பதற்காகவே அதிகப்படியான மதிப்பை அவர் பெற முடிகிறது. இப்படி நீங்கள் சிந்தித்துக் கொண்டு போனால் இந்த மொழி சார்ந்து ஒரு பலகீனம், மயக்கம் நமக்கு இருக்கிறது. சாதாரண மக்களிடம் இந்தப் பலகீனம் இன்னும் அதிகமாக இருக்கிறது.

இன்றைய திரைப்படங்களை எடுத்துக் கொள்ளுவோம். ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத ஒரு கதாநாயகன், ஒன்றுக்கும் உதவாதவன் என்று பெண் வீட்டாரால் கருதக் கூடிய ஒரு கதாநாயகன், அவன் கூலி வேலை செய்யக்கூடியவனாகவோ, டாக்சி ஓட்டக்கூடியவனாகவோ இருக்கலாம். அவன் அந்தத் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆங்கிலத்தில் சில வசனங்கள் பேசும் போது எண்ணற்ற பார்வையாளர்கள் கரகோஷம் செய்வார்கள். அந்தக் கரகோஷத்திற்கு அர்த்தம் ?அவன் அறிவாளி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது ? என்பதுதான். இவை நாம் மனரீதியாக எவ்வளவு பெரிய நோயாளியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள். இந்த நோயை நாம் தெரிந்து கொண்டால்தான் விமோசனம் பெற முடியும். இந்த நோய்க்கு நாம் ஆளாகியிருப்பது ஒன்று. இந்த நோய் நமக்கு இருக்கும்போதே இருப்பதை மறுப்பது மற்றொன்று. ஆக இரண்டு நோய்களுக்கு நாம் ஆட்படுகிறோம். இது போன்று பல்வேறு உதாரணங்களைச் சொல்லி நம்மிடம் இருக்கும் மோகத்தை நிரூபிக்க முடியும்.

ஆங்கிலம் தெரியாதவர்கள் மிகப்பெரிய அறிஞர்களாக இருந்தும் கூட ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் உள்ளூர அவர்கள் மிகுந்த வெட்கம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் வெட்கம் அடைவதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். உ.வே.சாமிநாத ஐயரின் பெரிய கவலை தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதாம். அவருக்கு நிகரான பதிப்பாசிரியர்கள் உலக சரித்திரத்தில் இல்லை என்று கூடக் கருதுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர் தமிழ் மீது மிகுந்த காதல் கொண்டவர். மட்டுமல்ல உலக சரித்திரத்தில் மற்றவர்கள் எப்படிப் புத்தகங்ளைப் பதிப்பித்திருக்கிறார்களோ, வளர்ந்த நாடுகளில் புத்தகங்கள் எப்படிப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றனவோ அவற்றிற்கு இணையான பதிப்புக்களை உருவாக்கியவர் அவர். பிறரிடம் ஒவ்வொரு விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு பதிப்பித்தவர் அவர். தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை திரும்பத் திரும்ப தன் நண்பர்களிடம் அவர் சொல்லியிருக்கிறாராம். இந்த அவமானத்தை அவருக்கு நாம் ஏற்படுத்தும் போது அதை எண்ணி அவமானப்பட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இதுதான் அந்த மொழி சார்ந்த மோகம். இது ஒரு Symptom. இன்னும் எண்ணற்ற Symptoms. நம்மிடம் இருக்கின்றன. அதை நாம் இன்னும் கூராகப் பார்த்தோமானால் தாழ்வு மனப்பான்மைக்கான காரணங்களாக அவை இருப்பதை அறிய முடியும். இது ஒரு இயற்கையான விஷயம். அபூர்வமான நோயல்ல. உலகத்தில் பல இனங்களுக்கும் இருக்கக்கூடிய தாழ்வு இது. இதைத் தாண்டி வருவதற்கான விஷயங்களைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.

கவிமணி, பாரதி, நாமக்கல்லார் போன்ற கவிஞர்கள் சமுதாயம் சீர்கெட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் இன்றைய எழுத்தாளர்களோ தன்னலத்தோடு செயல்படுகின்றனர். இவர்கள் பெரிய சிக்கலைக் கருவாக எடுத்துக் கொண்டாலும் அதை ஆபாசமாக்கி விடுகின்றனரே. காரணம் சொல்ல முடியுமா ?

நண்பருடைய பேச்சில் எந்தவிதமான கருத்து வேற்றுமையும் எனக்கு இல்லை. அவர் இந்தக் கால எழுத்தாளர்களை இன்னும் காரமாகத் தாக்கியிருக்கலாம் என்பதைத் தவிர. மற்றபடி எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இந்த எழுத்தாளர்கள் ஏன் இந்த மாதிரியான காரியங்களைச் செய்கிறார்கள் என்பதை நீங்களே சொல்லிவிட்டார்கள். அவர்கள் சுயநலம் சார்ந்து ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு இரண்டு விதமான குறிக்கோள்கள் இருக்கின்றன. ஒன்று சமூக அந்தஸ்து. சமூக அந்தஸ்து என்றால் புகழ். மற்றொன்று பணம். இந்த இரண்டு வெற்றிகளைச் சார்ந்து - இந்த வெற்றிகளை எவை ஈட்டித் தருமோ, எந்தவிதமான இயக்கம் உருவாக்கித் தருமோ, அவற்றைச் சார்ந்து - அவர்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படைக்கிறார்கள் என்பதைவிட அவர்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இந்த வெற்றிக்கு அவர்கள் பல்வேறு வகைப்பட்ட துறைகளால் அங்கீகரிக்கப்படுகிறார்கள். உண்மையில் தரமற்ற எழுத்தாளர்கள் அல்லது தரமற்ற கவிஞர்கள் அங்கீகரிக்கப்படும் போது ஒரு தயக்கம் ஏற்படுகிறது. மிகத் தரமற்ற ஒரு நாவலாசிரியர் மிகப் பெரிய பரிசைப் பெறும்போது அவரைத் தரமற்றவர் என்று நிரூபிப்பதில் கஷ்டம் இருக்கிறது.

பெரிய நிகழ்ச்சிகள் நிகழும்போது ஒரு இனம் தனக்குரிய அவநம்பிக்கைகளை அல்லது தாழ்வு மனப்பான்மையை உதறிக் கொண்டு சிலிர்த்து எழுகிறது. அப்படி மற்ற இனங்களுக்குச் சில சாதனைகள் நடந்திருக்கின்றன. ஒரு எழுத்தாளருக்கு நோபல் பரிசு கிடைக்கிறபோது அந்த இனம் வாழ்க்கைமீது ஆழ்ந்த நம்பிக்கை கொள்கிறது. உலகம் பார்த்து மெச்சக்கூடிய எந்தக் காரியத்தையும் நாம் இலக்கியத்திலோ சினிமாவிலோ செய்யவில்லை. அரசியல் சார்ந்த கருத்துக்களையோ சமூக ஆராய்ச்சி சார்ந்த கருத்துக்களையோ குறைந்த பட்சம் நமக்கு இரண்டாயிரம் வருடம் பழக்கம் உள்ள கவிதை சார்ந்த துறையிலோ உலகத்துக்கு இன்று வரையிலும் நாம் எவற்றையும் அளிக்கவில்லை. ஆகவே தான் நாம் தாழ்வு மனப்பான்மை கொண்டுவிட்டோம் என்று நான் சந்தேகப்படுகிறேன்.

துறையைத் தேர்ந்தெடுப்பதில் பிறரது அறிவுறைகளையோ தாக்குதலையோ பொருட்படுத்த வேண்டாமா ?

ஒரு துறையைத் தேர்ந்தெடுத்த பின் அதில் இயங்குவது விரும்பத்தக்க விஷயம்தான். ஆனால் நம் சமூகப் பின்னணி சார்ந்த ஏதோ ஒரு காரணத்திற்காக சரியான வழிகாட்டல் நமக்குக் கிடைக்காமல் போகலாம். அது குடும்பம் சார்ந்தோ அல்லது உறவினர்கள் சார்ந்தோ அல்லது நண்பர்கள் சார்ந்தோ அல்லது ஆசிரியர்கள் சார்ந்தோ நமக்குக் கிடைக்காமல் போகலாம். அதனால் சில சந்தர்ப்பங்களில் நாம் தவறான துறையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பினால் நாம் சில பட்டங்களைப் பெற்ற பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் இருபது, இருபத்திரண்டு வயதில் அதிக வயதை நாம் அடைந்துவிட்டோம் என்றும் இந்தத் துறையை மாற்றிக் கொண்டு மற்றொரு துறையை நாம் தேர்ந்தெடுத்து அதில் திறமை பெறுவது அசாத்தியமான காரியம் என்ற எண்ணம் மாணவர்களுக்கு ஏற்படுவது இயற்கை. இது போன்ற ஒரு எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. கல்லூரியில் நாம் தவறான ஒரு துறையைத் தேர்ந்தெடுத்தாலும் கூட வாழ்க்கையில் நம்முடைய ருசிகளுக்கு ஏற்ற துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் பயிலக்கூடிய வாய்ப்பு இன்று இருக்கிறது. அந்த வாய்ப்பு மாணவர்களுக்கு அவசியம் என்றால், விமர்சனங்களுக்கு ஆட்பட்டாலும் கூட - அவர் தனது ருசிக்கு ஏற்ப துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள பின் வாங்கக்கூடாது என்று நினைக்கிறேன். உங்களைப் பொறுத்த வரையில் நீங்கள் சரியான துறைகளைத்தான் தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்றால் நீங்கள் அந்தத் துறையைத் தொடரலாம். ஏதோ ஒரு காரணத்திற்காக நமக்குத் துறைகள் சரியாக அமையவில்லை என்று வாழ்நாள் முழுவதும் விசனப்பட்டுக் கொண்டிருப்பதைவிட நமக்கு நம்மைப் பற்றித் தெரிந்த நேரத்தில் நம்முடைய துறைகளை மாற்றிக் கொள்வது மிக முக்கியமான விஷயமாக எனக்குப்படுகிறது.

இன்று புதுக்கவிதை வளர்ந்த நிலையில்தான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் தமிழிற்கு ஒரு சரியான இடம் இல்லாமல் போகவில்லையே ?

நான் புதுக்கவிதையைப் பற்றி சாதகமாகவோ பாதகமாகவோ எந்தக் கருத்தையும் என்னுடைய பேச்சில் கூறவில்லை. மு.வ. ?இலக்கியத் திறன் ? என்ற தனது புத்தகத்தில் புதுக்கவிதையை வரவேற்று எழுதக்கூடிய அளவுக்கு இன்றைய நவீன இலக்கியப் போக்குகளை அறிந்து வைத்திருக்கிறார் என்று பாராட்டினேன்.

பொதுவாக ஒரு மொழி இரண்டாம் பட்சமான படைப்புக்களால், அவை நாவல்களாக இருந்தாலும் சரி, சிறுகதையாக இருந்தாலும் சரி, கவிதையாக இருந்தாலும் சரி, ஒரு மொழி தன்னுடைய வலிமைகளை இழந்து கொண்டிருக்கும். முதன்மையான படைப்புக்களால் மிகத் தரமான படைப்புக்களால் மொழி வளர்ச்சி அடையும். நம்முடைய மொழி நம்முடைய சிறந்த கவிஞர்களால், சிறந்த நாவலாசிரியர்களால், சிறந்த சிறுகதை ஆசிரியர்களால், சிறந்த கட்டுரை ஆசிரியர்களால் நன்றாக வளர்க்கப்படுகிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் நம்மிடமோ இரண்டாம் பட்சமான அல்லது மூன்றாம் பட்சமான கவிஞர்களும், நாவலாசிரியர்களும், சிறுகதை ஆசிரியர்களும் எண்ணிக்கையில் அதிக அளவு இருக்கின்றனர். அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் நிறுவனங்களின் ஆதரவும் கிடைக்கிறது. அவர்கள் மொழியை மலினப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் தமிழ் மொழி சம்பந்தமாக நாம் எதிர் கொள்ளக் கூடிய நிலையாக இருக்கிறது.

நமக்கு இருக்கின்ற ஆங்கில மோகத்தால் தான் நாம் தமிழை உண்மையில் மதிக்காமல் இருக்கின்றோமா ?

ஆங்கில மோகம் ஏற்படுவதற்கு மாணவர்களை நான் குறை சொல்லவில்லை. மாணவர்கள் இந்த குறைகளுக்கு ஆட்பட்டுவிடக்கூடாது என்ற கவலையினால்தான் உங்களை provoke செய்யக்கூடிய, அல்லது உங்களை தொந்தரவு பண்ணக்கூடிய, நீங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுக்கக்கூடிய பல கருத்துக்களை முன் வைத்தேன். மாணவர் சமுதாயம் இன்று இருக்கக்கூடிய பல்வேறு குறைகளுக்குப் பலியாகி விடக்கூடாது என்று நினைக்கிறேன். இன்று ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பள்ளிகள், ஆங்கிலத்தின் மீது நாம் கொண்ட மோகத்தையே காட்டுகின்றன. வெளியே தமிழின் பெருமை பேசுதல், அதே சமயம் ஆங்கிலத்தை உள்ளூர மதித்தல் இதுதான் நம்முடைய கலாச்சார தலைமையின் இரட்டைக் குணம். நம்முடைய அரசியல் தலைமையின் இரட்டைக் குணம். இந்த குணத்தைக் கொண்டவர்கள் தான் இந்தச் சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலக் கல்விக்கு அளிக்கக்கூடிய முக்கியத்துவத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் தெரியும். இவர்களுடைய மரியாதை தமிழ் சார்ந்து இல்லை என்பதற்கும் ஆங்கிலம் சார்ந்து தான் இருக்கிறது என்பதற்கும் எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். நாம் கடந்த ஐம்பது வருடங்களில் தமிழைப் பற்றி உயர்வாகப் பேசியது உண்மையென்றால் நாம் பல்வேறுபட்ட காரியங்களைச் சாதித்திருக்க வேண்டும். ஆனால் சொல்லும்படியான மிகப்பெரிய காரியங்கள் எவற்றையும் நாம் சாதிக்கவில்லை. தமிழன் பெருமை பேசுவதே சில அரசியல் காரணங்களுக்காக, சில சமூகக் காரணங்களுக்காக. இதை ஒரு தந்திரமாகக் கொண்டிருக்கிறோம். இந்த இனம் தன்னுடைய தாழ்மையைப் பற்றி உள்ளூர வருந்தவில்லை என்பதற்கான தடயங்கள் தான் எனக்கு அதிகமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைய கலாச்சார வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக எதைச் சொல்ல முடியும் ?

முக்கியமான காரணம் தமிழ் நாட்டில் போலிகளுக்குக் கிடைக்கக் கூடிய அங்கீகாரம் என்று சொல்லலாம். ஒரு சமுதாயத்தில் எல்லா தரத்தைச் சார்ந்த மக்களும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மிக உயர்ந்த தரத்தைச் சார்ந்த மக்கள் மட்டும் வாழக்கூடிய சமுதாயம் என்று எதுவுமே இல்லை. செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டால் பல்வேறு தரத்தைச் சார்ந்த செயல்பாடுகள் ஒவ்வொரு சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும். மிக உயர்வானதும் இருக்கும்; நடுத்தரமானதும் இருக்கும். மிகக் கீழானதும் இருக்கும். ஆனால் ஒரு விவேகமான சமூகம் உயர்வான செயல்பாடுகளை ஏற்றுக் கொள்கிறது. அதைப் போற்றுகிறது. பாராட்டுகிறது. இரண்டாம் பட்சமான செயல்பாடுகளை விமர்சிக்கிறது. மூன்றாம் பட்சமான அல்லது முப்பதாம் பட்சமான செயல்பாடுகளைக் கண்டிக்கிறது. இதன் மூலம் மதிப்பீடுகளை ஒரு விவேகமான சமூகம் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. எனவே இந்தச் செயல்பாடுகள் இருப்பது வீழ்ச்சிக்கு காரணம் அல்ல. தரக்குறைவான செயல்பாடுகள் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. தரக்குறைவான காரியத்துக்கு நாம் கொடுக்கக் கூடிய சமூக அங்கீகாரம் சமூக மதிப்பு வீழ்ச்சியினுடைய அறிகுறி என்று நான் கருதுகிறேன்.

மூன்றாம்தர எழுத்தாளரை முதல் தரமான எழுத்தாளராக ஒரு சமூகம் கருதுமென்றால், பல்கலைக்கழகம் கருதுமென்றால், அறிவாளி வர்க்கங்கள் கருதுமென்றால், அரசாங்கம் கருதுமென்றால், அரசியல்வாதிகள் கருதுவார்கள் என்றால் அந்த சமூகம் விவேகமான மதிப்பீடுகளை, அளவுகோல்களை இழந்து விட்டது என்றுதான் அர்த்தம். மிகச் சிறந்த நடிகர்கள் இருக்கக்கூடிய ஒரு சமூகத்தில் மிக மோசமான நடிகர்களை மிகச் சிறந்த நடிகர்களாக ஒரு சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்றால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த அறிவாளிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என்றால், நடிப்பைச் சார்ந்த அளவுகோல் முறிந்து போகிறது என்று அர்த்தம். இதுபோன்ற ஒரு வீழ்ச்சி தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் பிற துறைகள் சார்ந்தும் மூன்றாம் தரமானவற்றை முதல் பட்சமாக முன் வைக்கும் காரியம், முதல் பட்சமானவற்றை முற்றாக நிராகரித்து விடும். இந்த இரண்டு காரியத்தையும் இந்த சமூகம் ஏற்றுக் கொண்டிருகிறது. ஆகவே இது ஒரு பெரிய வீழ்ச்சி என்று நம்புகிறேன்.

இன்றைய தரமான எழுத்துக்கள் படிப்பதற்கு எளிமையாக இல்லையே. உங்கள் காலச்சுவடு கூடத்தான். . .

மிகச் சிறப்பான எழுத்து சற்றுக் கடினமாக இருக்கலாம். மிகச் சிறப்பான எழுத்து எளிமையாகக் கூட இருக்கலாம். கடினம் என்பது இலக்கிய அளவுகோல் அல்ல. இது கடினமாக இருக்கிறது; ஆகவே உயர்வானது என்று சொல்ல முடியாது. இது எளிமையாக இருக்கிறது; ஆகவே இது தள்ளுபடியானது என்று சொல்ல முடியாது. இரண்டு விதமாகவும் படைப்புக்கள் இருக்கலாம். எளிமையாக இருக்கிறதா ? அல்லது கடினமாக இருக்கிறதா ? என்பதைப் பற்றி முன்கூட்டியே எண்ணங்களைக் கொண்டு அந்த எண்ணங்களின் அடிப்படையில் நான் இலக்கியப் புத்தகங்களை மதிப்பிடுவதில்லை. நம்முடைய இதிகாசங்களான மகாபாரதமும், இராமாயணமும் மிக எளிமையானவை. James Joyce இன் Ulysses மிகக் கடினமான புத்தகம். Franz Kafkaவும் சுலபமான ஆசிரியர் அல்ல. இவை எல்லாமே இலக்கியத் தரமானவை என்றே நான் கருதுகிறேன். இதில் ஒன்று போதும். மிக எளிமையானது மட்டும் போதும்; கடினமானவை வேண்டாம், வேண்டவே வேண்டாம் என்கிற மனோபாவத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நாவலாசிரியர்கள் அல்லது கவிஞர்களின் படைப்புக்களை கடினம் என்று வாசகர்களாகிய நாம் கூறுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. இதற்கு முன் எந்தக் காரியங்கள் சொல்லப்பட்டனவோ அதே விஷயங்கள் இந்த நாவலிலோ கவிதைகளிலோ சொல்லப்படவில்லை. இதுகாறும் சொல்லாத மிகச் சிக்கலான விஷயங்களை அவர்கள் சொல்ல முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சிகளில் வெற்றிகள் அடைகிறார்கள். இதன் மூலம் உங்கள் மொழி மிக நுட்பமான ஆற்றல்களை அடைகிறது. இன்று பல நுட்பமான கருத்துக்களை நம் மொழியில் நாம் சொல்கிறோம் என்றால் நம் மொழியை மிகக் கூர்மையாக படைப்பாளிகள் வளர்த்திக்கொண்டு வருவதால்தான் நம் மொழியை நாம் பல்வேறு வகைப்பட்ட வளர்ந்துவரும் துறைகளுக்குப் பயன்படுத்த முடிகிறது. மகாபாரத மொழி மட்டுமே நமக்கு இருக்குமென்றால் இன்று உலகத்தில் தோன்றக்கூடிய பல கருத்தாக்கங்களை நாம் சென்றடைய முடியாது.

காலத்தின் கோலத்திற்கு ஏற்ப, விரிந்து வரக்கூடிய அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப, புதிய துறைகளின் அறிமுகத்திற்கு ஏற்ப, நம்முடைய புத்தகங்கள் நம்மளவில் கடினமாகிக் கொண்டு போகக்கூடிய வாய்ப்புகள் மிகுதியாக இருக்கின்றன. இதையும் ஒரு தவிர்க்க முடியாத விதியாகக் கொள்ள வேண்டும். அந்தப் புத்தகங்களிடம் நமக்கு உள்ள உறவை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த உறவுகளை நல்ல முறையில் நாம் பேண வேண்டும். கடினமான புத்தகங்களை நாம் படித்து அதிலுள்ள சாராம்சங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும் என்றால் இதற்கு முன்னால் நமக்கு இலக்கியத்திலிருந்து கிடைக்காத ஒருவகை அனுபவம், ஒரு பேரனுபவம், அனுபவத்தின் ஒரு புதிய பரிணாமம் அந்தப் புத்தகங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும். அந்த வாய்ப்பைக் கடினம் என்று சொல்லி நாம் இழந்து விடக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய இதழான காலச்சுவடு உங்களால் போதிய அளவுக்குப் படிக்க முடியாமல் இருக்கிறது என்றால் இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அதை எழுதக்கூடியவர்கள் போதிய அளவுக்கு எளிமையாகச் சொல்லத் தெரியாதவர்களாக இருக்கலாம். அல்லது அவர்கள் சொல்லுகிற விஷயங்களைச் சார்ந்து உங்களுக்கு முன் பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். இந்த காரணங்களைச் சார்ந்து அது கடினமாக அமையும். ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்கள் சார்ந்து உங்களுக்கு பழக்கம் இருக்குமேயென்றால் அதில் வரக்கூடிய கட்டுரைகளை நீங்கள் புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு இருக்கும். அப்படி உங்களுக்கு பழக்கம் இருந்தும் அந்த கட்டுரைகளோ அல்லது கவிதைகளோ உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது அநேகமாக சொல்லியவர்களுடைய குறையாகக் கருதலாம். இரண்டு வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஒருவன் படிப்பினால்தான் நிறைவான வாழ்க்கையை அடைய முடியுமா ? இன்றைய காலகட்டத்தில் படிப்பிற்கு நேரம் ஒதுக்குவது என்பது முடியாத செயலாக இருக்கிறதே.

வாசிப்பு என்பது முக்கியமான ஒன்று என்று சொன்னேன். ஆனால் அதை ஒரு கட்டாயமான விதியாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. அது முக்கியமாக ஒரு தவிர்க்க முடியாத விதி அல்ல. நீங்கள் படிக்கலாம். படிக்காமல் கூட இருக்கலாம். படிக்காமலேயே நிறைவான வாழ்க்கை வாழ்ந்த பல்வேறு நபர்களை எனக்குத் தெரியும். எந்த ஒரு புத்தகத்தையும் படிக்காமல் - ஒரு தினசரியைக் கூடப் படிக்காமல் - சந்தோஷமான நிறைவான வாழ்க்கையை தங்களவில் வாழ்ந்தவர்களை எனக்குத் தெரியும். ஆனால், இன்றைய வாழ்க்கையை வாழ்க்கையின் வேறு பரிமாணங்களைப் புத்தகங்களின்றி நாம் எதிர்கொள்ள முடியாதோ என்ற சந்தேகம் எனக்குப் பலமாக இருக்கின்றது.

நேரம் ஒதுக்குவது என்பது உங்கள் ஆர்வங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். நாம் பல்வேறு துறைகளைப் பற்றிப் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் நமக்கு நேரம் இல்லாமல் போகலாம். ஆனால் அதைவிட மிக முக்கியத்துவம் குறைந்த பல்வேறுபட்ட விஷயங்களுக்கு நேரம் செலவிட வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது அரசாங்கத்துக்கும் உங்களுக்குமான உறவுகள் சார்ந்த காரியங்கள், நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களின் உறவைச் சார்ந்த காரியங்கள், உங்கள் உறவுகளைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள், உங்கள் குடும்பத்தைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள், உங்கள் நண்பர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் - இப்படி எண்ணற்ற காரியங்களில் நீங்கள் பொழுதைச் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள். இவற்றில் ஒரு பொழுதை மிச்சப்படுத்தி நீங்கள் விரும்பக்கூடிய மிக உன்னதமான புத்தகங்களைப் படிக்க முடிந்தால் அந்த அளவுக்கு வாழ்க்கைப் பார்வை விரிவடையும் என்று நம்புகிறேன்.

இந்த நூற்றாண்டில் தமிழில் மிகச்சிறந்த கலைஞர்கள் யாவர் ?

இந்த நூற்றாண்டில் மிகச் சிறந்த கலைஞர்களாக நான் இருவரை மதிக்கிறேன். ஒருவர் பாரதி. மற்றொருவர் புதுமைப்பித்தன். இவர்களின் புத்தகங்களையேனும் மாணவர்கள் முழுமையாகப் படிக்க வேண்டும். இந்த அனுபவங்களுக்கு அவர்கள் ஆளானால் அதுவே பெரிய விஷயம். ஒரு முக்கியமான விஷயம். இதை ஆரம்பமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்டுள்ள முக்கியமான மற்ற புத்தகங்களைப் படிக்கலாம். சிறந்த புத்தகங்கள் ஏராளமாகத் தமிழில் இருக்கின்றன. அவற்றை நீங்கள் படித்துப் பார்ப்பது அவசியமென்று நம்புகிறேன். இந்த நூற்றாண்டைச் சேர்ந்த நூறு புத்தகங்களையேனும் குறைந்தபட்சம் படிக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகங்களை நீங்கள் சுலபமாகப் பெற்றுக் கொள்ள முடியும். பெரும்பான்மையான புத்தகங்கள் உங்கள் நூல் நிலையங்களில் இருக்கக் கூடியவைதான். எந்தவிதமான கஷ்டத்துக்கும் நம்மை ஆட்படுத்தாமல் மிகப் பெரிய செல்வங்கள் நம்மை வந்தடையக்கூடிய ஒரு வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். அந்த வாய்ப்பை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

படைப்பாளிகளில் இரண்டாந்தர படைப்பாளியை எந்த அளவுகோலை வைத்து மதிப்பிடுகிறீர்கள் ?

இப்போது பல்வேறு வகைப்பட்ட அளவுகோல்கள் இருக்கின்றன. முக்கியமாக ஒரு அளவுகோல் ஒரு படைப்புக்கும் காலத்துக்குமான உறவு. ஒரு எழுத்தாளன் அவனுடைய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நவீன மனிதனாக இருக்க வேண்டும். அவனது உடல் இன்று வாழ்கிறது என்ற காரணத்திற்காக அவனை இந்த நூற்றாண்டு மனிதனாகக் கருதி, கருத்துலகம் சார்ந்து, அனுபவ உலகம் சார்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.

இன்று வந்து கொண்டிருக்கிற பெரும்பான்மையான புத்தகங்களும் படைப்புக்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருக்க வேண்டியவை. ஆக ஒரு படைப்பாளிக்கும் இந்த காலத்திற்கும் இருக்கக்கூடிய உறவு நிலை காலத்தால் அவன் பெற்ற பாதிப்புகள், அந்தப் பாதிப்புகள் மூலம் தன்னை நவீன மனிதனாக அவன் உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிறைவு, இவைதான் படைப்புக்கு அடிப்படையான கூறுகள் என்று நினைக்கிறேன். இதைச் சார்ந்து பல்வேறுபட்ட கூறுகள் இருக்கின்றன. மொழியை அவன் எப்படிப் பயன்படுத்துகிறான் ? சிக்கனமாகப் பயன்படுத்துகிறானா ? மொழியை விரயம் செய்கிறானா ? மிகப்பெரிய அனுபவங்களை அவனால் அறிய முடிகிறதா ? பல்வேறுபட்ட அர்த்தப் பரிமாணங்களை அந்த படைப்புக்களால் தர முடிகிறதா ? உண்மையென்று முற்றாக நம்பக்கூடிய, நம்பச் செய்துவிடக்கூடிய ஒரு கற்பனை வளத்தை அவன் கொண்டிருக்கிறானா ? மீண்டும் மீண்டும் அந்தப் படைப்பை அணுக வேண்டும் என்ற வற்புறுத்தல் அந்த படைப்பு நமக்குத் தருகிறதா ? நம்முடைய கவனத்தை முழுமையாக அந்தப் படைப்புக் கேட்டு நிற்கிறதா ? அல்லது அரைத் தூக்கத்திலேயே அந்தப் படைப்பைப் படிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறதா ? என்பது போன்ற பல்வேறுபட்ட அளவுகளை வைத்து உயர்ந்த படைப்புக்கும் இரண்டாம் பட்சப் படைப்புக்குமான வேற்றுமைகளைக் கண்டு கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

நாகர்கோவில் தெ. தி. இந்துக் கல்லூரி முதுகலை வணிக இயல் துறை பேரவைத் தொடக்க விழாவில் பேசியது - 28.10.1988