14/04/2011

புலம்பெயர் வாழ்வு சிதைவுறும் பண்பாட்டுக் கோலங்கள் - மு.புஷ்பராஜன்

பண்பாடு என்றால் என்ன என்னும் கேள்விக்குச் சட்டென்று விடையளிக்க முடியுமென நினைக்கவில்லை. பதில், இதுவும் இதுவுமெனப் பல நீர் வளையங்கள் போல் விரிந்து செல்லக்கூடியது. மனித வாழ்வில் பாரிய செல்வாக்கு செலுத்தும் இந்த உள்ளுணர்வை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிவிட முடிவதில்லை. சமூகவியல், பண்பாட்டியல் ஆராய்ச்சியாளர்கள் ஒருமித்துக் கூறுவதும் அதைத்தான்.

 

நம் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்டு உள்ளுணர்வில் தீர்மான பாத்திரத்தை வகிக்கும் இந்தப் பண்பாட்டு வலிமை, அதன் நீட்சி என்பவை புறச்சூழலைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. வாழ்க்கையில் தனி மனித முடிவுகளையும்விடக் கூட்டு முடிவுகளே வலிமை வாய்ந்தனவாக இருக்கின்றன. இந்தக் கூட்டு முடிவு என்பது அச்சமூகத்தின் அதிகாரச் சக்திகளாலேயே வரையறுக்கப்படுகிறது. இந்தக் கூட்டு முடிவின் வலிமையை மீறுதல் என்பது புறநடையே. மீறினால் சமூகத்தின் தண்டனை அல்லது புறக்கணித்தல் பின்தொடர்கிறது. இந்தப் போக்கு எந்த அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தாலும் இலகுவில் மாற்றிவிட முடியாத அளவிற்கு மனித மனங்களுக்குள் வலிமையாகப் புதைந்துள்ளது. அதிகாரச் சக்திகளால் இந்த மீறல் நிகழ்கையில், அதை எதிர்க்க முடியாத அளவுக்கு அதன் சமூகம் பலவீனப்பட்டிருந்தால் காலப்போக்கில் அந்த மீறலும் பண்பாட்டின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டிருக்கும்.

இதே போன்று முற்றிலும் அன்னிய மொழி, கலாச்சாரச் சூழலில் வாழ நேர்கையில், அவர்கள் சுமந்து வந்த பண்பாடு, புறச்சூழலால் எவ்வாறு சிதைவுகளுக்கு உள்ளாகிறது என்பதற்கு இன்றைய புலம்பெயர் வாழ்வு பெரிதும் உதவுகிறது.

ஐரோப்பிய மண்ணுக்கு ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்தபோது, நாவலர் மரபு பேணிவந்த சைவமும் தமிழும் என்ற பண்பாட்டின் கூறுகளடங்கிய சாதியப் படிமுறையின் இறுக்கத்துடனும் பிற சமயங்களை இழிவாக நோக்கும் மனநிலையையும் சமமாகக் கொண்டுவந்தார்கள். மேல்சாதியினரால் புறக்கணிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும் இந்து சமய மேலாதிக்கம் குடிகொண்டிருந்தது. இவற்றுடனேயே முற்றிலும் பொருந்தாத பண்பாட்டுக் கோலங்கள் கலந்த மண்ணில் வாழ இவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கடந்து, தலைமுறைகள் வளர்ந்துவிட்ட நிலையில், இவர்கள் இன்று எதிர்கொள்ளும் பண்பாட்டு நெருக்கடிகள் எவை?

திருமணம், கணவன்-மனைவி உறவு தமிழர் வாழ்வில் மிக முக்கியமான, இறுக்கமான கட்டமைப்பைக் கொண்டதே. கண்ணகியே இவ்வுறவின் குறியீடு, உச்சமான கட்டமைப்பு. அதனால்தான் அது ‘கற்புக்கரசியாய் வாழ் என்று வாழ்த்தி சிலப்பதிகாரமும் சீதனமாய்க் கொண்ட’ அமைப்பு. இதற்குள்ளும் மீறல்கள் இயல்பாக நடந்துகொண்டாலும் ஏற்றுக்கொள்ளாது தூர விலக்கிவைக்கும் அமைப்பு.

புலம்பெயர் நாடுகளில் குடும்ப அமைப்பு, கணவன் மனைவி உறவு என்னும் பண்பாட்டுக் கூறை கவனம்கொள்கையில் முதியவர்கள் முதலில் வருகிறார்கள். இவர்களில் அனேகமானவர்கள் மகனால் அல்லது மகளால் புலம்பெயர் நாட்டிற்கு அழைக்கப்பட்டவர்கள். சிலர் கணவன் மனைவியாகவும் சிலர் தனித்தனியாகவும் அழைக்கப்பட்டவர்கள். கணவன் மனைவியாக அழைக்கப்பட்டவர்களுக்கிடையிலான உறவில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. தாம் சுமந்துவந்த பண்பாட்டிற்கு எந்தப் பங்கமும் இவர்களுக்கிடையில் நேர்வதில்லை என்றே கூறலாம். இவர்களுடனான இவர்கள் பிள்ளைகள் அல்லது மருமக்கள் உறவுகள் அவர்கள் வாழும் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடுகின்றன. சிலர் வங்கிக் கடன், மாதாந்தர வீட்டுக் கட்டணம், வாகனம் ஆகிய செலவுகளுடன் இவர்களையும் வைத்துப் பராமரித்தலை மிகுந்த சுமையாகவே கருதுகின்றனர். மேல்நாடுகளில் வழங்கப்படும் முதியவர்களின் பராமரிப்புப் பணம் இந்த வயதானவர்களைப் புறமொதிக்கிவிடாமல் காப்பாற்றுகிறது. இன்னும் சிலர் இவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பித்துவிட்டு சிவனே என்று இருந்துவிடுகிறார்கள். தனக்குத் தன் பிள்ளையே கொள்ளிவைக்க வேண்டும் என்ற மரபார்ந்த கடைசி ஆசைகளுக்கு இங்கே பொருளே இல்லை. வயதான காலத்தில் தங்களைப் பராமரிக்க வேண்டிய கடமையைப் பிள்ளைகள் கைவிட்டுவிட்டார்களே எனப் புலம்புகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளுக்கு ஆயாவாகவே இருக்கிறார்கள். எவ்வளவு மன நெருக்கடிகளுக்குள்ளும் மரபுரீதியாகக் கையளிக்கப்பட்ட உணர்வான பேரப் பிள்ளைகளைப் பராமரித்தல், வம்சத்தின் தொடர்ச்சி என்பதில் இவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இந்த வயதானவர்களின் பிள்ளைகளில், அநேகமான ஆண்களுக்கு அவர்களின் ஊரிலுள்ள உறவுக்காரப் பெண்களே மணப்பெண்களாக அழைக்கப்படுகின்றார்கள். இவ்வாறு அழைக்கப்படும் பெண்ணும் பின்னர் அவளது பெற்றோரும் 18 வயதிற்கு உட்பட்ட சகோதரர்களும் சட்டரீதியாக மேல்நாடுகளுக்கு அழைக்கப்பட உரிமை உண்டு. எனவே ஊரோடு ஒத்து வாழ முடியாவிட்டாலும் உறவுகளோடாவது வாழலாம். அத்தோடு இங்குள்ள சூழலில் வேறு இனப் பெண்களை மணந்து தம் குலப் பெருமையைக் குலைத்துவிடுவார்களோ என்ற பயம். பெற்றோர் சொல்லை மீறுதல் அறமல்ல என்ற வகையில் சிலர் சம்மதிக்கிறார்கள். ஊரிலிருந்து மனைவி என்ற அதே பண்பாட்டுக் கூறுகளுடன் இவர்கள் வந்து சேர்ந்தாலும் சிலரை இங்குள்ள சூழல் மாற்றிவிடுகிறது. இன்னும் இங்குள்ள தனி ஆண்கள், தனித்த அறைகளிலேயே பெரும்பாலும் வாழ்ந்துவருகிறார்கள். இவ்வாறு வாழும் ஒருவருக்கு, வந்துசேரும் மணப் பெண் அவருடனேயே தங்கி இருக்க நேர்கிறது. இது அவர்கள் ஊரில் சாத்தியமாகாத ஒன்று. இங்கு அயல் என்ற கண்காணிப்பு என்பது இல்லை. திருமணமாகிய கணவன் மனைவியர் பெரும்பாலும் வேலைக்குச் செல்பவர்களாகவே இருப்பார்கள். பொருளாதாரரீதியில் ஒருவரை ஒருவர் சார்ந்திராமல் மரபுசார்ந்த கணவன் அதிகாரம் என்பது அதிக அளவு பிரயோகிக்கப்படுவதில்லை. இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் முற்றி இருவரும் இனிச் சேர்ந்து வாழ முடியாது எனக் கருதினால் மிக இலகுவாகத் தனித்தனியே பிரிந்துவிடலாம். கவலைப்பட்டு இணைத்துவைக்கும் சமூக நிர்ப்பந்தம் இங்கு இல்லை. கணவனின் அதிகாரத்தின் குறியீடாகிய மனைவியை அடித்தல் என்பதோடு சட்டரீதியான தண்டனையும் கூட வருவதால் கணவன்மார் கோபத்தைத் தாமே விழுங்கிக்கொள்ள வேண்டியதுதான். சிலர் அவ்வாறு வரம்பு மீறும்போது குடும்பம் குலையாமல் இருப்பதற்காக மனைவியர் சிலர் இவற்றைப் பொறுத்துக்கொள்வதும் உண்டு. மனைவியின் பொறுமையின் வலிமையைப் பொறுத்ததுதான் இறுதி முடிவு. இது கணவன் கைகளில் அல்ல. மனைவியிடமே.

இவ்வகைப் பெற்றோரின் பிள்ளைகளே அதாவது இளையவர்களே உண்மையான பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். பெற்றோரும் பாட்டிமாரும் கற்பிக்கும் பண்பாட்டு வழக்கங்களும் பாடசாலைகளில் கற்றுக்கொள்ளும் வழக்கங்களும் வேறுவேறானவையாதலால் இவர்கள் இருநிலை மனோபாவங்களை எதிர்கொள்கிறார்கள். இவை பாட்டி, பெற்றோர் ஆகியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் பெரும் விரிசல்களையே உருவாக்குகிறது. பிறந்தநாள் விழா ஒன்றில் இளம்பெண்கள் சத்தமாக மகிழ்ச்சிக் குரலில் கலகலவென உரையாடி சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் வந்திருந்த பாட்டி, அவர்கள் சிரிக்கும் ஒவ்வொரு தடவையும் ‘உஸ், உஸ்’ என்று அதட்டிக்கொண்டிருந்தார். அவர்கள் அதை அறிந்திருந்தும் அறியாதவர் கள்போல் தொடர்ந்துகொண்டிருந்தனர். பாட்டியும் தொடர்ந்துகொண்டிருந்தார். இறுதியில் சினமடைந்த அவர்கள் அரைகுறைத் தமிழில் பாட்டியைத் திட்டித் தீர்த்துவிட்டனர். பண்பாட்டைக் காக்க முனைந்த பாட்டி தன் பேத்திகளாலேயே பலர்முன் அவமானப்பட நேர்ந்துவிட்டது.

தமிழ் மட்டும் தெரிந்த பெற்றோர்கள் வெளித் தொடர்புகளுக்குத் தமது பிள்ளைகளைச் சார்ந்து இருக்க நேர்கிறது. இதனால் பிள்ளைகள் மத்தியில் பெற்றோர் என்ற மரியாதையில் தேய்மானம் நேர்ந்துவிடுகிறது. சிலர் பெற்றோர்கள் புரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே அந்நிய மொழியில் விரைவாகப் பேசுகிறார்கள். அம்மொழியால் கேலிசெய்கிறார்கள். மிகுந்த வேதனையோடு பெற்றோர்கள் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதெல்லாம் இவர்களிடம் எடுபடுவதில்லை. பெற்றோர் பொட்டுவைப்பதையும் சாறி அணிவதையும் தம் இனத்தவர்கள் கொண்டாட்டங்கள் தவிர்த்த பொதுவெளிகளில் இவர்கள் விரும்புவதில்லை. நெருங்கிய உறவினர்களைத் தவிர வயதில் பெரியவர்கள் உட்பட மற்ற அனைவரையும் பெயர் சொல்லி அழைப்பதால் பெற்றோர்கள் சங்கடத்தில் நெளிய வேண்டியுள்ளது. இவர்களது போதைப் பழக்கம், ஆண்பெண் உறவுகள் மேற்கத்தியச் சூழலுக்கு நெருக்கமாகி வருகின்றன. இவர்கள் தமது திருமணத்தைப் பெற்றோர் தீர்மானிப்பதை ஆச்சரியத்துடன் நோக்குகிறார்கள். எனக்கான பெண்ணை அல்லது ஆணை நீங்கள் எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? எனப் பெற்றோரிடமே கேட்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் படிக்கும் இவர்களில் சிலர் அங்கேயே தமது எதிர்காலத் துணைகளைத் தேர்ந்துகொள்கிறார்கள். சிலர் தாங்களாகத் தம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு அல்லது திருமணத்தை முடித்துவிட்டு பெற்றோருக்கு அறிவிக்கிறார்கள். வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முன்வந்தால் யார் சமய முறைப்படி திருமணம் நடைபெற வேண்டும் என்பதில் கயிற்றிழுவைப் போட்டியே நடை பெறுகிறது. ‘போதுமடா சாமி’ என்று இளையவர்கள் இதிலிருந்து தப்பியோட வேண்டியிருக்கிறது. இதனால் மனமுடைந்து நொந்து நோயாளியாகிப்போன பெற்றோரும் உண்டு. மன உளைச்சலுக்கு ஆளான பெற்றோர்கள், எல்லோரையும் நாட்டுக்குத் திருப்பி அனுப்பினால் நல்லது என்றுகூட நினைக்கிறார்கள்.

பிற இன மக்களைத் திருமணம் செய்வதைப் பெற்றோர்கள் விரும்புவதில்லை. ஆண்களைவிடப் பெண்கள் பிற இனத்தவரைத் திருமணம் செய்வதை அறவே விரும்புவதில்லை. மேல்நாட்டவர்களது திருமண ஆயுள்காலம் ஐந்தாண்டுகளைத் தாண்டாது என்பதுதான் இவர்கள் கணிப்பு. பின்னர் ‘வாழா வெட்டி’யாகிவிடுவாள் என்ற மரபார்ந்த கவலை பெற்றோர்களுக்கு. அவர்களுக்கு அக்கவலை இல்லை. சிலர் திருமணம் செய்துகொள்ளாமல் ‘சேர்ந்து வாழ்தலை’ மேற்கொள்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் ‘ஒன்றுகூடல்’ நாள் ஒன்று உண்டு. இந்நாளில் பல்வேறு திசையில் சிதறிக்கிடக்கும், குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடிச் சிறுவர்கள், வாலிபர்கள், வனிதையர்கள், பெற்றோர்கள் ஆகியவர்களுக்கான விளையாட்டுகள், பாடல்கள், நடனங்கள், மதுபான வகைகள், உணவு வகைகள் என்பதாய் அமர்க்களமாய் நிறைவுபெறும். இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்வதால் பிற இனங்களில் ஏற்படும் மண உறவுகள் தடுக்கப்பட வாய்ப்பு உண்டு எனப் பெற்றோர்கள் பலர் உள்ளூர நம்புகின்றனர். இவர்கள் நம்பிக்கை பெரும்பாலும் பொய்யாகிப்போவதும் உண்டு.

புலம்பெயரும்போது இருந்த சாதியப் படிமுறையில் கணிசமான உடைவு ஏற்பட்டிருக்கிறது. இங்கு நடைபெற்றுவரும் புதிய இளம்தலைமுறைகளின் கலப்புத் திருமணங்களே காரணம். பிள்ளைகளின் பிடிவாதத்தில் தம் இனத்துள்ளேயே சாதியப் படி முறையில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் திருமணம் நடைபெற்றாலும், ஏமாற்றத்தையும் வெறுப்பையும் வெளித் தெரியாமல் மறைத்து, ‘மொழி தெரியாத பெண்ணைக் காட்டிலும் தம் மொழிதெரிந்த பெண் தானே பாதகமில்லை. நம்ம பண்பாட்டுடன் இருக்கும்’ என்னும் நிலைக்கு வந்த பெற்றோர்களும் உண்டு. அதேவேளை சாதியப் படிமுறையை இன்னும் இறுக்கமாகப் பேணுபவர்களும் உண்டு. வேறுவேறு சாதிகளில் காதலிப்பவர்கள் பெற்றோரால் கொலைசெய்யப்படுவதும் உண்டு. ‘கௌரவக் கொலை’களுக்கான வரலாற்றுப் பதிவு காலம்தோறும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஈழத்தில் எவ்வளவோ போராட்டங்களுக்கும் இரத்தக் களரிக்கும் மத்தியில் ஆலயப்பிரவேசம் நடைபெற்றது, ஆயினும் இன்னும் அங்கு எல்லாக் கோயில்களுள்ளும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற கருத்தே நிலவுகிறது. இங்கு எல்லாக் கோயில்களுக்கும் எல்லாரும் சென்றுவரக்கூடிய நிலையே காணப்படுகிறது.

இங்கே ‘சோறு’ என்ற அடைமொழியால் தமிழர்கள் கேலியாக அழைக்கப்படுவதுண்டு. புதியதலைமுறையினர் பாரம்பரியத் தமிழர் உணவு வகைகளில் விருப்பம் கொள்வதில்லை. இறைச்சி வகைகளுடன் மக்டொனால்ட், பிட்சா போன்ற ‘விரைவு உணவுகளையே’ அதிகம் விரும்புகிறார்கள். இவர்களுக்குத் தமிழ்மொழி என்பது அரைகுறை அந்நிய மொழியே. இவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு முற்றிலும் அந்நிய மொழியே. புலம்பெயர் நாடுகளில் சிலர் தமிழ்ப் பாடசாலைகளை நடத்திவருகிறார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து ஊருக்குச் செல்லும் உறவினர்களுக்குத் தமிழே தொடர்பு மொழியாக இருக்கும் எனப் பெற்றோர்கள் நம்புகிறார்கள்.

மரபார்ந்த திருமணம் கோயில் திருவிழாக்கள் பரத நாட்டிய அரங்கேற்றங்கள் இங்கே பெற்றோர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இவற்றைப் பேணுவதன் மூலம் பண்பாட்டைத் தாம் கைநழுவிவிடவில்லை என்பதை உணர்த்த முயல்கின்றனர். திருமணநாள் அன்று கோயிலில் நடக்கும் சம்பிரதாயங்கள் மட்டும்தான். அதன்பின் நாலாம் சடங்கு எட்டாம் சடங்கு சம்பிரதாயங்கள் எதுவுமில்லை. கோயில் திருவிழாக்களில் சாறியும் வேட்டியும் அணிந்துகொள்ள முடிகிறது. வீதி ஊர்வலங்களின் போது தேங்காய் உடைப்பது வழக்கமாகிவிட்ட ஒன்றே. விரதங்கள் கிரமமாகக் கடைப்பிடிக்கும் வேளை, சிலர் விரத நாட்களில் அசைவ உணவுகளைச் சமைத்துவிட்டு மணிக்கூட்டையே அடிக்கடி கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஊரின் நேரப்படி விரதநாள் கழிந்தபின் அவற்றை உண்ணத் தொடங்கிவிடுவார்கள். குழந்தை பிறந்தவுடன் ஊரில் அநேக மரபுசார்ந்த வழக்கங்களும் உணவுகளும் பேணப்படுவதுண்டு. முற்காலத்தில் தமிழரது உணவு வகைகள் மனைவி கர்ப்பமாக இருந்தால் கணவன் கைக்கொள்ள வேண்டியவை. மகப்பேற்றின் பின்னரான சம்பிரதாயங்ளைப் பேராசிரியர் க. கணபதிப் பிள்ளையின் ‘ஈழத்து வாழ்வும் வழமும்’ நூலில் விரிவாகக் காணலாம். அவை பழங்கதைகள்.

சொந்த வீடு, காணி, நிலபுலம் ஆகியவற்றுடன் வாழ்ந்த மரபில் இயல்புக்கு மீறி வங்கிக்கடன் மூலம் வீட்டைச் சொந்தமாக்கிவிட்டுப் பின்னர், வங்கிக் கடனைக் கிரமமாகச் செலுத்த முடியாமல் வீட்டை வங்கிக்கே திரும்பக் கையளித்தவர்களின் வரலாறுகள் தாம் அதிகம் உண்டு.

இங்கே கூறியவை யாவும் முழுமையான புலம் பெயர் வாழ்வைப் பிரதிபலிப்பவை அல்ல. இது அவ்வாழ்வின் ஒரு வெட்டுமுகத் தோற்றமே. இந்தப் பண்பாட்டுச் சிதைவுகள், பண்பாட்டின் காவல் தெய்வங்களாலும் காக்க முடியாதபடி மிக வேகமாகச் சிதைந்துவருகிறது. இதன் சாராம்சம் வாழ்நிலங்களின் சூழ்நிலையைப் பொறுத்துத்தான் பண்பாட்டின் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான். இந்தப் பண்பாட்டுச் சிதைவுகளால் அல்லது மாற்றங்களால் மனித மனங்ளைத் துன்புறுத்திய கூறுகள் அழிந்துபோவதென்றால் மானிட மகிமையை வேண்டுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன தீங்கு நேர்ந்துவிடப்போகிறது.

நன்றி காலச்சுவடு

கருத்துகள் இல்லை: