16/03/2014

பொன்வால் நரி - எஸ். தோதாத்ரி

மகாகவி பாரதியை இன்று பெரும்பாலும் மறந்துவிட்டனர். பாரதி பற்றிப் பேசுவது எழுதுவது ஆகியன வெகுவாகக் குறைந்துவிட்டது. பின் நவீனத்துவத்தின் வருகையானது செவ்வியல் இலக்கியங்களை அறவே பின்னுக்குத் தள்ளிவிட்டது. இதனடிப்படையில் நிகழும் ஆய்வுகளில் ‘வாசிப்பு' என்ற பெயரால் பல அகவயமான விளக்கங்கள் இடம் பெறுகின்றன. மூல நூல் புறக்கணிக்கப்படுகிறது, படைப்பாளி பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், பாரதியார் எழுதியவற்றில் ஆங்கிலத்தில் அந்தக் காலத்தில் வெளியான ஒரு சிறு நூலைப் பற்றிப் பேசுவது சற்று மிகையாகக் கூடப் படலாம்.

பாரதியின் ஆங்கில எழுத்துகள் பற்றி அநேகமாகப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அவற்றில் ஒன்று "THE FOX WITH THE GOLDEN TAIL'' என்பது. இது ஒரு உருவகக் கதை. இதன் உட்பொருள் அன்னிபெசன்ட் அம்மையாரின் செயல்கள் ஆகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் பங்கெடுத்துக் கொண்டது எல்லோருக்கும் தெரியும். அத்துடன் நில்லாமல், அவர் பிரம்மஞான இயக்கத்திலும் தீவிரமாகச் செயல் புரிந்தார். இதனைத்தான் பாரதி இங்கு கேலி செய்கிறார். மேற்பார்வைக்கு இது கதை போன்று இருந்தாலும், இது பாரதி காலத்தில் இருந்த மேல்தட்டு வர்க்கத்தினரைப் பற்றிய விமர்சனமாகவும் அமைந்துள்ளது. இந்தக் கதையில் "பொன்வால் உள்ள நரி' என்பது அன்னிபெசன்ட் அம்மையாரைக் குறிக்கும். நரிகளின் நாடு  என்பது இங்கிலாந்தைக் குறிக்கும். கழுதைகள், மனிதக் குரங்குகள் ஆகியவற்றின் நாடு என்பது இந்தியாவைக் குறிக்கும். இந்தக் குறிப்புகளை மனதில் வைத்துக்கொண்டு இந்தக் கதையைக் காணவேண்டும்.

நரிகளின் நாட்டில் ஒரு கிழட்டுப் பெண் நரி இருந்தது. அந்த நாட்டு சக நரிகள் அதனை வெறுத்தன. ஏனென்றால் அந்த நரி கர்வம் மிகுந்தது. எனவே, அந்த நரியின் வாலை வெட்டிவிட்டன. அந்தப் பெண் நரி தங்க முலாம் பூசப்பட்ட ஒரு செயற்கை வாலை வாங்கிப் பொருத்திக் கொண்டது. தாய் நாட்டிலிருந்து கழுதைகள், குரங்குகள் ஆகியவற்றின் நாட்டிற்குச் (இந்தியா) சென்றது.

அந்தப் புதிய நாட்டுக் கழுதைகளிடம் தன் தாய்நாட்டு (இங்கிலாந்து) நரிகள் புத்தி குறைந்தவை என்றும், கழுதைகளுக்குத்தான் ஞானம் அதிகம் என்றும் கூறியது. இதைக் கேட்ட கழுதைகள் மகிழ்ச்சியடைந்தன. இதைக் கண்ட குரங்குகளும் மகிழ்ச்சியடைந்தன. ஒரு சில குரங்குகள் மட்டும் தங்கள் நாட்டின் பெருமை என்னவாகும் என்று கேள்வி எழுப்பின. ஆனால், பொன்வால் நரி (அன்னிபெசன்ட்)யின் தலைமையிலான சுயாட்சி இயக்கம் பிரபலமடைந்தது. பொன்வால் நரியானது எல்லாக் கழுதைகளுக்கும் பொன்வால் உருவாக்குவதாக வாக்களித்தது. இது கேட்ட கழுதைகளும், குரங்குகளும் மகிழ்ச்சியடைந்தன. ஆனால், இதற்காக இரு இளம் கழுதைகளை தனது வசம் ஒப்படைக்கும்படி பொன்வால் நரி கேட்டுக்கொண்டது. இந்த இளம் கழுதைகளுக்கு புதிய மார்க்கத்தில் பயிற்சியளிக்க வேண்டும் என்று கூறியது. இரு இளம் கழுதைகள் பொன்வால் நரியிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த இளம் கழுதைகளின் வாலை பொன்வால் நரி வெட்டியது. இவற்றை நரிகள் நாட்டிற்கு அழைத்துச் சென்றது. அங்கு நரிகள் நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தது. இதுகண்ட சநாதனக் கழுதைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த எதிர்ப்பை பொன்வால் நரி எதிர்பார்க்கவில்லை. அதேசமயத்தில், பொன்வால் நரியின் வாலை ஒரு வேலையாள் திருடிச் சென்றுவிட்டான். பொன்வால் நரி நரிகள் நாட்டிற்குச் சென்றது. அங்கு ஒருவாறு சமரசம் ஏற்பட்டு கழுதைகள் நாட்டிற்கு மறுபடியும் வந்தது. கழுதைகள் நாட்டில் உள்ள குரங்குகளை சமாதானப்படுத்த முயன்றது. ஆனால் குரங்குகள் அதனை நம்பவில்லை. இதற்கிடையில் இளம் கழுதைகளை நரிகள் நாட்டிலிருந்து கொண்டு வரவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதனை நிறைவேற்ற முடியாமல் பொன்வால் நரி தேனீக்கள், எறும்புகள் ஆகியவற்றின் குடியரசுக்குத் தப்பிச் சென்றது. அங்கு தனது பிரசாரத்தைத் தொடங்கியது.

இந்தச் சிறு உருவகக் கதையில் பாரதியார் அவரது சமகாலப் பிரச்னைகள் சிலவற்றை விமர்சனத்திற்குள்ளாக்குகிறார். இதில் முதலாவது இந்திய விடுதலைப் போராட்டம். அவர் ஒரு தீவிரவாதி. அவர் காலத்தில் மிதவாதிகள் வலுப்பெறத் தொடங்கினர். இவர்கள் பக்கத்தில் வேலை செய்யும் ஓர் அந்நியப் பெண்மணியாக அன்னிபெசன்ட் அம்மையார் வந்தார். அவர் சுயாட்சி இயக்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். இது குழப்பமான ஒன்றாக இருந்தது. இது தீவிரவாதியான பாரதிக்குப் பிடிக்கவில்லை. எனவே, பெசன்ட் அம்மையாரை அவர் வெள்ளை உளவாளி என்றே சந்தேகப்பட்டார். எனவேதான் அவரது கவனம் அன்னிபெசன்ட் மீது திரும்பியது. அன்னிபெசன்ட்டை தாய்நாட்டில் மதிப்பிழந்த பொன்வால் நரியாக உருவகப்படுத்துகிறார். இங்கிலாந்தை நரிகள் நாடாகக் கற்பனை செய்கிறார். இது வெள்ளையர்களது தந்திரமான நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகிறது.

அன்னிபெசன்ட் அரசியலோடு நிற்கவில்லை. பிரம்மஞான சபையின் முக்கியஸ்தராகவும் விளங்கினார். இதன்மூலம் அவர் இந்திய ஆன்மிகத்திலும் கால் பதித்தார். பிரம்மஞான சபையில் இன்றும் ஈடுபாடு உள்ளவர்கள் சநாதனவாதிகளே ஆவர். இங்கு இருக்கிற தத்துவங்கள் போதாது என்று பிரம்மஞான சபை மூலம் ஆன்மிக வாதம் பேசப்பட்டது. இதில் பாரதிக்கு உடன்பாடு இல்லை. இதில்தான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ற பிராமண இளைஞனை அன்னிபெசன்ட் சுவீகாரம் எடுத்து இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்ற நிகழ்ச்சி இடம் பெற்றது. இது அந்தக் காலத்தில் பிராமணர்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கியது. 

கிருஷ்ணமூர்த்தியின் தந்தை அன்னிபெசன்ட் மேல் வழக்குத் தொடர்ந்தது வரலாற்று நிகழ்ச்சியாகும். இதையும் பாரதி இங்கு கேலி செய்கிறார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இளம் கழுதையாக வர்ணிக்கப்படுகிறார்.

இதுபற்றி சம காலத்து விமர்சனங்களும் உண்டு. இதனை அரவிந்தரிடம் பாரதி படித்துக் காட்டினாராம். அரவிந்தருக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை. அவர் கூறினாராம் "பாரதியார் எவ்வளவு அருமையான இங்கிலீஷில் ஒரு அதிசயமான கட்டுக்கதை எழுதியிருக்கிறார். அதை அவரே படித்துக் காட்டும்பொழுது நீங்கள் கவனிக்காமலும் கேட்காமலும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறீர்கள்'' என்று அங்குள்ளவர்களைப் பார்த்துக் கூறினாராம்.

இதனைப் பாராட்டி ஆங்கிலப் பட்டம் பெற்றவர்கள் பலர் பாரதிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், பாரதிக்கு இப் பாராட்டு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இது ஓர் அரசியல் அங்கதம் அவ்வளவே. எனவே, அந்தக் கடிதங்கள் பற்றி குவளைக் கண்ணனிடம் பின் வருமாறு கூறினாராம்.

"போகச்சொல்லு விதவைப் பசங்களை! நான் என்னுடைய சொந்த பாஷையில் என் முழு மூளையையும் கசக்கிப் பிழிந்து ‘பாஞ்சாலி சபதம்' என்னும் புஸ்தகம் எழுதியிருக்கிறேன். அது நன்றாக இருக்கிறதென்று ஒருவனும் எனக்குக் கடிதம் எழுதவில்லை’'.

பாரதியின் உள்ளக் குமுறல் இதில் வெளிப்பட்டாலும், "பொன்வால் நரி'' என்ற இந்த உருவகக் கதை பாரதியின் ஆங்கிலப் புலமைக்கு ஒரு சான்றாக உள்ளது. இதில் மொழி நடையானது அக்காலத்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கு இணையாகவே உள்ளது. இதில் சார்ல்ஸ் டிக்கன்ஸ், பெர்னாட்ஷா, ஜான் கால்ஸ்வொர்தி
ஆகியோரின் சாயலைக் காண முடியும். தமிழ் மொழியில் புகுந்து விளையாடிய அந்த மகாகவி ஆங்கிலத்திலும் திறம்படவே இங்கு செயல்பட்டுள்ளதைக் காண முடியும்.

நன்றி - தமிழ்மணி 9 9 12

மகாகவி சுப்ரமணிய பாரதியின் இந்த உருவகக்கதையை இந்த சுட்டியில் படிக்கலாம்

‘கிழார்' போற்றுதும்… - சிவமானசா

சங்க காலத்தில் ‘கிழார்' எனும் சிறப்புப் பெயர் உழுவித்து உண்ணும் வேளாண் மக்களைக் குறிக்கும் பட்டம் என்பது அறிஞர்கள் கருத்து. இதை, உ.வே.சாமிநாதையரின் சங்கப்பாடல் பதிப்பிலும், ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி நூலிலும் காணலாம். பிற்காலத்தில் கல்வெட்டுகள் முதலியவை பல சமூகத்தினரைக் குறித்தது என்று கூறுகிறது. ஆனால், சங்க காலத்தில் வேளாண் மக்களையே குறிப்பதாகக் கூறுவர்.

பாண்டிய மன்னன் வேளாண்குடி மக்களுக்கு வழங்கிய பட்டத்தின் பெயர் "காவிதி' என்பது அறிஞர்கள் கூற்று. அத்தகைய ‘கிழார்'கள் பலர் அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்துள்ளனர். அவர்களுள் சிலரைக் காண்போம்.

அரிசில் கிழார் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடி எண்பத்து நூறாயிரம் பொற்காசுகளைப் பெற்றவர் இவர். வையாவி கோப்பெரும் பேகனையும், அவனுடைய இல்லத்தரசியான கண்ணகியையும் இணைத்து வைத்தவர். குறுந்தொகையில் 193, புறம்-146, 230, 281, 285, 300, 304, 342 ஆகிய பாடல்களைப் பாடியவர்.

ஆலந்தூர் கிழார் : குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், நலங்கிள்ளியையும் பாடியுள்ளார். குறு.112, 350, புறம்.34, 36, 69, 225, 324 ஆகிய பாடல்களைப் பாடியவர்.

ஆவூர்க்கிழார் : உறையூர் அருகிலுள்ள ஆவூரைச் சேர்ந்தவர். புறம்-322வது பாடலைப் பாடியவர்.

கண்ணனார் கிழார் : இவர் ஆவூர்க்கிழாரின் மகனார். அகம்-202-ஆம் பாடலைப் பாடியவர்.

ஆவூர் மூலங்கிழார் : குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுள்ளார். அகநானூற்றில் 24, 156, 341, புறநானூற்றில் 38, 166, 177, 196, 261, 301 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

பெருந்தலைச் சாத்தனார் கிழார் : இவர் ஆவூர் மூலங்கிழாருடைய மகன். நற்றிணையில் 262, அகம்.13, 224, புறம் 151, 164, 165, 205, 208, 294 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

இடைக்குன்றூர் கிழார் : இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியவர். புறம்.76-79 (4 பாடல்கள்) வரை உள்ள பாடல்களைப் பாடியவர்.

உகாய்க்குடி கிழார் : குறுந்தொகையில் 63-ஆம் பாடலைப் பாடியவர்.

பரங்கொற்றனார் கிழார்: இவர் உமட்டூர் கிழாரின் மகனார். அகநானூற்றில் 69-ஆம் பாடலை இயற்றியுள்ளார்.

ஐயூர் மூலங்கிழார் : இவர், பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் பாடியவர். புறம் 21-ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

கயத்தூர் கிழார் : இவர் குறுந்தொகையில் 354-வது பாடலைப் பாடியுள்ளார்.

கருவூர்க்கிழார் : இவர் குறுந்தொகை 170வது பாடலைப் பாடியவர்.

காரிக்கிழார் : இவர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியுள்ளார். புறம் 6-வது பாடலைப் பாடியவர்.

கிள்ளி மங்கலங்கிழார் : குறுந்தொகையில் 76, 110, 152, 181 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

குறுங்கோழியூர் கிழார் : சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாராட்டிப் பாடியுள்ளார். புறம் 17, 20, 22-வது பாடலைப் பாடியவர்.


நன்றி - தமிழ்மணி 19 8 12

பாரதியார் நடத்திய பட்டி மண்டபம் - கிருங்கை சேதுபதி

1917-ஆம் ஆண்டு, ஜூன் 2-ஆவது வாரம். திங்கள்கிழமை மாலையில், புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயிலில் நடந்த ஒரு நிகழ்வுதான் இந்தக் கட்டுரைக்கான களம்.

தனக்கு, காளிதாசன் என்று பெயர்சூட்டிக்கொண்டு "செய்கை' என்னும் கதை புனைந்த பாரதி, புதுச்சேரியை, வேதபுரம் என்று சுட்டி கதை தொடங்குகிறார்: ""வேதபுரத்தில் வேதபுரீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கடவுளுக்கு சந்தனாபிஷேகம் நடக்கும் சமயத்தில் நான் சந்நிதிக்குப் போய்ச் சேர்ந்தேன்'' என வளர்கிறது கதை.

அதுசமயம், அக்கோயிலுக்கு வந்திருந்த பாரதியின் நண்பர் பிரமராய ஐயர், அக்கோயிலின் தர்மகர்த்தா, வீரப்பமுதலியார் ஆகியோருடன் பாரதியும் அக்கோயில் திருக்குளத்தில் அமர்ந்து பொதுவாகப் பேசத்தொடங்குகின்றார்.

அப்போது, கோவில் பணிவிடைக்காரன் ஒருவன் கையிலே மஞ்சள் காயிதங்கள் கொண்டுவந்து ஆளுக்கொன்று வீதம் கொடுத்தான். அதென்ன காயிதமென்றால், அன்று மாலை கோயிலில் நடக்கப்போகிற பெரிய பாளையம் மடாதிபதியின் உபந்யாசத்துக்கு எல்லாரும் வந்து சிறப்பிக்க வேண்டும் என்ற அழைப்புக் காயிதம். அந்தக்காயிதத்தின் மகுடத்தில் ஒரு விருத்தம் எழுதியிருந்தது. அவ்விருத்தத்தின் பின்னிரண்டடிகள் பின்வருமாறு:

தோகைமேல் உலவும் கந்தன்
சுடர்க்கரத்திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவ தெமக்கு வேலை

(மயிலின் மேலே உலவுகின்ற கந்தனுடைய கையில் வெற்றிமாலை சூடிநிற்கும் வேலாயுதத்தை வணங்குவதே எம்முடைய தொழில்)

இவ்விரண்டு பதங்களையும் படித்துப் பார்த்துவிட்டு பிரமராய ஐயர் நல்ல பாட்டு என்றார். பின்னர், இப்பாடலை முன்வைத்து ஒரு பட்டிமண்டபமே நடத்திவிடுகிறார் பாரதியார்.

முதல்உரை - வீரப்பமுதலியார்:- "கேளும் காளிதாசரே, பிரமராயரே நீரும் கேளும். தெய்வத்தைப் போற்றுவதே நம்முடைய வேலையென்றும், அதைத்தவிர, நமக்கு வேறு எவ்விதமான தொழிலும் கிடையாதென்றும் சொல்லிக் கொண்டிருப்போர் சோம்பரில் முழுகிப்போய்த் தம்முடைய வாணாளையும் வீணாகச் செய்து பிறரையும் கெடுக்கின்றார்கள். செய்கை பிரதானம். செய்கையை விடுதல் பாவம். கடவுள் நமக்கு ஐம்புலன்களையும், அறிவையும் கொடுத்து எப்போதும் உழைப்பினாலே நமக்கும் பிறர்க்கும் நன்மை தேடும்படி ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கு மாறாகச் செய்கையற்றுச் சும்மா இருப்பதை இன்பமென்று நினைப்போர் நாசத்தை அடைவார்கள். தெய்வம், கிய்வம் - எல்லாம் வீண் பேச்சு. வேலை செய்தவன் பிழைப்பான்; வேலை செய்யாதவன் செத்துப்போவான்’'.

மறுப்பவர் - பிரமராய ஐயர்:- "சோம்பேறி தெய்வத்தின் பெயரை ஒரு முகாந்திரமாகக் காட்டித் தன்னுடைய சோம்பரை ஆதரிப்பதாகச் சொன்னீர்கள். இருக்கலாம். அதனாலே தெய்வத்தை நம்பிச் செய்கைப் பொறுப்பில்லாமல் இருப்போரெல்லாம் சோம்பேறிகளென்று நினைப்பது குற்றம். உண்மை அப்படியில்லை. இயற்கையின் வலிமையாலே இயற்கையின் கொள்கைப்படி, இயற்கையே மனிதரின் செயல்களையெல்லாம் நடத்துகிறாள். இது மறுக்கமுடியாத சத்தியம். இதை உணர்ந்தவன் ஞானி. இந்த ஞானமுண்டாகித் தான் செய்யும் செய்கைகளுக்குத் தான் பொறுப்பில்லையென்றும், தெய்வமே பொறுப்பென்றும் தெரிந்துகொண்டு நடக்கும் பெரியோர் சோம்பரிலே முழுகிக் கிடப்பதில்லை. அவர்கள் அக்கினியைப்போலே தொழில் செய்வார்கள். எப்போதும் ஆனந்தத்திலே இருப்பதனால் அவர்களிடம் அற்புதமான சக்திகள் பிறக்கும். அந்தச் சக்திகளைக்கண்டு அவர்கள் செய்யும் தொழில் உலகத்தாருக்குக் கணக்கிடமுடியாத நன்மைகளைச் செய்யும். பகவான் கீதையிலே என்ன சொல்லுகிறார்... "தெய்வமே செய்கிறது. தான் செய்வதாக நினைப்பவன் மூடன். ஆதலாலே முன்பின் யோசனை செய்யாமல் அப்போதப்போது நேரிடும் தர்மத்தை அனல்போலே செய்ய வேண்டும். ஆதலால், ஹே அர்ஜுனா, வில்லினை எடடா, கையில் வில்லினை யெடடா(பாடுகிறார்)'' என்று பகவான் சொல்லுகிறார். ஆதலால், பக்தனுக்குத் தொழிலிலே பொறுப்பில்லை. ஆனால், தொழில் உண்டு. அது தெய்வத்தாலே கொடுக்கப்படும். உண்மையான தெய்வபக்தியுடையவர்கள் செய்யும் செய்கையினால் கிருதயுகம் விளையும். அவர்கள் எவ்விதமான செய்கையும் தமக்கு வேண்டியதில்லையென்று உதறிவிட்டவுடனே பகவான் அவர்களைக் கருவியாகக்கொண்டு மகத்தான செய்கைகளைச்
செய்வான்.

வீரப்ப முதலியார் (காளிதாசனை நோக்கி) "உமது கருத்தென்ன?’'

காளிதாசன்:- ""எனக்கென செயல் யாதொன்றுமில்லை என்ற முன்னோர் பாடலை எடுத்துச் சொல்லி சக்தி நாமத்தைக் கூறி நான் செய்கையற்று நிற்கின்றேன். பராசக்தி என்மூலமாக ஏது செய்வித்தாலும் அவளுடைய இஷ்டமேயன்றி என்னுடைய இஷ்டமில்லை’'.

இதன் வாயிலாக பாரதியார் சொல்லவருவது யாது? இதற்கு, செய்கை என்ற கதைத்தலைப்பே பதில். புரியவில்லையெனில், பராசக்தி என்ற பாரதியின் கவிதையைப் படிக்கலாம்.

"நாட்டுமக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தவர் மேனிலை எய்தவும்'' என வருகிறது அக்கவிதை. அது பாரதியின் கவிதைதான் ஆனால், இக்கதையில் வருகிற, எமக்கு வேலை என்னும் கவிதை, பாரதியார் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருந்தாலும், உண்மையில் பாரதி எழுதியது இல்லை. சைவ எல்லப்ப நாவலர் பாடிய செவ்வந்திபுராணத்தில் இடம்பெறும்,

"ஓகையால் திரைமுன் னாளில்
உழக்கும்மாவினையால் வாட்டும் ‘'


- என்ற அடிகளைத் தொடர்ந்து வருவதாகும். இவ்வுண்மையை, பாரதி ஆய்வாளர் சீனி.விசுவநாதன் தொடர்ந்து வலியுறுத்திவந்தபோதும் பலரும் கவனிக்கத் தவறியிருக்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.

நன்றி - தமிழ்மணி 9 9 12

02/03/2014

ஒரு பிரமுகர் - ஜெயகாந்தன்

அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பாழ் மண்டபம். பாழ் மண்டபத்துக்கு எதிரே ஒரு வேல மரம். அந்த வேலமரத்தின் தயவில் அதைப் பற்றிப் படர்ந்திருக்கிறது ஏதோ ஒரு காட்டுக்கொடி. காட்டுக்கொடி தண்டு முற்றி. தலை கிழடு தட்டிவிட்டதால். ஒரு பழுப்பு இலை மட்டும் உதிராமல் பூமியை நோக்கி வரம் கேட்கிறது. தண்டின் வேர்ப் பகுதியை ஒட்டி வேல மரத்தில் ஒரு பொந்து. பொந்து வாயிறீல். பழுப்பு இலைக்கு நேர்க் கீழே ஒரு சிறு மண்ணுருண்டை!…

மீசையை நீவி விட்டுக்கொண்டு கம்பீரமான ஆகிருதியுடன் வெளியே வந்தது ஒரு பெரிய கட்டெறும்பு!

“உலகத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு…” என்று முனகிக்கொண்டே ஏகாந்தமான வனத்தில் தன்னிச்சையுடன் திரியும் ஒரு சிங்கத்தைப்போல் தலையை ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குத் திருப்பி உலகத்தை நோட்டம் விட்டது எறும்பு!

அவசர அவசரமாய் அதன் எதிரே வந்தது ஒரு சிற்றெறும்பு.

“என்னடா பயலே சொக்கியமா?” என்று கர்ஜனை புரியும் தோரணையில் சிற்றெறும்பைப் பார்த்துக் குசலம் பேசியது கட்டெறும்பு!

கேட்ட கேள்விக்குப் பதில்கூட சொல்ல முடியாமல் நடு நடுங்கிப் போய். வந்த வழியைப் பார்த்துக்கொண்டு ஓட்டம் பிடித்தது சிற்றெறும்பு.

“உடம்பில் பயமிருக்கிறதா? பிழைத்துக்கொள்வாய் போ!” என்று முனகிக் கொண்டே மறுபடியும் மீசையை நீவி விட்டுக்கொண்ட கட்டெறும்பு. எழுந்து நின்று. உலகத்தைப் பார்க்கத் தலையை நிமிர்த்தும்போது…

“ இதென்ன குறுக்கே என்னவோ மறைக்கிறதே…”

“ஓ… இந்த மலைதானா?” இரண்டடி முன் நகர்ந்து வந்து மண்ணுருண்டையின்மேல் தனது முன் கைகயை வைத்துக் கொண்டு தலை நிமிர்ந்து. சந்தையிறீருந்து திரும்பி வரும் மனிதர்களைப் பார்த்தது.

கதாயுகத்தைப் பூமியில் ஊன்றிக்கொண்டு நிற்கும் பீமசேனனைப் பற்றி அதற்குத் தெரியுமோ என்னவோ? அதன் பாவனை அப்படித்தான் இருந்தது.

“யாரது. மனுசப்பசங்களா? சுத்த சோம்பேறிகள்…”

திடீரென்று அதற்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. உலகில் மனுசப்பசங்க ஜாஸ்தியா? நம்ம எறும்புக்கூட்டம் ஜாஸ்தியா?

யோசித்து யோசித்துப் பார்த்தது. அந்தக் கணக்கு அதற்குச் சரி வரவில்லை. ‘அவர்களில் யாரையாவது கூப்பிட்டுக் கேட்டால் என்ன? அதுவும் சரிதான்.

மண்ணுருண்டைக்குப் பின்னே நின்று. தலையை நீட்டி இரண்டு கைகளையும் உயர்த்திக்கொண்டு கடுகு பிளந்தன்ன வாயைத் திறந்து “ஏ. மனுசப் பயல்களா…உங்களில் ஒருவன் இங்கே வாருங்கள் என்ற கர்ஜனை புரிந்தது.

அவ்வளவுதான்! சாலையில் போய்க் கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் சிதறி ஓடினர்… பாழ் மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

“அடேடே. என்னைக் கண்டு உங்களுக்கு இவ்வளவு பயமா? அட கோழைப் பயல்களா?…” என்று கைகளைத் தட்டி ஆரவாரித்துக் கொண்டு மண்ணுருண்டையைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்தது கட்டெறும்பு.

“என்ன இது. இந்த வெய்ய காலத்திலே திடீர்னு மழை புடிச்சிக்கிடுத்தே?”

“கோடைமழை அப்படித்தான்”.

“பாழ் மண்டபத்தி-ருந்த மனிதர்கள் பேசிக் கொண்ட வார்த்தைகள் எறும்புக்குக் கேட்டது. மழையா? என்று அதிசயித்தது எறும்பு.”

“இது என்னடா. சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கே…மழையாமில்லே. நான் கூட வெளியேதானே நிக்கறேன்; வானம் என்னமோ இருட்டி இருக்குங்கறது வாஸ்தவம்தான். அதுக்குள்ளே இவ்வளவு பயமா? சுத்தப் பயந்தாங்கொள்ளிப் பசங்க. மழையாம் மழை!” என்று அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டு குதித்தது எறும்பு…

“இந்த மனுசங்களே இப்படித்தான்; ஒண்ணுமில்லாததுக்கு எல்லாம் பிரமாதப்படுத்துவாங்க” என்று மனிதர்களை நினைத்து வியந்து கொண்டிருக்கையில் வானம் பளீரென ஒளிவிட்டுப் பிரகாசித்தது.

பாழ் மண்டபத்தில் ஒதுங்கிய மனிதர்கள் நடையைக் கட்டினர். எறும்பின் கேறீச் சிரிப்பு அவர்கள் காதில் விழவில்லை.

சற்று நேரத்தில். பூமியில் படிந்த நீர்த்திவலைகளிறீருந்து ஆவி கிளம்பியது. உஷ்ணம் தகித்தது.
மற்றொரு கூட்டம் சாலையில் நடந்து கொண்டிருந்தது!

“உஸ்… அப்பா என்ன புழுக்கம்!” என்று ஒருவன் விசிறிக் கொண்டான்.

வேலமரத்தில் படர்ந்திருந்த கொடியிலுள்ள பழுப்பு இலையில் படிந்திருந்த நீர்த் துளிகள் ஒன்றொன்றாய் உருண்டு நடுக்காம்பில் சேர்ந்து பெரிய முத்தாய்த் திரண்டது… திரண்ட முத்து மெள்ளமெள்ள உருண்டது…

கீழே இருந்த மண்ணுருண்டையின் மீது ஆரோகணித்திருந்த கட்டெறும்பின் தலையில் விழுந்த நீர் முத்தைத் தொடர்ந்து பழுப்பு இலையும் உதிர்ந்து மண்ணுருண்டையின் மீது விழுந்தது.

“ஐயோ… பிரளயம்…. பிரளயம்…… வானம் இடிந்து விழுந்து விட்டதே….” என்று கதறியவாறு பழுப்பு இலையை நீக்கிக்கொண்டு வெளியே வந்த கட்டெறும்பு மண்ணுருண்டை கரைந்திருப்பதைக் கண்டு. கூக்குரலிட்டது.

“அடே மனிதர்களே. பிழைத்துப் போங்கள்… சீக்கிரம் ஓடுங்கள். பிரளயம் வந்து விட்டது…. ஓடுங்களடா ஓடுங்கள்…” என்று அலறியவாறு என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்து முன்னும் பின்னும் ஓடியது!

“அப்பா என்ன உஷ்ணம்” என்று மேல் துண்டை வீசிக்கொண்டு ஒருவன் மரத்தடியில் ஒதுங்கினான்.

அட பைத்தியக்கார மனிதர்களே! ஒன்றுமில்லாதற்கெல்லாம் உலகமே புரண்டு விட்டதாக ஓடுகிறீர்களே – இப்பொழுது பேராபத்து விளைந்துவிட்ட சமயத்தில் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறீர்களே… சீசீ… உங்கள் முகத்தில் விழிக்கக் கூட வெட்கமாயிருக்கிறது. நான் இப்பொழுது எப்படி என்னைப் பாதுகாத்துக்கொள்ளுவேன்? பிரளயம் வந்துவிடும் போறீருக்கிறதே… என்று கூவியவாறு விழுந்தடித்து ஓடி. தனது பொந்துக்குள் போய்ப் புகுந்துகொண்டது கட்டெறும்பு!

நன்றி - சிறுகதைகள்.காம்

சட்டை - ஜெயகாந்தன்

அவன் துறவி!

வாழ்க்கையை வெறுப்பது அல்ல. வாழ்வைப் புரிந்துகொண்டு, அதன் பொய்யான மயக்கத்திற்கு ஆட்படாமல் வாழ முயல்வதுதான் துறவு எனில், அவன் துறவிதான்.

முப்பது வயதில் அவன் புலனின்ப உணர்வுகளை அடக்கப் பழகிக் கொண்டான் என்று சொல்வதை விட, அவற்றில் நாட்டம் இல்லாததே அவனது இயற்கையாய் இருந்தது என்று சொல்வதே பொருந்தும். இதற்கு அர்த்தம் அவனிடம் ஏதோ குறைஎன்பதல்ல. அவன் நிறைவான மனித வாழ்வின் தன்மையிலேயே குறைகள் கண்டான். ‘ஓட்டைச் சடலம் உப்பிருந்த பாண்டம்’ என்று பாடும் சித்தர்களின் கூற்றைப் பரிகசிக்காமல் அந்தப் பரிகசிப்பின் காரணங்களை ஆராய்ந்து அதில் உண்மைகள் இருக்கக் கண்டான். எனவே, பக்தியின் காரணமாகவோ, மோட்சத்தை அடைய இது தவமார்க்கம்
என்று கருதியோ அவன் துறவு பூணவில்லை.

சொல்லப்போனால் ‘கண்ட கோயில் தெய்வம் என்று கைஎடுப்பதில்லை’ என்ற சிவவாக்கியரின் ஞானபோதனையின்படி எவ்வித ஆசாரங்களையும் கைக்கொள்ளாமல்தான் இருந்தான்.

அவன் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவன் மாதிரி விழித்தானே அல்லாமல், ஒவ்வொன்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டானில்லை.

அவன் அந்தச் சிவன் கோயில் வாழ்ந்து வந்தான். அதற்குக் காரணம் பக்தி அல்ல; அங்கேதான் அவனுக்கு இடம் கிடைத்தது. கோயில் குருக்கள் அவனுக்கு மடப்பள்ளியிருந்து உணவு தந்தார். அதற்குப் பதிலாய் அவனிடம் வேலை வாங்கிக் கொண்டார். கோயின் பக்கத்திலுள்ள நந்தவனப் பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் சில சமயங்களில் பூப் பறித்துக் கொண்டு வருவதும் அவனுக்கு அவரிட்ட பணிகள்.

அரையில் ஒரு துண்டும். நெஞ்சுக்குழி வரை அடர்ந்துவிட்ட தாடியும் உண்மையைத் தேடுமó அவனது தீட்சண்யமான பார்வையும் – கொஞ்ச காலத்தில் அவனைப் பூந்தோட்டத்துச் சாமியாராக்கி விட்டது.

பூந்தோட்டத்துச் சாமியார் என்பதே இப்போது அவனுக்குப் பெயர் எனினும். அவன் சோம்பேறி அல்ல. சாமியார் என்ற பட்டம் பெற்ற பிறகும் கூட அவன் நாள் முழுவதும் ஏதோ ஒரு வேலையை யாருக்கோ செய்து கொண்டிருக்கிறான். வேலையின் தன்மைகளோ அது உயர்வா, தாழ்வா என்றபாகுபாடோ அவனுக்கு ஒரு பொருட்டல்ல.

செடிகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொட்டுவான். மடப்பள்ளிக்கு விறகு பிளந்து போடுவான். கோயில் பிரகாரத்தைக் கூட்டி வைப்பான்; குருக்கள் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய் பறிப்பான். செட்டியார் வீட்டுக்கு…. எள் மூட்டை சுமப்பான்; பட்டாளத்துப் பிள்ளை வீட்டு வண்டியில் ஏறிப்போய் நெல் அரைத்துக்கொண்டு வருவான். அவன் எல்லாருக்கும் தொண்டன்….. ஒரு வேளை பிறவியின் அர்த்தமே இந்தப் பயன் கருதாத் தொண்டில் அவனுக்குக் கிட்டுகிறதோ
என்னவோ?

“பூந்தோட்டத்துச் சாமி” என்று யாராவது கூப்பிட்டுவிட்டால் போதும். சம்பளம் கொடுத்து வைத்துள்ள ஆள்கூட அவ்வளவு கடமை உணர்ச்சியோடு ஓடிவரமாட்டான்…..

எனவே அவனுக்கு வேலையும் வேலையிடும் எஜமானர்களும்
நிறையவே இருந்தனர்.

இரவு பதினோரு மணிக்குமேல் கோயில் பிரகாரத்தில் உபந்நியாசத்துக் காகப் போட்டிருந்த பந்தலடியில் இருளில் – நிலா வெளிச்சம் படாத நிழல்- கருங்கல் தளவரிசையில் வெற்றுடம்போடு மல்லாந்து படுத்திருந்தான் பூந்தோட்டத்துச் சாமி.

பிரகாரம் எங்கணும் கொட்டகையின் கீற்றிடையே விழுந்த நிலவொளி வாரி இறைத்தது போல் ஒளி வட்டங்களை அவன் மீது தெளித்திருந்தன…..

அவன் மனத்தில் அன்று காலையிருந்து உறுத்திக்கொண்டிருந்த ஒரு சம்பவமும். அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளும் சம்பந்தமற்றது போலும். சம்பந்தமுடையன போலும் குழம்பின.

செட்டியார் வீட்டு அம்மாளை. பிரார்த்தனையை எண்ணியபோது. வீட்டை விட்டுக் கோபித்துக்கொண்டு வடக்கே வெகு தூரம் ஓடிப்போன அவள் மகனின் நினைவும் அவனுக்கு வந்தது.

இன்று அதிகாலையில். பூந்தோட்டத்துச்செடிகளுக்கு அவன் நீர்வார்த்துக் கொண்டிருந்தபோது பக்கத்தில் விம்மலும் அழுகையும் கலந்த பிரார்த்தனை கேட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது. மாணிக்கம் செட்டியாரின் மனைவி. குளித்து முழுகிய ஈரக் கோலத்தோடு கை நிறைய மஞ்சள் குவளை மலர்களை ஏந்திக்கொண்டு விநாயகர் சந்நிதியில் முழந்தாளிட்டு வேண்டிக் கொண்டிருந்தாள்.

என் அப்பனே….. விக்னேஸ்வரா….. எனக்கு நீ குடுத்தது ஒண்ணுதான்… அவன் நல்லாயிருக்கும்போதே என்னைக் கொண்டு போயிடு தெய்வமே!…. அந்தக் குறையும் பட்டு வாழ முடியாது அப்பனே!…. அவன் எங்கே இருந்தாலும் ‘நல்லபடியாய் இருக்கேன்’னு அவன் கிட்டேருந்து ஒரு கடுதாசி வந்துட்டா வரவெள்ளிக்கிழமை உன் சந்நிதியிலே அம்பது தேங்காய் உடைக்கிறேன்….”

தன்னையும், சூழ்நிலையையும் மறந்து அந்தத் தாய் அந்த நட்ட கல்லைத் தெய்வம் என்று நம்பிப் புலம்புவதைப் பூந்தோட்டத்துச் சாமியார் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தத் தள்ளாத சுமங்கக் கிழவியின் தாளாத ஏக்கம் – அவன் கண்களைக் கலக்கிற்று.

அவள் பிரார்த்தனை முடிந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தபோது தன்னையே பார்த்தவாறு நிற்கும் பூந்தோட்டத்துச் சாமியாரைப் பார்த்தாள்.

“ரெண்டு நாளா ராத்திரியெல்லாம் தூக்கமில்லே சாமியாரே!….. நம்ம தம்பி இருக்கிறஊர்லேதான் இப்ப கடுமையா சண்டை நடக்குதாம்; ஆஸ்பத்திரி மேலே எல்லாம் குண்டு போடறானுங்களாமே பாவிங்க…… எங்கப்பன் விக்னேஸ்வரரு என்னைச் சோதிக்க மாட்டாரு….. அப்புறம் கடவுள் சித்தம்!” என்று பொங்கி வரும் கண்ணீரை மீண்டும் முந்தானையால் துடைத்துக் கொண்டாள் கிழவி.

“விக்னேஸ்வரர் துணையிருப்பாரு; கவலைப்படாதீங்க அம்மா” என்று பூந்தோட்டத்துச் சாமியும் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

“சாமியாரே!…. உன் வார்த்தையை நான் விக்னேஸ்வரர் வாக்கா நம்பறேன். நீயும் அவர் மாதிரிதான்! என்று அவனை வணங்கி ஏதோ ஒரு நம்பிக்கையும் ஆறுதலும் தைரியமும் பெற்று அங்கிருந்து நகர்ந்தாள் கிழவி.

பூந்தோட்டத்துச் சாமியார் அந்தப் பிள்ளையார் சிலையை வெறித்துப் பார்த்தான்.

‘நட்ட கல்லைத் தெய்வம் என்று’ பாட்டு அவன் மனத்தில் ஒலித்தது.

“இந்தக் கிழவிக்கு இந்த நட்டகல் தரும் ஆறுதல் பொய்யா?” என்று தோன்றியது.

நல்ல வேளை அந்தப்பாடலை அவள் படித்திருக்கவில்லையே என்றெண்ணி மகிழ்ச்சியுற்றான் அவன்…..

மத்தியானம் பிரகாரத்தில் கொட்டகை வேய்ந்து கொண்டிருந்தார்கள். இன்றிருந்து ஒரு வாரத்துக்குக் கோயில் பகவத் கீதை உபந்யாசம் நடக்கப்போகிறது. யாரோ பெரிய மகான் பட்டணத்திருந்து வந்து கீதை சொல்கிறாராம். சாயுங்காலத்தில் கோயில் கொள்ளாத ஜனக்கும்பல் வந்து விடும். பூந்தோட்டச் சாமியாருக்கும்வேலைக்குப் பஞ்சமில்லை.

கொட்டகை போடுவதற்காக மூங்கில் கட்டி மேலே உட்கார்ந்து ஓலை வேய்ந்து கொண்டிருந்தவர்களுக்கு உதவியாய்க் கீற்றையும், கயிற்றையும் ஏந்தி, அண்ணாந்து நின்றுகொண்டிருந்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.

அப்போது அவனைத்தேடிக்கொண்டு வந்த தர்மகர்த்தா. “சாமி!
ஓடிப்போயி நம்ப பட்டாளத்துப் பிள்ளை வீட்டிலே அம்மாக்கிட்ட கேட்டு. கல்யாண சமக்காளம் இருக்காம் வாங்கிக்கிட்டு வரச் சொன்னாங்கன்னு கேளுங்க. ஓடுங்க” என்றதும். கையிருந்த கீற்றைப் போட்டுவிட்டு ஓடினான் அவன்.

அவன் பட்டாளத்துப் பிள்ளை வீட்டருகே வரும்போது அந்த வீட்டுத் திண்ணையில் ஒரு கூட்டமே கூடி நின்றிருந்தது.

பட்டாளத்துப் பிள்ளை என்று அழைக்கப்படும் பெரியசாமிப் பிள்ளை காலையிலும் மாலையிலும் பத்திரிகை படிக்கும் பழக்கமே அப்படித் தான்.

பட்சணக்கடை மணி முதலி ஜோசியர் வையாபுரி. எண்ணெய்க்கடை மாணிக்கம் இன்னும் கீழே சில சிறுவர்கள் நின்றிருந்தனர். மடியில் மூன்று வயதுள்ள தன் பேரப்பையனை உட்கார வைத்துக்கொண்டு பெரியசாமிப் பிள்ளை பழுப்பேறிய தமது நரைத்த மீசையைத் திருகிக்கொண்டு உற்சாகமான குரல் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.

பத்திரிகையிருந்து ஒரு செய்தியைப் படித்துவிட்டு,

“போடு…..! இந்தியான்னா இளிச்சவாயன்னு நெனச்சிக்கிட்டு இருக்கானுவளா? நம்ப ஊர்லே செஞ்ச விமானங்கள் ஐயா…. ஓய் செட்டி யாரே. இதைக் கவனியும் – ஜெட் விமானங்களை நொறுக்கிட்டு வருது ஐயா! சபாஷ் நானும் நெனைச்சிருக்கேன் ஒரு காலத்திலே…. நமக்கு எதுக்குப் பட்டாளம் – இந்தத் தேசத்து மேலே எவன் படையெடுக்கப் போறான்னு…. இப்ப இல்லே தெரியுது – அந்தக் காலத்திலே ஹிட்லர் செஞ்ச மாதிரி டாங்கிப் படையெ வெச்செ நம்ப அடிச்சுடலாம்னு திட்டம். இந்தியத் துருப்புகள் கைப்பற்றியிருந்த டாங்கியின் படம் பிரசுரிக்கப்பட்டிருந்ததை உட்கார்ந்திருந்தவர்களிடம் காட்டினார் பெரியசாமிப் பிள்ளை.

“பயங்கரமான டாங்கி! அந்தக் காலத்திலே இவ்வளா பெரிசு கெடையாது….. டாங்கின்னா என்னான்னு நெனக்கிறே….. ஊருக்குள்ளே பூந்துடுச்சின்னா அவ்வளவுதான்! ராட்சஸக் கூட்டம் வந்த மாதிரிதான். ஒண்ணும் பண்ண முடியாது – நம்ப ஊரிலே இப்ப டிராக்டர் வச்சு உழவு நடத்தல்லே அந்த மாதிரி ஊரையே உழுதுட்டுப்போயிடும்.. வீடு தெருவு கோயிலு எல்லாம் அதுபாட்டுக்கும் நொறுக்கித் தள்ளிட்டுக் காடு மலைன்னு பாக்காம குருட்டுத்தனமாப் போகும்! சும்மா…. நம்ப படைங்க அந்த மாதிரி டாங்கிகளைப் போட்டு நொறுக்கி விளையாடுது போ! அடடா…. நமக்கு வயசு இல்யே….. இருந்தா போயிடுவேனய்யா பட்டாளத்துக்கு!” என்று உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கையில், வையாபுரி சோசியரின் தோளுக்கு மேல் எக்கி அந்த டாங்கியின் படத்தைப் பார்த்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.

அவன் வந்து நிற்பதையே கவனிக்காத பிள்ளை தொடர்ந்து பத்திரிகையைப் படிக்கும்போது திடீரெனக் குரலைத் தாழ்த்தினார்: ஒரு மேஜரின் வீர மரணம் – புதுடெல். செப்டெம்பர் பதினேழு. சென்றபதிமூணாந் தேதியன்று சியால்கோட் அருகே நடந்த டாங்கிப் போரில் பகைவர்களால் சுடப்பட்ட மேஜர் முகமது ஷேக் வீர மரணம் எய்தினார்” என்பதைப் படித்துவிட்டு மௌனமாகத் தலைகுனிந்தார்
பிள்ளை.

அவர் மடியிருந்த குழந்தை அவரது மீசையைப் பிடித்திழுத்துச் சிரித்தது.

சில வருடங்களுக்கு முன் போர் முனையில் வீரமரணமுற்றஇப் பேரக் குழந்தையின் தகப்பனின் – தன் மகனின் – நினைவு வரவே உணர்ச்சி மயமானார் கிழவர்.

“சண்டையினாலே ஏற்படறநஷ்டங்களைப் பார்த்தீரா?” என்றார் சோசியர் வையாபுரி.

சிவந்து கலங்கும் விழிகளோடும் முகம் நிமிர்ந்தார் பிள்ளை.

“நஷ்டம் தான்…. அதுக்காக? மானம் பெரிசு செட்டியாரே. மானம்
பெரிசு!…” என்று குழந்தையை மார்புறத் தழுவிக்கொண்டு கத்தினார் பிள்ளை. “என் வாழ்க்கையிலே பாதி நாளுக்கு மேலே ரெண்டு உலக யுத்தத்திலே கழிச்சிருக்கேன் நான்….. என் ஒரே மகனையும் இந்தத் தேசத்துக்குக் குடுத்துட்டதிலே எனக்குப் பெருமைதான்….. அவன் சொன்னானாமே….. “பூ உதிரும் ஆனாலும். புதுசு புதுசாவும் பூக்கு” மின்னு….. ஆ! அவன் வீரனய்யா…. வீரன்…..” என்று மீண்டும் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்ட பிள்ளை. சற்று தானே தன் உணர்ச்சிகளைச் சமனப்படுத்திக் கொண்டு வழக்கமாய்ப் பத்திரிகை படித்து விவாதிக்கும் தொனியில் பேசினார்.

“நாம சண்டைக்குப் போகலே…. எவ்வளவோ பொறுமையாகவே இருந்திருக்கோம்…. நல்லவங்க எவ்வளவுதான் விரும்பினாலும் கெட்டவங்க உலகத்திலே இருக்கறவரைக்கும் சண்டை இருக்கும் போலத் தான் தோணுது…. ஆனா. எம் மனசுக்கு இது சந்தோஷமாத்தான் இருக்கு…. பாத்துடுவோம் ஒரு கை. சண்டை வேண்டியதுதான்” என்று மீண்டும் உணர்ச்சி வெறியேறி அவர் பிதற்றிக் கொண்டிருக்கையில் மாணிக்கம் குறுக்கிட்டுக் கேட்டார்:

“”சண்டை நடக்கிறது சரி. நீங்க சண்டை வேணும்னு சொல்லறது வேடிக்கையாய் இருக்கு. அதுவும் நீங்க. அந்தக் கொடுமையையெல்லாம் பார்த்த நீங்க – அனுபவிச்ச நீங்க – அப்படிச் சொல்லலாமா?” என்று கேட்டார். அப்போதுதான் பெரியசாமிப் பிள்ளைக்கும் நினைவு வந்தது. செட்டியாரின்மகன் – இப்போது நடக்கும் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஜோத்பூரில் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்கிற விவரம். அந்த – நினைவு வந்தததும் செட்டியாரின் முகத்தை ஒரு விநாடி உற்றுப்பார்த்துவிட்டு. அவரது தோளைப்பற்றி அழுத்தி. “பயப்படாதீர்! கடவுள் இருக்கிறான்” என்றார்.

அந்தச் சாதாரண நம்பிக்கைதான் செட்டியாருக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்தது என்பது அந்நிலையிருந்து பார்க்கிறவர்களுக்குத்தான் தெரியும். பூந்தோட்டத்துச் சாமியாருக்கும் தெரிந்தது.

“ஐயோ! எவ்வளவு நாசம். எவ்வளவு அழிவு” என்று முணுமுணுத்துக் கொண்டார் சோசியர்.

“அழியாட்டிப் போனா வளர்ச்சி ஏது? ஒண்ணு சொல்றேன். கேளும். தர்மம்! தர்மம் மட்டும் அழியாது. அதர்மமும் அக்குறும்பும்தான் சண்டை வந்தா அழிந்தே போகும். சத்தியத்துக்குத்தான் போராடறகுணமும் உண்டு; பொறுத்திருக்கிறகுணமும் உண்டு. சண்டைன்னு வந்துட்டா அப்புறம் சண்டையெ நெனச்சி பயப்படக் கூடாது. சண்டையில்லாத காலமே கெடையாதே ஐயா!…. ராமாயண காலத்திலே. மகாபாரத காலத்திலே கூடத்தான் சண்டை இருந்திருக்கு…. யோசிச்சுப் பாரும். எந்தச் சண்டையிலேயாவது அநியாயம் ஜெயிச்சிருக்கா? சொல்லும்!…..”

-வந்த காரியத்தை மறந்துவிட்டு பிள்ளையின் பிரசங்கத்தை லயித்துக் கேட்டுக்கொண்டிருந்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.

“யாரு. பூந்தோட்டத்துச் சாமியா? எங்கே வந்தீங்க?” என்றார் பிள்ளை.

உறக்கத்திருந்து விழித்தவனைப் போல் ஒரு விநாடி சுதாரித்து “தர்மகர்த்தா ஐயா ஜமுக்காளம் வாங்கிகிட்டு வரச்சொன்னாரு” என்றான்.

“உள்ளே போயிக் கேளுங்க…. அம்மா. கௌரி…..பூந்தோட்டத்துச்சாமி வராரு பாரு…. அந்தக் கல்யாண ஜமுக்காளத்தை எடுத்துக்குடு… மத்தியானமே கேட்டாங்க. மறந்துட்டேன்” என்று உட்புறம் திரும்பிக் குரல் கொடுத்தார் பிள்ளை.

“உங்களுக்கு சண்டையெத் தவிர வேறஎன்ன ஞாபகமிருக்கும்ஃஃ என்று உள்ளேயிருந்து ஒலித்த தன் மனைவியின் குரலை அவர் பொருட்படுத்தவேயில்லை.

வீட்டிற்குள்ளே வந்து கூடத்து வாசற்படி அருகே நின்றபூந்தோட்டத்துச் சாமியாரின் விழிகள் கௌரியைப் பார்க்கையில் கலங்கின. அவள் ஜமுக்காளத்தை எடுக்க அறைக்குள் போனாள். அப்போது கூடத்துச் சுவரில் மாட்டப்பட்டிருந்த ராணுவ உடையில் – பார்க்கப் பார்க்க விகசிப்பது போன்ற புன்னகையுடன் – உள்ள சோமநாதனின் போட்டோவை வெறித்துப் பார்த்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.

சோமநாதன் ராணுவத்தில் சேர்ந்த அடுத்த வருஷம் லீவில் வந்திருந்த போது கோயிலுக்கு வந்து தன்னோடு பேசியிருந்து குசலம் விசாரித்த நிகழ்ச்சிகள் எல்லாம் இப்போது மனத்தில் தோன்றின. பொழுது போகாததால் வீட்டைச் சுற்றிலும் புஷ்பச் செடிகள் பயிராக்க எண்ணித் தன்னிடம் செடிகளும் விதைகளும் வாங்கி வந்து பயிரிட்ட சம்பவங்களெல்லாம் பெருகி வந்து நெஞ்சை அடைத்தன.

அவன் திரும்பி நின்று அந்த வீட்டைச் சுற்றிலும் செழித்துக் கிடக்கும் புஷ்பச் செடிகளைப் பார்த்து மீண்டும் திரும்பி அந்தப் போட்டோவைப் பார்த்தான்.

வெளியே வீட்டுத் திண்ணையில் பெரியசாமிப் பிள்ளை ன்னும் மிகுந்த உற்சாகத்தோடு யுத்தச்செய்திகளைப் படித்துக்கொண்டிருந்தார்.

அன்று மாலை கோயில் பிரகாரத்தில் ஜனக்கும்பல் நிரம்பி வழிந்தது.

காவி நிறப் பட்டிலே அங்கி தரித்திருந்த அந்தப் பண்டிதர் மிக அழகாக கீதையை உபதேசம் பண்ணினார்; அந்தப் பண்டிதரின் ஒரு பழைய உதாரணம் பூந்தோட்டச் சாமியாருக்குப் புதுமையாகவும் மிகவும் பிடித்ததாகவும் இருந்தது. இந்த உடம்பு நம்ஆத்மாவின் சட்டை; சட்டை பழசானதும் ஆத்மா இதை உதறிவிடுகிறது…. “ஒன்றுமே செய்யாமல் ஒருவனுமே இருக்க முடியாது. எல்லா ஜீவன்களும் இயற்கையான தன்மையினாலே தமது இச்சையின்றியே ஏதாவது ஒரு தொழிலோடு பூட்டப்பட்டிருக்கின்றன. “ஹே! அர்ஜுனா… உனக்குத் தொழில் செய்யத்தான் அதிகாரம் உண்டு. பயன்களில் உனக்கு எவ்வித அதிகாரமும் எப்போதும் இல்லை…. அவ்விதமான கர்மத்தின் பயனில் பற்றில்லாமல் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்து கொண்டிருக்கிறானோ அவனே துறவி. அவனே யோகி’ என்பதாகவெல்லாம் பகவான் சொல் யிருக்கிறார்…..

கூட்டத்தினர் அனைவரும் அந்தப் பண்டிதரின் ஞான வாசகங்களை ஏதோ பாட்டுக் கச்சேரி கேட்பது போல இடையிடையே “ஹா ஹாஃ என்று சிலாகித்தவாறு கேட்டிருந்தனர்.

பூந்தோட்டத்துச் சாமியார் ஒரு மூலையில் பந்தக்காலைக் கட்டிக் கொண்டு தாடியை நெருடியவாறு அங்குப் பேசப்படும் மெய்ஞ்ஞானங்களையெல்லாம் ஹிருதய பூர்வமாகக் கிரகிப்பது போல் கூரிய நோக்கோடு நின்றிருந்தான்.

உபந்நியாசம் முடிந்து கூட்டம் கலைந்த பிறகு பிரகாரத்தின் கருங்கல் தள வரிசையில் ஓர் ஓரமாய்ப் படுத்து வானத்தை வெறித்தவாறு யோசனையில் ஆழ்ந்திருந்த அவனுக்கு ஏனோ அடிக்கடி அந்தச் சோமநாதனின் முகமே எதிரில் வந்து தோன்றுகிறது.

பத்து வருஷங்களுக்கு முன் தனக்கு யாருமே பந்தம் இல்லாது போனதன் காரணமாய்ப் பிறந்த ஊரைவிட்டு ஓடிவந்துவிட்ட தன்னைப் பற்றியும் அவன் யோசிக்கிறான்.

வாழ்க்கையின் பெரும்பகுதியை ராணுவத்திலேயே கழித்துவிட்டு. தன் ஒரே மகனையும் யுத்தத்தில் இழந்து விட்டு. இன்னும்கூட மனத் தளர்ச்சியில்லாமல் தர்மத்தின் தன்மைகளைப் பற்றிப் பேசுகின்றபெரியசாமிப் பிள்ளையை விட. கீதை உபந்நியாசம் பண்ணிய அந்த மகா பண்டிதர் எந்த விதத்தில் துறவி என்று எண்ணிப் பார்க்கிறான் அவன்.

அவன் வெகுநேரம் உறக்கமில்லாது வெறித்த விழிகளோடு எதை எதையோ சிந்தித்தபின். ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவன் போல் அங்கிருந்து எழுந்து நடந்து கோயிலை விட்டு வெளியேறினான்….

பிறகு அவன் திரும்பவே இல்லை!

ஒரு நாள் கடைத்தெருவில் பெரியசாமிப் பிள்ளையைப் பார்த்த கோயில் குருக்கள் மனம் பொறுக்காமல் அங்கலாய்த்துக் கொண்டார். “மடப்பள்ளியிலே ரெண்டு வேளை சாப்பாடு போட்டு நல்லபடியா வெச்சிருந்தேன்…. ஓய் பிள்ளை. இதைக் கேளும்!….. அந்தப் பூந்தோட்டத்துச் சாமியார் பய சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ ஓடிட்டான்…..

நாலைஞ்சு நாளாச்சு….. நீர் எங்கேயாவது பார்த்தீரா?”

அப்போது ஒரு ராணுவ லாரி அவர்களைக் கடந்தது. பெரியசாமிப் பிள்ளை தமது வழக்கமான ஆர்வத்துடன் அந்த லாரி நிறைய நிற்கும் ராணுவ வீரர்களைப் பார்த்தார்.

சற்றுத் தள்ளிச் சென்று லாரி நின்றது…..

அதிருந்து ஒரு ராணுவ வீரன் “தொபீரெனக் குதித்து “சரக் சரக்ஃ கென நடந்து வந்தான்….

தன் மகன் சோமநாதனே வருவது போன்றபிரமிப்பில். வருவது யார் என்று தெரியாமல் பரவசமாகி நின்றிருந்தார் பிள்ளை.

வந்தவன் பேசிவிட்டுப் போகட்டும் என்றநினைப்பிலோ, பட்டாளத்துக்காரன் என்ற பயத்திலோ குருக்கள் தெருவோரமாய் விலகி நின்றார்.

அருகில் வந்த நின்றஅந்த இளைஞனை மேலும் கீழும் பார்த்து, “தெரியலயே” என்றார் பிள்ளை.

“நான்தாங்க….. பூந்தோட்டச்சாமி. தெரியங்கள? என்ன சாமி….. உங்களுக்குமா தெரியலை? உங்ககிட்ட எல்லாம் சொல்லிக்காம போறேனேன்னு நெனச்சேன்…. நல்ல வேளை பார்த்துட்டேன்…. ரயிலுக்குப் போறோம். வரட்டுங்களா?” என்று கைகூப்பி நிற்கும் அவனை வெறித்துப் பார்த்த பிள்ளை. அவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டார்.

மழுங்கச் சிரைத்த மோவாயும் உதட்டுக்கு மேல் முறுக்கிவிட்ட மீசையும்…… கிராப்புத் தலையும். காக்கிச் சட்டைக்குள் புடைத்துக் கவசமிட்டது போல் கம்பீரமாய் உயர்ந்த மார்பும்……

“சபாஷ்” என்று அவன் முதுகில் தட்டினார் பிள்ளை.

சட்டையில்லாத வெற்றுடம்பில் அரைத்துண்டும். தலை நிறைய முடியும். தாடியுமாய் இருந்த அந்தப் பழைய கோலத்தையும் இந்தப் புதிய கோலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த குருக்கள்-

“சட்டையெல்லாம் போட்டு. தாடியை எடுத்திட்டு…. நம்ப பூந்தோட்டத்துச் சாமியா? நம்ப முடியயே…” என்று கண்களைச் சிமிட்டினார்……

அவன் சிரித்தான்.

“ஆத்மாவுக்கு உடம்பே ஒரு சட்டைதானுங்களே….. இந்த ஆத்மாவுக்கு அந்தச் சட்டையே சம்பந்தமில்லே….. அதுக்கு மேலே எந்தச் சட்டெயப் போட்டுக்கிட்டாத்தான் என்ன? சொல்லுங்க சாமி?” என்றான்.

இந்தக் காக்கி உடுப்புக்குள் இருந்து இந்த வார்த்தை வருவதைக் கேட்கப் பிடிக்காத குருக்கள் குறுக்கிட்டார்:

“இந்தப் பேச்சையெல்லாம் இனிமே விடு. நீ வாழ்க்கையெ வெறுத்துச் சாமியாரா இருந்தப்போ அது சரி….. இனிமே பொருந்தாது” என்றார் அவர்.

“வாழ்க்கையெ வெறுத்தா? வாழ்க்கையெ வெறுத்தவன் தற்கொலை பண்ணிக்குவான் சாமி – சாமியாராகிறதில்லே…..” என்றான் அவன்.

தூரத்தில் அவனுக்காக நின்றலாரி ஹாரனை முழக்கிற்று.

“அப்போ நான் வர்றேன்ஃஃ – என்று பெரியசாமியையும், குருக்களையும் மீண்டும் வணங்கி விட்டு இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு லாரியை நோக்கி அந்தப் ‘பூந்தோட்டச்சாமி’ ஓடுவதைக் குருக்களும் பிள்ளையும் பார்த்தவாறு இருந்தனர்.

“ம் அவன் துறவிதான்” என்று தீர்மானமாகச் சொன்னார் பிள்ளை.

குருக்கள் கண் கலங்கப் பெருமூச்சுவிட்டார்.


03 அக்டோபர் 1965 

நன்றி - சிறுகதைகள்.காம்

தக்கயாகப் பரணி - கே.பி. அறிவானந்தம்

கலைமாமணி அறிவானந்தம் அவர்கள் தமழ் இலக்கியத்திலும், புராண இதிகாசங்களிலும் ஆழங்கால் பட்டவர். அவருடைய தக்கயாகப் பரணி என்ற கட்டுரை அதனை நிரூபிக்கும் படைப்பாகும்.

தக்க யாகம் என்பதால், தகாத யாகம் என்ற ஒன்று இருப்பதாக வாசகர்கள் யாரும் கருதிவிடக் கூடாது. தக்கதார், தகாதார் சம்பந்தப்பட்டதல்ல இந்த யாகம்.

தக்க என்ற இந்தச் சொல் தக்கன் என்ற தட்சன். இவன் தேவர்களில் ஒருவன். கட்டுரையில் இவனைப் பற்றிய விரிவான விளக்கம் வருகிறது. இந்த தட்சனை நிர்மூலமாக்கும் நிகரற்ற சக்தியாக எழுந்து வந்தவர்தான் வீரபத்திரர். அந்தச் சுவையான கதையைப் பரணியாகப் படைத்திருக்கிறார் திரு. அறிவானந்தம். படித்துச் சுவையுங்கள்.

- (பொ.ஆர். - ஓம் சக்தி)

தமிழில் பாடப்பட்ட பரணி நூல் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டால், கலிங்கத்துப் பரணி என்று பலரும் சொல்லிவிடுவார்கள். அதற்கடுத்து ஒன்றைச் சொல்லுங்கள் என்றால் தக்கயாகப் பரணி என்று சிலர்தான் சொல்வார்கள்.

வரலாற்றுத் தொடர்புடையது என்பதால், கலிங்கத்துப்பரணி பெற்ற இடத்தை, புராணத் தொடர்புடையது என்பதால் தக்கயாகப் பரணி பெறவில்லையோ என்று தோன்றுகிறது.

ஆனால், தக்கயாகப் பரணியைப் பாடிய ஒட்டக்கூத்தரும் வரலாற்றுச் செய்திகளை அள்ளி வழங்கியவர்தான். மூன்று சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது அவைப் புலவராகவிருந்து உலா பாடியவர்தான். விக்கிரம சோழன் உலா (1118 – 1135), குலோத்துங்க சோழன் உலா (1135 – 1150), இராசராச சோழன் உலா (1146 – 1173) ஆகிய மூன்று உலாக்களும் தமிழிலக்கியச் சிறப்பிற்கும், வரலாற்றுச் செய்திகளுக்கும் களமாக இருந்து உலா வந்து கொண்டிருக்கின்றன.

இவற்றுக்கும் மேலாக குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் என்று பாடி, பிள்ளைத் தமிழ் என்ற பிரபந்த வகைக்கு வித்திட்டவரே ஒட்டக்கூத்தர்தான். இப்படியெல்லாம் முடிமன்னர்களைப் பற்றிப் பாடிய அவர் தமது முதுமைக் காலத்தில் வாழ்நாளெல்லாம் நரஸ்துதியே பாடிக் கொண்டிருந்து விட்டோமே என்று வருந்தி சிவஸ்துதி பாட முனைந்தார். அதுவே தக்கயாகப் பரணி.

கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், காளக்கவி, சருவஞ்ஞகவி, கௌடப்புலவர் என்றெல்லாம் புகழ்பெற்ற ஒட்டக்கூத்தரின் கவிதைகளின் பொருளை ஒருமுறை படித்தவுடனேயே புரிந்துகொள்ள முடியாது. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதற்கு, அவரது பாடலை ஒருமுறைக்கு இரு முறையாகப் படித்துத் தாழைத் திறந்தால்தான் பொருள் விளங்கும் என்பதுதான் பொருள்.

இனி நூலுக்குள் செல்வோம். பரணி என்பது என்ன? ஆயிரம் யானைகளைப் போரில் வென்ற மாவீரன் ஒருவனைப் புகழ்ந்து பாடுவதே பரணி.

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது பரணி

என்று இலக்கண விளக்கப் பாட்டியல் பாடுகிறது. போர் பகைவனின் நாட்டில் நடந்து வெற்றி காண்பதால், தோற்றவன் பெயரால் நூலின் பெயர் அமைவது பரணியின் தனிச் சிறப்பாகும். கலிங்க மன்னன் சோழனிடம் தோற்ற வரலாறு என்பதால் அது கலிங்கத்துப் பரணி எனப்பட்டது. சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரரால் தட்சனின் யாகம் அழிக்கப்பட்டது என்பதால் இது தக்கயாகப் பரணி எனப்பட்டது.

வீரத்திற்குரிய தெய்வம் கொற்றவையான காளி என்பதாலும், பரணி நட்சத்திரத்திற்குரிய அதிதேவதை அவளே என்பதாலும் பரணி என்ற பெயர் ஏற்பட்டதென்றும் கூறப்படுகிறது.
தக்கயாகப் பரணி, பரணி நூலுக்குரிய மரபு மாறாமல், கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது. கலிங்கத்துப் பரணி எல்லாத் தெய்வங்களையும் பாடுகிறதென்றால், தக்கயாகப் பரணியோ உமைபாகர், விநாயகர், முருகர், ஞானசம்பந்தர் என நால்வரை மட்டுமே பாடுகிறது.

உமைபாகர் என சிவபெருமானின் புகழ் பாடுகிறார் ஒட்டக்கூத்தர்.

புயல்வாழ நெடுதூழி புவிவாழ
முதலீறு புகல்வேதநூல்
இயல்வாழ உமைவாழ்வ தொருபாகர்
இருதாளின் இசைபாடுவாம்

இதில் புயல்வாழ என்று மழையை வாழ்த்தும் கவிஞர் அதன்மூலம் நெடுங்காலம் புவிவாழும் வேத நூல்களின் இயல் வாழும் என்கிறார். இவ்விதம் இவையெல்லாம் வாழ்வதற்காகத்தான் இறைவனின் ஒரு பாகத்தில் உமை வாழ்கிறாளாம். அதனால் அம்மை அப்பராக விளங்கும் அந்த இரு தாளினையும் போற்றுவோம் என்கிறார்.

முருகப் பெருமானின் பெருமையைப் பாட வந்த ஒட்டக்கூத்தர்,

ஒருதோகை மிசையேறி உழல்சூரும்
மலைமார்பும் உடனூடுறப்
பொருதோகை சுரராச புரமேற
விடுகாளை புகழ்பாடுவாம்

என்கிறார். இந்திரன் தனது நாடாகிய சுரராசபுரம் எனும் அமராவதியின் சிம்மாசனத்தில் ஏற வேண்டும் என்பதற்காக, முருகன் ஒரு மயில்மேல் ஏறி சூரபத்மனின் மார்பில் மட்டுமின்றி, கிரௌஞ்சகன் எனும் அசுரன் மலையாக மாறி நின்றானே. அவன் மார்பிலும் ஊடுற வேலெறிந்தான் என்கிறது பாடல்.

இவ்விதம் கடவுளரைப் பாடும்போது அந்தத் தெய்வங்கள் பாட்டுடைத் தலைவனுக்கு நன்மை உண்டாகும்படி அருள்புரிய வேண்டும் என்று பாடுவது மரபு. ஆனால், ஒட்டக்கூத்தர் தன்னை வாழ்வித்த சோழ மன்னனுக்குத் தெய்வங்கள் அருள்புரிய வேண்டும் என்று பாடுகிறார்.

கடவுள் வாழ்த்திற்குப் பிறகு கடைதிறப்பு எனும் பகுதி தொடங்குகிறது. போரில் வென்ற வீரர்கள் தங்கள் காதல் மனைவியரை அழைக்கக் கதவைத் தட்டித் திறக்கச் சொல்லுவதுதான் கடைதிறப்பு. இதில் பெண்களின் அழகும், மற்றுமுள்ள சிறப்புகளும் விரிவாகப் பாடப்படும்.

கலிங்கத்துப் பரணியில் இந்தப் பகுதி மிகவும் சுவையாக, அளவாக இருக்கும். ஆனால், ஒட்டக்கூத்தர் நினைத்துப் பார்க்க முடியாத அதீத கற்பனைகளைப் பாடுபவர் என்பதால் கௌடப்புலவர் என்று பெயர் பெற்றவராயிற்றே! அதனால் இப்படியெல்லாம் இருக்கவே முடியாது என்று சொல்லுமளவிற்கு மிகையாகப் பாடுகிறார். அதனால் கடைதிறப்பில் இயல்பாக அமைந்த இரு கவிதைகளை மட்டும் பார்த்துவிட்டு மேலே செல்வோம்.

நீராடி விட்டு வரும் தேவமங்கையர் நீரில் நனைந்த தங்கள் கூந்தலெனும் குழல்களை முறுக்கிப் பிழிந்து முடிந்து கொள்கின்றனர். அதைக் காணும் சுரர் எனும் தேவர்களுக்கோ, அவர்கள் தங்கள் உயிர்களையும், உணர்வுகளையும் அந்தக் குழலோடு சேர்த்துத் திருகுவது போல் இருக்கிறது. இத்தகைய செயல்புரியும் தேவ மங்கையரே கதவைத் திறவுங்கள் என்கிறது இந்தப் பாடல்.

உருகும்சுரர் உயிருண்டன
உணர்வுண்டன ஒழுகத்
திருகுங்குழல் அரமங்கையர்
திறமின்கடை திறமின்

இதோ ஒட்டக்கூத்தரின் உவமை நயத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு பாடல். ஏற்கனவே வள்ளுவர் பெருமானால், ஒரு நோக்கு நோய் நோக்கு மற்றொன்று அதற்கு மருந்து என்று சொல்லப்பட்டதுதான் என்றாலும், இது அதை மேலும் அழகுபடுத்தி உவமை நயத்தோடு பாடுகிறது.

இந்தத் தெய்வமாதிரின் கண்களில் அமுதமும் இருக்கிறது. நஞ்சும் இருக்கிறது. அவை இரண்டும் தாங்கள் இருக்க வேண்டிய சமுத்திரத்தை விட்டுவிட்டு இந்த மாதரின் கண்களுக்குள் வந்துவிட்டன. அவை இவ்விதம் வர வேண்டிய அவசியமென்ன? அதற்கு ஓர் அருமையான காரணத்தைக் கூறுகிறார் ஒட்டக்கூத்தர்.

நஞ்சு சமுத்திரத்தில் தோன்றி வந்தால் அரன் - சிவபெருமான்  அதை விழுங்கிவிடுவார். அமுதம் தோன்றி வந்தால் இமையவர் - தேவர்கள்  அதைப் பங்கு போட்டுக் கொண்டு உண்டு விடுவார்கள். இவற்றுக்கெல்லாம் பயந்துதான் அமுதமும், நஞ்சும் அந்தத் தெய்வமாதர் கண்களில் புகுந்து கொண்டன என்கிறார்.

அரனும் ஏனைஇமை யவரும்உண்பரென
அஞ்சி நஞ்சும்அமு தமுமுடன்
திரைமகோததியை விடவிருந்தனைய
தெய்வமாதர்கடை திறமினோ

இவற்றுக்குப் பிறகுதான் பரணியின் பிரதானப் பகுதி தொடங்குகிறது. பரணியின் தலைவி மகாகாளியல்லவா? அதனால் அவளைப் பாடத் தொடங்கும் கவிஞர் அவள் இருக்கும் காடு  எழுந்தருளியுள்ள கோயில் இவற்றின் தன்மைகளைக் கூறிவிட்டுத் தேவியைப் பாடுகிறார்.

அன்னை தன் திருவடிகளில் நூபுரம் எனும் சிலம்புகளை அணிந்திருக்கிறாள். ஆரணம் எனும் வேதங்களுக்கு ஆதாரமாகவிருக்கிறாள். இளம் நிலவைத் தரித்திருக்கும் சடைமுடியைக் கொண்டவளாகவிருக்கிறாள். இத்தகைய மகாகாளி எத்தகைய சிறப்புக்குரியவள் தெரியுமா? முன்னொரு காலத்தில் துன்பத்திற்காளான தேவர்கள் வாழ்வு, மீண்டும் அவர்களுக்குரிய வாழ்வாகவும், அவுணர் எனும் அசுரரின் வாழ்வு பாழாகவும் அருள்புரிந்தவள். மோகினி வடிவில் அமரர்க்கு அமுதம் ஈந்தவள்.

திருமால்தான் மோகினி வடிவில் அமுதமீந்தவர் என்பது அனைவரும் அறிந்த கதைதான். இருப்பினும் எல்லா தெய்வங்களுக்குள்ளும் இருப்பவள் மகாசக்தி என்பதால் அதை அவள்மீது ஏற்றிப் பாடுகிறார் ஒட்டக்கூத்தர். தனதான தானான தனனனான தானான எனும் சந்தம் நம் சிந்தை இனிக்க ஒலிக்கிறது.

தமரநூபு ராதார சரணியார ணாகாரி
தருணவாணி லாவீசு சடிலமோலி மாகாளி
அமரர்வாழ்வு வாழ்வாக அவுணர்வாழ்வு பாழாக
அருளுமோகி னீயாகி அமுதபானம் ஈவாளே

இத்தகைய தேவியைத் துதிப்பவை யாவை? அதற்கென அமைந்த யாமள நூல்கள் மட்டுந்தானா? பதினெட்டுப் புராணங்களும் அவளைத்தான் துதிக்கின்றன. தேவியின் திருவடிகளை வணங்குபவை பூதகணங்கள் மட்டுந்தானா? பஞ்ச பூதங்களுமே அவளைத்தான் பணிகின்றன.

பரவுவன யாமளமோ பதினெட்டுப் புராணமுமே
விரவுவன பூதமோ விண்முதலைம் பூதமே

அன்னைக்கு மலரிட்டு வணங்க வேண்டும் அல்லவா? அவை பூவுலகில் வனத்திலிருந்து கொண்டு வரப்படும் வனமலர்கள் மட்டுந்தானா?

வானுலகிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்பக மலர்களும் பூமாரியாகப் பொழிகின்றன. தேவிக்குத் திருமஞ்சனமாக அபிடேகம் செய்யக் கொண்டு வரப்படுபவை பூமியில் உள்ள ஏதேனும் நீர் நிலைகளிலிருந்துதானா? சர்வேசுவரனின் திருமுடியிலிருக்கும் வானத்து கங்கையும் வந்து நீரைப் பொழிகின்றது.

வனமலரோ பூமாரி வானக்கற் பகமலரே
கனசலமோ அபிடேகம் கடவுட்கங் காசலமே

பூசைகள் ஏற்றுக் கொலுவிருக்கும் அன்னை தன் கரங்களில் தண்டாயுதம், கட்காயுதம், வில், சங்கு, சக்கரம் எனும் பஞ்சாயுதங்களை ஏந்தியிருக்கிறாள். அவளது பச்சை வண்ணமான மரகதத் திருமேனி திசையெங்கும் ஒளி வீசுகிறது. பாம்புப் படுக்கையில் அவள் வீற்றிருக்கும் காட்சி பிரமிக்கச் செய்கிறது.

அவளருகே மகோதரன், குண்டோதரன் மற்றுமுள்ள பூதகணங்கள் சூழ்ந்து நிற்கின்றனர். பிரம்மாதி தேவர்கள் வந்து வணங்கி நிற்கின்றனர். அகத்தியன் முதலான முனிவர்கள் துதிக்கின்றனர். அவளுக்கு இருபுறமும் திருமகளும், கலைமகளும் அமர்ந்திருக்கிறனர்.

இவ்விதமெல்லாம் தேவியின் சிறப்புகளைக் கூறிக் கொண்டு வரும் ஒட்டக்கூத்தர் இதற்கடுத்து ஒரு சுவையான நிகழ்ச்சியை இணைத்துப் பாடுகிறார்.

ஞானசம்பந்தர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் ஒட்டக்கூத்தர். அதனால் அன்னை காளி தன் அருகே அமர்ந்திருக்கும் கலைமகளை நோக்கி என் மைந்தனும் முருகனின் அம்சமுமான ஞானசம்பந்தன் மதுரையில் சமணரை வென்று பாண்டியனை சைவத்திற்கு மாற்றிய வரலாற்றைச் சொல் என்று கேட்கிறாள். கலைமகள் மகிழ்ச்சியடைந்து அதை விரிவாகக் கூறுகிறாள்.

இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். தட்சயக்ஞம் என்ற புராண நிகழ்ச்சி கிரேதாயுகத்தில் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. ஞானசம்பந்தர் வரலாறோ கலியுகத்தில் நடந்ததாகும். எந்த வகையிலும் இந்த இரண்டிற்கும் காலக் கணக்குப் பொருந்தாது.

இருப்பினும் தமது மானசீகக் குருவான ஞானசம்பந்தரைப் பற்றிப் பாடிவிட வேண்டும் என்ற விருப்பத்தினால் இங்கு அதை இணைக்கிறார் ஒட்டக்கூத்தர். அத்தோடு ஞானசம்பந்தர் முருகனின் அவதாரம் என்ற கருத்தையும் முதன் முதலாக இவரே முன்வைக்கிறார்.

இனி அன்னை அவ்விதம் கேட்கும் கருத்துமிக்க அருமையான பாடலைக் காண்போம்.
வெண்மையொளி செவ்விய முறையில் எங்கும் பரவும் வெண்டாமரை மலரில் வீற்றிருப்பதால், அதனருகே இருக்கும் அல்லியும் மணம் கமழும்படிச் செய்யும் வல்லி போன்றவளே! தெய்வ மகளாக - எனது மருமகளாக விளங்கும் வள்ளியை மணம் புரிந்து மனம் மகிழும் என் பிள்ளை முருகன், மதுரையில் அமணரை வென்ற கதையைச் சொல்லு!

“வருகதை தெய்வமகளென் மருமகள் வள்ளிவதுவை
மனமகிழ் பிள்ளைமுருகன் மதுரையில் வெல்லுமினிய
ஒருகதை சொல்லுதவள வொளிவிரி செவ்விமுளரி
ஒளிதிகழ் அல்லிகமழும் ஒருமனை வல்லியெனவே”

அன்னையிடம் அவள் மைந்தனின் வரலாற்றைச் சொல்லும் மகிழ்ச்சியோடு கலைமகள் சொல்லத் தொடங்குகிறாள். ஆளுடைப் பிள்ளையார் மதுரையை நெருங்கும் போதே ஆலவாய்ச் சொக்கனின் ஆலயத்தைக் கண்டு வணங்கி, அங்கிருந்த ஒரு மடத்தில் தங்கினார். அமணர்கள் அதற்குத் தீயிட, ஞானசம்பந்தர் அந்தத் தீ பாண்டியனைப் பற்றுக என்றார். “பையவே சென்று பாண்டியர்க்காகவே” என்பது சம்பந்தர் தேவாரம்.

அந்தத் தீ வெப்புநோயாக மன்னனைப் பற்றிக்கொள்ள சமணர் தாங்களறிந்த யந்திரங்களை வரைந்து மந்திரங்களைச் சொல்லி மயிற்பீலி கொண்டு வருடினர். ஆனால் என்னவாயிற்று?

அவர்கள் கையிலிருந்த ஆலி என்ற குண்டிகை நீர் வெந்தது. மந்திரம் வெந்தது. யந்திரம் வெந்தது. பீலியும் வெந்தது. அவர்களது பாயும் வெந்தது. அருகிலிருந்த பிண்டி எனப்படும் அவர்களது அசோக விருட்சமும் வெந்தது.

“ஆலிவெந்து மந்திரம்வெந்து
யந்திரம்வெந் தமைந்ததோர்
பீலிவெந்து பாயும்வெந்து
பிண்டியேற மண்டவே”

இவ்வளவு கடுமையாக மன்னனை எரித்த வெப்புத் தீ ஞானசம்பந்தர் வந்து “திருநீறிவன் நெற்றியில் இட்டலுமே, வெப்புத்தடைபட்டது” இது திருநீற்றின் மகிமையால் தீர்ந்தது. அதைப் பற்றி மன்னன் அமணரிடம் சொல்வது மிகவும் சுவையாக அமைகிறது. உவமை நயம் உள்ளத்தைக் குளிர்விக்கிறது.

“நீங்கள் வந்து தொடத் தொட கோடைக் காலத்துத் தீ காட்டை எரிக்க வெந்தது போல் நானும் வெந்துருகினேன். ஆனால், இந்த ஞானசம்பந்தர் வந்து தொடத்தொட நான் நலமடைந்து கார்காலத்து மழையில் காடு மீண்டும் செழிப்புற்றது போல ஆனேன்.”

“நீர்வந்து தொடத்தொட வெந்துருகா
நெடுவேனில் சுடச்சுட நின்றுலறிக்
கார்வந்து தொடத்தொட உய்ந்திளகும்
காடொத்தனன் யானிவர் கைப்படவே”

அதற்குப் பின் அனல்வாதம் – புனல்வாதம் நடைபெறுகிறது. அமணர் தோற்றுத் தாங்கள் சொன்னபடி கழுவிலேறுகின்றனர். பிள்ளையார் கூன்பாண்டியனை நிமிரவைத்து நின்ற சீர் நெடுமாறனாக்குகிறார்.
இந்த வரலாறெல்லாம் விரிவாக ஐம்பது பாடல்களில் இடம்பெறுகிறது. நாம் அதற்குள்ளே சென்றுவிட்டால் பிரதானக் கதையைப் போதுமான அளவிற்குப் பார்க்க முடியாது.

இதுவரை நாம் கண்டதெல்லாம் இனிய, பக்திமயமான காட்சிகளாகும். இனிக் காண இருப்பவை இவற்றுக்கு நேர்மாறான, மனதை நடுங்க வைக்கும் கடுமையான காட்சிகளாகும்!

கலைமகள் அன்னை மகாகாளியிடம் ஆளுடைப் பிள்ளையின் பெருமைகளைச் சொல்ல, அதைக் கேட்டு மகிழ்ந்த அன்னை கலைமகளைத் தனக்கு அருகாமையில் அமர்த்திக் கொள்கிறாள். அவள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் இந்த நேரம்தான் நாம் நமது கோரிக்கையைச் சொல்வதற்குப் பொருத்தமான நேரம் என்று அவள் அருகே வந்து பணிந்து நின்றன சில பேய்கள்.

அந்தப் பேய்கள் எப்பயிடிருந்தன என்பதையும் பேய்களின் வடிவங்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ஒட்டக்கூத்தர்.

எலும்புக் கூடுகளாகயிருக்கும் அந்தப் பேய்கள் சிவந்த சடைகளைக் கொண்டவையாக விளங்குகின்றன. அவை ஏன் அப்படியிருக்கின்றன? அந்தப் பேய்களுக்குக் கடுமையான பசி. அதன் காரணமாக அவற்றின் வயிற்றில் எழுந்த உதராக்கினி என்ற நெருப்பு மேலெழுந்து வாயின் வழியே வெளிப்படுகின்றன. அதனால் ஏற்படும் புகையில் அவற்றின் தலைமுடி நெருப்பில் கொளுத்தினாற் போல் தோன்ற செஞ்சடைகளாக விளங்குகின்றன. அதனால் அவற்றின் சிரங்கள் வெம்மையாகவே இருக்கின்றன.

“வாயெழப் புகைந்துகீழ்
வயிற்றெரிந்து மண்டுசெந்
தீயெழக் கொளுந்தியன்ன
குஞ்சிவெஞ் சிரத்தவே”

பசையில்லாமல் உலர்ந்த எலும்புகளும், ஒசிந்த நரம்புகளும் கொண்ட பேய்களின் உடம்புகளைக் கிணற்றுக்குள் கட்டிவிட்ட குடலையாக நினைத்துக் கொண்டு சிலந்திகள் வந்துவிட்டன. அவை தம் வாய் நூலால் வயிற்றெலும்புகளின் இடைவெளி தெரியாதபடி வலை பின்னின.

“உலரெலும்பொடு ஒசிநரம்பும்
உடலில்நின்ற குடலைபோன்று
அலர்சிலம்பின் இழைசுழன்று
வெளியடங்க அணிவவே”

இவ்விதம் விகாரமாகவும், பயங்கரமாகவும் காட்சி தந்த பேய்கள் யாவும் ஒன்றுகூடி அன்னையின் சந்நிதியில் வந்து வணங்கி நின்றன. தங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டன. அன்னையும் அவற்றின் கோரிக்கையைக் கேட்டு அருளினாள்.

“தாயே! தங்கள் கணவரான சிவபெருமான் ஒரு காலத்தில் பல அசுரவதங்கள் புரிந்தார். அதன் காரணமாக அங்கு விழுந்த பிணங்களைப் புசித்துப் பசியாறினோம். இப்போது அவருக்கு என்ன நேர்ந்ததென்றே தெரியவில்லையே! அதற்கான வாய்ப்புகள் வந்தும் அவை எமக்குக் கிடைக்காமல் செய்து விடுகிறாரே!” என்றன பேய்கள்.

ஏன் இவை இப்படிச் சொல்கின்றன என்று அன்னை குழப்பமடைந்தபோது அவை இவ்விதம் கூறின :
“சிவபெருமான் முப்புரங்களை அழிக்கப் போகிறார் என்று நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். எண்ணற்ற அசுரரின் உடல்கள் சடலங்களாக விழும் என்று காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவரோ அவற்றையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கிவிட்டாரே! எங்களுக்கு எதுவுமே கிடைக்காமல் செய்துவிட்டாரே! ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அவரிடம் அந்த அசுரரைக் கூறுகூறாக்குவதற்கு வாளில்லையா? குத்தித் தூக்கி எறிய வேலில்லையா? ஏன் அந்த அசுரரை நீறாக்கினார்?

“கூறாக்கு தற்கு வாளிலரோ?
குத்தித் தூக்க வேலிலரோ?
நீறாக் குவதென் முப்புரத்தில்
உள்ள வெள்ள நிருதரையே!”

“அதுதான் போகட்டும். பத்துத் தலைகளைக் கொண்ட இராவணன் எனும் அரக்கன் ஈசன் வீற்றிருக்கும் கைலாய மலையையே தூக்க முனைந்தபோது, அவனைத் தமது திருப்பாத விரலால் ஊன்றினாரே அப்படியே அவனது பெருத்த சரீரம் நெரிந்துபோகச் செய்திருந்தால் பெருகி வரும் உதிரக் குழம்பை யாவது பருகியிருப்போமே! ஆனால் அவரோ, அவன் பாடிய பாடலைக் கேட்டுக் கருணை காட்டி, அவனைப் பிழைக்கச் செய்துவிட்டாரே! அந்த தசமுகனின் பாட்டில் அப்படி என்னதான் இருக்கிறதோ தெரியவில்லையே…!”

“குழம்படியேம் புகவிழுந்து
பொருப்படியிற் கொள்ளாமே
பழம்படியே தசமுகனை
விட்டார்தம் பாட்டறிவே”

இப்படியெல்லாம் அந்தப் பேய்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் வெகு தூரத்திலிருந்து ஓடி வந்த ஒரு பேய் “தட்ச யாகத்தை வீரபத்திரர் அழிக்கிறார். அவரோடு வந்த பூதகணங்களிடம் அடிபட்டு தட்சனின் சேனைகள் மடிவதோடு, அந்த யாகத்தில் கலந்து கொண்ட வானவர்களும் அங்கங்கள் சிதைக்கப்பட்டு விழுகிறார்கள். அங்கு சென்றால் நம் பசி தீரும்” என்கிறது.

அதைக் கேட்ட மகாகாளி மகிழ்ந்து பேயைப் பார்த்து அந்த வரலாற்றை விரிவாகச் சொல் என்று ஆணையிடுகிறாள். பேய் மிகுந்த உற்சாகத்தோடு அதைச் சொல்கிறது.

இந்த நேரத்தில் அந்த வரலாற்றை நாமும் தெரிந்து கொள்வது அவசியமாகும். அப்போதுதான் அதற்குரிய பாடல்களின் சுவையை அனுபவிக்க முடியும்.

தட்சன் என்பதுதான் தக்கன் என மருவி வருகிறது. அந்த தட்சன் பிரம்மதேவரின் மைந்தன். தனது தவத்தால் பெரும் ஆற்றல் படைத்தவனாக விளங்கும் அவன், பராசக்தியே தனக்கு மகளாகத் தோன்ற வேண்டும் என்று வேண்டினான். அதற்கேற்ப அம்பிகை தட்சனுக்கு மகளாக வந்து அதற்கு அடையாளமாக தாட்சாயினி என்றே பெயர் கொண்டாள்.

அவளுக்குத் திருமண வயது வந்தபோது தட்சன் தன் மகளான தாட்சாயினியை மணக்கச் சிவபெருமானே தன்னிடம் வந்து பெண் கேட்டாக வேண்டும். மருமகன் என்ற முறையில் மாமனாரான தன் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்தான். அதனால் ஆணவம் கொண்டான். அதையுணர்ந்த எம்பெருமான் தாட்சாயினியைக் கவர்ந்து சென்று மணம் செய்து கொண்டார்.

அதனால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல்தான் சிவபெருமானை அவமதிக்க வேண்டுமென்றே, யாகங்களுக்கெல்லாம் தலைவரான அவரைப் புறக்கணித்துவிட்டு, மற்ற தேவர்களையெல்லாம் அழைத்து வந்து யாகம் செய்தான். அதுவே தக்க யாகம். ஈசன் இல்லாத யாகத்திற்கு நாங்கள் வரமாட்டோம் என்றுதான் தேவர்கள் யாவரும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர்களும் ஈசனை அலட்சியம் செய்துவிட்டு அந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள்.

தேவர்கள் யாகத்திற்கு வருவதிலிருந்துதான் பேய் சொல்லும் கதை தொடங்குகிறது. இது காளிக்குக் கூளி கூறியது என்ற தலைப்பில் இடம்பெறுகிறது. கூளி என்பது பேயைக் குறிக்கும்.

தேவர்கள் யாவரும் வந்துவிட்டார்கள். சில முனிவர்கள் புறக்கணித்தாலும் பல முனிவர்கள் வந்து கலந்து கொண்டார்கள். தாட்சாயினியான அம்பிகை, ஈசனிடம் அனுமதி பெற்றுச் சென்று ஈசனை விலக்கி யாகம் செய்வது முறையல்ல; யாகத்திற்குரிய பலன் கிடைக்காது என்று அறிவுரை கூறினாள். தட்சன் அதை ஏற்க மறுத்ததோடு அவளைக் கடுமையாக அவமதித்தான்.

கோபம் கொண்ட அம்பிகை கயிலைக்குத் திரும்பி வந்து தட்சனுக்குப் பாடம் புகட்ட வேண்டுமென்று ஈசனை வேண்டினாள். நடந்ததை அறிந்த ஈசனும் ஆவேசம் கொண்டவராகத் தன்னிலிருந்தே வீரபத்திரரைத் தோற்றுவித்தார்.

வீரபத்திரர் தோன்றியதைப் பாட வந்த ஒட்டக்கூத்தர் சிவபெருமான் உண்ட ஆலகாலமே வடிவெடுத்தது போல் அவர் வந்தார் – அகிலத்தைச் சுடும் சூரிய வெப்பமும் மங்கியது என சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்தார் என்று இரு கவிதைகளில் அவரது வருகையை விவரிக்கிறார்.

“அன்றுவானவர் உய்யஅய்யர்
மிடற்றடக்கிய ஆலமே
சென்றுவானவர் உயிர்கொளத்திரு
உள்ளம்வைத்தமை தெரியவே
காலைநெற்றியின் அகிலமுஞ்சுடு
கனலிகுறைபட இறைவர்தம்
மேலைநெற்றி விழிக்கவந்து
பணிந்துநின்றனன் வீரனே”

இவ்விதம் தோன்றி இறைவனின் ஆணை பெற்று வீரபத்திரர் புறப்பட்டபோது, எண்ணற்ற பூதகணங்கள் அவருக்குத் துணையாகப் புறப்பட்டன.

ஈசனின் அம்சமான வீரபத்திரர் போருக்கு வருகிறார் என்று தெரிந்தும் தட்சனும், தேவர்களும் அவரை எதிர்க்கத் துணிந்தார்கள்.
யுத்தம் தொடங்கியது. அது எப்படி இருந்தது என்பதை ஒட்டக்கூத்தர் சிறுசிறு சொற்களில் மூன்று மூன்று சீர்கொண்ட சிந்தடியில் பாடுகிறார். விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் களக் காட்சியைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன அந்த வரிகள்.

“சிரமும் சிரமும் செறிந்தன
சரமும் சரமும் தறிப்பவே
தாருந் தாருந் தழைத்தன
தேருந் தேருந் திளைப்பவே
கிரியுங் கிரியுங் கிடைத்தன
கரியுங் கரியுங் கடுப்பவே
குடையுங் குடையுங் கொழித்தன
படையும் படையும் பகைப்பவே”

இப்படி நடந்த யுத்தத்தில் தட்சன் படையும் தேவர் படையும் மடிந்து விழ, மிஞ்சி நின்றவர்கள் இந்திரனிடம் போய் முறையிடுகின்றனர். இந்திரன் கோபத்தோடு யுத்தத்திற்குப் புறப்படுகிறான். அப்போது இந்திரன் பேசும் வீரவாதம் ஆணவம் வந்துவிட்டால் ஒருவன் எப்படியெல்லாம் பேசுவான் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது. இறைவனின் அருளால்தான் தனக்கு எல்லாமே கிடைத்தது என்பதை மறந்து, அவரோடு தன்னை ஒப்பிட்டுப் பேசி நானே உயர்ந்தவன் என்று பறைசாற்றிக் கொள்கிறான் இந்திரன்.

நான் இருக்கும் இடம் எப்படிப்பட்டது தெரியுமா? சகல செல்வங்களும் நிறைந்த அமராவதிப் பட்டணம். ஆனால் அந்த ஈசனுக்கு இருப்பிடம் எது? சுடுகாடு! அதுமட்டுமா? அட்டதிக்குப் பர்வதங்கள் எனும் குலகிரிகள் எனக்குக் கட்டுப்பட்டவை. ஆனால், அந்த ஈசனுக்கு வெறும் கயிலாயம் எனும் கல்தான்!

“யானாள்பதி அமராபதி
ஈமம்தன தெனதேழ்
கானாள்குல கிரிதன்மலை
கயிலைச்சிறு குவடே”

அட்ட நாகங்கள் எனும் குலவெண் பணியான எட்டுத் திசை நாகங்களும் எனக்குரியவை. ஆனால், அந்த ஈசனுக்கு ஆபரணமாகயிருப்பவை வெறும் பாம்புகள்தான். அதிலும் அவை தாருகாவனத்து முனிவர்கள் தங்கள் வேள்வியில் உருவாக்கி அவர்மீது ஏவிவிட்டவை. அதாவது அந்தப் பாம்புகள் அவருக்குச் சொந்தமில்லாதவை. (இந்தக் கவிதையில் பணி என்பது பாம்பைக் குறிக்கும்).

“குலவெண்பணி யானேபணி
கொள்வேனணி கொள்ளும்
பலவெண்பணி அவையும்சிலர்
விடுதந்தனர் பண்டே”

நான் வீற்றிருப்பதும் விளையாடி மகிழ்வதும் கற்பகத் தருவின் நிழலிலல்லவா? ஆனால் அந்த ஈசன் ஆலமர நிழலில்தானே வசித்துக் கொண்டிருக்கிறார்?

“கோலந்தரு தருவின்குளிர்
குழைநீழல் விடேயான்
ஆலந்தரு வறுநீழலின்
 இடைவைகுவ தவனே”

என்னிடமிருப்பதோ இடியின் வடிவமென அமைந்த வச்சிராயுதம். ஆனால் ஈசனிடம் இருப்பதோ சின்னஞ்சிறு மழுவாயுதம். (சிவத்துக்கே உரிய சூலாயுதத்தை மறந்துவிட்டுப் பேசுகிறான்) எனக்கு வாகனமாகயிருப்பதோ ஐராவதம் என்ற யானை. ஈசனுக்கு வாகனமோ வெறும் எருதுகள்.
“வானேறுரு எனதாயுதம்
அவனாயுதம் மழுவாள்
யானேறுவது அயிராவதம்
அவனேறுவது எருதே”

இப்படியெல்லாம் பேசிக் கொண்டு மிஞ்சி நின்ற தேவர்களோடு போருக்கு வந்தானே இந்திரன் – அவனது ஆயுதங்களெல்லாம் வீரபத்திரருக்கு முன்னால் பயனற்றவையாகின. இறுதியாகத் தனது ஒரே நம்பிக்கையாகவிருந்த வச்சிராயுதத்தை வீசினான் இந்திரன். அது என்னவாயிற்று?

“வச்சிரப் படையும் இந்திரன் படையில்
வந்த தாலதனை வல்லவன்
முச்சிரப் படையும் வேறுசெய் திலது
நீறு செய்ததெதிர் முட்டியே”

தனக்கே உரித்தான வச்சிரப்படையை இந்திரன் ஏவ, முச்சிரப் படையான சூலாயுதத்தை வீரபத்திரர் ஏவினார். அது வேறு ஒன்றும் செய்யவில்லை யாம். அந்த வச்சிராயுதத்தை நீறு செய்துவிட்டது. அதாவது பொடிப் பொடியாக்கிவிட்டது.

மறுகணம் வீரபத்திரர் ஏவிய குலிசாயுதத்தால் இந்திரன் அடிபட்டு விழு கிறான். அதைக் கண்ட திருமால் ஆவேசத்தோடு களத்தில் புகுந்து பாஞ்சஜன்யம் என்ற தமது சங்கத்தை முழங்கி யுத்தத்தைத் தொடங்கு கிறார்.
சாரங்கம் என்ற வில்லை ஏந்தியதால், சாரங்கபாணி என்று பெயர் பெற்றவரல்லவா திருமால்? அந்த சாரங்கம் சரங்களைப் பொழிய, வீரபத்திரரின் வில்லும் அம்புகளைப் பொழிகிறது. அப்போது என்ன நேர்ந்தது?
மாயோன் விடக்கூடிய பகழி எனும் அம்புகளெல்லாம் வீரபத்திரர் மேல் வந்து விழுந்தவுடனே வெந்து பொடியாய்ப் போயின. சேயோன் விடக்கூடிய அம்புகளெல்லாம் மாயனின் உடம்பில் புகுந்து செருகின.

“மாயோன் விடும்விடும் பகழிசெய்ய எரிமேல்
வந்து வந்தடைய வெந்துபொடியாய் மடியவே
சேயோன் விடும்விடும் பகழிமாய னுதகத்
திருவு டம்புபுக மூழ்கியுருவச் செருகவே”

அந்த நிலையில் தளர்வடைந்து நின்றார் திருமால். அதைக் கண்ட வீரபத்திரர் திருமாலின் பஞ்சாயுதங்களான வில், வாள், கதை, சங்கு, சக்கரம் ஆகியவற்றைப் பற்றிக் கேலியாகப் பேசுகிறார் :

திருமாலே! நீர் உமது பஞ்சாயுதங்களையும் இந்த வடிவத்தில் ஏன் கொண்டு வந்தீர்? இந்தப் படைக்கலன்கள் என்ன செய்துவிடும்? இதைவிட, முன்பு நீர் தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மோகினி வடிவத்தில் வந்தீரே… அப்போது உமது தோள் கதை போலவும், கழுத்து சங்கு போலவும், நெற்றி வில்லைப் போலவும், விழி வாளைப் போலவும், முகம் சக்கரம் போலவும் காட்சியளித்ததே! அந்த வடிவத்தில் வந்திருக்கலாமே…

“தண்டுதோள் வளைகழுத்து நுதல்சாபம் விழிவாள்
சக்ரம் ஆனனம் எனத்தேவர் தானவர்களை
பண்டுநீர் அமுதருந்தும் உருவத்தில் இவையே
பஞ்ச ஆயுதமும் அல்லதிவை என்னபடையே!”

மொத்தத்தில் நீர் ஒரு பெண்ணாக வந்திருக்கலாமே என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் வீரபத்திரர். அதற்கு மேலும் திருமாலால் பொறுத்துக் கொள்ள முடியுமா? மிகுந்த ஆங்காரத்தோடு மீண்டும் போரைத் தொடங்கினார். தமது அவதாரங்களான மச்ச, கூர்ம, வராக வடிவங் களிலும் வந்து யுத்தம் புரிந்தார். எந்த வகையிலும் வெற்றிபெற முடியாமல், தோல்வியுற்ற அவமானத்தோடு திரும்பிச் சென்றார்.

இவ்விதம் கடுமையாக நடந்த போரில் எவரெவர்க்கும் என்னென்ன நேர்ந்தது என்று பட்டியலிடுகிறது தக்கயாகப்பரணி.

எண்திசைக் காவலர்கள் அடிபட்டனர். தட்சனின் கழுத்து அறுபட்டது. ஆதித்யரில் ஒருவனான் பகன் கண்கள் பறிக்கப்பட்டன. சந்திரனின் விலா எலும்பு முறிந்தது. அக்கினி தேவனின் கரங்கள் ஒடிக்கப்பட்டன. எமனது ஆயுதம் உடைபட்டது. இத்தனைக்கும் மேலாக குயிலாகிப் பறந்து செல்ல முயன்ற இந்திரனின் சிறகுகள் முறிந்தன.

இவ்விதம் சொல்லிக் கொண்டே வரும் ஒட்டக்கூத்தர், புலத்திய முனிவனைத் துடிக்கத் துடிக்க அடித்து இழுத்துச் சென்ற பூதகணங்கள், அகத்தியரை மட்டும் போரின்போது, அவருக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அவரைக் கொண்டு போய் குகைக்குள் அடைத்து வைத்தன என்கிறார்.

“இகத்தியெனப் புலத்தியனைத்
துடிக்கவடித் திழுத்தே
அகத்தியனைத் தமிழ்ப்பொதியில்
குகைப்புகவிட் டடைத்தே”

அதுவும் எந்தக் குகை? தமிழ்ப் பொதிகையில் உள்ள குகைதானாம். தமிழ் தந்த அகத்தியர் மீது ஒட்டக்கூத்தருக்கு இருந்த ஈடுபாட்டை இது காட்டுகிறது.

இத்தனைக்கும் மேலாக, இந்த இடத்தில் நாம் காண வேண்டிய அரிய செய்தி ஒன்று இருக்கிறது. சிவபுராணம், கந்தப் புராணம் முதலான நூல்களில் தட்சயக்ஞத்தின் போது பிரம்ம தேவரோடு அங்கு வந்திருந்த கலைமகளின் நாசி அறுக்கப்பட்டது என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஒட்டக்கூத்தர் அதைப் பாடாமல் விட்டுவிடுகிறார்.

ஒட்டக்கூத்தர் கலைவாணியிடம் மிகுந்த பக்தி கொண்டவர். சோழ மன்னன் அவருக்கென ஓர் ஊரைப் பரிசாகத் தந்தபோது, அதில் கலைமகளுக்கென ஒரு தனிக் கோயில் கட்டியவர். இன்றும் அவர் பெயராலேயே கூத்தனூர் என்று வழங்கப்படும் ஊருக்குச் சென்றால், அந்தத் திருக்கோயிலைத் தரிசிக்கலாம். இத்தகைய பக்தி கொண்டவர் அதைப் பாடாமல் விட்டதில் வியப்பென்ன இருக்கிறது?

இதற்கு மேல் தக்கயாகப் பரணியில் கூழடுதல் என்ற பகுதி இடம்பெறுகிறது. தக்கயாகத்தின் போது நடந்த யுத்தத்தைப் பற்றிப் பேயிடம் கேட்ட காளி, அந்த யாகசாலைக்குச் சென்று கூழடும்படி பேய்களுக்குக் கட்டளையிடுகிறாள்.

அதன்படி அங்கு சென்ற பேய்கள் களத்தில் இறந்து கிடப்பவர்களின் தசை முதலானவற்றைக் கொண்டு கூழ் சமைத்துக் காளிக்கும் படைக்கின்றன. பிற பேய்களுக்கும் இட்டுத் தாமும் உண்கின்றன.

இதன்பின் களங்காட்டல் என்ற பகுதியில் சிவபெருமான் அம்பிகையோடு எழுந்தருளி, களத்தில் மடிந்து கிடப்பவர்களைச் சுட்டிக் காட்ட, அன்னையின் மனம் கனிகிறது. அனைவரையும் உயிர்ப்பிக்க வேண்டுமெனச் சிவபெருமானை வேண்டுகிறாள். அவர் மனமிரங்கித் தம்மை இகழ்நத தக்கனுக்கு ஆட்டுக்கிடாய்த் தலையைத் தந்து உயிர்ப்பித்து, மற்ற வானவரையும் எழுப்புகிறார். அனைவரும் அவரைப் பணிந்து தங்களை மன்னிக்கும்படி வேண்டி, அவரவர் இருப்பிடம் செல்கின்றனர்.

தக்கயாகப் பரணியில் நாம் இங்கு கண்டது சிறு துளிதான். உ.வே.சா. தேடித் தந்த இந்த நூலின் எண்ணூற்றுப் பதினான்கு கவிதைகளில் ஒரு சிலவற்றையே நாம் கண்டோம். ஒட்டக்கூத்தரின் இந்த நூலை அவரைப் பற்றிய வாழ்த்தோடு நிறைவு செய்வோம்.

“ஆக்கம் பெருக்கு மடந்தை வாழியே
ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே
கோக்குந் தமிழ்க்கொத் தனைத்தும் வாழியே
கூத்தன் கவிச்சக்ர வர்த்தி வாழியே”

நன்றி - ஓம் சக்தி ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 2012

மொழி எனும் விளையாட்டு - முனைவர் கி.நாச்சிமுத்து

வழி நடந்த களைப்பிலே மரத்தடியிலே நின்று கொண்டு ஔவைப்பாட்டி மரக் கிளையிலிருந்தபடி நாவல் பழம் பறித்துத் தின்றுகொண்டிருந்த ஆடுமேய்க்கும் சிறுவனிடம் எனக்கும் சில நாவல் பழங்கள் பறித்துப் போடேன் என்று கேட்கிறாள். அவனோ சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்கிறான். நாவல் பழத்திலே சுட்டதும் சுடாததும் உண்டா?தமிழ் முழுதறிந்த ஔவையோ திகைத்து நிற்கிறாள். தடுமாறுகிறாள். என் தமிழறிவு இவ்வளவுதானா? என்று வெட்கமுறுகிறாள். ஒளைவையின் தமிழறிவைச் சோதித்தவன் வேறு யாருமல்லன், இடைச் சிறுவன் வடிவில் தோன்றிய தமிழ் முருகன்தான் என்றறிந்த மூதாட்டி தன் அறிவின் சிறுமையையும் தமிழின் ஆழத்தையும் இளமையின் சிறப்பையும் குறும்பையும் இறைவனின் பெருமையையும் உணர்ந்து இன்புற்றுப் பாடுகிறாள்.

இந்தக் கதையைக் காலங்காலமாகக் கேட்டு வரும் தமிழர்கள் அக்கதையில் மனதைப் பறிகொடுத்து வருகிறார்கள். இந்தக் கதை பல முக்கியமான கருத்துக்களை நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறது. அதில் ஒன்று தமிழின் பெருமை. அதுவும் புலவர்களிடமுள்ள தமிழல்ல. சாதாரணத் தமிழன் பேசுகிற தமிழ். இரண்டாவது இளமையும் குறும்பும் கலந்த குழந்தையின் மொழி விளையாட்டு. இங்கே மொழி என்பது ஆற்றல் மிக்க விளையாட்டுக்குக் களம் அமைக்கிறது. மொழியே விளையாட்டாகிறது. தமிழிலேயே புலமையின் அடையாளமாக விளங்கிய புலமைப் பெருமாட்டியே கற்றுக் கொள்ளவேண்டிய ஆழங்கள் நமக்குத் தெரிகின்றன. மொழியின் ஆற்றல் நமக்குப் புலப்படுகின்றது.

இவற்றைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு முன் முருகன் கேட்ட கேள்வியில் அடங்கியிருந்த மொழி ஆழம் என்ன? அதை எப்படி இலக்கணம் அலலது இன்றைய மொழியியல் கொண்டு விளக்குவது?
சுட்ட பழம் சுடாத பழம் இரண்டும் பெயரெச்சத் தொடர்கள். சுடுதல் என்றால் அது செயப்படு பொருள் குன்றிய வினையாக வரும்போது ஒரு பொருள் வெப்பமாக இருப்பதை, காய்வதை உணர்த்தும். (எ.டு) உடம்பு காய்ச்சலால் சுடுகிறது. அதுவே செயப்படுபொருள் குன்றா வினையாக வரும்போது இன்னொருவருக்கு வெப்பம் ஊட்டுவதை, காயச் செய்வதை, எரித்தலை உணர்த்தும். (எ.டு) அடுப்பில் வைத்த பாத்திரம் சுடுகிறது,கிழங்கைச் சுட்டும் தின்னலாம். இன்னொரு பொருள் = நெருப்பைக் கொண்டு அவித்தல் அல்லது பொரித்தல் (எ.டு) அம்மா இட்லி சுட்டாள். பாட்டி வடை சுட்டாள். சுட்ட கிழங்கு சூடாக இருந்தால் ஊதி ஊதிச் சாப்பிடு. பிற்காலத்தில் தோன்றிய இன்னொரு பொருள் பீரங்கி – துப்பாக்கி முதலியவற்றிலிருந்து குண்டுகளை வெடிக்கச் செய்தல், அண்மைக் காலத்தில் சென்னை போன்ற வட்டார வழக்கிலிருந்து பொது வழக்குக்கு வந்துள்ளது திருடுதல் என்ற பொருள் 1992-இல் வந்த க்ரியா அகராதியில் கூட இந்தப் பொருள் ஏறவில்லை. தமிழில் சொற்பொருள் மாற்றம் யாருக்கும் தெரியாமல் எப்படி வந்து சேருகிறது என்பது வியப்புத்தான்.

இங்கே சுட்ட பழம் சுடாத பழம் என்பதில் பொருளால் ஏற்பட்ட மயக்கம் (Semantic Ambiguity), வாக்கிய மயக்கம் ( Syntactic Ambiguity), மொழிப் பயன்பாட்டுச் சூழல் மயக்கம் (Pragmatic Ambiguity) போன்றவற்றைக் காண்கிறோம். இவற்றை விளக்கலாம். பழம் சுடுகிறது உடம்பு சுடுகிறது, என்பது போன்ற செயப்படு பொருள் குன்றிய வினைப் பொருளில் வருகிறதா? பாத்திரம் கையைச் சுடுகிறது என்பது போன்ற செயப்படுபொருள் குன்றா வினைப் பொருளில் வருகிறதா? அல்லது பாட்டி சுட்ட வடை என்பது போன்று சமைத்துப் பொரித்த பொருளா?

இத்தனைக்கும் காரணம் மண்ணில் விழுந்த நாவல் பழத்தில் ஒட்டியுள்ள மண்ணை ஊதி ஊதி அகற்றி உண்கிற போது அச் செயல் நடைபெறும் சூழல் சுட்ட பொருளைத் தின்பதைப்போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. இது சொற்பொருளுக்கு மேலே உள்ள மொழிப் பயன்பாட்டுச் சூழலில் தோன்றுகிற மயக்கம். இங்கே இதைச் சுடு என்ற பல பொருள் ஒரு சொல் தரும் மயக்கம் (Ambiguity due to Polysemy). இன்னொன்று சுட்ட என்ற பெயரெச்சம் எழுவாயாக அமைகிறதா? செயப்படுபொருளாக அமைகிறதா என்ற மயக்கம். இன்னொன்று சுடாததாகிய பழம் என்ற இருபெயரொட்டாக வரும்போது ஏற்படும் மயக்கம். இவை எல்லாம் இலக்கண ஒப்புருச் சொல் மயக்கம் (Ambiguity due to grammatical homonymy).

பழம் சுட்டது என்று சொல்லும்போது பழம் எழுவாய். அதிலிருந்து வருகிற பெயரெச்சம் சுட்ட பழம் என்பது,எனவே இந்தப் பெயரெச்சம் எழுவாய்ப் பொருளில் வருகிறது. சுட்ட வடை என்பதில் பாட்டியால் சுடப்பட்ட வடை அதாவது பாட்டி வடையைச் சுட்டாள் என்ற வாக்கியத்தில் செயப்படுபொருளாக வரும் வடை போலச் சுட்ட பழம் அதாவது சுடப்பட்ட பழம்(யாரோ பழத்தைச் சுட்டார்கள்) என்ற செயப்படுபொருள் பொருளைத் தரும்போது பழத்தை யாராவது சுடுவார்களா? என்ற மயக்கம் ஏற்படுகிறது. சுடாததாகிய பழமும் இருக்கலாம்தானே. அது சுடாத பழம். இது விளையாட்டாகிறது.

மொழியின் ஆற்றல்களில் இதன் விளையாட்டுப் பண்பும் ஒன்று. மொழியை ஆளத் தொடங்குகிற குழந்தைகள் இதைக் கவனிக்கிறார்கள்.அதை விளையாட்டாக மாற்றுகிறார்கள். எனவே இத்தகைய விளையாட்டுக்கு இடம் கொடுக்கும் மொழிக்களங்களைத் திரட்டி மொழி கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாம். அதாவது மொழிக்கல்வியை விளையாட்டாகக் கற்பிக்கலாம். சிலேடை என்றும் யமகம், திரிபு, மடக்கு என்ற சொல்லணி வகைகளாகவும் பல முறைகளில் இது இலக்கிய மொழியில் காணப்படுகிறது.

தொல்காப்பியரே பிசி என்ற விடுகதையை இலக்கிய வகையாகக் குறிப்பிடுவார்(1421). தண்டியலங்காரத்தில் (98) கோமூத்திரி, கூடசதுக்கம், மாலை மாற்று, எழுத்து வருத்தனம், காகபந்தம், வினாவுத்தரம், காதைகரப்பு, கரந்துறைசெய்யுள், சக்கரம், சுழிகுளம், சருப்பதோபத்திரம், அக்கரச்சுதகம் ஆகிய 12 மொழிவிளையாட்டு வகைகளைக் குறிப்பிடும்.

இதையெல்லாம் பயன்படுத்தி மொழியின் ஆற்றலை விளையாட்டாக மாற்றுவதன் நோக்கம் ஒன்று, குழந்தைகளுக்கு மொழி விளையாட்டில் ஆர்வம் ஏற்படுத்தி மொழிக் கூறுகளைக் கற்பிப்பது. இன்னொன்று, இதில் அமைந்திருக்கும் இலக்கண மொழியியல் நுட்பங்களை உயர்நிலை மாணவர்களுக்குக் கற்பிப்பது. இத்தகைய மொழி விளையாட்டுக்களைப் புதிர் வகைகளில் ஒன்று எனலாம். இவற்றில் விடுகதை இருக்கும். (எ.டு.) அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கு எட்டும். அது உதடு (தம்பி என்று உச்சரிக்கும்போது கீழ் உதட்டுக்கு மேல் உதடு எட்டும். அண்ணனுக்கு எட்டாது. இங்கு சொல் தன்னையும் உணர்த்தும் பொருளையும் உணர்த்தும் என்ற தொல்காப்பியர் கூற்றின்படி (சொல்.பெயர்.2) சொல்லும் பொருளும் மயங்குகிற மயக்கம்). இந்தப் புதிரும் ஒலிகள் உச்சரிக்கும் முறையைச் சொல்லித் தரும் அருமையான விடுகதைப் புதிர்தான். இன்னொரு வகை சிலேடை. 

சிலேடை என்றால் இரட்டுற மொழிதல். அது அடிப்படையில் இரண்டு வகைப்படும். இத்தகைய சிலேடை என்றால் நமக்கெல்லாம் காளமேகப் புலவர் நினைவுக்கு வருவார். அவர் இத்தகைய சிலேடைகளை உதிர்ப்பதிலே வல்லவர். ஒருவரை அவர் அறிவில்லாதவன் எனத் திட்டவும் செய்வார். அச்சொல்லையே பிரித்து, நீ அறிவில் ஆதவன் (சூரியன்) என்று பிரிமொழிச் சிலேடையாக்கி மகிழவும் வைப்பார். அதுபோலப் பலபொருள்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திச் சிலேடையும் பாடுவார். இங்கே பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் சிலேடை எப்படிப் பாடுகிறார் என்று பாருங்கள்.

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.

பாம்பு நஞ்சு பெற்றிருக்கும், தோல் உரிக்கும், நாதர் முடி அதாவது சிவன் தலையில் இருக்கும், அதன் பல் கோபத்தில் பட்டால் உயிர் மீளாது.வாழைப்பழம் நஞ்சு இருக்கும் =நைந்து கனிவாக இருக்கும், தோல் உரிபடும், வாழைப்பழம் வாழைமரத்தில் குலையில் மேற்பகுதியில் இருக்கும். பல்லில் கடிபட்டால் பழம் மீளாது. (நஞ்சு பெயர். விடம் என்ற பொருள். நஞ்சு வினையெச்சம். நைந்து இது பிரிமொழி. இலக்கண ஒப்புருச் சொல் (Grammatical Homonymy). தோல் பலபொருள் ஒரு சொல். நாதர்முடி மேலிருக்கும்.வெஞ்சினத்தில் பல்பட்டால் என்ற இரண்டும் மொழிப் பயன்பாட்டு ஒற்றுமை.

இவ்வாறு அக்காலத்தில் மொழி படிக்கிற மாணவர்களிடம் சிலேடை பாடச் சொல்லி அவர்கள் மொழித்திறனைச் சோதிப்பதுண்டு. பாரதி சின்னப் பயல் என்ற இறுதி அமைத்து வெண்பா பாடச் சொன்ன காந்திமதி நாத பிள்ளைக்குக் காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல் என்று பாரதி பாடி வாயடக்கச் செய்த பாரதியின் இளங்குறும்பு நம்மை மகிழ்விக்கிறது இல்லையா? செம்மொழிச் சிலேடை என்பது சொல்லை விட்டிசைப்பதால் ஏற்படும் பொருள் வேறுபாடு வேறு வேறு வகை இலக்கண அமைப்புடையவை. பிரிபடும்போது வேறு பொருள் படும். இவை இலக்கண ஒப்புருவம் பெற்றவை. இவ்வாறு சொற்பொருள் ஆராய்ச்சி செய்து உயர்நிலை மாணவர்க்கு இலக்கணத்தையும் மொழியியலையும் கற்பிக்கலாம்.

இத்தகைய எடுத்துக்காட்டுகளைத் தமிழறிவாள் கதை முதலியவற்றில் காணலாம். இதுபோன்ற உண்மையான வரலாறுகளை உ.வே.சா.போன்றோர் வாழ்வில் பார்க்கலாம். அவர் மாணவர் கி.வா.ஜ. அவர்களின் சிலேடைகள் புகழ் பெற்றவை. மரியாதை இராமன் கதை போன்றவற்றிலும் கடி போன்ற இம்மொழி விளையாட்டுக்கள் உண்டு.

ஒரு செல்வர் தான் இறக்கும் முன் தன் மகன் குழந்தையாக இருப்பதைப் பார்த்துத் தன் நண்பன் ஒருவனிடம் ஆயிரம் வராகன்களை ஒப்படைத்து என் மகன் பெரியவனானதும் உனக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடு என்று கூறி இறந்து விடுகிறார். வளர்ந்து பெரியவனான செல்வர் மகன் வந்து கேட்கும்போது நண்பர் ஒரு வராகனை மட்டும் கொடுக்கிறார். ஏனெனில் உன் அப்பா நான் விரும்பியதையே உனக்குக் கொடுக்கச் சொன்னார் என்று அமைதி கூறுகிறார்.

ஏமாந்த அந்தப் பிள்ளை மரியாதை இராமனிடம் முறையிடுகிறான். மரியாதை இராமன் வழக்கை ஆராய்ந்து 999 வராகன்களை இறந்தவரின் இளைஞனிடம் நண்பர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார். இறந்தவர் சொல்படிதானே நான் நடந்து கொண்டேன் என்று அவர் விளக்கம் கேட்கிறார். இறந்தவர் சொல்லிய படி செய்வதாக இருந்தால் உங்களுக்குப் பிடித்த அந்த 999 தான் கொடுக்க வேண்டும், எனவே தீர்ப்பு சரியே என்று விளக்கம் அளிக்கிறான் மரியாதை இராமன்.

 இங்கே உனக்கு விருப்பமானதைக் கொடு. அதாவது உனக்கு விருப்பமானது உனது விருப்பம் 999, எனவே அதை அவனுக்குக் கொடுப்பதே முறை என்று விளக்கம் செய்கிறான் இராமன். இங்கே உனது விருப்பம் என்ற உடைமைப் பொருள் கொள்ளும்போது அது 999 வராகன். உனக்கு விருப்பமானது உனக்குக் கொடுக்க விருப்பம் என்று பொருள் கொண்டால் அது கொடைப் பொருள். ஏமாற்ற நினைத்த நண்பர் கொடைப்பொருள் கொள்கிறார். மரியாதை இராமன் இறந்தவர் சொல்லியதிலிருந்த உடமைப் பொருளை இனங்கண்டு தீர்ப்பளிக்கிறார். அவர் அறிவுத்திறமை அது. அதன் இலக்கண விளக்கம்தான் நாம் மேலே சொன்னது. இவ்வாறு உயர் நிலை மாணவர்க்கு இலக்கணம் கற்பிக்கவும் இவை பயன்படும். இதிலே இன்னொரு உயர்ந்த மொழி ஆற்றலை வெளிப்படுத்தும் யமகம் திரிபு, மடக்கு போன்றவை உண்டு. அவை பிற்காலத்தில் கேலிக்கு உள்ளாக்கப் பட்டாலும் அக்காலத்தில் மொழித்திறனை அறியும் சோதனைகளாக அவை இருந்தன என்பதை அறிந்து கொண்டால், அவற்றைத் தூற்ற வேண்டியதில்லை. விடுகதையிலே சிலேடை கலந்து வருவது ஒரு வகை. அதுதான் இன்று கடி எனப்படுகிறது. இதற்கு ஆங்கில எடுத்துக்காட்டும் கொடுத்து விளக்கலாம்.
E.g. What is black and white and red all over? Answer : An embarrassed zebra. இது விடுகதை (ரிடில்). “What is black and white and red (read) all over” “A news paper” இதைக் கடி எனலாம் (Conundrum). அதாவது விடுகதையில் சிலேடையையும் சேர்த்தமைப்பது. Red (read) சிவப்பு, படிக்கப்படுவது என்ற இருபொருளால் விளைந்த கடி. இன்றைய மொழியிலே கடி, சிரிப்பு என்ற ஒரு வகை குழந்தைகள், இளைஞர்கள் இடையே மிக செல்வாக்காக வழங்கி வருகிறது. இது குழந்தைகள் மொழியிலே விளையாடி அதைக் கொண்டாடுவது கண்டு நாம் எல்லாரும் அவர்களோடு சேர்ந்து சிரிக்கிறோம்.

தேளுக்கும் முடிக்கும் என்ன ஒற்றுமை? இரண்டுமே கொட்டும்.

இங்கே கொட்டும் என்பது குத்தும்(கடிக்கும்) என்றும் உதிரும் என்று பொருள் படும் பல பொருள் ஒப்புருச் சொல்லால் (Homonymy) ஏற்படும் சிலேடைப் பொருள். (இதைத் தேள் கொட்டினா வலிக்கும் முடி கொட்டினா வலிக்குமா? என்றும் மாற்றலாம்.) இந்தக் கடியில் மொழியின் பல அமைப்புக்களை ஒட்டி எழலாம். அவற்றில் ஓரிரண்டை மட்டும் இங்கு குறிப்பிடுவோம்.

1. கல்லாவில் இருப்பவர் : சாப்பிட்ட பில்லுக்குக் காசு கொடுக்காமல் போறீங்களே சார்?
சாப்பிட வந்தவர் : நான் தோசை தானே சாப்பிட்டேன். பில் எல்லாம் சாப்பிடலே.
(துரை இராமகிருஷ்ணன், எரகுடி, தினமணிக் கதிர் 04.09.2011).
இது பெயரெச்சம் தரும் இலக்கண ஒப்புருச் சொல் தரும் மயக்கம். சாப்பிட்ட பில் என்பதில் பில் செயப்படுபொருள், சாப்பிட்டதற்கு பில் என்ற நான்காம் வேற்றுமை தகவுப் பொருள் என்ற இரண்டிலும் மயங்கி வந்து கடியாகிறது.

2. யுவராஜ் : டேய் பனியில் நிக்காதடா, சளி புடிச்சுக்கும்.
சந்தோஷ் : நல்லாப் பாருடா. நான் பனியிலே நிக்கலை, காலில்தான் நிக்கறேன்.
(ஜி.கே ,எஸ். மூர்த்தி, கோபி செட்டிபாளையம், தினமணி சிறுவர் மலர் 03.09.2011).
இது வேற்றுமை மயக்கம். ஏழாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமைக் கருவிப்பொருளில் வருவதால் ஏற்படும் மயக்கம்.

3. பட்டாசுக் கடைக்குப் போயிருந்தேன். வெடிக்காத பட்டாசையெல்லாம் கடைக்காரன் என் தலையில் கட்டிட்டான்.
நல்ல வேளை வெடிக்கிற பட்டாசைத் தலையில் கட்டியிருந்தால் தலை சிதறி இருக்கும் தப்பிச்சே போ. (சு.சதீஸ்குமார், இராக்கி பாளையம், தினமணி சிறுவர் மணி 1.10.2011).
இது மரபுத் தொடர்ப் பொருளை செம்பொருளாகக் கொண்டதால் ஏற்பட்ட மயக்கம்.

4. மாணவி: சார், நீங்க செய்யாத தப்புக்கு அடிப்பீங்களா? ஆசிரியர்: சே சே அடிக்கமாட்டேன். மாணவி : வீட்டுப் பாடம் செய்யலை சார்.
ஆசிரியர் : ???
இது சுட்ட பழம் சுடாத பழம் போன்றது. செய்யாத தப்பு என்பது தப்பைச் செய்யவில்லை என்ற செயப்படுபொருள் கொண்டு முடிந்த பெயரெச்சம். இது ஆசிரியர் கொண்ட பொருள். இரண்டாவதாக இதைச் செய்யாததாகிய தப்பு என்ற இருபெயரொட்டாக வரும் பெயரெச்சமாகவும் விளக்கலாம். பொய்யா விளக்குப் போல (குறள்.299). இது மாணவி கொண்ட விளக்கம்.

நம்ம தமிழாசிரியரை யாரோ அடிச்சுட்டாங்களாமே? ஏன்? ‘”இங்க தமிழாசிரியர் யாருன்னு” கேட்டதுக்கு ‘அடியேன்’னு சொல்லியிருக்காரு… அதான்!’-
(வி.அப்ஜித், சென்னை 600 045 தினமணி சிறுவர் மணி 24.09.2011). இது விட்டிசையால் ஏற்படும் பிரிமொழிச் சிலேடை.

பேருந்தைப் பின்னால் தள்ளினால் என்ன நடக்கும். முன்னே போகும் என்போம் நாம். நம் குறும்புக் குழந்தை பின் வளைந்து போகும் என்று நம்மை மடக்கும்போது தமிழ்ச் சொல்லும் ஆங்கிலச் சொல்லும் கலந்து வரும் ஒப்புருச் சொல்லாகி (Homonymy) விடுகிறது. இத்தகைய கலப்புக் கடிகள் இன்று பெருகி வருகின்றன. இது இன்று மொழி இருமொழியமாக மாறுவதன் அடையாளம். பழைய காலத்தில் சிலேடைகளில் வடமொழி இப்படித்தான் கலந்து வரும்.

மொழி எப்படி விளையாட்டாகவும் இருக்கிறது. ஆற்றலோடும் ஆழத்தோடும் இருக்கிறது என்பதை உணரும் நாம் இந்தக் களங்களை இனங்கண்டு தமிழைச் சுவையோடும் விருப்போடும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பரப்ப வேண்டும். மொழிக் கல்வியில் குழந்தை விளையாட்டுக்கும் உயர் நிலையில் இலக்கணப் பயிற்சிக்கும் இதைத் துணையாகப் பயன்படுத்தவேண்டும்.

1920-களில்தான் ஆங்கிலத்தில் குறுக்கெழுத்துப் புதிர் வழக்கத்திற்கு வந்தது. தமிழில் 1930-களில் ஆனந்த விகடன் அதை வளர்த்தது. அதற்காக வாசன் தமிழ் அகராதியே வெளியிட்டார். பின் அது குன்றியது. இப்போது மீண்டும் தளிர் விட்டுள்ளது. ஆனால் இன்று பல மொழி விளையாட்டுகள் வழக்கத்திற்கு வந்து விட்டன. அவை பற்றி ஆராய பொழுதுபோக்கு மொழியியல் (Recreational Linguistics) தோன்றி வளர்ந்து வருகிறது.

தமிழில் புதுவை மொழியியல் பண்பாடு நிறுவனப் பேராசிரியர் த.பரசுராமன் சொல் விளையாட்டு, சொல் திறன் விளையாட்டு, சொற்பயிற்சி விளையாட்டு, கவிதை விளையாட்டு, வாக்கிய விளையாட்டு என்று பல நூல்களை (முத்து வெளியீடு,புதுவை) எழுதி வெளியிட்டுள்ளார். இவர் நூல்கள் உட்படக் குழந்தைகள் தமிழ் கற்க உதவும் தளங்கள் பற்றித் தெரிந்து கொள்ளக் கீழே கண்ட வலைத்தளத்தைப் பார்க்கலாம். thamizhagam.net மேலும் பார்க்க Nachimuthu K. A Linguistic Interpretation of KaTi Jokes in Tamil, IJDL. Vol. Vol. xxx iii No.2, June 2004, pp. 169-178.

முனைவர் கி.நாச்சிமுத்து
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி.


நன்றி - ஓம் சக்தி டிசம்பர் 2011