06/10/2011

அறன் எனப்படுவது...? - கமலா சுதன்

ஆயிரம் உண்டிங்கு நூல்கள். ஆயினும் திருக்குறளுக்கு ஈடாக உலகில் எநத் நூலையும் கூறமுடியாது. திருக்குறளைப் போல் ஒட்டு மொத்தமாய் வாழ்க்கையைக் காட்டக்கூடிய இன்னொரு நூல் இன்று வரை தோன்றவில்லை என்கின்றனர் ஆய்வு மேற்கொண்ட அறிஞர்கள். குடும்ப வாழ்வின் சிறப்பே அறம் செய்து வாழ்வதுதான் என்கிறார் திருவள்ளுவர். அறம் செய்யத் துறவறம் சிறந்த வழி என்று பல்வேறு மதங்களும் வலியுறுத்துகையில் இல்லறத்தில் இருந்து கொண்டே அறம் செய்து வாழலாம் என்று அழுத்தமாய்க் கூறிய ஒரே நூல் திருக்குறள். துறந்தார் பெருமையையும், அறத்தையும் முன்நிறுத்தி இல்லறத்திற்கான இயல்புகளை அடுக்கடுக்காய் அள்ளித் தந்திருக்கிறார்.

அன்பும் அறனும்

தாமரைப் பூவிலே தேன் எடுத்துச் சந்தன மரத்திலே கட்டப்பட்ட கூட்டிலே வைத்த தேன் போன்றது இல்லற வாழ்வு என்பது சங்கப் புலவர் வாக்கு. நல்ல கணவனும், நல்ல மனைவியும் இணைந்து நடத்தும் இல்லறமே வீடுபேற்று இன்பம். கணவன் - மனைவி பிரித்தால் பொருள் தராத இரட்டைக் கிளவி போல் வாழ வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் பாவேந்தரின் ''குடும்ப விளக்கு'' போல் இருக்க வேண்டும். அவர்கள் பெற்று எடுக்கும் பிள்ளைகளோ நாற்žர் போல் ஆண்பிள்ளையும், முச்žர் போல் பெண் பிள்ளையும் இருக்க வேண்டும் என்று குறளையே உதாரணம் காட்டி மகிழ்கிறார் இரா. இளங்குமனார். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் குறையாமல் அன்பு செலுத்திக் கருத்தொருமித்துப் பிறருக்குச் செய்யும் அறமே பண்பும், பயனும் உடையதாயிருக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

இல்லது என்? இல்லவள் மாண்பானால்

மனைவியின் சிறப்பே இல்வாழ்வின் சிறப்பு என்பதால் மனையையும் இல்லத்தையும் ஆளும் சிறப்பு அவளுக்கு உண்டு. அன்பு, அமைதி, அடக்கம், அறம் குடி கொண்ட பெண் மனையை ஆளுகிற போதுதான் வீடு அருமையாய் இருக்கும். மனைவி என்பவள் எல்லாவிதக் குணநலன்களும் உடையவளாக அமைந்துவிட்டால் மதியாதவர்கள் முன்கூட ஓர் ஆண் ஏறு போல் பீடு நடை போடலாம். 1330 அருங்குறள்களில், ஒன்றில் கூட வள்ளுவர் பெண்ணை இழித்துக் கூறவில்லை. அறத்துப் பாலில் பெண்ணின் பெருந்தக்க யாவுள? எனும் கேள்வியை எழுப்பி (54), பொருட்பாலில் பெண்ணே பெரு€மை உடைத்து (907) என்று சுட்டிக்காட்டி, இன்பத்துப்பாலில் பெண்ணின் பெருந்தக்கது இல் (1137) எனப் பெண்ணின் பெருமையை நிலை நிறுத்துகிறார்.

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை

பெண் என்பவள் அமிழ்தத்தால் ஆனவள். இல்லற வாழ்வில் அவள் உலகிற்கு வழங்கும் மக்கள் அமிழ்தம் என்றும், அம்மக்கள் பேசும் சொல் அமிழ்தம் என்றும், அவர்கள் கைபட்ட உணவும் அமிழ்தம் என்றும் மொத்தத்தில் உயிர் தளிர்க்கச் செய்வது அமிழ்தம் என்கிறார். மாநிலம் சிறக்க மக்கட்பேறு வேண்டும் அதுவும் அறிவறிந்த மக்களைப் பெறுவதே பெரும்பேறு. நம் சொத்தாய்க் குழந்தைகள் வேண்டும் அவர்கள் தம்மைவிட அறிவாளியாய் அமைந்து விட்டால் பெற்ற பொழுதைவிடப் பெரிய இன்பம் காணலாம். (1105, 61, 63, 64, 68, 69).

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

உடம்புக்கு உயிர் வேண்டும். அந்த உயிருக்கு ஓர் உயிராக அன்பு வேண்டும் (80). உயிரும் போல் அன்பும் வாழ்க்கையும் வேண்டும். அன்பைப் புரிந்து கொண்டால் உடம்புகூட உனக்குச் சொந்தமில்லை. (72). இது அன்புக்குக் குறள் தரும் அருமையான விளக்கம். அன்பு நிறைந்த இல்லத்தில் சிக்கல்கள் வர வழியில்லை.

அகன் அமர்ந்து செய்யாள் உறையும்

இல்லறத்தை நல்லறமாய்ப் போற்றி வாழகூடியவன் விருந்தினரை முதலில் உபசரித்துப் பின் எஞ்சிய உணவைத் தான் உண்டு மகிழ்வோடு வாழ்வான். அவனுடைய நிலத்தில் விதைகூட விதைக்கத் தேவையில்லை. அப்படியென்றால் அவனுடைய நிலம் எப்படி விளையும்? தாம் வாழ்ந்த காலத்தில் இல்லறத்தில் சிறந்து விளங்கிய வள்ளல்கள் பலரை வள்ளுவர் நேரில் கண்டிருக்கிறார். அவர்கள் விருந்தினரைப் போற்றுவதிலேயே உழைப்பும் நேரமும் கழிந்து விடுவதைக் கண்ட வள்ளுவர் ஓர் உண்மையை புரிந்து கொண்டார். விருந்து உபசரிப்பவர்கள் தங்கள் நிலங்களைத் தாங்களே உழுது பயிரிடுவதில்லை. விருந்துண்டு செல்பவர்கள் நன்றிக் கடனாக உழுது பயிரிட்டுச் செல்வதை அறிந்தார். அது அளித்த வியப்பே கலை நயத்துடன் குறளாக (85) வெளிப்பட்டது.

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

மனைவியைப் போல் கணவனுக்கும், கற்பு நிலையானது என்பதை, உன் மனைவியைப் பார், அவளை போல் நீயும் கற்புடையவனாய் நடந்து கொள் என்று

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

- - - (குறள் 974)

என்ற குறள் மூலம் சுட்டிக்காட்டுகிறார். இல்லறத்தில் ஒழுக்கத்தை இருவருக்கும் பொதுவாய் வைத்தார். நல்ல குடியில் பிறந்து பழி பாவங்களுக்கு அஞ்சி நடந்து தன் குடியை உயர்வு செய்பவன் பெருமையைப் போல் உலகில் வேறெதுவும் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

லுக்கிரிஷ’சும் திருவள்ளுவரும்

''மனத்துக் கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்'' என்ற வள்ளுவரின் கருத்தை லுக்கிரிஷ’ஸ் என்ற கவிஞர், மனித உரிமைகள் என்ற அடிப்படையில் சாதி, சமயம், மொழி, இனம், நாடு ஆகியவற்றைக் கடந்த நிலையில் மனித இனத்தின் நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு ''தூய உள்ளம் உடையவர்களே உலகில் நலமாக வாழ முடியும் என எடுத்துரைக்கிறார்''. சமய எதிர்ப்பாளரான இவருடைய கவிதைகளில் புலன்கள் ஆன்மா, உள்ளம் ஆகியவற்றால் வரம்பில்லா இன்பத்தை நுகர்ந்து மகிழ்வதற்குரிய நெறி முறைகள் இடம் பெற்றுள்ளதால் அறங்கூறும் அறவோராகத் தோன்றாமல் சிற்றின்பவாதியாகக் காட்சியளிக்கிறார். காதலைப் பற்றி அவர் கூறும் கருத்து அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதன்று. ஒருவன் ஒருத்தியைக் காதலித்து அவளோடு தன் வாழ்க்கையை இறுகப்பிணைத்துக் கொண்டு வாழ்வது இக்கவிக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது. தெருவில் திரியும் பொதுமகளிர் தரும் இன்பம் எளிதில் கிடைக்கக் கூடியது, துன்பமற்றது என்பது லக்கிரிஷ’ஸ் சித்தாந்தம். ஆனால் வான்மறை தந்த வள்ளுவரோ, ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த குறிக்கோள் வாழ்வினை அறத்துப்பாலிலும், இன்பத்துப் பாலிலும் வலியுறுத்திக் கூறுகிறார். வரைவின் மகளில் தரும் இன்பத்தை (913) மிகவும் இழித்துக் கூறுகிறார். பெண் உரிமைக்குப் பெரிதும் குரல் கொடுத்த தந்தை பெரியார்,

பெண்ணைக் கொள்ள ஆணுக்கு உரிமையிருந்தால் ஆணைக்

கொள்ளப் பெண்ணுக்கும் உரிமை வேண்டும்; ஆணைத்

தொழுதெழப் பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால் பெண்ணைத்

தொழுதெழ ஆணுக்கும் நிபந்தனை இருக்க வேண்டும்

என்றார். புலனுகர்ச்சியால் பெறுவது மகிழ்ச்சி. உள்ளத்தால் பெறுவது மனநிறைவாகிய இன்பம். இதனை மனநலம் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். ''அறத்தான் வருவதே இன்பம்'' என்ற வள்ளுவர் மனிதன் நலமாகவும் இன்பமாகவும் வாழ்வதற்குத் தேவையான அறநெறியினை வகுத்துக் காட்டியுள்ளார். ஆனால் மனித வாழ்க்கையின் இலட்சியம் அதைவிட உயர்ந்தது. அதை அடைவதற்குரிய வழிமுறைகளை வள்ளுவத்தில் வகுத்துக் காட்டியுள்ளார். வள்ளுவரின் அறநெறிக் கோட்பாடு ஒப்புயர்வற்று விளங்குகிறது.

இன்ப வாழ்வு

இல்லற வாழ்விற்கு அறம் பொருள் இன்பம் இம்மூன்றும் தேவை.

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு

- - - (குறள் 1107)

கணவனை மனைவியோ, மனைவியைக் கணவனோ பிரிந்து இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் ஒருவர் நெஞ்சில் ஒருவர் நீங்காமல் நிறைந்து இருக்க வேண்டும். முன்னும் பின்னும் கூடாமலும் குறையாமலும் இருபுறமும் பாரம் சமமாக இருக்கக்கூடிய காவடியைப் போல் கணவன், மனைவி இருவரும் குடும்பப் பாரத்தைத் தாங்க வேண்டும் (1196). இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறையாத விருப்புடையவராக அமைந்து நடத்தும் இல்வாழ்வுக்கு ஈடு இணையில்லை (1193). அத்தகைய இல்வாழ்வு விதையில்லாக் கனியை விரும்பி சுவைப்பது போல் என்கிறார் பொய்யா மொழியார் (1191).

வாய்ச் சுவைக்கு இனிப்பும் காரமும் தேவைப்படுவது போல் இல்லற இன்பத்திற்கு ஊடலும் அதன்பின் கூடலும் வளர் நிலைத் தேவை (1330). அது மட்டுமல்ல உப்பு போல் ஊடலும் அளவோடு இருத்தல் வேண்டும். கூடினால் இரண்டுமே கெட்டுப் போகும் (1302). உடற்கலப்பைக் காட்டிலும் உள்ளக் கலப்பே உயர்ந்தது. ''புணர்ச்சி பழகுதல் வேண்டா'' (785) என்ற குறள் இதனை அறிவுறுத்துகிறது. கணவன் மனைவியைச் சேர்த்து வைக்கும் காதலை வானவில் என்ற அறிஞர் அண்ணா இன்பம் இல்லாத இல்லம் ஓர் இருண்ட வீடு, அதனால் இடரும், இன்னலும் அதிகரிக்கின்றன. தந்தி தளர்ந்த வீணையிலிருந்து இனிய நாதம் எங்ஙனம் கிளம்ப முடியும்? என்றார்.

நாம் உதவி செய்து வாழ்ந்தால்தான் உயிர் வாழ்வதாக பொருள் (ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்). நீர் நிறைந்த ஊருணியாக, பயன்மரமாக இருப்போம். பசித்தவனுக்கு உணவு கொடுப்போம். நேற்றுவரை எப்படியோ, இன்றாவது புகழோடு தோன்றுவோம்.

அருளை வாழ்வில் சேர்த்து இருளை நீக்க வேண்டுமென்றால் திருக்குறள் படித்து இல்லறத்தை நல்லறமாக்குவோம்.

துணை நூல்கள்

1. மங்கள மனையறம், இரா. இளங்குமரனார் உரை, பக். 10, 14 - 17, 20, திருவள்ளுவர் தவச்சாலை வெளியீடு, 2000.

2. நெய்வேலி, முத்தமிழ்ச் சான்றோர் பேரவை நடத்திய சொற்பொழிவில் இரா. இளங்குமரனார் உரை, 2003.

3. திருக்குறள் நீதி இலக்கியம், (இலத்தீன் மொழி நீதி இலக்கியம்), முதற் பதிப்பு - 1971, இரண்டாம் பதிப்பு - 1977, மு. வரதராசனார், சென்னைப் பல்கலைக்கழகம் வெளியீடு, பக் 201 - 203, 284, 385.

4. பொன் மொழிகள், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முதற்பதிப்பு - 1995, மறுபதிப்பு - 2002, சரவணன் ஆப்செட் பிரிண்டர்ஸ், பக். 33, 45.

5. திருக்குறள், 49, 1106, 64, 61, 63, 68, 69, 80, 72, 85, 92, 974, 34, 913, 55, 1193, 1191, 1330, 1302, 785, 214, 215, 216.

திருமதி. கமலாசுதன்

53/இ, டைப் 1 குடியிருப்பு

வட்டம் 22, நெய்வேலி - 7.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கருத்துகள் இல்லை: