14/10/2011

மொழிப் பயிற்சி – 60 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

பிற மொழி கலந்து பேசுபவர்கள் குழந்தைகளை எப்படிக் கொஞ்சுவார்கள் என்று புலப்படவில்லை. "என் ஐயே...', "மை கோல்டே' என்று கூறிக் கொஞ்சுவார்களா? அழுது அரற்றும்போது, மதர் கோயிட்டாங்களா? டாட் போயிட்டாங்களா? என்பார்களோ?

பணியாற்றும் பெண்களை "அம்மா' என்றழைத்தால், நான் என்ன உங்கள் அம்மாவா? என்கிறார்கள். மேடம் என்று சொன்னால் (இதன் பொருள் அம்மாதானே?) மகிழ்கிறார்கள். இப்போது மேடமும் போய், "மேம்' என்கிறார்கள். இஃதென்ன மேம், மேம் என்று ஆட்டுக்குட்டிதான் கத்தும். "சார்' என்று சொல்லுக்குப் பொருளே கெட்டுவிட்டது.

ஓட்டுநர், நடத்துநர், அஞ்சல்காரர், பணியாளர், உணவு வழங்குபவர் எல்லாரும் சார்தான். அண்ணே, தம்பி, ஐயா என்று இடத்துக்கேற்ப, வயதிற்கேற்ப தமிழில் அழைக்கலாமே.

தெய்வத் திருப்பெயர்கள்:

அழகான தூய தமிழில் இறைவி, இறைவன் திருப்பெயர்கள் தமிழில் நிரம்ப உள்ளன. அலர்மேல் மங்கை எனில் (அலர் - மலர்) தாமரை மீது அமர்ந்துள்ள திருமகளைக் குறிக்கும். இப்பெயரை அலமேலு ஆக்கிவிட்டோம். திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள இறைவன் வேங்கடராமன். இந்தப் பெயரை வெங்கட்ராமன் ஆக்கிவிட்டோம். அதுவும் இப்போது வெங்கட், வெங்கி எனச் சுருங்கிக் கெட்டது.

அன்னை உமையவளுக்கு உண்ணாமுலையம்மை என்ற பெயருண்டு. திருஞான சம்பந்தருக்குப் பொற் கிண்ணத்தில் எடுத்துப் பால் ஊட்டினார் என்பது தொல்கதை.

அண்ணாமலை நாதரின் துணைவியான உண்ணாமுலையம்மையை உண்ணாமலையம்மை ஆக்கிவிட்டார்கள். (விநாயகரோ, முருகப் பெருமானோ தாய்ப்பால் உண்டவர் அல்லர்)

மட்டுவார் குழலி என்பது அம்மையின் திருப்பெயர். மட்டு என்பது  தேன். தேன் பொருந்திய (புத்தம் புதிய) மலர்கள் சூடிய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள். (குழல் - கூந்தல்) எவராவது இப்பெயர் கொண்ட பெண்ணை இப்பெயர் சொல்லி அழைக்கிறார்களா? இல்லை. அடியே மட்டு என்றோ, மட்டு... மட்டுக்குட்டி என்றோதான் அழைக்கிறார்கள். (இந்தப் பெயர் உடையவரும் இப்போது அரிதுதான்)

அவிநாசிலிங்கம் என்பது ஒரு திருப்பெயர்.

அவிநாசி என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள சிவன் என்பது பொருள். இப்பெயரை அவினாசிலிங்கம் என்று ஆக்கிவிட்டவர் பலர். கிருஷ்ணன் (வடசொல்) கிட்னன் ஆனதும் உண்டு. கோபாலன் "கோவாலு' ஆனதும் சரஸ்வதி - சச்சு ஆனதும் நாம் அறிந்தவை. (இவை தமிழ் ஒலித் திரிபுகள் எனக் கொள்ளலாம்)

ஆயத் தீர்வையும் சாயப் பட்டறையும்:

நாம் முன்னர் ஆயகலைகள், தூய தமிழ் என்று ஒற்றுமிகாமல் எழுதிட வேண்டும் என எழுதினோம். அன்பர் ஒருவர் நேரில் வினவினார்: ""ஆயத் தீர்வை, சாயப் பட்டறை என்றெல்லாம் எழுதுகிறோமே இவையும் தவறோ?''

இல்லை, தவறில்லை; சரியானவையே. எப்படி? ஆய கலை தூய தமிழ் இரண்டிலும் அகர ஈறு இருப்பதும், வருமொழியில் வல்லின எழுத்து (க,ச,த,ப) வருவதும் சரிதான். ஆய எனும் சொல்லும், தூய என்னும் சொல்லும் முற்றுப் பெறாதவை. கலைகள், தமிழ் எனும்  பெயர் சொற்களைக் கொண்டு அவை முடிந்தன. அதனால் அவை பெயரெச்சங்கள். பெயரெச்சங்களின் முன் க,ச,த,ப மிகாது.

ஆனால் ஆயம் + தீர்வை - ஆயத்தீர்வை, சாயம்+பட்டறை - சாயப்பட்டறை என்னும் போது ஆயம் என்பதும் சாயம் என்பதும் எச்சச் சொற்கள் அல்ல. பொருளுடைய பெயர்ச் சொற்கள். இவற்றிலுள்ள அம் (ம்) ஈறு கெட்டு வல்லொற்று மிக்கது. ஆதலின் சொற்களைப் பிரித்துப் பார்த்து எது சரி, எது தவறு என அறிய வேண்டும்.

அமுதம் + கண்ணன் - அமுதக் கண்ணன் என்று எழுதிட வேண்டும். அமுத கண்ணன் எனில் பிழையாம்.

சண்முகம் + கண்ணன் - சண்முகக் கண்ணன் என எழுதுக. சரவணன் = தமிழன் - சரவணத் தமிழன் ஆகுமோ? ஆகாது. சரவணம் + தமிழன் எனில் ஆகும். சரவணன்+தமிழன் - சரவணற்றமிழன் என்றாகும். அம் ஈறு (ம்) அன் ஈறு (ன்) கொண்டு புணர்ச்சி விதி மாறுகிறது. அஃதென்ன புணர்ச்சி விதி? அறிவோமா?

புணர்ச்சி என்றால் சேர்ப்பது - சேர்வது எனப் பொருள். ஒரு சொல்லொடு மற்றொரு சொல் சேரும்போது ஏற்படும் தன்மையைப் புணர்ச்சி விதி என்பர். சொற்கள் ஒன்றோடொன்று சேர்வதில் இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என இருவகையுண்டு.

இரண்டு சொற்கள் சேரும்போது எந்த மாற்றமும் ஏற்படாமல் இயல்பாக (அப்படியே) இருப்பின் அது இயல்புப் புணர்ச்சி (எ-டு) தாமரை + மலர் - தாமரை மலர்

கந்தன் + வந்தான் -  கந்தன் வந்தான்

இரண்டு சொற்கள் ஒன்று சேரும்போது மாற்றம் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். தோன்றல், திரிதல், கெடுதல் (நீங்குதல்) என மாற்றங்கள் (விகாரம்) மூன்றாகும். நூலை+ படித்தான் - நூலைப் படித்தான். (ப்- தோன்றல்)

முள்+செடி - முட் செடி (ள், ட் ஆகத் திரிந்தது)

தோட்டம்+வேலை- தோட்ட வேலை (ம் - கெட்டது)

இவை பற்றி விரிவான விதிகள் உள்ளன. அனைத்தும் எழுதினால் இலக்கணப் பாடம் ஆகிவிடும்.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: