17/04/2011

குலதெய்வம்: இது எங்க சாமி! - தொ.பரமசிவன்

சில நொடிகள் கனத்த மௌனமும் சில நொடிகள் பேரிரைச்சலும் ஏற்படுத்துகின்றன அலைகள்! கடற்கரையோரம் செழித்திருக்கின்றன பனைகள். மீன் வீச்சமும், உப்புக் காற்றும் நிறைந்திருக்கிற உவரி கிராமத்தின் கடற்கரையில் குதிரை மீது இருக்கிறார் சாஸ்தா!

திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தள்ளி இருக்கிறது உவரி கடற்கரைக் கிராமம். சாலையின் இரண்டு பக்கமும் சிவப்பேறிக்கிடக்கிறது மண். வழியெல்லாம் கள்ளிச் செடிகள்.

சாஸ்தாவின் முன் தன் மகள் விஜயலட்சுமியுடன் கை கூப்பி நிற்கிறார் தொ. பரமசிவன். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர். தமிழியல், நாட்டுப்புற ஆய்வில் முக்கியமானவர். "அறியப்படாத தமிழகம்", "தெய்வங்களும் சமூக மரபுகளும்" என்ற இவரது ஆய்வு நூல்கள் மிகப் பிரபலம்.

"எம் மகளுக்குக் கல்யாணம். அதான் முதல் அழைப்பை சாஸ்தா காலடியில் வெச்சு ஆசி வாங்க வந்திருக்கேன்." ஒரு தகப்பனின் அன்பு, கண்களில் பொங்கப் பேச ஆரம்பிக்கிறார் தொ.ப!

"எங்க சாஸ்தா, சைவச்சாமி. குதிரை மேல ஏறி ஊரைச் சுத்தி வந்து காவல் காக்கிற முக்கியமான வேலை சாஸ்தாவுக்கு. கடல் பக்கமா பார்த்து உட்கார்ந்தபடியே குடிகளைக் காப்பாத்துவார்ங்கிறது மக்களோட நம்பிக்கை" என்கிறார்.

"தமிழர்களின் வீர வழிபாட்டுக்கான அடையாளம்தான் குல தெய்வங்கள். கால்நடைகளை, கண்மாய் நீரை, பெண்களை, விளைந்த பயிர்களைக் காக்கின்ற சண்டைகளில் உயிர்நீத்த மனிதர்கள் தான் வீர வழிபாட்டில் தெய்வங்களானார்கள். பெண்தெய்வங்களின் கதைகளும் பயங்கரமானவை. பகைவரால் கொல்லப்பட்டோர், பாலியல் வன்முறையில் இறந்தோர், பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்கவும், அதை எதிர்க்கவும் தற்கொலை செய்துகொண்டோர், கணவனோடு உயிர்நீத்தோர் ஆகியோரே பெண்தெய்வங்களாக மாறினர்" - காலத்தின் சாட்சி மாதிரி கம்பீரமாகப் பேசுகிறார் பரமசிவம்.

"ஏழெட்டு தலைமுறைக்கு முன்னால் என் முன்னோர்கள் திருநெல்வேலிக்கு இடம் பெயர்ந்துவிட்டார்கள். அதன் பிறகு சாஸ்தாவைக் கும்பிட இங்கே உவரிக்கு வருவதென்றால் வண்டி கட்டிக்கொண்டுதான் வரவேண்டும். போக்குவரத்து வசதிகள் எதுவுமே இருந்திராத காலத்தில் காட்டுப்பாதையில் வந்து போவதன் சிரமங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் குல முதல்வனை வழிபட ஒருவரும் தவறியதே இல்லை.

பின்னர் ஒரு கட்டத்தில் உவரியிலிருந்து பிடிமண் கொண்டுவந்து, திருநெல்வேலியிலேயே ஒரு சாஸ்தா கோவிலை உருவாக்கினார்கள். இப்போது ஊர் ஊருக்கு சாஸ்தா, மதுரைவீரன், அய்யனார், அங்காளபரமேஸ்வரிகள் இருக்கக் காரணம் பிடிமண் கிளைக்கோவில்கள்தான். வருடத்திற்கு ஒருமுறையாவது குடிசாமியின் முன் நின்று வேண்டிக் கொண்டால் தான் எம் மக்களுக்கு மனசு ஆறும். இல்லையென்றால் குடும்பத்தில் நடக்கிற எல்லா அசம்பாவிதங்களுக்கும், குடிசாமியின் கோபமே காரணமாகச் சொல்லப்படும். கிளைக்கோவில்கள் வந்த பிறகும், தாய்க் கோவிலை இன்னும் மறக்காமல் இருப்பதுதான் இந்த சமூகத்தின் பண்பாட்டு அடையாளம்.

