06/10/2011

வள்ளுவரின் பொருள் ஆதாரக் கோட்பாடுகள் - ப.யசோதா

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி

- மனோன்ம­யம்

இலக்கிய உலகில் திருக்குறள் ஒரு திருப்பு மையம். சிந்தனை வளத்தில் அது ஒரு பேரிமயம். கடந்த காலத்தின் பழுதிலாத்திறங்கண்டு எதிர்காலத்தின் ஏற்றத்துக்கு வழிகாட்டுகின்ற கலங்கரை விளக்கம். அது மனித சிந்தனைகளின் உயரிய வெளிப்படை இதனை,

The Kural is the master-piece of Tamil literature, one of the highest and purest expressions of human thoughts என்றியம்பிய ''ஏரியல்'' என்பாரின் வார்த்தைகளால் அறியலாம்.

வாழ்வியல் சிந்தனைகளைப் புதிய வடிவாக, வண்டமிழ்க் கொடையாக, புதுமையாகப் பகுத்து வழங்கியவர் வான்புகழ் வள்ளுவர் பொருளாதாரத்தில் அவர் பங்கு குறிப்பிடத்தக்கது.

காலந்தோறும் பல புதுப்புதுக் கருத்து விளக்கங்களை அறிஞர்கள் விளங்கிக் கொள்ளவும், விரித்து வழங்கவும் குறள்நூல் இடமளிக்கின்றது.

ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதனைப் பத்துவகையில் அலசி ஆராய்தல் அக்கருத்தைக் கசடறத் தெரிந்து தெளிந்து கடைப்பிடிக்க உதவும்.

கற்க கசடறக் கற்பவைக் கற்றபின்

நிற்க அதற்குத் தக

- - - (குறள் 391)

என்று தான் கூறியதற்கேற்றாற்போல் வள்ளுவர் ஒரு பொருளின் இயல்பு, அதுபற்றிய விளக்கம், அதன் ஆற்றல், முதன்மை, முறைமை, செயல், வகை, நயம், பயன், நம் கடமை என்பவற்றை அணுகி ஆயும் பத்து முறைகளாக்கிச் சுட்டிக்காட்டியிருப்பது மிகச் சிறப்பானது. கற்றுத் தெளிந்து வாழ்க்கையில் அதனைப் பின்பற்ற உகந்தது.

கோட்பாடு உருவாக்கம்

ஒவ்வொரு நாட்டிலும் கோட்பாடுகள் உருவாவதற்கு அந்நாட்டில் தொன்றுதொட்டு வந்த நடைமுறைகளும், அதன் பயனாய் வளர்ந்த கொள்கைகளுமே காரணமாகின்றன.

பொருள் + ஆதாரம் = பொருளாதாரம்

எந்த ஒரு தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் பொருள் தேவை. பொருளே ஆதாரம் என்றும் கூறாவிட்டாலும் பொருளின்றி செய்தல் அரிது.

பொருளியல் வளர்ச்சி

ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு வேளாண்மை அடிப்படையானது என்கிறார் வள்ளுவர்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம், அதனால்

உழந்தும் உழவே தலை

- - - (குறள் 1031)

மக்கள் பல்வேறு தொழில்களைச் சுழன்று சுழன்று செய்தாலும் அவையெல்லாம் உழவுத் தொழிலுக்குப் பிற்பட்டனவே. தொல்லைகள் தந்தாலும், உழவுத் தொழிலே தலைசிறந்த முதன்மையான தொழில் என்கிறார்.

உலக நாடுகள் அனைத்தின் அடிப்படைத் தொழிலான வேளாண்மை பொறியியலின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ''இலாப நோக்கோடு செய்யப்படும் தொழில்களுள் விவசாயத்தைவிடச் சிறந்தது இல்லை'' என்பார் ''சிசிரோ''. ஆகவே பொருள் ஈட்டலில் முதன்மையாகச் செய்யப்பட்ட தொழில் வேளாண்மை. அதிலிருந்தே ஒரு நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறத் தொடங்கிற்று.

பொருளின் சிறப்பு

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள்இல்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு

- - - (குறள் 247)

அருளிலார்க்கு அவ்வுலகமில்லை, பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் முதலில் வரும் அருளைப்பற்றிச் சிந்திப்பதைவிடப் பின்னால் வரும் பொருளைப் பற்றினதே அனைவர் மனத்திலும் முந்தி நிற்கிறது. பொருளின்றி இவ்வுலகில் வாழ்தல் அரிது என்பதை உண்மை என அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக வாழ்க்கைக்குப் பொருள் தேவை. முக்கியம் இதை வள்ளுவர்

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு

- - - (குறள் 752)

என்று கூறி வலுப்படுத்தியுள்ளார். அஃதாவது ஒருவர் சிறப்பெய்த வேண்டுமெனில் பொருள் நிறைந்திருக்க வேண்டும் / செல்வராக இருக்க வேண்டும். செல்வம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வம் உள்ளாரை எல்லாரும் போற்றுவர் என்

று கூறியுள்ளார். இதை உணர்ந்தே நம் நாட்டு இளைஞர்களுக்கும் அறிவுச் செல்வத்தைப் பெற்றுக்கொண்டு பொருள் செல்வத்தைத் திரைகடல் ஓடித் தேடுகிறார்கள்.

பொருள் ஈட்டல்

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருள்அல்லது இல்லை பொருள்

- - - (குறள் 751)

ஒரு பொருட்டாக மதிப்பதற்குத் தகுதி இல்லாதவரையும், மதிப்பிற்குரியவராகச் செய்வது செல்வமே அஃதில்லாமல் வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளார். இதற்கு இக்கால வாழ்க்கை முறையே நல்ல உதாரணம்.

பழந்தமிழரும்,

ஈதல் இரந்தோர்க்கு ஒன்று ஆற்றாது

வாழ்தலின் சாதலும் கூடும்

- - - (கலித்தொகை)

என்ற ஈதல் இயையாதபோது சாதலே மேல் எனக்கருதி,

அருள் நன்குடையராயினம், ஈதல் பொருள்

இல்லோர்க்கு அஃது இயையாது

- - - (அகநானூறு)

என உணர்ந்து பொருள்தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பொருள் ஈட்ட தொழில்கள் பல உண்டு. தொழில்திறன் இயற்கையின் வரப்பிரசாதம். கிரேக்கப் பேரறிஞர் ''பிளேட்டோ'' என்பார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தொழில் செய்வதில் ஆர்வமும் திறமையும் இயற்கையாக உண்டாகின்றன. இதன் விளைவே உழைப்புப் பிரிப்பு (Division of Labour) என்கிறார்.

''பொருளாதாரத்தின் தந்தை'' என்றழைக்கப்படும் ''ஆடம்ஸ்மித்'' அவர்கள் உழைப்புப் பிரிவினையால் உற்பத்தித் திறன் மிகும். உபரியான உற்பத்தியை இலாப நோக்குடன் பிறருக்கு விற்று ஒவ்வொருவனும் தன்னலத்தைப் பேணி வளர்க்க முடியும். இத்தன்னல முயற்சி, பொது நலத்தையும் பேணுவது ஒரு சந்தர்ப்ப விளைவு என்கிறார்.

உலகில் செய்யப்படும் எல்லாத் தொழில்களின் / செயல்களின் இறுதி விளைவும் பொருள் ஈட்டலிலேயே முடிகின்றது. அப்பொருள் அடுத்த செயல் அல்லது தொழிலைச் செய்வதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றது.

ஆட்சியாளருக்குரிய பொருள்கள்

தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் பொருள் தேவைப்படுவது போல் ஒரு நாட்டின் ஆட்சிப்பொறுப்பை மேற்கொண்டிருக்கும் அரசுக்கும் பொருட்செல்வம் தேவையாகிறது. தென்புலத்தார், தெய்வம், சுற்றம், விருந்து, தான் என்னும் ஐந்திற்கும் ஒவ்வொரு பங்கு போக எஞ்சிய ஒரு பங்கு அரசுக்குரியது என்பது வள்ளுவர் தரும் விளக்கம்.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்

- - - (குறள் 756)

இக்குறளின் படி அரசுரிமையாக / இயற்கையாக வந்த பொருள். வரியாக / தீர்வையாக வந்த பொருள். தன் பகைவரை வென்று திறையாக வரும் பொருள் ஆகியவை ஆட்சியாளருக்குரிய பொருள்களாகும்.

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு

- - - (குறள் 760)

பொருளைச் சேர்க்க வேண்டும். அதுவும் நல்ல வழியில் சேர்க்க வேண்டும். நல்ல வழியால் பெரும்பொருளைச் சேர்த்தவருக்கு அறமும், இன்பமும் ஒருசேர எளிதாய் வந்தடையும் என்கிறார் வள்ளுவர்.

பொருள் முதன்மை

பொருளின் வன்மையையும் இன்றியமையாமையையும் வள்ளுவர் நன்குணர்ந்தவர். ''பொருளென்னும் பொய்யா விளக்கம்''; ''செல்வரை எல்லோருஞ் செய்வர் சிறப்பு''; ''பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்''; ''செறுநர் செருக்கறுக்கும் பொருள்''; ''ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு'' என்ற கருத்துகளாலும்,

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்

- - - (குறள் 754)

என்று சிறப்பிப்பதாலும், ''பொருளே சிறப்புடையது'' என்றும், அதன் வாயிலாய் அறம், இன்பம் இரண்டையும் எளிதாய்ப் பெறலாம் என்றும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். இதன்மூலம், மற்றவற்றைப் பெற முதன்மையாய்ச் செயல்படுவது பொருளே! என்பது புலனாகிறது.

சிறந்த பொருள்

வள்ளுவர் பொருளே சிறந்தது என்று வலியுறுத்துபவராயினும் அறவழிப் பொருளையே அரசனுக்கு வலியுறுத்தினார். அரசுக்கு நெருக்கடியான காலத்திலும், பொருளை அறத்துக்கு மாறான வழியிலும் மக்களை ஏமாற்றியும், தண்டனையை மிகுதியாக்கியும் சேர்த்தல் மிகத் தவறானது என்ற சாடுகிறார். அறவழிப் பொருளே சிறந்த பொருள் என்றுரைக்கிறார்.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு

- - - (குறள் 757)

அன்பினால் ஈன்றெடுக்கப்பட்ட அருள் என்னும் குழந்தை, பொருள் என்று சொல்லப்படும் செல்வச் செவிலித்தாயால் வளரும். ஆகவே பொருள் என்பது அனைத்திற்கும் வேண்டப்படுவது என்கிறார் வள்ளுவர். பொருள் இல்லாமல் உலக நாடுகள் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியுமா?

தொழில் முதன்மை

வள்ளுவர் நாட்டின் தன்மை மற்றும் வளத்தைப் பற்றி விளக்கும்போது, உழவுத்தொழில் சிறக்க வேண்டும். அதற்கு உழைப்பும், சோம்பலின்மையும் மிகத்தேவை என்கிறார். உழைப்பவர்கள் மிகுதியாய் வேண்டும். மற்றும் அவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார். எல்லா மக்கட்கும் தலைசிறந்த தொழிலாக உழவுத் தொழிலைச் சிறப்பிக்கின்றார். மேலும் உழுபவனுக்கே நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டுமென்ற கொள்கையை அன்றே வலியுறுத்தியுள்ளார். மேலும், பொருள் ஈட்டலில் முதன்மையாகச் செய்யப்பட்ட தொழில் வேளாண்மையே! ஆகவே தொழில்களில் முதன்மையாகச் சிறப்பிக்கப்பட வேண்டியது உழவுத் தொழிலேயாகும் எனக் கூறுகிறார்.

முடிவுரை

ஒரு நாட்டின் ஏழ்மை நிலையை எப்படிப் போக்குவது என்பதைப்பற்றி விளக்கமாகப் பொருட்பாலில் வள்ளுவர் தெளிவுபடக் கூறியுள்ளார். ஒரு நாடு முன்னேற அந்நாட்டின் பொருளாதாரம் முதலில் ஊக்குவிக்கப்பட வேண்டும். பொருளாதார முன்னேற்றத்திற்கு வறுமை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். ஒரு நாட்டின் திட்டங்களை இதனடிப்படையில் படிப்படியாக அமைத்தால் அந்நாட்டின் முன்னேற்றம் மிக விரைவில் எளிதாக ஏற்பட்டுவிடும்.

துணைநூல்கள்

1. திருக்குறள் அறம் ஓர் ஆய்வு, அ. இளவழகன், மீனாட்சி நூலகம், 1991.

2. புறநூல்களில் பொருளியல் கோட்பாடுகள், மகா. வேங்கடராமன், 1989.

3. திருக்குறள் மக்கள் உரை, குறள்ஞானி கு. மோகனராசு, 1994.

செல்வி ப. யசோதா

தரவு உள்ளீட்டாளர்

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை - 25.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கருத்துகள் இல்லை: