06/10/2011

மத நல்லிணக்கம் - க.ச.பெரியநாயகம்

உலகில் தோன்றிய சமயங்கள் எல்லாம் இணக்கமாக வாழ்ந்தால் உலக நலனை எளிதில் பெறலாம். சமயங்கள் தோன்றக் காரணம் மனிதன் மனிதனாக வாழவே. வனத்திலே ஆடையின்றித் திரிந்த மனிதன் மரவுரி தரித்துச் சற்று உயர்ந்தான். பின்னர்ப் பருத்தி, பட்டாடைகளை உடுத்தக் கற்றுக் கொண்டான். மரவுரி தரித்த காலத்லேயே சமய உணர்வு தொடங்கிவிட்டது. நமக்கும் மேல் ஒருவன் உண்டென்பதும் அவனைப் பணிந்து வாழ்வதே நலம் என்றும் உணர்ந்த கூட்டமே சமயிகள் என்று அழைக்கப்பட்டனர்.

சமயங்கள் ஆறு என்றும் அச்சமயங்களுக்குத் தலைவன் ஒருவன் உண்டு என்றும் பெரியோர் கூறிச் சென்றனர். பழைய காலத்துச் சமயங்களைத் தவிர சமண, புத்த மதங்களும் ஓங்கி வளர்ந்தன. தற்காலத்தில் இதன் இடங்களைக் கிறித்துவ, இசுலாமியச் சமயங்கள் பிடித்துக் கொண்டன. எவர் எச்சமயத்தைப் பின்பற்றினாலும் அன்பு, ஈகை, உண்மை, ஆண்மை, அறிவு, ஆற்றல் உடையவராக இருக்க வேண்டும். கொல்லாமை கைக்கொள்ளும் சமயங்களை உலகில் பெரிய சமயங்களாகக் கொள்ளலாம். ''சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம்பொருளை வெளிக்காட்டும் இந்தக் கருத்தை விட்டுப் பொய்வந்துழலும் சமயநெறி புகுத வேண்டாம் முத்திதரும் தெய்வ சபையைக் காணவாரும் செகத்தீரே'' என்ற தாயுமான அடிகள் கூறிச் சென்றார்.

சிவவாக்கியர் என்ற புலவர் ஒரு கிராமத்தில் சொற்பொழிவு செய்கையில் வீணன் ஒருவன் ''கடவுள் இல்லவே இல்லை'' என்று கூக்குரல் இட்டான். அதற்குச் சிவவாக்கியர் ''இறைவர் ஒருவரும் அல்ல பெண்ணும் ஆணும் சேர்ந்த ஒரு அமைப்பே இறைவனாகும்'' என்று பதில் அளித்தார். இறைவன் உண்டென்று கூறுவோரைப் பட்டியல் இட்டால் அறுபத்து மூன்று நாயன்மார்கள், பன்னிரு ஆழ்வார்கள், பன்னிரு அப்போஸ்தலர்கள், முகம்மது நபியின் žடர்கள் முதலியோர் முன்னிற்கின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் வேதவியாசர், வான்மீக பகவன், கவிகாளிதாசர், கவி கம்பர், சேக்கிழார் முதலியோர் ஆன்மீக நெறிக்குத் தலைமை தாங்கிச் சென்றதை இலக்கியங்கள் அறிவிக்கின்றன. ஆனால் இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாட்டில் மழைச் செழிப்பும், நல்லாட்சியும் நடைபெற்றதை நூல்கள் அறிவிக்கின்றன. பக்தி நெறிக்கு அடிப்படை நல்லொழுக்கம் வறுமையின்மையும் ஆகும். அதனால்தான் திருவள்ளுவப் பெருந்தகை, வான் சிறப்பு, ஒழுக்கம் உடைமை என்ற இரு அதிகாரங்களையும் தன்னுடைய நூலில் இணைத்தார். வான் பொழியவில்லையென்றால் விளைவு இல்லை. விளைவு இல்லாவிட்டால் மனிதன் பட்டினிதான். ''பசி வந்திடப் பத்தும் பறந்து விடும்'' என்பது ஒளவையாரின் வாக்கு.

ஆகவே சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என்று கூறப்படும் ஆறு சமயங்களும் ஒற்றுமையுற்றால் தான் மானிடப் பூசல் நீங்கும். மேலும் மக்கள் வாழ்விற்குப் பிணக்கை விட இணக்கமே சிறந்தது. ''நல்லிணக்கம் அல்லது புல்லிணக்கம்'' என்பது மூதுரை. உலகில் எந்த நடிவடிக்கையும் ஒழுக்கம் இல்லாவிட்டால் உயர்வாகாது.

இவ்வொழுக்கத்தை முதன்மையாகக் கூறுபவர் நமது திருவள்ளுவரேயாவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நல்லொழுக்கம் கூறினார் என்றால் அவரை ஏன் நாம் தெய்வப்புலவர் என்று கூறக் கூடாது. தெய்வமாக்கவி என்றே திருவள்ளுவரைக் கபிலர் முதல் பேரறிஞர்கள் வரை புகழ்ந்து கூறியிருப்பதைக் காணலாம். மேலும் தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமான் திருக்குறள் நூலைக் கற்றே சோழ மன்னனின் வினாக்களுக்குச் சரியான விடையைக் கூறி முதல் அமைச்சர் பதவியைப் பெற்றதாக வரலாறு கூறி நிற்கின்றது. மணிமேகலையும், திருக்கைலாய ஞான உலாவும் திருக்குறளை அடிபிறழாமல் அப்படியே கூறியிருப்பதை அறிஞர் யாவரும் காணலாம். இதனைப் பாராட்டாத அறிஞர்கள் தமிழ்நாட்டில் இல்லை.

மேலும் திருவள்ளுவர் தனது நூலின் முதல் அதிகாரத்தில் பத்துப் பாடல்களிலும் இறைக் கருத்தை மிக ஆழமாகவும், மிகத் தெளிவாகவும் கூறியிருப்பதைக் காணலாம். இறைவனைப் போற்றி வாழ்பவர்கள் நீடித்த ஆயுள், இன்பம், புகழ்பெற்று வாழ்வார் என்றும் கூறுகிறார். பிறவிப் பிணியை நீக்கும் அதிகாரம் இறைவர் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லையென்பது வள்ளுவத்தின் முடிவு.

திருக்குறள் கற்றே புலவர் பட்டம் பெற்றோர் உலகில் பலர் உளர். இறைவரை நாம் நிகரில் தலைவன் என்ற அழைப்பதுபோல் திருவள்ளுவரை நிகரில் புலவர் என்று கூறலாம். மேலும் கடைச் சங்கப்புலவர்கள் நாற்பத்து ஒன்பது பேர்களும் திருவள்ளுவரைத் திருவள்ளுவ மாலையில் போற்றியிருப்பதால் திருவள்ளுவரும் சங்க காலப் புலவரேயாவர். மதுரைத் தமிழ் நாகனார் என்ற புலவர் உலகத்திற்குத் துணையாக இருப்பது நால்வகைப் படைகளிலும் திருக்குறளே பெரிய துணை என்று கூறிச் சென்றார். ''வள்ளுவன் குறள் வையகம் எல்லாம் வாரியிறையடா தமிழா'' என்றும் புலவர் ஒருவர் கூறிச் சென்றதை நாம் நினைவில் கொள்ளலாம். ''பால் எல்லாம் நல்லாவின் பாலோமோ நூல் எல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ?''

தற்கால உலகில் கல்வித்திட்டத்தில் எல்லா நாடுகளுமே திருக்குறளைச் சேர்த்தே ஆகவேண்டிய நிலையில் இருக்கின்றன. நல்லொழுக்கத்தைத் திருவள்ளுவர் தனது நூலில் போதித்திருப்பதை அறிஞர் யாவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

மேலும் டாக்டர் போப்பையர் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதையும் அறிஞர்கள் காணலாம். நம்மில் பலரே முழுநூலையும் கற்றிராதபோது டாக்டர் போப்பையர் முழுநூலையும் மொழிபெயர்த்த செயல் அருஞ்செயலேயாகும். ''செயற்கரிய செய்வர் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலாதார்'' என்பது மறை. மறை என்ற சொல் பொருள் மறைவாக இயற்றப்படும் ஒரு கவியைக் குறிக்கும். திருமூலர், சிவவாக்கியர் போன்றோர் இதற்கு ஓர் உதாரணம் ஆவர்.

திருக்குறட்பாக்கள் யாவும் செம்மொழியாக இருப்பதால் தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகள் முற்பட்டே மக்களால் பெரிதும் பேசப்பட்ட விவரம் நமக்குக் கிடைக்கின்றது. திருக்குறள் மக்கள் வழிபாட்டு நூலாகவே பல காலங்கள் வழங்கி வந்ததை நாம் அறிந்து மகிழலாம். மேலும் தமிழ்மொழிப் பயிற்சிக்குத் திருக்குறள் இன்றியமையாத நூலாகத் திகழ்கிறது.

இதைத்தான் திருஞானசம்பந்தர் தனது தேவார நூலில் ''கல்லான் நெஞ்சில், நில்லான் ஈசன், புல்லாரோடு அல்லோ நாமே'' என்று பாடி மகிழ்கிறார். இறைவரைச் சேந்தனார் என்ற புலவர் ''கற்றவர் விழுங்கும் கற்பகக்கனி'' என்று புகழ்கிறார். ''கல்வியின் ஊங்கில்லை சிற்றுயிர்க்கு உற்ற துணை'' என்று குமரகுருபர அடிகள் கூறுகிறார்.

ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்

பாயிரத்தோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்

வாய்கேட்க நூலும் உளவோ மன்னுதமிழ்ப்

புலவராய் கேட்கவீற்றிருக்கலாமே

என்பது திருவள்ளுவ மாலையாகும்.

இத்திருக்குறள் மதநல்லிணக்கத்தையே எடுத்து மொழிகின்றது என்பதை நாம் நன்கறியலாம்.

திரு க.ச. பெரியநாயகம்

தேவநல்லூர் அஞ்சல்

அ.கு.எண். 627 401

நாங்குநேரி வட்டம்

திருநெல்வேலி மாவட்டம்

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கருத்துகள் இல்லை: