21/04/2011

அன்பளிப்பு - கு.அழகிரிசாமி

மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதாமே என்று, இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக் 

கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக் கொள்ளும் போது மணி
இரண்டிருக்கும். எவ்வளவு காலதாமதமாகித் தூங்கப் போனாலும், தூக்கம் வருவதற்கு
மேற்கொண்டு ஒரு அரைமணி நேரமாவது எனக்கு ஆகும். எனவே இரண்டரைக்குத்தான் தூங்க
ஆரம்பித்திருப்பேன். சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, முதுகில் நாலைந்து
கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட,
அவற்றால் ஏற்பட்ட ஓசை  மிகப் பெரியதாக இருந்தது. தூக்கம் கலைந்து கண்
விழிப்பதற்குள், வலதுபுஜத்தில் எறும்பு கடிப்பதுபோல இருந்தது.


“தூங்குமூஞ்சி மாமா!....”


“மணி ஏழரையாகிவிட்டது....”


“எழுந்திருக்கிறீர்களா, பலமாகக் கிள்ளவா”


“முகத்தில் ஜலத்தைக் கொண்டுவந்து தெளித்துவிடுவோம். இன்னும் இரண்டு
நிமிஷத்துக்குள் எழுந்துவிட வேண்டும்”...


இப்படியே பல குரல்கள் பேசிக் கொண்டிருந்தன. பேச்சின் நடுவே இரண்டு அல்லது
மூன்று பேர் சேர்ந்து ‘சிரிடா சிரி’ என்று சிரித்தார்கள். கண்
விழித்துவிட்டேன்.


“யார் அது? உம்! இதோ வருகிறேன். தூக்கத்திலே வந்து....” என்று அதட்டிக்கொண்டே
எழுந்து உட்கார்ந்தேன். ஒரு பையனைத் தவிர, அதாவது சாரங்கராஜனைத் தவிர, மற்ற
எல்லாக் குழந்தைகளும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


”கடிகாரத்தைப் பாருங்கோ மாமா! மணி எட்டு ஆகப் போகிறது! இன்னும் தூங்கு மூஞ்சி
மாதிரி தூங்கிக் கொண்டு....” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் சித்ரா. “அது
இருக்கட்டும், விடிந்ததும் எங்கே இப்படிப் பட்டாள ‘மார்ச்’ பண்ண
ஆரம்பித்துவிட்டது?” என்று கேட்டேன்.


“இரவில் வெகு நேரம் கண் விழித்தால் உடம்புக்குக் கெடுதல் என்று எங்கள் பாடப்
புத்தகத்தில் போட்டிருக்கிறது, மாமா” என்றான், இதுவரையில் மௌனமாக இருந்த
சாரங்கராஜன்.


”நான் படித்த பாடப் புத்தகத்திலும் அப்படித்தான் போட்டிருந்தது! என்ன செய்வது?”
என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் சிறுவன் சாரங்கனிடம் அவ்விதம்
சொல்லாமல், “நாளை முதல் சீக்கிரமாகவே தூங்கி விடுகிறேன். கண் விழிக்கவில்லை”
என்றேன். அவனுக்குப் பரம சந்தோஷம்... அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக்
கொண்டதற்காக..


மறு நிமிஷத்தில், எல்லோருமாகச் சேர்ந்து ஒருமிக்க, “என்ன புத்தகம் கொண்டு
வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.


“ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை!”


“பொய், பொய், சும்மா சொல்கிறீர்கள்!”


”நிஜமாக, ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை”


“நேற்று புத்தகம் கொண்டு வருவதாகச் சொன்னீர்களே!”


“நேற்றுச் சொன்னேன்...”


“அப்புறம் ஏன் கொண்டு வரவில்லை?”


”புத்தகங்கள் ஒன்றும் வரவில்லை. வந்திருந்தால் தான் கொண்டு வந்திருப்பேனே.”


”பிருந்தா! மாமா பொய் சொல்கிறார்; கொண்டு வந்து எங்கேயாவது ஒளித்து
வைத்திருப்பார். வாருங்கள், தேடிப் பார்க்கலாம்” என்றாள் சித்ரா.


அவ்வளவுதான், என்னுடைய அறை முழுவதும் திமிலோகப் பட்டது. ஒரே களேபரம். சித்ரா
மேஜையைத் திறந்து உள்ளே கிடக்கும் பெரிய காகிதங்களையும், துண்டுக்
காகிதங்களையும், கடிதங்களையும் எடுத்து வெளியே எறிந்தாள். துழாவித் துழாவிப்
பார்த்தாள். மேஜையில் புத்தகம் எதுவும் இல்லாது போகவே, அதிலிருந்து
சாவிக்கொத்தை எடுத்துப் பெட்டியைத் திறந்து தேட ஆரம்பித்துவிட்டாள்.


பிருந்தாவும், சுந்தரராஜனும் பீரோவைத் திறந்து புத்தகங்களை எடுத்துக் கண்டபடி
கீழே போட்டார்கள்.


சின்னஞ் சிறு குழந்தையான கீதா கீழே உட்கார்ந்து, இறைந்து கிடக்கும் ஆங்கிலப்
புத்தகங்களை அர்த்தமில்லாமல் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


சித்ரா பெட்டியில் உள்ள சலவைத் துணிகளை எடுத்து வெளியே போட்டாள். என்னுடைய பழைய
டைரிகள், எனக்கு வந்த பழைய கடிதங்கள், இரண்டொரு புத்தகங்கள் - எல்லாம் ஒரே
குப்பையாக வந்து வெளியே விழுந்தன.


பீரோவைச் சோதனை போட்ட பிருந்தாவும் சுந்தரராஜனும் ஜன்னல்களில் அடுக்கியிருந்த
புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட்டார்கள்.


சாரங்கன் ஒருவன் தான் என்னோடு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன்
எப்பொழுதுமே குறும்பு பண்ணமாட்டான்; விளையாட மாட்டான். மற்றக் குழந்தைகள்
எல்லோரும் ஒரு விதம்; அவன் ஒருவிதம். என்னிடத்தில் பயபக்தியோடு நடந்து கொள்ளும்
சிறுவன் அவன் ஒருவன் தான்.


ஜன்னலில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாக வந்து விழும் போது, ஒரே சந்தடியும்
இரைச்சலுமாய்ப் போய் விடவே, சமையற் கட்டிலிருந்து என் தாயார் ஓடிவந்தாள். வந்து
பார்த்தால் எல்லாம் ஒரே கந்தர் கோளமாகக் கிடந்தது.


“என்னடா இது, இந்தக் குழந்தைகள் இப்படி அமர்க்களம் பண்ணுகிறார்கள், நீ பேசாமல்
பார்த்துக் கொண்டிருக்கிறாயே” என்று என்னைப் பார்த்துக் கோபித்துக் கொண்டாள்.


“நீ வீட்டுக்குள் போ அம்மா. இது எங்கள் விவகாரம். நீ எதற்கு வேலையைப்
போட்டுவிட்டு இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாய்?” சொல்லிவிட்டுச்
சிரித்தேன்.


”இவ்வளவு வயதாகியும் இன்னும் குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடிக்
கொண்டிருப்பது ரொம்ப அழகாகத்தான் இருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே அம்மா
உள்ளே போய்விட்டாள். பாதி தூரம் போனதும் அங்கே நின்ற வாக்கிலேயே, “ஏண்டா நீ
எப்போது ஸ்நானம் பண்ணப் போகிறாய்?” என்று இரைந்து கேட்டாள்.


“இரண்டு நிமிஷத்திலேயே வந்து விடுகிறேன்” என்று அம்மாவுக்குப் பதில் குரல்
கொடுத்துவிட்டு இந்தப் பக்கம் திரும்பும்போது, ஜன்னலிலிருந்து பத்துப் பதினாறு
கனமான புத்தகங்கள் ‘தட தட’ வென்று அருவி மாதிரி கீழே விழுந்தன. ஒரு பழைய தமிழ்
அகராதி அட்டை வேறு புத்தகம் வேறாகப் போய் விழுந்தது. குப்புற விழுந்த சில
புத்தகங்கள் மீது சில கனமான புத்தகங்கள் அமுக்கவே கீழே அகப்பட்ட புத்தகங்கள்
வளைந்து, ஒடிந்து, உருக்குலைந்து விட்டன. புத்தகங்கள் ஒரே மொத்தமாகக் கீழே
விழுந்துவிட்டதைக் கண்டு எல்லாக் குழந்தைகளும் பயந்ஹ்டு விட்டார்கள். கீழே
விழுந்து கிடக்கும் புத்தகங்களையும் என்னையும் திரும்பத் திரும்பப்
பார்த்தார்கள். கீழே விழுந்தவை மொத்தம் அறுபது புத்தகங்களாவது இருக்கும்.
குழந்தைகளின் முகத்தில் பயத்தின் சாயல் படர ஆரம்பித்துவிட்டது. நான் என்ன
சொல்லப் போகிறேனோ என்று எதிர்பார்த்துக் கொண்டு கண்ணிமைக்காமல் என் முகத்தையே
பார்த்தார்கள். மற்றக் குழந்தைகளின் பயத்தைப் பார்த்த ஐந்து வயது நிரம்பாத
கீதாவும் பயந்து போய் என்னைப் பார்த்தாள். நான் வேண்டுமென்றே மௌனமாக இருந்தேன்.
புத்தகங்களையும் குழந்தைகளையும் வெறித்த பார்வையோடு பார்த்தேன். மௌனம்
நீடித்தது. ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷம், மூன்று நிமிஷம்... குழந்தைகளுக்கு என்
மௌனம் சித்திரவதையாக இருந்தது. ஒவ்வொரு குழந்தையும் மூச்சுப்
பேச்சிழந்துவிட்டது. சித்ராவின் முகத்தில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது. பயம்
அறியாத சித்ராவே பயந்து விட்டாள். என்னை ஒட்டி உட்கார்ந்து இருந்த சாரங்கன்
நாலு அங்குலம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டான். என்னைத் தொடவே அவனுக்குப் பயமாகி
விட்டது. அவனுடைய சலனத்தால் தூண்டப்பெற்று, “நான் வீட்டுக்குப் போகிறேன்” என்று
கிளம்பிவிட்டாள் பிருந்தா.


”பிருந்தா! இங்கே வா” என்று யாதொரு உணர்ச்சிப் பிரதிபலிப்பும் இல்லாமல்
சொன்னேன்.


நான் சொன்னபடி அவள் உள்ளே வந்தாள். இதற்கு மேல் குழந்தைகளை பயமுறுத்த நான்
விரும்பவில்லை.


எழுந்து நின்றேன். என் அறையின் மற்றொரு ஜன்னல் பக்கம் சென்றேன். அங்குள்ள
புத்தகங்களில் கை வைத்தேன். என் ஒவ்வொரு அசைவையும் குழந்தைகளின் கண்கள் சர்வ
ஜாக்கிரதையுடன் கவனித்துக் கொண்டிருந்தன. புத்தகங்களின் நடுவில் பெரிய
புத்தகங்களுக்குக் கீழே இருந்த பதின்மூன்று கதைப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு
திரும்பினேன். கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டு, “தோற்றுப் போய்விட்டீர்களா?
நீங்கள் தேடு தேடு என்று தேடினீர்களே, புத்தகங்கள் உங்களுக்குத் தட்டுப்பட்டதா?
வாருங்கள், வாருங்கள்” என்று ஒரே உற்சாகத்துடன் சொன்னேன். குழந்தைகளுக்கு உயிர்
வந்துவிட்டது. என்னைப் பார்த்து ஓடோடியும் வந்தன. சாரங்கன் என் பக்கம் நெருங்கி
உட்கார்ந்தான். என் இடது கையில் சாய்ந்தும் உட்கார்ந்து கொண்டான். சித்ராவுக்கு
ஏனோ என் மேல் கோபம் வந்துவிட்டது. வெகுநேரம் மௌனமாக இருந்து அவர்களைப் பயத்தில்
ஆழ்த்தி வைத்ததை எண்ணிக் கோபப் பட்டாளோ? அல்லது தான் பயந்ததற்காக வெட்கப்பட்டு,
தான் பயப்படவில்லை என்பதாகக் காட்டிக்கொள்ளுவதற்கும், அதன் மூலம் வெட்கத்தை
மறைப்பதற்குமாகக் கோபப்பட்டாளோ? ‘விறு விறு’ என்று கட்டிலில் ஏறினாள். எனக்குப்
பின்புறமாக வந்து, “பொய்தானே சொன்னீர்கள், புத்தகங்கள் கொண்டு வரவில்லை என்று?
உம், இனிமேல் பொய் சொல்லாதீர்கள், சொல்லவில்லை என்று சொல்லுங்கள்” என்று
சொல்லிவிட்டு, “சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று எச்சரித்துக் கொண்டே முதுகில்
தன் பலங்கொண்ட மட்டும் அடித்தாள்.


“ஐயோ! ஐயோ! பொய் சொல்லவில்லை. இனிமேல் பொய் சொல்லவில்லை!” என்று வேதனையோடு
சொல்கிறவன் மாதிரி சொன்னேன். குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள்.


சுந்தரராஜன் வந்து, “சாரங்கா, அந்தப் பக்கம் நகர்ந்துக்கடா” என்று சொல்லி
அவனைத் தள்ளிவிட்டு எனக்கும் அவனுக்கும் நடுவில் வந்து உட்கார்ந்தான். என்
கையிலுள்ள அத்தனை புத்தகங்களையும் ‘வெடுக்’கென்று பிடுங்கிக் கொண்டு ‘விறுவிறு’
என்று ஒவ்வொன்றின் பெயரையும் உரக்க வாசித்தான். கடைசிப் புத்தகத்தின் பெயரை
வாசித்ததும் ‘பளிச்’ சென்று எழுந்து “இத்தனையும் எனக்குத்தான்” என்று சொல்லிக்
கொண்டே வெளியே கிளம்பிவிட்டான்.


குழந்தைகள் உடனே அழுவதற்கு ஆயத்தமாகி விட்டன. அப்பொழுது மௌனமாக இருந்தவன்
சாரங்கன்தான்.


“சுந்தர்! இதோ பார். இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஓடினால் அப்புறம்
உனக்குப் புத்தகங்களே கொண்டு வர மாட்டேன்” என்றேன்.


அவன் ‘கடகட’வென்று சிரித்துக் கொண்டே, “பாவம். மாமா பயந்து விட்டார்!” என்று
கூறிக் கொண்டு உள்ளே வந்தான்.


புத்தகங்களை என் கையில் வாங்கி ஏழு புத்தகங்களில், “என் பிரியமுள்ள
சித்ராவுக்கு அன்பளிப்பு” என்று எழுதி என் கையெழுத்தையும் போட்டுச் சித்ராவிடம்
கொடுத்தேன். மீதியுள்ள ஆறு புத்தகங்களிலும், ”என் பிரியமுள்ள சுந்தரராஜனுக்கு
அன்பளிப்பு” என்று எழுதி அவ்விதமாகவே கையெழுத்திட்டுச் சுந்தரராஜனிடம்
கொடுத்தேன்.


பிருந்தாவும் தேவகியும் “எனக்கு?” என்று ஏககாலத்தில் கேட்டனர்.


“சித்ராவிடமும் சுந்தரிடமும் வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள். இதுவரையிலும்
நீங்கள் மற்றப் புத்தகங்களை எப்படி வாங்கிப் படித்தீர்களோ, அப்படியே
இப்பொழுதும் வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள்” என்றேன்.


அந்த இரண்டு பெண்களும் நான் சொன்னதை ஆட்சேபமின்றி ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.


“மத்தியானத்துக்குள் இந்த ஏழு புத்தகங்களையும் படித்து விடுவேன். படித்து
முடித்த பிறகு வருகிறேன், மாமா” என்று கூறிவிட்டுப் புறப்பட்டு விட்டாள்
சித்ரா. அவளைத் தொடர்ந்து, சாரங்கனைத் தவிர எல்லோரும் எழுந்து தத்தம்
வீடுகளுக்குக் கிளம்பினார்கள். சாரங்கன் இரண்டொரு தடவை என் முகத்தையே ஏறிட்டுப்
பார்த்தான். அவன் ஒன்றும் பேசவில்லை. அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்
என்பதை அறிவிக்கும் சலனமும் முகத்தில் இல்லை. அப்பொழுது அவன் அவ்வாறு
பார்த்ததற்கு ஒரு முக்கியத்துவமோ, ஒரு அர்த்தமோ இருந்ததாக நான் கருதவும் இல்லை.
நான் எழுந்து குப்பையாகக் கிடக்கும் புத்தகங்களையும் துணிமணிகளையும் எடுத்து
அவையவை இருக்கவேண்டிய இடத்தில் வைக்க ஆரம்பித்தேன். சுருண்டு நசுங்கிக் கிடந்த
புத்தகங்களை நிமிர்த்துச் சரி பண்ணினேன். அவற்றின்மீது பெரிய புத்தகங்களைப்
பாரமாகத் தூக்கி வைத்தேன். இந்த வேலைகளைச் செய்யும்போது சாரங்கன் நான்
எதிர்பாராமலே எனக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.


“எந்த வகுப்பு பாஸ் பண்ணினால் இந்தப் புத்தகத்தைக் கஷ்டமில்லாமல் படிக்கலாம்?”
என்று ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான் சாரங்கன். அவன்
குரலில், மூச்சைத் திணற வைக்கும் சங்கோஜம் நிறைந்திருந்தது. அது மட்டுமின்ரி,
பயந்தவனைப் போல, முயற்சியில் தோல்வியடைந்து புண்பட்டவனைப் போல, அவன் பேசினான்.


“சாரங்கா! நீ கெட்டிக்காரப் பையன், உன் வயதில் நான் இவ்வளவு கெட்டிக்காரனாக
இருந்ததில்லை. அதனால் நீ எஸ். எஸ். எல். ஸி  வகுப்புக்கு வந்ததும் இந்தப்
புத்தகத்தைச் சிரமமில்லாமல் படித்துப் புரிந்து கொள்ளலாம் என்று பரிவோடு
சொன்னேன்.


அவன் கையில் வைத்துக் கொண்டிருந்தது வால்ட் விட்மனின் கவித் தொகுதி.


"அப்படியானால் இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறது” என்று அவன் தனக்குத்தானே
சொல்லிக் கொண்டான். பிறகு கையிலுள்ள புத்தகத்தை ஜன்னலில் கொண்டு போய்
வைத்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.


என் தாயார் கோபமாக என்னென்னவோ சொல்லிக் கொண்டு அங்கே வந்தாள். “ஏண்டா, நான்
எத்தனை தட்வை உனக்குச் சொல்லுகிறது? வெந்நீர் ஆறி அலர்ந்து ஜில்லிட்டுப்
போய்விட்டது” என்று சொல்லிவிட்டு “இந்தப் பொல்லாத குட்டிகளை இப்படி அமர்க்களம்
பண்ண விடலாமா? என்ன பிரியமோ இது? ஊரார் குழந்தைகளுக்கு இத்தனை சலுகை
காட்டுகிறவர்களை நான் பார்த்ததே இல்லை.... நீ ஸ்நானம் பண்ணப் போடா, நான்
எடுத்து வைக்கிறேன்” என்று வந்தாள் அம்மா.


“அம்மா! உனக்குப் புத்தகங்களை இனம் பிரித்து அடுக்கத் தெரியாது. நீ போ, நான்
ஒரு நிமிஷத்தில் வந்துவிடுகிறேன்.”


”இன்றைக்கு அடுக்கி வைக்கவேண்டியது; நாளைக்கு அவர்கள் வந்து குப்பையாக்க
வேண்டியது; அப்புறம் பழையபடியும் அடுக்கி வைக்க வேண்டியது. உனக்கு வேறு வேலை
என்ன?” என்று சொல்லிவிட்டு அவள் சமையற் கூடத்துக்குச் சென்றுவிட்டாள்.


நானும் வெகு சீக்கிரத்திலேயே ஸ்நானம் பண்ணக் கிளம்பிவிட்டேன். அப்பொழுது
என்னோடு நடுக்கூடம் வரையில் நடந்து வந்தான் சாரங்கன். அப்புறம் பளிச்சென்று மறு
பக்கமாகத் திரும்பி, “போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப்
போய்விட்டான்.


“அம்மா! குழந்தைகளை இப்படிக் கோபித்துக் கொள்ளுகிறாயே! அதுகள் ஒவ்வொன்றும் ஒரு
பொக்கிஷம்!” என்று சொலிவிட்டு ஸ்நான அறைக்குள் சென்றேன். நான் சொன்னது புகை
மூட்டிய அடுப்பங் கரையில் திக்குமுக்காடும் அம்மாவுக்குக் கேட்டதோ என்னவோ?


***


ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷந்தான். மாம்பலத்துக்கு வீடு மாற்றிவந்ததை என்
பாக்கியம் என்றே நான் கருதினேன். இங்கே வந்திராவிட்டால் இந்தப் பொக்கிஷங்களை
நான் சந்தித்திருக்க முடியுமா? இங்கு வந்து நான்கு வருஷங்களாகின்றன. வீட்டில்
நானும் என் தாயாருந்தான். ஒரு பெரிய வீட்டில் ஒரு பகுதியிலே தான் எங்கள்
குடித்தனம். வந்து ஆறு மாதங்களாகும் வரையில் இந்தக் குழந்தைகளின் நட்பு எனக்கு
ஏற்படவே இல்லை. ஒரு நாள் திடீரென்று இரண்டு குழந்தைகள் சுந்தரராஜனும்
சித்ராவும் வந்தார்கள். அன்று வநதது போலவே தினமும் வந்தார்கள். சில
நாட்களுக்குள் சம்பிரதாய மரியாதைகள், நாசூக்குகள் எல்லாம் மறைந்தன. உண்மையான
மனப்பாசம் கொள்ளத் தொடங்கினோம். ஒன்றாக உட்கார்ந்து கதைகள் படிப்பது,
பத்திரிகைகள் வாசிப்பது, கதைகள் சொல்லுவது, செஸ் விளையாடுவது - இப்படிப் பொழுது
போக்கினோம். நான் வேலை செய்யும் பத்திரிகாலயத்துக்கு மதிப்புரைக்கு வரும்
புத்தகங்கள் சிலவற்றாஇ எடுத்து, விமர்சனம் எழுதும்படி தலைமையாசிரியர் என்னிடம்
கொடுப்பார். அப்படி மதிப்புரைக்காக வந்த புத்தகங்கள் என்னிடம் ஏராளமாக இருந்தன.
குழந்தைகளுக்கு அவை நல் விருந்தாக இருந்தன. ஒரே ஆவலோடு ஒரு சில தினங்களுக்குள்
அத்தனை புத்தகங்களையும் சுந்தரராஜனும் சித்ராவும் படித்துத்
தீர்த்துவிட்டார்கள். அவர்களுடைய புத்தகத் தேவையை என் மதிப்புரைப்
புத்தகங்களைக் கொண்டு ஈடு செய்ய முடியவில்லை. இதனால் அவ்வப்போது சில குழந்தைப்
புத்தகங்களை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். அதனால், அவர்கள்
தினந்தோறும் நான் காரியாலயம் போகும்போது, “இன்று ஞாபகமாகப் புத்தகங்கள் கொண்டு
வரவேண்டும்” என்று சொல்லியனுப்புவார்கள். சாயங்காலத்தில் வெறுங்கையோடு வீடு
திரும்பினால் ஒரே கலாட்டாதான்.


சுந்தரராஜனும் சித்ராவும் நான் குடியிருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்
குழந்தைகள்; பணக்காரக் குழந்தைகள். குழந்தை என்று சொன்னாலும் சுந்தரராஜனுக்குப்
பதின்மூன்று வயது; சித்ராவுக்கு ஒன்பது வயது. இந்த இருவரின் புத்திசாலித்தனம்,
களை நிறைந்த தோற்றம்,  எல்லாவற்றையும் விடச் சீரிய மனப்பாங்கு - எல்லாம்
சேர்ந்து என்னை வசீகரித்தன; என்னை ஆட்கொண்டு விட்டன. அவர்கள் மேல் நான்
வைத்திருந்த அன்பு இம்மட்டு அம்மட்டு என்றில்லை. தினந்தோறும் அவர்களுக்குப்
புதியதொரு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்றெல்லாம் என் மனம் துடித்துக்
கொண்டிருக்கும். இவர்களுடைய நட்பு தொடங்கி சில வாரங்கள் ஆவதற்குள்ளாக மற்றக்
குழந்தைகளின் பரிச்சயமும் எனக்கு ஏற்பட்டது. பிருந்தா, தேவகி, கீதா,
சாரங்கராஜன் ஆகியவர்களும் வர ஆரம்பித்தார்கள். பிருந்தாவும் தேவகியும்
சித்ராவுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சமவயதுக் குழந்தைகள். கீதா, தேவகியின்
தங்கை. சாரங்கராஜன் சுந்தரராஜனுடைய பள்ளித் தோழன். எல்லோருடைய வீடுகளும்
ஒன்றையடுத்து ஒன்றாக இருந்தன. இவர்களில் சாரங்கனுடைய வீட்டார் தான் வாடகை
வீட்டில் குடியிருப்பவர்கள். மற்றக் குழந்தைகள் சொந்த வீடு உள்ள பணக்காரக்
குழந்தைகள்.


எல்லோரிடத்திலும் நான் ஒன்று போலவே அன்பாக இருந்தேன். சுந்தரராஜனும் சித்ராவும்
எனக்கு முதலில் பரிச்சயமானவர்கள் என்பதற்காகவோ என்னவோ அவர்களிடத்தில் எனக்கு
ஒரு அலாதிப் பிரியம் இருந்தது. ஆனால் வெளிப்படையான பேச்சிலும் நடவடிக்கைகளிலும்
ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் நான் வித்தியாசம் காட்டி நடந்து
கொள்ளவில்லை. உள்ளன்பிலும் வேற்றுமை காட்டவில்லை. முன்னால் சொன்னதுபோல ஏதோ ஒரு
அலாதிப் பிரியம் சித்ராவிடமும் அவளது அண்ணனிடமும் ஏற்பட்டிருந்தது. ஆனால்
குழந்தைகளோ என்னை ஒரே மாதிரி நேசித்தன. அவர்களுடைய பிரியத்தில் வேற்றுமை இல்லை.
ஒவ்வொரு குழந்தையும் தனக்காகவே இந்த உலகத்தில் பிறந்த நண்பன் என்று என்னை
நினைத்தது. ஒவ்வொன்றும் ஒரு மகத்தான நம்பிக்கையாக, ஒரு பெரிய ஆறுதலாக, ஒரு நல்ல
வழிகாட்டியாக என்னைக் கருதியது. எந்த விதத்திலும் தனக்குச் சமதையான ஜீவன் என்று
என்னைக் கருதியது. குழந்தைகள் என்னைப் பெரிய மனித பீடத்தில் தூக்கி வைக்காமல்,
நட்பு முறையில் கைகோத்துக் கொள்ள வந்தார்கள். இவர்கள் என்னோடு விளையாடினார்கள்;
என்னோடு சண்டை போட்டார்கள்; என்னை அடித்தார்கள்; என்னைக் கண்டித்தார்கள்; என்னை
மன்னித்தார்கள்; என்னை நேசித்தார்கள்.


உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும், அல்லது
விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு
விளையாட்டுணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப்
பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி
அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத
குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டுணர்ச்சி
கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு
என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக்
குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன்.
உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம்.
மாம்பலத்தில் எனக்கு இவர்கள்தான் நண்பர்கள். குழந்தைகளுடன் இம்மாதிரிப்
பழகுவதும் இம்மாதிரி விளையாடுவதும் அம்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
ஐம்பது வயதுத் தாயாருக்குத் தன் மகனை மனைவி மக்களுடன் குடித்தனம் செய்யும்
தகப்பனாகக் காணத்தான் பிடிக்குமே தவிர, குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிக்
கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருப்பதைக் காணப் பிடிக்குமா?


பதின்மூன்று புத்தகங்களை எடுத்துக் கொடுத்த அந்தத் தினம், அந்த ஞாயிற்றுக்கிழமை
கழிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். பிருந்தா ஜுரத்தோடு படுத்துவிட்டாள்.
அவளுடைய பெற்றோர்களை எனக்கு நேரில் தெரியாது. அதனால் அவளைப்
போய்ப்பார்த்துவிட்டு வர எனக்கு சங்கோஜமாக இருந்தது. ஆனால் மற்றக்
குழந்தைகளிடத்தில், “பிருந்தாவின் உடம்பு எப்படி இருக்கிறது?” என்று தினமும்
விசாரித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் அதற்கு எப்படிப் பதில் சொல்லும்!
ஜுரம் அதிகமாக இருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்று அவர்களுக்குச் சொல்லத்
தெரியவில்லை. “பிருந்தா எப்போது பார்த்தாலும் படுத்துக் கொண்டே இருக்கிறாள்”
என்று மட்டும் தெரிவித்தார்கள்.


ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும். வீட்டு முற்றத்தில் ஈஸிச்சேரைப் போட்டுக்
காற்றாட நிலா வெளிச்சத்தில் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது தெரு வழியாகப்
போய்க் கொண்டிருந்த பிருந்தாவின் வீட்டு வேலைக்காரனை அழைத்து, “பிருந்தாவின்
உடம்பு எப்படி இருக்கிறது? ஜுரம் குறைந்திருக்கிறதா” என்று கேட்டேன்.


”இல்லை ஸார், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. எதுவும்
சாப்பிடுவதில்லை. இந்த நான்கு நாட்களில் குழந்தை துரும்பாக மெலிந்து
போய்விட்டது. தூக்கத்தில் உங்களை நினைத்துத்தான் என்னென்னவோ புலம்பிக்
கொண்டிருக்கிறாள்” என்றான் வேலைக்காரன்.


”என்னை நினைத்துப் புலம்புகிறாளா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.


“ஆமாம் ஸார். நேற்று ராத்திரிகூட ‘மாமா புத்தகம்’, ‘மாமா புத்தகம்’ என்று
என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள்” என்றான்.


எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இந்த குழந்தையைப் போய்ப் பார்க்காமல்
இருந்ததற்காக மிகவும் வருத்தப்பட்டேன். என் சங்கோஜத்தை மூட்டை கட்டி வைத்து
விட்டு மறுநாள் காலையில் அவசியம் போய்ப் பார்த்து விட்டு வரவேண்டுமென்று
தீர்மானம் செய்து கொண்டேன். “போய்வா” என்று வேலைக்காரனை அனுப்பிவிட்டு,
தனியாகப் படுத்து என்னென்னவோ யோசித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில்
என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது.
அவ்வளவுதான், உடனே எழுந்து வீட்டுக்குள்போய் சட்டையை மாட்டிக் கொண்டு ‘விறு
விறு’ என்று பிருந்தாவின் வீட்டுக்குச் சென்றேன். அவளுடைய பெற்றோர்கள் என்னை
உள்ளே வரும்படி சொன்னார்கள். பிருந்தா படுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப்
பக்கத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். அவள் கண்களை வெறுமனே
மூடிக் கொண்டிருந்தாள்.


”பிருந்தா!” என்றேன்.


கண் விழித்து என்னைப் பார்த்தாள். அப்போது அவளுடைய முகத்தில் யாதொரு மாறுதலும்
ஏற்படவில்லை. அப்புறம் ஒருமுறை கண்களை மூடித் திறந்து என்னை நன்றாக உற்றுப்
பார்த்தாள். ஒரு நிமிஷம் இப்படியே பார்த்துவிட்டு, திடீரென்று ‘மாமா!’ என்று
உரக்கக் கூவினாள்; அப்படியே எழுந்து உட்கார்ந்து விட்டாள்.


“பிருந்தா! படுத்துக்கொள் அம்மா” என்று சொன்னேன்.


அவள் கேட்கவில்லை. எழுந்து என் பக்கம் வந்தாள். என்னைக் கட்டிக் கொண்டு, என்
தோள் மீது முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவளுடைய உ டம்பு அனலாகச் சுட்டது.
அவளைத் தட்டிக்கொடுத்து, படுக்கையில் கொண்டு போய்ப் படுக்க வைத்தேன்.


“எந்நேரமும் உங்கள் நினைப்புத்தான்” என்றாள் பிருந்தாவின் தாயார்.


என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. வாய் அடைத்துவிட்டது. மௌனமாக உட்கார்ந்து
கொண்டிருந்தேன். சுமார் ஒரு மணி நேரம் அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்து
விட்டு, வீட்டுக்கு வருவதற்காகப் புறப்பட்டு விட்டேன்.


”போகவேண்டாம் இங்கேயே இருங்கள் மாமா!” என்று பிடிவாதம் பிடித்தாள், பிருந்தா.
அப்புறம் அவளைப் பலவிதமாகச் சமாதானப்படுத்தி, “நாளைக் காலையில் வருகிறேன்”
என்று சொல்லிவிட்டு வந்தேன்.


அவ்விதமே மறுநாள் காலையில் சென்றேன். வெகு நேரம் அங்கேயே இருந்தேன். அவள்
ஜுரத்தினால் கஷ்டப்படுகிறவள் மாதிரியே இல்லை. என்னோரு பேசிக்கொண்டு தான்
இருந்தாள். ஆபிசுக்கு நேரமாகி விட்டதென்று அவளிடம் கூறிவிட்டு வெளியே எழுந்து
வந்தேன். தெருவோடு வந்து கொண்டிருக்கும்போது சாரங்கன் தன் வீட்டு ஜன்னல் வழியாக
என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த வாக்கிலேயே, “மாமா” என்று
கூபிட்டான். நான் திரும்பிப் பார்ப்பதற்குள்ளாகத் தெருவுக்கு ஓடி வந்து
விட்டான்.


”எங்கள் வீட்டுக்கும் வாருங்கள்” என்று கையைப் பிடித்து இழுத்தான்.


“உங்கள் வீட்டிற்கு எதற்கு?”


”பிருந்தா வீட்டுக்கு மட்டும்...”


“பிருந்தாவுக்கு ஜுரம். அதனால் போய்ப் பார்த்து விட்டு வந்தேன்.”


“ஊஹூம், எங்கள் வீட்டுக்கும் வரவேண்டும். ஆமாம்.”


“சாரங்கா! இன்னொரு நாளைக்கு வருகிறேன். கையைவிடு. எனக்கு ஆபிசுக்கு நேரமாகி
விட்டது.”


நான் சொன்னபடியே கையை விட்டுவிட்டான். தன் இடது கையில் வைத்திருந்த இரண்டு
நெல்லிக் காய்களில் ஒன்றை எடுத்து “இந்தாருங்கள்” என்று எனக்குக் கொடுத்தான்.
நான் சிரித்து விட்டேன். “வேண்டாம், நீயே வைத்துக்கொள்” என்றேன். அவனோ
கட்டாயப்படுத்தி என்னிடம் கொடுத்தான். நான் என்ன சொல்லியும் கேட்கவில்லை. அந்த
நெல்லிக்காயை வாங்கிக் கொள்ளாவிட்டால் அவன் என் சிநேகிதத்தையே உதறித் தள்ளி
விடுவான் போல் இருந்தது. அதனால் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டேன். அவனுக்கு
அப்பொழுது சொல்ல முடியாத ஆனந்தம்.


நான் புறப்படும்போது, “எப்போது எங்கள் வீட்டுக்கு வருவீர்கள்?” என்று
கேட்டுக்கொண்டே என்னைத் தொடர்ந்து நடந்து வந்தான்.


“அடுத்த ஞாயிற்றுக்கிழமை” என்று பேச்சுக்குச் சொல்லி வைத்தேன்.


“கட்டாயம் வர வேண்டும்”


“சரி”


அவன் வீட்டுக்குப் போய்விட்டான்.


அதற்குப் பிறகு நான் பிருந்தாவின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம்
”ஞாயிற்றுக்கிழமை வர வேண்டும்; கட்டாயம் வர வேண்டும்” என்று எனக்கு
ஞாபகமூட்டிக் கொண்டே இருந்தான்.


பிருந்தாவுக்கு மூன்று நாட்களில் ஜுரம் குணமாகி விட்டது ஓர் ஆச்சரியமாகவே
இருந்தது. நான் தினமும் அவள் வீட்டுக்குப் போய் வந்தது தான் அவளுக்கு மருந்தாக
இருந்தது என்று அவளுடைய தகப்பனார் என்னிடம் கூறினார். நான் போய் வந்ததன்
காரணமாக ஒரு குழந்தையின் நோய் குணமாகிவிட்டது என்று அவர் சொன்னதைக் கேட்க
எனக்கு எப்படியோ இருந்தது.  “எப்படியாவது உடம்பு குணமாயிற்றே, அது போதும்”
என்றேன். அப்புறம், அவர் சொன்னது ஒரு வேளை உண்மையாக இருக்கலாமோ என்றுகூட
எனக்குத் தோன்றியது.


சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு விடுமுறை. பிருந்தா உட்பட எல்லாக் குழந்தைகளும்
என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். புது வருஷம் பிறந்து இரண்டு மூன்று தினங்களே
ஆகியிருந்தன. நான் வாக்களித்தபடி சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் இரண்டு
டைரிகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். அவற்றில் வழக்கம் போல “அன்பளிப்பு”
என்று எழுதி அந்த இருவர் கையிலும் கொடுத்தேன். மற்றக் குழந்தைகள் தமக்கு டைரி
வேண்டுமென்று என்னிடம் கேட்கவில்லை. நான் எத்தனை புத்தகங்கள் கொண்டு வந்தாலும்,
என்ன பரிசு கொடுத்தாலும் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் தான் கொடுப்பேன்
என்று ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவர்கள் இருவர்தான் இப்படிப்பட்ட
அன்பளிப்புக்குத் தகுதியானவர்கள், அவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம் என்று
எல்லாக் குழந்தைகளும் ஒப்புக்கொண்ட பாவனையில் பேசாமல் இருந்தன. முதல் நட்பு
என்ற காரணத்தினால்தானோ என்னவோ, ஒரு அலாதிப் பிரியத்துடன் அவர்களுக்கு மட்டும்
நான் புத்தகங்களைக் கொடுப்பது வழக்கமாகி விட்டது. இந்த நெடுநாளைய வழக்கம்
மற்றக் குழந்தைகளுக்குப் பழகியும் போய்விட்டது.


டைரிகளை வாங்கிக்கொண்டு அந்த இருவரும் சாப்பிடப் போய் விட்டார்கள். அவர்கள்
போனபிறகு மற்றவர்களும் புறப்பட்டார்கள். ஆனால் அன்று சாரங்கன் மட்டும்
போகவில்லை. எல்லோரும் போன பிறகும் கூட அவன் உட்கார்ந்து கொண்டுதான் இருந்தான்.
என்னிடத்தில் அந்தரங்கமாக, “மாமா! நாளைக்கு எங்கள் வீட்டுக்கு வருவீர்களா?
நாளைக்குத்தான் ஞாயிற்றுக்கிழமை” என்றான்.


”சரி சாரங்கா, எத்தனை தடவை சொல்லுகிறது? ஒரு தடவை சொன்னால் ஞாபகமிருக்காதா?”
என்றேன்.


அவன் எழுந்து, வால்ட் விட்மனின் கவித் தொகுதியைக் கையில் எடுத்தான்.


“இந்தப் புத்தகத்தை எனக்குத் தருவீர்களா?” என்று கெஞ்சுதலாகக் கேட்டான். எனக்கு
அது வேடிக்கையாக இருந்தது. சிரித்துக் கொண்டே, “இந்தப் புத்தகம் உனக்கு எதற்கு?
அது உனக்கு இப்பொழுது புரியாது. நான் அன்றைக்கே சொல்லவில்லையா? நீ
எஸ்.எஸ்.எல்.ஸி வகுப்புக்கு வந்ததும் கேள்; தருகிறேன்” என்றேன்.


நான் சொன்னதை அவன் கேட்கவில்லை. பதின்மூன்று வயதுப் பையன் ஐந்து வயதுக்
குழந்தையைப் போல முரண்டு பண்ணிக்கொண்டு, அந்தப் புத்தகத்தை அவசியம் கொடுத்தாக
வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.


”சாரங்கா! உனக்குப் புரியாது. சொன்னால் கேள்” என்று சொன்னேன். அப்புறம் அவன்
கையிலிருந்து புத்தகத்தை வாங்கி ஜன்னலில் கொண்டு போய் வைத்தேன்.


சாரங்கனின் முகம் ஏமாற்றத்தினால் வெளிறிப்போய் விட்டது. வறண்ட பார்வையோடு
என்னைப் பார்த்தான். ஒன்றுமே சொல்லாமல் எழுந்து வாசல் பக்கம் போனான். சரி,
வீட்டுக்குப் போகிறான் என்று நினைத்து, நான் என் வேலையைக் கவனிக்கலானேன்.
இரண்டு நிமிஷ நேரத்துக்குப் பிறகு, திடீரென்று ஒரு அழுகைக் குரல் கேட்டது.
அழுதது சாரங்கன்தான். “சாரங்கா! ஏன் அழுகிறாய்? சேச்சே, அழாதே ராஜா” என்று
சொல்லிக்கொண்டே அவன் பக்கத்தில் எழுந்து சென்றேன். ஆனால், நான் போகும் வரையில்
அவன் அங்கே நிற்கவில்லை, அழுகையை நிறுத்தினான். என்னைத் திரும்பிப் பார்த்துப்
பெருமூச்சு விட்டான். அவனுடைய வயிறு அசாதாரணமாக குழிந்து புடைத்தது. அப்பொழுது
முகம் ரத்தம் போலச் சிவந்துவிட்டது. இதெல்லாம் எதற்கென்றே எனக்குப்
புரியவில்லை. அவன் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தேன். என்னைப் பார்க்கவே
அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. நான் போய் கையை எட்டிப் பிடிப்பதற்குள் ஒரே
ஓட்டமாக ஓடிவிட்டான்.


“சாரங்கா!.... சாரங்கா!”


அவன் ஓடியே விட்டான். அன்று அவன் நடந்து கொண்ட விதம் எனக்கு ஒரு புதிராக
இருந்தது. எப்பொழுதும் அவன் பிடிவாதம் பண்ணமாட்டான். என்னிடத்தில் பேசுவதற்கே
கூசுவான். அப்படிப்பட்ட பையன் எதற்காகப் பிடிவாதம் பிடித்தான்? எதற்காக அப்படி
அழுதான்? எதற்காகத்தான் அழுதானோ? அவனைப் பின் தொடர்ந்து சென்று, அழுத
காரணத்தைக் கேட்காவிட்டால் என் நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. ஆனால்,
அவன் வீட்டுக்குப் போகவும் என்னால் இயலவில்லை. அவனுடைய பெற்றோர்கள், பிற
பெற்றோர்களைப் போலவே எனக்குப் பரிச்சயமில்லாதவர்கள்.


பாவம்! ஏங்கி ஏங்கி அழுதான், அவமானப்பட்டவன் போல் அழுதான். பிற்பகலில்
குழந்தைகள் என் அறைக்கு வந்தால், அவர்களை அனுப்பி அவனை அழைத்துவர வேண்டுமென்று
தீர்மானித்தேன். மூன்று மணிக்கெல்லாம் முதல் ஆளாக சுந்தரராஜன் வந்து
சேர்ந்தான். அவனைச் சாரங்கனிடம் அனுப்பி வைத்தேன். சாரங்கன் தூங்கிக்
கொண்டிருப்பதாக சுந்தரராஜன் என்னிடம் வந்து தெரிவித்தான். அதற்குப் பிறகு அவனை
வரவழைக்கும் முயற்சியை நிறுத்தினேன். மறுநாள் காலையில் அவன் வந்தால்
பார்க்கிறது. இல்லையென்றால் நானே அவன் வீட்டுக்குப் போவது இதே தீர்மானத்துடன்
மற்றக் குழந்தைகளுடன் அன்றைய மாலைப் பொழுதைப் போக்கினேன்.


இரவில் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்ட பிறகு தான் என் மனம் மிகமிகக்
கஷ்டப்பட்டது. பக்கத்தில் யாருமில்லாத அந்தத் தனிமையில் மனத்துயரம் பெரிதாகிக்
கொண்டே இருந்தது. உள்ளத்தில் எத்தனையோ துயரம் படிந்த சிந்தனைகள்; ‘ஏன் அழுதான்?
நான் அவனை ஒன்றும் சொல்லவில்லையே! எல்லாக் குழந்தைகளையும் போலவே அவனையும் என்
கண்ணுக்குக் கண்ணாக வைத்துக் கொண்டிருக்கிறேன். வால்ட் விட்மன் கவித்
தொகுதியைக் கேட்டான், அது அவனுக்குப் புரியாது என்று வாங்கி வைத்துவிட்டேன்,
இதற்காகவா அவன் அழுதிருப்பான்? அவன் விபரம் தெரிந்த பையன். எப்போதும் நான்
சொல்வதை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்பவன். அப்படிப்பட்ட பையன் புத்தகத்தை நான்
திருப்பி வாங்கிக்கொண்டதற்காக இப்படி அழுதிருக்க முடியாது. நான் திரும்பி
வாங்கிக் கொண்ட காரியம், விம்மிவிம்மி அழத்தக்க மன வேதனையைத் தர நியாயமில்லை!
சாரங்கா! எதற்காக அழுதாய்? எதற்காக அழுதாயடா”


ஞாயிற்றுக் கிழமை.


நேற்று பிற்பகலில் அவன் வராமல் இருந்து விட்டதால் இன்றும் வரமாட்டான் என்றே
எண்ணியிருந்தேன். சப்தரிஷி மண்டலம் போன்ற எங்கள் கூட்டத்தில் இந்த ஒரு
நக்ஷத்திரம் மறைந்து நிற்பதை மற்றக் குழந்தைகள் பொருட்படுத்தவில்லை. அத்துடன்
அவர்கள் கவலைப்படுவதற்கும் இங்கே என்ன இருக்கிறது? ஒருநாள் பிற்பகலில் அவன்
வராமல் இருந்தது அவர்களுக்கு ஒரு பிரிவாகத் தோன்ற நியாயமில்லை. எனக்கும் மற்றச்
சமயங்களில் இது கவனத்தைக் கவரத்தக்க விஷயமாக இல்லாமல், சகஜமான காரியமாக
இருந்திருக்கும். ஆனால், அவன் நேற்று எந்த நிலையில் என்னைப் பிரிந்து சென்றான்.
எந்த நிலையில் என்னை விட்டுவிட்டுச் சென்றான் என்ற விபரங்கள் எனக்கல்லவா
தெரியும்?


காலை பத்து மணி இருக்கும். ஞாயிற்றுக்கிழமையானதால் சாப்பாட்டைப் பகல் ஒரு
மணிக்கு ஒத்திப் போட்டுவிட்டு, காலையில் பலகாரம் பண்ணி நானும் என் தாயாரும்
சாப்பிட்டோம். அப்புறம் நான் என் அறைக்கு வந்து ஏதாவது படிக்கலாம் என்று
உட்கார்ந்தேன். மனம் என்னவோ அந்த வால்ட் விட்மனின் கவித் தொகுதியைத் தான்
படிக்க விரும்பியது. அதைக் கையில் எடுத்து விரித்ததும் என் கண்களுக்குக் கவிதா
வாசகங்கள் தென்படவில்லை; சாரங்கன் தான் காட்சியளித்தான்; அவனுடைய கண்ணீரும்
ஏக்கமும்தான் காட்சியளித்தன. இது சோதனையாக இருக்கிறதே! அவனாவது இங்கு
வரக்கூடாதா? அல்லது வேறு குழந்தைகளாவது வரக் கூடாதா என்று மறுகிக்கொண்டு
கிடந்தேன்.


சிறிது நேரத்திற்குப் பிறகு பிருந்தா வந்தாள். பாக்கிய தேவதை என ஒரு தெய்வ மகள்
உண்மையிலேயே இருந்து, ஒரு தரித்திரனின் வீட்டில் அடியெடுத்து வைத்தது போல
இருந்தது பிருந்தாவின் வரவு.


”வா பிருந்தா! பிருந்தா என்ற பெயரை மாற்றி ‘பிரியதர்சினி’ என்று பெயர் வைத்தால்
உனக்குப் பொருத்தமாக இருக்கும் பிருந்தா!” என்றேன்.


என் பரவசம் அவள் உள்ளத்தைத் தொடவில்லை. என் சொற்கள் அவள் செவிக்கு எட்டவும்
இல்லை.


”சுந்தரராஜனும் சித்ராவும் சினிமாவுக்குப் போய் விட்டார்கள்” என்று காரண
காரியமில்லாமல் சொன்னாள் பிருந்தா.


“சாரங்கன்?” என்று ஆவலோடு கேட்டேன்.


”நான் பார்க்கவில்லை” என்று சொல்லிவிட்டாள்.


மேற்கொண்டு நான் சாரங்கனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கும்போது, பிருந்தாவின்
வீட்டு வேலைக்காரன் வந்து, “அம்மா கூப்பிடுகிறார்கள்” என்று சொல்லி அவளை
அழைத்தான். பிருந்தா உடனே, “போய் வருகிறேன்” என்று சொல்லிக் கிளம்பிவிட்டாள்.
அவள் போன பிறகு பழையபடியும் அந்தக் கவித் தொகுதியை எடுத்து விரித்தேன். அப்போது
பிருந்தா வெகுவேகமாக ஓடிவந்தாள். வந்து, “சாரங்கன் வருகிறான்” என்று
சொல்லிவிட்டு அந்த க்ஷணத்திலேயே தன் வீட்டை நோக்கி ஓடிவிட்டாள்.


என் இதயம் ‘படபட’வென்று அடித்துக்கொண்டது. அதிவேகமாக வால்ட் விட்மனின்
புத்தகத்தை மறைத்து வைத்து விட்டேன். அதைப் பார்த்தால் சாரங்கனுக்குப்
பழையபடியும் அழுகை வந்துவிடுமோ என்று எனக்குப் பயம்.


சாரங்கன் வந்துவிட்டான்.


“சாரங்கா....”


“உம்.”


“ஏன் நீ இவ்வளவு நேர வரையிலும் வரவில்லை? நேற்றும் வரவில்லை?”


அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை, அவன் முகத்தில் துயரமோ, வேறு விதமான ஆழ்ந்த
உணர்ச்சிகளோ பிரதிபலிக்கவில்லை. ஒரே சந்தோஷமாகத்தான் இருந்தான். இது
மகிழ்ச்சிக்குரிய மாறுதல்தான் என்று நான் நினைத்துக் கொண்டேன்.


“எங்கள் வீட்டுக்குப் போவோமா?”


”உங்கள் வீட்டுக்கா?”


“ஆம். நீங்கள் வருவதாக அன்றே சொல்ல வில்லையா?”


“சும்மா வேடிக்கைக்குச் சொன்னேன், சாரங்கா! உங்கள் வீட்டுக்கு எதற்கு?”


“எதற்கோ? நீங்கள் வாருங்கள்” என்று இரண்டு கைகளாலும் என் கையைப் பிடித்து
இழுத்தான்.


அவனுடைய வேண்டுகோள் எனக்கு ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. அன்று பிருந்தாவின்
வீட்டிலிருந்து வரும்போது அவனுடைய கட்டாயத்தைப் பார்த்து, “ஞாயிற்றுக்கிழமை
வருகிறேன்” என்று சொல்லி வைத்தேன். அந்த விஷயத்தை அவன் இவ்வளவு தூரம்
வற்புறுத்துவான் என்று தெரிந்திருந்தால் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன்.
இந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்காக வேற்றார் வீட்டுக்குப் போவது எப்படி?
போவதற்குக் காரணமும் வேண்டுமே! பிருந்தா வீட்டுக்குப் போனதற்காவது அவளுடைய தேக
சௌக்கியம் காரணமாக இருந்தது. இங்கே போவது எதற்காக? இவனுடைய அப்பாவை வீதியிலும்
பஸ் ஸ்டாண்டிலும் ஆயிரம் தடவைகள் பார்த்திருக்கிறேன். ஒரு தடவைகூட நாங்கள்
பேசிக் கொண்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்று எவ்வித சைகை
ஜாடையின் மூலமாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை. அப்படியிருக்க அங்கு நான்
எப்படிப் போவது?


சாரங்கன் மிகவும் அதிகமாக வற்புறுத்தத் தொடங்கினான். அவசரப்படவும்
ஆரம்பித்தான். எனக்கு அது ஒரு தொந்தரவாகவே ஆகிவிட்டது. ’இத்தனை நாளும் இவன்
வாய்மூடி மௌனியாக இருந்தது போதும், இன்று பாடாய்ப் படுத்துவதும் போதும்’ என்று
சலித்துக் கொண்டேன்.


“வாருங்கள் மாமா. சொல்லிவிட்டு மாட்டேன் என்கிறீர்களே?” என்று கெஞ்சினான்.


“சாரங்கா! நீ சிறு பிள்ளை. உன் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான் வருவது எப்படி?
இந்த நாசூக்கு எல்லாம் உனக்குப் புரியாது. என்னை விட்டுவிடு” என்று
பொறுமையிழந்து சொன்னேன்.


“ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள்?” என்று என் முகத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு
ஏக்கத்துடன் கேட்டான்.


“அங்கே எதற்கு?”


“அதென்னமோ, கட்டாயம் வரத்தான் வேண்டும்.”


நான் கோபப்பட்டவன் போல் நடித்து, “என்னால் வரமுடியாது. எனக்கு அவசரமான வேலை
இருக்கிறது. இன்னொரு நாளைக்கு வேண்டுமானால் பார்த்துக் கொள்வோம்” என்று
சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டேன். ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடுபவன்போல்
மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தேன்.


சாரங்கன் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.


ஒரு நிமிஷம் கழிந்திருக்கும். அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். நான்
பார்த்த மாத்திரத்தில் அவனும் ஒரு முறை பெருமூச்சு விட்டுக்கொண்டு
“வரமாட்டீர்களா” என்று தடுமாறும் குரலில் கேட்டான்.


அவனுடைய இந்தக் கடைசி முயற்சியைத் தகர்த்து விட்டால், பழையபடியும் அழ
ஆரம்பித்து விடுவான் என்பதற்குரிய அடையாளம் அவன் முகத்தில் தென்பட்டது.
சாரங்கனைத் திரும்பத் திரும்ப அழ வைத்துப் பார்க்க எனக்கு இஷ்டமில்லை. ‘தங்கமான
பையனை ஏன் இப்படிக் கஷ்டத்துக்கு ஆளாக்க வேண்டும்? போய்விட்டுத் தான் வருவோமே!
நம்மை வரவேண்டாமென்றா சொல்லப் போகிறார்கள்? அப்படியிருக்க ஒரு முறை போய்
வருவதில் என்ன நஷ்டம்?” என்று அதிசீக்கிரமாக யோசித்து முடிவு கட்டினேன். அவன்
கண்ணீர் சொரிவதற்குள் என் சம்மதத்தை தெரிவித்துவிட்டேன்.


“சாரங்கா! வா! உன் வீட்டுக்கே போகலாம்”


இருவரும் கைகோத்துக்கொண்டே சென்றோம். அவன் வீட்டுக்கு முன்னால் போனதும், என்
கையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே வேகமாக ஓடினான். அப்புறம் வெளியில் வந்து
வாசல் பக்கத்திலுள்ள அறையைத் திறந்து, “வாருங்கள், வாருங்கள்” என்று படபடப்பாக
இரைந்து சொன்னான். என்னுடைய தயக்கத்தையும், என்னுடைய சங்கோஜத்தையும் அளவிட்டுச்
சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் அந்த அறைக்குள் சென்றேன். அறையின்
சூழ்நிலையைக் கொண்டே சாரங்கனின் பெற்றோர்கள் ஏழைகள் என்று எளிதில் தீர்மானிக்க
முடிந்தது. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் கிடந்த அவனுடைய
சரித்திரப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். சாரங்கன்
வீட்டுக்குள்ளே ஓடிவிட்டான். அப்போது வெளியிலிருந்து வந்த அவனுடைய தகப்பனார்,
அறைக்குள் எட்டிப் பார்த்தார். என்னைப் பார்த்து “வாருங்கள்” என்று
சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார். “என்ன விசேஷம்?” என்று என்னை அவர்
விசாரிக்காமல் விட்டது எனக்கு ராஜமரியாதை செய்தது போல் இருந்தது.


சாரங்கன் திரும்பி வரும்போது, ஒரு தட்டில் உப்புமாவும், ஒரு டம்ளரில் காபியுமாக
வந்து சேர்ந்தான். நான் திடுக்கிட்டு விட்டேன்; என் சுவாசம் அப்படியே நின்று
விட்டது.


“ஐயோ! இதெல்லாம் எதற்கு? நான் இப்போதுதானே சாப்பிட்டேன்?”


சந்தோஷப் படபடப்பில் ஒன்றுமே சொல்லாமல் வந்து அவன் என் வலது கையைப் பிடித்து
இழுத்து உப்புமாத்தட்டில் கொண்டு போய் வைத்தான். சாரங்கன் ரொம்பவும்
சிறுபிள்ளையாக இருக்கிறான். இனிமேல் இவனிடம் கொஞ்சம் கண்டிப்பாகத்தான் நடந்து
கொள்ளவேண்டும். இன்று மட்டும் ஏதோ கசப்பு மருந்தைச் சாப்பிடுவோம். வேறு
வழியில்லை என்று எண்ணிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன். சிறு பையன் பேச்சைக்
கேட்டு விருந்தாட வந்த என்னைப் பற்றி அவனுடைய பெற்றோர் என்ன நினைப்பார்களோ என்ற
பயம் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு அதிர்ச்சி கொடுத்த வண்ணமாக இருந்தது.


ஒருவழியாகச் சாப்பிட்டு முடிந்தது. தட்டையும் டம்ளரையும் உள்ளே கொண்டுபோய்
வைக்கப் போனான் சாரங்கன்.


’இந்தப் பையனுக்கு எதற்கு என் மேல் இவ்வளவு அன்பு? இவன் அன்பு என்னைத் திணற
அடிக்கிறதே! இது தாங்கமுடியாத அன்பு! தாங்க முடியாத பேதைமை! இரண்டும் சேர்ந்து
என்னை குரங்காட்டம் ஆட்டுகின்றன. ஆனால் இவனைக் கோபிக்கக் கூடாது. இவன் இப்போது
எனக்குக் கொடுக்கும் தொந்தரவே இவனுடைய அன்பை அளந்து காட்டுகிறது. ஏதோ ஒரு நாள்
என்னைக் கஷ்டப்படுத்துவதனாலவது, இவன் திருப்தியடையட்டும். என்னுடைய முயற்சி
எதுவும் இல்லாமல், என்னால் மட்டுமே ஓர் உயிர் சந்தோஷமும், திருப்தியும் கொள்ள
முடிகிறது என்றால், அதை எந்தச் சமயத்திலும் தடுக்கக் கூடாது. தடுக்க முயலுவது
அமானுஷிகம்’ என்று எண்ணித் தேற்றிக்கொண்டேன்.


சாரங்கன் வெளியே வந்தான். மேஜையைத் திறந்து ஒரு பவுண்டன் பேனாவை எடுத்தான். என்
முகத்துக்கு எதிரில் நிற்காமல் என் முதுகுப் புறமாக வந்து நின்று கொண்டான்.
அங்கே நின்ற வாக்கிலேயே, நான் கையில் வைத்திருந்த சரித்திரப் புத்தகத்தை
மெதுவாகப் பிடித்து இழுத்துத் தூரத்தில் வைத்தான். தூங்கும் குழந்தையின்
கையிலிருக்கும் கிலுகிலுப்பையை எவ்வளவு ஜாக்கிரதையாகத் தனியே எடுத்து
அப்புறப்படுத்துகிறோமோ, அது போல அதை அப்புறப்படுத்தினான். பிறகு அவன் வலது
கையால் தன் கால் சட்டையின் பையில் கையை விட்டு எதையோ எடுப்பதுபோல் எனக்கு
ஜாடையாகத் தெரிந்தது. அதை என் முன்பாக மேஜைமேல் வைத்தான்.


அது ஒரு டைரி. நான் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்த
டைரிகளைப் போன்ற ஒரு டைரி. அதே கம்பெனியில் செய்தது. அதே நிறமுடையது. அப்புறம்
பேனாவை என் கையில் கொடுத்து “எழுதுங்கள்” என்றான்.


எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன எழுத?” என்று கேட்டேன்.


“என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு” என்று எழுதுங்கள்.”


**** 

18/04/2011

கானவர் தினைவிதைத்தல் - வெ.பெருமாள் சாமி

கல்லும் வில்லும் கைத்தடியும் கொண்டு வேட்டையாடித்திரிந்த மனிதன் உணவுக்காக தானிய சாகுபடி முயற்சியில் ஈடுபட்டான், அப்போது அவன் பயிர்சாகுபடி பற்றி ஏதும் அறியாத நிலையில் தான் இருந்தான். அந்நிலையில் அநுபவம் சில பாடங்களை அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கும். கட்டாந்தரையில் விதைகளைப் போட்டால் பறவைகள் அவற்றைப் பொறுக்கித் தின்று விடுதல் கூடும், எறும்புகளும் இழுத்துச் சென்று விடும்.

மேலும் மழை பெய்யும் போது மழைநீர் விதைகளை அரித்துச் சென்று விடுதல் கூடும். எனவே நிலத்தைக் கிளறிப்புழுதியாக்கி, அப்புழுதியில் விதைகளை விதைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டான். ஆனால் காட்டு மிராண்டியாக அநாகரிக நிலையில் வாழ்ந்த அவனுக்கு உழவுத் தொழில் பற்றி எதுவும் தெரியாது. உழுவதற்கான கருவிகள் எவையும் அவனிடம் இல்லை. இந்நிலையில் நிலத்தில் கிடக்கும் கிழங்குகளைத் தின்பதற்காகப் பன்றிகள் மண்ணைத் தோண்டிக் கிளறிப் புழுதியாக்கியிருப்பதைக் கண்டான். அவ்வாறு பன்றிகளால் கிளறிப்புழுதியாக்கப்பட்ட இடங்களில் கானவர் மழைக்காலத்தில் தினை விதைத்தனர். அங்ஙனம் விதைத்த தினை முளைத்து வளர்ந்து விளைந்தது.

பன்றிகள் கிளறிக்கிளைத்த புழுதியில் கானவர் தினை விதைத்தமை குறித்து,
‘அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்
கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையோடு
கடுங்கட் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழா அது வித்திய பரூஉக் குரற் சிறுதினை
முந்து விளை யாணர்” - புறநானூறு : 168

(அருவி ஒலித்துப்பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக் கொடி வளரும் மலைச் சாரலினிடத்து மலர்ந்த காந்தளினது கொழுவிய கிழங்கு பிறழக் கிளறித்தன் இனத்தோடு கூடித் தறுகண்மையுடைய பன்றிகள் உழுத புழுதியில் நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்துக் குறவர் அந்நிலத்தை உழாமல் அதுவே உழவாக வித்திய பரிய தோகையுடைய சிறிய தினை முற்பட விளைந்த புதிய வருவாயாகிய கதிர்) என்று புறநானுறு கூறுகிறது.

‘கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பிற்
றலை விளை கானவர் கொய்தனர்” - ஐங்குறுநூறு : 270
என்றும் ‘கேழல் உழுத கரிபுனக் கொல்லை “ - ஐந்தினை எழுபது : 11
என்றும் பிறநூலார் இது குறித்துக் கூறும் செய்தி நம் கவனத்துக்குரியதாகும்.

தினைக் கதிர் விளைந்து முற்றிய காலத்தில் பகற்பொழுதுகளில் கிளி, மயில் முதலிய பறவைகளும் இரவுப் பொழுதுகளில் பன்றி, யானை முதலிய விலங்குகளும் தினைக் கதிரைத் தின்று நொக்கி விடுகைக்கு வரும். எனவே, அவற்றைக் காவல் காக்கும் பொறுப்பு இப்பொழுது மனிதனை வந்தடைந்தது. பகற்பொழுதில் பெண்களும் இரவு நேரங்களில் ஆண்களும் தினைப் பயிரைக் காவல் காத்தனர், ஆண்களும் பெண்களும் தினைப்புனம் காத்தமை குறித்துச் சங்க இலக்கியங்களில் குறிஞ்சித் திணைப் பாடல்கள் விரிவாகவும் சுவையாகவும் பேசுகின்றன.

இதுவரை, இயற்கையாகக் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள் முதலியவற்றையும் வேட்டையாடிய விலங்குகளின் ஊனையும் தின்று உயிர்வாழ்ந்த மனிதன் முதன் முதலாகத் தன் உடல் உழைப்பைப் பயன்படுத்தித் தானியங்களை உற்பத்தி செய்யத் தொடங்கினான். உற்பத்தி செய்ததானியங்களை அறுவடை செய்தல், சேமித்துப் பாதுகாத்தல் என்ற புதிய வேலைகள் மனிதனை வந்தடைந்தன. கால வோட்டத்தில் நிகழ்ந்த சமூகவளர்ச்சியில் விதைப்பதும். பயிர்களைப் பாதுகாப்பதும் விளைந்த தானியங்களைச் சேமித்து வைப்பதும் மனிதனை வந்தடைந்த புதிய அனுபவமும் வேலையும் ஆகும். இதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் விரிவாகவே பேசுகின்றன.

‘நிலத்தைக் கிளறிப் புழுதியாக்கிப் பண்படுத்திச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியும்” என்பதைக் காலமும் அனுபவமும் மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தன. மக்கள் தொகைப் பெருக்கமும் உணவுப் பற்றாக் குறையும் கூடுதலான நிலத்தைச் சாகுபடிக்குக் கொண்டுவர மனிதனைத் தூண்டின. காட்டை அழித்துத் தான் நிலத்தைப் பயன் பாட்டுக்குக் கொண்டுவரமுடியும். ஆனால் காட்டை வெட்டி அழிப்பதற்கும் நிலத்தை உழுவதற்கும் அவனிடம் கருவிகள் ஏதும் இல்லை. கற்கருவிகளும் கைத்தடியும் வில்லுமே அவனிடமிருந்த கருவிகள், இரும்பைப் பற்றி மனிதன் இன்னும் அறிந்திருக்க வில்;லை. அதன் உபயோகம் குறித்து அவனுக்கு எதுவும் தெரியாது. ஆனால் நெருப்பின் உபயோகத்தை அவன் நன்கு அறிந்திருந்தான். எனவே, புதர் மண்டிக் கிடந்த நிலங்களைத் தீயிட்டு அழித்தான். அவ்வாறு அழித்துத்தான் நிலத்தைச் சாகுபடிக்கு ஏற்றதாகத் திருத்திப் பண்படுத்தினான். திருத்திய நிலத்தில் வரகும் தினையும் பயறும் விதைத்தான். இச்செய்தி களைச் சங்க நூல்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றன.

‘கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்காட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கிழுமெனக்
கருவி வானம் தலை இ”
(வேட்டுவர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தை மயங்க உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைகக்கண் ஐவன நெல்லோடு வித்தி இருட்சியுற அழகு பெற்றுக் கோடை மிகுதியில் ஈன்றலைப் பொருந்தாத தினைக்கு இழு மென்னும் ஓசையுடன் மின்னலும் இடியும் முதலாகிய தொகுதியுடைய மழைத்துளி சொரிந்தது ) என்று புற நானூறு (159)
கூறுகிறது.

தானிய சேமிப்பும் பாதுகாப்பும்

மனிதன் காட்டு மிராண்டியாக வாழ்ந்த கால கட்டத்தில் உணவைச் சேமித்துப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்படவில்லை. அதற்குரிய சூழ்நிலையும் சமூக அமைப்பும் ஏற்பட்டிருக்க வில்லை, உணவுக்காக வேட்டையாடுதலோடு, கனிகள் முதலியவற்றைத் தேடித்தின்று பசியைப் போக்கிக்கொண்ட அவன், வேறு தொழில் எதையும் அறிந்திருக்கவில்லை. கிடைத்த உணவைக் கிடைத்த இடத்தில் தின்று உயிர் வாழ்;ந்தான். சில நேரங்களில் பெரிய விலங்குகள் வேட்டையில் கிடைத்து, கூட்டத்தார் அனைவருடனும் உண்டதுபோக எஞ்சியதை வெயிலில் உலர்த்திச் சேமிக்கப் பழகியிருந்தான். இலக்கியங்கள் இதனை ‘வாடூன்” என்று குறித்தன. அவ்வப்போது ஏற்பட்ட உணவுப் பற்றாக் குறையும் பசியும் பட்டினியும் அவனை அவ்வாறு சேமிக்கத் தூண்டின.

தற்போது, தான் விளைவித்த தாவர உணவாகிய வரகு, தினை முதலிய வற்றையும் சேமித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்பட்டது. அவற்றின் சேமிப்புக் காகக் குதிர்கள் அமைக்கவும் அவன்கற்றுக் கொண்டான் சாகுபடியும் சேமிப்பும் காலத்தின் கட்டாயமாயின . மனிதனை நரமாமிசம் உண்ணத்தூண்டிய காரணிகளே, இப்போது நரமாமிசம் புசித்தலைக் கைவிட்ட நிலையில், உணவு தானியங்களைச் சாகுபடி செய்யவும் சேமிக்கவும் தூண்டின.

குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள் தம் உணவுத் தேவைக்காக வேட்டையாடுதலோடு வரகு, தினை முதலியவற்றின் சாகுபடியையும் மேற்கொண்டனர், அத்துடன் தேனழித்தல் கிழங்ககழ்தல் முதலிய வேலைகளையும் செய்தனர். கானவர் தேனழித்தது பற்றியும் கிழங்ககழ்ந்தது பற்றியும் ‘ தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்” என்று மலைபடுகடாம் கூறுகிறது. கானவர் தம் குடியிருப்புக்குப் பக்கத்தில் காட்டைச் சுட்டுத்திருத்திய நிலத்தில் தினை விதைத்தனர். தினைவிளைவிக்கும் வேலையைப் பெண்களே செய்தனர். நிலத்தைக் கிளறி விதைத்தல், களைபறித்தல், கிளி கடிதல், கதிர் அறுத்தல், தினைகுற்றுதல் முதலிய வேலைகளைப் பெண்களே செய்தனர்.

காதற்களமான தினைப்புனம்

தினைப்புனங்கள் இளைஞர்களின் காதற்களங்களாக விளங்கின. இதனைச் சங்க இலக்கியங்கள் காதற்சுவை நனி சொட்டச் சொட்டப் பேசுகின்றன. தினைக்கதிர்களைப் பறவைகள் தின்று விடாமல் தடுத்துக் காவல் காக்கும் வேலையைப் பெண்களே செய்தனர். தினைப்புனத்தைக் காவல் காத்துக் கிளியோட்டிக் கொண்டிருந்த வள்ளியை;த தேடி வந்த வேலனாகிய முருகன், மானைத் தேடி வந்ததாகக் கதையளந்து காதல் செய்து அவளை மணம் முடித்ததை வள்ளி திருமணம் நாடகம் நமக்குக் காட்டுகிறது. தலைவி, தினைப் புனத்தில் கிளியோட்டிக் காவல் காத்துக் கொண்டிருந்தாள், அவளை நாடிவந்த வேட்டுவ இளைஞன் ‘ வயமான் அடித்தேர்வான் போல” (கலித்தொகை குறிஞ்சிக் கலி) வந்து தினைப்புனம் காத்தவளைச் சந்தித்தான். பின்னர் இருவருக்கும் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தது. இது குறித்துச் சங்க இலக்கியங்களில், குறிஞ்சித்திணைப் பாடல்கள் விரிவாகப் பேசுகின்றன.

கானவர் அமைத்த பரண்கள்

யானை, பன்றி முதலிய விலங்குகள் இரவு நேரங்களில் வந்து தினைப் புனத்தை அழித்து விடாமல் ஆண்கள் காவல் காத்தனர். அவர்கள் இரவு நேரக் காவலுக்காக மரங்களின் மேல் பரண் அமைத்துக் காத்தனர், யானைக்கு எட்டாத உயரத்தில் பரண்கள் அமைத்தனர்.

‘வேழங்காவலர் குரம்பை”
(யானையைப் புனத்தில் தின்னாமல் காக்கின்ற தொழிலையுடையார் இதண் மேல் கட்டின குடில் ) என்றும்
‘ கழுதிற் சேணோன்”
(பரண்மேல் இருந்த, யானை முதலியவற்றுக்கு எட்டாதவன்) என்றும் பெரும்பாணாற்றப்படை (51) மலைபடுகடாம் (243) முதலிய நூல்கள் இதுபற்றிக் கூறுகின்றன.

இரவில் பரண்மீதிருந்து தினைப்புனம் காத்த கானவன் யானை தன் துணையாகிய பிடியுடன் தினைப் புனத்தை மேய வந்த ஓசையைக் கேட்டான், மழைக் காலத்து இரவாகையால் கானவன் கண்ணுக்கு யானை தெரியவில்லை. இடியும் மின்னலுமாக இருந்த அந்த நேரத்தில் ஓசைவந்த திசையை நோக்கி அவன்தன் கையில் இருந்த கவணையால் கல்லை வீசினான். விசையுடன் வீசப்பட்ட அக்கல் மலைமேல்; இருந்த வேங்கைமரத்தின் ஒள்ளிய பூக்களைச் சிதறி, ஆசினிப் பலாவின் பழங்களை உதிர்த்து, தேனிறாலைச் சிதைத்து மரத்தின் துணர்களைக் குலைத்து, குலை பொருந்திய வாழையின் மடலைக் கிழித்துப் பலாப்பழத்துள் தங்கியது” என்று கலித்தொகை கூறுகிறது.

‘இடி உமிழ்பு இரங்கிய விரைபெயல் நடுநாள்
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து
பிடியொடுமேயும் புன்செய்யானை
அடியொதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக்
கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின்
இறுவரை வேங்கை ஓள் வீசிதறி
ஆசினி மென்பழம் அளிந்தவை உதிரா
தேன் செய்இறா அல் துளைபடப் போகி
நறுவடி மாவின் பைந்துணர் உழக்கி
குலையுடைவாழைக் கொழுமடல் கிழியா
பலவின் பழத்துள் தங்கும்” என்னும் கலித் தொகைப் (குறிஞ்சிக்கலி 5 ) பாடலில் எயினர்களின் கவண் எறியும் கை வண்ணம் குறித்துக் கபிலர் கவினுறப் பாடியுள்ளார். இ;ங்கே, கல்லும் கவணும் எயினரின் வேட்டைக் கருவிகளாக விளங்கியதைக் கலித்தொகை காட்டுகிறது.

மனிதன் காட்டு மிராண்டி நிலையிலும் அநாகரிக நிலையிலும் வாழ்ந்த காலகட்டத்தில் வில்லும் அம்பும் கண்டு பிடிக்கப்பட்டு வேட்டைக் கருவிகளாகப்பயன்படுத்தப்பட்டன. காட்டு மிராண்டி நிலையின் தலைக் கட்டத்தில்தான் வில்லும் அம்பும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று எங்கல்ஸ் அவர்கள் கருதுகிறார்கள். இது குறித்து அவர் கூறுவதாவது”. வில்லும் அம்பும் கண்டு பிடிக்கப்பட்டதில் இருந்து காட்டு மிராண்டி நிலையின் தலைக்கட்டம் தொடங்குகிறது. இதனால் காட்டு மிருக இறைச்சி ஒழுங்காக சாப்பாட்டுக்குக் கிடைக்கிற உணவுப் பொருளாக அமைந்தது. வேட்டையாடுதலும் ஒரு சகஜமான தொழிலாயிற்று”.

வில் நாண், அம்பு கூட்டாக அமைந்த ஒரு கருவியின் தொகை ஆகும். அதை சிருஷ்டிக்கிறதென்றால் அதற்கு முந்தி வெகுகாலமாகச் சேகரித்து வந்த அனுபவமும் கூர்மைப் படுத்தப் பட்ட புத்திபலமும் இருந்திருக்க வேண்டும். அதன் விளைவாக இதரபல புதுப்படைப்புகளும் அதே சமயத்தில் அறிந்து வைத்திருக்க வேண்டும். வில் அம்புகளோடு பழக்கப்பட்டிருந்த போதிலும் மண்பாண்டங்களைச் செய்யும் கலையை இன்னும் அறிந்திராத (இந்தக் கலை அநாகரிக நிலைக்கு மாறிச்செல்வதின் ஆரம்பத்தைக் குறிக்கிறது என்று மார்கன் கருதுகிறார்.) மக்கள் சமூகங்களை ஒப்பு நோக்கினால், இந்த ஆரம்பக்கட்டத்தில் கூட,கிராமம் கிராமமாகக் குடியமைத்துத்தங்குவதின் ஆரம்ப நிலைகளைப் பார்க்கிறோம். மரத்தால் செய்த கலயங்கள் சாமான்கள் நாரில் இருந்து (தறியில்லாமல்) கைவிரல்களால் துணி நெய்தல், நாரைக் கொண்டோ அல்லது நாணல் புல்லைக் கொண்டோ கூடைகளை முடைதல், பட்டை தீட்டப்பட்ட (புதிய கற்காலத்தைச் சேர்ந்த ) கற்கருவிகள் ஆகிய ஜீவனோபாயத்திற்குரிய சாதனங்களை உற்பத்தி செய்வதில் ஓரளவுக்குத் தேர்ச்சியடைந்திருப்பதையும் பார்க்கிறோம்.

மேலும் பெரும்பாலான இடங்களில் நெருப்பும் கற்கோடாரியும் கொண்டு மரத்தைக்குடைந்து ஓடம் செய்யப்பட்டுவிட்டது. சில இடங்களில் வீடுகட்டுவதற்கு மரக்கட்டைகளும் பலகைகளும் செய்யப்பட்டுவிட்டன. உதாரணமாக, இந்த முன்னேற்றங்களையெல்லாம் வடமேற்கு அமெரிக்க இந்தியர்களிடையே காணலாம். இவர்களுக்கு வில்லும் அம்பும் பழக்க மானவைதான். ஆனால் மண்பாண்டக் கலையைப் பற்றித் தெரியாது. அநாகரிக நிலைக்கு எப்படி இரும்புவாள் நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதோ, நாகரிக நிலைக்குத் துப்பாக்கி வகையறா எப்படி நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதோ அது போலத்தான் காட்டடுமிராண்டி நிலைக்கு வில்லும் அம்பும் நிர்ணயமான ஆயுதங்களாக விளங்கின”
(நூல் : குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்)

வேட்டுவர்களின் வில்லாற்றல்

வேட்டுவர்கள் வில்லாற்றலில் சிறந்து விளங்கினர். அதற்கு கண சமூகத்தலைவர்களில் ஒருவனான வல்வில் ஓரியின் வில்லாற்றலே சிறந்த சான்றாகும். ஓரி என்பவன் கொல்லி மலைத்தலைவன், அவன் தன் வில்லாற்றல் காரணமாகப் புலவர்களால் வல்வில் ஓரி என்று சிறப்பிக்கப்பட்டான். அவனது வில்லாற்றலை வன் பரணர் புறப்பாடல் ஒன்றில் வியந்து போற்றுகிறார்.

‘வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிதுறீஇப்
புழற்றலைப் புகர்க்கலையுருட்டி யுரற்றலைக்
கேழற்பன்றி வீழவயல
தாழற்புற்றத் துடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம் படுத்திருந்தோன்
புகழ் சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
கொலைவன்”
- புறநானூறு: 152

( யானையைக் கொன்று வீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு, பெரியவாயை யுடைய புலியை இறந்து படச் செய்து, துளை பொருந்திய கொம்பையுடைய தலையினையுடைய புள்ளிமான் கலையை உருட்டி, உரல் போலும் தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச்செய்து அதற்கு அயலதாகிய ஆழ்தலையுடைய புற்றின் கட் கிடக்கும் உடும்பின் கண் சென்று செறியும் வல்வில்லால் உண்டாகிய வேட்டத்தை வென்றிப் படுத்தியிருப்பவன்: புகழமைந்த சிறப்பினையுடைய அம்பைச் செலுத்தும் தொழிலில் மிகச்சென்று உறுதற்குக் காரணமாகிய கொலைவன் ) என்று ஓரியின் வில்லாற்றல் வியந்து போற்றப்படுகிறது.

வேட்டுவச்சிறாரின் விற்பயிற்சி

வேட்டுவச் சிறுவர் விளையாட்டுப் பருவத்திலேயே விற்பயிற்சியைத் தொடங்கிவிடுவர், வளார்களில் மரற்கயிற்றைப் பிணித்து வில்லாகச் செய்வர். உடை வேலமரத்தின் உள்ளே புழையுடைய வெள்ளிய முள்ளை ஊகம் புல்லின் நுண்ணிய கோலிற் செருகி அம்புகளாகச் செய்வர். அவ்வம்புகளை வில்லில் தொடுத்து எய்து விளையாடுவர். இது குறித்துப் புறநானூறு அழகாகப்பேசுகிறது.
‘உழுதூர் காளை யாழ்கோடன்ன
கவை முட்கள்ளிப் பொரியரைப் பொருந்திப்
புது வரகரிகாற் கருப்பை பார்க்கும்
புன்றலைச் சிறாஅர் வில்லெடுத்தார்ப் பிற்
செங்கட் குறுமுயல் கருங்கலனுடைய
மன்றிற் பாயும் வன்புலம்” - புறநானூறு : 322

(வன்புலமாகிய முல்லை நிலத்தில் வாழும் வில்லேருழவரான வேட்டுவர்களின் சிறுவர்கள் வரகுக் கொல்லைகளில் வரகினது அரிகாலைப் பொருந்தியிருக்கும் காட்டெலிகளை வேட்டமாடுவர். எலியொன்றைக் கண்டதும் அவர்கள் ஆரவாரம் செய்வர். அவ்வோசையைக் கேட்டு, அருகேமேயும் முயல்கள் அண்மையில் உள்ள அவர்களது குடிசையின் முற்றத்தில் இருக்கும் மட்கலங்களின் இடையே துள்ளிப் பாய்ந்து செல்லும். அதனால் மட்கலங்கள் உருண்டு உடைந்து கெடும்.) என்று அக்காட்சியைப் புறநானூற்றில் ஆவூர்கிழார் அழகுறக் காட்டுகிறார்.

‘வெருக்கு விடையன்ன வெருணோக்குக் கயந்தலை
புள்ளன்தின்ற புலவுநாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடைவான் முள்
ஊக நுண் கோற் செறிந்த அம்பின்
வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலந்தழீஇய அங்குடிச்சீறூர்” - புறநானூறு: 324

(வேட்டுவர்கள் காட்டுப் பூனையின் ஆணைப் போல் வெருண்ட பார்வையும் பெரிய தலையும் உடையவர்கள். பறவைகளின் ஊனைத் தின்பதால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய
வெளுத்த வாயையுடையவர்கள். அவர்களின் பிள்ளைகள் ஒருவரையொருவர் விரும்பிநட்புக் கொண்டு உறையும் பண்பினை உடையவர்கள். அச்சிறுவர்கள் சிறிய இலைகளையுடைய ஊகம் புல்லில் செருகிய அம்பை வளாரால் செய்யப்பட்ட வில்லில் வைத்து வளைத்துப் பருத்தியாகிய வேலியடியில் உறையும் காட்டெலிகளை வீழ்த்துவதற்குக் குறி பார்த்து எய்து விளையாடுவர். இத்தகைய புன்செய் சூழ்ந்துள்ள அழகிய குடிகள் வாழும் சீறூர்) என்று ஆலத்தூர் கிழார் அமைவுறக் கூறுகிறார்.

எயினர்களின் விற்பயிற்சியும் வில்லாற்றலும் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடுவதற்கே பயன்படுத்தப்பட்டன என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. மண்ணாசை மற்றும் அதிகார போதை காரணமாகப் போர்த் தொழிலில் ஈடுபட்டு சக மனிதர்களைக் கொல்லும் நிலையினை மனித சமூகம் இன்னும் எய்தவில்லை என்பதனை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பறவை வேட்டை

கானவர் தினை பயிரிட்ட செய்தி முன்னர் கூறப்பட்டது. அவர்கள் உணவுக்காக மட்டுமல்லாது கானக் கோழி, இதற் பறவை, புறா முதலிய பறவை களைப் பிடித்துச் சமைப்பதற்கும் தினையைப் பயன்படுத்தினர். எயினப் பெண்கள் அப்பறவைகளைப் பிடிப்பதற்காகத் தம் குடிசைகளின் முற்றத்தில் மான் தோலை விரித்து அதில் தினையைப் பரப்பிவைப்பர். அப்பறவைகள் அதில் வந்து அமர்ந்து தினையை மேயுங்கால் எயிற்றியர் அவற்றைப் பிடித்துக் கொன்று சமைப்பர். இதனை,

‘மானதட் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியோடிதல் கவர்ந்ததுண்டென
ஆரநெருப்பினாரல் நாறத்
தடிவாந் திட்ட முழு வள்ளாரம்
இரும்பே ரொக்கலொ டொருங்கினிதருந்தித்
தங்கினை சென்மோ பாண” - புறநானூறு 320

( பாணனே மான் தோலில் பரப்பி உலரவைத்த தினையரிசியைக் காட்டுக் கோழியும் இதற் பறவைகளும் கவர்ந்துண்டு அகப் பட்டனவாக, சந்தனக் கட்டையாலாகிய நெருப்பில் சுட்டுத் துண்டு துண்டாக அறுத்து நிறைத்த இறைச்சியை ஆரல் மீனின் நாற்றமும் உடன் கமழ, கரிய பெரிய சுற்றத் தோடே கூடியிருந்து இனிது உண்டு அவ்விடத்தே தங்கிச் செல்வாயாக )என்றும்

படலை முன்றிற் சிறு தினை யுணங்கல்
புறவு மிதலு மறவு முண்கெனப்
பெய்தற் கெல்லின்று பொழுதே” - புறநானூறு : 319

(படல் கட்டிய முற்றத்தில் சிறிய தினையாகிய உலர்ந்ததனைப் புறாக்களும் இதற்பறவைகளும் முற்றவும் உண்க என்று தெளித்து அவற்றைப் பிடித்துச் சமைப்பதற்கு ஞாயிறு மறைந்து இரவாயிற்று) என்றும் கானவர், குடிசை முற்றத்தில் தினையைத் தெளித்து புறாவையும் இதற்பறவைகளையும் காட்டுக் கோழியையும் பிடித்துச் சமைத்தனர் என்ற செய்தியை ஆலங்குடிவங்கனாரும் வீரை வெளியனாரும் தெளிவாகக் கூறியுள்ளனர்.

எயினரது ஊரும் அரணும்

எயினரது ஊர்கள் மிளை என்றும் காட்டரண் என்றும் கூறப்படுகின்ற காவற்காடு சூழ அமைந்திருந்தன.

‘ஊர், அருமிளை இருக்கையதுவே” - புறநானூறு :326
(ஊர், கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இடத்தின்கண் உள்ளது)

‘வாழ்முள்வேலிச் சூழ்மிளைப் படப்பை”
பெரும்பாணாற்றுப்படை : 126
(ஊர், முள்ளையுடைத்தாகிய வாழ்முள் வேலியினையும் அதனைச் சூழ்ந்த காவற் காட்டினையுடைத்தாகிய பக்கத்தையும் உடையது)

‘ அருங்குழு மிளை “ - மதுரைக் காஞ்சி 64
(பகைவர் சேர்தற்கரிய திரட்சியையுடைய காவற்காடு)
என்னும் தொடர்கள் குறிஞ்சி நிலத்து வேட்டுவரது ஊர்களைச் சார்ந்து அமைந்திருந்த காவற்காடுகள் பற்றியும் அவற்றின் தன்மை பயன் ஆகியன குறித்தும் கூறுகின்றன.

இக்காவற்காடுகள் எயினர் ஊர்களின் பாதுகாப்புக்கான அரண்களாகவும் வேட்டைக்காடுகளாகவும் இருந்தன. பின்னர் கணசமூகத்தில் இருந்து அடிமைச் சமூகமும் நிலப்பிரபுத்துவசமூகமும் தோன்றி அரசு என்ற அமைப்பு நிறுவப்பட்ட கால கட்டத்தில் அரசுகளின் (சுரண்டு வர்க்கத்தின்) பாதுகாப்புக்காக அரண்கள் அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்தக் கால கட்டத்தில் அரசர்கள் மதில், அகழி, மலை, காடு என்னும் நான்கனையும் அரணாகக் கொண்டனர்.

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையதரண்” - (குறள்) என்று வள்ளுவர் கூறுகிறார். இவற்றில் மலையும் காடும் இயற்கை அரண்கள் ஆகும். மதிலும் அகழியும் மன்னர்கள் தம்பாதுகாப்புக்காக அடிமைகளைக் கொண்டு செயற்கையாக அமைத்துக் கொண்டவை. வள்ளுவர் கூறும் காட்டரண் என்பது கணசமூகத்தின் காவற்காடேயாகும். இக்காட்டரண் எயினரின் வேட்டைக்காடாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் இருந்தன. மேய்ச்சல் நிலங்களை இலக்கியங்கள் விடுநிலம் என்று குறித்தன.

வேட்டைச் சமூகத்தவர் ஆன எயினர்கள் தம் முயற்சியால் விளைவித்துச் சேமித்த உணவுதானியங்கள் மற்றும் கால் நடைகள் முதலிய உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அவை பாதுகாத்துக் கொள்ளப்படவில்லையானால் அண்டைப் புலங்களில் உள்ளார் வந்து கொள்ளையடித்துச் செல்லும் அபாயம் இருந்தது. எனவே, அவர்கள் அரண் அமைத்துத் தம் செல்வத்தைப் பாதுகாத்துக் கொண்டனர்.

எயினர் குடிசை

எயினரின் குடிசைகள் வேல் போன்ற கூர்மையான ஈந்தின் இலைகளால் வேயப்பட்டிருந்தன. அதனால் அக்குடிசைகள் முள்ளம் பன்றியின் முதுகுபோல் ஒழுங்கின்றிக் காணப்பட்டன. குடிசையின் முற்றத்தில் படல் கட்டப்பட்டிருந்தது. எயினர்களின் வீட்டு உபயோகப் பொருள்களைப் போலவே, வேட்டைக் கருவிகளும் எளிமையானவை. முரியடுப்பு, முரவு வாய்க் குழிசி, முதுவாய்ச்சாடி (ஒறுவாய் போன மண்பானை, முரிந்த அடுப்பு, பழைய மண்சாடி) மற்றும் நிலவுரல், உலக்கை, துடுப்பு இவையே எயினர்களின் வீட்டு உபயோகப் பொருட்களாம். அவர்கள் மான் தோலையே பாயாகப் பயன்படுத்தினர். கல், கவண், கைத்தடி, வில், அம்பு, வலை, வேல், குத்குக்கோல் முதலியவையே எயினர்களின் வேட்டைக் கருவிகளாம். இவற்றால் அவர்கள் உடும்பு, முயல், பன்றி, முள்ளம் பன்றி, மான், புலி, யானை முதலிய விலங்குகளை வேட்டையாடினர். புறா காட்டுக்கோழி முதலிய பறவைகளையும் வேட்டையாடினர்.

வல்லுவர்க் கூவல்

எயினர்கள் குடிநீருக்காகத் தம் குடிசைகளுக்குப் பக்கத்தில் கிணறுகளைத் தோண்டினார்கள். அக்கிணறுகளில் நீர் சில்லூற்றாகவே ஊறியது. நீரும் உவர்நீர் ஆகத்தான் இருந்தது. ‘கல்லறுத்தியற்றியவல்லுவர்க்கூவல்” (புறநானூறு 331) “ நெடுங்கிணற்று வல்லுவரி ‘களர்ப் படுகூவல்” என்று இக்கிணறுகள் பற்றிச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. சில இடங்களில் இயற்கையாக அமைந்த பள்ளங்களில் தேங்கியிருந்த மழைநீரையும் மக்கள் பயன்படுத்தினர்.

‘பூவற்படுவில் கூவற்றொடீஇய
செங்கட் சின்னீர்” -புறநானூறு 319
(செம்மண் நிலத்து மடுவில் உள்ள நீர் நிலையைத் தோண்டியதால் உண்டாகிய சிவந்த இடத்தில் சிறிதாக ஊறிய நீர்) என்றும்

‘களிறு நீறாடிய விடுநில மருங்கில்
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்திறந்தெனக்
குழிக்கொள்சின்னீர் குராஅ லுண்டலிற்
சேறு கிளைத்திட்ட கலுழ்கண்ணூறல்”
- புறம்;: 325

(பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட விடுநிலத்தின் கண் புதிதாக வந்த பெருமழை அவ்விடத்தை வரைந்து பெய்து நீங்கிற்றாக பள்ளங்களில் தங்கிய சிறிதாக ஊறிய நீரைக் கன்றையுடைய பசுவானது அங்கே முளைத்திருந்த புல்லை மேய்ந்து உண்டொழிதலால் சேற்றைநீக்கித் தோண்ட ஊறிய கலங்கலாகிய நீர்) என்றும்,

‘களிறு பொரக் கலங்கிய கழன்முள் வேலி
அரிதுண்கூவலங் குடிச் சீறூர்”
- புறநானூறு: 306

(களிறு படிந்துழக்கக்கலங்கிச் சேறாகும் உண்ணும் நீர் அரிதாகிய நீர் நிலையும் முள்ளையுடைய கழற்கொடியாலாகிய வேலியும் சூழ்ந்த அழகிய குடிகளையுடைய சீறூர்) என்றும் புறநானூறு, முல்லை நிலத்து வல்லுவர்க்கூவல் பற்றிப்பேசுகிறது.

எயினர் அரண்

எயினரின் அரண் ஊகம் புல்லால் வேய்ந்த உயரமான மதில்களை உடையவாயிருந்தன. வீடுகளில் வடித்த மணிகட்டின பலகைகளோடே வேல்களும்வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவ்வேல்கள் பருந்து மொய்க்குமாறு பகைவரைக் குத்தி வீழ்த்தியதால் முனை மழுங்கியிருந்தன. இரு முனைகளிலும் முடிந்த நாணையுடைய விற்கள் சார்த்தி வைக்கப்பட்டிருந்தன. திரண்ட கால்களையுடைய பந்தல்களிலே தேனிறால் போன்ற குதையினையுடைய அடியையுடைய அம்புக்கட்டுகளும் வல்லோசையுடைய பறைகளும் வைக்கப்பட்டிருந்தன. வாயிலில் கணைய மரம் செருகப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்டிருந்தன. செவ்விய முனையையுடைய கழுக்கள் வரிசையாக நடப்பட்டிருந்தன. முள்ளையுடைய வாழ் வேலியால் அரண் சூழப் பட்டிருந்தது.

‘பருந்துபட
ஒன்னாத்தெவ்வர் நடுங்க வோச்சி
வைநுதி மழுங்கிய புலவுவாயெ‡கம்
வடிமணி பலகை யொடுநிரைஇ முடிநாண்
சாபஞ்சார்த்திய கணைதுஞ்சு வியனகர்
ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப் பின்
வரைத் தேன்புரையுங்கவைக்கடைப்புதையொடு
கடுந்துடி தூங்கும் கணைக் காற்பந்தர்
தொடர் நாயாத்த துன்னருங்கடிநகர்
வாழ்முள்வேலி சூழ்மிளைப் படப்பை
கொடுநுகந்தழீஇய புதவிற் செந்நிலை
நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற்
கொடுவில்லெயினர் குறும்பு”
என்று பெரும்பாணாற்றுப்படை (117-129) எயினரின் அரண் பற்றிப் பேசுகிறது.

இங்கு, அமெரிக்க செவ்விந்தியக் குலங்களின் குடியிருப்புக்களைச் சூழ அமைந்திருந்த காவற் காடுகள் பற்றி தோழர் எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ள செய்தி நம் கவனத்துக்குரியதாகிறது. அவர் கூறுகிறார். ‘ யதார்த்தத்தில் குடிதங்கியிருந்த பிரதேசத்தோடு கூடுதலாக வேட்டையாடவும் மீன் பிடிக்கவும் ஒவ்வொரு குலமும் கணிசமான பிரதேசத்தைப்பெற்றிருந்தது. இதற்கு அப்பால், அடுத்த குலத்தின் பிரதேசத்தை வந்தடைகிறவகையில் அகலமான ஒரு நடு நிலைப் பிரதேசம் இருந்தது. எங்கு இரு குலங்களின் மொழிகளும் உறவு கொண்டிருந்தனவோ அங்கு இந்த நடுநிலைப் பிரதேசத்தின் அளவு சிறியதாக இருந்தது. அப்படி இல்லாத இடங்களில் விரிவாக இருந்தது. இங்கு கூறப்பட்ட செய்திகளால் உலகம் முழுவதிலும் கணசமூகத்தின் குடியிருப்புகள் காவற்காடு அல்லது விடு நிலம் எனப்பட்ட மேய்ச்சல் நிலம் (வேட்டைக்காடு) சூழ அமைந்திருந்தது என்ற உண்மையை நாம் உணரமுடிகிறது.

கானவரின் விலங்கு வேட்டை - வெ.பெருமாள் சாமி

உடும்பு

எயினர் வேட்டையாடிக் கொன்ற விலங்குகளில் உடும்பும் ஒன்றாகும். உடும்புகளை எயினர் விரும்பி வேட்டையாடினர். உடும்பின்தசை சத்துமிக்கது என்று மக்கள் கருதுகின்றனர். அதன் தசை, உண்பாரது உடலில் முழுமையாகச் சேரும் என்பது மக்களின் நீண்டகால நம்பிக்கை ஆகும். இதுபற்றி ‘கால் கோழி, அரை ஆடு, முக்கால் காடை, முழுஉடும்பு” என்று ஒரு சொலவம்மக்களிடையே வழங்கிவருகிறது. வேட்டைப்பிரியர்கள் இன்றும் உடும்புகளை விரும்பி வேட்டையாடுகின்றனர்.

ஊருக்கு அண்மையில் இருந்த மடுக்கரையில் இருந்து உடும்புகளை எயினச்சிறார் பிடித்து வந்த செய்தியைப் புறநானூறு முதலிய நூல்கள் கூறுகின்றன.

‘ஊர்,அருமிளையதுவே மனைவியும்
வேட்டைச்சிறாஅர் சேட்புலம் படராது
படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்கு நிணம்பெய்த தயிர்க்கண் விதவை
யாணர்நல்லவை பாணரொடொராங்கு
வருவிருந்தயரும் விருப்பினள்”
- புறநானூறு 326

(கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இடத்தின் கண் உள்ள ஊரில் மனைக் கிழத்தி, வேட்டுவச் சிறுவர்கள் நெடுந்தொலைவு செல்லாமல் மடுக்கரையில் பிடித்துக் கொண்டு வந்த குறுகிய காலையுடைய உடும்பினது விழுக்காகிய தசையைப் பெய்து சமைத்த தயிரோடு கூடிய கூழையும் புதிதாக வந்த வேறு நல்;ல உணவுகளையும் பாணருக்கும் அவரோடு வந்த ஏனை விருந்தினருக்கும் ஒரு சேரக் கொடுத்து உண்பிக்கும் இயல்பினள்) என்றும்

‘களர் வளரீந்தின் காழ் கண்டன்ன
சுவல் விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலிதந்த மனவுச் சூல் உடும்பின்
வரைகால்யாத்தது வயின் தொறும் பெறுகுவிர்”
பெரும்பாணாற்றுப்படை: 130-133

(களர்நிலத்தேவளர்ந்த ஈந்தினது விதைபோன்ற மேட்டுநிலத்தே விளைந்த நெல்லினது சிவந்த அவிழாகிய சோற்றை, நாய்கடித்துக் கொண்டுவந்த அக்குமணிபோன்ற முட்டைகளையுடைய உடும்பினது பொரியலாலே மறைத்ததனை மனை தோறும் பெறுகுவீர்) என்றும் எயினப் பெண்கள் தம் குடிசைக்கு வந்த விருந்தினராகிய பாணர் முதலியவர்களுக்கு உடும்பின் தசையைச்சமைத்து விருப்புடன் வழங்கி உபசரித்த செய்தியைச் சங்க இலக்கியங்கள் சுவைபடக் கூறுகின்றன.

முயல்
உடும்பைப் போலவே முயலும் ஒரு சிறிய விலங்குதான். மக்கள் இன்றும் அதனை விரும்பி வேட்டையாடுகின்றனர். பண்டை நாள் போலவே இன்றும் உணவுக்காகவே முயல் வேட்டையாடப்படுகிறது. முயல் ஒருசாதுவான ஆபத்தில்லாத விலங்கு. அதை வேட்டையாடுவதும் எளிது. எனவே எயினர் முயலை மிகுதியாக வேட்டையாடினர். வேட்டுவர் குடிசைகளில் முயற்கறி முக்கிய உணவாக இருந்தது. அங்கு எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் முயற்கறி உண்ணக் கிடைத்தது. வேட்டுவர் முயல் வேட்டையாடியது குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவே பேசுகின்றன.

“படலை முன்றிற் சிறு தினையுணங்கல்
புறவுமிதலுமறவுமுண்கெனப்
பெய்தற் கெல்லின்று பொழுதேயதனால்
முயல் சுட்டவாயினும் தருவேம் புகுதந்
தீங்கிருந்தீமோ முதுவாய்ப்பாண” என்று புறநானூறு ( 319) கூறுகிறது.

எயினரது மனைக்குப் பாணனாகிய விருந்தினன் தன் சுற்றத்தாருடன் ஞாயிறு மறைந்த மாலைப் பொழுதில் வந்திருந்தான். அவனுக்கு உணவளித்துப் பசி போக்கி உபசரிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு உண்டு என்பதை உணர்ந்த மனைத் தலைவி பாணனிடம் கூறினாள். “பாணனே சிறிய தினையரிசியை முற்றத்தில் தெளித்து அதனை உண்ணவரும் புறா முதலிய பறவைகளைப் பிடித்துச்சமைத்து உங்களுக்கு வழங்குதவற்குக் கால மின்மையின் எம்மிடம் உள்ளது பழையதாகிய சுட்ட முயற்கறியே. அதனை உங்களுக்கு உண்ணத்தருவோம்.” என்று கூறி மனைத்தலைவி பாணரை உபசரித்து உணவூட்டிய செய்தியை ஆலங்குடி வங்கனார் மேற்குறித்த புறநானூற்றுப் பாடலில் கூறுகிறார்.

முயல் வேட்டைக்குச் சென்ற எயினர் தாம் வளர்த்த நாய்களையும் வேட்டைக்காக உடன்கொண்டு சென்றனர். ( இன்றும் முயல் வேட்டைக்குச் செல்வோர் நாய்களையும் உடன் கொண்டு செல்கின்றனர்) “நெடியசெவிகளையுடைய முயல்களை அவை ஓரிடத்தும் போக்கில்லாதபடிகுவிந்த இடத்தையுடைய வேலியிடத்தே வலைகளைப் பிணைத்து மாட்டிவளைத்துப் பசிய தூறுகளையடித்து முயல்களை அவற்றில் கிடவாமல் ஓட்டிக் கொன்றனர்” என்று கானவர் முயல் வேட்டையாடியமை குறித்து கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் கூறுகிறார்;.

பன்றி வேட்டை

எயினர் உணவுக்காகப் பன்றி களையும் வேட்டையாடினர். பன்றி வேட்டை முயல் வேட்டைபோல எளிய செயல் அன்று, கடினமானது. வேட்டையின் போது, விரட்டி வரும் வேடர்களைப் பன்றிகள் தம் வளைந்த கொம்பால் மோதித்தாக்குவதும் உண்டு . அதனால் எயினர் பன்றிகளைக் கொல்வதற்குச் சில தந்திரமான செயல்களை மேற்கொண்டனர். (குறிஞ்சி நிலத்தில் பன்றிகளைக் குடிசைகளில் வளர்க்கும் பழக்கம் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை : ஏனெனில், வேட்டைச் சமூகம் இன்னும் மேய்ச்சல் சமூகமாக மாறவில்லை) மழையின்றி வறட்சி பாதித்த கடுங்கோடைக் காலங்களில் விலங்குகள் நீருக்காக தாகத்தோடு மயங்கித்திரியும். அவ்வாறு நீர் தேடியலையும் விலங்குகளின் காலடித்தடங்கள் மிகுதியாக அழுந்திக் கிடக்கின்ற வழியிடங்களில் தறுகண்மையுடைய கானவர்கள், மழைபெய்தால் நீர் நிற்க வேண்டுமென்று கருதிக் குளங்கள் அமைத்தனர். அக்குளங்களின் அருகில் மட்டுக் குழி (பதுங்குழி) களையும் அமைத்தனர். இரவில் பன்றி முதலிய விலங்குகள் நீருண்ண அக்குளங்களுக்கு வரும். அப்படி வரும் காலங்களில் மறைந்திருந்து அவற்றைக் கொல்வதற்காக வேட்டுவர் அமைத்துக் கொண்ட அக்குழிகளே மட்டுக் குழிகள் எனப்பட்டன. விலங்குகள் நீருண்ண வருதலை எதிர்பார்த்து அக்குழிகளில் பதுங்கியிருந்த வேட்டுவர் அவை வந்ததும் அவற்றைப் பாய்ந்து கொன்றனர். இச் செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை தெளிவாகக் கூறுகிறது. இங்கு வேட்டுவர் அமைத்த இக்குளங்கள் தனிமனிதர்களுக்காக அமைக்கப்பட்டவை அன்று. சமூகத்தேவைக்காக சமூகத்தவர் அமைத்துக் கொண்ட குளமே அது.

‘மானடிபொறித்த மயங்கதர் மருங்கின்
வான் மடி பொழுதின் நீர் நசைக் குழித்த
அகழ்சூழ் பயம்பின் அகத்தொழித்தொடுங்கிப்
புகழாவாகைப் பூவினன்ன
வளை மருப்பேனம் வரவுபார்த்திருக்கும்
அரைநாள் வேட்ட மழுங்கிற்பகனாட்
பகுவாய்ஞமலியொடுபைம்புதலெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கறவளைஇக்
கடுங்கட்கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ்சுரம்” என்று, எயினர் மட்டுக் குழிகள் அமைத்துப் பதுங்கியிருந்து பன்றி வேட்டையாடியது குறித்துச் சுவைபடக் கூறிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், முயல் வேட்டையாடியது குறித்தும் கூறியுள்ளார்.

தினைப்புனத்தில் தினைக் கதிர்கள் நன்கு விளைந்து முற்றிய காலங்களில் பன்றிகள் இரவுப் பொழுதில் வந்து அத்தினைக் கதிர்களை மேய்ந்து அழிக்கும், அதனைத் தடுப்பதற்காக வேட்டுவர் தினைப் புனங்களில் பன்றிகள் வரும் பாதையில் பெரியகற்பொறிகளை அமைத்து வைத்திருப்பார்கள். தினைப்புனத்தை மேய வரும் பன்றிகள் அக்கற்பொறிகளில் அகப்பட்டுக்கொள்ளும், அப்போது, தினைப்புனம் காத்திருந்த எயினர் விரைந்து வந்து அப்பன்றியைக் குத்திக் கொல்வர். இக்கற் பொறிகள் அடார் என்று வழங்கப்பட்டன.

“விளைபுன நிழத்தலிற் கேழலஞ்சிப்
புழை தொறும் மாட்டிய இருங்கலரும் பொறி
யுடைய ஆறே”

(வழிகள் முற்றிய தினைப்புனத்தைப் பன்றிகள் நொக்குகையினாலே இதற்கு அஞ்சிச் சில் வழிகள் தோறும் கொளுத்திவைத்த பெரிய கற்பொறிகளையுடையவை ) என்று, தினைப்புனங்காத்த எயினர், பன்றிகள் தினைக்கதிரை உண்ணவரும் பாதைகளில் கற்பொறிகளை அமைத்து வைத்த செய்தியை மலைபடுகடாம் ( 193-95 ) கூறுகிறது.

“தினையுண் கேழல் இரியப் புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடா அர்
ஒண்கேழ் வயப்புலிபடூ; உம்”

(தினைக் கதிரைத் தின்ன வரும் பன்றியை வீழ்த்துவதற்காக வேட்டுவன் மாட்டி வைத்த பெரிய கற்பொறியாகிய அடார் என்பதில் வலிமை மிக்க புலி அகப்பட்டுக் கொண்டது) என்று நற்றிணை ( 119 ) கூறுகிறது. வேட்டுவர் புலி வேட்டையின் பொருட்டும் அடார் என்னும் கற்பொறியினை அமைத்து வைத்த செய்தியைப் புறநானூறு கூறுகிறது” இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய பெருங்கலடார், என்பது புறநானூறு (19) அது குறித்துக் கூறும் செய்தியாகும்.

முள்ளம் பன்றி வேட்டை

வேடர்கள் விரும்பி வேட்டையாடும் விலங்குகளில் முள்ளம் பன்றியும் ஒன்று. முளவுமா என்றும் எய்ப்பன்றி என்றும் இலக்கியங்கள் இதனைக் குறிக்கின்றன. முள்ளம் பன்றியானது, தனக்கு ஆபத்து நேரிட்ட காலங்களில், தன் எதிரிகளின் மேல், தன் உடலைச் சிலிர்த்து உதறிக் கூரிய முள்போன்ற மயிரைச் செலுத்துமாம். அவ்வாறு செலுத்தப்பட்ட மயிராகிய முள் எதிரியின் உடம்பில் தைத்து அவற்றுக்கு மிகுந்த துன்பத்தைச் செய்யும், இவ்வாறு உடலைச் சிலிர்த்து எதிரிகளின் மேல் மயிரை எய்வதால் முள்ளம் பன்றி எய்ப்பன்றி எனப்பட்டது. முள்ளம் பன்றி வேட்டை, பன்றி வேட்டையை விட ஆபத்தானது. ஆனாலும் எயினர் அவற்றை விரும்பி வேட்டையாடினர். “முளவு மாத் தொலைச்சிய முழுச்சொலாடவர்” - ( புறநானூறு : 325 )

“முளவுத் தொலைச்சிய பை நிணப் பிளவை” என்று வேட்டுவர் முள்ளம் பன்றிகளை வேட்டையாடிய செய்தியைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நெடிய மலையிடத்துக் குகையில் முள்ளம் பன்றி பதுங்கிக் கிடந்தது. அதனையறிந்த வேட்டுவன் அதனை வேட்டையாடுவதற்காக அங்குச் சென்றான். கானவனது வருகையை உணர்ந்து கொண்ட அவ்விலங்கு அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கான தற்காப்பு முயற்சியில் ஈடுபட்டது. கூர்மையான ஊசி போன்ற தன்மயிராகிய முள்ளை, உடலைச் சிலிர்த்து உதறி ஏவியது. அம்முட்கள் கானவன் உடலில் தைத்துப் பெரும்புண் உண்டாக்கின. புண்பட்ட வேட்டுவன் வலிதாங்கமாட்டாமல் அழுது கூச்சலிட்டான். அக்கூச்சல் கானகமெங்கும் எதிரொலித்தது.

“சேயளைப் பள்ளியெ‡குறு முள்ளின்
எய்தெற விழுக்கிய கானவரழுகை” (நெடிய முழையாகிய இருப்பிடத்தில் தங்கும் எய்ப்பன்றி தனது கூர்மையுறுகின்ற முள்ளால் எய்து கொல்லுகையினாலே பட்ட கானவர் அழுகை) என்று, முள்ளம்பன்றியை வேட்டையாடப் புகுந்த கானவன் பட்ட பாட்டை மலைபடுகடாம் (300- 1) கூறுகிறது.

“அகன்றுறைச்சிலைப் பாற்பட்ட முளவு மான்கொழுங்குறை”

“அகன்ற நீர்த்துறைக்கண் வில்லால் வீழ்த்தப்பட்ட முள்ளம் பன்றியின் ஊன்”; என்று, முள்ளம் பன்றி ஊனுக்காக வேட்டையாடப்பட்டது குறித்துப் புறநானூறு ( 374) கூறுகிறது. இரவு நேரங்களில் பன்றி முதலிய விலங்குகள் வந்து தினைப்புனத்தை நொக்கி அழித்து விடாமல் இருக்கக் காவல் காத்த எயினர், பரண் அமைத்து அதன்மேல் இருந்து காத்தனர். இரவு நேரத்தில் யானைகள் வந்து தினைப்புனத்தை அழித்தலும் உண்டு. பரண்கள் உயரம் குறைவாக இருந்தால் யானைகள் பரண்களை அழித்து, பரண்மேல் இருப்போரைத் துன்புறுத்தக் கூடும். அதனால் யானைகளுக்கு எட்டாத உயரத்தில் மரங்களின் மேல் பரண் அமைத்து வேடர் அதன் மேல் இருந்து தினைப்புனம் காத்தனர். அப்போது பன்றியொன்று தினைப்புனத்தை மேய்ந்து அழிப்பதற்கு வந்தது. பன்றியின் காலடியோசை கேட்ட கானவன் பரண்மேல் இருந்தபடியே ஓசைவந்த திசையை நோக்கி அம்பு ஒன்றை வேகமாகச் செலுத்தினான். கானவன் கடுகச் செலுத்திய அம்பு பன்றியின் உடம்பில் பட்டுப் புண் படுத்தியது. புண்பட்ட பன்றி புண்ணுடனும் அம்புடனும் ஓடிப்போனது. ஓடிய பன்றி புண்ணின் வலியின் கடுமையால் மயங்கித் தான் வந்த பாதையை மறந்து வழி மாறிச் சென்று இறந்து வீழ்ந்தது. இதனை

“கழுதிற் சேணோன் ஏவொடு போகி
யிழுதினன்ன வானிணஞ் செருக்கி
நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின்
நெறிகெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள் துணிந்தன்ன ஏனம்” என்று மலைப்படுகடாம் (243 – 47) கூறுகிறது.

மான்வேட்டை

முயலைப் போல மானும் ஒரு சாதுவான ஆபத்தில்லாத விலங்குதான். தற்காலத்தில் தோல், கொம்பு, இறைச்சி ஆகியவற்றுக்காக மான் வேட்டையாடப்படுகிறது. பண்டைக் காலத்திலும் மான் தோல், இறைச்சி ஆகியவற்றுக்காக வேட்டையாடப்பட்டது. வேள்வி செய்யும் காலத்தில் பார்ப்பார் மான் தோலைப் பச்சையாகத் தோளில் போர்த்திக் கொண்டு யாகச்சடங்குங்களைச் செய்தனர் என்று புறநானூறு ( 166 ) கூறுகிறது.

“வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப்புல்வாய்க் கலைப் பச்சை
சுவற்பூண் ஞாண் மிசைப் பொலிய”
(வேள்வித் தொழிற்கு வேண்டி நீ போர்க்கப்பட்ட, காட்டு நிலத்தே வாழும் புல்வாய்க் கலையினது உறுப்புத்தோல் நினது தோளின் கண் இடப்பட்ட பூணூல் மீது சிறந்து தோன்றியது) என்று ஆவூர் மூலங்கிழார்அது குறித்துக் கூறுகிறார்.

மானுக்கு இரங்கிய மங்கை

எயினரது குடிசையின் முற்றத்தில் பலாமரம் அல்லது விளாமரம் நிற்கும், அதில் பார்வை மான் கட்டப்பட்டிருக்கும். பார்வைமான் கட்டிய கயிறு உராய்ந்ததால் அம்மரத்தின் அடி தேய்ந்திருந்தது. இதனை,

“பார்வை யாத்த பரைதாழ் விளவு, என்றும்
முன்றில் முஞ்ஞை முசுண்டைபம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத் தூங்கு நீழல்
கைமான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப் பிணை தழீஇ” – புறாநானூறு : 320
என்றும் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.

பார்வைமான் என்பது, பிற மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சிதந்து கட்டப்பட்ட பெண்மான். இதனை எயினர் தம் குடிசையின் முற்றத்தில் இருந்த பலாமரம் அல்லது விளாமரத்தின் அடியில் கட்டி வைத்திருந்தனர். ஆண்மான்கள் புணர்ச்சி வேட்கை கொண்டு மேய்தல் தொழிலைக் கைவிட்டு அதனோடு கூடி விளையாட்டயர அங்கு வரும். கலையும் பிணையும் புணர் நிலைக்கண் விளையாட்டயர்தலைக் காணும் எயினர் இரக்க மின்றிக் கலையை எளிதில் வீழ்த்துவர். அதற்காகப் பயிற்சி தந்து கட்டப்பட்ட பெண்மானே பார்வைமான் என்ப்படும். எயினரின் எளிய குடிசையின் முன் கனிகள் தொங்கும் பலாமரம் ஒன்று நின்றிருந்தது. முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் அதன் மீது செறிந்து படர்ந்திருந்தன. வேறே பந்தல் வேண்டாது தாமே பந்தராகப் படந்திருந்தன. குடிசையின் முற்றத்தில் மான் தோலைவிரித்து எயிற்றி தினையரிசியைப் பரப்பி உலரவிட்டிருந்தாள். குடிசைக் குரிய வனான எயினன் பலாமரத்தின் நிழலில் படுத்துறங்கிக் கொண்டிருந்தான். அவன் யானை வேட்டம்புரிவோன்: இரவு அவ்வேட்டத்தின் மேற்சென்றிருந்தமையால் பேருறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

குடிசையின் பக்கத்தில் பார்வை மானாகிய பெண்மான் கட்டப்பட்டிருந்தது. தொழிலொன்று மில்லாத பிறிதொரு தனி ஆண் மான் வந்து அப்பெண்மானைத் தழுவிக்கலந்து விளையாடிக் கொண்டிருந்தது. அக்குடிசையின் தலைவியான எயிற்றி, குடிசையின் ஒரு பக்கமாக மான் தோலைவிரித்து அதில் தினையரிசியை உலர விட்டிருந்தாள். அவள், இன்பம் மிக்க அவற்றின் புணர்ச்சி நிலையைக் கண்டாள். கண்ட அவள் தன் கணவன் உறக்கம் நீங்கி எழுந்து விடுவானோ என அஞ்சினாள், எழுந்து கலையும் பிணையும் புணர்நிலைக் கண் விளையாட்டயர்தலைக் காணின் அவன் அருளின்றிக்கலையை வீழ்த்துவன் என்று உணர்ந்து, அவன் உறக்கம் கலைந்து எழுவானோ எனவும், தன்வருகையைக் கண்டால் புதிதாக வந்த கலைமான் அஞ்சியோடுமோ, அங்ஙனம் அஞ்சியோடின் அவற்றின் புணர்நிலை இன்பம் சிதையுமோ என்றும் கவன்ற அவள் ஒரு பக்கத்தில் ஒதுங்கியிருந்தாள். அவளது ஒடுக்கம் கானக்கோழியும் இதற் பறவையும் வந்து அவள் மான் தோலில் பரப்பி உலர விட்டிருந்த தினையரிசியைக் கல்லென ஆரவாரித்துக் கவர்நதுண்ண ஏதுவாயிற்று. பின்னர் எயிற்றி வைத்திருந்த கண்ணியில் அகப்பட்டுக் கொண்டன.

கலைமான் பிணைமானைப் புணர்ந்து நீங்கியபின் எயிற்றி அப்பறவைகளைப் பிடித்துத் துண்டு துண்டாக அறுத்து நிறைத்த இறைச்சியைச் சந்தனக்கட்டையாலாகிய நெருப்பில் சுட்டு ஆரல் மீனின் நாற்றமும் உடன்கமழ அவற்றைப் பாணரின்கரிய பெரிய சுற்றத்தார்க்கு உண்ணக்கொடுத்து உபசரித்தாள். இச்செய்தியைச் சுவைபடக் கூறும் வீரைவெளியனாரின் பாடல் இது.

‘முன்றில் முஞ்ஞை முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைமான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர் தொழிற்றனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலு மஞ்சி யாவதும்
இல் வழங்காமையின் கல்லென வொலித்து
மானதட்பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடிதல் கவர்ந்துண்டென
ஆரநெருப்பினாரல் நாறத்
தடிவார்ந்திட்ட முழு வள்@ரம்
இரும்பே ரொக்க லொடொருங்கினி தருந்தித்
தங்கினை சென்மோபாணை”
- புறானூறு 320

வீரைவெளியனாரின் இப்பாடல் கணசமூகத்தலைவியான எயினப்பெண்ணின் இல்லற மாட்சியையும் எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணிஇரங்கும் உயர்பண்பையும் அவளது விருந்தோம்பற் சிறப்பையும் உலகுக்குத் தெற்றெனப் புலப்படுத்துகிறது.

புலிவேட்டை

வேட்டுவர் புலி வேட்டைக்குச் சென்றனர். வேட்டையின் போது சினமுற்ற புலியானது வேட்டுவன் மீது பாய்ந்து மார்பைக் கிழித்துப்புண்ணாக்கியது. அக்கொடிய புண்ணை ஆற்றுவதற்காகவும் புண்ணின் வலி தெரியாமல் இருப்பதற்காகவும் எயிற்றியர் இனிய பாடல் களைப் பாடினர். அப்பாடல் காடெல்லாம் எதிரொலித்தது.

“கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார்; காப்பென
அறல் வாழ் கூந்தல்கொடியச்சியர் பாடல்”

(தம் கணவர் மார்பிலே புலிபாய்ந்ததாகப்பட்ட நெடிய பிளத்தலையுடைய சீரிய புண்ணை ஆற்றுவதற்குக் காவல் என்று கருதி அறல் போலும் கூந்தலையுடைய கொடிச்சியர் பாடும் பாடலால் எழுந்த ஓசை) என்று மலைபடுகடாம் கூறுகிறது.

யானை வேட்டை

கானவர் மலைமேல் பரண் அமைத்துத் தினைப்புனம் காத்தனர். அப்போது, விளங்குகின்ற ஏந்தின கொம்பையுடையதும் தன் இனத்தைப் பிரிந்து வந்ததுமான யானை தினைப்புனத்தைத் தின்னும் பொருட்டு வந்தது. யானைத் தலைவனான அதனை வளைத்துப் பிடித்தற்காகக் கானவர் கூடிமுயன்றனர். அதனால் ஏற்பட்ட ஆரவாரம் கானகமெங்கும் எதிரொலித்தது.

‘விலங்கல் மீமிசைப் பணவை கானவர்
புலம்புக் குண்ணும் இலங்கேந்து மருப்பின்
இனம்பிரி ஒருத்தல் புரிவளை பூசல்” என்று, மலைபடுகடாம் ( 277-99)
எயினரின் யானை வேட்டம் குறித்துக் கூறுகிறது.

இதுகாறும் கூறிய செய்திகளால் கானவர்; உடும்பு, முயல், பன்றி, முள்ளம் பன்றி, மான், புலி, யானை முதலிய காட்டு விலங்குகளை வேட்டையாடினர். அவ்வேட்டத்தின் போது பல்வகை இன்னல்களுக்கு ஆளாயினர் என்பதை அறிந்தோம். வேட்டைத் தொழில் கானவரின் கூட்டு முயற்சியாகவே இருந்தது.

கானவர் தேனெடுத்தல்

குரங்குகளும் ஏற முடியாத உயரத்தையுடையதும் இனிதாகக் காட்சி தருவதுமான உயர்ந்த மலையில் தேனீக்கள் தேனைத் திரட்டிக் கூடுகட்டியிருந்தன. கானவர் அத்தேனை எடுக்க முயன்றனர். நிலைபேறுண்டாகக் கட்டியமைத்தகண்ணேணி வழியாக ஏறிச் சென்று அத்தேன் கூட்டை யழித்துத் தேனெடுத்தனர். அதனால் எழுந்த மகிழ்ச்சியால் மிகுதியாக ஆரவாரித்தனர். அந்த ஆரவாரம் மலையெங்கும் எதிரொலித்தது. கண்ணேணியாவது, கணுக்களிலே அடிவைத்து ஏறிச் செல்லும்படி அமைத்துள்ள மூங்கில் ஏணியாகும். மலையுச்சியில் உள்ள தேனிறாலை அழிக்கும் பொருட்டாகச் செங்குத்தாக மூங்கில்களைக் கூட்டி ஏணியாக நிறுத்தி வைத்து அதன் வழியாக ஏறிச் சென்று கானவர் தேனெடுப்பர்.

“கலைகையற்ற காண்பினெடுவரை
நிலைபெய்திட்ட மால்பு நெறியாகப்
பெரும்பயன் தொடுத்த தேங்கொள் கொள்ளை”

என்று கானவர் கண்ணேணி வழியாக ஏறிச்சென்று தேனெடுத்த செய்தியை மலைபடுகடாம் ( 315-17) கூறுகிறது. ( மால்பு கண்ணேணி ) பாரியின் பறம்பு மலையில் தேனெடுத்தற்காகக்;கானவர்கண்ணேணிகள் அமைத்த செய்தியைக் கபிலர் கவினுறக் கூறுகிறார். மால்புடை நெடுவரைக் கோடு” ( புறநானூறு 105) ( கண்ணேணியையுடைய நெடிய மலையினது சிகரம் ) என்பது கபிலரது கூற்று,

“அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடுங்குன்றம் தேன் சொரியும்மே “என்றும்
“நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்
வாரசும் பொழுகு முன்றிற்
தேர்வீசிருக்கை நெடியோன் குன்றே “ புறம் : 114

( மதுப் பிழிந்து போகடப்பட்ட கவளத்தினது கோதுடைத்தாகிய சிதறிய வற்றினின்றும் வார்ந்த மதுச் சேறு ஒழுகும் முற்றத்தையுடைய தேர்வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை ) என்றும்

‘ஒரு சார் அருவி ஆர்ப்ப வொருசார்
பாணர்மண்டை நிறையப்பெய்மார்
வாக்கவுக்க தேக்கட்டேறல்
கல்லலைத் தொழுகும்” – புறநானூறு : 115

( ஒரு பக்கம் அருவி ஆர்த் தொழுக, ஒரு பக்கம் பாணருடைய மண்டைகள் ( கலங்கள்) நிரம்ப வாக்க வேண்டி வடித்தலால் சிந்திய இனிய கள்ளாகிய தேறல் கல்லையுருட்டி ஒழுகும் ) என்றும் பறம்புமலையின் தேன் வளம் குறித்தும் கானவர் அங்கு தேனெடுத்தது குறித்தும் தேன் சுவை சொட்டக் கபிலர் கூறுகிறார்.

எயினர் இயல்பு - வெ.பெருமாள் சாமி

வேட்டுவர்கள் காட்டுப் பூனையின் ஆணைப் போன்ற வெருண்டபார்வையை உடையவர்கள், பெரியதலையை உடையவர்கள், பறவைகளின் ஊனைத்தின்பதால் புலால் நாற்றம் கமழும் வாயினர். இடக்கர்ச் சொற்களை அடிக்கடி கூசாது கூறினாலும் கரவில்லாத சொற்களையே பேசுவர். அதனால் வெள்வாய் வேட்டுவர் எனப்பட்டனர்.

“வெருக்குவிடையன்ன வெருணோக்குக் கயந்தலை
புள் தின்ற புலவு நாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர்” என்று வேட்டுவர் இயல்பு குறித்து ஆலத்தூர் கிழார் புறநானூற்றில் (324) கூறுகிறார்.

வேட்டைச் சமூகத்தவரான எயினர்கள் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன. விருந்தோம்பல் இம்மக்களின் தலையாய பண்பாக விளங்கியது. அது மட்டுமல்ல இருப்பது எதுவாயினும் அதனை எல்லாரும் சமமாகப்பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது இம்மக்களின் சீரிய பண்பாக மிளிர்ந்தது. இவர்கள் கரவு, கபடம், சூது முதலிய தீயபண்புகளை அறியாதவராக இருந்தனர் என்பதையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.

தம் இல்லம் நாடி வந்த பாணர் முதலிய விருந்தினரை இனிய முகத்தினராய் இன்சொல்லினராய் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். பசி நீங்க உணவளித்துப் போற்றினர். தம்மிடம் இருந்தது எதுவாயினும் எந்நேரமாயினும் அதனை விருந்தினர்க்குப் பகிர்ந்தளித்துப் பசிபோக்கினர். பகிர்ந்துண்ணும் பண்பை இயல்பாகவே பெற்றிருந்த எயின்குடிப்பெண்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து விளங்கினர் என்பதில் வியப்பேதுமில்லை. எயின்குடியினரின் இச்சீரியபண்புக்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் ஆதி பொதுவுடைமை வகைப்பட்ட கண சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

எயினரின் விருந்தோம்பல் சிறப்பு

வேலின் கூரிய முனை போன்ற ஈந்தின் இலைகளால் வேயப்பட்டதும் முள்ளம் பன்றியின் முதுகுபோல் காணப்பட்டதும் ஆன குடிசைகளில் எயினர் வாழ்ந்தனர். அது பற்றி முன்னர்க் கூறப்பட்டுள்ளது. அக்குடிசையின் உள்ளே எயிற்றி ஒருத்தி படுத்திருந்தாள். அவள் அண்மையில் தான் குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தாள். தாயும், சேயும் மான் தோலாகிய படுக்கையில் முடங்கிப்படுத்திருந்தனர்.

அக்குடிசையைச் சேர்ந்த பிறபெண்கள் உணவு தேடி வெளியே சென்றிருந்தனர். அவர்கள் கையில் வலியகோல் ஒன்று இருந்தது. வயிரம் பாய்ந்த கோல். அதன் ஒரு முனையில் உளி ஒன்று செருகப்பட்டிருந்தது. மறு முனையில் பூண் கட்டப்பட்டிருந்தது. அக்கோல் கடப்பாரைபோல் தோற்றமளித்தது.

கரம்பை நிலமாகிய காட்டில் மிக விளைந்து உதிர்ந்து கிடந்த புல்லரிசியை எறும்புகள் இழுத்துச் சென்று சேமித்து வைத்திருந்தன. அவ்வாறு சேமித்து வைத்த இடங்களைத் தேடி அப்பெண்கள் சென்றனர். வெண்மையான பற்களையுடைய அவர்கள் தம் கையில் வைத்திருந்த கடப்பாறையால் அவ்விடங்களில் கட்டிகள் கீழ்மேலாகுமாறு குத்தியதால் கரம்பை நிலத்தில் உண்டாகிய புழுதியினை அளைந்து எறும்புகள் சேமித்து வைத்திருந்த புல்லரிசியை எடுத்து வந்தார்கள். அதனை அவர்கள் குடிசையின் முற்றத்தில் விளாமரத்தின் அடியில் பதித்து வைத்திருந்த மரவுரலில் பெய்து, வயிரமுடைய கோலாகிய உலக்கையால் குற்றினார்கள்.

கிணற்றில் சில்லூற்றாக ஊறிய உவர் நீரை முகந்து வந்து, பழைய ஒறுவாய் போனபானையில் உலை ஏற்றினார்கள். உலையை முரிந்த அடுப்பில் வைத்துச் சோறு ஆக்கினார்கள். அரியாது ஆக்கின அச்சோற்றை உப்புக் கண்டத்தோடே, தெய்வங்களுக்குச் சேர இட்டு வைத்த பலிபோலத் தேக்கிலையில் வைத்து விருந்தினராக வந்த பாணர்க்கும் கொடுத்துத் தாமும் உண்டனர். இக்காட்சியைப் பெரும்பாணாற்றுப்படை (86-105) பெருமையுடன் காட்டுகிறது.

‘யாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வற்றலை யன்ன வைநுதி நெடுந்தகர்
ஈத்திலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிண வொழியப் போகி நோன்காழ்
இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல்
உளிவாய்ச் சிறையின் மிளிர மண்டி
இருநிலக்கரம்பை படு நீறாடி
நுண்புலடக்கிய வெண்பலெயிற்றியர்
பார்வையாத்த பரைதாழ் விளவின்
நீழல்முன்றில் நிலவுரற் பெய்து
குறுங்காழுலக்கை யோச்சி நெடுங்கிணற்று
வல்லூற்றுவரீ தோண்டித் தொல்லை
முரவு வாய்க் குழுசி முரியடுப்பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல்
-----------------------------------------
தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும்
பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவீர்”

என்று கடியலுர் உருத்திரங் கண்ணனார்வரைந்து காட்டும் சித்திரம், எயின் குடிமகளிரின் பகுத்துண்ணும் பண்பையும் விருந்தோம்பற் சிறப்பையும் இனிதே புலப்படுத்துகிறது.

குறிஞ்சி நிலத்துச் சிற்நூர் ஒன்றில் நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்றினைப் புறநானூற்றுப் புலவர் ஒருவர் நமக்குக் காட்டுகிறார். பெயர் தெரியாத அப்புலவர் காட்டும் காட்சி குறிஞ்சி நிலத்தில் கண சமூகமாக வாழ்ந்த மாந்தரின் எளிய தன்மையையும் தன்னல மறுப்பையும் விருந்தோம்பற் சிறப்பையும் பகுத்துண்ணும் பண்பையும் உணர்த்துகிறது.

அவ்வூரின்கண் வாழ்ந்த எயினர் கரவறியா உள்ளத்தவர், வெள்ளந்தியானவர்கள், நாகரிக உலகின் நடப்புக்கள் அவர்கள் அறியாதவை. ஆனால் மனைத் தலைவியானவள், தலைமைக்கேற்ற தகுதியும் தலைமைப் பண்பும் நன்மாட்சியும் வாய்க்கப்பெற்றவளாக விளங்கினாள். அவளைப் பற்றிப் புலவர்வரைந்து காட்டும் சித்திரம் கற்பார்க்கு வியப்பும் உவகையும் நல்குவதாக உள்ளது. அவ்வோவியம் இது :

‘நீருட்பட்ட மாரிப் பேருறை
மொக்குளன்ன பொகுட்டு விழிக்கண்ண
கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
தொள்ளை மன்றத் தாங்கட் படரின்
உண்கென உணரா உயவிற் றாயினும்
தங்கினிர் சென்மோ புலவீர் நன்றும்
சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
வரகுந் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுணக் கொளத் தீர்ந்தெனக்
குறித்து மாறெ திர்ப்பைப் பெறா அமையிற்
குரலுணங்கு விதைத் தினையுரல் வாய்ப்பெய்து
சிறிது புறப்பட்டன் றோவிலள் - புறநானூறு 333.

(புலவர்களே, ஊரின் கண் உள்ளதும் கரியபிடர் பொருந்திய தலையும் நீண்டகாதும் உடைய குறுமுயல் ஊருக்குள் இருக்கும் குறுகிய புதர்களில் துள்ளி விளையாடும் வளைகள் பொருந்தியதும் ஆன மன்றத்துக்குச் சென்றால், அங்கே உங்களை உண்ணுங்கள் என்று குறிப்பறிந்து கூறுபவர்கள் எவரும் இல்லாத வருத்தம் உடையதாயினும், அங்கே பெரிதும் தங்கிச் செல்வீர்களாக. சென்றதனால் மனைத் தலைவி, உங்களுக்கு உணவளிக்க விரும்பி, வரகும் தினையுமாக வீட்டில் இருந்தவற்றையெல்லாம் இரவலர் உண்டதனாலும் தானமாகக் கொண்டதனாலும் தீர்ந்து போனதனால், கைமாற்றுக் கடனாகவும் பெற முடியாத நிலையில் கதிரிடத்தே

முற்றி உலரவிட்ட விதைத்தினையை உரலில் இட்டுக் குற்றிச் சமைத்து உங்களை உண்ணச் செய்வாள், தனது இல்லாமையைச் சொல்லி நீங்கள் பசியோடு வெறுங்கையுடன் செல்ல விடமாட்டாள் ) என்று, தலைவியின் இயல்பு குறித்துப் புலவர் கூறுகிறார்.

“வரகும் தினையும் உள்ளவையெல்லாம்
இரவல்மாக்களுக் கீயத் தொலைந்தென”

தலைவி அவற்றைக் கைமாற்றுக் கடனாகப் பெற்றாவது பாணருக்கு உணவளிக்க நினைத்தாள். அதைப்பெற இயலாதநிலையில் “விருந்தோம்பல் ஓம்பா மடமையினும் வித்தட்டுண்டல் குற்றமன்று” எனத் தெளிவு பெற்று விதைத்தினையை உரலில் இட்டுக் குற்றிச் சமைத்து பாணருக்கு உணவளிக்க முன் வந்தாள். விருந்தினராக வந்த பாணரைப் பசியுடன் வெறுங்கையராக அனுப்புதல் பற்றி அவள் நினைத்தும் பார்த்தாளில்லை. கண சமூகத்திற்கே உரிய பகுத்துண்ணும் பண்பே, இங்கு அச்சமூகத்தின் தலைவியான மனையாளை, விதைத்தினையைக் குற்றிச் சமைத்துப் பாணரை உண்பிக்கத் தூண்டியது என்பது மிகையன்று.

உழவுத்தொழில் - வெ.பெருமாள் சாமி

மனிதன் வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் குறிஞ்சி முல்லை நிலங்களில் வாழ்ந்த கால கட்டத்தில் அந்நிலங்களில் வரகு தினை முதலியவற்றை விளைவித்தான். அவற்றுடன் உழுந்து, பயறு அவரை முதலியவற்றையும் விளைவித்தான். ஆனால் விளைச்சலின் பயன் அவனுக்கு, வாய்க்கும் கைக்கும் எட்டாத நிலையிலேயே இருந்தது. கடன் வாங்கிப் பிழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவன் தள்ளப்பட்டிருந்தான்.

எருதுகாலுறாஅ திளைஞர் கொன்ற
சில் விளைவரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு கடைதப்பலின்
ஒக்கல் ஒற்கஞ் சொலியத் தன்னூர்ச்
சிறு புல்லாளர் முகத்தளவை கூறி
வரகுக் கடனிறுக்கும் நெடுந்தகை “ - புறநானூறு : 327

(எருதுகளைப் பிணித்து அவற்றின் காற்கீழ்ப் பெய்து கடாவிடுதலின்றி இளையர்கள் காலால் மிதித்தெடுத்த சிலவாக விளைந்த வரகாகிய புல்லிய குவியலில், வளைத்துக் கொண்ட கடன்காரருக்குக் கொடுத்தது போக எஞ்சியதைப் பசித்து வந்த பாணர் உண்டு வெளியேறினாராக, புறங்கடை வறிதாகலின் சுற்றத்தாருடைய வறுமையைக் களைய வேண்டித் தன்னூரில் வாழும் சிறிய புல்லாளர் முன்னே தனக்கு வேண்டுமளவைச் சொல்லி வரகைக் கடனாகப் பெறும் நெடிய புகழுடைய தலைவன்) என்று, உழவன் தன் சுற்றுத்தாருடைய வறுமையைக் களைய வேண்டி வரகைக் கடனாகப்; பெற்ற செய்தியைப் புறநானூறு கூறுகிறது.

வரகுந்தினையுமுள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுணக் கொளத்தீர்ந்தெனக்
குறித்து மாறெதிர்ப்பைப் பெறாஅ மையிற்
குரலுணங்கு விதைத்தினையுரல் வாய்ப்பெய்து
சிறிது புறப்பட்டன்றோவிலள்” - புறநானூறு : 333

(வரகுந்தினையுமாகத் தன்மனையில் உள்ளவற்றை யெல்லாம் இரவலர் உண்டதனாலும் கொண்டதனாலும் தீர்ந்தனவாக விருந்தினராக வந்த பாணரை உண்பித்தற்பொருட்டு, வரகைக் கடனாகப் பெற முடியாமையால் கதிரிடத்தே முற்றி உலரவிட்ட விதைத்தினையை உரலிற் பெய்து குற்றிச் சமைத்து மனைத்தலைவியானவள் உண்பித்தாள்) என்று மனனத்தலைவி விருந்தினரின் பொருட்டு விதைத்தினையைக் குற்றிச் சமைக்க முற்பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது. இவ்வாறு,கணசமூகமாக வாழ்ந்த குறிஞ்சி முல்லை நிலமாந்தரின் பற்றாக்குறையான அவலவாழ்வு குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. இம்மக்கள் வறுமையில் வாடினாலும் பண்பில் உயர்ந்து ஓங்கி நின்றதைக் காண்கிறோம். இவ்வுயர்வுக்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் கணசமூகமாக வாழ்ந்தனர். அது பொதுவுடைமை வகைப்பட்ட கணசமூகம்.

இரும்பு கண்டுபிடிக்கப் பட்டுப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு உற்பத்திக் கருவிளிலும் உற்பத்தி முறையிலும் மாற்றம் ஏற்பட்டது. காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலமாக்கப்பட்டன. ஆறுகளும், ஓடைகளும் மறித்து ஏரிகளும் பாசனக் குளங்களும் அமைக்கப்பட்டன. புதர் மண்டிக் கிடந்த காடுகள் வயல்களாக – விளைநிலங்களாகத் திருத்தப்பட்டன. வரகும் தினையும் விளைந்த வன்னிலங்கள் நெல்லும் கரும்பும் இஞ்சியும் மஞ்சளும் வாழையும் கமுகும் விளையும் மென்னிலங்கள் ஆக்கப்பட்டன. காடு திருத்தி விளைநிலமாக்கப்பட்ட செய்தியை ‘காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி” (பாட்டினைப்பாலை (283 -84) என்றும் ‘நிலன் நெளிமருங்கில் நீர் நிலை பெருகத் தட்;டோரம்ம இவண் தட்டோரே” (நிலம் குழிந்த விடத்தே நீர் நிலை மிகும்படியாகத் தளைத்தோர்தாம் இவ்வுலகத்துத் தம் பேரோடு தளைத்தவர் ஆவர்) புறநானூறு 18) என்றும் சங்க இலங்கியங்கள் கூறுகின்றன. இவ்வேலைகள் அனைத்ததையும் அடிமைகளே செய்து முடித்தனர். ஆனால் திருத்தப்பட்ட நிலங்கள் தனி நபர் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தன. உழைப்பாளிகளான அடிமைகளின் பேருழைப்பால் விளைச்சல் பெருகியது. ஒட்டுண்ணிகளாகத் தலையெடுத்த ஆண்டைகள் அதனை அபகரித்துக் கொண்டனர்.

அடிமைகளின் அயரா உழைப்பால் விளைச்சல் அபரிமிதமாகப் பெருகியது. ‘ஒரு பிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு’ என்றும் ‘தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளையும்” என்றும் இலங்கியங்கள் அடிமைகளின் உழைப்பால் விளைந்த மிகுவிளைச்சல் பற்றிக் கூறுகின்றன.

உழைக்கும் மக்களாகிய உழவர்,உழத்தியர், கடையர், கடைசியர் முதலியவர்களின் உழைப்பால் உழவுத்தொழில் சிறப்புப்பெற்றது. உழவுத் தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து திருவள்ளுவர் கூறுகிறார்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு - குறள்.

(ஏரால் உழுதலைப் போல எருவிடுதலும் பயிருக்கு நல்லதே யாம், களையினை நீக்கிய பிறகு பயிரைப் பாதுகாத்தல் நீர்பாய்ச்சுதலைப்போல நல்லதேயாகும்) என்பது உழவு குறித்து வள்ளுவர் கூறும் தொழில் நுட்பம் ஆகும். இக்குறளில் அவர் நிலத்தை உழுதல் பயிரைப்பாதுகாத்தல் நடவுக்குப் பிறகு களை நீக்குதல் , நீர் பாய்ச்சுதல், பயிரைப் பாதுகாத்தல் என உழவுத்தொழிலில்; கடைப்பிடிக்கவேண்டிய உத்திகள் குறித்துக் கூறியுள்ளார். சங்க காலத்தில் உழவர்கள் பின்பற்றிய உத்திகளைக் கண்டுதான் வள்ளுவர் அவ்வாறு கூறியிருத்தல் கூடும்.

ஆறு குளம் ஏரி முதலிய நீர் நிலைகளில் இருந்து உழவர்கள் வயலுக்கு நீர்பாய்ச்சினர், உழுது சேறாக்கித் தொளி கலக்கினர். பரம்படித்துப் பண்படுத்தினர். நாற்று நட்டனர். களை பறித்தனர். நீர்பாய்ச்சினர். பறவைகளும் விலங்குளும் பயிரை அழித்து விடாமல் பாதுகாத்தனர். நெல்லறுத்துப் போரடுக்கினர். பிணையல்அடித்துப் பொலி தூற்றினர். நெல்லை மலைபோலக் குவித்தனர். குவித்த நெல்லை ஆண்டைகளின் மனைகளில் இருந்த நெற் கூடுகளில் இட்டு நிரப்பினர். இத்தொழிலில் அடிமைகளான களமரின் உழைப்பு கடுமையானது. இது குறித்து சங்க இலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன.

‘நல்லேர் நடந்த நசைசால் விளைவயல் “ (நன்றாக எருதுகள் உழுத நச்சுதல் அமைந்த, விளைகின்ற வயல்) என்றும் ‘எருதெறிகளமர் ஓதை “
(எருதுகளை அடித்து உழுகின்ற களமர்களின் ஓசை) என்றும் சங்க இலக்கியங்கள் உழவு பற்றிக் கூறுகின்றன.

‘மிதியுலை கொல்லன் முறிகொடிறன்ன
கவைத் தாளலவன் அளற்றளை சிதையப்
பைஞ்சாய்கொன்ற மண்படு மருப்பிற்
காரேறு பொருத கண்ணகன்செருவின்
உழா நுண்டொளி நிரவிய வினைஞர்”

(மெத்தென்ற துருத்தியை அமுக்கி ஊதுகின்ற உலையிற்கொற்றொழில் செய்கின்றவனுடைய முறிந்த கொடிற்றை யொத்த கப்பித்த கால்களையுடைய நண்டினது சேற்றின்கண் உண்டாகிய முழை கெடும்படி பசிய கோரையை அடியிலே குத்தியெடுத்த மண்கிடக்கின்ற கொம்பையுடைய கரிய கடாக்கள் தம்மிற் பொருத இடமகன்ற செய்யின்கண், தாம் உழப்படாத நுண்ணிய சேற்றை உழவர் ஒக்க மிதித்து நிரவினர்) என்று, உழவர்கள் வயலில் நீர் பாய்ச்சித் தொளிகலக்கி உழுது சேற்றை நிரவிப் பண்படுத்திய செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை (207 -11) கூறுகிறது.

கடைசியர் நாற்று நடுதலும் களைபறித்தலும்

தொளி கலக்கிப் பண்படுத்திய வயல்களில் கடைசியர் நெல்நாற்றை நடவு செய்தது பற்றியும் களைபறித்தது பற்றியும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ‘முடிநாறழுத்திய நெடுநீர்ச் செறு” என்று பெரும்பாணாற்றுப்படை அது குறித்துக் கூறுகிறது. வயலில் கடைசியர் களைபறித்தது குறித்தும் அந்நூல் கூறுகிறது. கடைசியர் களையாகப் பறித்த தண்டினை வளையலாக அணிந்து அழகுபார்த்ததனை ‘கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்” என்று புறநானூறு கூறுகிறது.

களைஞர் தந்த கணைக்கால் நெய்தல்
கட்கமழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக்
கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டவண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி
யீருடை யிருந்தலையாரச் சூடி’

(முடியாகக் கிடந்த நாற்றை நட்ட நெடிய நீரையுடைய செய்களில், களையைப் பறிப்பார் களையாகப் பறித்துப் போட்ட திரண்ட தாளையுடைய நெய்தலினது தேன்நாறுகின்ற புதிய பூவை வெறுத்தார்களாயின் அரும்புகள் சூழ்ந்த முள்ளையுடைய பூவைப் பறித்துக் கொண்டு அந்நிலத்தில் உள்ள தண்டாங் கோரையைப் பல்லாலே சவட்டிக் கிழித்து முடிந்த நாராற் கட்டின புனைதற்கினிய மாலையை ஈர்நிறைந்த கரிய தலையிற் சூடினர்) என்று, பெரும்பாணாற்றுப் படை (211-18) வயலிற்களை பறித்த கடைசியர் நெய்தற் பூவையும் முள்ளியின் பூவையும் தண்டாங்கோரையைப் பல்லால் சவட்டிக் கிழித்ததில் தொடுத்து ஈர் நிறைந்த தலையிற் சூடிக் கொண்டதைப் பேசுகிறது.

‘கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாணெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறு.”

(கொண்டையாகிய மயிரையும் குளிர்ந்த தழையுடையையும் உடைய கடைசியர், மலங்கு மீன் பிறழ்கின்ற செய்யில் நெய்தலையும் ஆம்பலையும் களைந்தனர்) என்று, கடைசியர் வயலில் ஆம்பலும் நெய்தலுமாகிய களையைப் பறித்தனையும் தழையுடையை அணிந்திருந்ததையும் புறநானூறு (61) கூறுகிறது.

களமர் வயலுக்கு நீர் பாய்ச்சுதல்

களமர் கடைசியர் கடையர் என்று அழைக்கப்பட்ட அடிமைகள் வரிசையாக நின்று இடா ஏற்றம், பூட்டைப் பொறி பிழா பன்றிப் பத்தர் முதலியவற்றால் குளங்களில் இருந்து வயல்களுக்குத் தண்ணீர் இறைத்த காட்சியைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

‘நீர்த் தெவ்வு நிரைத் தொழுவர்
பாடு சிலம்பின் மிசை ஏற்றத்
தோடு விளங்கும் அகலாம்பியிற்
கயனகைய வயல் நிறைக்கும்
மென்றொடை வன்கிழார்” - மதுரைக் காஞ்சி : 89 – 95

(வயல் தழைக்கும்படி நீரை நிறைத்தற்குக் காரணமான குளங்களில் நிரையாக நின்று தொழுவர்கள் நீரை இடாவால் முகந்து ஒலிக்கும் ஓசை : ஏற்றத்துடனே உலாவும் அகன்ற பன்றிப் பத்தரின் ஓசை: மெத்தென்ற கட்டுக்களையுடைய பூட்டைப்பொறியின் ஓசை : எருதுகள் பூண்ட தௌ;ளிய மணிகளின் ஓசை : பயிர்களிற் படியும் கிளி முதலியவற்றை ஓட்டும் ஓசை ஆகியன பற்றியும் சங்க இலங்கியங்கள் செய்தி கூறுகின்றன. பனையோலை யாற் செய்த பிழா என்னும் ஓலைப் பெட்டியால் உழவர் ஆற்றில் இருந்து வயலுக்கு நீர் இறைத்த செய்தியைச் சிலப்பதிகாரம் செப்புகிறது.

‘ஆம்பியும் கிழாரும் வீங்கிசை ஏற்றமும்” என்று அந்நூல் அது குறித்துக் கூறுகிறது.

‘வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை’ மதுரைக்காஞ்சி : 109 – 10

(யாறுகள் வெள்ளம் மாறாமல் வந்து விளைதல் பெருகுகையினாலே முற்றின நெல்லு காற்றடித்து அசைதலினாலே எழுந்த ஓசை, நெல்லரிவாரது ஓசை) என்று வயல்களில் வெள்ள நீர் பாய்ந்தமை குறித்தும் விளைந்த நெல்லைக் களமர் அரிந்தது பற்றியும் நூல்கள் கூறுகின்றன.

‘ஏர்பரந்த வயல் நீர்பரந்த செறு
நெல்மலிந்த மனை பொன்மலிந்தமறுகு” புறநானூறு : 338

என்று, நீர் நிறைந்த வயல்களில் ஏர்கள் உழுதமை குறித்தும் ஆண்டைகளின் மனைகள் நெல்லால் நிறைந்தமை குறித்தும் அவர்கள் வாழும் தெருக்கள் பொன்னால் நிறைந்தமை குறித்தும் சங்க இலக்கியங்கள ; கூறுகின்றன.

பயிர் பாதுகாப்பு

வேட்டைச் சமூகமாக வாழந்த மக்கள் மேய்ச்சல் சமூகமாக மாற்றமடைந்து உழவுத் தொழிலை மேற்கொண்டு வரகு தினை முதலியவற்றைச் சாகுபடி செய்த காலம் முதலே பயிர்களைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். குறிஞ்சி முல்லை நிலங்களில் வரகும் தினையும் பயிரிட்ட எயினர்கள் யானை மான், பன்றி முதலிய விலங்குளாலும் கிளி மயில் புறா முதலிய பறவைகளாலும் பயிருக்கு ஏற்படும் சேதங்களினின்றும் அவற்றைப் பாதுகாக்கப் பரண் அமைத்துக் காவல் காத்தனர், பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் காவற்பணியில் ஈடுபட்டனர். இதனை,

‘நெற்கொணெடு வெதிர்க்கணந்தயானை
முத்தார் மருப்பினிறங்குகை கடுப்பத்
துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்
நற்கோட் சிறுதினைப் படுபுள்ளோப்பி
எற்பட வருதியரென நீ விடுத்தலிற்
கலிகெழு மரமிசைக் சேணோன் இழைத்த
புலியஞ்சிதண மேறி யவண
சாரற் சூரற் றகைபெற வலந்த
தழலுந் தட்டையுங் குளிரும் பிறவும்
கிளிகடி மரபினூழூழ் வாங்கி
யுரவுக் கதிர் தெறூஉம்”

(நெல்லைத் தன்னிடத்தே கொண்ட நெடியமூங்கிலைத்தின்றற்கு மேல் நோக்கி நின்று வருந்தின யானை, அவ்வருத்தந் தீரும்படி முத்து நிறைந்த கொம்பிலே ஏறட்டு நான்ற கையையொப்ப, துய்யையுடைய, தலை வளைந்த ஈன்றணிமை தீர்ந்த கதிர்களை நன்றாகத் தன்னிடத்தே கொள்ளுதலையுடைய சிறிய தினையிலே வீழ்கின்ற கிளிகளை யோட்டி, பகற்பொழுது கழியாநிற்ப நீவீர் வருவிராக என்று கூறி நீ போக விடுகையினாலே யாங்களும் போய், ஆரவாரம் பொருந்தின மரத்தின் உச்சியிலே இராக்காலம் ஆகாயத்திருப்போன் பண்ணின புலியஞ்சுதற்குக் காரணமானதும் அவ்விடத்தன வாகிய மலைப்பக்கத்துப் பிரம்பாலே அழகுபெறத் தெற்றினதுமான பரணிலே ஏறித் தழலும் தட்டையும் குளிரும் பிறவுமாகியகிளியோட்டும் முறைமை யினையுடையவற்றை, மிகுதலையுடைய ஞாயிற்றின் கிரணங்கள் சுடும் வெம்மை விளங்கின்ற பொழுதிலே முறைமுறையே கையிலே வாங்கி ஓட்டினோம்) என்று குறிஞ்சி நிலத்தில் மகளிர் பகற்பொழுதில் பரண்மீதமர்ந்து கிளிகடி கருவிகளைக் கொண்டு பறவைகளை ஓட்டிக் காவல் காத்தமை பற்றி மதுரைக் காஞ்சி (35-45) கூறுகிறது.

‘வட்டவரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்” என்று புறநானூறு (28) இரவில் தினைப் புனங்காத்த எயினரைச் சேவல் கூவித்துயில் எழுப்பியது குறித்துக் கூறுகிறது. இவ்வாறு பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் தினைப்புனம் காத்தமை குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. அடிமைச் சமூகத்தில் மருதநிலத்தில் வயல்களில் விளைந்துநின்ற நெற்பயிர்களைப் பாதுகாக்கும் பணியில் அடிமைகளான ஆடவரும் மகளிரும் ஈடுபட்டிருந்தனர். இதனை,

‘கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து” - புறநானூறு 396

(கழிகள் சூழப்பட்ட, நெல் விளைந்து கிடக்கும வயலின் கண் அரித்த ஓசையை யுடைய பறையை முழக்குவதால் கதிர் கவரவரும் கிளி முதலிய பறவைகளை ஓட்டினர்) என்றும்

‘புதற்றளவில் பூச்சூடி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து” - புறநானூறு : 395.

(மகளிர் புதலிடத்தே மலர்ந்த தவள முல்லையின் பூவைத்தலைவிற் சூடிக் கொண்டு அரித்த ஓசையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த நெற்கதிர்களை யுண்டற்குவந்து படியும் பறவைகளை யோட்டினர்) என்றும் புறநானூறு கூறுகிறது.

செம்பொன் மலைபோல் சிறப்பத்தோன்றும் நெற்பொலி

களமர் வயலில் நெல்லரிந்தது குறித்தும் சூடு அடுக்கிப் போரடித்துப் பொலிதூற்றியது குறித்தும் தூற்றிய நெல்லைச்செல்வர்மனைகளில் உள்ள நெற் கூடுகளில்கொண்டு போய்ச் சேர்த்தது குறித்தும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

‘கூனி குயத்தின் வாய் நெல்லரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவை இய குன்றாக் குப்பை’
(களமர் வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லையறுத்து நாடோறும் கடாவிட்டு மேருவென்னும்படி திரட்டின தொலையாத நெற்பொலியை நெருங்கத்தெற்றின குதிரின்கண் வெற்றிடம் இல்லையாம்படி பெய்தனர்.) என்று பொருநராற்றுப்படை (242 – 48) கூறுகிறது.

கழனிகள் நீங்காத புதுவருவாயையுடையவை , அவற்றில் நெற்பயிர் விளைந்து முற்றியிருந்தது. பசுமையறும்படி முற்றின பெரிய கதிர்கள், அறுப்பார்க்கும் சூடாக அடுக்குவார்க்கும் பிணையலடித்துக் கடாவிடுவார்க்கும் பெரிதும் துன்பம் விளைப்பன, குளவிகள் கொட்டினாற் கடுப்பது போலக் கடுக்கும் தன்மையன, களமர் அக்கதிர்களின் திரண்டதாளையறுத்துக்கட்டுக்களாகக் கட்டிப் பிணையலடித்தனர். எருதுகள் போன பின்பு வைக்கோலையும் கூளத்தையும் நீக்கினர். ஈரம் உலரா நிற்க, பொலியை மேல் காற்றிலே கையாலே தூற்றினர். தூற்றிய நெல் மேருமலை போலக் குவிந்து கிடந்தது. இக்காட்சியை,

‘நீங்காயாணர் வாங்கு கதிர்க் கழனிக்
கடுப்புடைப்பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செய் நெல்லின்
தூம்புடைத்திரள் தாள் மிதுத்த விளைஞர்
பாம்புறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலிபெறு வியன்களமலிய வேற்றிக்
கணங் கொள் சுற்றமொடு கைபுணர்ந்தாடும்
துணங்கையம் பூதம் துகிலடுத்தவை போல்
குழுமுநிலைப் போரின் முழு முதல் தொலைச்சிப்
பகடூர் பிழிந்த பின்றைத்துகள் தப
வையுந் துரும்பும் நீக்கிப் பைதறக்
குடகாற்றெறிந்த குப்பை வடபாற்
செம்பொன்மலையின் சிறப்பத்தோன்றும்” என்று பெரும்பாணாற்றுப்படை (228-241) காட்டுகிறது.

வயலில் களை பறித்த கடைசியர், வயலில் பிறழ்ந்து துள்ளிய மலங்கு, வாளை முதலிய மீன்களைத் தளம்பு என்றும் சேறு குத்தியால் பிடித்து வந்தனர். அதனைத் துண்டு துண்டாக அறுத்துச் சமைத்ததனைப் புதிய நெல்லில் சமைத்த வெள்ளிய சோற்றுக்கு மேலீடாகக் கொண்டு விலாப்புடைக்கத் தின்ற களமர், குனியமாட்டாதவராய், சூட்டை இடும் இடம் அறியாமல் தடுமாறினர் என்ற செய்தியை,

‘கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாணெய்தல் ஆம்பலொடுகட்கும்
மலங்குமிளிர் செறுவிற்றளம்பு தடிந்திட்ட
பழனவாளைப்பரூ உக்கட்டு ணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கையுறையாக
விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனி சூடு தடுமாறும்
வன்கை வினைஞர்” – புறநானூறு :61
என்று கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் நகைச்சுவை தோன்றக் கூறினார்.

ஆமை முதுகில் அரிவாள் தீட்டல்

களமர் வயலில் நெல்லறுத்துக் கொண்டிருந்தபோது அரிவாள் முனை மழுங்கிவிட்டது. அதனால் அவர்கள் விரைந்து அறுக்க முடியவில்லை. அரிவாளைத் தீட்டிக் கூராக்கினால் தான் தொடர்ந்து விரைவாக அறுக்க முடியும். அவ்வாறு ‘மறத்தோடு அரியும்படி (விரைந்து அரியும்படி) நிலவுடைமையாளரான ஆண்டைகள் அடிமைகளான களமரை வற்புறுத்தி ஏவினர். எனவே களமர் வயலில் கிடந்த ஆமையின் முதுகில்முனை மழுங்கிய அரிவாளைத் தீட்டிக் கொண்டார்களாம்.
‘களமர் ஏன் ஆமை முதுகில் அரிவாளைத் தீட்டினர்? வயலில் இருந்து வெளியேறி மேட்டு நிலத்துக்கு வந்து கல்லில் தீட்டினால் என்ன? என்ற வினாக்கள் இயல்பாக எழும். அறுவடையின் போது வேலையை இடையில் நிறுத்தி விட்டுக் களமர் அரிவாளைக் கூர் தீட்டுவதற்காக வயலில் இருந்து வெளியேறினால் வேலை தாமதப்படும். அதனால் ஆண்டைகள் அதை அனுமதிக்கவில்லை. வயலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாத நிலையில் வேறு வழியின்றிக் களமர் வயலில் கிடந்த ஆமையின் முதுகில் அரிவாளைத் தீட்டிக் கொண்டார்கள் என்பதே உண்மை. இக்காட்சியைப் புறநானூறு (379) தெளிவாகக் காட்டுகிறது.

‘நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கிற்
பின்னை மறத்தோடரியக் கல் செத்து
அள்ளல் யாமைக் கூன்புறத்துரிஞ்சும்
நெல்லமல் புரவு ‘ என்பது அந்நூல் காட்டும் அரிய காட்சியாகும்.

களமர் அரிவாளைக் கூர்தீட்டிக் கொள்ள வயலில் இருந்து வெளியேறுதலும் கூடாது, விரைந்து அறுத்திடவும் வேண்டும். எனவே களமர் ஆமைமுதுகில் அரிவாளைக் கூர் தீட்டிக் கொண்டார்கள். அக்காலத்தில் அடிமை எஜமானர்களான ஆண்டைகளால் அடிமைகளான களமர் எவ்வளவு கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். என்பதை ‘பின்னை மறத்தோடரிய’ என்னும் தொடர் உணர்த்துகிறது. இதனை’மடியாவினைஞர் (ஓய்வறியாத உழைப்பாளிகள்) என்னும் தொடர் மேலும் வலியுறுத்துகிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சைத் தரணியில் நாற்று நடுதல் களைபறித்தல் முதலிய பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்கள், பசியால் அழுகின்ற கைக்குழந்தைக்குப் பால் கொடுத்துப்பசி போக்கி அழுகையை அமர்த்துவதற்காக வேலையின் இடையில் வயலை விட்டு வெளியேறுவதைப் பண்ணையாளர்களான ஆண்டைகள் அனுமதிப்பதில்லை. செங்கொடி இயக்கத்தின் நீண்ட நெடிய வலிமைமிக்க போராட்டத்திற்குப் பிறகுதான் அக்கொடிய நிலைமை மாறியது என்பது அண்மைக் கால வரலாறு நமக்கு அறிவிக்கும் செய்தியாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சங்ககாலத்தில் அடிமைச் சமூகத்தில் தோன்றியிருந்த அக்கொடிய வழக்கம் இருபதாம் நூற்றாண்டில் செங்கொடிஇயக்கம் தலையிட்டுத் தீர்க்கும் வரையிலும் நீடித்திருந்தது. நாகரிகம் வளர்ந்து விட்டது. என்று கருதும் இருபதாம் நூற்றாண்டிலும் இக்கொடுமைகள் நீடித்திருந்தன என்னும் போது, மனிதன் அநாகரிக நிலையில் வாழ்ந்த அடிமைச் சமூகத்தில் அடிமைகளான களமரின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பது கற்பனைக்கும் எட்டாததாகும்.

வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் மனிதன் வாழ்ந்த காலத்தில் காட்டைத் திருந்தி வரகும் தினையும் விளைவித்தான். விளைந்து வந்த வரகும் தினையும் குதிர்களில் சேமிக்கப்பட்டன. சேமிக்கப்பட்ட அவை அனைவருக்கும் பொதுவாக இருந்தன. அதனை; அடையாளமாக அக்குதிர்கள் பொது இடமாகிய அரணின் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அவை யானைக் கூட்டம் போல் காட்சியளித்தன என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

அடிமைச் சமூகத்தில் நெல் விளைவிக்கப்பட்டது. அந்நெல் நெற் கூடுகளில் சேமிக்கப்பட்டது. அக்கூடுகள் ஆண்டைகளின் வளமனைகளில் தான் அமைக்கப்பட்டிருந்தன. ஏணிக்கு எட்டாத உயரமுடைய அக்கூடுகளில் களமர் தாம் விளைவித்த நெல்லைக் கொண்டு போய்ப் பெய்து சேமித்தனர். ஆனால் நெல்லை விளைவித்த களமர்க்கு அதன் மீது உரிமை ஏதும் இல்லை. உற்பத்தி செய்த களமர்க்கு நெல்லின் மீது இருந்த உரிமை மறுக்கப்பட்டது. நெல்தனியுடைமை ஆக்கப்பட்டு விட்ட செய்தியை இலக்கியங்கள் நமக்குத் தெளிவு படக்கூறுகின்றன.

‘ஏணி எய்தா நீணெடு மார்பில்
முகடு துமித் தடுக்கிய பழம்பல்லுணவிற்
குமரி மூத்த கூடோங்கு நல்லில்”
(ஏணிக்கு எட்டாத நெடிய வடிவினையும் தலையைத்திறந்து உள்ளே சொரியப்பட்ட பலவாகிய பழைய நெல்லினையும் உடைய அழியாத் தன்மையவாய், முதிர்ந்த கூடுகள் வளர்ந்த நல்ல இல்) என்ற பெரும்பாணாற்றுப்படை (245- 47) வரிகள், நெல் தனியுடைமை ஆக்கப்பட்டு விட்டதற்கும். பசியோடும், பட்டினியோடும் உழைக்கின்ற மக்களுக்கு வழங்கப்படாமல் நெடுங்காலம் கூடுகளில் கிடந்தது என்பதற்கும் சான்றளிக்கின்ற சாசன வரிகளாகத் திகழ்கின்றன.