மக்கள் வசதி வாய்ப்பு அற்றவர்களாக இருந்தால், அவர்களின் குடிசாமியும் அப்படியே வறுமையில் இருக்கும். சாஸ்தாவின் குடிகள் இப்போது கொஞ்சம் வசதிபெற்றுவிட்டார்கள் போலும். கோபுரம் கட்டி கும்பாபிஷேகமே நடத்திவிட்டார்கள். எங்கள் பாட்டானார் காலத்தில் சாஸ்தாவின் மீது உப்பு வாசமும் மீன் வீச்சமும் அடிக்கும். இப்போது சந்தனமும் ஜவ்வாதும் மணக்கிறது. கடல் மணற்பரப்பில் கூரைகூட இல்லாமல், மக்களோடு சேர்ந்து வெயிலில் காய்ந்திருந்தவருக்குக் கருவறை வந்துவிட்டது. திருநெல்வேலி வட்டார மொழியில் பாட்டும் கதையுமாக கலந்திருந்த சாஸ்தாவின் வீரமும், ஈரமும் இப்போது சமஸ்கிருதமாகிவிட்டது. மக்களின் தெய்வங்கள், இப்படியே மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விடுமோ என்ற வருத்தம்தான் மனதை அரிக்கிறது". வேதனை இழையோட அப்பா பேசுவதை, கண்கொட்டாமல் பார்க்கிறார். தொ.ப.வின் மகள் விஜயலட்சுமி.

"குலதெய்வங்களின் கோயில் திருவிழாக்கள் பெரும்பாலும் மகாசிவராத்திரியன்று நடக்கும். விடியவிடிய சாமியாடி மக்கள், தங்கள் குடிமுதல்வனின் குறைகளைக் கேட்பர். பெரும்பாலும் கோயில்களில் பூசாரிகள் சாமியாடிகளாக இருப்பதில்லை. தங்கள் குடிகளின்மேலே சாமி வந்திறங்கி தனக்கு நேர்ந்த குறைகளைச் சொல்லும்.

இந்த நூற்றாண்டில்தான் பல சிறுதெய்வங்கள் பெருந்தெய்வமாக மாற்றப்பட்டன. சாஸ்தா இன்றைக்குப் பெருந்தெய்வத்திற்கான தோற்றத்துடன்தான் இருக்கிறார். எதிர்காலத்தில் எங்கள் சாஸ்தாவின் கல்குதிரை தங்கக்குதிரையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பெண்தெய்வங்கள்தான், பெரும்பாலும் இந்த மாற்றத்திற்குட்படுகின்றன. ரத்தப்பலி நிறுத்தப்படுகிறபோதும், சமஸ்கிருத மந்திரம் ஓதப்படுகிறபோதும் சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களாகி விடுகின்றன. ரத்தப்பலி தருதல் என்பது பெரும்பாலும் ஆண் விலங்குகளையே தருவர். பெண்விலங்குகள் உயிர் பெருக்கும் சக்திகள் என்பதால், அவற்றைப் பலிகொடுத்தால் தெய்வம் தண்டிக்கும் என்னும் நம்பிக்கையே இதற்குக் காரணம்.

சிறுதெய்வங்கள் இல்லாத கிராமங்களை தமிழகத்தில் நம்மால் பார்க்கமுடியாது. அவற்றில் பாதிக்குமேல் பெண் தெய்வங்களே குடிதெய்வங்களாக இருக்கின்றன. நம்முடைய வழிபாடே தாய்தெய்வ வழிபாடுதானே.

ஆண்தெய்வங்களைவிட பெண் தெய்வங்கள் இன்னும் உக்கிரத்தோடு இருக்கும். பெண் தெய்வங்களுக்குப் பலிதரும் முறை அச்சமூட்டுவதாக அமைந்திருக்கும். நிறைசினையாக உள்ள ஒரு ஆட்டை கொண்டு வந்து பெண் தெய்வத்தின் முன் நிறுத்த, வேல் போன்ற கருவியினால் அந்த ஆட்டின் வயிற்றைக் குத்திக் கிழித்து, அதன் உள்ளே இருக்கும் குட்டியை எடுத்து பலிபீடத்தின்மீது வைப்பர். இதனை "சூலாடு குத்துதல்" என்று பெயரிட்டு அழைத்தனர். சில இடங்களில் சாமியாடிகள், பலியிடப் பெறும் விலங்குகளின் ரத்தத்தைக் குடிப்பதுண்டு. தாய் தெய்வங்கள் தம் தாய் தெய்வங்கள் தம் மக்களைக் காக்க, அரக்க வடிவிலான தீமையை ஆயுதந்தாங்கி போரிட்டு அழிப்பதாக நம்பிக்கை. அதற்கு இத்தகைய உக்கிரத்தோடு இருக்கவேண்டும் என்கிற மக்களின் விருப்பம்தான் இத்தகைய சடங்குகள். சிறுதெய்வ வழிபாட்டின் பல சடங்கு கூறுகள் தமிழர்களின் போர் நெறிகளுடன் தொடர்பு உடையனவாகத் தோன்றுகின்றன" - குற்றால அருவி மாதிரிக் கொட்டுகிறார் பரமசிவன்.

உவரியில் கடல் நோக்கி கிழக்குப் பார்த்து குதிரைமீது அமர்ந்திருக்கும் சாஸ்தாவுக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வந்து முடிகாணிக்கை செலுத்துகிறார்கள். கடல்நீரில் கால் நனைத்தபடி கதை சொல்கிறார் தொ.ப.

பேரிரைச்சல் கொண்டு ஆர்ப்பரிக்கிறது கடல் அலை!

நன்றி: ஆனந்தவிகடன், 28.11.2004.

கருத்துகள் இல்லை: